கவியரங்கம் என்பதே வெட்டிவேலை. இப்படியானதொரு வாதம் உண்டு. அதையும் மீறி எந்தவொரு வாய்ப்பையும் பயனுள்ளதாக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு நமக்கு. ஒரு கூற்று, இடர், கோளாறு, சிக்கல், துயர், உணர்வு முதலானவற்றை உகந்த சொற்கள் கொண்டு எடுத்துரைக்கும் போது, மொழிவளம், நுண்ணுணர்வு, தகவற்பரிமாற்றம் போன்றன எல்லாமும் நிகழும். மறைபொருளாக, அருவமான படிமம், Abstract எண்ணச்சுருக்கத்தைத் தலைப்பாகக் கொடுத்து விட்டால், அதன்நிமித்தம் தத்தம் பார்வையை, எடுத்தியம்புதலை, பல்வேறாக அவரவர் போக்கில் கட்டமைத்துக் கொடுக்கும் போது, பார்ப்போரின், செவியுறுவோரின் எண்ணவிரிவுகளுக்கு வித்திடுவதாக, சுவைத்துணர்வதாக, இடித்துரைப்பதாக, கிளர்ச்சியூட்டுவதாக எனப் பலவாறாக அது அமையும். எடுத்துக்காட்டாக,
மனத்துக்குண்டா நிறம்?
வானவில்
பாரதியின் பூனைகள்
நிறவெறிக்கழுகு
தணல்மனிதம்
நெருப்பிற்தோயும் மாந்தம்
அண்மைய வாழ்க்கை
மனத்தின் நிறம்
கழுத்தில் கால்முட்டி
இது தருணம்
நெறிபடும் குரல்வளை
கண்களுக்குள்ளே
விழிகளுக்குப் பின்னே
எல்லாமே தோல்தான்
... ... ... ... ... ...
துவக்கப்பள்ளியிலேயே கவிதைகள் குழந்தைகளுக்கு ( https://www.slideshare.net/Lebomosimango/introduction-to-32027335) அறிமுகம் செய்யப்படுகின்றன. அவர்களின் மனத்தின் விரிவும் சகல திசைகளிலும் தங்குதடையுமின்றிப் பயணிக்கும். ஆகவே வீட்டுக் குழந்தைகளைக் கேட்டால் போதும், நம்மைக் காட்டிலும் அருமையான தலைப்புகளைக் கொடுப்பார்கள்.
"நிறவெறி களைவோம்! மனிதநேயம் காப்போம்!!". 😆 ஏன், கவிதையையும் நாமே எழுதிக் கொடுத்துவிடலாமே? இப்படிக் கண்ணட்டி போட்டுவிட்டால் கவிஞன் பாவமில்லையா?? ஒரேதடத்தில் தடதடவண்டி ஒன்றேபோல ஓடுவதாக அது அமைந்து விடாதா?? இது கவியரங்கம் நடத்தும் வேலையன்று. திரும்பவும் அந்த முதற்சொற்றொடரைப் படித்து விடுங்கள். அதற்கு வலுக்கூட்டும் வேலையாகத்தான் அமையக்கூடும்.
[சாரி உவர் ஆனர், ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ளவும்]
-பழமைபேசி.
6/27/2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment