6/20/2015

கரிக்குருவி


நான் அப்போது ஐந்தாம் வகுப்பு. பக்கத்து வீட்டு குமார் நான்காம் வகுப்பு. Selvakumar Kuppusamy குமாரின் அப்பா அம்மாவும்  விவசாயம். அதனால் தோட்டத்துக்குச் சென்று விடுவார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அம்மா எப்போதும் வீட்டில்தான் இருப்பார்கள். எனவே பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக உள்ள உபரி நேரத்தில் நாங்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு முன்பு இருக்கும் பெரு மைதானத்தில் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்போம். ஆமாம். நாங்களிருந்த வீட்டிற்கு முன்புறம் பரந்த இடம் இருக்கும். அது போக, விடுப்பு நாட்களில் மாடு மேய்க்கப் போவேன். நான் உதயசூரியன். குமார் இரட்டை இலை. ஆனாலும் எங்களுக்குள் சண்டையெல்லாம் கிடையாது.

தனக்கா அவர்களுக்கு சர்க்கார்பாளையத்தில் தோட்டமும் உறவினர்களும் உண்டு. அவ்வப்போது அவர்களது வீட்டார் ஜக்கார்பாளையம் போய் வருவது வழமை. அன்று மாலை ஐந்து மணி இருக்கும். தோட்டங்காடுகளுக்குச் சென்றவர்கள் ஊருக்குள் திரும்ப வேண்டிய தருணம் கூடி வருகிற வேளை. நானும் குமாரும் எங்கள் வீட்டுத் திண்ணைக்கு முன்பாக நின்று, எங்கள் வீட்டுக் கல்கட்டில் கூடு வைத்திருக்கிற வாலை வாலை ஆட்டிக் குதித்துக் கொண்டிருக்கும் அந்த கரிக்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். குமாரின் வீட்டுக்கு இடப்பக்கமாக இருக்கும் அந்த கல்கட்டு ஓரமாகத்தான் போயாக வேண்டும். அப்போதெல்லாம் அது அவன் தலையைக் கொத்தப் போகும். எனவே குமாருக்கு அதன் மீது கோபம். எனக்கு அது உட்கார்ந்து உட்கார்ந்து துள்ளிக்குதிக்கும் ஒயில் மிகவும் பிடிக்கும்.

“அதே... அப்பிடியே கசக்கி வீசணும்”, இது குமார்.

“ஏங்கொமாரு? அதென்ன பண்ணுச்சு உன்னிய?” இது நான்.

இந்த நேரத்தில்தான் எங்கள் வீட்டின் வலப்பக்க மூலையில் டமாலென ஏதோ ஓசை கேட்டது. ஏறெடுத்துப் பார்த்தால் சவாரி வண்டி(கூட்டு வண்டி)யொன்று பக்கவாட்டில் சாய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் நாங்கள் இருவரும், “ஏய் வண்டி உழுந்திருச்சேய்... வண்டி உழுந்திருச்சேய்”யென்று கைகொட்டிக் குதூகலமாய்ச் சிரித்துக் குதித்தோம். அந்த நேரம் பார்த்து எங்கோ போய்விட்டுச் சைக்கிளில் வந்த அப்பா, சைக்கிளைக் கீழே போட்டு விட்டு வண்டியை நோக்கி ஓடினார். அம்மாவை நோக்கி எதோ உரத்த குரலில் கத்தினார். கடையையும், கடை வியாபாரத்தையும் அப்படியப்படியே போட்டு விட்டு, கைச்சொம்பில் தண்ணீரோடு அம்மாவும் போனார்கள்.

குமாரும் அதை வேடிக்கை பார்க்கப் போய் விட்டான். கடை திறந்திருக்கிறபடியால் நான் திண்ணையில் ஏறி உட்கார்ந்து கொண்டே அங்கே என்ன நடக்கிறதெனப் பார்த்துக் கொண்டிருந்தேன். சவாரி வண்டிக்குள் இருந்த தனக்காவையும், தனக்காவின் மாமியாரையும் கைத்தாங்கலாக அப்பா வெளிக்கொண்டு வந்தார். அம்மா தண்ணீர் கொடுத்து உட்காரச் சொன்னார். அதற்குள் பக்கத்திலிருந்தவர்களும் வந்து சேர, வண்டியையும் எருதுகளையும் ஓர்சலாக்கினார்கள். தன்க்காவைவும் அந்த பாட்டியையும் நடக்கச் சொன்னார்கள். உடலுக்கு ஒன்றும் பழுதில்லை என்றானவுடன் அவர்களை வீட்டில் விட்டுவர அம்மா போய்விட்டார். நான் மீண்டும் குமாரைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில், பருத்திமார் விளார் என் கால்களிரண்டையும் பதம் பார்த்தது. அய்யோ அய்யோவெனக் கத்தினேன். எங்கள் வீட்டிற்குப் பின்புறம் இருந்த லைன்மேனக்கா வந்து தடுக்க முயன்றார்கள். இருந்தாலும் விளார் இறங்குவது நின்றபாடில்லை. அதற்குள் அம்மாவும் வந்து விட்டார். “ஏன், என்னாச்சு?” என்றார். அப்போதுதான் அங்கே இருந்தவர்களுக்கும் புரிந்தது. எனக்கும் புரிந்தது. “அங்க, வண்டி கொட சாஞ்சி கீழ உழுகுது. இவன் இங்க கைதட்டீட்டு குசியாச் சிரிக்கிறான்”னென்று சொல்லிக் கொண்டே மீண்டும் என்னை நோக்கியோடி வந்தவரை தடுத்துக் கொண்டார்கள். ஆனாலும் என் தலையில் ஒரு கொட்டு இறங்கியது. திரும்பிப் பார்த்தால், கடுங்கோபத்துடன் அம்மா.

நான் அழுதவன்... அழுதபடியே திண்ணையிலேயே தூங்கிவிட்டேன். திடுமெனக் கண்விழித்துப் பார்த்தேன். என் கால்களை அப்பா பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். “எதனா சப்புடுறா” என்றார். “முலுவா.. ஒனகென்னடா வேணும்... எது கேட்டாலும் வாங்கித்தர்றேன்” என்றார். நான் பிடியேதும் கொடுக்கவில்லை. கெஞ்சிக் கொண்டேயிருந்தார். என்னையும் மீறி என் மனம் இளகி விட்டிருந்தது. “எனக்கு நீச்சல் பழக கத்தாழமுட்டி வேணும்” என்றேன். “செரி. குப்புசாமியண்ணங்கிட்டச் சொல்லி அரக்கனிட்டேரியில இருந்து நாளைக்கே கொண்டு வந்து குடுக்கிறேன்” என்றார். அது போலவே கத்தாழ முட்டியும் வந்து சேர்ந்தது. மேலும், அன்று முதல் எனக்குத்தான் அவர் பயந்து கொண்டிருந்தார். 

கடைசியாக, நான் போய்ருவேனென்றார். ’இல்லை, எங்களுடன்தான் இருக்கப் போகிறீர்கள்’ என்றேன். மெலிதாகச் சிரித்துக் கொண்டார். 

Happy Father's Day! It's ours to show the same faith!!
-பழமைபேசி

No comments: