6/28/2015

தர்பூசணி சூப் (libido booster)








மக்கழே,

தர்பூசணி சூப் குடித்துப் பயன் பெறுவது எப்படி? இப்பிடீ.... இஃகிஃகி!!

செய்முறை:

முதலில் அடுப்பில் கொள்கலனை வைக்கவும். அடுப்பில் வைக்காமல் தலையிலா வைப்பார்கள் எனக் கேட்பவர்கள் சற்று ஒதுங்கிப் போகவும்.

சூடானதும் இரு தேக்கரண்டி எண்ணெய், அதற்காக கடுகு எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றை ஊற்றாமல் சமையலுக்கான எண்ணெய் இரு தேக்கரண்டி ஊற்றவும்.

எண்ணெய் மிதமாய்ச் சூடானது ஓமம் இட வேண்டும். வீட்டில் ஓமம் இருக்கிறதா? எங்கிருக்கிறது என்பன தெரியவில்லை. இராமாயி வீட்டில் இல்லாவிட்டால், வீட்டில் இருக்கும் அவளது தங்கை இலட்சுமாயி கையைப் பிடித்திழுப்பது நம் பண்பாடு. எனவே எதிரில் இருந்த சீரகத்தில் ஒரு சிட்டிகை எடுத்துப் போட்டேன். அவள் சடசடவெனப் பொரிந்தாள். கோபம் போலிருக்கிறது. உடனே ஒரு பெருங்கிண்ணத்தில் நிரம்பியிருந்த நீரைக் கொள்கலனுக்குள் ஊற்றி கொதிக்குமளவுக்கு விட்டேன்.

முதலில் செம்பங்கி(கேரட்) இடுவதாய் நினைத்திருந்தேன். கடைக்குச் சென்று வர சோம்பலேறிவிட்டது. வெளியூரில் இருக்கும் சரசுவை விட உள்ளூரில் இருக்கும் மீனாள் மேல் என்பது பழமொழி. அதைப் போலவே, வீட்டிலிருக்கும் லிமா பீன்சு எனப்படுகிற பெரியவரைக்கும் தயமின், புரதம் போன்ற பண்புகள் இருப்பதால் அதைப் பாவிப்பதென முடிவு செய்து, அதில் ஒரு கைப்பிடி அளவு சுடுநீரில் இடப்பட்டது.

பெரியவரையின் பச்சைவாசம் சுடுநீரிலிருந்து நீங்கிய பின், தயாரக வைக்கப்பட்டிருந்த தர்பூசணி ஓட்டு நறுக்குகள் கொதிநீரில் இடப்பட்டது. பொதுவாக தர்பூசணியோட்டின் பச்சையத்தடிமனை நீக்கிய பின் நீரில் இடுவது வழக்கம். இன்பயியல்பூக்கிக் கனிமங்கள் பெருமளவு அப்பச்சையத்திலிருக்கிறபடியால் நாம் அதை நீக்கவில்லையென்பதறிக. கருக்முருக் இல்லாமல் சுவைக்க விரும்புவோர், தோல் நீக்கிவிடுவது உசிதம்.

நன்றாக வெந்து விட்டதென்பதறிந்த பின், வீட்டில் மசிக்கப்பட்ட கொத்துமல்லித் தூள் ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள் அல்லது குறுமிளகுத் தூள் இரு சிறு தேக்கரண்டி, தேவையான அளவு உப்பிட்டுக் கிண்டிவிட வேண்டும். தேவையான அளவு சீசு எனப்படுகிற கொழுப்பினை இட்டுக் கலக்கவும்.

நல்ல ஐங்காயமணம் நாசிகளை வந்தடையும் தருணத்தில், அடுப்பை அணைத்து விடுக. இருக்கும் சூட்டில் சிறிது நேரம் இருக்கட்டும். இப்போது, சிட்ருலின் கனிமம் பொதிந்த சூப் தயார். கிண்ணத்தில் வடித்து, மேலாக சில புதினா இலைகளை இட்டு உங்கள் விருந்தினருக்குப் பரிமாறுக. சிட்ருலின் கனிமம் செம்மையான தோல், இரத்தநாள மேம்பாடு, தசைநார்களின் நல்லியல்புத்தன்மை மேம்படுதல் போன்றவற்றுக்கு பெரிதும் உதவி புரியக்கூடியது.

மீண்டும், மற்றுமொரு தர்பூசணிப் படையலுடன் சந்திப்போம்!!

தர்பூசுத் திளைப்பில்,
பழமைபேசி.

No comments: