4/21/2012

கவனகக் கலை!!

தமிழ் மக்களின் பழங்கலைகளில் கவனகக் கலையும் ஒன்று. கவனகம் என்பது ஒரே நேரத்தில் தன்னைச்சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி முடிவில் தொகுத்துக் கூறுவதாகும். இது நினைவாற்றலின் உயர்ந்த வடிவம்.

நமது முன்னோர்கள் நூறு நிகழ்வுகள்வரை நினைவில் நிறுத்திச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசர்களை மகிழ்விக்கவும், செல்வந்தர்கள் மத்தியிலும் இருந்து இந்தக் கவனகக் கலையைச் செய்திருக்கின்றார்கள்.அவர்களுள் முக்கியமானவர்கள்.

செய்கு தம்பிப் பாவலர்
சிறிய சரவணக்கவிராயர்
தே.போ. கிருட்டிணசாமி
பாவலர் நா.கதிர்வேல் பிள்ளை
அட்டாவதானியார்
அச்சுத உபாத்தியாயர்
அரங்கநாதக்கவிராயர்
அப்துல்காதர்
அரங்கசாமி அய்யங்கார்
சரவணக் கவிராயர்.

அரண்மனைகளிலும் அடுக்குமாடிச் செல்வந்தர்கள் வீடுகளிலும் மட்டுமே காண முடிந்த கவனகக்கலையைத் தமிழகத்தில் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் கோவில்பட்டி இராமையா அவர்களையே சாரும். அவர் கண்பார்வை இல்லாதவர். பத்து வகையான கவனகக்கலை நிகழ்ச்சி நடத்துவதில் வல்லவர். அவர் இன்று உயிருடன் இல்லை.

அவருக்குப்பின் கவனகக்கலையைத் தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்து உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் (தசாவதானி) இராமையா அவர்களுடைய புதல்வர் பதினாறுகவனகர் திருக்குறள் கனகசுப்புரெத்தினம் அவர்களையே சாரும். அவரை இன்றைய கவனகக் கலையின் தந்தை என்று சொல்லலாம்.

அடுத்த கவனகர் செங்கல்பட்டு திருக்குறள் இரா.எல்லப்பன் அவர்கள். இவர் திருக்குறளில் மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட கவனகங்களைச் செய்யக் கூடியவர்.

எண் கவனகம், எழுத்து கவனகம், வண்ண கவனகம், பெயர் கவனகம், கூட்டல் கவனகம், கழித்தல் கவனகம், பெருக்கல் கவனகம், தொடுதல் கவனகம், மணியடித்தல் கவனகம், ஈற்றடிக்கு வெண்பா எழுதுதல், சிலேடை வெண்பா எழுதுதல், கட்டளைக் கலித்துறை எழுதுதல், சூழ்நிலைக்கேற்ப இசைப்பாடல் எழுதுதல், மாயக் கட்டம், பிறந்த நாளுக்குக் கிழமை கூறல், கனமூலம் கூறல், இருமடி கூறல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், நாலடியார், திருக்குறள் கூறுதல், கழித்தல் கவனகம், கனமூலம் கூறுதல், இருமடி கூறுதல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், சூழ்நிலைக்குப் பாடல் எழுதுதல் எனப் பலவகையான கவனகங்கள் உள்ளன.

கணினியின் செயலியைப் போல மனிதனின் மூளையானது செயல்படுவதை இக்கலை வெளிப்படுத்துகிறது. கீழ்க்கண்ட காணொலியைக் கண்டு கவனகத்தின் கூறுகளை நாம் அறிந்து கொள்ளலாம். நம்மில் சிலர் இதுவரை கவனகம் நிகழ்ச்சியைக் காணாதவர்களாக இருக்கக் கூடும் கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்கி அதனை நுகர்ந்து பயன் பெறலாம்.
 

இந் நிகழ்ச்சியில் இருப்பவர் (கனக சுப்புரத்தினம் பதினாறு நிகழ்ச்சிகளை நடத்துபவர். இவரின் தந்தையின் (இராமையாப் பிள்ளை) நிகழ்ச்சி ஒன்றினை, பள்ளி மாணவனாக இருந்த வேளையில் இராமச்சந்திராபுரம் உயர்நிலைப் பள்ளியில் வைத்துக் கண்டிருக்கிறேன். அவர் பார்வையற்றவராய் இருந்தும் இந் நிகழ்ச்சியை மிக அருமையாக நடத்துவார்.

அவர்தம் வரிசையில், எழுபது கவனகங்களை நடத்தும் ஆற்றல் கொண்ட மற்றுமொரு வல்லவர்தான் முனைவர் கலை.செழியன் அவர்கள் ஆவார். அமெரிக்கத் தமிழர்களுக்கும், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் இவ்வரிய கலையைக் கற்பிக்க வருகிறார் முனைவர் கலை.செழியன் அவர்கள்.

நீங்கள் அனைவரும், அவரைக் கண்டு, பழகி, அவர்தம் பயிலரங்கத்தில் பங்கேற்றுப் பயன்பெற இன்றே வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழாவுக்கு முன்பதிவு செய்து கொள்ளூங்கள். நுழைவுக் கட்டணத்துக்கான பத்து விழுக்காட்டுக் கழிவு பெற, ஏப்ரல் முப்பதாம் நாள் கடைசி நாள் என்பதைக் கவனத்தில் கொள்க. வெள்ளி விழாவுக்கு வாங்க! கலைகளை எல்லாம் போற்றுங்க!! விபரங்களுக்கு: www.fetna.org

தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

(கனக சுப்புரத்தினம் பதினாறு நிகழ்ச்சிகளை நடத்துபவர்.

இவரது பயிலரங்கில் கணவருடன் கலந்துகொண்டோம் .. பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது..

பகிர்வுக்கு நிறைவான பாராட்டுக்கள்.. நன்றிகள்..

sriramsharma said...

வணக்கம் !
வாழ்த்துக்கள் ...!!
வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் , செயலாளராக தாங்கள் தேர்வு செய்யப்பட்டமை எண்ணி , பெருமிதம் கொள்கிறோம்
- இவண்
" வேலு நாச்சியார் " மணிமேகலை சர்மா
ஸ்ரீராம் சர்மா, எழுத்தாளர் - இயக்குனர் .