10/11/2010

நான் குப்பை பேசுறேன்!

வணக்கமெல்லாம் சொல்வதாக நான் இல்லை. ஏனென்றால் நான் மிகவும் சினமாக இருக்கிறேன். என்னது? நான் யாரென்றே தெரியாதா??

சரி சொல்கிறேன். என் பெயர் குப்பை. உண்மையில் சொல்லப் போனால், எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. எனது மெய்நிகர்ப் பெயர் செத்தை என்பதாகும்.

ஆம். என் பெயரைச் சிதைத்துவிட்டு, குப்பை என்றே அழைக்கிறார்கள் மனிதர்கள். என்னது? திமிறாகப் பேசுகிறேனா? நான்தான் துவக்கத்திலேயே கூறினேனே, சினமாய் இருக்கிறேன் என்று?!

எது ஒன்றும், தனக்கு வாய்த்த ஆயுள் முடிந்ததும், அதற்கான வீரியம் அற்று, பயனற்றுப் போகும். அப்படியானதைத்தான், தமிழ்த்தாய் செத்தை என அழைப்பாள். அச்சொல்லைச் சிதைத்துவிட்டுத்தான், நீங்கள் என்னைக் குப்பை என்று அழைக்கத் தலைப்பட்டு உள்ளீர்கள்.

புரிகிறது. செத்த எனக்கு எப்படி உயிர் வந்தது எனத்தானே யோசிக்கிறீர்கள்? என்கதையை உங்களுக்குச் சொல்வதற்காக, பிரத்தியேகப் பிறவி எடுத்து வந்திருக்கிறேன் நான். சரி, மேற்கொண்டு நான் சொல்ல வந்ததைக் கேளுங்கள் மனிதக் குப்பைகளே!

நீங்களும் கோபப்படாதீர்கள்... பொறுமையாகக் கேளுங்கள். குப்பை என்றால், தொகுதியாக அல்லது கூட்டமாக இருப்பவற்றைத்தான் சொல்வது. அது ஒரு இழிவான சொல் அன்று!

ஆனால், நீங்கள் என்ன செய்து வருகிறீர்கள்? அவன் ஒரு குப்பை. அவன் எழுதுறது ஒரு குப்பை. அவன் கடையில இருக்கிறது எல்லாமே குப்பை. அந்த நாதாரி எடுத்தது படம் அல்ல; அது ஒரு பெரும்குப்பை. இப்படியாகச் சகட்டு மேனிக்கு, இழிவுபடுத்தும் விதமாகவே பாவித்து வருகிறீர்கள்.

குப்பைமேடு என்றால், பலவற்றையும் ஒன்று கூட்டி, மொத்தமாக வைத்திருப்பது; குப்பை சேர்த்து என்றால், ஆங்காங்கே இருப்பனவற்றை ஒரு இடத்தில் மொத்தமாகச் சேர்ப்பது; குப்பன் என்றால், செல்வம் மற்றும் சினேகத்தை குப்பையாகத் தன் வசம் வைத்திருப்பவன். இவை எல்லாம்தான் குப்பைகள்.

ஆனால் நீங்களோ, செத்தையாகிய என்னையும், கழிசல், மக்கு, மட்டி, முடை, கஞ்சல், அழுகல், கூமுட்டை, கூளம் போன்ற, பயன்பாட்டுக்கு உதவாத எதையும் குப்பை என்றே சொல்கிறீர்கள். நியாயமா??

சரி, என் தோழர்களான கழிசல், மக்கு முதலானோரைப் பற்றியும் சிறிது பார்க்கலாம். கழிசல் என்பவன், மனிதர்களாகிய உங்களால் கழிக்கப்பட்டவன், ஒதுக்கப்பட்டவன். ஒதுக்கினால், அவன் என்ன ஆவான்?


பயனற்றுத்தான் போவான். அதுமட்டுமல்ல, பூமிக்கு வீண் சுமையாகவும் இருக்க நேரிடும். காற்றில் இருக்கும் இன்ன பிற மாசுக்களுடன் இணைந்து உங்களுக்கு உபத்திரவம் தரத் தலைப்படுவான் அவன். எனவே அவனைக் கழிக்கும் முன்பு, யோசித்துச் செயல்படுங்கள். மீளாக்கம் செய்யத் தலைப்படுங்கள். அல்லால், அவன் குப்பையாக மாட்டான்; உங்களைச் செத்தை ஆக்கிவிடுவான்.

மக்கு என்றால், பயன்பாட்டுக்குப் பிறகான மருகிப் போகும் நிலையில் உள்ளவன். மட்டி என்றால், பயன்பாட்டுக்குப் பிறகான எஞ்சிய நிலையில் இருப்பவன். அழுகல் என்றால், பயன்பாட்டுக்கு உதாவாமற் போகும் நிலையில் உள்ளவன்.

இவர்கள் எல்லாம், மனித குலத்துக்கு நன்மைபயக்கக் கூடியவர்கள். ஏனென்றால், இப்புவியில் இருக்கும் ஏதோ ஒன்றுடன் இணைந்து நாங்கள் மீண்டும் உங்களுக்குப் பயனுறும் வகையில் மீள்பிறவி பெறப் படைக்கப்பட்டவர்கள். ஆகவே, எங்களை இனியும் குப்பை என இகழ்ந்து பேசாதீர்கள்.

சரி, யார்தான் குப்பை என்பவன்? இன்றைய சூழலில் குப்பை என்பவன் உங்களுடனேயே இருக்கிறான். நீங்களும் குப்பைகளைக் குப்பைகள் என்று உணராமல், தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஆமாம். நெகிழி(plastics)யால் ஆன எதுவும் குப்பைகள் ஆகித்தான் போகிறது. அக்குப்பைகளை நீங்கள், நாளும், நாளும் நாடிச் செல்கிறீர்கள். உலகெங்கும் இருக்கிற நெகிழிக் குப்பைகள் சென்னை வருகிறதாமே? யாரோ சொல்லக் கேட்டேன். பார்த்து சூதானமாக இருங்கள் மனிதகுல மாணிக்கஙளே! அடியேனை மன்னியுங்கள்!!

-குப்பை எனப்படுகிற செத்தை!

21 comments:

Unknown said...

"இவர்கள் எல்லாம், மனித குலத்துக்கு நன்மைபயக்கக் கூடியவர்கள். ஏனென்றால், இப்புவியில் இருக்கும் ஏதோ ஒன்றுடன் இணைந்து நாங்கள் மீண்டும் உங்களுக்குப் பயனுறும் வகையில் மீள்பிறவி பெறப் படைக்கப்பட்டவர்கள். "

நல்ல வரிகள்.

குப்பையரோடு சேர்ந்து நாமும் மனித குலத்துக்கு நன்மைபயக்கக் வேண்டும். இல்லாட்டி நாமும் குப்பைக்குச் சமானமே.

Unknown said...

அசத்துங்க. நல்லா இருக்கு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//சரி, மேற்கொண்டு நான் சொல்ல வந்ததைக் கேளுங்கள் மனிதக் குப்பைகளே!//

அப்ப கேக்கறவங்க எல்லாம் குப்பைகளா? :)) நானு எஸ்கேப்பு..

நல்ல இடுகை.. காணொளிகள் அருமை..

vasu balaji said...

அவ்வ்வ்வ். கொடுமையப் பார்த்தீங்களா. நெகிழி நெகிழின்னு இந்த மாப்பும் திட்டுறத.அதையும் என்னால் செய்யப்பட்ட மடிக்கணினிய வச்சே என்னைய திட்டுறாங்க. இந்த கொடுமை எங்கயும் உண்டுமா. உடனே என்னால் செய்யப்பட்ட கைபேசியை எடுத்து கிழிச்சி தோரணம் கட்டுங்க மக்கா. என்னது காசு இல்லையா. நெகிழிக் கடன் அட்டை, முதல் அட்டை இருக்கில்ல. அதை என்னால் ஆன பொட்டியில வச்சி இழுத்தா காசு. நடத்துங்க ராசாக்களே.:))

Naanjil Peter said...

தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல் ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்
புல்மூசு கவலைய முள்மிடை வேலிப்
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்புஓய் ஒழுகை எண்ணுப மாதோ!
நோகோ யானே! தேய்கமா காலை!
பயில்பூஞ் சோலை மயிலெழுந்து ஆலவும் பயில்இருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும்
கலையுங் கொள்ளா வாகப் பலவும்
காலம் அன்றியும் மரம்பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
15 அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை
பெரிய நறவின் கூர்வேற் பாரியது
அருமை அறியார் போர்எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம்படைக் கலிமா எண்ணு வோரே.
-------------
புறநானூறு பாடல் 116 வரும் ஈத்திலைக் குப்பை ஏறி என்பது எதைக் குறிக்கிறது?

பழமைபேசி said...

@@naanjil

ஈச்ச மரத்தின் இலைகள் நிறைந்த குப்பை மேடுகளில் ஏறிப் பாரி மகளிர் அவ்வழியே வரிசையாகச் செல்லும் உப்பு வண்டிகளை எண்ணுகிறார்கள்.

அண்ணா, இலைகள் கொண்டு சேர்த்த மேடு.... குப்பை மேடு என்பது, கொண்டு குவித்த மேடு என்றே ஆகிறது.

வீட்டுப் புறக்கொல்லையில் இருப்பதும் அதே... கழிசல்கள் மற்றும் இதர செத்தைகள் கொட்டிச் சேர்த்த குவியல் ஆகும்.

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

அய்யே... நெகிழி என்பவன் ஆகாதவன் அல்லன்... நெகிழியால் ஆக்கும் குப்பைகளே ஆகாதன்... இன்னுஞ் சொல்லப் போனால், நீங்கள் கூறின அனைத்தும் ஒழிதன நன்றாம்!!!

கயல் said...

அருமை!

vasu balaji said...

பயன்பாடு முடிஞ்சதும் குப்பைதானே. மூலம் ஒன்னுதானே. பெயர் வேற:(. அதுக்கென்ன தூத்துக்குடிக்கு அனுப்பிட்டா போச்சு. கொடுமை என்னன்னா ஈரோட்டுக் காரரு ஒருத்தருதான் சமீபத்துல தடைசெய்யப்பட்ட காலாவதியான பேட்டரி எல்லாமும் இறக்குமதி செஞ்சாராம்.:))

எண்ணங்கள் 13189034291840215795 said...

புதிய தகவல்...

ஈரோடு கதிர் said...

நெகிழி முதலான எதுவுமே.. உலகத்தில் இல்லாத ஒன்று அல்ல, எல்லாவற்றின் மூலக்கூறும் உலகத்திலேயே கிடைத்தவைகள்தான், ஆனாலும் பயன் படுத்துவிதமும், அளவும், மறு சுழற்சிக்கு ஆட்படுத்தும் விதமும்தான் ஆபத்தின் அளவுகளை நிர்ணயிக்கின்றது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மட்டிப்பயலே ன்னு திட்டுவாங்க.
இதானா அர்த்தம் :)

பழமைபேசி said...

@@@@வானம்பாடிகள்

அண்ணே, தப்பித் தவறி ஒரு அரளி விதை உள்ள போய்டிச்சா, உடல் சமாளிச்சிடும்... உள்ள போனதே கூடத் தெரியாது..... அதுவே அளவு கூடும் போது... சங்குதான்...

அது போலத்தான்... இயற்கைக்கு, கரியுமில வாயுவைச் சுலுவுல சரிக்கட்டத் தெரியும்.... அதுவே, அளவு கூடும் போது பிராண் வாயுவுக்கே பிராண்ண் போய்டுது....

Radhakrishnan said...

பல விசயங்கள் எளிதாக புரிந்தது. குப்பையை கிளறியதில் எத்தனை மாணிக்கங்கள்.

பழமைபேசி said...

குப்பி என்றால், எண்ணற்ற துளிகளை ஒன்றாக்கி, தன்னகத்தே கொண்டிருக்கும் சிறு கொள்கலம்.

குப்பையைப் பொறுக்கு என்பது தவறு; ஆங்காங்கே கிடப்பது செத்தை அல்லது கூளமாகத்தான் இருக்கும்.

குப்பை போடாதே என்பதும் தவறு; கழிசலைப் போடாதே என்பதே சரி...

கொண்டு சேர்த்துக் குவியலாய் இருப்பதே குப்பை... குப்பை... குப்பை...

வருண் said...

தல!

நானும், நீங்களும் அந்த குப்பைதான். நம்ம ஓரளவுக்கு நல்ல குப்பை (biodegradable). உலகத்தில் உள்ள குப்பையெல்லாம் நம்ம மாரி "நல்ல குப்பையா" இருந்தால் பிரச்சினையில்லை!

The problem starts with synthetic plastic and polymers which are not biodegradable. Nothing wrong with landfill as long as it degrades like us!

Is that bad to cremate as the oxidized products of our cremation polluting the environment?

பழமைபேசி said...

@@வருண்

see... this is what we like from you...

landfilling is not bad and it is inevitable... as you said, the problem is, they are not cremated properly....

...exposing expired and spoiled stuff in the air...etc, etc....

and landfilling synthetics all over the place...

அரசூரான் said...

ஆணி பிடுங்கும் நேரத்தில் குப்பை கொட்டிகிட்டு இருக்கீங்களா? கொட்டுங்க கொட்டுங்க.

இத படிச்சிட்டு இனி குப்பை மேட்டர யாரும் சப்பை மேட்டருன்னு சொல்ல முடியாது.

எங்க ஊரில் நெற்ப் பதரை கூளான் என்று சொல்லுவோம். களத்து மேட்டில் குப்பை கூளானை கூட்டி ஒதுக்கு என்று சொல்வது வழக்கம்.

ராஜ நடராஜன் said...

நானும்தான் சினமாக இருக்கிறேன்.நற!நற!

LinuxAddict said...
This comment has been removed by the author.
priyamudanprabu said...

nice post