8/10/2010

குருடிமலையில் பழமைபேசி

பண்டங்கன்னுகள் அசை போடும் நேரமது. மாலை வருமுன், மந்திகளை மயக்கி ஆட்டம் போடும் மயில்கள் வலம் வரும் வேளையது....

“அண்ணா, எங்க போலாமுங்க?”

“நீங்கதேன் குருடிமலை பாத்து நெம்ப நாளாச்சின்னு சொன்னீங்கள்ல... வாங்க ஒரு எட்டு, பாத்துப் போட்டு வந்துறலாம்”

“செரி வண்டி எடுங்க போலாம்”

வாகனமானது, நகரத்தின் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் கணபதியில் இருந்து உருண்டோடி, மணியகாரன் பாளையம், உடையாம் பாளையம், உருமாண்டம் பாளையம், வெள்ளக்கிணறு வழியாக துடியலூர்ச் சந்தையையும் ஒரு நோட்டமிட்டபடி, புளியமரங்களைக் காவு கொடுத்துக் கொண்டு இருக்கும் மேட்டுப் பாளையம் சாலையை வெட்டி வடமதுரைக்குள் புகுந்தது.

நகரத்தின் இரைச்சல் மெதுவாக அடங்கி, கிராமியம் மெல்ல மெல்ல பூக்க ஆரம்பித்தது. பன்னிமடைக்குள் சென்றதுமே, எழில் கொஞ்சும் தோட்டங்களும் துறவுகளும் கண்கொள்ளாக் காட்சியாகப் பரிணமித்தது.

வாழைத் தோட்டங்களும், கரும்பு வயல்களும், தென்னைத் தோப்புகளும், கமுக மரங்களும், கனத்துப் பெருத்த ஆல, அரச மரங்களும்... அப்பப்பா... இதையாவது காலதேவன் விட்டு வைத்திருக்கிறானே... இன்னும் எத்தனை நாட்களுக்கோ.... ஆதங்கம் நம்முள் கப்பி, ஆக்கிரமித்தது.... நாமும் படங்களாய்ச் சுட்டுத் தள்ளினோம்....

வரப்பாளையம் சென்றதுமே.... இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே பாலகனாகச் சென்று கால் பதித்த நினைவுகள் மீண்டெழ... சிறு குழந்தையாகிப் போனோம் நாம்... அதே ஆல மரம்.... எண்ணற்ற புது விழுதுகள்... சிறு ஓடையாக இருந்த வழித்தடம் செப்பனிட்ட பாதையாக உருவெடுத்து இருந்தது.

“மேல்முடியிலிருந்த சாமியார் செத்துப் பல வருசங்கள் ஆச்சுங்க தம்பி!”

ஞானம் ஊட்டும் பொருட்டு, தினை உருண்டையில் கஞ்சாப் பூவுடன் சொப்புத் தேனும் உண்டு மகிழ்ந்த நாட்கள் நம்மை நினைப்பில் நசுக்கியது...


வண்டியை அங்கிருந்த புளிய மர நிழலில் நிறுத்திவிட்டு மலை முகட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம் நாம்... ஆகா... அதே மல்லாண்டை... புடி படத்தை... படங்களாய்ச் சுட்டித் தள்ளினோம் நாம்...

”இங்க இருந்து, எதுத்தாப்ல இருக்குற மலையில இருக்குற அனுவாவி சுப்ரமணியர் கோயிலையும் ஒரு படம் எடுத்துப் போடுங் தம்பி”

மறுபேச்சின்றி, எதிரில் இருக்கும் கணுவாய் மலைத் தொடரையும், அனுவாவி சுப்ரமணியர் கோவிலையும் சுட்டுத் தள்ளினோம் நாம்.

“இங்க பாருங், சந்தன மரம் எவ்வளவுன்னு...”

அருமையாய், பொழிலென பெருத்த மரங்கள்... அடடா... இயற்கையே... நீ வாழ்க... நீ வாழ்க... மனம் ஆரவாரத்தில் குதித்து எகிறியது.

“அண்ணா, அங்க பாருங்க மணிப் புறா...”


சக இணைப் புறாவது மாண்டு போனால், எஞ்சி இருக்கும் இப்புறாவானது, பெருங்கல்லை விழுங்கி, உயரப் பறந்து சென்று, அங்கிருந்து கீழே விழுந்து தன்னுயரை மாய்த்துக் கொள்ளும் காட்சியானது நம்முன்னே விரிய... அவையிரண்டும் இணையாய் அமர்ந்திருந்தன... வாழ்த்தி முன்னேறிச் சென்றோம் நாம்.

”அண்ணா, மேல்முடியில பிரிகால்காரங்க இப்ப சாமாஞ்செட்டெல்லாம் போட்டு வெச்சிருக்காங்களாம்... ஆனா, நமக்குத்தேன் நேரங்காணாது....”

“ஆமாங் தம்பி.... அதுக்கு ரெண்டு நாள் அல்ல வேணும்? நாம இந்த பொன்னூத்தம்மன் கோயலோட திலும்பீறலாங் கண்ணூ”

பொன்னூத்தன் கோவில்.... அம்மன், குகையில் வீற்றிருக்கும் காட்சி... கண்டவுடன், மெய் சிலிர்த்தது... நாம் கைகூப்பவும், வனத்தில் இருக்கும் யானை எங்கோ இருந்து பிளிறும் ஓசை... மனம் ‘கருக்’ என்றது...

“அண்ணா”

“ஒன்னும் பயப்பாடாதீங்... அது இங்கெல்லாம் வராது”


பாறை ஒன்றின் மேல் ஏறி, இயற்கையைப் பருகினோம்... மயில்கள் அகவின... குயில்கள் கூவின... அணில்கள்... கிறீச்... கிறீச்.... மரங்கள் அசைந்து அசைந்து தென்பொதிகைக் காற்றை வாங்கி நம்மீது பொழிய.... அப்பப்பா... மூலிகை வாசம்... ஆளரவமற்ற வனமது...

தென்னாடுடைய சிவனே.... எம்பூமி இன்று போல் என்றும் இருக்க அருள் புரிவாயே! காலம் பதில் சொல்லும்... காத்திருப்போம்... எது என்னவானாலும் இப்பதிவானது காட்சிகளைக் காலமெலாம் எடுத்துச் செல்லும்...

கண்கள் பனிக்க, இருள் நம்மைச் சூழ்ந்து கப்ப, பிரியாமற் பிரிந்து மலையடிவாரம் நோக்கி நகர ஆரம்பித்தோம்...

முகட்டு மல்லாண்டை, ”போடா போ... மனிதம் அற்ற மனிதனே, எம்மைச் சுரண்ட நின்கூட்டம் மீண்டும் வரத்தானே போகிறது?!” என விட்டேற்றியாக நகைக்கும் ஒலி எம்முள் அறைந்து, நாணிக் குறுக வைத்தது. என்றாலும் கண்ட காட்சிகள் நம்முள் என்றென்றும் செழித்து வாழும்!!!
காட்சிப் படங்கள்!

18 comments:

ஈரோடு கதிர் said...

அடடா.. இயற்கைய உங்க கூடவே பருகின மாதிரி இருக்கு

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//அடடா.. இயற்கைய உங்க கூடவே பருகின மாதிரி இருக்கு//

கோக்க கோலா குடிச்சே குடைசாயற வண்டிக்கு அலும்பப்பாரு.:))

ஆரூரன் விசுவநாதன் said...

//கோக்க கோலா குடிச்சே குடைசாயற வண்டிக்கு அலும்பப்பாரு.:))//

அதானே....அதானே.....

கண்ணகி said...

இறைவனை இயற்கையாக தரிசித்துவிட்டு வந்திருக்கிறீர்கள்...

Mahesh said...

குடுத்து வெச்ச மகராசன்...ம்ம்ம்....

க.பாலாசி said...

இந்த காடுமேடெல்லாம் காணக்கிடைக்காதவொன்றாக காணப்பழகிவிட்டது கண்கள்... நன்றி..

Unknown said...

ஏனுங்கண்ணா, ஒரே படமா புடுச்சு தள்ளறீங்க போல..??!!

Thomas Ruban said...

போட்டாக்கள் அருமை, பத்திரமாக வைத்திருங்கள் அதை பார்த்து மட்டுமே சந்தோஷம் படும் நிலை வரலாம்.

//இறைவன் இதையாவது விட்டு வைத்திருக்கிறானே//

இறைவனா!!!!

நன்றி .

naanjil said...

தென்னாடுடைய சிவனே.... எம்பூமி இன்று போல் என்றும் இருக்க அருள் புரிவாயே!

அருமையான வேண்டுகோள்.

நன்றி
அண்ணன் நாஞ்சில் பீற்றர்

VELU.G said...

நல்ல பகிர்வு

நானும் உங்களோடு பயணம் செய்த அனுபவம் ஏற்பட்டது

நன்றி

a said...

gives a feel like i am travelling along with you. i never enjoyed my vacation in INDIA like this.
ENJOY........

ரவி said...

பெங்களூர் பக்கம் வந்தா சொல்லு பழம சந்திக்கலாம்.

குறும்பன் said...

//கண்பதியில் இருந்து// கண்பதியா அல்ல கணபதியா?

குறும்பன் said...

//ஞானம் ஊட்டும் பொருட்டு, தினை உருண்டையில் கஞ்சாப் பூவுடன் சொப்புத் தேனும் உண்டு மகிழ்ந்த நாட்கள் நம்மை நினைப்பில் நசுக்கியது...//


என்ன கஞ்சா குடிச்சிருக்கிங்களா...

சரண் said...

// வழிப்போக்கன் - யோகேஷ் said...
gives a feel like i am travelling along with you. i never enjoyed my vacation in INDIA like this.
ENJOY........
//

I Repeat.....

senthil said...

நான் சிறு வயதில் சென்ற பொன்னூத்து அம்மன் கோவிலைத் தங்கள் பதிவு மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்ததில் மகிழ்வு. என்றுமே மறக்கவியலாத இயற்கைக் காட்சிகள் நிரம்பியவை குருடி மலை. (பூப் பறித்தல் விழாவிற்கு அக் கோவிலுக்கு போயிருக்கிறீர்களா? அங்கு தான் அண்ணலும் நோக்க அவளும் நோக்க அதனால் அம்மாக்களும் கடுப்பாக... ம்... அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே... நண்பனே...)

naanjil said...

*திப்பம்பட்டிக் கரடில் வழுக்காம்பாறை மட்டும் வெளுத்த வண்ணத்தில் தெரியும்.*
வழுக்காம்பாறை எங்கள் நாஞ்சில் நாட்டிலும் உள்ளது. கன்னியாகுமரிக்குப் போகும் வழியில் சுசீந்தரம் பக்கத்தில் உள்ளது.

சிற்றூர்களைப் பற்றிய வர்ணனை அருமையாக உள்ளது.

அன்புடன்
அண்ணன் நாஞ்சில் பீற்றர்
தற்பொழுது சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து

கறூக்கருவா said...

மணீ உங்க பதிவை படிச்சதும் தான் பொன்னூத்தூ பற்றிய நெனப்பே வந்தது.ம் அதெல்லாம் ஒரு காலம் எப்படா பொங்கல் வரும் பூபொறிக்கற நோம்பி வருமுனு போயி இரும்பும் துரும்பாகும் இட்டேரியும் பாழாகுமுனு அதம் பண்ணீட்டு வருவோம்,இப்போ வெள்ளகிணற்றிலிருந்து கொண்டே வருசத்துக்கு ஒரு தடவ கூட எட்டி பாக்கமுடியல.