8/09/2010

நான் கண்ட சேவல்கள்!!!

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த சேவல்கள் உருவத்தின் அளவால் சிறுவடை, பெருவடை மற்றும் காட்டுச் சேவல் என இனம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது முதலான பல பற்றியங்களைச் சென்ற இடுகையில் கண்டோம். அதைப் போலவே, நிறத்தாலும் பல வகைகளாகப் பெயரிடப்பட்டு உள்ளன.

கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல் என அழைக்கப்படுகின்றன. கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள் எனப்படுகின்றன. கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.

வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை பேய்க்கருப்பு என அழைக்கப்படுகின்றன. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம் என்பனவாகும். சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள் என அழைக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை, வீரத்துடன் வாழும் இச்சேவல்கள் தன்னை வளர்த்துப் பராமரிக்கும் பராமரிப்பாளனுக்கு விசுவாசமாகவும், குறிப்பறிந்து வாழக்கூடிய வகையிலும் இருப்பனவாகும்.

சேவல்களுக்குத் தடிமன்(சளி) வந்தால், அதன் குரலை வைத்து எளிதில் தெரிந்து கொள்வோம் என்கிறார் கிணத்துக்கடவு சேவல் பராமரிப்பாளர் முருகன். சளிப்பிடித்த சேவல்களுக்கு, குறுமிளகு, பூண்டு, சிறிதளவில் மிளகாய்த்தூள் அடங்கிய உருண்டைகளைக் கொடுப்பதன் மூலம் அவற்றைக் குணப்படுத்தலாம் என்கிறார் அவர்.

மேலும் வெள்ளைக் கழிச்சல் எனும் நோயைக் குணப்படுத்த இயலாது; வருமுன் காத்தலே மிக அவசியம் என்றும் கூறுகிறார். இந்நோய் தாக்குண்ட சேவல்கள், வெள்ளையாகக் கழிக்கும்; மேலும் உடன் இருக்கும் சேவல் மற்றும் கோழிகளுக்கும் தொற்றுவிடக் கூடிய அபாயமும் உண்டு. சேவல்கள் இருக்கும் இடத்தை, சுண்ணாம்பு கலந்த நீரால் தெளித்து, கட்டுத்தறி முழுதும் சுண்ணாம்புக் கலவையைப் பூசுவதுமூலம் இதைத் தடுத்து நிறுத்தலாம்.

கண்ணைச் சுற்றி பேன்கள் ஆக்கிரமிப்பதைத் தடுக்க, சூடான தேங்காய் எண்ணெயில் பூண்டு மற்றும் இஞ்சியை இட்டு, பிறகு அந்த எண்ணெயை கண்களில் இடுவதன் மூலம் பேன் தொல்லையில் இருந்து காப்பாற்ற முடியும்.

நாம் பார்த்த சில சேவல்களின் பெயர் கீழே வருமாறு:

கோழி வள்ளுவர்,
காக வள்ளுவர்,
கீரி வள்ளுவர்,
பூத வள்ளுவர்,
பொன்ற வள்ளுவர்,
பொன்றக் காகம்,
செங்காகம்,
கருங்காகம்,
வெண்காகம்,
செங்கீரி,
காகக் கீரி,
பொன்றக் கீரி,
வள்ளுவர்க் கீரி,
பூதிக் கீரி,
காக பூதி,
பொன்ற பூதி,
செம்பூதி,
பொன்ற வெள்ளை,
புள்ளி வெள்ளை,
காகக் கருப்பு,
பேய்க்கருப்பு,
சேவப்பேடு,
கோழிப்பேடு,
கரும்பேடு,
வெண்பேடு,
பொன்றப்பேடு,
பூதப்பேடு,
காகப்பேடு,
சித்திரப்புள்ளி,
நூலாவள்ளுவர்

கோழி வள்ளுவர்

சித்திரப்புள்ளி

பொன்றக்கீரி

பேய்க்கருப்பு

காகவள்ளுவர்

வள்ளுவர்

செங்காகம்

வெள்ளை வள்ளுவர்

பொன்ற வெள்ளை

பொன்றக்கால் காகச் சேவல்

காகச் சேவல்

காகக்கருப்பு

பொன்றக்கால் காகம்

வள்ளுவக்கீரி

பொன்றக்கால் செங்காகம்

நூலாவள்ளுவர்

பொன்றம்

சாணிப்பச்சக் காகம்

காகவள்ளுவர்

நூலாவள்ளுவர்

பொன்றக் காகம்

காகச் சேவல்

காகக்கருப்பு

சல்லிப்பொன்ற வள்ளுவர்

காகப் பேடு

பூதி வள்ளுவர்

பூதி வள்ளுவர்

பொன்றக் கீரி

பொன்றக் கீரி

காக வள்ளுவர்ப் பேடு

கொங்கு நாட்டின் மேற்குக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, கிராமியத்தைக் கண்ணுறச் செய்வதில் உதவிய வாகன ஓட்டுனர் வசந்த் அவர்களுக்கும், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள வெள்ளக்கிணறு சுப்பன் அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.


முன்னறிவிப்பு: கிட்டத்தட்ட முந்நூறு விதமான சேவல்களைப் படம் பிடிப்பதாக இருந்தோம். எதிர்பாராத காரணத்தால் அது தடைபட்டு விட்டது. எனினும் வரும்காலங்களில் நல்லதொரு வாய்ப்பு கிட்டும் என நம்புகிறோம். விரைவில், சுப்பன் மற்றும் வசந்த் அவர்களின் பேட்டி, எழிலாய்ப் பழமை பேசும் வலைப்பதிவில் இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

18 comments:

vasu balaji said...

இந்தப் பொன்றனைத்தான் இங்க பொந்தக்கோழின்னு சொல்றாய்ங்களோ?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

முந்நூறு விதமான கோழிகளா...

ஆகா அருமையான தகவல்கள்..

நா. கணேசன் said...

> கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை
> *வள்ளுவர்ச் சேவல்* என அழைக்கப்படுகின்றன.

வளைதல் என்ற வினையடிப் பிறந்த பெயர்: வள்ளுவச் சேவல். வளைந்த கீத்து, கீத்தாய் உள்ள வரிகள் கொண்ட சேவல்.

தாளக் கருவி முரசத்தின் தோலை வார்கொண்டு கட்டுவது வள்ளுவன் தொழில். ’வள்வார் முரசு’ - சங்க இலக்கியம். அரசனின் ஆணையை யானை மீதேறி முரசெறிந்து அறிவிப்பவன் வள்ளுவன், இதனை முதன்முதலில் கொங்குவேள் செய்த பெருங்கதை தெரிவிக்கிறது. வையாபுரிப்பிள்ளை வள்ளுவன் பற்றிய கட்டுரையில் பெருங்கதைக் குறிப்பைக் கொடுத்துள்ளார். குறள் ஆசிரியர் சமணர் என்று முதலில் நிறுவின கட்டுரை அது.

வாரணச் சண்டை என்று கம்பன் சேவக்கட்டை வருணித்துள்ளான். கம்பரை அறிந்தோரை நாடினால் உடனே அந்தச் செய்யுள் கிட்டும். சிலநாளில், நானும் பார்த்துத்
தருகிறேன்.

கம்போடியாவின் அங்கோர் வாட் விஷ்ணு கோவிலில் மிக அழகான புடைச்சிற்பமாய் சேவற்கட்டு காட்சி உள்ளது. ஊரே கலந்துகொள்கிறதை போட்டோ மாதிரி சிலைசெய்த சமத்தர்கள் கம்போடியர்.

அன்புடன்,
நா. கணேசன்

க.பாலாசி said...

நல்லதொரு தகவல் பகிர்வு... சேவல்களின் இத்தனை வகைகளைக்கண்டு ஆச்சர்யமாக உள்ளது...

தேவன் மாயம் said...

நல்ல ஆவனப்படுத்துதல் நண்பரே! கட்டாயம் தமிழ் அகராதிகளில் சேர்க்கலாம்!!

Amudhavan said...

நிறைய முயன்று பல அரிய தகவல்கள் திரட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
http://amudhavan.blogspot.com/

Karthick Chidambaram said...

அருமையான தகவல்கள். கணேசன் அவர்களின் பின்னூடமும் அருமை.

சிநேகிதன் அக்பர் said...

படங்கள் அருமை.

Angel said...

aahhha nalla padhivu.if my father was alive he would have really liked this topic .

Anonymous said...

கிடைத்தற்கரிய தகவல்களும் போட்டோக்களும் அருமை....

Sabarinathan Arthanari said...
This comment has been removed by the author.
Sabarinathan Arthanari said...

கலக்கிட்டிங்க

பகிர்ந்தமைக்கு நன்றி

குறும்பன் said...

என்ன 300 விதமான சேவல்களா? எல்லாம் வேற வேற பெயர் உள்ள சண்டை சேவல்களா?

கறூக்கருவா said...

அட்ரா சக்கை நா பாக்க வளந்த வசந்து தா உங்க வாகன ஓட்டினு தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோசம இருக்கு.சாவுகாசம ஒரு நா வாங்க நம்மூர்ல ஏகப்பட்ட ஜாக்கிக இருக்கங்க நீங்க நெனச்சமாதிரி சேவல்,புறா பத்தி படமெடுக்கலாம்.

ராஜ நடராஜன் said...

இதப் பார்த்திருந்தா சேவக்கோழி 1500ரூவா ன்னு கூவியே இருக்க வேண்டாம்ன்னு தோணுது!

இதுக்குப்பேருதான் வள்ளுவக்கோழி ஓட சண்டைக்கோழியும் அதுபோல் ஓடிச்சாம்ங்கிறது:)

ஆமா!12000க்கு வாங்கப்போன கதையக் காணோமே?

ராஜ நடராஜன் said...

ஆவணப்படுத்தலுக்கு சிறந்த இடுகை.

தேவன்மாயம் சொன்னது போல் தமிழ் அகராதிக்குள் அடங்க வேண்டியவை இவை.

Unknown said...

மிக அருமை

Unknown said...

ஒரு இனம் (தமிழ்) அழிக்கபடுவதற்கு அதன் பண்பாடு, கலாச்சாரம், வீர விளையாட்டு, பாரம்பரிய உணவு முறை இவற்றை அழித்தாலே போதும் அந்த இனம் மெல்ல மெல்ல தன் வரலாறு என்ன பெருமை என்ன என அறியாமல் அழிந்துவிடும் இது தான் இப்பொழுது நடக்கிறது (சேவல் சண்டை தடை, ஜல்லிகட்டு தடை, ஆட்டு கிட சண்டை) இதில் ஜல்லிகட்டுக்கு மட்டும் நாம் போராடி தடையை நீக்கி விட்டோம் ஆனால் இன்னு சேவல் சண்டை கிட சண்டை போன்றவற்க்கு இன்னும் தடை நீடிக்கிறது வீரியம் மிக்க நம் நாட்டு கிட (ம) சண்டை சேவல் இனம் அழியும் தருவாயில் உள்ளது.