2/14/2010

மகா!

"இன்னமும் என்ன செஞ்சிட்டு இருக்கே? எப்ப பார்த்தாலும் போன்ல யார் கூடவாவது பேசிப் புலம்புறதே உனக்கு வேலையாப் போச்சு?! நேரம் ஆகுது பாரு, பள்ளிக்கூடம் போன குழந்தை வர்ற நேரம் ஆகுறது தெரியலை??”, சதா சட்டாம்புள்ளையாய்க் கோலோச்சும் பாட்டி.

பத்து மணிக்கு ரேவதியுடன் பேச ஆரம்பித்து, மணி பனிரெண்டையும் கடந்து போயிருந்தது. ஒரு மணிக்குள் பசியோடு வரும் ஐந்து வயது மகள் பூஜாவுக்கு எதையாவது தயார் செய்து வைக்க வேண்டும்; இல்லாவிட்டால் பிள்ளை பசிக்கு அழுவாள்.

பாட்டியின் அதட்டலில், மருண்டு தெளிந்து, அலைபேசிப் பேச்சைத் துண்டித்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள் மகா எனும் மகாலட்சுமி.

“ச்சே, இன்னும் குளிக்கக் கூட இல்லை. என்ன வாழ்க்கை இது? இப்ப பாப்பாவுக்கு எதனா செய்யணும்?? அந்தக் கழுதை குடுத்ததைச் சாப்பிட மாட்டா. சரி, இருக்கவே இருக்கு, அவளுக்கு பிடிச்ச நூடுல்ஸ்!” வெந்நீருக்காக அடுப்பில் பாத்திரத்தை வைக்கவும், வாயிற்கதவு திறக்கும் ஓசை கேட்டது.

“மம்மீ, கிருபா என்ன செஞ்சா தெரியுமா? ஸ்கூல் கேட்டை விட்டு வெளில போயிட்டாம்மா, அவங்க அம்மா அவளை அடிச்சிட்டாங்க!” பள்ளிப் புராணத்துடன் கீழும் மேழும் குதித்தபடியே பூஜா.

“செல்லம், நீ அப்படியெல்லாம் வெளிய போக மாட்டடா தங்கம். இங்கவாடி செல்லமே” வாரி அணைக்க முற்பட்ட கொள்ளுப்பாட்டியையும் மீறி வீட்டிற்குள் நுழைந்தாள்.

”மம்மீ பசிக்குது மம்மீ! எனக்கு ஊட்டி விடுங்க!”

“வந்த உடனே ஆரம்பிச்சிட்டியாடி நீ? இங்க வா, எங்க ஹேண்ட் புக், எடு; என்ன எழுதிக் குடுத்து இருக்காங்கன்னு பாக்கலாம்!” என்று கேட்டபடியே பூஜாவை நெருங்கினாள் மகா.

”ஏண்டீ மகா, வந்த உடனே குழந்தை கூட அக்கப்போரா? இங்க தண்ணி கொதிக்குது, சித்த வந்து பாரு!” பாட்டி கொட்டித் தீர்த்தாள்.

சமையலறைக்கு சென்று திரும்பிய மகா, தானே குழந்தையின் பைக்குள் கையை விட்டு குறிப்பேட்டைத் துழாவி வெளியே எடுத்தாள். எடுத்தவள் முகத்தில் சிறு சலனம், “இது என்னடி புதுப் புத்தகமா இருக்கு? யாரு குடுத்தா??”

மலர்ந்த தாமரை, குவிந்த தாமரையானது போல அவளது முகம் உருமாறியது. மிரண்டு போய்ச் சொன்னாள், “எனக்குத் தெரியாது மம்மி! யாரோ தெரியாம என்னோட பேக்ல வெச்சிட்டாங்க போல இருக்கு!”.

“அதெப்படிறீ வெப்பாங்க? சொல்டீ யார்கிட்ட இருந்து திருடினே?” கண்ணிமைக்கும் நேரத்தில் பிஞ்சுக் கன்னம் பழுத்தது. வெறி கொண்டவளாய் அறைந்தாள் மகா.

“ஏண்டீ பசியோட வந்த குழந்தைய அடிக்கிறே?” குறுக்கிட்ட பாட்டியை, “நீ சும்மா கெடக்குறியா பாட்டி!” ஒரே அதட்டலில் பாட்டியின் சட்டாம்பிள்ளைத்தனம் மரவட்டைப் பூச்சியாய்ச் சுருண்டு போனது.

அம்மாவின் வழக்கமான வன்முறை தொடர்ந்தது. பின்பு, பாட்டியின் தயவால் ஏதோ ஊட்டப்பட, வலியின் துயரத்தில் தூங்கிப் போனாள் குழந்தை.

“ச்சே, யாரு புத்தகத்தை எடுத்துட்டு வந்திருக்கா இவ? கேட்டுத் தொலைச்சிருந்தா, நாமளே கண்ணன்ல வாங்கிக் குடுத்திருப்பம்ல?? பிப்சுல இடம் வாங்குறதுக்கு என்ன பாடுபட்டோம்? இனி வகுப்புல பேர் கெட்டுருமே?? சனியன் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிடுச்சே? நாளைக்கு நாமளே நேர்ல போயி மன்னிப்பு கேட்ற வேண்டியதுதான்!” தீர்மானத்துக்கு வந்தாள் மகா.

பொழுது விடிந்தது. வழக்கம் போல பூஜா பள்ளிக்குச் சென்றாள். மகா, வெட்டிப் பேச்சுக்கு விடுமுறை அளித்துவிட்டு, நேரங்காலமாய்க் குளிக்கப் போனாள். சன் தொலைக் காட்சியில், வேட்டைக்காரன் விளம்பரம் இடம் பெறாமல் இருப்பதைக் கூட நம்ப முடிந்தது பாட்டியால்; ஆனால் மகாவின் செயல்பாட்டை நம்ப முடியாமல், வியந்து போனாள்.

“அம்மாடி மகா, என்ன இன்னைக்கு உம்போக்கு வேற மாதிரி இருக்கே?” அடக்க முடியாது கேட்டே விட்டாள் பாட்டி.

“ஆமா பாட்டி, பூஜா ஸ்கூலுக்குப் போயி ஒரு எட்டு டீச்சர்கிட்ட சொல்ட்டு வந்திடுறேன்!”

“ஆமாடி, குழந்தை பாவம். போயி பாத்து சொல்லிட்டு வந்துடு!”

வண்டி பாப்பநாயக்கன் பாளையத்தில் இருந்து விடுபட்டு, இலட்சுமி மில் அருகே அவினாசி சாலைக்குள் நுழைந்து கிழக்குத் திசையில் வேகமெடுத்தது.


“தங்கவேலு அண்ணே, பாத்துப் போங்க! இவங்க செம்மொழி மாநாடு நடத்துறாங்கன்னு பேரு; எப்பப்பார்த்தாலும் அவர் வர்றாரு, இவர் வர்றாருன்னு ரோட்டை அடைச்சி வெச்சி, ஒரே தலைவலி!”

“சரிங் கண்ணூ!”

மீண்டும் குழந்தையின் நினைவு வயப்பட்டாள். ”ச்சே, எந்த மூஞ்சிய வெச்சிட்டுப் போயி சாரி சொல்றது? சனியன், யாரோட புக்கையையோ எடுத்துட்டு வந்திருக்கு!” கோபமும், கவலையும் சேர்ந்து அவளுக்கு மன உளைச்சலைக் கொடுத்தது.

பூளைமேடு, ஹோப்காலேஜ், மருத்துவக் கல்லூரி, சி.ஐ.டி, பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி கல்லூரி, சித்ரா என அனைத்தையும் தாண்டிச் சென்று பள்ளி வளாகத்தை அடைந்தது வாகனம்.

“தங்கவேல் அண்ணா, இருங்க பத்து நிமுசத்துல வந்திடுறேன். அப்பறம் கோவை மெடிக்கல்சுல பெரியம்மா படுத்துட்டு இருக்காங்க, போயிப் பாத்துட்டு ஊட்டுக்குப் போலாம்!”

“சரீங் கண்ணூ, போயிட்டு வாங்!”

நிர்வாக அலுவலகக் கட்டிடத்தின் இடது புறம் திரும்பி, முதல் வகுப்புக்கு முந்தைய, பாலர் வகுப்பின் இரண்டாவது பிரிவுக்குச் சென்றாள்.


தலைகுனியப் போவதை எண்ணியபடியே அறை வாசலின் ஓரத்தில் போய் நின்று, கருமுகிலினின்று சிறிதாய் வெளிக்காட்டும் நிலாமகள் போலப் பாதி முகத்தை மட்டும் வகுப்பறைக்குள் காண்பித்தாள்.

ஆசிரியை சசிகலா இவளைப் பார்த்ததும், தான் எடுக்கும் பாடத்தைப் பாதியில் நிறுத்தியபடி வேகமாக வெளியே வந்தார். சசிகலா மிகவும் கடுமையானவர் என்பது பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர் அனைவரும் தெரிந்த விசயம்.

மகாவுக்கு மனம் ’திக்திக்’கென்றது, இயல்பாகவே முகம் சுருங்கிக் குற்ற உணர்வில் தவித்தாள். பெற்ற பிள்ளை செய்த தவறுக்கு, மன்னிப்புக்கோரி கூனிக் குறுகுவதன் அவலத்தை எதிர்கொள்ள ஆயத்தமானாள்.

“குட்மார்னிங் மேடம்!”

“குட்மார்னிங் மகா! இப்பத்தான் பூஜாவோட பேரன்ட்சுக்கு போன் பண்ணுங்கன்னு ப்யூன்கிட்ட சொல்லி அனுப்பினேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க!!”

“யெஸ் மேடம், வெரி சாரிங்க மேடம்!”

“என்ன சாரி? இப்படியா, பெத்த குழந்தையப் போட்டு அடிக்கிறது? பாருங்க, முகத்துல அடிச்ச சாயல் அப்படியே இருக்குது! நீங்க வெல் எஜுகேடட் வேற??”

“இல்ல மேடம், வந்து யாரோவோட புக்கை எடுத்துட்டு....”

“ச்சும்மா, நிறுத்துங்க! என்ன யாரோ புத்தகம்? நேற்றைக்கு அவங்க அப்பா இங்க வந்திருந்தாரு...அவர் குடுத்தது போல இருக்கு! சீ மகா, உங்க பேமிலி ப்ராப்ளத்தை எல்லாம் குழந்தை மேல திணிக்காதீங்க, சரியா?”, மகாவின் மேல் இடியை இறக்கிவிட்டு வெடுக்கென உள்ளே சென்று விட்டார் அந்த ஆசிரியை.

அப்போதுதான் புரிந்தது மகாவிற்கு! தான் யாரிடமிருந்து விவாகரத்துக் கேட்டு இருக்கிறோமோ, அந்த மனிதர் வந்து தன் பிள்ளையப் பார்த்துச் சென்றதும், குழந்தை அவர் வாங்கிக் கொடுத்ததைப் பற்றி பயத்தில் மறைத்து விட்டதும்!

குற்ற உணர்வில், எதிர்பட்ட கட்டிடத்தூணில் முட்டி மோதி அழவேண்டும் போல இருந்தது. நேராகக் காரை நோக்கி விரைந்தாள்.

“அண்ணா, நேரா ஊட்டுக்கு வுடுங்க!”

தங்கவேல் அண்ணனுக்கு இது ஒன்றும் புதிதானது அல்ல; குடும்ப விபரங்கள் அனைத்தும் அறிந்தவர். எதோ சின்னப்பாப்பாத்திக்கு மனசு சரியில்ல போல இருக்கு என்று நினைத்தவர் வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.

வீட்டிற்குச் சென்றவள் யாரிடமும் பேசாமல் கொள்ளாமல், தனது அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு, படுக்கையில் படுத்தபடி விசும்பலானாள்.

பிரிந்து வாழும் கடந்த இரண்டாண்டுகளும், பூதாகரமாய் அவளது நினைவில் வந்து போயின. தாமாகப் பிரச்சினையைக் கிளப்பி, விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் எனும் நிலைப்பாடு எடுத்ததை உணர ஆரம்பித்தாள். என்றாலும், நிலைமை எல்லாம் கைமீறிப் போய் எந்தக் கணமும், கேட்டது கிடைத்துவிடும் என்கிற நிலை. சோகமும் துக்கமும் அவளை உலுக்கியது.

அழுது அழுது கண்ணீர் வற்றி, அந்த வறட்சியினூடாக நினைவிழந்து உறக்கத்தின் ஆளுகைக்கு ஆட்பட்டாள். பஞ்சணை நனைந்து, அதன் ஈரத்தில் அவளது பிடிவாதமும் கரைந்து கொண்டிருந்தது.

திடீரெனப் 'படபட'வெனக் கதவு தட்டும் ஓசை!

“மம்மீ, மம்மீ, டோர் தெறங்க மம்மீ! ஸ்கூல்ல இருந்து டாடியும் என்கூட வந்திருக்காங்க! மம்மீ, மம்மீ....”

சொல்லவொன்னா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தாள் பூஜா! கூடவே, வீதியில் பாப்பநாயக்கன் பாளையத்து இலட்சுமிமில்ப் பெருமாள் கோவிலின் குட்டி யான‍ை உலா வரும் மணியோசை சப்தமும்!!

30 comments:

cheena (சீனா) said...

அன்பின் மணி

கதை அருமை - நட்நடுவே வர்ணனைகள் - கருமுகில் - நிலாமகள் - பாதி முகம்; மரவட்டையாய்ச் சுருண்டது; மலர்ந்த - குவிந்த தாமரை; அம்மாக்களின் வன்முறை - பாட்டியின் தயவு - வலியின் துயரத்தில் தூக்கம் ; வேட்டைக்கரான் விளம்பரம் ; செம்மொழி மாநாடு ;

எதிரபாரா திருப்பம் - விவாகரத்து - கணவர் திரும்ப வருதல் -

எளிய நடையில் இயல்பாகச் சொல்லப்பட்ட கதை - அருமை அருமை - மகாவின் நிலையில் இன்றும் பல பெண்கள் மணி

நல்வாழ்த்துகள் மணி

குறும்பன் said...

நல்ல திருப்பம். மகா குழந்தையை காரணம் இல்லாமல் அடித்ததை படித்ததும் என்னடா லூசுத்தனமா இருக்காங்களேன்னு நினைச்சேன். புதுப் புத்தகம் எடுத்துவந்ததுக்கு சின்ன குழந்தையை அறையறது சரியான காரணமா எனக்கு தெரியலை. நிறைய பேர் இப்படி இருக்காங்க என்பது உண்மையே.

ஈரோடு கதிர் said...

அருமை

naanjil said...

Well written. Keep it up.
Vazhthukkal!

vasu balaji said...

அட! அருமை. (டெம்ப்ளேட் இல்லை. நிஜம்மாஅருமையா இருக்கு)

Karthick said...

மிக அருமையான கதை. இயல்பான மொழயில் அழகான கதை. சொல்லிய விதம் அருமை.
http://eluthuvathukarthick.wordpress.com

சுடர்வண்ணன் said...

அம்மாக்கள் சொல்வதே கேக்கமட்டேன்குறாங்க ... கொள்ளு பட்டி சொல்லி கேட்க போறாங்க...அலைபேசியில் அளந்துவிட்டு குழந்தைக்கு நூடுல்ஸ் குடுக்கிற தாய்மார்கள் அதிகமாகிக்கொண்டுதான் இருகிறார்கள்...இவர்களுக்கெல்லாம் விவகரதேல்லாம் சாதாரணம்.!!!! அருமைணே

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமையான நடை.

க.பாலாசி said...

நெகிழ வைச்சிட்டீங்க... குழந்தைகள் மூலமா நடக்குற சின்னசின்ன விசயங்கள் நமக்கு பாடங்களாவும் அமையும்...

கடைசி மூணு பத்தியும் கதையை சீக்கிரமா முடிச்சிடுச்சு..(???)

நல்ல கதை...

சிநேகிதன் அக்பர் said...

அருமையான கதை அண்ணா.

அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் என்றும் தவறாகவே இருக்கும் என்பதை புரியவைத்து விட்டீர்கள்.

இடையில செம்மொழியையும் வாரி விட்டீர்கள். :)

எம்.எம்.அப்துல்லா said...

வந்து எட்டிப்பார்த்துட்டு போகலாம்னு நினைச்சா பின்னூட்டம் போட வச்சுட்டீங்க.

அருமை :)

தாராபுரத்தான் said...

எடுத்தேன் கவிழ்த்தேன்.ன்னு..சின்ன பாப்பாத்தியாவுள்ள இருந்திருக்குது.தம்பி உங்களாட்டம் நல்லவர் போல இருக்குது.

பழமைபேசி said...

@@cheena (சீனா)

மிக்க நன்றிங்க ஐயா!

@@குறும்பன்
@@சுடர்வண்ணன்

நன்றிங்க!

கதையில் வரும் பெயர்களும், இடங்களும் வேறானவை. ஆனால், கதைக்கரு என்பது என்னுடைய உறவுப் பெண்ணைத் தழுவியது. அடிப்படையில் அவள் மிகவும் நல்ல பெண்.

வாழ்க்கையின் விவாகரத்துத் தாக்கமும், தன் பிள்ளையின் மீது திருட்டுப் பழி விழுந்து விடுமோ என்கிற அச்சம் தலைதூக்கவுமே அவள் பெற்ற பிள்ளையை அடிக்கலானாள்.

எப்படியாகினும், அவர்கள் நல்லவிதமாக இணக்கமாக இருப்பதாகக் கேள்வி. வாழ்க அவர்கள்!


@@ஈரோடு கதிர்
@@naanjil
@@Karthick
@@வானம்பாடிகள்
@@ஸ்ரீ

மிக்க நன்றி!

@@க.பாலாசி

கீழ சாப்பிடுறதுக்கு எனக்காக மத்தவங்க காத்திட்டு இருந்தாங்க. கூடவே இடுகையின் நீளமும் கருதி, இறுதிப் பாகம் சுருக்கப்பட்டதுங்க பாலாசி; மத்தபடி நீங்க சொல்வது சரியே!

@@அக்பர்

நன்றிங்க தம்பி! வாரவேண்டும் என்பதல்ல... இயல்பாய், தற்செயலாய் அது இடம் பெற்றுவிட்டது. இஃகி!

@@எம்.எம்.அப்துல்லா

நன்றிங்ண்ணே, நன்றிங்க!

@@தாராபுரத்தான்

அண்ணா, வணக்கம்!

Unknown said...

கதை ரொம்ப அருமையா இருந்தது. பாலாசி நினைச்ச மாரியே நானும் நினைச்சேன். டக்குனு முடிச்சிட்டதா..

பழமைபேசி said...

@@முகிலன்

நன்றிங்க முகிலன்... ஆமாங்க... இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாந்தான்!

கபீஷ் said...

//இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாந்தான்!
//

நல்ல வேளை இழுக்கலை :-)
உங்க கிட்ட ஒரு நியூஸும் வந்துடப்படாதே உடனே கதையாக்கிடுவீங்களே

கயல் said...

இவங்க பிரச்சனைகள்ல பல குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுது! இந்த வெட்டி வீறாப்பும் வீண் பிடிவாதமும் எப்போதான் தீருமோ? நல்ல கதை! இல்ல நல்ல வழிகாட்டுதல்! அருமை ஆசானே!

பழமைபேசி said...

@@கபீஷ்

ஆமாங்க சீமாட்டி, உங்களை வெச்சி ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன்!

@@கயல்

கவிஞருக்கு மிக்க நன்றி!

அது சரி(18185106603874041862) said...

நல்லாருக்குங்...கதை தானுங்ளா?

பழமைபேசி said...

//அது சரி said...
நல்லாருக்குங்...கதை தானுங்ளா?
//

வாங்க அண்ணாச்சி, கதைன்னு நினைச்சா கதை! இல்லைன்னு நினைச்சா, இல்லைதான்!! இது எப்பூடி??

வில்லன் said...

/சதா சட்டாம்புள்ளையாய்க் கோலோச்சும் பாட்டி.//

அதென்ன சட்டாம்புள்ளை??????

பழமைபேசி said...

//வில்லன் said...
/சதா சட்டாம்புள்ளையாய்க் கோலோச்சும் பாட்டி.//

அதென்ன சட்டாம்புள்ளை??????
//

சட்டாம்புள்ளை = வகுப்புத்தலைவன்

சட்டம் பேசுறவன்

வில்லன் said...

/பூளைமேடு, ஹோப்காலேஜ், மருத்துவக் கல்லூரி, சி.ஐ.டி, பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி கல்லூரி, சித்ரா என அனைத்தையும் தாண்டிச் சென்று பள்ளி வளாகத்தை அடைந்தது வாகனம்.///

இதென்ன நீங்க படிச்ச பள்ளிகூடமா.....வீட்டுல இருந்து பள்ளிக்கூடம் வர உள்ள ஒரு பஸ் ஸ்டாப் விடாம எழுதிடிங்க போல இருக்கு ????????????

பழமைபேசி said...

//வில்லன் said...
/பூளைமேடு, ஹோப்காலேஜ், மருத்துவக் கல்லூரி, சி.ஐ.டி, பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி கல்லூரி, சித்ரா என அனைத்தையும் தாண்டிச் சென்று பள்ளி வளாகத்தை அடைந்தது வாகனம்.///

இதென்ன நீங்க படிச்ச பள்ளிகூடமா.....வீட்டுல இருந்து பள்ளிக்கூடம் வர உள்ள ஒரு பஸ் ஸ்டாப் விடாம எழுதிடிங்க போல இருக்கு ????????????
//

அய்ய.... நான் ஒரு கிராமத்தானுங்க... ஆனா, இதுகெல்லாம் பேருந்து நிறுத்துமிடங்கதான்... ஆனா நான் படிச்ச கல்லூரி CIT! இஃகி!!

வில்லன் said...

அண்ணே நீங்க நவீன காலத்து நக்கீரர்னு நிருபிசுடிங்கன்னே.......கதை ரொம்ப அருமை.......மத்தவங்களும்( குடுகுடுப்ஸ் நசறேயன்னு) எழுதறாங்களே "கவுஜ", "கவுஜைக்கு கவுஜைன்னு"...... வேலை வெட்டி இல்லாம?????????நீங்க சும்மா அடிச்சு ஆடி பட்டய கெளப்புங்க அண்ணே....நாங்க இருக்கோம் பின்னூட்டம் போட.....

பழமைபேசி said...

//வில்லன் said...
நீங்க சும்மா அடிச்சு ஆடி பட்டய கெளப்புங்க அண்ணே....நாங்க இருக்கோம் பின்னூட்டம் போட.....
//

அண்ணே, மனசு நிறைஞ்சது; நன்றி!

mayakunar said...

நீண்ட நாட்கள்ளுக்கு பிறகு மனதுக்கு
பிடித்த கதை படித்ததில் மகிழ்ச்சி
நன்றி

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

கபீஷ் said...

//

/வில்லன் said...
நீங்க சும்மா அடிச்சு ஆடி பட்டய கெளப்புங்க அண்ணே....நாங்க இருக்கோம் பின்னூட்டம் போட.....
/

அண்ணே, மனசு நிறைஞ்சது; நன்றி!//

வில்லனுக்கு payment ஸெட்டில் பண்ணியாச்சா? ச்சும்மா தகவலுக்குக் கேட்டேன்( என் கதையா எழுதப் போறீங்க:-), இனிமே அப்படி சொல்லுவீங்க :-))

பழமைபேசி said...

//mayakunar said...
நீண்ட நாட்கள்ளுக்கு பிறகு மனதுக்கு
பிடித்த கதை படித்ததில் மகிழ்ச்சி
நன்றி
//

நன்றிங்க, வந்து போங்க!

//அன்புடன் அருணா said...
பூங்கொத்து!
//

நன்றிங்க, நன்றிங்க!

//கபீஷ் said...
//

ச்சும்மா தகவலுக்குக் கேட்டேன்( என் கதையா எழுதப் போறீங்க:-), இனிமே அப்படி சொல்லுவீங்க :-))
//

யாரைப்பத்திங்றது முக்கியம் அல்ல; எப்படி எழுதுறோம்ங்றதுதான் முக்கியம்... இஃகிஃகி!