5/31/2009
’சூச்சூ’வும, பதிவர் அண்ணனும்!
தங்க மனசுக்கு சொந்தக்காரன், வளர்ந்து வரும் இளம் பாடகன், அண்ணே அண்ணேயென்று பேச்சுக்குப் பேச்சு நெக்குருகி சிலாகிக்கும் அன்புக்குத் தாசனவன், தமிழெனும் இனிமையே அவனானவன், இந்த கதையின் நாயகன் அப்துல்லா! புதுகை அப்துல்லா!!
எழுந்து, முனகிய பாடலுடன் நீராடி, பின் தொழுது, அறை சாத்திவிட்டு, தன் பிரம்மரதமான சொகுசுந்து (plessure car) நோக்கி விருட்டெனச் செல்கிறான்; அப்போதும் பாடல் முணுமுணுப்புத்தான். திறவுகோல் செலுத்தியதில், சொகுசுந்துவின் முன் கதவு திறவுபட, சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவனாய் அருகில் இருந்தவரிடம்,
“அண்ணே, வணக்கம்ண்ணே! வண்டியில முன் இருக்கைகிட்ட அண்ணன் தொடுதோல்ல இருந்த மண் கொட்டிக் கிடக்கு!”
“இல்லீங்க தம்பீ, நான் உங்ககூட வரவே இல்லீங்களே?”
”ஆமாண்ணே, நேத்து இராத்திரி இன்னொரு அண்ணன் வந்தாரு, அவரோட...”
“இதென்னங்க தம்பீ, இப்பச் சுத்தம் செய்துதாரேன்!”
அங்கிருந்த அடுக்ககப்(apartment) பணியாளர், நாயகனின் பிரம்மரதத்தைத் துப்புரவாக்கித் தரவும், இரதம் ஆடாமல் அசையாமல், மெளனமே நாதமாய் மெள்ள மெள்ள நகர்ந்து அடுக்ககத்தை விட்டு வெளியில் வந்து, சாலையினுள் நுழைந்தது.
பச்சைநிறக் குடைகள் தொடர்ந்து அணிவகுத்தது போல, சாலையின் இரு மருங்கிலும் அலங்காரக் கொண்டை மரங்கள். குடைகளின் அந்த பச்சைநிற மேற்கூரையில், ஆங்காங்!கே இளஞ்சிவப்பு நிறத்தில் கண்களைக் கொள்ளை கொள்ளும் மலர்கள். குடையின் உள்க்கம்பிகளில் இருந்து தொங்கும் தட்டை வாள்கள்.
மரத்தின் அந்தத் தட்டையான காய்களை வாளாக ஏந்தி, நண்பர்களோடு யுத்தம் புரிந்த இனிமைப் பொழுதுகள் நம் நாயகனுக்கு நினைவு வர, வண்டியின் வேகம் குறைய, பின்னாலிருந்து ஒரு அழகு தேவதையின் குரல், சொகுசுந்துவின் மூடிய கதவுகளையும் ஊடுருவிக் கொண்டு,
“என்னா, இராத்திரியில தொங்கல்லவுட்டுப் போய்ட்டாளா அவ? Don't worry dear, some one will be there for you! May God Bless you!!"
என்றவாறு சர்ரென்று ஓடி மறைந்தது சென்னப்பட்டணத்தின் இலட்சங்களில் ஒன்றான அந்தத் துள்ளுந்து(motor cycle). நாயகனுக்கு வெட்கத்தோடு ஒரு புன்முறுவல். முடுக்கு விசையை முடுக்க, பிரம்மரதம் இலக்கை நோக்கி விரைந்தது.
நெல்சன் மாணிக்கம் சாலையில் ஊர்ந்து, பின் இரயில்வேக் கண்டாயம்(Railway Colony) குறுக்குத் தெரு 12க்கு, சாலையில் இருந்து வலது புறமாக நுழைகிறது நாயகனின் பிரம்மரதம்.
“என்ன அழகாகப் பராமரிப்புச் செய்து வெச்சிருக்காங்க. ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாடியும் அழகழகாப் பூஞ்செடிகள், காலையில போட்ட வண்ணக் கோலங்கள், இந்தப் பக்கம் நமக்கு எந்த அண்ணனும் இல்லையே? இருக்கட்டும், சீக்கிரத்துல ஒரு அண்ணனைப் புடிச்சுப் போட்டுறணும்!” என்று என்ணியபடியே இரதத்தை 44/10 எண்ணுள்ள அந்த சிறு மாளிகையின் முன் சருக்குக்கட்டை(brake) இட்டு நிறுத்தி, இறங்கி வருகிறான் நாயகன் அப்துல்லா.
நுழைவாயிலில் அழைப்பு மணியை அமுக்கவும், நடுத்தர வயதில் அவர், ”நீங்க?”
“அண்ணே வணக்கம்! நான் அப்துல்லா, புதுகை அப்துல்லா! பேசும் நாய் விற்பனைக்கு இருக்குன்னு சொன்னது நீங்கதாண்ணே?”
“ஓ ஆமாமா, வாங்க அப்துல்லா, வாங்க!”
”மொதல்ல போயி அவனைப் பாத்துடறீங்களா?”
“சரீங்கண்ணே!” என்று அவர் கைகாட்டிய திசை நோக்கி நாயகன் அப்துல்லா செல்கிறார். வீட்டின் உரிமையாளர், அவர் கையிலிருந்த Indian Express நாளிதழில் படித்துக் கொண்டிருந்ததைத் தொடர்கிறார்.
“ப்ளொள்!”
“நாய் பேசும்ன்னு சொன்னாங்களே? இங்க யாரும் இல்லையா?”
“ஆமா, இங்க யாரும் இல்லை!”
ஆகா, இந்த நாய் பேசுகிறது என்று மனதில் எண்ணியபடியே நாயகன் அப்துல்லா, ”உம் பேரு என்னண்ணே?”
“சூச்சூ!”
“நல்லாயிருக்கு! எங்க நர்சிம் அண்ணனுக்குத் தெரிஞ்சா, ரொம்ப சந்தோசப்படுவாரு!”
“ஓ!”
“ஆமா, தினமும் உனக்கு எப்படிப் பொழுது போகுது?”
“அதென்ன பிரமாதம்? காலையில எழுந்து, வீட்டுக்கு நாந்தான் குழாயில இருந்து தண்ணியடிச்சு கொண்டாந்து ஊத்துவேன்! அப்புறம், பக்கத்து வீட்டு மாமிக்கு பால் பொட்டலம் வாங்கியாந்து தருவேன்!”
“அட, நல்லாயிருக்கே? சொல்லு, சொல்லு!!”
“அப்புறம் இந்த கடைக்குப் போயிட்டு வர்றது, வங்கியில காசோலை போடுறதுன்னு வீட்டு வேலை சரியா இருக்கும்!”
உரையாடலில் மகிழ்ந்த அப்துல்லா, இந்த நாயையே வீட்டுக்கு வேலைக்கும் வைத்துக் கொள்ளலாம் என்கிற யோசனையில், தன் வீட்டு வேலைக்கு வரச் சொல்லியிருந்த பையனின் அப்பாவான தன்னாசியை அழைத்து, இப்போதைக்கு வேலைக்கு ஆள் தேவையில்லை எனச் சொல்லி விட்டு, சூச்சுவின் எசமானரை நோக்கி நகர்ந்தான்.
”அண்ணே, நல்ல திறமையான சூச்சு! நல்லாப் பேசுது. அப்புறம் ஏன் அண்ணே விக்குறீங்க?”
“அதான் தம்பி பிரச்சினையே! அவன் வாயைத் திறந்தா, பேசுறது எல்லாமே பொய்!”
“?!?!”
அதே நேரத்தில், ”இந்த ஆள்கிட்ட பையனை வேலைக்கு சேத்தி விடுறதுல வர்ற முன்பணம் ரெண்டாயிரத்தை வாங்கி, அவளுக்குக் குடுத்திடலாம்ன்னு இருந்தேன். இப்படிக் காலை வாரி வுட்டுட்டானே? இனி அவ வீட்டுக்கே வந்து தகராறு பண்ணுவாளே? பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா, தோலுரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவா. சரி, கூட அம்பது சேத்தி, ரெண்டாயிரத்து அம்பதா இருந்துட்டுப் போகட்டுமே?!” என்று நினைத்துக் கொண்டே, மேத்தா நகரிலிருந்து தன் வீடிருக்கும் அமிஞ்சிக்கரை செல்லும் பாதையிலிருந்து மாறி, சூளைமேட்டில் இருக்கும் மாதவி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான் தன்னாசி.
5/30/2009
பதிவுலகம் மற்றும் திரட்டிகள் அந்நியப்படுகிறதா?
"Your thoughts are SUPER. Among all dirty bloggers who write for the sake of writing – you differ!"
பதிவர்களல்லாத வாசகர்களிடத்தில் பதிவுலகம் ஏமாற்றத்தையும், ஒரு விதமான விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது போன்றே தெரிகிறது. அதற்கு முதல் காரணம், desktop journalism என்று சொல்லப்படுகிற கணினி வியாசகம் என்பதுதான்.
முறையாகச் செய்வதானால், நிகழ்வுகள், கூறுகள், சான்றுகள், சாட்சியங்கள் முதலியன கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட வியாசகர்(jouralist)களால் வெகுசனப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வருவன செய்திகள். ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாக வைத்து, பதிவரால் அவருடைய நிலைப்பாட்டைத் தாங்கி வருவது இடுகையில் இடம்பெறும் கட்டுரை. மாறாக, அவற்றோடு தனது கருத்துகளைத் தவுக்காரிட்டு விவாதமும் இழைக்கலாம்.
ஆனால் இன்றைய நிதர்சனம் என்ன? வெகுசன ஊடகங்கள் வலைப்பதிவுகள் போலச் செயல்பட்டு வருகிறது. அவற்றில் வரும் செய்திகளும் தலையங்கங்களும் கட்டுரைகளும் ஒரு சார்போடு, ஏற்றியும், திரித்தும், நம்பகத் தன்மையை இழந்து வருகிறது.
அந்த நம்பகத் தன்மை இல்லாத, அல்லது முழுமை அடையாத செய்திகளோடு சொந்த நிலைப்பாடு விருப்பு வெறுப்புகளைக் கொட்டி, பதிவர்களாகிய நாமும் தத்தம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம்.
கத்தரிக்காய் முதிர்ந்தால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்? அப்படி உண்மை தெரிய வரும்போது, வாசகர்களோடு நாமும் சேர்ந்து விரக்தி அடைகிறோம். இவ்வாறான எண்ணற்ற இடுகைகள் திரட்டிகளை ஆக்கிரமிக்கிற போது, வலைப்பதிவுகளோடு திரட்டிகளும் சேர்ந்து வெகுசன மக்களிடத்தில் இருந்து அந்நியப்படுகிறது. யதார்த்தத்தைப் பிரதிபலிப்பது இல்லை என்பதை நாம் அறிய முடிகிறது.
நம்பகத் தன்மையற்ற செய்திகள், கட்டுரைகள் மட்டுமல்லாது வேறு பல காரணங்களும் உண்டு. அவற்றில் முதலாவதாக வருவது, தனிமனிதத் தாக்குதல் மற்றும் அவதூறு பரப்புதல். மாற்றுக் கருத்துகள், தனிமனித விருப்பு வெறுப்புகள் காரணமாக, அறிந்தோ அறியாமலோ வெளிப்படும் காழ்ப்புணர்வு, வசைச் சொற்கள், அத்தோடு தெரிந்தே இட்டுக்கட்டி இடும் இடுகைகளும் வாசகர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
மேற்கூறியவை மேலோங்குவதற்கு, இடுகைகளுக்கு கிடைக்கும் பரபரப்பும் ஒரு காரணம். இளைஞர்கள் பெருமளவில் இத்தகைய இடுகைகளுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே சொடுக்கு எண்ணிக்கையும் பெருகுகிறது. அதுவே, இத்தகைய இடுகைகளுக்கு ஒரு ஊக்குவிப்பாகவும் அமைந்து விடுகிறது. வெகுசன மக்களிடத்தில் இருந்து அந்நியப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதற்கு மேலே கொடுத்த பின்னூட்டமே சான்று.
அடுத்த காரணம், போட்டி மனப்பான்மையால் விளையும் விளைவுகள். இடுகை(content) இருக்கிறது. ஆனால் அதில் உள்ளீடு(substance) இல்லாமல் போய் விடுகிறது. அதன் காரணமாய், திரட்டியில் திரட்டப்படும் இடுகைகள் எல்லாமே மொக்கை இடுகைகள் என்ற தோற்றமும் ஏற்பட்டு விடுகிறது.
எங்கள் பல்கலைக் கழகத்தில், ஒரு நாள் வெளியில் நண்பர்களோடு உலாவிக் கொண்டிருந்த போது, ஓடுதளத்தில் ஓட்டப்பந்தய வீரர் பென் ஜான்சன் மற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் அவரைக் காணச் சென்ற நேரத்தில், ஒருவர் சக வீரரான டோனவன் பெய்லியின் ஓட்ட மணித் துளிகளைப் பற்றிக் கேட்க, இவர் கடுமையான கோபமுற்றார். பின்னர் அவர் சொன்னார்,
”நீ உன்னுள் போட்டி இடு. உனக்குள் இருக்கும் திறமையை வளர்த்துக் கொள். Try to get the best out of you! அருகில் இருக்கும் டோனவனோடு ஒப்பிடுவதின் மூலம், ஒலிம்பிக்குக்கு வரும் மற்றவர்களின் மணித்துளிகள் தெரியாத காரணத்தால் நீ அவர்களிடம் தோற்றுப் போவாய்” என்றார். இப்படியாக, நான் எனது அடுத்த இடுகை, இந்த இடுகையை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவதே சரியாக இருக்கும். இப்படி என்ணுவதின் மூலம், என்னோடு போட்டிக்கு வர இப்புவியில் எவரும் இல்லை.
இடுகை என்பது, முதலில் இடும் பதிவருக்குப் பிடித்து இருக்க வேண்டும். ஆகவே மனம் நன்னம்பிக்கையில் (optimism) இல்லாத நிலையில், இடுகை இடுவதைத் தவிர்த்திடல் வேண்டும்.
உடலும் மனமும் ஓய்வு என்பது துயில் கொள்தல்; உடல் இளைப்பாறுவது என்பது வினையற்று இருப்பது; உடலுக்கு இனிமை என்பது தொக்கடமிடுதல்(massage) போனறன! மனம் இளைப்பாறுவது என்பது தியானம் என்பன; மனதுக்கு இனிமை என்பது தமை(passion)யுடன் செய்தல். தமையுடன் செய்வதில் தரமோங்கும். அந்த சிந்தனையுடன் சரியானதைச் செய்ய, எனக்குண்டான எல்லை, பலம் மற்றும் பலவீனம் அறிய இன்று முதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன்.
அன்புடன்,
பழமைபேசி.
5/29/2009
அன்பர் அகநாழிகை அவர்கட்கு ரெண்டு பைசா!
இத்தகைய சூழலில் தமிழ்த் துணைப்பாடத்தில் பாடம் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த இடுகை ஒரு மேற்கோள். இதுதான் இன்றைய நிலமை!
மொழி வளம், கடந்தகாலம், வாழ்க்கையில் ஒருபுறம் இருப்பவனுக்கு மறுபக்கத்து லெளகீகம் பற்றின தகவல், இப்படி நிறையப் பற்றியங்கள் இலக்கியங்கள் மூலமாக நமக்குக் கிடைக்கிறது. அதற்காக படைக்க எத்தனிப்பவன் எல்லாம், அடுத்தவரின் இலக்கியம் படித்து இருக்க வேண்டும் என்று இந்த காலகட்டத்தில் நாம் யாரையும் குறை சொல்ல இயலாது. அப்படிச் செய்கிற போது, தமிழின் வளர்ச்சிக்கு, அல்ல, தமிழின் பின்னடைவுக்கு அதுவே ஒரு காரணம் ஆகி விடும்.
அதே வேளையில், இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, அதன் அருமை பெருமைகளை எடுத்தியம்பி வாசிக்கும் படியாக ஊக்குவிப்பது நலம் பயக்கும். அவர்களுக்கும் செறிவான சொல் வளம், சொற்றொடர் அமைப்பு முதலியன கைகூடும். நான் சிறு வயதில் இருந்த போது, இலக்கியம் என்றாலே ஒருவித அச்ச உணர்வு மேலோங்கும். அதற்கு என்ன காரணம்?
என்னைவிட மூத்த வயதினர் அளவளாவும் போது, அது எதோ மாயை போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்தியதே! இதோ எமது தமிழ் முதுகலைப்பட்ட இரண்டாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் இருந்து, இலக்கியம் என்பதற்கு ஒரு விளக்கம், புத்தகத்தில் உள்ளது உள்ளபடியே:
“இலக்கியம் என்பது மனித வாழ்விலிருந்தே உருவாகிற கலையாகும். மனித வாழ்வை பார்த்தது போலச் செய்தலே இலக்கியம். மண் வளத்திற்கும், பருவ மாற்றங்களுக்கும் விதை நேர்த்திக்கும் ஏற்ப விளைச்சலின் வகைகள் வேறுபடுவது போலவே, இலக்கியத்தின் வளர்ச்சியும் வேறுபடும்!”.
எனவே தமிழில் போதிய சொல்வளம் மற்றும் படைப்பாற்றல் உடையவன், அவன் வாழ்கிற காலத்தை அடிப்படையாக வைத்து இலக்கியம் படைக்க முடியும். அவனுக்கு மற்றவர்களது படைப்புகள் வாசித்திருக்க வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. வாசித்து இருப்பானாயின், படைக்கும் போது அது கைகொடுக்கும், அவ்வளவே! ஊர் வழியே போகிறான். போகிற வழியில் அவன் கண்ட பாமரனது லெளகீகத்தை அச்சில் ஏற்றி, நாடோடி இலக்கியம் என்றான். ஏற்றுக் கொண்டோமே?!
வலைப்பூ என்ற நவீனம், ஒருவனைத் தமிழின்பால் ஏற்றியிருக்கிறது. அவனைத் தமிழுலகம் வரவேற்க வேண்டும். சமூக சிந்தனைகள் பிறக்க வேண்டும். இருப்பதை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற அவன் வழிவகை செய்ய வேண்டும். முடிந்த வரை தமிழ்ச் சொற்களையவன் கையாள வேண்டும்.
படைப்பு என்பது படைப்பில் இருக்க வேண்டும்; அதைப் படைக்கும் தனி நபரின்பால் இருக்கக் கூடாது. விமர்சனம் என்பதும் அதே வழியில் படைப்பின் மீது இருக்க வேண்டும்; படைப்பாளன் மீது இருக்கக் கூடாது என்பதில் அனைவரும் கருத்தாய் இருந்திடல் வேண்டும் என்ற உங்கள் சிந்தனையுடன் பாவேந்தரின் பாவொன்று:
5/28/2009
ஒன்றுக்கும் உதவாத உணர்ச்சிகர உரைகள், நிகழ்ச்சிகள்!
புரட்சிகரமான பேச்சு, புரட்சிகரமான உரை என்பதை காது கொடுத்துக் கேட்டுப் பார்த்தால், பெரும்பாலான நேரங்களில் அது உணர்ச்சிகர உரையாக இருக்கும். மேலும், மக்களைக் கவர்ந்திழுக்கிற உரைகளையும் உணர்ச்சிகரப் பேச்சு என்றே குறிப்பிடுவதும் உண்டு. மனம் நெகிழ்ந்து, கேட்பவரை அழ வைக்கக் கூடிய உரையை உருக்கமான பேச்சு என்றும் குறிப்பிடுவது வழக்கம்.
ஆனால், சமூகத்தில் வெற்றி பெறுகிற உரைகளை எவரும் சரியான அர்த்ததில் பெரும்பான்மையான நேரங்களில் குறிப்பிடுவதே இல்லை. எப்படி ஊடகங்களில் வரும் கட்டுரை மற்றும் செய்திகளை, கருத்து(opinion), கூற்று(fact), நிகழ்வு(incident) என்றெல்லாம் பிரித்துப் பார்த்து, அதற்கேற்ப புரிந்துணர்வு(perception) கொள்வது யதார்த்தத்தைப் பிரதிபலிக்க உதவுமோ அதைப் போல, நாம் கேட்கும் உரைகளையும் இனங்கண்டு அதற்கேற்ப ஆட்படுத்திக் கொள்வது, கேட்பவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல மனநிலைக்கும் மிக அவசியம்.
1990களில் நடைபெற்ற திராவிடர் கழகம், தி.மு.க முதலிய கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் மாநாடுகளில் முக்கியப் பேச்சாளர்கள் பெரும்பாலும் அற்புத(Rhetoric) உரையாற்றுவார்கள். அந்த காலகட்டங்களில், அதைக் கேட்டுத்தான் பெரும்பாலான இளைஞர்களுக்கு தமிழ் மொழியின்பால் ஒரு ஈர்ப்பு வந்தது என்று சொல்லலாம்.
அது என்ன அற்புதவுரை? அதாவது, ஏற்ற இறக்கம், உவமை, உருவகம், எதுகை, மோனை, சொலவடை, இலக்கியச் சான்றுகள் முதலியவற்றை உள்ளடக்கிய மொழி வளத்தின் அடிப்படையிலாலானது. சமீபத்தில் நடந்த அமெரிக்கத் தேர்தலில் கூட, ஒபாமா அவ்ர்களுடைய பேச்சு வெறும் Rhetoric என்றும், பேச்சில் எந்த விதமான உள்ளீடு(substance) இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தமிழகத்திலும் அதே நிலைதான்!
இத்தகைய அற்புதமான உரையினுள் வெளிப்படுத்த வேண்டிய கருப்பொருளையும் உள்ளடக்கி, தேவையான இடத்தில் மட்டும் உணர்வுகளைக் கொட்டி, கேட்போரை உரையின் துவக்கம் முதல் இறுதி வரையிலும் உடன் கொண்டு செல்லக் கூடிய உரைதான் நேர்த்தியான உரை (perfect speech). முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியில் நேர்த்தியான உரை நிகழ்த்தக்கூடிய விற்பன்னர். இந்தி மொழி தெரியாதவர்களே கூட, அவரது உரையில் மெய் மறந்து ஒன்றிப் போவதும் உண்டு.
இயல்பான உரையாக, எழுதி வைத்துப் படிக்கும்/ குறிப்பைப் பார்த்துப் பேசும் பேச்சாளர்களே பெரும்பாலும் உள்ளனர். இதே வகையில், உரக்கப் பேசாமல் சொல்ல வந்ததை கேட்போருடைய தன்மைக்கு ஏற்பப் பேசுவது எளிமைப் பேச்சு. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், இத்தகைய உரையில் வெகு சிறப்பாகப் பேசுவார்.
இறுதியாக வருவதுதான் உணர்ச்சியுரை(emotional speech). உணவுக்கு சேர்க்கும் ஊறுகாய் போல, உணர்வுகளைக் கொட்டினால் அது சிறப்பாக அமையும். ஆனால் இத்தகைய பேச்சுகள், அதிகப்படியாக உணர்வுகளை வைத்தே இருக்கும். என்னென்ன உணர்வுகள்?
மகிழ்ச்சி, வருத்தம், ஊக்குவிப்பு, கோபம், விரக்தி, பதட்டம் என்பன முக்கியமானவை. நகைச் சுவையாகவே பேசி கேட்போரைக் கவர்வது. முழு உரையும் நகைச்சுவையாக இருப்பின், அது உரை அன்று! பெரும்பாலும் கோபம், விரக்தி, ஊக்குவிப்பு, பதட்டம் இவற்றைக் கலந்து உரக்கப் பேசி, கேட்போரைக் கட்டிப் போட்டு விடுவார்கள் இவ்வகையான பேச்சாளர்கள். உரத்த குரல் இல்லாதோருக்கு, இவ்வகைப் பேச்சு அமையாது என்பதும் குறிப்பிடத் தக்கது ஆகும்.
இவ்வகைப் பேச்சைக் கேட்ட உடனேயே, உள்ளம் கிளர்ந்து எழும். உடலுக்குள்ளும் ஒருவித இரசாயன மாற்றம் நிகழத் துவங்கும். அறிவியல்ப் பதம் பாவித்துச் சொல்ல வேண்டுமாயின், நரம்புச் செல்களும் நாளச் சுரப்பிகளும் முழு வேகத்தில் தட்டி எழுப்பப்படும். ஒருவர் உணர்வுகளுக்கு முழுகதியில் ஆட்பட்டு இருக்கிறாரா என்பதை, அவரது தேகம், அவரது எழுத்து அல்லது அவர் படைக்கும் படைப்பு மற்றும் செய்கை முதலானவற்றைப் பார்த்துக் கூற முடியும்.
கோபம், அச்சம், பதட்டம் போன்ற ஒரு சில உணர்வுகள் மேலோங்கும் போது, சிந்தனை ஆற்றல் நின்று போகும். பேசுபவருக்கும், கேட்பவருக்கும் உணர்வுகள் மட்டுமே பரிமாறப் படுகிறது. மனநிலையை பேசுபவர் எடுத்துக் கொள்வார். அவர் இடும் கட்டளை எதுவாயினும், அடிபணியக் காத்திருக்கும் கேட்பவரின் மனம்! அரசியல் நிகழ்வுகளின் போது, வன்முறைகள் மற்றும் விரும்பத் தகாத நிகழ்வுகள் நிகழ்வதும் இதனாலேதான்!!
இவ்வகை உணர்வுப் பேச்சுகளை உண்டு செய்பவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது, கேட்பவரும் ஒருவிதமான மனநிலை இறுக்கத்துக்கு ஆட்படுவர். இரவில் விறுவிறுப்பான பேச்சைக் கேட்டுவிட்டு வந்தவன், நித்திரை கொள்ள முடியாமல் தவிப்பான். பேசியவர் என்ன பேசினார் என்பதை விட, அந்த உணர்வுகளே மேலிடும். அடங்க நீண்ட நேரம் பிடிக்கும். மீண்டும் அதைக் கேட்க மனம் அலைபாயும். கிட்டத்தட்ட போதையின் ஒரு பகுதிதான் இதுவும்.
உணர்வுப் பேச்சுகள் தோல்வி அடைவதும் இதனாலேதான்! உணர்வுக்கு ஆட்பட்டவன், வெளிப்படுத்திய கருப்பொருளை உள்வாங்கி இருக்க மாட்டான். மற்றவருக்கு உணர்வுகளை உள்வாங்கியபடி பரிமாறவும் முடியாது. அடுத்தவருடன் பரிமாற முயற்சிக்கும் போது, வார்த்தைகள் பிறழும் (Emotional gobbledygook), கூடவே தடித்த சொற்கள், முறையற்ற அங்க அசைவுகள் என பலவும் வெளிப்படும்.
இத்தகைய பேச்சை வெளிப்படுத்துவதன் மூலம், அந்த பேச்சாளர் பிரபலம் ஆகலாமே ஒழிய, மற்ற உரைகளைப் போல் பேச்சு சிறப்படைவது இல்லை! தமிழ்நாட்டில், உணர்வுகளைத் தட்டி எழுப்பி, போதை உண்டுபண்ணுவது நாளுக்கு நாள் மிகையாவது கவலைக்கு உரியது. சமூகம் விழித்தெழுமா?
இன உணர்வு கொள்வதில் தவறில்லை.
சினமுறச் செய்யப்படுவது நன்றன்று!
தன்மான உணர்வு கொள்வதில் தவறில்லை;
வெறியுணர்வு கொள்ளப்படுவது சரியன்று.!
விடுதலையுணர்வு கொள்வதில் தவறில்லை;
விசருணர்வு கொள்ளப்படுவது சரியன்று!
முன்னது Consciousness(உணர்தல்);
பின்னது Emotion (மனோசலனம்)!
ஒரு பேச்சாளனின் கடமை புரிய வைப்பது;
மனக்கிலேசத்தை உண்டாக்குவது அல்ல!
புரட்சிக்கு வித்திடு;
ஒழுங்கீனத்திற்கு வித்திடாதே!
Yes, you have full rights to have revolution; not for disorder!
5/27/2009
இனவெறியர்களுக்கு அமெரிக்காவின் மேலுமொரு பரிசில்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், அலபாமாக் கொடுமைகள் நடந்த மண்ணில், மகோன்னதம் நிகழ்கிறது. அலபாமாக் கொடுமைகளில் சிக்கிச் சீரழிந்தவன் பிள்ளை, தேசத்துக்கே அதிபர் ஆகிறான் அந்த மண்ணில் இன்று!
அடுத்த சிறுபான்மை இனத்துள் பூத்த இசுபானியப் பூவை, தேசத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஆக்கப்பட்டு அழகு பார்க்கும் தேசம்!! அடுத்த அதிபருக்கான போட்டியில், பிழைக்க வந்த இந்தியப் பிள்ளையை நிறுத்தத் தயாராகிறது இந்த அழகான அமெரிக்க தேசம். உலகெங்கும் இருக்கிற மகிந்த போன்ற இனவெறியர்களுக்கு இதமான இன்னொரு பரிசல் இது!
பொதுவுடமை என்றோம். ஏழைப் பங்காளன் என்றோம். தமிழனுக்கு உற்ற நண்பன் என்றோம். ஐயகோ! மனிதர்களை துவம்சம் செய்த இலங்கை அரசு, இல்லை, இல்லை, இனவெறி பிடித்த தனிநபர்கள் மகிந்தவுக்கும் அவரது கைத்தடிகளுக்கும் வால் பிடிக்கும் பொதுவுடமைகள், இரசியாவும், சீனாவும், க்யூபாவும்! இவர்களுக்குத் துணையாய் இன்னும் சிலர்.
1995, ஏப்ரல் பத்தொன்பதாம் நாள், ஒக்லகோமாவில் குண்டு வெடிப்பு. அப்பாவி மக்கள் 168 பேர் பலி. மனித அவலம்! உணர்ச்சி வசப்பட்டோம். கடிதம் சமர்ப்பிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு ஊறு நேர்கையில், இது போன்ற அவலங்கள் ஏற்படுவது இயற்கை என்றது அது. நயவஞ்சக தமிழக ஊடகம், கடிதம் கொடுத்தமையை வீரம் என்று போற்றியது.
வெந்த புண்ணில் வேலன்றோ? நிலைமைகள் எந்த கணமும் மாறிடலாம். உணர்ச்சி வயப்படல் பின்னாளில் நமக்கே வேதனை அளிக்கக்கூடும் என்பதற்குச் சான்றுதானே இது? அதன் விளைவாய் நமக்கு நாமே வேண்டாதன தேடிக் கொண்டோம். இன்று, அவனுக்குத்தானே நீதியின்பால் அக்கறை? இன்றும் அதே ஊடகம் கபட நாடகம் ஆடுகிறது. விளைவுகள்??
அன்று உணர்ச்சி வயப்பட்டோம்; அரக்கி என்றோம்; இராட்சசி என்றோம்; சூர்ப்பனகை என்றோம்! எறும்பு ஊறக் கல்லும் தேயுமன்றோ? இன்றைக்கு ஈழத்தாய் என்கிறோம்.
அன்று தமிழ் இனத் தலைவர் என்றோம்; முத்தமிழ் அறிஞர் என்றோம்; காலத்தின் கோலம்! இன்றும் உணர்ச்சி வயப்படுகிறோம்! கொலைஞர் என்கிறோம்; துரோகி என்கிறோம்; சப்பாணிக் கழுதை என்கிறோம்; தமிழ் ஈனத் தமிழன் என்கிறோம்.
மதுவுக்கு மயங்கும் வண்டாய், இசைக்கு மயங்கும் அசுணமாப் பறவையாய், நெருப்பின் ஒளிக்கு மயங்கும் விட்டில் பூச்சியாய், தூண்டில் புழுவுக்கு மயங்கும் மீனாய், ஊடகத்தின் உசுப்பலுக்கு மயங்கும் தமிழா, அமெரிக்காவைப் பார்! இன்று போர்க் குற்றம் புரிந்த அசுரனுக்கு பாடம் புகட்ட விழையும் அவனைப் பார் தமிழா, நேற்று நாம் இகழ்ந்த அவனைப் பார்!!
5/26/2009
உளவியலும், தி.மு.கழகத்தின் பொருளாதாரத் தேசியப் பற்றும்!
அரசியல் கட்சிகளுக்கே கூட, எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு உண்டான அடிப்படைக் காரணம் தெரிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் விளைவாய், ஏதோ ஒன்றைச் சொல்லி மக்களை அப்போதைக்கு சமாளிப்பது என்றாகிவிட்டது.
விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதற்கு முன் பெரிய அளவில் உளவியல் ரீதியான சிந்தனை மாற்றம் வந்தாக வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு விவாதம் நடை பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். உடனே, கருத்தடிப்படையில் கேள்விகளை பெரும்பாலான நேரங்களில் வைப்பதில்லை. Negative Attack என்று சொல்லப்படுகிற, எதிர்மறையான விமர்சனங்களை உணர்வுகளின் அடிப்படையில் வைத்து, கருத்தை முன் மொழிபவரின் வாயை அடைப்பது.
இங்கே குழந்தைகள் கூட வெகு அழகாகச் சொல்வார்கள். Hey, you are picking on me! அதாவது ஒருவர் ஒன்றைக் கூறும் போது, அவர் வேறொரு சூழ்நிலையில் கூறிய ஒன்றை வைத்து மறித்துப் பேசுவது, அல்லது குற்றஞ் சாட்டுவது. இதனாலாயே அறிவார்ந்த பெரியவர்களும், சித்தாந்த, கொள்கை ரீதியான கோட்பாடுகளை முன் வைத்துப் பேசுவது இல்லை. மாறாக, சாமி கண்ணைக் குத்தி விடும், காத்து கறுப்பு அண்டி விடும் என்கிற போக்கில் பேசுவதை நடைமுறைக்கு கொண்டு வந்து, அந்த பழக்கத்திலேயே ஊறிவிட்டது சமூகம்.
தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் மனோபாவத்தை மாற்றி அமைக்க, மனோதத்துவ முறையிலேதான் தீர்வு கண்டாக வேண்டும். இந்த உளவியல் ரீதியான பரப்புரை வலுவான ஆயுதம் என்பதை, கடந்த அமெரிக்கத் தேர்தலிலும் கண்டோம். ஒரு எளிய குடியில், ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த ஒபாமா செய்தது என்ன?
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, அமெரிக்க பிரச்சினைகள், மனநிலையைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றாற் போல பிரசாரத்தைக் கையாண்டதுதான். இலாரி கிளிண்டனும், யான் மெக்கெயினும் எதிர்மறைத்(offence) தாக்குதல் நடத்துகிறார்கள். இவர் என்ன செய்ய வேண்டும்? அதைத் தடுத்தாட்கொள்ள(defence) வேண்டும். இவர் இந்த இரண்டையும் பாவிக்காமல், மூன்றாவதாக உளவியல் (psychological motivation) ஊக்குவிப்பைப் பொழிகிறார்.
நம்பிக்கை, நாம் மீள்வோம், History is just started happening! Are you taking part of it, or just watching it by sitting on side lines? வரலாறு படைக்கப் பிறந்தீர்களா? அல்லது வரலாறு நிகழ்வதை வேடிக்கை காணப் போகிறீர்களா?? இப்படி மக்களைப் பார்த்து வினவுகிறார். கூடவே, திட்டங்கள், வாழ்வின் யதார்த்தங்கள் போன்ற அம்சங்களையும் அதனூடாகப் பாய்ச்சுகிறார்.
மக்கள் சிந்தனைக்கு ஆட்பட, வரலாறும் நிகழ்ந்தது. இத்தகைய வல்லமை படைத்ததுதான் உளவியல்க் கோட்பாடு. இதுகாறும், அவை கைதேர்ந்த நிபுணர்களால் எதிர்மறைக்கு பாவிக்கப்பட்டு வந்தது. இனி, சமூக மாற்றத்திற்கும் பாவிக்கப்பட வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
எதற்காகப் பாவிக்கப்பட வேண்டும்? பொருளாதார தேசியத்தையும், தமிழ்த் தேசியத்தையும் இனங்காண, இனங்கண்டு அதன் அத்தியாவசியத்தை வெகுசன மக்களுக்குக் கொண்டு செல்வதில் பாவிக்கப்பட வேண்டும்.
அது என்ன பொருளாதார தேசியம்? தேசியம் என்றால், ஒன்றிணைக்க வல்ல எதோ ஒரு மூலத்தை அடிப்படையாகக் கொண்ட பரந்த மக்கள்த் தொகுப்பு. அந்த மூலம், மொழியாக இருக்கலாம், மதமாக இருக்கலாம், பூகோள ரீதியினாலான நிலப்பரப்பாக இருக்கலாம், மனிதத்தோற்றமாக இருக்கலாம், அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்தியாவுக்கு எது மூலம்? மொழியா என்றால், இல்லை. மதமா என்றால் இல்லை. வேறு என்ன?? இன்றைய சூழலில், காசுமீரம் முதல் குமரி வரையிலும் இருக்கும் மக்களை இணைப்பது ஒன்றே ஒன்றுதான். உலகமே வியக்கும் அந்த பொருளாதாரக் கட்டமைப்புதான் அந்த மூலம். பஞ்சாப்பும், தமிழகமும், ஆந்திரமும், பீகாரும் இன்னபிற பிரதேசங்களும் ஒன்றுக்கொன்று பொருளாதார ரீதியில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பொருளாதாரக் கட்டமைப்பின் வாயிலாகப் பிணைக்கப்பட்டதால் இந்தியா ஒரு பொருளாதாரத் தேசியம்.
இந்தியா எப்போது இந்த புதிய பரிமாணத்தைப் பெற்றது? உலகின் மற்ற பக்கங்களில், பொருளாதாரமயம் ஆக்கலும், உலகமயம் ஆக்கலும் துளிர்த்த அதே வேளையில் இந்த புதிய பரிமாணம் உருப் பெற்றது. அதே நேரத்தில்தான், தமிழ்நாட்டிலே இருந்த தமிழ்த் தேசியவாதிகள் இந்திய பொருளாதார தேசியத்தின்பால் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றத் துவங்கினார்கள். திமுகவில் இதற்கு வித்திட்டவர் முரசொலி மாறன்!
ஏன் அவ்வாறு செய்யத் துவங்கினார்கள்? உலகமயமாக்கலின் தாக்கம்! தனிப்பட்ட முறையிலே வளர வேண்டும் என்றாலும் சரி, கட்சி வளர வேண்டுமானாலும் சரி, தமிழ்நாடு வளர வேண்டுமானாலும் சரி, பொருளாதார தேசியத்தின் பங்களிப்பு தமிழகத்திற்கு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது.
தான் வளர வேண்டுமானால், கட்சி வளர வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கு மக்கள் வேண்டும். மக்களுக்கு திட்டங்கள் வேண்டும். அதைப் புரிந்து கொண்டதாலேயே தேசியத்தில் பங்கு கொண்டார்கள், அதன் பயனாலேயே இலவசத் திட்டங்களும், ரூபாய் அரிசித் திட்டமும் சாத்தியமாயிற்று.
அப்படியானால், இவர்களின் தமிழ்த் தேசியம் இனி அவ்வளவுதானா? கிடையாது. இவர்களிடம் உள்ள பொருளாதாரத் தேசியமும் தமிழ்த் தேசியமும், உடலும் உயிரும் போன்றது. எது ஒன்றைக் கைவிட்டாலும், அதோ கதிதான்! உடல் என்பது தமிழ்த் தேசியம். உடலுக்கு தாங்கக் கூடிய ஊறு நேரலாம். ஆனால், உயிர் இல்லையேல் எதுவும் இல்லையன்றோ? உயிருக்கு இடையூறு என்றால், கையையோ காலையோ வெட்டி எடுக்கவும் செய்வர். அதே நேரத்தில், உடலைப் பேணி காப்பதுவும் இன்றியமையாதது.
இந்த நிலை திமுகவுக்கு மட்டுந்தானா? கிடையாது! ஒவ்வொரு மாநிலக் கட்சிக்கும் உண்டு. அதையும் மீறி, உலகெங்கும் உள்ள தேசியங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். 50% வாக்குகள் பெற்ற ப்ளாக் க்யூபெக் கட்சி, தனிநாடு கோருவதைக் கைவிட்டு பொருளாதார தேசியத்துக்கு திரும்பியது. இவர்களால் பொருளாதார தேசியத்தின் பலன்களை முழுதாகப் பெற்றுத் தர இயலாது என மக்கள் எண்ணியதால், க்யூபெக்கில் 38% ஆக அவர்கள் பலம் குறைந்தது.
அவ்வளவு ஏன்? தனிநபர்கள் குறுக்கீடு இன்றி பங்களா தேசிலும், சிங்கள மக்களிடமும், பாகிசுதானிலும் தேர்தல் நடத்தினால், அவர்கள் இந்தியாவுடன் இணையத் தயார் என்றுதானே சொல்வார்கள்?
இதனைப் புரிந்து கொள்ளாவிடில் மக்களிடத்தே குழப்பமே மிஞ்சும். திமுகவைப் பொறுத்த மட்டிலும், இந்த காரண காரியங்களை கட்சியினருக்கும், மக்களுக்கும் புரிய வைக்காமல் போனதும் முரசொலி மாறன் அவர்களையே சாரும். ஆனால், உளவியல் ரீதியாக கருத்துகளை நல்வழியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு நல்ல பேச்சாளர்கள் வேண்டும்; நல்ல எழுத்தாளர்கள் வேண்டும். அந்த சமூகப் பொறுப்பு, இந்தக் கட்டுரை எழுதுபவனுக்கு உண்டு; வாசகர்களுக்கு உண்டு; சமூக ஆர்வலர்களுக்கு உண்டு; கல்வியாளர்களுக்கு உண்டு; அனைவருக்கும் உண்டு. ஆனால், இது சாத்தியம்தானா?
5/25/2009
செய்திகளின் இலட்சணம் இதுதான்!
நாம் ஏதாவது அபத்தமாக எழுதி இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? எதற்கும் இட்ட இடுகையை போய் மீண்டும் ஒரு முறை பார்க்கலாம், இப்படியெல்லாம் ஒரு பதற்றம் ஏற்படுகிறது, அச்ச உணர்வு மேலோங்குகிறது. உண்மையில் சொல்லப் போனால், இதற்கு அச்சப்பட்டே நாம் சமூகம் பற்றிய இடுகைகளை முடிந்த வரை தவிர்த்தே வந்திருக்கிறோம்.
எனினும் சமூகத்தில் உள்ள ஊடகங்களைப் பார்க்கிற போது நமக்கு ஒரு நிம்மதி. ஊடகத்தில் வருகிற, சொல்லப்படுகிற பாங்குடன் ஒப்பிடும் போது, நாம் அவ்வாறெல்லாம் சொல்லி இருக்க மாட்டோம் என்ற நிம்மதி பிறக்கிறது.
உதாரணத்திற்கு, சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியத் தேர்தலைக் கவனத்தில் கொள்வோம். வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. ஒரு பக்கம் பார்த்தால், அந்தக்கட்சி முன்னணி! மறுபக்கம் பார்த்தால் இந்தக்கட்சி முன்னணி!! எப்படி, ஒரே நேரத்தில் மாறுபட்ட செய்திகள்? நாம் சென்னையிலுள்ள பத்திரிகை நண்பர் பிரகாசு அவர்களைத் தொடர்பு கொள்கிறோம். அவர் கூறியதிலிருந்து:
ஒரு தொகுதிக்கு நூற்றுக்கணக்கான இயந்திரங்கள். எண்ணும் இடத்தில், அவை பல பிரிவுகளாக வைக்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணுகிறார்கள். எண்ணிய வாக்குகளின் கூட்டுத் தொகையை வைத்து ஒரு ஊடகம் சொல்கிறது, அந்தக்கட்சி முன்னணி!
முதல் சுற்றில், எடுத்துக் கொள்ளப்பட்ட பிரிவு / இயந்திரங்களில் பெரும்பாலானவற்றில் இந்தக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆகவே, அந்தத் தொகுதியில் இந்தக்கட்சி முன்னணி!!
இவற்றை நம்பி வாக்குவாதத்தில் இறங்கி, காரசாரமாகப் பேசி, பின்னர் கைகலப்பு வரை போகிறார்கள் நம் மக்கள். பாருங்கள், நான் இந்த இடுகை இட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு செய்தி, ‘பற்றி எரிகிறது பஞ்சாப்!’. அது என்ன, பஞ்சா பற்றி எரிய? அப்படியே பற்றி எரிந்தாலும், சமூக நலன் கருதி, செய்தியை உரிய வாக்கில் தரும் கடமை ஊடகங்களுக்கு இல்லையா என்ன? இவையெல்லாம் ஒரு உதாரணத்திற்குத்தான். இதனைப் பற்றி மேலும் விவரிக்காமல், இடுகையின் கருவுக்குச் செல்வோம் வாருங்கள்.
ஊடகத்தில், கட்டுரை, செய்தி, விவாதம், சொல்லாடல் என்று பல பரிமாணங்களில் பற்றியங்களை (விசயங்களை) மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். அவற்றின் தன்மை பற்றி, ஒவ்வொரு நுகர்வோரும் அறிந்து கொள்ள வேண்டியது ஊடகத்தின் பிடியில் சிக்கியுள்ள இன்றைய உலகில் மிக அவசியம்.
சமூகத்தில் தெரிந்த பற்றியங்கள், தெரிந்தே இருக்கிறது. தெரிந்தே, தெரியாதனவும் இருக்கிறது. அதாவது, நமக்குத் தெரிந்தே பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. தெரியாத தெரிந்தனவும் வானளாவக் கிடக்கிறது. அதே வேளையில், நமக்குத் தெரியாத தெரியாதனவும் உள்ளது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, சொல்ல வருவதைத் தம் வசதிக்கேற்ப ஏற்றியும், மாற்றியும், சுற்றியும், குற்றியும் சொல்லப்படுவன இன்றைய எண்ணப் பரிவர்த்தனைகள்.
இந்த பரிவர்த்தனையில் பல கூறுகள் உள்ளன. அவற்றில், ஒரு சிலவற்றை நாம் சொன்னதைச் சொல்லியபடியே எடுத்துக் கொள்ளலாம், நம்பலாம். ஆகவே, அந்தக் கூறுகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது இங்கு.
நிகழ்வு/கூற்று(truth): இவை பெரும்பாலும் நடந்த உண்மை நிகழ்ச்சிகள். நடக்காத ஒன்றை, நடந்ததாகக் கூறி, சட்டச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள துணிவது பெரும்பாலும் இல்லை. இந்த அம்சத்தின் கீழ் கூற்றுக்களும் வரும். இந்தியாவுக்கு வடக்கே இமயமலை என்பது கூற்று, இதனையும் ஒருவர் மாற்றிச் சொல்வாராயின், அவர் சமூக விரோதியே! தவறுதலாகச் சொல்வது என்பது வேறு, ஆனால் வேண்டுமென்றே சொல்வாராயின், சட்டப்படி அது குற்றம்.
தகவு (fact): இவை பெரும்பாலும் சுவராசியத்தைக் கூட்ட, உள்ளபடியாகவோ, அல்லது இட்டுக்கட்டியோ சொல்லப்படுவன. ஆகவே, 100% உத்திரவாதம் தர இயலாது. மன்மோகன் சிங் பதவி ஏற்றார் என்கிற நிகழ்வோடு, சோனியாவைப் பார்த்துப் பவ்யமாகக் கை கூப்பியபடி சென்றார் என்று சொல்லப்படுகிற தகமைக்கு உத்திரவாதம் தர இயலாது.
புரிந்துணர்வு (perception): பதவி ஏற்கும் போது, கை கூப்பியபடி சென்ற காட்சி காணொளியில் ஓடுகிறது. முதலாம் நபருக்கு அது பவ்யமாகச் செல்வது போன்ற புரிதல் ஏற்படுகிறது. அதுவே அடுத்த செய்தியாளருக்கு, சோனியாவைப் பார்க்கக் கூடாது என்பதற்காக தலையைக் குனிந்து கொண்டு செல்வது மாதிரியான புரிதல் ஏற்படுகிறது. ஆகவே, புரிந்துணர்வின் அடிப்படையில் வருவனவும் கேள்விக்குரியதே!
கருத்து (opinion): நிகழ்ச்சியில், கட்டுரையில் சொல்லப்பட்டு இருப்பது, கருத்தடிப்படையில் சொல்லப்பட்டதா என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். மன்மோகன் சிங் அவர்கள், கம்பீரமாக நடந்து செல்லவில்லை என்று சொன்னால், அது கருத்து. அதற்கு நீங்கள் உடன்படலாம், உடன்படாமலும் போகலாம். ஆகவே இதைக் கேட்டுவிட்டு, உங்கள் நண்பனிடம் போய் மன்மோகன் சிங் கம்பீரமில்லாத பிரதமர் என்று சொல்வது நலம் பயக்காது.
தரவு(data): ஆய்வு, புள்ளியியல், கணக்கெடுப்பு முதலானவற்றின் அடிப்படையிலான எண்ணப் பரிமாற்றம். இதிலும், ஏற்ற இறக்கம் எல்லாம் பங்கு கொள்ள வாய்ப்பு உள்ளது.
சான்று(evidence): சான்றுகளின் அடிப்படையில், அல்லது அதிகாரப்பூர்வமான ஒன்றின் வழி வரும் செய்திகள் பெரும்பாலும் நம்பத் தகுந்தவையே. இதிலும் கூட விதி விளையாட ஆரம்பித்து விட்டதுவோ?
இவைதான் ஊடகங்களின் மூல அம்சங்கள். இவற்றின் அடிப்படையில் மேலும் பல்வேறு கூறுகள் இருப்பினும், இவற்றைப் பகுத்தறிந்து, அதனடிப்படையில் செயல்படுவோமேயானால் ஊடகங்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது எம் கருத்து.
அதற்கு மேற்பட்டு, அய்யன் திருவள்ளுவரின் குறளே நமக்கு வழிகாட்டி:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!
5/21/2009
பயத்துனால பேசுறத விட்டுட்டு, பேசுறதுக்கு பயப்படாம இருக்கணும்!
‘பல்கேரியக் கப்பல் ஊழல் மன்னன் கோமாளியின் கைத்தடி குழந்தைவேலுவுக்கா உங்கள் ஓட்டு?’, இப்படி ஏக வசனத்துல, நாங்க மத்தவங்க கூவுறதுல இருந்து தெரிஞ்சிகிட்டதை எல்லாம் சொல்லிக் கத்தி தேர்தல் பிரச்சாரம் செய்துட்டு இருந்தோம். திடீல்ன்னு யாரோ எங்களை எட்டிப் பாக்குற மாதிரி இருந்துச்சு. மேல் நோக்கிப் பாத்தோம், நல்லா வெள்ளை முழுக்கை சட்டை போட்டுகிட்டு, நெடிய உயரத்துல, எலுமிச்சை நிறத்துல ஒருத்தர்! கூட எங்கம்மாவோட ஒன்றுவிட்ட சகோதரர், அதாவது என்னோட மாமா, பின்னாடி அசட்டுச் சிரிப்போட எங்க அப்பா!!
நாங்க வெலவெலத்து, தொட்டிய உட்டு இறங்கி வந்து நடுங்கிகினு நின்னோம். அந்த வெள்ளையுஞ் சொல்லையுமா இருந்தவரு, காரோட்டிகிட்ட சொன்னாரு, ‘தம்பீ, வண்டீல முன்னாடி இருக்குற பொட்டலத்த எடுத்தாப்பா!’.
பொட்டலம் வந்ததும், உள்ள பச்சநெற மழைக் காய்தத்துல சுருட்டின சாக்லேட் முட்டாய், அந்தக் காய்தத்துல ரெண்டு முயல் படம் போட்டு இருக்கும், பேர் மறந்துடுச்சு. பேர் போன முட்டாய் அது. ஆளுக்கு நாலு குடுத்து, தட்டிக் குடுத்துட்டு, ’என்ன மெளனு? நீங்கெல்லாம் எனக்கு வேலை பாத்துட்டு, பசங்களை அந்தப் பக்கம் வேலை செய்யுறதுக்கு அனுப்பிட்டீங்க போலிருக்கு?’ன்னாரு சிரிச்சிட்டே. எங்க மாமாவும், அப்பாவும் அசடு வழிய, நாங்க வுட்டோம் ஒரே ஓட்டம் வெளில.
அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது அவர்தான் ப. குழந்தை வேலுன்னும், எங்க ஊரான உடுமலைத் தொகுதியில இருந்து வெற்றியடைஞ்சு வேளாண்மைத் துறை மந்திரி ஆயிட்டாருன்னும். அடுத்த அடுத்த காலங்கள்ல, எங்க ஊருக்கு பிரத்தியேகமா திருமூர்த்தி மலையிலிருந்து வர்ற மாதிரி குடிதண்ணீர்த் திட்டம் கொண்டு வந்தாரு.
அதுக்கப்புறம் பல வருசங்கள் கழிச்சு, அதிமுக (ஜெ) அணி சார்பா, சேவல் சின்னத்துல நின்னாரு. நாந்தான் எங்க ஊர்ல அவருக்கு தேர்தல் துண்டுச் சீட்டு (booth slip) எழுதுற வேலை பார்த்தது. எங்க ஊர்ல அதிக வாக்குகள் வாங்கினாரு, ஆனாலும் சாதிக்பாட்சாகிட்ட தோத்துட்டாரு. அதுக்கப்புறம் திருச்செங்கோட்ல நின்னு, பாராளுமன்ற உறுப்பினர் ஆனதுக்கப்புறம் மேல சொன்ன கதைய எங்க மாமா அவர்கிட்ட சொல்ல, நான் நெளிய, ஒரே சங்கடமாப் போச்சு. அந்த காலகட்டத்துல எடுத்ததுதான் மேல இருக்கிற படம்.
என்னோட கல்யாணத்தன்னைக்கு நிறைய அரசியல் பிரமுகர்கள் வந்திருந்தாங்க. ஆனாலும், கடைசி வரைக்கும் இருந்து, வாழ்த்திட்டு போனது அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் C.T.தண்டபாணி. நல்ல மனிதர். அடித்தட்டுல இருந்து வந்து, இந்திராகாந்தி அவங்க கூடவே வேலை பார்த்தவர். என்னோட சின்ன மாமனாரோட நண்பர். என்னோட திருமணத்துக்கு அப்புறம், ஒரு வார இறுதியில, விருந்துல கலந்து பேசிட்டு இருக்குறப்ப, அவர் எதுக்கோ முரசொலி மாறன் அவர்களைப் பத்தி சொல்லிட்டு இருந்தாரு.
அவர் சொன்னதுல இப்ப எனக்கு நினைவுக்கு வர்றதுல இருந்து ஒன்னு! மாறன் ஐயா, தன்னோட கட்சியினரோ, சொந்தகாரங்களோ அனாவசியமா வீட்டுக்கோ, அல்லது அவர் பின்னாடியோ வந்தா கடுப்பாயிடுவாராம். அதே நேரத்துல, மாற்றுக் கட்சி ஆட்கள் வந்தா, முகம் மலரப் பேசிட்டு இருப்பாராம். இவர் டில்லியில இருக்குறப்ப, இதைப் பத்தி கேக்க, அவர் சொன்னாராம், ‘யோவ், தெண்டபாணி, நாமெல்லாம் ஒரே கருத்துள்ள ஆளுக. புதுசா என்னத்த பேசிடப் போறம்? மாத்துக் கட்சி ஆளுகன்னா, பரிமாறவும், தெரிஞ்சிக்கவும் நெறைய இருக்கும்யா!”ன்னு. மாற்றுக் கருத்துகளுக்கு எவ்வளவு மதிப்புன்னு தெரிஞ்சிக்க, இதை CTD எங்களுக்கு சொன்னதா ஞாபகம். CTDயும் நல்ல மனுசன், சகல கட்சிக்காரங்களும் மதிச்ச ஒரு வித்தியாசமான நபர்.
இதெல்லாம் எதுக்கு இப்ப ஞாவகத்துக்கு வருதுங்கன்னா, நாட்டுலயும் சரி, வலையிலயும் சரி, மெலிஞ்சு பேசுனா மிதிக்கிறாங்க! வலிஞ்சு பேசுனா வாழ்த்துறாங்க!! ஊரோட ஒத்து ஊதினா நல்லவன், கொஞ்சமா மாத்திப் பேசுனா பொல்லாதவன். சொல்ல வர்றவங்க, எதுக்கு பொல்லாப்புன்னு சொல்லாமலேவும் போயிடுறாங்க. தியாகங்கள் மங்குது, மாறா துரோகம்ங்ற வசவு மலிஞ்சிட்டு வருது.
ஒபாமா சொன்னது போல, பயத்துனால பேசுறத விட்டுட்டு, பேசுறதுக்கு பயப்படாம இருக்கணும். அப்பத்தான், நாடு, ஊடகம், பத்திரிகை, வலையுலகம், அது எதுவானாலும் மக்களின் பிரதிபலிப்புல இருந்து அந்நியப்படாம இருக்கும். இல்லாட்டி, அடுத்த தலைமுறையும் பிறழ்ந்த தகவல்களைத்தான் படிக்கப் போறாங்க!!
5/20/2009
முட்டாள் ஆவதின் நிமித்தமும், ஆக்குவதின் காரணமும்...
அது சரி, இருக்குற புடுங்கல்கள்ல அவங்களுக்கு இந்த கூத்து எல்லாம் பாக்க நேரம் ஏது? உசேன் ஐயா, நல்லபடியா வெச்சிப் பரிபாலனம் செய்துகிட்டு இருந்தாரு. வெற்றி, வெற்றின்னு உள்ள போயிட்டு, வெளில வரத் தெரியாம அவிங்க அந்தலை சிந்தலை ஆயிட்டு இருக்காங்க. அங்ககூட கருப்புக் குதிரைக இன்னைக்கு வேலையக் காமிச்சிட்டாங்களாம். அட ஆமாங்க, நம்ப ஊர்ல புலின்னா, வளைகுடாவுல அராபியக் குதிரைகதானே?! இதுகளை கருங்குதிரைகள்ன்னு வெச்சிக்கலாம், இப்ப என்ன?!
அங்க நெலமை அப்படியின்னா, இந்துகுசு மலையில செவ்வெலி புடிக்கப் போன எடத்துல, அதனோட வங்குக்குள்ள புகையுட்டு அடக்கப் பாத்தா, பக்கத்து வங்குல வெள்ளெலி வேலையக் காமிக்குதாம் இப்ப. குதிரைகபாடு சிறுபாடுன்னா, எலிகபாடு பெரும்பாடா இருக்காம். இதுல அவங்களுக்கு நம்மூர்க் கதையப் பாக்க நேரம் இல்லீங்களாம். ஆனாலும், சனங்களை நெனச்சு வருத்தப்படுறாங்களாம். ஆறுதல் சொன்னாரு, நாமளும் நன்றி சொல்லிகிட்டோம்.
முட்டாள் ஆகுறதோட நிமித்தம் என்னவா இருக்கும்? ஆமாங்க, சொல்லுறதையும், பசப்புறதையும் அப்படி அப்படியே எடுத்துகிட்டா நாம முட்டாள்தான். சித்த மெனக்கெட்டு யோசிச்சு பாத்தா அதுல இருந்து, அதாங்க, முட்டாள் ஆவுறதுல இருந்து தப்பிக்கலாம் போலத் தோணுது. சரி, ஆக்குறதுக்கு உண்டான காரணம்? பின்னாடி என்ன நடக்கும்ங்றதைப் பத்தி யோசிக்காம, அடுத்தவனை முட்டாள் ஆக்கி, உடனடிப் பலன் அனுபவிக்கிறதுதான் காரணம்.
கெடக்கிறதெல்லாங் கெடக்கட்டும், கெழவியத் தூக்கி மனையில வையுங்றது ஊர்மொழி! அந்த மாதர, நாம கொஞ்சம் இந்த ’நிமித்தம்’ ’காரணம்’, இதுக ரெண்டையும் அலசித் தொவச்சிக் காயப்போடலாம் வாங்க சித்த!
ம்ம், தமிழுக்கு வந்த சோதனை, என்ன சொல்ல? நாம பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப, நாங்க தமிழ்லயே ஆங்கிலம் படிச்சோம். இப்ப ஆங்கிலத்துலதானே, தமிழ் படிக்க வேண்டியதா இருக்கு?
The reason for something happening is why something happens. The cause for something happening is the factor that results in something happening. திடீர்ன்னு ஊரு எல்லையில இருந்த மரம் கீழ சாஞ்சிடுச்சு. சாஞ்சதனோட காரணம்(reason) என்னவா இருக்கும்? போதுமான வலு இல்லாதது. சாஞ்சதின் நிமித்தம்(cause), அடிச்ச சூறாவளிக் காத்தா இருக்கலாம்.
பணி நிமித்தம் காரணமாக வந்தேன்ன்னு சொல்லலாமா? பணி நிமித்தமாக வந்தேன், அதன் காரணமாகவே உங்களைச் சந்திக்க நேர்ந்ததுன்னு சொல்வது சரியா இருக்கும் இல்லீங்களா?! என்ன குழம்பிட்டீங்களா?? அப்ப சரி, என்னோட வேலை முடிஞ்சது, போயி உங்க வேலையப் பாருங்க, ஆனா மறுக்காவும் வந்து போகணும், செரியா?!
5/19/2009
இலங்கை வைத்துக் கொண்ட சூன்யம்...
பெரிய பெரிய வல்லரசுகளே, செய்த தவறுகளுக்கு உண்டான விளைவுகளை அறுவடை செய்யும் இவ்வேளையில், மனிதர்களைக் கொன்று குவித்தும், கபட நாடகங்கள் ஆடுவதின் மூலம் நம்பகத் தன்மையைக் குலைத்துக் கொண்டும், நன்றாக மாட்டிக் கொண்டது இலங்கை என்பதே உண்மை.
தமிழர்கள் என்று பார்த்தால், உலகம் முழுமைக்கும் பரவலாக கிட்டத்தட்ட எட்டு கோடிப் பேர் இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்தியா - 6,50,00,000
ரெயூனியன் - 1,25,000
இலங்கை - 35,00,000
பிஜி - 80,000
மொரிசீயசு - 1,00,000
மலேயம் - 18,00,000
சிங்கப்பூர்- 2,50,000
கனடா - 3,50,000
சுவிட்சர்லாந்து - 45,000
ஆப்பிரிக்க நாடுகள்- 3,00,000 (இராகவன் ஐயா மற்றும் உருப்புடாதது அணிமா சேர்த்து)
பிரித்தானியா - 2,00,000
இதர நாடுகள் - 15,00,000
அண்மைக் காலமாக அவர்களது படிப்பறிவும், பொருளாதார வளர்ச்சியும் வெகு முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதும் கவனிக்கத் தக்கது. இப்படியாக தமிழர்கள், உலகில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. நடப்புத் தலைமுறையினர் வரையிலும், மாறாமல் இருந்து வரும் குறைபாடு ஒன்று என்றால், அது சகிப்புத்தன்மை இல்லாமை என்பது சொல்லித் தெரிவது இல்லை. ஆனால், வரும் தலைமுறையினர் நன்கு கற்றுத் தேர்வதோடு மட்டுமில்லாமல், ஆளுமை பொருந்திய வண்ணம் இருக்கிறார்கள். அது கண்டு இந்தியா மட்டுமல்ல, அகில உலகமும் வியந்த வண்ணம் இருப்பதுவும் கண்கூடு. ஆகவே, தமிழனைத் தமிழனாய் மதித்துச் செயல்பட்டாக வேண்டிய நிலை வந்தே தீரும்.
உதாரணத்திற்கு, நடப்பு ஆண்டில் இந்திய ஆட்சியாளர் பணித்துறையில் (IAS) தேர்வு பெற்ற தமிழர் எண்ணிக்கை 96 பேர். மொத்த தேர்ச்சி 791 பேர். பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒரு இலக்கத்தில் இருந்தாலே அது பெரிய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், இதில் பெரும்பங்கு வகிக்கும் சைதை துரைசாமி அவர்களுடைய பங்களிப்புக்கு நன்றி கூறுவது நம் கடமை. ஆகவே, தமிழன் என்றாவது ஒரு நாள் ஆள்வான், அவனது கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
நண்பர்களே, அந்த நல்ல நம்பிக்கையோடு தொடர்வோம் வாருங்கள் தமிழோடு! சிங்கை நண்பர் அ.ஞானியார் காணொளிக் கருவி என்று அவரது இடுகையில் குறிப்பிட்டு இருக்கிறார். எமக்கு அதை வாசிக்கையில், வாசிப்புத் தட்டுகிறது அன்பர்களே. அப்படியானால், என்னதான் சொல்வது?
ஆங்கிலத்திலே, tool, equipment, instrument என்று தனிப்பட்ட சொற்கள் கொண்டு புழங்குகிறோம் அல்லவா? அதைப் போலவே தமிழிலும். இதனால், ஒன்றைச் சரியாகக் குறிப்பிட முடியும். Tools are objects to work with and that is generic. Instrument is not generic, it has pre-defined purpose and an instrument is also a piece of equipment. Equipment is an aggregation term of instruments.
ஆயுதம், கருவி, சாதனம் என்பதைக் கேள்வியுற்று இருப்பீர்களல்லவா? இந்த சொற்களையும் மேலே சொன்ன விளக்கத்தையும் பொருத்தி பாருங்கள், எளிதில் இனம் காணமுடியும். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறோம். ஆக, எதுவும் ஆயுதம் ஆகலாம். ஒரு செயலைக் கருத்தில் கொண்டு செய்வன கருவி. ஒரு காட்சியை நிழலாகப் பிடிப்பது, நிழல்படக் கருவி. ஒலி, ஒளி என ஒன்றுக்கு மேற்பட்டவற்றைப் பிடித்துக் காண்பிக்கும் சாதனம், காணொளிச் சாதனம். ஒருவருக்கு, அழகூட்டக் கூடிய ஒன்றுக்கு மேற்பட்டவற்றைச் சொல்வது, அழகு சாதனப் பொருட்கள். இந்த மூன்று சொற்கள் தவிர, பொறி, எத்தனம், எந்திரம் என்று நிறைய உள்ளது. ஆனாலும், மேற்கூறிய மூன்றுமே அடிப்படை.
பாதிப்பும், தாக்கமும் பெரும்பாலும் சரிவர பாவிக்கப்படுவது இல்லை. இது தமிழில் மட்டுமே அல்ல, ஆங்கிலத்திலும்தான். Yes, 'effect' and 'affect' are used interchangeably with wrong interpretation often. When you affect something, you produce an effect on it. பாதிக்கப்படும் போது, நம்முள் ஏதோ ஒரு தாக்கம் ஏற்படுகிறது. நாம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், சகிப்புத்தன்மை கொண்டு, உணர்ச்சி வயப்படாமல் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துவோம், நாளை நம் கையில்!!!
5/18/2009
கடைசி நேர பிரச்சாரம் தோற்கட்டும்!
உடல் கிடைத்திருக்கிறதா? காண்பிக்க வேண்டியதுதானே?? ஊடகங்களே, அழுவாச்சி நாடகங்கள் எதுவும் கைவசம் இல்லையோ??
உண்மையாக இருப்பினும், தோல்வி யாருக்கு? அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது வெற்றியா??
தூக்கிலிட்ட போதும், வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்?
என் விழிகளினைக் காண
இயலாது திரும்புமாறும்
என் முறுவலினை ஏந்த
இயலாது குனியுமாறும்
உன் உளம் பலம்குன்றிற்றா?
உண்மையில் அன்பு செய்த
முன்னைய நிலையை மூட
முனைந்தனையா இப்போது?
இறப்புற்ற கணங்களெல்லாம்
உண்மையில் இறப்பதில்லை.
பிறப்புற்று எம் வாழ்க்கை ஏட்டின்
பின்புறம் தொடர்ந்து நிற்கும்.
மறப்புற்று வாழ்தல் பொய்
அம் மணித் துகள்களினை.
நாங்கள்
இறப்புற்ற போதும்
அந்தக் கணங்களோ
இறப்பதில்லை!
5/12/2009
புன்னைப்பூ!
இளவஞ்சிப்பூ பூத்திருக்க
புன்னைப்பூவும் பூக்குமல்லோ?
துணைக்கந்த ஆத்திப்பூவும்
அழகழகா அரும்புமல்லோ??
அன்புள்ள வாசகர்களே! வணக்கம்!! எமக்கென்று ஒரு வலைப்பூ உண்டுபண்ணி பதினொரு மாதங்கள் ஆயினும், ஆரம்ப காலத்தில் நண்பர்கள் மட்டுமே வாசிக்கும் வண்ணம் இருந்தது. பின்னர், சில மாதங்கள் கழித்து மெதுவாக பதிவுலகிலும் நுழைந்தோம். மிக நல்ல அனுபவம். திரும்பிப் பார்க்கையில் மிக வியப்பாகவும் மகிழ்வாகவும் உள்ளது.
இன்னும் எழுதுவதற்கு கிராமத்து நினைவுகளும், வட்டார வழக்குகளும், தமிழ் சார்ந்த விபரங்களும், புனைவுகளும், நனவுகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இது பூக்கும் காலமன்றோ? முதலில் எள்ளுத் தாத்தா எழுதிய வைத்தியம் எனும் தொடரைத் துவங்கினோம். இன்னும் அது முற்றுப் பெறவே இல்லை. மீதம் இருக்கும் விபரங்களையும் எழுதத்தான் வேண்டும். ஆனாலும் இது மொட்டு மலரும் காலமன்றோ??
பின்னர், சித்திரக்கவி வரிசையில் பாடல்கள் எழுத, கவி காளமேகத்தின் தாக்கம் எனும் தொடரைத் துவங்கினோம். துணைக்கு, அண்ணன் மகேசு அடியெடுத்துக் கொடுக்க, கனவில் கவி காளமேகம் என்ற தொடரையும் துவங்கினோம். இந்த இரண்டும் இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆயினும் இது அலரி விரியும் பொழுதன்றோ?!
அதன் பின்னர், கிராமியத்து நனவுகளோடு நடப்பு நிகழ்வுகளையும் கலந்து கொடுக்க பள்ளையம் எனும் தொடர் கண்டோம். அதுவும் நிலுவையில்தான்! பதிவது புரிதலே ஆயினும், இனிவரும் நேரம் செந்தும்பை செவக்கும் நேரமன்றோ?! ஆகவேதான் அன்பர்களே, ஓரிரு திங்கள் கழிந்து மறுமலர்ச்சியுடன் திரும்பும் வரையில், உங்களுக்கு பணிவான வணக்கமும் நன்றியும் சொல்லி விடைபெறுகிறேன்!!
பழமைபேசி (எ) மெளன. மணிவாசகம்.
பொள்ளாச்சி: ஓட்டு நோம்பி, ஒரு கண்ணோட்டம்!
செவ்வாய் கிரகத்தைப் பற்றி இங்கிருந்தே அலசுவது இல்லையா மக்களே? நான் அந்த மண்ணில் பிறந்து, பட்டி தொட்டிகளில் மாடு மேய்த்தவன், தெரிந்ததையும், மனதில் பட்டதையும், கேள்வியுற்றதையும் சொல்ல ஆசைப் படுகிறேன். ஆகவே பொறுத்துக் கொள்ளவும்! இஃகிஃகி!!
1985 வரையிலான பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதியின் வாக்காளர் மனநிலை வேறு, இப்போதைய வாக்காளர்களின் மனநிலை வேறு. 1985 வரையிலும், வேளாண்குடி மற்றும் ஏழை மக்கள் ஏகமனதாய் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களிப்பர். உடுமலை, பொள்ளாச்சி நகர்ப்புற மற்றும் பெதப்பம்பட்டி பேரூர்ப் பகுதிகளில் மட்டும் தி.மு.கழகத்திற்கு கணிசமான வாக்காளர்கள் உண்டு. ஏனைய கிராமப்புறப் பகுதிகளில் அ.தி.மு.கழகம் செல்வாக்கோடு திகழ்ந்தது. அதே வேளையில், காங்கிரசுக் கட்சிக்கும் கிராம, நகர்ப்புறப் பகுதிகளில் தி.மு.கழகத்தை விட ஆதரவு அதிகமாக இருந்தது.
நாடு விடுதலை அடைந்ததிலிருந்தே, பெரியவர் அய்யாமுத்து, அருட்செல்வர் மகாலிங்கம் ஐயா, தொழிலதிபர் வெ. வித்தியாசாகர் ஐயா, கோவிந்தராசு அவர்கள், திருமலைசாமி அவர்கள் என்று நிறைய பிரபலங்களின் ஆதரவும் காங்கிரசுக்கு உண்டு. அதுபோக, உடுமலை HMS சின்னச்சாமி, INTUC P.L. சுப்பையா முதலிய தொழிற்சங்கத் தலைவர்களின் ஆதரவும் காங்கிரசுக்கு உண்டு. இடையில், நாராயணசாமி ஐயா அவர்களின் விவசாயிகள் சங்கம் இந்தப் பகுதியில் செல்வாக்கு பெற்று, பின்னாளில் அந்த வாக்காளர்கள் தி.மு.க, பின்னர் ம.தி.மு.கவுக்குச் சென்றனர்.
இந்தப் பின்னணியில் இருந்த தொகுதியில், 1985க்குப் பிறகு வந்த கல்வியறிவு கூடிய இளைஞர்களால் போக்கு மாறத் துவங்கியது. கிராமங்களில் தி.மு.க மற்றும் இன்றைய ம.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு பெருகியது. இதன் காரணமாய், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், கிணத்துக்கடவு, வால்பாறை, பொங்கலூர்ப் பகுதியில் என்றும் இல்லாதவாறு, 1985க்குப் பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க/ம.தி.மு.க வென்று சாதனை படைத்தது. இந்தப் பின்னணியில்தான் ம.தி.மு.கவின் கிருட்டிணன் தொடர்ந்து வெல்லவும் முடிந்தது.
இதற்கிடையில் 2006 சட்டசபைத் தேர்தல் வந்தது. தி. மு. கழகத்தில் உள்ள உள்ளூர்ப் பிரமுகர்களிடம் படுபயங்கரமான உட்கட்சிப் பூசல். அது மட்டுமல்லாது, உடன் இருந்த ம.தி.மு.கழகமும் அணி மாறியது. இதன் காரணமாய், மீண்டும் தி.மு.கழகம் பெரும்பாலான கோவைத் தொகுதிகளில் தோற்றது. அதன் விபரம் வருமாறு:
கிணத்துக்கடவு (அதிமுக) வித்தியாசம்: 5150
பொள்ளாச்சி (அதிமுக) வித்தியாசம்: 2946
உடுமலை (அதிமுக) வித்தியாசம்: 3463
வால்பாறை (காங்) வித்தியாசம்: 20979
பொங்கலூர் (திமுக) வித்தியாசம்: 53
தாராபுரம் (திமுக) வித்தியாசம்: 4712
ஆக, இந்த ஆறு தொகுதிகளில் பெற்ற வாக்குகளைப் பார்க்கும் போது திமுக அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது தெரிகிறது. இனி 2009க்கு வருவோம்.
இப்பகுதியில் ம.தி.மு.க கலகலத்து விட்டது என்பதே உண்மை. மு.கண்ணப்பன் அவ்ர்கள், காட்டம்பட்டிக் கந்தசாமி அவர்கள் போன்றோரெல்லாம் இப்போது தி.மு.கழகத்தில். ஆக, அ.தி.மு.கழகம் இப்பகுதியில் வலுவிழந்திருக்கிறது. அது போக, கொங்கு முன்னேற்றப் பேரவை எழுச்சியோடு களம் காணுகிறது. இப்பகுதியில் இருக்கும் காங்கிரசார் எப்போதும் தி.மு.கவுக்கு வாக்களிப்பது கிடையாது, கூட்டணியாய் இருந்தாலும்! அவர்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பது வழக்கம்!! இந்தத் தேர்தலில் எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல், கொ.மு. பேரவைக்கு வாக்களிப்பதின் மூலம் அவர்களுக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
கூடவே, தி.மு.க மற்றும் அ.தி.மு.கழகத்தில் இருந்தும் கொ.மு.பேரவைக்கு வாக்குகள் வெகு தாராளமாகச் செல்லக்கூடும். இது போதாதென்று தே.மு.தி.கவும் அடித்தட்டு மக்களின் வாக்குகளை அள்ளும். இந்த இரு வேட்பாளர்களும் எந்தக் கட்சியின் வாக்குகளை அதிகம் கவர்கிறார்களோ அது தோற்கும். கடைசி நேரத்தில், தோற்கும் மனநிலையில் உள்ள வேட்பாளர் இந்த இரு (திமுக, அதிமுக) கட்சிகளில் யாரோ ஒருவருக்கு உள்ளடி வேலை பார்ப்பதுவும் உண்டு. ஆனால், கொ.மு.பேரவையைப் பொறுத்த மட்டில் அது நடக்க வாய்ப்பு இல்லை. ஆகவே, திருப்பூர் மச்சானுக்கு மாலை விழலாம்!
5/08/2009
ஆதாளம்!
Would you continue talking with a person who always talks about himself?
இடம்பம் கதைத்து கெம்பத்து ஓதி
சவடனை அடித்து விண்ணானம் ஆய்
ஆதாளம் உய்த்து தன்பட்டம் கொளல்
ஆவது இனிதா மோ?!
5/03/2009
கல்பனாக் கொட்டாயித் தெருவோரம்...
சாவலுக கூவ,
குருவிக சிலுசிலுக்க,
பால்காரன் மணியடிக்க,
இன்னுஞ்சித்தநேரந் தூங்குவமின்னு,
இழுத்துப் போத்தயில,
எழுந்திருடா மணியா
உடலைப்பேட்டை போயித்
துணியெடுத்து தெக்கக்குடுத்துட்டு
வருவமுன்னு சொல்லி எழுப்பிஉட்டு,
குடிக்க காப்பித்தண்ணியுங் குடுக்க
நெறஞ்சமனசோட எட்டுமணி வண்டிக்கு
வாகாப் பட்டணம் போனோம்!
அந்த பட்டணத்து நடுப்புல
கல்பனாக் கொட்டாயித் தெருவோரம்
வித்தக்காரன் கூட்டங்கூட்ட
நானும் ரெண்டு எட்டுவெச்சு
பராக்குத்தான் பாப்பமின்னு போக,
அம்மாக்காரி சொன்னா,
ஏன்டா வேலியில போற ஓணானை
எடுத்து மடியில உட்டுக்கிற?
என்னடா இவன் தலையும் இல்லாம, வாலும் இல்லாம ஓணாங்கீணான்னு எல்லாம் பாட்டுப் படிக்கிறானேன்னு யோசிக்குறீங்களா? விசயம் இருக்கு, வாங்க பேசுலாம். போன வாரத்துல ஒரு நாளு, நம்ம கவிஞர் கயல் அவிங்க பதிவுக்கு போயி, அவங்களோட ஒரு இடுகைக்கு, நனவோடை நல்லா இருக்குன்னு சொல்ல, அவங்க நனவோடைன்னா என்னன்னு திருப்பிக் கேக்க, எனக்கு கதி கலங்கிப் போயிருச்சு.
கதி கலங்குறதுன்னா என்ன? அதுக்கு தனியா ஒரு இடுகைதான் போடணும். இப்ப குறுக்க பேசப்படாது! ஆமாங்க, அவங்க திருப்பிக் கேக்க, நாம உள்ளக்கிடக்கய வெளிப்படுத்துன விதம் நல்லாயிருக்குன்னு சொல்லிச் சமாளிச்சோம். அவங்க, தான் எழுதின கவிதைய நனவோடைன்னு சொல்லிட்டானேன்னு கோவிச்சுகுவாங்களோன்னு ஒரு சங்கடம். அந்த கையோடயே, கவிதைன்னா என்னன்னு நம்மகிட்ட இருக்குற புத்தங்கங்களைத் தூசி தட்டினோம். வலையில மேஞ்சோம். வெவரந்தெரிஞ்ச நாலு பேர்கிட்டவும் கேட்டுப் பாத்தோம்.
ம்ம்ம்... ஒன்னு ஒன்னும் ஒன்னு சொல்ல, பேசுனவங்களும் அவங்க பழமயச் சொல்ல, நமக்கு ஒரே கொழப்பமாப் போச்சு. கடசீல, கையேட்டுல சொல்லி வெச்சது ஏத்துகிடுறா மாதர இருக்கு. அதை வெளில சொன்னா, வேண்டாத பொல்லாப்பு வரும். அப்பத்தானுங்க, வேலியில போற ஓணானை எடுத்து மடியில உட்டுக்குற கதை ஞாவகத்துக்கு வந்துச்சு. பெரிய பெரிய பாட்டுகாரங்க, கவிஞருங்க சொன்னா அது சபை ஏறும். நமக்கெதுக்கு வம்பு?!
தலைவரையோ, தலைவியையோ போற்றிப் பேசுறாங்க. அது புகழுரைன்னுதான வரும்?! ஆனாக் கவிதையின்னு சொல்லுறோம். காதலிய அப்படீ இப்படீன்னு நல்லதா நாலு பழம சொல்லும் போது, வர்ணனையின்னுதான வரோணும்? ஆனா, அதையும் காதல் கவிதையின்னு சொல்லுறோம். மன்சுல தோணுற நெனப்பையெல்லாம் ஒரு சீராச் சொல்லுறோம். அதையுங் கவிதையின்னே சொல்லுறம்?! அந்தக் காலத்துல எல்லாம், சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவின்னு சொல்லி, அதுக்கு இலக்கணமுஞ் சொல்லி வெச்சாங்க. இந்த காலத்துலயும், பெரியவிங்க எல்லாம் ஒன்னு கூடி எல்லாரும் ஏத்துகிடுறா மாதர, கவிதையின்னா என்னன்னு சொல்லி வெச்சாத் தேவுல.
ஆமாங்க, உற்பத்தி பண்றதெல்லாம் கவிதை இல்லீங்களாம். சொல்ல நினைக்குறதை, இலக்கண வரம்புக்குள்ள வெச்சி செய்யுறது செய்யுள்ன்னு வருமுங்களாம். செய் + உள்வைத்து = செய்யுள். இஃகிஃகி! உள்ளக்கிடக்கைய வெளிப்படுத்துறது, நனவோடை. அதுக்கு, பெரியவங்க சொன்ன இலக்கணம் இதுதானுங்க. “வாசகர்களின் மனதைச் சுண்டியிழுக்கும் பாங்கினில், காலம், இடம் இவற்றினைப் பொருட்படுத்தாமல், மனதில் உள்ள எண்ணங்களை அலை அலையாகக் கிளப்பிவிடப்பட்ட நிலையில், நல்ல சொற்கள் கொண்டு வடிமைப்பது நனவோடை (Stream of Consciousness)!". என்னோட மனசுல எப்பிடி, அலை அலையாக் கெள்ம்புதுன்னு பாருங்க சித்த! கேவலமா இருந்தா கண்டுகிடாதீங்க சரியா?!
மூடுமந்திரம் ஓதி
அலையாய் அலைந்து
பின்னால்வர ஆட்சேர்த்து
உளம்கவர் வேடமிட்டு
மனங்கோணாப் பேச்சுப்பேசி
வினையாற்றுதல் யாதென
சிரத்தையுடன் எண்ணியதில்
ஒருநிலைக்கு வந்தாயிற்று,
வேண்டாம் அரசியல்!!!
5/02/2009
விமர்சனம்: நனவுகள்!
வணக்கம் அன்பர்களே! வார இறுதி நாட்கள் இனிமையாக் கழிந்து கொண்டிருக்கையில், அன்பர் ஒருவர், நனவுகள் சிறுகதைப் புத்தகத்தைப் படித்ததின் பயனாய், நம்மோடு அளவளாவும் பொருட்டு அழைத்ததின் பேரில், நேற்றிரவு அலைபேசியில் சிறிது நேரம் விவாதித்துக் கொண்டு இருந்தோம். கதைத் தொகுப்பினைப் படித்தவர் உணர்ச்சி வயப்பட்டவராய் இருந்ததை அறிய முடிந்தது. அவருடைய பாராட்டுதலுக்கு நன்றி உடையேன்.
தானே கதையின் நாயகனாய் உணர்ந்ததாகவும், பழைய நினைவுகளை அப்படியே அள்ளி வந்ததாகவும் கூறிவிட்டு, எப்படி சிறுகதைகளை எழுதுவது என்றும் வினவினார். ”ஐயா, நானே இப்போதுதான் அரிச்சுவடியைப் புரட்டிக் கொண்டு இருக்கிறேன். நிலைமை அப்படி இருக்கையில், நான் உங்களுக்கு எப்படி?” என்று இழுத்து சமாளித்தேன்.
அவரது கேள்வி, என்னை அது பற்றி மிகவும் சிந்திக்க வைத்தது. அதன் விளைவே இந்த இடுகை! சுயஆய்வு என்றும் கூட வைத்துக் கொள்ளலாம். ’அளவளாவுதல்’ எனும் பொருளில் புனைபெயராய்ப் பழமைபேசி!. ஆனாலும் கூட, பழமையான பற்றியங்களில் நாட்டம் கொள்வதும் இயல்பாய் என்னுள் ஏற்படுகிற ஒன்றுதான். இலக்கியத்திலும் அவ்வாறே பகுப்புகள் இருப்பதைக் காணலாம். செவ்வியல் (Classicism), புனைவியல் (Romanticism), நடப்பியல் (Realism), மறுமலர்ச்சி (Renaissance) முதலியவற்றை அடிப்படையாகத் தன்னுள் வைத்திருப்பதுதான் படைப்புகள்.
அவரவர் மனநிலைக்கு ஏற்ப இவற்றில் ஏதோ ஒன்றில் அவர்களுக்கே தெரியாமல் ஆட்படுவது உண்டு. இன்றைய காலகட்டத்தில், வெகுசனப் பத்திரிகையில் பெரும்பாலும் வருபவை, தமிங்கிலத்தைக் கொண்ட நடப்பியல் மற்றும் புனைவியல் அடிப்படையிலான படைப்புகளே! கிராம வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட எவரும் நடப்பியல் அடிப்படையில், அதுவும் இந்த உலகமயமாக்கல் யுகத்தில் படைப்பது என்பது சவாலானதே; புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட! கூடவே, இயன்ற வரை தமிழில் எழுத வேண்டும் என்கிற வேட்கையும், பிடிவாதமும் இருப்பவனுக்கு நடப்பியல் கைகூடி வராதுதான்!
ஏன் வராது என்று வினவலாம், வாதிடலாம்; தனித் தமிழிலும் எழுதிப் படைக்கலாம்; ஆனால் படிப்பதற்கு வாசகர்கள் வேண்டுமல்லவா?! இந்தப் பின்னணியிலே, படைப்பாளன் தனக்குப் பிடித்த பற்றியங்களை அவனுக்குப் பிடித்த பாங்கில், ஏற்றிச் சொல்வது அவனுடைய ஏற்றல் கொள்கை (Theory of Reception). அந்த ஏற்றலில், அடிப்படையாக அவனுக்குத் தேவைப்படுவது உருக்காட்சி (Imagination), அதையே கற்பனை வளம் என்றும் சொல்கிறார்கள். கற்பனை வளம் ஒன்று மட்டுமே நல்ல படைப்பைத் தந்து விடாது. கற்பனையில் தோன்றுவதையும், கண்ணால் கண்டதையும் உள்ளத்தில், மனக் கண்களில் உருத்தோற்றத்தை உண்டு செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும்.
அந்த உருக்காட்சியை, சொல்லாட்சியால் தொய்வில்லாமல் விவரிக்கலாம். சொல்லாட்சியை, சொல்வளம், தொடர், அடைமொழி, உவமை, உருவகம், சொற்சித்திரம், பழமொழி, சொலவடை, தகவல்த் தொகுப்பு என்று பல அம்சங்கள் கொண்டு செலுத்திடவும் முடியும். ஆனால், உவமையும் உருவகமும் கொண்ட வர்ணனை, வாசகனைப் படைப்பில் ஒன்றிவிடச் செய்வதற்கு மிக முக்கியம். அந்த வர்ணனை, தேவையான அளவு மட்டுமே பாவித்தல் வேண்டும், இல்லாவிடில் வாசகனின் கவனம் சிதறவும் வாய்ப்பு உள்ளது.
வெறுமனே, “மாலை நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்தான்!” என்பதை விட, “கைரேகைகள் தெரிந்தும் தெரியாமலும் மங்கிய மாலைக் கருக்கல், அங்கங்கே ஒளிச்சிதறலை நாடி ஓடும் பூச்சிகள், அந்தத் தருணத்தில் வீதியில் வேகமெடுத்தவனாய்ச் சென்று கொண்டிருந்தான்!” என்று சொல்வது காட்சியில் ஒன்ற வைக்கும் யுக்தி. அது அவனது உருக்காட்சியையும் பிரதிபலிக்கிறது. இந்த யுக்திகளோடு உருக்காட்சியை வடிமமைத்து, வேட்கை, உவகை, பால் உணர்வு, புலன் உணர்வு, அமைதி, கண்ணீர், நெகிழ்ச்சி, துன்பம், இழப்பு, வெற்றி முதலான வாழ்வியல் அங்கங்கள் கொண்டு படைப்பன எதுவும் ஒருவரை ஆட்கொள்ளும் என்றே எண்ணுகிறேன்.