9/30/2008

நீ தாழ்ந்தவனா? திருந்துங்கப்பா.......

பொதுவா, ஒவ்வொருத்தரும் தன்னை உயர்வா நினைக்கணும். குறைந்தபட்சம் தாழ்வா நினைக்கக் கூடாது. அதுக்காக, இறுமாப்போட இருக்கணும்ன்னு நாம சொல்ல வரலை. அப்பத்தானே, இயல்பா எதையும் செய்யமுடியும். இல்லீங்ளா? ஆனா பாருங்க, தமிழர்கள்ல ஒரு கணிசமான சதவிகிதத்தினர்க்கு இதுல என்னவோ கொஞ்சம் சிக்கல்.

நம்மாளு செய்யுற தொழில்ல படு திறமைசாலியா இருப்பான். ஆனா பாருங்க, அலுவலகம் தொழில் செய்யுற இடம்ன்னு வந்துட்டா அடக்கியே வாசிப்பான். நாட்டுக்குள்ள, வடநாட்டவரைப் பாத்தாப் பேச மாட்டான். வெளிநாடுன்னா, வெள்ளைக்காரன், சீனன் இவங்க முன்னாடி அடக்கியே வாசிப்பான். அவனுக பெரும்பாலும், நல்லா, வாய்ச் சொல்லில் வீரனா இருப்பாங்க. இந்த மாதிரி சூழ்நிலைல, அலுவலகத்துல கலந்துரையாடல்(group discussion), வேலை நிமித்தம் நிலைஅறி கூட்டம்(status meeting)ன்னு பலதும் நடக்கும்.

அவனுக அந்த மாதிரி நேரங்கள்ல, நல்லா அவனுகளை சுயவிற்பனை (self promoting) செய்வாங்க.... நம்மாளு, கொஞ்சம் கூட சட்டை செய்துக்க மாட்டாரு. நம்ம ஆளுகள்ல இருக்குற, திடமாப் பேசி வேலை செய்யுற தன்னம்பிக்கை இருக்குறவன் பேச ஆரம்பிச்சா, அந்த வாய்ச்சொல் வீரனுக்கு இடிக்கும். ஆனா, நம்ம தன்னம்பிக்கை கொண்டவன் பேசி அதை சரி பண்ணுவான். அங்கதாங்க பிரச்சினை! வாய்ச்சொல் வீரன், மரம் மாதிரி பவ்யமா உக்காந்துட்டு இருக்குற நம்மாளுக்கு தூண்டில் போடுவான். என்ன முருகா, நீ என்ன நினைக்குறேன்னு சும்மா கேப்பான். வேறென்ன? நம்மாளு சரணாகதிதான்!

சரி அது போகட்டும், வெளில வந்து சக நாட்டவன் நண்பனைப் பாத்து சலிச்சுக்குவான், 'ஏண்டா, வாய வெச்சிக்குனு சும்மா இருக்க மாட்டியா?'ன்னு கேப்பான்.
சில நேரங்கள்ல திரை மறைவுல போட்டும் விட்டுடுவான். ஏண்டா, உங்களுக்கு இந்த பொழப்பு? மொதல்ல, நீ உன்னை உயர்வா நினை! நீ, எந்த விதத்துல குறைச்சல்?? மத்தவன் சொல்லுறது சரி, அவன் மேல்! சகநாட்டவன் பேசினா, அது சரி இல்லை; ஏன்னா, சகதோழன் தன்னை விட உயர்ந்தவன் இல்லை!! எந்த ஊர் ஞாயம்டா இது?

போதும்டா, உங்க தாழ்வு மனப்பான்மை. நீயும் திறமைசாலிதான்! உன்னை மாதிரி உன்னோட சக நண்பனும் திறமைசாலிதான்!! நீ பேசு. இல்ல, பேசுற உன் நண்பனையாவது பேச விடு! நண்பன் பேசுறது சரியாயிருந்தா ஆதரவு குடு!!


ச்சும்மா, கடனைக் கட்ட முடியாதவனுக்கு கடனைக் குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப் பயலுவகளை விட நீ அறிவாளிதான், அதை மொதல்ல நீ நம்பு!


குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்!

அறிவகம்

திரு. பழமைபேசி,

அருமையா எழுதியிருக்கீங்க.. தமிழர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை விடவேண்டும். நம்மில் ஒருவன் முன்னேற முயற்சித்தால் அவனை தூக்கிவிடா விட்டாலும் பரவாயில்லை, காலைவாரி விடக்கூடாது. தமிழர்கள் தங்கள் பெருநதன்மையை பணிவாக காட்டுவது சிறந்த பண்பாடுதான். அதேநேரத்தில் பணிவை மற்றவர்கள் இழிவாக மதிப்பிடுவார்களானால், பணிவது பயந்து அல்ல பண்பாடுக்காக என்பதை தைரியமாக சொல்லும் தன்னம்பிக்கை தமிழனுக்கு என்று வருகிறதோ அன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும்.தமிழர்களே பணிவு காட்டுங்கள் அதற்காக பணிந்துவிடாதீர்கள்.

9/27/2008

பிசைந்து உண்பது கேவலமா?

சில வருடங்களுக்கு முன்னாடி, ஒரு தமிழ் நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். நல்ல நண்பர். வெளி நாட்டுக்கு வந்து பதினஞ்சு வருசம் இருக்கும். அதனால, அவர் ஊர்ல இருந்து இங்க அமெரிக்காவுக்கு வந்த அப்ப, ஊர் எப்படி இருந்ததோ, அந்த சூழ்நிலை பழக்க வழக்கத்துல அப்படியே மனசும் மூளையும் தங்கிப் போச்சு. இதுல வேற, இவர் கிராமப் பின்னணி கொண்டவர், கொங்குச்சீமை. நீங்க ஓரளவுக்கு அந்த மனுசனை யூகம் செய்து இருப்பீங்கன்னு நினைக்குறேன். அவ்வளவு ஒரு வெள்ளை மனசு.

நானும் கிட்டத்தட்ட அவரோட பின்னணியக் கொண்டவன்தான். அதனாலதானோ என்னவோ, அவரு மேல ரொம்ப மரியாதை. இப்படியாக, நாங்க ரெண்டு பேரும் சேந்து இனியொரு நண்பர் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம். நல்லா, வகை வகையா சோறும் கறியும். நண்பரோட மாமியார் ஊர்ல இருந்து வந்து இருந்தாங்க. அவங்க சமையல்தான்! ஊர் விருந்து அப்படியே இங்க வந்த மாதிரி இருந்தது. அங்க தாங்க ஒரு பிரச்சினை!!

அந்த மிளகு இரசம், அவ்வளவு அட்டகாசமா இருந்துச்சு. நாங்க ரெண்டு பேரும், நல்லா சோறும் இரசமுமா பிசஞ்சு ஒரு பிடி பிடிச்சோம். சமைச்சுப் போட்ட அந்த அம்மாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நான் நினைக்குறேன், மருமகன் வீட்டுக்கு அமெரிக்கா வந்த அந்த அம்மா இன்னைக்குத்தான் சிரிச்சே இருக்கும்னு நினைக்குறேன். ஆனா, அந்த அம்மாவோட மகளுக்கும் விருந்துக்கு அழைச்ச நண்பர் முகத்துலயும் சட்டுன்னு ஒரு மாற்றம்.

அப்புறமாத்தான் தெரிஞ்சது மத்த விருந்தினர் முன்னாடி கையால சாப்பிட்டது அவங்களுக்கு பிடிக்கலைன்னு. அதுவும் சோறும் இரசமும் பிசஞ்சு (பெனஞ்சு) திண்டது அவங்களை முகம் சுழிக்க வெச்சு இருக்குன்னு. அதுக்கு அப்புறம், அவர் எங்க கூடப் பழகுறதையே குறைச்சிகிட்டாரு. நாங்க செஞ்ச குத்தம் என்ன? தமிழன் பண்பாடே கையால சாப்புடுறது தானே? இல்ல, இரசமும் சோறும் பிசையாம எப்படி உண்பது? நல்லாப் பிசஞ்சு ஒன்னும் ஒன்னும் கலந்து, அப்படியே கவளம் கவளாமா உண்பதுதானே வழக்கம். அப்படிச் சாப்பிட்டாத்தானே ருசியும்?! நாகரிகம்ங்ற பேர்ல, ஏண்டா நீங்களும் குழம்பி அடுத்தவனையும் இம்சை பண்ணுறீங்க? தமிழன் தமிழனா இருக்கட்டும். கண்டு பாவனை ஒரு நாளும் அமைதியைத் தராது.

மென்பொருள் கட்டிய கைகள் இவை. பெரும் தொகை ஒப்பந்தங்களை நிறைவு செய்த கைகள் இவை. என்றாலும், மாட்டுச் சாணம், எருமைச் சாணம் அள்ளிய கைகள் எம் கைகள். அம்மாவுடைய, பெற்ற மகளுடைய வாந்தியை ஏந்திப் பிடித்த கைகள் எம் கைகள். எம் இடது கை விபத்தில் காயம் பட்ட போது வலது கையால் கழுவினதால், எம் இரண்டு கைகளும் மலம் கழுவிய கைகள்தான். அவ்வப்போது பெற்ற குழந்தைக்கும் கழுவும் கைகள்தான் எம் கைகள்.

இதைச் சொல்ல ஏன் வெட்கப்பட வேண்டும்? இந்த வலக் கையை குலுக்க மனம் கூசுகிறதா? குலுக்காதே! ஆனா, ஒன்று மட்டும் நிச்சயம்! எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்!!


(ஆத்தோட சீராடிட்டு, பொ**க் கழுவாமப் போனா,
ஆத்துக்கு நட்டமா? இல்ல, கழுவாமப் போற உனக்கா??)

தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -1

பழைய ஆட்களுக்கு, புது தலைமுறைக்காரங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு பெரும்பாலும் புரியறது இல்ல பாருங்க. அதான், அவங்க வசதிக்காக தமிங்கில தமிழ் அகராதி. வேணுமின்னா, தமிழ் தமிங்கில அகராதியும் எழுதலாம். அதாவது பழைய ஆட்கள் சொல்லுறது புது தலைமுறைக்கு புரிய வைக்க.

ரெக்கார்ட் - ஆவணம்
செகரட்டரி - செயலர்
மேனேஜர் - மேலாளர்
ஃபைல் - கோப்பு
புரோநோட் - ஒப்புச் சீட்டு
பால்கனி - முகப்பு மாடம்
பாஸ்போர்ட் - கடவுச் சீட்டு

பாஸ்வோர்ட் கடவுச்சொல்
டிசைன் - வடிவமைப்பு
சாம்பியன் - வாகைசூடி
விசா - நுழைவிசைவு
டெலிகேட் - பேராளர்
ஸ்பெசல் - பிரத்யேகம்
புராபோஸல் - கருத்துரு
ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
விசிட்டிங் கார்டு - காண்புச் சீட்டு
பிரீஃப்கேஸ் - குறும்பெட்டி
லம்சம் - திரட்சித் தொகை
மெயின் ரோடு - முதன்மைச் சாலை
பஜார் - கடைத்தெரு
புரோட்டோகால் - மரபுத்தகவு
செக் - காசோலை
ரசீது - பற்றுச் சீட்டு
பேண்ட் - முழு கால்ச்சட்டை
ட்ரௌசர் - அரை கால்ச்சட்டை
கரண்ட் - மின்சாரம்
டிக்கெட் - சீட்டு
மோட்டார் பைக் - துள்ளுவண்டி
மார்க்கெட் - சந்தை
லூசு - கிருக்கு/இளகினது
சீ டா -- சந்திக்கலாம்



(குப்பைமேடு ஏறிக் கோழி பிடிக்க மாட்டாதவன், கொல்லிமலை ஏறி அகராதி எழுதப் போறானாமா?)

9/24/2008

சோதனை மேல் சோதனை...

இந்தியாவில் சித்த மருத்துவத்துக்கும், ஆயுர்வேதத்துக்கும் ஆதார சுருதியாக இருப்பவை மூலிகைகள்தான். அந்த மூலிகைச் செல்வத்துக்கு ஒரு முடிவு கட்ட ஜோராக கிளம்பிவிட்டது ஓர் அந்நிய நாட்டு நிறுவனம். ஏற்கெனவே நம்மூர் பருத்தியையும், நெல்லையும் பாழாக்கிய அதே `மான்சென்டா' நிறுவனம், இப்போது இந்திய மூலிகைகளிலும் மரபணு மாற்ற மாயஜால வேலைகளை ஆரம்பித்து விட்டது. `இதனால் இந்தியா அதன் இயற்கை மூலிகைகளை இழந்து, மரபணு மாற்ற மூலிகையால் மண்வளத்தையும் இழந்து, இனி மருந்துக்கும், உணவுக்கும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்' என்று பதைக்கத் தொடங்கியுள்ளனர்' பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல அமைப்பினர்.

அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பலர், இன்னொரு ஒப்பந்தமான இந்திய_அந்நிய நாட்டு உயிர் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தைக் கண்டுகொள்ளவில்லை. நமது இந்திய மூலிகைத் தாவரங்களை அந்நிய நாட்டு நிறுவனம் மரபணு மாற்றம் செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம் இது. எந்தவித பொது விவாதமும் இன்றி, நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் அந்த நிறுவனத்துக்கு நம் மூலிகைகளை அப்படியே தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?" என்பது நம் சித்தர் பாடல்களில் ஒன்று. ஆவாரையிலும் மரபணு மாற்ற பரிசோதனையைச் செய்து அந்நிய நாட்டு கம்பெனி சாவாரைக் காண வைத்துவிடுமோ என்ற பயம்தான் நம் நெஞ்சை நெருடுகிறது. இது குமுதம் ரிப்போர்ட்டர்ல வந்த செய்தி. ஆகவே, நம் ஜெய் ஆலமரத்தை நிழல் படமாக எடுத்து வைத்திருப்பதுபோல், நீங்களும் உங்களுக்கு பிடித்தவற்றை நிழல் படம் ஆக்க இதுவே தக்க தருணம். எதிர் வரும் காலங்களில் அவையும் மறைந்து விடும் என்பது திண்ணம்.

9/14/2008

"கடுதாசி"ன்னா என்ன?

From: XXXXXX
Subject: கடுதாசி
To: navasakthi@googlegroups.com
Date: Saturday, September 13, 2008, 6:40 PM


கடுதாசிங்றது தமிழா? இல்ல.

அப்ப? போர்ச்சுக்கீசீயத்துல இருந்து வந்த திசைச்சொல்.

கடிதங்றதுதான அது? இல்ல.

அப்ப? உறை. அது எதுக்கும் பொழங்கலாம். உதாரணமா, குல்லாவை கடுதாசியில் வைத்துக் கொடுத்தான். கடிதம், உறையில வர்றதால நாம மாத்திப் பொழங்கறது வழக்கம் ஆயிடுச்சு.


(.....எவனோ பொழப்பத்தவன், பூனை மயிரச் செரச்சானாம்......)


From: xxxxxxxxxxx
Subject: Re: கடுதாசி
To: NavaSakthi@googlegroups.com
Date: Sunday, September 14, 2008, 3:47 AM

அதேபோல் சன்னல், மேசை, அலமாரி, வராண்டா, பீங்கான், பேனா ஆகியவை போர்ச்சுகீசிய சொற்கள். இதில் சில வார்த்தைகள், ஆங்கிலத்திலும் வழக்கதில் உள்ளதை காணலாம் (மேசா, வராண்டா, பென்). சன்னலுக்கு தமிழில் சாளரம் என்ற சொல்லுண்டு. 1500க்கு பிறகு, ஐரோப்பியர்கள் தென்னிந்தியாவிற்குள் வந்த பிறகுதான் (முதலில் வந்தவன் போர்ச்சுகீசியன்), அலமாரி (பூட்டிவைக்க), மேசை, பேனா (ஒப்பந்தகள் எழுத) போன்றவைக்கு பயன் வந்ததோ என்னவோ!

அதேபோல, சிவில் சட்டதில் பயன்படுததபடும் பல வார்த்தைகள், பல மொழிகளிருந்து வந்ததை பார்ககலாம். உதாரணமாக, வாரிசு (அரபு).

(மற்றவை மறந்து போய்விட்டதையா! எனக்கு 13 - 15 வயதிருக்கும் போது தஞ்சையில் விவசாயம் பொய்த்து போக ஆரம்பித்த காலம் அது. என் அப்பா நிலம் வீடு தரகு செய்து கொண்டிருந்தார்கள், அப்போது, பலமுறை பள்ளி விட்டு வரும் வழியில், ரிஜிஸ்டிரார் ஆபிஸில் போய் காத்திருந்து, ரிஜிஸ்டிரேஷன் முடிந்த பிறகு, அப்பாவிற்க்கு கிடைக்கும் கமிஷனில், தேவையானவை வாங்கி வருவேன், சில சமயம், புது பேனா, நோட்டு கூட கிடைக்கும்! அது ஒரு தனி கதை.

ரிஜிஸ்டிரார் ஆபிஸில், டாக்குமெண்டை உரக்க வாசிக்க ஒருத்தர் இருப்பார். அதை கவனித்தால், அத்தனை ஆர்வமுண்டாக்கும் வார்த்தைகள் இருக்கும். அந்த ஆர்வ கோளாறினால், லைப்ரரியில் தோண்டி துருவி, பல சொற்களின் வேரை ஆராய்ந்துண்டு. இப்பொழுது, ரிஜிஸ்டிரார் ஆபிஸில் முழுக்க முழுக்க ஆங்கிலம், தமிழ் வந்துவிட்தென்று கேள்வி. BTW, அவர்கள் எழுதுவதிலும் பல வேடிக்கையாக இருக்கும்.)


From: xxxxxx
Subject: Re: கடுதாசி
To: NavaSakthi@googlegroups.com
Date: Sunday, September 14, 2008, 5:55 AM

அப்படிப் போடுங்க..... மலரும் நினைவுகள் எப்படி மலருதுன்னு பாருங்க...... நீங்க சொல்லுறத நானும் கேட்டு இருக்குறன். எங்க ஊர் ஜமாபந்தில, டாவாலி அப்படித்தான் எழுந்து உரக்க வாசிப்பாரு.....

"கோயமுத்தூர் ஜில்லா, உடுமலைத் தாலுக்கா வேலூர் கிராமப் பஞ்சாயத்தில் விநாயகங் கோயில் வீதி ரெண்டுங் கீழ் நுப்பத்து எட்டாம் நெம்பர் வீட்டில் குடியிருக்கும்
மிராசுதார் சுப்பாரெட்டி பேரனும் செங்கொடை அப்பாசாமி ரெட்டியின் பதினோறாவது மகனுமான காவேட்டி ரெட்டிக்கு பாத்தியப்பட்ட" .......ன்னு அப்பிடியே கோர்வையாப்
போகும். வாயில, ஈ போறது கூடத் தெரியாம அதை இரசிச்சுக் கேப்போம்.

அதெல்லாம் போச்சுங்க அய்யா. நேத்துக்கூட ஜெய் கூடப் புலம்பிகிட்டு இருந்தேன். மானம்ங்ற மூனு சொல்லு வார்த்தைல சமுதாயத்தை கட்டுக்கோப்பா வெச்சு இருந்தாங்க நம்ம பெரியவங்க. குடுக்குறதை குடுக்கலனா மானம் போயிரும். குழந்தைய நல்லா வளர்க்கலைனா மானம் போயிரும். பொய் பேசினா மானம் போயிரும். ஒழுக்கம் தவறினா மானம் போயிரும். பொண்டாட்டி புருசனுக்கு மரியாதை தரலைனா, மானம் போயிரும் (அப்படியே, சந்துல சிந்து பாடிறலாம்!). வாக்கு தவறினா மானம் போயிரும். விருந்தாளிய கவனிக்காம விட்டா மானம் போயிரும். சரியான இடத்துல உதவி செய்யலைன்னா மானம் போயிரும். இப்படி மானம்ங்ற அந்த மூனு எழுத்து வார்த்தைல எல்லாமே கட்டுப்பட்டுச்சு. என்னைக்கு அதுல இருந்து வெளிய வந்தமோ, அப்ப போக ஆரம்பிச்சது எல்லாம். இனி திரும்ப வரவா போகுது?!

எதொ, அந்த காலத்தோட கடைசி அஞ்சு வருசத்த பாத்த பாக்கியம் நமக்கு கெடச்சது. அது போதும். அந்த நெனப்புலயே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். இந்த மாதிரி அப்ப அப்ப நாமளும் அதையெல்லாம் நெனச்சு சந்தோசப்பட்டுக்கலாம். என்ன சொல்லுறீங்க?

குல்லா - பார்சி - தொப்பி
ரிக்சா - ஜப்பானி- மூனு சக்கர வண்டி
பஜார் - பார்சி - கடைத்தெரு
அலமாரி - போர்ச்சுக்கீசு - சுவர்ப் பெட்டி
எக்கச்சக்கம் - தெலுகு - அளவுக்கதிகம்
நபர் - அரபு - ஆள்
பேனா - போர்ச்சுக்கீசு - எழுதுகோல்
இனாம் - உருது - இலவசம்
ஜாஸ்தி - உருது -- அதிகம்
துட்டு - டச்சு -- பணம்
பீரோ - பிரெஞ்சு -- கொள்கலப் பெட்டி
மேசை - போர்ச்சுக்கீசு - பரப்பு நாற்காலி
வராண்டா - போர்ச்சுக்கீசு - முற்றம்
பீங்கான் - போர்ச்சுக்கீசு - சீனக் களிமண்
வாரிசு -- அரபு -- வழி வந்தோர்


.................ஆத்துல விழுந்த எலை ஆத்தோட....


9/13/2008

அன்னைக்கும் இன்னைக்கும்......

நீள்நெடுங்கண்ணி - விசாலாட்சி
திருவரங்கம் -- ஸ்ரீரங்கம்
திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்
திருமறைக்காடு - வேதாரணியம்
திருமுதுகுன்றம், பழமலை - விருத்தாச்சலம்
அங்கயற்கண்ணி - மீனாட்சி
அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி
எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை
ஐயாநப்பர் - பஞ்சநதீசுவரர்
குடமூக்கு - கும்பகோணம்
வாள்நெடுங்கண்ணி - கட்சுநேத்ரி
செம்பொன்பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்
யாழினும் நன்மொழியாள் -- வீணாமதுரபாஷினி
தேன்மொழிப்பாவை - மதுரவசனி
பழமலைநாதர் - விருத்தகிரீச்சுரர்

---தேவநேயப்பாவாணர் நூலில் இருந்து

9/11/2008

"சத்தக்கூலி"ன்னா என்ன?

சின்ன வயசுல, நான் எங்க அம்மாவோட தாத்தா வீட்டு முன்னாடி தெல்லு (கல்லை கல்லால் அடிக்கும் ஒரு விதமான விளையாட்டு) வெளையாடிட்டு இருந்தேன். அப்ப, சுப்பிரமணின்னு ஒருத்தர் வந்து வாசல்ல நின்னுட்டு இருந்தார். அப்ப, கொள்ளுத் தாத்தா வீட்ல நடந்த உரையாடலின் சாராம்சம்,

"என்னடா சுப்பிரமணி? எங்கயும் போகலையா இன்னக்கி??"

"பெரிய தோட்டத்து கொத்துமல்லி ஏத்திட்டு, பொள்ளாச்சி போகணமுங்க..."

"சரி, சித்த இரு..."

"இந்தா, சுப்பிரமணி சத்தக்கூலி கேட்டு வந்து இருக்குறான். அவனுக்கு காப்பியும், நாப்பத்தஞ்சி ரூவாவும் கொண்டா...."

இங்க சத்தக்கூலின்னா என்ன? அது ஒண்ணும் இல்லீங்க; வாடகை வண்டிக் கூலிய, சத்தக் கூலின்னு கூப்புடுற வழக்கம் அந்தக் காலத்துல இருந்து இருக்கு. நண்பர் குடுகுடுப்பை மூலமா வண்டிச்சத்தம் (வண்டிக் கூலி)ன்னு சொல்லுற பழக்கம் இருக்குன்னும் தெரியுது. சத்தக்கூலின்னு, கேள்விப்பட்டது இல்லனனு மற்றொரு நண்பர் சொன்னாரு. ஆனா, சத்தக்கூலி சகிதமான்னு சொல்லக் கேள்விப்பட்டு இருக்குறேன்.

9/10/2008

தமிழா, இது நியாயமா?

அக்கௌன்டட், மல்டி ட்ரெக் தெரபி, ஹீல் செருப்பு, டிகிரி, சர்டிபிகேட், பியர், சிகரெட், கேரிங் அண்ட் சேரிங், இன்ட்டர், ஸாரி

நான் தமிழ் ஆர்வலன்ந்தான். அதே சமயத்துல தீவிரமான பற்றாளன்னு சொல்ல முடியாது. தமிழ் தமிழ்னு சொல்லி தீவிரமா இருக்குறவங்களைப் பாத்து எரிச்சல் அடைஞ்சது கூட உண்டு. கூடவே, தமிழ்ப் பற்றுள்ளவர்கள்னு நம்பி ஏமாந்ததும் உண்டு. எதுக்கு எடுத்தாலும் தமிழர்களை, தமிழ்நாடு அரசைக் கொற சொல்லிக் கத்தித் தீர்க்க வேண்டியதுதான் இவனுகளோட வேலைன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நெனச்சுட்டு இருந்தேன்.

யாரோ ஒரு நல்ல பதிவர், தமிழ்நாடு அரசு பள்ளிப் புத்தகங்களை தரவிறக்கம் செய்யும்படியா வலையகத்துல வெளியிட்டு இருக்காங்கன்னு சொல்லவே, ஒரு தமிழ் வேட்கைல, பதினொன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்துல, ஒரே ஒரு பாடத்தை தரவிறக்கம் செஞ்சி, படிச்ச பாடத்துல பார்த்த சொல்லுகதான் மேல நீங்க பாத்தது! நாங்க படிக்கும்போது, ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி, இப்படி எல்லாம் இல்லை! இல்லவே, இல்லை!!

beer, cigaretteக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? இல்ல, அதெல்லாம் தமிழ் படிக்குற மாணவர்களுக்கு, அவசியம் தெரிஞ்சு இருக்கணுமா??

தமிழுக்காகக் குரல் கொடுக்கறவங்களை தப்பா நெனச்ச நான், தலை குனியறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்?

"ஒறம்பு"ன்னா என்ன?

வணக்கம்! பழங்காலத்துல புழங்கின பல விசயங்களைப் பாத்துட்டு வர்றோம். இன்னைக்கு அந்த வரிசைல ஒறம்புன்னா என்ன?

இன்னைக்கும் நல்லா நினைவுல இருக்கு, நாம ரெண்டாவது, மூனாவது வகுப்பு படிக்கும் போதெல்லாம் கொங்கு மண்டலத்துல மாதம் மும்மாரி அல்லங்க, வாரம் மும்மாரி பெய்யும். வானம் லேசாக் கருக்கல் கட்டுனாப் போதும், மழைதான்! ஒரு நாள் அந்தியில, கண் முழிச்சுப் பாத்தா, ஊரே ஒரே பேச்சும் சத்தமுமா இருக்கு. நாம அப்ப, சலவநாய்க்கன்பட்டிப் புதூர் ங்கற ஊர்ல இருந்தோம். என்ன விசயம்ன்னா, ஊருக்குப் பக்கத்துல இருந்த கொசவம் பாளையாத்துக் குளத்தோட கரை ஒடஞ்சி ஊருக்குள்ள தண்ணி வந்துடிச்சு. ஆனா, இன்னைக்கு அந்தக் குளம் சுருங்கிக் குட்டையாகி, இப்ப அது சின்னக் குட்டையாகி நிக்கிது. உள்ளார பெரிய ஊரே ஆயிப்போச்சு. அப்ப, நெறஞ்சதுதான். அதுக்கப்புறம் வருசத்துக்கு வருசம் மழையும் கொறச்சல்.

அப்ப அந்த காலகட்டத்துல, ஊர் வழில சர்வ சாதாரணமா நடக்குற பழமை(உரையாடல்) யோட சாராம்சந்தான் இது:

"என்ன குப்புச்சாமி இந்தப் பக்கம்?"

"ஒன்னுமில்லீங்.. பருத்திக் காட்டுல ஒறம்பு எடுத்துகிச்சுங்... அதான் கொத்தி உட்டு, சால் புடிக்க மாரியப்பனைக் கூட்டிட்டுப் போக வந்தனுங்..."

"அட ஆமா, நம்ம மேவரத்துக் காட்டுலயும் ஒறம்பு எடுத்துகிச்சு"

இப்படி அடிக்கடி பேசக் கேள்விப்பட்டு இருக்கேன். விசயம், என்னுங்ன்னா, மழை அடிக்கடி பெய்யுறதால, மண்ணுல தண்ணி கோர்த்து செடி கொடிகளோட வேர் அழுகிப் போயிரும். அதுக்காக மம்முட்டியா(மண்வெட்டி)ல சின்னதா காட்டுக்குள்ள, அங்கங்க கொத்தியுட்டு வாய்க்காப் புடிச்சு தண்ணி வடிஞ்சு போற மாதற செஞ்சு விடுவாங்க. அதான், கொத்தி உட்டு சால் புடிக்கறது.


அப்படி காட்டுக்குள்ள தண்ணி சுரந்துக்குறதை "ஒறம்பு" ன்னு சொல்லுவாங்க... மறுபடியும் ஒறம்பு எடுத்துக்குற காட்சியும் காலமும் வருமா? காலந்தான் பதில் சொல்லோணும்....

9/09/2008

"ஆவுரோஞ்சிக் கல்"லுன்னா என்ன?

பழங்காலத்துல எல்லாம் குளிக்கும் போது சவக்காரம்(soap) எல்லாம் போட்டுக் குளிக்க மாட்டாங்களாம். கடலை மாவு, பயித்த மாவு இதெல்லாம்ந்தான் போட்டுக் குளிப்பாங்களாம். வீட்டுக்குப் பின்னாடி கெணறு இருக்கும், அதுல தண்ணி இறைச்சிக் குளிப்பாங்க. கெணறு இல்லாதவிங்க கொளம், குட்டை, ஓடை, ஆத்துலன்னு குளிப்பாங்க. அப்படித் தண்ணி வாக்குற எடத்துல எல்லாம் கமுகு (பாக்கு) மரம் இருக்குமாங்க. அதுல போயி முதுகு தேச்சுக் குளிப்பாங்களாம். ஒடம்பு தேய்க்க பீங்கங்காய் நாரு, தேங்காய் மஞ்சினு ஒரு சிலதைப் பாவிப்பாங்க.

அதே மாதிரி ஆடு மாடுன்னு கால்நடைங்க எல்லாத்துக்கும் இருக்குற, நீர் நிலைங்க, குளம், குட்டை, ஆத்துப் படுகை இங்கெல்லாம் பெரிய பெரிய கல்லுகளை போட்டும் நட்டும் வெச்சி இருப்பாங்களாம். தண்ணி குடிச்ச பின்னாடி, அதுகெல்லாம் இந்த மாதிரி இருக்குற கல்லுல போயி ஒடம்பை ஒரசி ஒரசி சொகம் கொள்ளுமாம். விவரமானதுக, ஒடம்ப ஒரசி ஒரசி குளிக்கவும் செய்யுமாம். இந்தக் கல்லுகளைத் தாங்க ஆவுரோஞ்சிக் கல்னு சொல்லுறது.

9/08/2008

பதினாறும் பெற்று பெருவாழ்வு - 3

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்திக் கேள்விப்பட்டு இருப்போம். அதுபத்திக் கவி காளமேகம் பாடினது, திருநள்ளாறு கோவில் வரைவுன்னு இரு வேறு பதிவுகள கடந்த காலங்கள்ல பதிஞ்சு இருந்தோம். இப்ப, இது மூனாவது பதிவு இது குறிச்சு.

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ
தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்
அகில மதில் நோயின்மை கல்வி தன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகுநல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே!

--அபிராமிப் பட்டர்.
  1. நோயற்ற வாழ்வு
  2. கல்வி
  3. தானியங்கள் (உணவுக்கு மூலாதாரம்)
  4. தனம்
  5. அழகு
  6. புகழ்
  7. பெருமை
  8. இளமை
  9. அறிவு
  10. சந்தானம் (குழந்தைச் செல்வம்)
  11. வலிமை
  12. துணிவு
  13. வெற்றி
  14. ஆயுள்
  15. ஆகுநல்லூழ் (நல்வாய்ப்பு/அதிர்ஷ்டம்)
  16. நுகர்ச்சி

9/07/2008

அரசூர் அருக்காணி கதை கேளு!

அரசூர் அப்படீன்னாலே எல்லார்த்துக்கும் ஒடனே மனசுல வர்றது சுத்தி இருக்குற கோயிலுகதான். கோயமுத்தூர்ல இருந்து அவனாசி போற எல்லா போக்குவரத்தும் அரசூர் வழியாத்தான் போகும். பரமசிவன் கோயிலு, ஊரு நடுப்புல மரியாத்தா கோயிலு, சிவன் கோயிலு, கெழக்கால தவுட்டு மாரியாத்தா கோயிலு, மேவறம் மாகாளியாத்தா கோயிலு, ஊருக்குத் தெக்கால இருக்குற தங்காத்தா கோயிலு இப்படி கோயிலுக, பந்த பாசம் நெறஞ்ச ஊர் அரசூர். முக்கியமா வெவசாயந்தான். கொஞ்சப் பேரு மேக்க, டவுன்ல தொழில் சம்பந்தமான சோலிக்குப் போவாங்க. அதுல நம்ப கொமாரசாமி அண்ணனும் ஒருத்தரு.

கொமாரசாமி அண்ணனுக்கு நாலு வருசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆயி ஒரு பொம்பளைப் புள்ளை. நங்கையா பேரு தெய்வானை. அல்லாரும் பெரிய பாப்பாத்தின்னு கூப்புடுவாங்க. அண்ணனோட மக பேரு மீனாட்சி, மூனு வயசு. அண்ணனுக்கு மேக்க, ஏரோப்ளேன் காட்டுக்கிட்ட ஒரு பருத்தி குடோன்ல வேலை. காலைல எந்திரிச்சு ஆறு மணிக்கெல்லாம் மொத வண்டிக்கே போயிரும். போய்ட்டு சாயங்காலம் இருட்ட இருட்டத்தான் வீட்டுக்கு வரும். வந்தா, சின்ன அம்மினி மீனாட்சி கூடத்தான் ஒரே வெளையாட்டு. அண்ணன் வேலைல இருந்து ஊட்டுக்கு வரும் போது வழக்கமா நடக்குற பழமைதான் இது,

"மாமா வாங்கோ! இந்தாங், காப்பித் தண்ணியக் குடிச்சுட்டு அப்படியே ஒடம்புக்கும் தண்ணி வாத்துட்டு வந்துருங்க!! தண்ணி காஞ்சி கெடக்குது, ஆறிப் போயிரும். அப்புறமா வந்து சின்ன அம்மினிகோட வெளையாடுவீங்களாமா..."

"சரி, இந்தா இந்தப் பைய உள்ள வெய். சின்ன அம்மினி, இங்க வாடா, வாடா! அப்பனுக்கு ஒரு முத்தங்குடு பாக்கலாம், கண்ணு இல்லே?!!"

இப்படி அண்ணன் காப்பித் தண்ணிய திண்ணைல இருந்து குடிச்சுட்டே சின்ன அம்மினி கூட வெளையாடும். அவகூட வெளையாடுறதுல வேலைக்குப் போய்ட்டு வந்த அலுப்பே தெரியாது அண்ணனுக்கு! நங்கையா வந்து, மறுக்கா மறுக்கா சத்தம் போட்டாத்தான் அண்ணன் தண்ணி வாக்கப் போகும். இப்படி சந்தோசமா போய்ட்டு இருந்த இந்த நேரத்துல நங்கையா மறுவடியும் முழுகாம இருக்கு. இப்ப ஏழாவது மாசம் நடக்குது.

நங்கையாக்கு அண்ணனை இங்க உட்டுப்போட்டு அவிங்க அம்மா ஊர் முத்துக்கவுண்ட்ன்புதூர் போறதுக்கு இஷ்டம் இல்ல. அதனால உள்ளூர்ல இருக்குற அருக்காணி அக்காவை, கூடாமாடா இருந்து யானபானம் கழுவுறதுக்கும் சின்ன அம்மினியப் பாத்துக்குறதுக்கும் வேலைக்கு சேத்துகிட்டாங்க.

அருக்காணி அக்காவுக்கு ஒரு பையன் இராசு, புருசன் கல்யாணம் ஆயி ஒரு வருசத்துலயே எங்கயோ பரதேசம் போய்ட்டான். இராசு பொறக்கும் போதே, அவிங்க அப்பன் வீட்டை விட்டு எங்கயோ போய்ட்டான். அப்ப இருந்து, அருக்காணி அக்கா ஊருக்குள்ள வீட்டு வேலை செஞ்சி இராசுவக் காப்பாத்திட்டு வருது. இப்ப இராசுவுக்கு ஏழு வயசு, ரெண்டாம் வகுப்பு படிக்குறான்.

இந்த நேரத்துலதான் நங்கையாவுக்கு திடீல்னு வவுத்து நோவு வந்துச்சுன்னு, சின்ன அம்மினிய அருக்காணி அக்காகிட்ட உட்டுப் போட்டு, அண்ணனும் பக்கத்து வீட்டு பொன்னுச்சாமி அண்ணனும் ப்ளஷரு காருல நங்கையாளை சூலூர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. அங்கதான் நடக்கக் கூடாதது நடந்து போச்சு. எப்பிடியெல்லாம் அண்ணனும் நங்கையாவும் ஒன்னுமொன்னுமா இருந்து இருப்பாங்க. எந்த ஊரு சனம் கண்ணு பட்டுச்சோ, பாவி மனுசன் தலைல கல்லப் போட்டுட்டு அவ போயிச் சேந்துட்டா மவராசி.

புள்ளத்தாச்சியா இருந்து, உசுரு விட்ட ஒடம்பு தாங்காதுன்னு வாற வழிலயே நொய்யல் ஆத்து சுடுகாட்டுல எரிச்சுட்டு வந்துட்டாங்க. ஒரம்பறைங்க ஊர்சனம்னு, எல்லாரும் சோனு அழுவாச்சி. இப்படியே பன்னெண்டு நாளும் போச்சு. அப்புறம் எல்லாரும் அவிங்க அவிங்க சோலியப் பாக்கப் போய்ட்டாங்க. சின்ன அம்மினியோ அருக்காணி அக்காவை விட்டே கீழ எறங்க மாட்டீங்கிது. அண்ணனுக்கும் வேலைக்குப் போகணும். என்ன பண்றது? கடைசில அருக்காணி அக்காவை, எப்பவும் போல வீட்டுல சோத்த ஆக்கி வெச்சிட்டு சின்ன அம்மினியயும் பாத்துக்க சொல்லிப் போட்டு, அண்ணன் வேலைக்குப் போக ஆரம்பிச்சுருச்சு.

நாளும் கெழமையும் நிக்குமா? அது ஓடிட்டேதான இருக்கும். இப்படியே ஆறு மாசம் ஓடிப் போச்சு. நல்ல தண்ணிக் கெணத்துல தண்ணி சேந்துறப்ப, ரேசன் கடைல சீமை எண்ணை வாங்குறதுக்கு நிக்குற எடத்துலன்னு ஊருக்குள்ள இப்ப ரெண்டு பேரு சேந்தாலே பேசுறது, கொமாரசாமி அருக்காணிய வெச்சுகிட்டு இருக்கான்னுதான். அண்ணனுக்கு வெள்ளை மனசு, பாவம்! வேலைக்குப் போகும், வரும். நங்கையா போன நாள்ல இருந்து அண்ணனுக்கு ஒரு நாளும் நல்ல தூக்கங் கெடையாது. எப்பவும் நங்கையா நெனப்பு தான். அருக்காணி அக்காவுக்கோ ஊருக்குள்ள இப்படிப் பேசுறது அல்லாந் தெரியும். இருந்தாலும், அதச் சொல்லி கொமாரசாமி மனச எதுக்கு நோவடிக்கனும்ங்றது அருக்காணி அக்காவுக்கு.

அண்ணனை விட்டுப் போட்டு நங்கையானால இருக்க முடியலையோ, என்ன கெரகமோ, அந்த சம்பவமும் நடந்து போச்சு. அண்ணன் வேலைல இருந்து ஊட்டுக்கு வரும் போது, நீலம்பூர் பெரிய பாலத்துல அண்ணன் வந்த பஸ்சும் எதுக்க வந்த லாரியும் மோதி அண்ணன் அந்தக் கெடைலயே போய்ச் சேந்துருச்சு. நங்கையா போய் எட்டு மாசந்தான் ஆவுது. என்ன சங்கடம் பாருங்க. சின்ன அம்மினி மீனாட்சிக்கு இன்னும் நாலு வயசு கூட முடியலை. அவளுக்கு தன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு, ஒன்னும் தெரியாது பாவம்.

அண்ணன் வாங்கிப் போட்ட மேட்டாங்காடு ரெண்டு ஏக்கரா இப்ப அண்ணனோட பங்காளி முருகேசு எடுத்துகிச்சு. ஆனா முருகேசுனால அதை விக்க முடியாது. வெள்ளாமை மட்டும் பண்ணிக்கிடலாம். அருக்காணி அக்கா, சின்ன அம்மினியப் பாத்துகிட்டு கொமாரசாமி அண்ணன் வீட்டிலயே குடி இருந்துக்கலாம்னு சொல்லிப் போட்டு அல்லாரும் அவிங்க அவிங்க பாடு பழமய பாக்கப் போய்ட்டாங்க.

அருக்காணி அக்காவுக்கு, மாசம் வந்துட்டு இருந்த முந்நூறு ரூவா சம்பளமும் இல்ல இப்ப. பாவம் அருக்காணி அக்கா! சின்ன அம்மினிக்கோ அருக்காணி அக்காதான் அம்மா, எல்லாமே! ஊருக்குள்ள ரெண்டு வீட்டு வேலை, மூணு வீட்டு வேலைன்னு பாத்து இராசுவையும் மீனாட்சியையும் காப்பாத்திட்டு வருது.

அருக்காணி அக்கா கூலிக்கு வேலை பாக்குறதை விட முடியாதவங்களுக்கு பண்ற ஒத்தாசை நொம்ப சாஸ்த்தி ஆயிருச்சு. இப்படியே வருசங்களும் போச்சு. இராசுக்கு இப்ப பெரியதோட்டத்து ஜின்னிங் பேக்டரில வேலை. மீனாட்சி வயசுக்கு வந்து மூணு மாசந்தான் ஆவுது. அருக்காணி அக்கா, தன்னோட மவனை விட, மீனாட்சியத்தான் அப்பிடிச் செல்லமா வளர்த்துச்சு. பாசமும் நொம்ப அதிகம் அவமேல. ஆனாப் பாவம், என்னமோ காய்ச்சல்னு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு மாசம் படுத்து எந்திரிச்சதுல இருந்து அவளுக்கு ஒடம்புக்கு எதோ ஒன்னு அடிக்கடி வந்து கிட்டே இருக்குது.

சின்ன அம்மினி வயசுக்கு வந்துட்டா. யாராவது ஒரு நல்ல பையனுக்கு கட்டிக் குடுத்துட்டா அருக்காணி அக்கா கடமை முடியும். அருக்காணி அக்காவும் சின்ன அம்மினியோட ஒன்னுவிட்ட அத்தை காங்கயம் பாளையத்துல இருக்குது. அவங்ககிட்டப் பேசி, அவுக பையனுக்கே கண்ணாலம் பண்ண முடிவு செய்யுது. அத்தை பையனுக்கு பெருசா சொத்துபத்து இல்ல. சரி, அவுகளுக்கு சின்ன அம்மினியோட ரெண்டு ஏக்கரா காடு வரும், அத வெச்சிட்டு எப்படியோ முன்னேறலாம். அதனால ரெண்டு பக்கமும் இந்த கண்ணாலம் நிச்சயம் ஆனதுல நொம்ப சந்தோசம். ஆனா, அருக்காணி அக்கா மவன் இராசு மட்டும் மொகங்குடுத்துப் பேச மாட்டேங்குறான். ரெண்டு மூணு நாளா வீட்டுக்கும் சரியா வரலை.

கண்ணாலத்துக்கு ஒரு மாசந்தான் இருக்கு. ஊருக்குள்ள போன அருக்காணி அக்கா வீட்டுக்கு வந்து பாத்தா, இராசுவையும் காணோம். சின்ன அம்மினி மீனாட்சியையும் காணோம். ஒரு நாள் போச்சு. ரெண்டு நாள் போச்சு. ஊருக்குள்ள விசயம் தெரிய ஆரம்பிச்சதுதான் தாமுசம். அப்படிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க, "ரெண்டு ஏக்கர் ஒரு கோடிக்குப் போகும் இப்ப, அருக்காணி நல்லா திட்டம் போட்டு காரியத்தை முடிச்சுட்டா"ன்னு.


அருக்காணி அக்காவுக்கா தான்பட்ட பாடு எல்லாம் நாசமாப் போச்சேன்னு கவலை. கட்டுனவனும் மானத்தை வாங்குனான். பொறந்தவனும் கேவலத்தை உண்டு பண்ணிட்டான்னு அழுவுது பாவம்.

தனியாக் கெடந்து கொஞ்சம் கொஞ்சமா அருக்காணி அக்காவுக்கு உசுரு போய்ட்டு இருக்கு. திடீல்னு அல்லாரும் புள்ளையார் கோயலுக்கு ஓடுறாங்க. பக்கத்து வீட்டு சிவகாமி வந்து சொல்லுது அருக்காணி அக்காகிட்ட,


"அக்கா! இராசுவும் சின்ன அம்மினியும் கோயல்ல இருக்காங்கலாம். இப்பத்தான் காருல வந்து இறங்கி இருக்காங்கலாமாக்கா!!"

"நாசமாப் போனவன் என்ன காரியம் பண்ணிட்டு, இப்ப ஊருக்குள்ள வந்து இருக்குறான். அப்பிடியே திரும்பிப் போகச் சொல்லு!"

"சரி வா, போய்ப் பாக்கலாம்"

அருக்காணி அக்கா சிவகாமிகோடச் சேந்து கோயலுக்குப் போகுது. மண்ண எடுத்து தூத்திகிட்டு சாபம் குடுத்துட்டே போகுது. அங்க இராசு, சின்ன அம்மினி நெத்தியில எதொ வெச்சி விடுறான். அதப்பாத்த அருக்காணி அக்கா,

"டேய், என்ற வயித்துல பொறந்துட்டு என்ன காரியம் பண்ணினே? நீ, வெளங்குவியாடா??"

"என்ன அம்மா சொல்லுறே? நீதான சொன்ன?! நம்மகிட்ட சீரு குடுக்க பணமும் இல்ல, பண்ட பாத்திரங்களும் இல்லன்னு. மேக்க கூட்டிட்டுப் போயி வைத்தியம் பாத்தப்ப, சின்ன அம்மினிக்கு சிறுநீரகம் யாராவது தானம் குடுத்தா நல்லதுன்னு வைத்தியரு சொன்ன ஞாபகம் எனக்கு வந்துச்சு. அதான், என்னோடதுல ஒன்னு சின்ன அம்மினிக்குக் குடுத்து கூட்டியாறன். மாப்பிள்ளையும் கூட இருந்து அல்லா ஒத்தாசையும் பண்ணுனாரு அம்மா. இது தப்பா?"

கூடியிருந்த ஊருசனம் அப்பிடியே தலையக் கீழ போட்டாங்க. தப்பாப் பேசினவங்க தலை தொங்கிப் போச்சு. அருக்காணி அக்கா அப்பிடியே மவன் காலுல விழுந்து, அந்த பழனிமலை முருகனே எனக்கு மகனா வந்து பொறந்து இருக்குறான்னு சந்தோசத்துல கூவிக் கூவி அழுவுது, அவனையும் சின்ன அம்மினியயும் கட்டித் தழுவிகிச்சு அருக்காணி அக்கா.

சின்ன அம்மினி கண்ணாலம் முடிஞ்சு சித்த நாள்லயே, இராசுவுக்கும் கண்ணாலம் ஆச்சு. ரெண்டு பேருக்கும் இப்ப ஆளுக்கொரு பொம்பளைப் புள்ளை. ரெண்டு பேருமே, அவிங்க அவிங்க மகளுக்கு அவிங்க அம்மா பேருதான்னு, பிடிவாதமா "அருக்காணி"ன்னே பேரு வச்சாங்க.

வழக்கம் போல, அருக்காணி அக்கா வடக்கால ஊர்ல அம்மை போட்டு இருக்குற வள்ளியாத்தாவுக்கு, யானபானங் கழுவிக் குடுத்து ஊடு கூட்டி எடுக்கப் போயிருக்கு. இங்க பின்னாடி இருக்குற வீட்டுப் பொடக்காளீல மாமன் மவ அருக்காணியும், அத்தை மவ அருக்காணியும் ஊருக்குள்ள போயி யானபானங் கழுவி ஒத்தாசை பண்ணுற வெளையாட்டு வெளையாடிட்டு இருக்காங்க......

9/06/2008

காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்

வணக்கம்! கடந்த ரெண்டு நாளா வாசகர்களுக்கு பழங்காலத்து அளவு முறைகள் சொன்னோம். இப்ப அந்த அளவு முறைகளை வெச்சு எப்படி கணக்கு போட்டு இருப்பாங்கன்னு பாக்கப் போறோம். அதான் நீங்களே அந்த கணக்கைப் போட்டு விடைய சொல்லப் போறீங்களே?!

புதுசா வந்து இந்த பதிவைப் படிக்குறவங்க, முந்தின பதிவைப் படிச்சுட்டு வந்து கணக்குப் போட்டியில கலந்துக்குங்க.

கணக்கு -1:

காலே அரைக்கால் காசுக்கு
நாலே அரைக்கால் வாழைக்காய்
காசுக்கு எத்தனை வாழைக்காய்?

கணக்கு-2:

ஒரு தென்னந்தோப்புல ஏழு வேலிகள் இருந்துச்சு. ஒவ்வொரு வேலிக்கும் ஒருத்தன்னு மொத்தம் ஏழு காவல்காரங்க. அப்ப, அந்தத் தென்னந்தோப்புல ஒரு திருடன் திருடப் போறான். இந்த காவக்காரங்களும் திருடங்க. அவங்க எல்லாருமே ஒன்னு சொன்னா மாதிரி திருடங்கட்ட சொல்லுறாங்க, "நீ எடுத்துட்டு வர்ற தேங்காயில பாதி எனக்குத் தரணும்"னு. அவனும் ஒத்துக்கறான். அப்படி அவன் ஒவ்வொருத்தருக்கும் இருக்குறதுல பாதியா ஒவ்வொரு வேலியிலயும் குடுத்துட்டு வெளில வரும்போது, கையில ஒரே ஒரு தேங்காய் இருக்குது. அப்ப, அவன் மொத்தமாப் பறிச்ச தேங்காய்க எவ்வளவு?


குறிப்பு: உங்க விடைய பின்னூட்டத்துல பதியுங்க.

மவனே, இது எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. இப்பத்தான் நண்பர் அனுப்புனாரு. காலத்துக்கு ஏத்த, நெஞ்சைத் தொடுற பாட்டு:

தன்னை வியந்து தருக்கலும்
தாழ்வின்றிக் கொண்ணே வெகுளி பெருக்கலும்
முன்னைப் பழம்பொருள் வெஃகும் சிறுமையும்
தன்னை அழிக்கும் படை!


பொருளுரை: பழமை என்ற பெயரில் முன்னோர்களது உழைப்பையும் அதன் பயனான அறிவையும் புறக்கணிப்பது, நுனிக்கிளையில் அமர்ந்து அடி மரத்தை வெட்டும் மூடத்தனமான செயல்.

கெராமத்துல பெரியவங்க சொல்லுவாங்க,
"சாரோலையப் பாத்து குருத்தோலை சிரிக்கப்படாது"ன்னு.

"இம்மி"ன்னா என்ன?

இம்மி பிசகாமன்னு சொல்லக் கேட்டு இருப்பீங்க. அதுல இம்மின்னா என்ன? தெரிஞ்சுக்க ஆவலா இருப்பீங்க...... அப்படியானா, மேல படீங்க!

இன்னைய கால கட்டத்துல, உலக அளவுல 6000 மொழிகள் பேசுறாங்கன்னும் அதுல 3000த்துக்கு வரி அடையாளங்களும் இருக்குறதா சொல்லுறாங்க. அந்த 3000த்துல இலக்கணம், இலக்கியம், பண்பாடு, தோனின காலம் இதெல்லாத்தையும் வெச்சு ஒரு ஆறு மொழிகள், ஆதி மொழிகள்ன்னும் சொல்லுறாங்க. அதுக என்ன என்ன? சீனம், இலத்தீனம், கிரேக்கம், ஹிப்ரூ, தமிழ், சமசுகிருதம்.

இப்பேர்ப்பட்ட ஆதி மொழியான தமிழ்ல 3000 ஆண்டுகளுக்கு முன்னாடியே அறிவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்து இருக்குது. அதுக்கு கீழ குடுத்து இருக்குற பின்னங்களே சாட்சி.

பின்னங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

திங்கட் பெயர்கள்

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் அறிஞர்கள்,புலவர்கள் தமிழ்க்கடல் மறையடிகள் தலைமையில் கூடினர். நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழராண்டு எனக்கொளவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் முடிவு செய்தனர். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் சுறவம் [தை] இறுதி மாதம் சிலை [மார்கழி] என்றும், புத்தாண்டு துவக்கம் சுறவம்[தை] முதல் நாளே என்றும் முடிவெடுத்தனர்.

வழக்கில் உள்ளவைதமிழ்ப்பெயர்கள்காலம்
தைசுறவம்முன் பனி
மாசிகும்பம்பின் பனி
பங்குனிமீனம்பின் பனி
சித்திரைமேழம்இளவேனில்
வைகாசிவிடைஇளவேனில்
ஆனிஆடவைமுதுவேனில்
ஆடிகடகம்முதுவேனில்
ஆவணிமடங்கல்கார்
புரட்டாசிகன்னிகார்
ஐப்பசிதுலைகூதிர்
கார்த்திகைநளிகூதிர்
மார்கழிசிலைமுன் பனி

தமிழ்க் கிழமைகள்

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
அறிவன்
வியாழன்
வெள்ளி
காரி

இது சம்பந்தமான முந்தைய பதிவுகளையும் படிச்சு பாருங்க. அந்த பதிவுகளுக்கான தொடுப்புக கீழ:

"மாமாங்கம்"னா என்ன?

கூப்பிடு தூரம் என்றால் என்ன?

முக்கோடி என்றால் என்ன?

நன்றி:

நம்ம பதிவுகளை தவறாமப் படிச்சு, பொருள் பிழையானாலும் எழுத்துப் பிழையானாலும் சரியாக் கண்டுபிடிச்சு திருத்துற சக பதிவர்கள் அன்பர் மகேசு, அன்பர் மதிவதனன் மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பழங்காலத்துத் தமிழ் முறைகள் பற்றிய விபரங்களை தேவநேயப் பாவாணரின் நூல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை நமக்களித்த சக பதிவர் தமிழ்நம்பி அவர்களுக்கும் நன்றி!

9/05/2008

"மாமாங்கம்"னா என்ன?

அளவைகள் பத்தி ரெண்டு பதிவுகள் போட்டோம். ஒன்னு, கூப்பிடு தூரம் என்றால் என்ன? அடுத்தது முக்கோடி என்றால் என்ன? அதோட தொடர்ச்சியா இப்ப, மாமாங்கம்னா என்ன? கொஞ்ச நாளா கெராமத்துக் கதைக எழுத ஆரம்பிச்சு இருக்கோம் பாருங்க. அதுகள்ல, பேச்சு வாக்குல மாமாங்கம்னு வரும். கண நேரத்துலன்னு வரும். அப்ப, இதுகளைப் பத்தின விபரம் இருந்தா நல்லாயிருக்கும். அதான்ங்க! சரி, இனி விபரத்தை பாப்பமா?!

நீட்டல் அளவை

காதம் - 10 மைல்
ஓசனை - 4 காதம்
கல் - 1 மைல் (1609 மீட்டர்)
முழம் - முழங்கை முதல் நடுவிரல் நுனி வரை
சாண் - கட்டை விரல் நுனி முதல் சிறு விரல் நுனி வரை
ஒட்டைசாண் - கட்டை மற்றும் ஆள்காட்டி விரலுக்கும் உள்ள இடைவெளி
சாட்கோல் - சாண் அளவுள்ள கோல்
அங்குட்டம்- கட்டை விரல் நீளம்
அடி- 12 அங்குட்டம்
காசாகிரம் - மயிர் நுனியளவு
ஆள் - மனிதனுடைய உயரம்
சேன் - உயரம் / நீளம்
உவை - பார்க்கும் தொலைவு

எடுத்தல்

4 கஃசு = 1 தொடி அல்லது பலம்
8 பலம் = 1 சேர்
5 சேர் = 1 வீசை
5 வீசை = 1 துலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 கண்டி

பொன்னளவை

5 கடுகு = 1 சீரகம்
5 சீரகம் = 1 நெல்
4 நெல் = 1 குன்றிமணி
2 குன்றி மணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பணவெடை
10 பணவெடை = 1 கழஞ்சு

முகத்தல்

260 நெல் = 1 செவிடு அல்லது கண்டு
2 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி அல்லதி படி
8 நாழி = 1 குறுணி அல்லது மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
3 தூணி = 1 கலம்
21 மரக்கால் = 1 கோட்டை

18 மரக்கால் = 1 புட்டி
4 (சிறு)படி = 1 வள்ளம்
40 வள்ளம் = 1 கண்டகம்
6 மரக்கால் = மூட்டை ( ஐயத்திற்கு உட்பட்டது)
64 மூட்டை = 1 கரிசை
5 மரக்கால் = 1 பறை
80 பறை = கரிசை

கால அளவு

கற்பம் (கல்பம்) - பிரம்மாவின் ஒரு நாள் - 4,32,00,00,000 வருஷம்
பதுமகற்பம் - பிரம்மாவின் வாழ்க்கையின் முதல் பகுதி
உரி - அரை நாழி
கன்னல் (நாழிகை) - 24 நிமிடங்கள்
கணம் - நொடிபோழுது, கண் இமைக்கும் நேரம்
படலம் - செயல் நடக்கும் நேரம்
யாமம் - 3 மணி நேரம் - 7 1/2 நாழிகை
மண்டலம் - 40/41/45 நாள்கள்
மாமாங்கம் - 12 வருடங்கள்

வட்டம் = 5 மாமாங்கம்


இது போக, இனியும் நிறைய அளவு முறைகள் இருந்து இருக்கு. அதுகளை வர்ற காலங்கள்ல பாப்போம்.

கனவில் கவி காளமேகம் - 5

வணக்கம்! வழக்கம் போல கவி காளமேகம் இன்னைக்கும் வந்து நலம் விசாரிச்சுட்டு, அவரோட வேலையக் காமிக்க ஆரம்பிச்சாரு. நாம,

"அப்பிச்சி! சித்த இருங்க. நீங்க வேறெதுவும் இன்னைக்கு கேக்கவும் வேணாம், சொல்லவும் வேணாம்!". அவுரு,

"என்னடா பேராண்டி, என்ன ஆச்சு? உனக்கேதும் பிரச்சினையா?"

"அட, அதெல்லாம் ஒண்ணும் இல்ல அப்பிச்சி. அன்னைக்கு நீங்க சொன்னதுல பாதி மறந்து போச்சு. அதச் சொல்லுங்க மறுக்கா இன்னொரு தடவை."

"அட, அதுக்கேன் இப்ப அலுத்துக்கற, சொல்லுறேன் கேட்டுக்க"

இப்ப அவரு சொல்லி, நாம போன பதிவுல பதியாம விட்ட ஓரெழுத்து சொல்லுகளை கீழ குடுத்து இருக்கறன் பாருங்............

நா, நீ, நே, நை, நோ

நா: நாக்கு, தீயின் சுவாலை
நீ: நீ
நை: வருந்து, இகழ்ச்சி
நோ: நோவு, துன்பம், வலி

கா, கூ, கை, கோ

கா :சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்
கூ: பூமி, ஏவல், கூழ், கூவு
கை: உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்
கோ: வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

வா, வீ, வை, வெ

வா: வருகை
வீ: மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு
வை: வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்
வெ: வவ்வுதல்

சா, சீ, சே, சோ

சா: சாதல், சோர்தல், பேய், மரணம்
சீ: வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை
சே: சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்
சோ: மதில், அரண்

யா

யா: ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்

நொ

நொ: வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

து

து: உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்



(......கனவுல இன்னும் வருவார்......)

9/04/2008

"முக்கோடி", "யுகம்"ன்னா என்ன?

கெராமங்கள்ல முப்பத்து முக்கோடி, யுகம், அண்டம்னு எல்லாம் ஒரு அளவுகோலா பேச்சு வழக்குல சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீங்க. அதுகளுக்கு என்ன அர்த்தம்? கொஞ்ச நாளைக்கு முன்னாடி "கூப்பிடு தூரம் என்றால் என்ன?"ன்னு ஒரு பதிவைப் போட்டோம். படிக்கலைன்னா, அதப் படிச்சுட்டு இதைப் படீங்கன்னு கேட்டுக்கறேன்.

இது நமக்கு நூறாவது பதிவுங்க! அந்த நூறாவது பதிவுல முக்கோடி பத்தின விபரத்தை பதிய வெக்கிறதுல பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ளுறேனுங்க. சரி, இனி விபரத்தை பாப்பமா!

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம்(இலட்சம்) -hundred thousand

1000000 = பத்து இலட்சம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one quatrillion


10000000000000000 = வெல்லம் -ten quatrillion

100000000000000000 = அன்னியம் -hundred quatrillion

1000000000000000000 = அர்த்தம் - quintillion

10000000000000000000 = பரார்த்தம் — ten quintillion

100000000000000000000 = பூரியம் -hundred quintillion

1000000000000000000000 = முக்கோடி - one sextillion

10000000000000000000000 = யுகம் -ten sextillion

100000000000000000000000= பத்து யுகம் -hundred sextillion

1000000000000000000000000= நூறு யுகம்- septillion

10000000000000000000000000= ஆயிரம் யுகம்- ten septillion

100000000000000000000000000= மகாயுகம்- hundred septillion


சரி, இதுக்கு மேலயும் நாம ஒன்னுக்கு ஒன்னுங்ற அடிப்படைல விபரம் தந்தா வாசிக்றவங்க அடிக்க வந்துடுவாங்க. ஆனாலும், இரத்தின சுருக்கமா எனக்குத் தெரிஞ்சதை கீழ குடுத்து இருக்கேன். ஆங்கிலமுறை(U.S) மொதல்ல. ஆங்கில முறைல, அமெரிக்காவுல ஒரு மாதிரி; மத்த நாடுகள்ல ஒரு மாதிரி. இங்க நாம குடுத்து இருக்குறது, அமெரிக்க ஆங்கில முறை.

..., octillion, nonillion, decillion, undecillion, duodecillion, tredecillion, quattuordecillion, quindecillion, sexdecillion, septendecillion, octodecillion, novemdecillion, vigintillion and centillion.

சரி, அதுக்கு ஈடா நம்ம பெரியவங்க வெச்ச அலகு என்ன? ரொம்ப சுலபமுங்க....

....மகாயுகம், நூறு மகாயுகம், ஆயிரம் மகாயுகம், இலட்ச மகாயுகம், கோடி மகாயுகம், அண்டம், நூறு அண்டம், ஆயிரம் அண்டம், ..., ..., ... பிரபஞ்சம்.

இப்ப நாம குடுக்கப் போறது, அமெரிக்க ஆங்கில முறைக்கும் வேறநாட்டு ஆங்கில முறைக்கும் உண்டான ஒரு ஒப்பீடு:

Number of zerosU.S. & scientific communityOther countries
3thousandthousand
6millionmillion
9billion1000 million (1 milliard)
12trillionbillion
15quadrillion1000 billion
18quintilliontrillion
21sextillion1000 trillion
24septillionquadrillion
27octillion1000 quadrillion
30nonillionquintillion
33decillion1000 quintillion
36undecillionsextillion
39duodecillion1000 sextillion
42tredecillionseptillion
45quattuordecillion1000 septillion
48quindecillionoctillion
51sexdecillion1000 octillion
54septendecillionnonillion
57octodecillion1000 nonillion
60novemdecilliondecillion
63vigintillion1000 decillion
66 - 120undecillion - vigintillion
303centillion
600centillion

9/03/2008

கனவில் கவி காளமேகம் - 4

வணக்கம்! நாம எதிர்பார்த்தது மாதிரியே கவி காளமேகம் இன்னைக்கும் கனவுல வந்து, என்னடா பேரான்டி நல்ல சுகமானு விசாரிச்சுட்டு, ஓரெழுத்துச் சொற்கள எல்லாம் சொல்லுடான்னாரு. "போங்க தாத்தா, உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. நீங்களே சொல்லுங்க!"ன்னு நாஞ்சொல்ல அவரு சொல்ல ஆரம்பிச்சாரு.... சொல்லிகிட்டே இருக்காரு... ஆனா பாருங்க, எனக்கு பாதியிலயே கனவு கலைஞ்சு போச்சு. எனக்கு ஞாபகம் இருக்குறத கீழ குடுத்து இருக்குறேன். மிச்சத்தை அவரு அடுத்த தடவை வரும் போது கேட்டு சொல்லுறேன்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
ஆ -பசு, எருது, ஆச்சா மரம்
ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
ஊ -இறைச்சி, உணவு, விகுதி
ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு
ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்
ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

மா, மீ, மூ, மே, மை, மோ
மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
மூ -மூப்பு (முதுமை), மூன்று
மே -மேல், மேன்மை
மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்
மோ -முகர்தல்


தா, தீ, தூ, தே, தை
தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை
தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்
தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு
தே -கடவுள்
தை -தமிழ் மாதம், தையல், திங்கள்


பா, பூ, பே, பை, போ
பா -அழகு, பாட்டு, நிழல்
பூ -மலர், சூதகம்
பே -அச்சம், நுரை, வேகம்
பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை
போ -செல்

(......கனவுல இன்னும் வருவார்......)

9/02/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 8

ஓரெழுத்து நடையில் ஓரங்க நாடகம். . . . . . . . . . .

"மீ"

"வா"

"பை"

"வை"

"ஊ"

"து"

"சீ"


"போ"

வணக்கம்! நாம கவி காளமேகத்தின் தாக்கங்ற தலைப்புல, சித்ரகவி வகைகள்ல பல தரப்பட்ட கவிதைகள் எழுதுற முயற்சி தொடர்ந்துட்டு இருக்கு. நீங்க இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிக்கலைன்னா, அதுகளை மொதல்ல படிச்சுட்டு வந்தா மேலும் சௌகரியமா இருக்குங்றது, எம்மோட தாழ்மையான எண்ணம். தினமும் பாட்டுகளையே பாத்துட்டு வந்தா சலிப்பா இருக்கும்னு இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா, ஓரெழுத்து ஓரங்கநாடகம்.

ஆமாங்க. அந்தக் காலத்துல எல்லாம், தமிழ்ப் புலவருங்க சத்திரம், கோயில், அரசவை இந்த மாதிரி பொது இடங்கள்ள ஒன்னு கூடும் போது, அவங்களுக்குள்ள பலவிதமான இலக்கியப் போட்டி வெச்சி, போட்டி போடுவாங்களாம். அந்த வகைல இதுவும் ஒரு வகை. ஒருத்தர் ஓரெழுத்து நாடகம், ஓரெழுத்துப் பாட்டு இப்படி சொல்ல, அடுத்தவர் அதுக்கு உண்டான அர்த்தத்தை சொல்லணும். சுவராசியமா இருக்குமாம். அது மட்டும் இல்லைங்க, கூடி இருக்குற மத்தவங்களும் ஆர்வமா கலந்துக்குற அளவுக்கு இலக்கிய ஞானம் இருந்ததுன்னும் சொல்லுறாங்க.

சங்ககாலத்துல, தமிழ் மொழி பேசுறவங்க எண்ணிக்கை வெறும் பதினஞ்சுல இருந்து இருவது இலட்சம்னு ஒரு யூகததுல சொல்லுறாங்க. அப்பவே செந்தமிழைப் பின்னு பின்னுனு பின்னி இருக்குறாங்க பாருங்க. சரிங்க, இப்ப மேல சொன்ன ஓரங்க நாடகத்தோட உரையப் பாக்கலாங்க:

மீ: மேன்மையானவரே, உம்மைக் காண ஓடோடி வந்தேன். (மீ: மேன்மை)

வா: வாருங்கள், உம்மைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.(வா: வாருங்கள்)

பை: இதோ "பை". இதில் உங்களுக்குப் பொன்னும் பொருளும் அரசர் கொடுத்து அனுப்பி உள்ளார்.

வை: அங்கு வையுங்கள். மிகவும் உவகை கொள்கிறேன்.

ஊ: பசியாற, ஊண் உளதா? (ஊ: ஊண், உணவு)

து: உண்ணுங்கள். உமக்கு உபசரிப்பது எம் பாக்கியம்.(து: உண்டல்)

சீ: நித்திரை வருகிறது! உண்டதால் நித்திரை கொள்ள இருப்பிடம் செல்ல வேண்டும். (சீ: நித்திரை)

போ: தாராளமாகப் போகலாம். உங்கள் சித்தம், என் சித்தம்.

ஒரு எழுத்துல இவ்வளவு அர்த்தம் இருக்கானு யோசிக்கக் கூடாது. அங்க அசைவு(body language)களோட, அந்த ஒரு எழுத்துக்கான பொருளையும் சேத்துப் பாக்கணும். அப்படிப் பாக்குறப்ப, இந்த ஓரங்க நாடகம் முழுமையா இருக்கும், குடுத்து இருக்குற உரைநடையும் பொருந்தும்.

(.........இன்னும் வரும்........)

9/01/2008

கனவில் கவி காளமேகம் - 3

வணக்கம்! ரெண்டு மூணு நாளா நம்ம கனவுல வராத கவி காளமேகம், இன்னைக்கு வந்தாருங்க. வந்தவரு, வழக்கம் போல நலம் விசாரிச்சுட்டு பேரனுக்கு ஆப்பு வெக்க ஆரம்பிச்சுட்டாரு. அதை அப்படியே உங்களுக்குக் கீழ குடுத்து இருக்குறேன்.

"பேராண்டி, உணர்வும் உணர்ச்சியும் ஒன்னா, வேற வேறயா?"

"எனக்கு இது தெரியுமே? வேற வேற!"

"அப்படியா? விபரமா சொல்லு பாப்போம்"

"உணர்வு வந்து உடல் ரீதியா நடக்குறது. உணர்ச்சிங்கிறது மனசு சம்பந்தப்பட்டது. சரியா?"

"சரியாச் சொன்னடா பேராண்டி! உணர்வுகள்னா என்ன, என்ன?"

"வாய், கண், மூக்கு, காது, உடல் வழியா ஏற்பாடுற உணர்வுகள்தான்!"

"அப்ப உணர்ச்சிகள்?"

"நீங்களே சொல்லுங்க"

"நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகைன்னு ஆக மொத்தம் எட்டு"

"இளிவரல், மருட்கை இந்த ரெண்டும் வெளங்கலை!"

"அப்படிக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ! இளிவரல்னா வருத்தம். மருட்கைனா பெருமை!! இப்ப புரியுதா?"

"புரியுது தாத்தா!"

"இப்படி, மனசுல ஏற்பாடுற உணர்ச்சிகளை உடம்புல காமிக்கறதை மெய்ப்பாடுன்னும் சொல்லுவாங்க. "

"நீங்க, எட்டுதான் சொன்னீங்க. அப்ப நவரசம்னு சொல்லுறாங்குளே அது?"

"அடே, நாங்க இந்த எட்டுல ஒன்னு ஒன்னுக்கும் நாலு உட்பிரிவுன்னு மொத்தம் முப்பத்து ரெண்டு வகை உணர்ச்சிகளை எங்க காலத்துல வெச்சி இருந்தோம். அது பின்னாடி ஒன்பது வகையா சுருக்கி இருக்காங்க. அந்த ஒன்பதுதான், சிரிப்பு, அழுகை, ஏளனம், வியப்பு, பயம், வீரம், மகிழ்ச்சி, கோபம், சாந்தம்ங்றது."

கவி காளமேகம் இன்னைக்கு கனவுல வந்து இதைத்தாங்க "பட்"டுனு வந்து "பட்"டுனு சொல்லிட்டுப் போய்ட்டாரு. நாளைக்கும் வருவாருன்னு நம்புவோம்.

(......கனவுல இன்னும் வருவார்......)