10/03/2009

அகந்தைய அடக்கி, நீ மனுசனா இரு போ!

முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்
கையர்மகி மைமொழியப் போமோ
ஒக்குமெரி குளிரவைத்தாள் ஒருத்திவில்வே
டனைஎரித்தாள் ஒருத்தி மூவர்
பக்கமுற அமுதளித்தாள் ஒருத்திஎழு
பரிதடுத்தாள் ஒரத்தி பண்டு
கொக்கெனவே நினைத்தனையோ கொங்கணவா
என்றொருத்தி கூறி னாளே!

இந்தப் பாடலை, தண்டலையார் சதகம் எனும் செய்யுள் தொகையில படிக்காசுப் புலவர் பாடியிருக்கார். இதை, பழமொழி விளக்கம் என்றும் சொல்வார்கள். சரி, புலவர் இந்தச் செய்யுளில் என்ன சொல்லி இருக்கிறார் எனக் காண்போம்!

கற்புடைய மங்கையர் பெருமையை விளக்கும் பாடல்தான் இது. கடத்திச் சென்ற அனுமனை நெருப்பில் இட இருப்பது தெரிந்ததும், சீதா தேவியின் கற்பின் மாண்புணர்ந்து அக்னி பகவான் அனுமனைச் சுடாது எட்ட நின்றான்.

காட்டில் நளனை விட்டுப் பிரிந்த தமயந்தி, பிரிந்து தவிக்கையில் வேடனொருவன் அவளைக் கற்பழிக்க நெருங்கியதுதான் தாமதம், கற்புக் கண் கொண்டு உற்று நோக்கியதில் அவன் எரிந்து கீழே விழுந்தான்.

அனுசூயையினுடைய கற்பின் மாண்பைச் சோதிக்க விரும்பிய முக்கடவுள்களான, பிரம்மா, திருமால் மற்றும் சிவனும் அவளிடத்தே துறவி வேடத்தில் சென்று, தமக்கு ஆடையின்று வந்து உணவளிக்க வேண்டினர். அவர்கள் மூவரையும் அதிதிகளாக(விருந்தினராக) வரவேற்று, மூவரையும் தன் கற்பினுடைய சக்தியால் சிறு குழந்தைகளாக்கிக் கிடத்தி, பின் ஆடையின்றி வந்து பாலூட்டினாள். பின்னர் அவர்கள், அவளது கற்பின் மாண்பை வியந்து பாராட்டினர்.

நளன் மகளான நளாயினி, தன் கணவனை கூடையில் வைத்து அவன் விரும்பிய தாசி வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கையில், உயரத்தில் இருந்த மாண்டவியரின் காலில் அக்கூடை இடித்துவிட, விடிவதற்குள் நளாயினி தாலி இழப்பாள் எனச் சாபமிட்டாள். நளாயினியோ, விடியவே கூடாது என எண்ணினாள். அவளது கற்பின் மகிமையால், எழுபரி (எழுகதிரவன்)யானது தோன்றவே இல்லை. பின்னர், தேவர்கள் தலையிட்டு மாண்டவியரின் சாபத்தை திரும்பப் பெறச் செய்தனர்.

கொங்கணவன் என்பவன் தவம் புரிந்து கொண்டிருந்தான். நண்பகலிலே ஊருக்குள் சென்று உணவு வாங்கி உண்பது அவன் வழக்கம். அப்படியாக, அவன் ஊருக்குள் சென்று கொண்டிருக்கும் போது மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்றின் எச்சம் இவனது மேலே விழவும், இவன் அதை உற்று நோக்கவும், இவனது தவச்சிறப்பால் அந்தக் கொக்கானது எரிந்து விழுந்தது.
இச்செருக்கில் ஊருக்குள் சென்ற இவன், திருவள்ளுவர் வீட்டிலே யாசகம் கேட்கவும், ஆனாலும் வாசுகி அம்மையார் வீட்டில் தன் எம்பெருமானுக்கு உணவளித்த பின்னரே வெளியில் வந்தார். வழமை போலவே கொங்கணன் சினமுற்று இரத்த விழிகளோடு உற்றுப் பார்த்தான். அது கண்ட கற்புடைப் பிராட்டியான வாசுகி அம்மையார், நீர் எம்மை கொக்கென்று நினைத்தனையோ என எள்ளியபடி வினவினார்.

ஆகவே, ”அவரு எங்கண்ணனா, அல்லது கொக்கா?” என வினவும் போது, அண்ணன் ஆனவன் கொக்கைப் போன்ற அற்பன் அல்லாது, வாசுகியின் கற்பைப் போன்ற வலியவன் எனும் உயர்வு நவிற்சி வெளிப்படுகிறது. இதுவே புழக்கத்தில் வல்லமையைக் குறிக்கும் சொலவடையாக ஆகிப் போனது.

“நீ என்ன பெரிய கொக்கா?” என வினவும் போது, நான் உம்மைக் கடிந்து சினந்து உற்று நோக்கக் கூடிய அளவிற்கு, நீர் பெரிய ஆளா? எனும் வினா வெளிப்படுகிறது.

---------------

கொக்கென நினைத்தாயோ கொங்கணவா” எனும் கதை மஹா பாரதத்திலே வன பர்வத்திலே வருகிறது

தர்மர் மார்க்கண்டேய மஹரிஷியிடம் பதிவிரதைகளின் பெருமையைக் குறித்து வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறிய கதை. இந்தக் கதையில் வரும் கொக்கை எரித்த அந்தணனின் பெயர் கௌசிகன்.. அவனை கொக்கென நினைத்தாயோ கொங்கணவா என வினவிய இல்லத்தரசி அவரை ஒரு கசாப்புக் கடை வைத்திருப்பவரிடம் அனுப்பிளாள் தர்மம் என்னவென அறிந்து கொள்ள போதனைகள் பெற்.. அந்தக் கசாப்பு கடைக்காரரி பெயர் தர்மவியாதர்

அவர் வாழ்ந்த ஊர் மிதிலாபுரி

நபெ

=========================


The following is different and added here for interest only:

’நீ என்ன பெரிய கொக்கா?’ என்ற கேள்விக்கு மட்டுமே இங்கே இடம்.

‘நாங்க என்ன கொக்கா?’ என்றும் சொல்லிச் சண்டை இடுவதுண்டு. இதில், இக்கதை பொருந்தாது.

இங்கே பொருந்துவது கொக்கு as a symbol of naivety. கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடித்தல் என்பதிலிருந்து வந்தது.

ஒருவன் கொக்கு பிடிக்க போனான. கொக்கு வந்து உடகார்ந்தது. ஆனால் பிடிக்கவில்லை. துணைக்குச் சென்றவன்: ‘ஏன்னே பிடிக்காமல் இருக்கிறீர்கள்? என்று கேடக, இவன், ‘அட மடையா.. கொக்கு பறந்தோடி விடும்’ ‘என்றான்.

பின் எப்படித்தான் பிடிப்பதாக உத்தேசம்?

நான் கொக்கு தலைமேல் வெண்ணெயை வைப்பேன். அஃது உருகி வழிந்து கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது, அதை ‘லபக்; கென்று பிடிப்பேன்’ என்றானாம்.

இதில் இருகருத்துகள். ஒன்று இவன் மடையன், மற்றொன்று, கொக்கு ஒரு மடைமையுடைய் பிராணி என்ற மரபு நம்பிக்கை. கொக்கு a symbol of idiocy or naivety. மூட நம்பிக்கை எனலாம். as there is no scientific evidence for that.

என்வே, 'என்னை கொக்கென்று நினத்தாயா?' அஃதாவது, என்னை கொக்கைப்போல ஒரு மடைமையுடைய்வன் என நினத்தாயோ? என்று பொருள்.

--கள்ளபிரான்

====================

”நீர் என்ன பெரிய கொக்கா?”

”சரி, வேண்டாம்; சின்ன கொக்கு!! போதுமா? போதுமா??”

”என்னது?”

”செரிடாப்பா, நான் எந்த கொக்கும் இல்ல! ஆனா, அகந்தைய அடக்கி நீ மனுசனா இரு போ!”

10/01/2009

அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!

வணக்கம் மக்களே! போன வாரம், அமெரிக்கத் தலைநகர் போயிட்டு வந்ததுல நிறைய தகவல்கள் கிடைச்சது. அதற்கும் மேலா, ஆசான்களான உயர்திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள், உயர்திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்களோட விருந்தோம்பல், மேலும் அவர்களோட இருந்த அனுபவம் இதெல்லாம் இன்னும் எழுத வேண்டியது இருக்கு. மனுசனுக்குக் கடுமையான வேலை பாருங்க; அதான், அது தள்ளிப் போய்ட்டே இருக்கு!!

//பட்டிக்காட்டான்.. said...
//.. நொம்பலத்துக்கு ..//

இதென்னன்னு கொஞ்சம் வெளக்கமா சொன்னீங்கன்னா ஆகும்..

அப்புறம் அப்படியே நாளுக்கு ரண்டு பழுதில்லைனா என்னானும் சொல்லிப்போடுங்க..
//

நொம்பலம்னா துன்பம். அன்பே சிவம் பாடல்கள் கேட்டது இல்லை போலிருக்கு? ஆனா, அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லைங்றதை இப்படி மாத்திப் போட்டியளே? அவ்வ்வ்........

சரி, அதை அலசித் தொவச்சிக் காயப் போடலாம் வாங்க! நல்லாக் கவனமாப் படிக்கோணும், ஏன்னா நாம இப்ப பேசப் போறது வரவு செலவு சமாச்சாரம். நல்லா நிமுந்து உக்காருங்க மொதல்ல! செரி, இப்ப மேல படிக்கலாம் வாங்க!!

எந்த ஒரு தொழில் நடத்தினாலும், அதுக்கு அடிப்படை அஞ்சு தொகைன்னு கிராமத்துல சொல்லக் கூடிய ஐந்தொகை! அதென்ன அந்த ஐந்தொகை? விழுமுதல்(முதலீடு), வரவு, செலவு, இருப்பு, அஞ்சாவதா ஆதாயம். இந்த அஞ்சுல விரயத்துக்கு இடங்கிடையாது! இந்த பின்னணியில ஒரு நிகழ்வைப் பார்க்கலாம் நாம இப்ப!

எதோ ஒரு தொழில் செய்யுற கந்தப்பன், அன்னைக்கி உள்ளூர்லயே நடந்த தெரட்டி ஒன்னுக்குப் போறாரு. போன எடத்துல,

“என்றா கந்தப்பா, ஊட்ல எல்லாரும் செளக்கீந்தானோ?”

“எல்லாரும் செஞ்சேரிமலை மந்தரகிரி ஆண்டவன் புண்ணியத்துல கை காலு சொகந்தானுங் சகலை! நம்மூட்லீங்கோ?!”

“ம்...ம்... எதோ போய்ட்டு இருக்கு! அப்பறம், பாடு பழமயெல்லாம் எப்பிடிப் போயிட்டு இருக்கூ?”

“இது வரைக்கும் அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமப் போயிட்டு இருக்குங் சகலை! நாளமின்னா எப்பிடின்னு தெரீலீங்!”

இப்பிடி எல்லாந்தானுங்க, இந்த சொலவடைய நாட்டுப் புறத்துல பொழங்குறது! அதாவது மேல சொன்ன, முதலீடு, வரவு, செலவு, இருப்பு, ஆதாயம், இந்த அஞ்சுல வரவும் இருப்பும் பழுதாகாத வரையிலும் தொழிலுக்கு பாதிப்பு கிடையாது, ஆதாயம் இல்லாவிட்டாலுங் கூட!

இந்த ரெண்டும் செரியா இருக்குற வரையிலும் வண்டி ஓடும். ஆக, இலாபமோ நட்டமோ, வண்டி ஓடக் கூடிய வகையில தொழில் நடந்துட்டு இருக்குன்னு சொல்றதுதான், அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை! என்னாவொரு சூட்சுமம்? ஒரு சொலவடையிலயே எல்லாத்தையும் சுருக்கி வெச்சிட்டாங்களே பெரியவங்க?!

நல்லா யோசிச்சு பாருங்க, இந்த இரண்டும் இல்லாம எப்பவோ ஒரு நாள் பெரும் இலாபம் தரக்கூடிய தொழிலானது ஒரு சீரா நடக்குமா? அமெரிக்காவுல இந்த சூட்சுமம் செரியாக் கடைபுடிக்காமக் கோட்டை வுட்டுட்டாங்களேப்பா?

நான் இருக்குற ஊரான, சார்லட்ல இருந்த Wachovia வங்கியின் நெலமை அதான?! அவ்ங்க பெருசா ஒன்னும் நட்டப்படலை, ஆனா வரவு குறைஞ்சி, அன்றாடப் பராமரிப்புக்கு போதிய இருப்பு இல்லாமப் போனதுதான வீழ்ச்சிக்கு காரணம்?! ஒரு சில நாட்கள் நடத்தக்கூடிய இருப்பு இருந்திருந்தாலே, அது பிழைச்சிருக்கும்னு பொருளாதாரப் பட்சிகள் சொல்லுது!

சரி...சரி, அஞ்சுல ரெண்டு பழுதில்லாம இருக்கான்னு போயிப் பாருங்க போங்க! ஊர் ஞாயத்தைக் கேக்குறதுன்னா வந்திருவீங்களே? ஆடாத கூத்து ஆடினாலும், காரியத்துல கண்ணா இருக்கணுமா? இல்லியா??

-------------------------------------

அன்புள்ள பழமைபேசி ஐயா,

வணக்கங்கள்.

ஆன்மீக உலகில் திருமுறைகளைப் பற்றி குறிப்பிடும்போது அஞ்செழுத்து மந்திரம் (ந ம சி வா ய) செபிக்காவிட்டாலும் இரண்டெழுத்து மந்திரம் (சிவ) செபித்தால் நல்லது என்று குறிப்பதற்கு ”அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை” என்று சொல்வதாக சமீபத்தில் ஒரு சொற்பொழிவில் கேட்டேன்.

அன்புடன், குமார்(சிங்கை)

9/30/2009

ஒரு கல்லுல ரெண்டு மாங்கா!

கோயில்ல சாமி கும்பிட்ட மாதரயும் ஆச்சு!
கும்பிடவந்த பட்சியப் பார்த்த மாதரயும் ஆச்சு!!

மாட்டுக்குப் புல் புடுங்கினா மாதரயும் ஆச்சு!
காடுகரை சுத்தமான மாதரயும் ஆச்சு!!

ஆடு மேய்க்கப் போன மாதரயும் ஆச்சு!
அண்ணனுக்குப் பொண் பார்த்த மாதரயும் ஆச்சு!!

காய்தக் கூடை போட்ட மாதரயும் ஆச்சு!
பழசு பரட்ட ஒழிஞ்ச மாதரயும் ஆச்சு!!

இட்லி உப்புமாக் கிண்டுன மாதரயும் ஆச்சு!
மிச்சம் மீதி கழிஞ்ச மாதரயும் ஆச்சு!!

வட்டிக்கு மொதல் குடுத்த மாதரயும் ஆச்சு!
நொம்பலத்துக்கு ஒதவுனா மாதரயும் ஆச்சு!!

தவுட்டுக் காசு வெளையாடுனா மாதரயும் ஆச்சு!
பிஞ்சு வெரலுகளை தடவுனா மாதரயும் ஆச்சு!!

குமுதம்கல்கண்டு படிச்ச மாதரயும் ஆச்சு!
படிக்க வந்த அம்மணிய மடிச்ச மாதரயும் ஆச்சு!!

தோப்புக் காவலுக்கு காவலும் ஆச்சு!
தோதான கூடலுக்குக் கூடலும் ஆச்சுது!!

இடுகையில பிழை திருத்தினா மாதரயும் ஆச்சு!
படிச்சுட்டு மறுமொழி போடுறான் இவன்னும் ஆச்சு!!

எழில் தமிழ்ச்சங்கக் கூட்டத்துக்கு போனதாவும் ஆச்சு!

நாலுநாளைக்கு சோத்துப் பொட்டலம் கட்டுனதாவும் ஆச்சு!

ஒன்னுல ரெண்டு விழுத்தின,
பழமைபேசி
.

9/29/2009

நித்தியப்பிரளயம்!

நித்தை

மாழாம்பலம்

சோர்தல்

சொக்குதல்

கோடித்தூங்கல்

கிடத்தல்

அயர்தல்

அனந்தல்

ஏல்தல்

உறங்குதல்

களித்துயிலுதல்


மடிதல்

துஞ்சுதல்

தூங்குதல்

நித்திரித்தல்

9/28/2009

அமெரிக்கத் தலைநகர் இலக்கியக் கூட்டமும், இவனும்!

செப்டம்பர் 27, 2009. நண்பகல் உணவு உட்கொண்டு ஆகிவிட்டது. விருந்தோம்பலில் திளைத்த தேகம், இலக்கிய வேட்கையில் தினவெடுக்கத் துவங்கியது. என்ன பேசுவார்கள்? யார் யாரெல்லாம் வருவார்கள்? உள்ளபடியே இவர்கள் இலக்கியக் கூட்டம்தான் நடத்துகிறார்களா? அல்லது, காதில் பூச்சுற்றி ஊரை ஏமாற்றும் கூட்டமா?? வினாக்கள் ஆழ்மனதில் கிளம்பி, தொண்டைக் குழி வழியாய் நாவை எழுப்பி வாய் விட்டு வினவிவிட யத்தனித்தது பல முறை! ஆனாலும், நாகரிகத்தின் முன்னே அவையாவையும் அடங்கிப் போனது!

விருந்தோம்பலைச் செவ்வனே செய்தாரோடு நிழல் படங்களுக்கான சம்பிரதாயம் நடாத்திவிட்டு, நானே அந்த (ஜாக்குவார்)சிறுத்தையைச் செலுத்தினேன் எலிக்காட் நகரத்தில் இருக்கும் மில்லர் நூலகம் நோக்கி! மனம் பரிதவித்தது, இன்னும் இடம் வரவில்லையே என. இம்முறை நா வென்றது, ‘என்ன ஐயா, இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?’ என்று வினவிக் காட்டியது அது. ‘இந்தா இன்னும் கொஞ்ச தூரந்தான்!’ எனும் மறுமொழி கேட்டு சலிப்படைந்தது நாவை எழுப்பிய உள்மனம்.

ஒரு வழியாக Jaquar ஆனது, நூலக ஊர்தி நிறுத்துமிடத்தைச் சென்று அடைந்தது. உள்ளே நுழைகிறோம், நுழைந்ததுதான் தாமதம், 30 வருடங்கள் பின்னோக்கிச் சென்றது லெளகீகம். சிலேட்டுப் பலகையில் எழுதுவதும், எச்சில் தொட்டு அழிப்பதுமாய் என்னேவொரு இரம்யமான வாழ்க்கைடா சாமி! ”சார் இவன் என்னைக் கிள்ளுறான் சார்!”, ”டீச்சர், நான் கெலாசு சொன்னதுக்கு, இவன் உங்க எதுத்த ஊட்டு ஆயாவைப் போட்டு வெளாசு சொல்றான் டீச்சர்!” இது மாதிரியான நினைவுகள் மின்னல்க் கீற்றுகளாய் வந்து போனது. ஆம், அங்கே எண்ணற்ற இளம் சிறார்கள் அமர்ந்து வடிவாய்த் தமிழ் கற்றுக் கொண்டிருந்த காட்சியானது, எம்மை இளம்பிராயத்திற்கே இட்டுச் சென்றது. அதிலிருந்து மீள சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.

அதிலிருந்து மீண்டு வெளியே முற்றத்திற்கு வர, பழமைக் காவலன், ஆசானுக்கெல்லாம் ஆசானான புலவர் வெ.இரா. துரைசாமி ஐயா அவர்கள் நிற்கக் காண்கிறோம். மரியாதை நிமித்தமாக வணக்கம் செலுத்துகிறேன். அதன்பின்னர் என்ன கதைப்பது என இவனுக்குத் தெரியவில்லை ஏதும்! அவரோ, மாபெரும் புலவர், வரலாற்று ஆசிரியர்... அவரிடத்தே என்ன கேட்பது? கேட்பதற்குரிய அளவிற்கு நம்மிடம் அறிவு சார்ந்த கேள்விகள் இருக்க வேண்டுமல்லவா? ஏதோ தாந்தோன்றித் தனமாகக் கேட்பதும், அளவளாவுவதும் சான்றோருக்களிக்கும் மாண்பு ஆகுமா? இப்படி மனம் அஞ்சித் தவித்தது என்றே சொல்ல வேண்டும்.

உள்ளே நடந்து கொண்டிருந்த தமிழ் வகுப்பானது நிறைவு பெறுகிறது. இலக்கிய ஆர்வலர்கள், ஒருவர் பின் ஒருவராக வந்தடைகிறார்கள். இலக்கியக் கூட்டத்தின் தலைவர், மேன்மைமிகு. பிரபாகர் அய்யா அவர்கள் பதினாறு வயது இளங்காளையென, உற்சாகத்தோடும் கூட்டத்திற்கு தேவையான பரிவாரங்களோடும் நுழையும் அத்தருணத்தைக் கண்ணாரக் கண்டு இரசித்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று திரும்பியது மனம். ஆகா, ஆகா, என்னேவொரு சீரிய ஒழுங்கு? காலம் தவறாமை?? உற்சாகம்??? ஐயா, உங்களை இலக்கியம் பல நூற்றாண்டுகள் வாழ வைக்கும்! வாழ்க நீவிர்!!

தலைவர் எவ்வழியோ, அவ்வழிதானே அவர்தம் வழி வருவோரும்?! அடேயெப்பா... கண்கொள்ளாக் காட்சிதான் அது! ஆளும் கையுமாய்; கையும் புறநானூற்று உரையுமாய்!! அமெரிக்காவில் மட்டும்தான் இது சாத்தியம் என நினைக்கிறேன். தமிழே, உனக்கு ஆராதனை குறிஞ்சிப் பூவாய் கோவையில் அல்ல! இதோ இந்த எலிக்காட் மில்லர் நூலகத்தில் ஒரு சீராய் மாதமிருமுறை!!

கம்பீரமிகு மிடுக்கான பரியாய் எழுந்து முதன்மை விருந்தினரான புலவர் பெருமான் துரைசாமி ஐயாவை அறிமுகப்படுத்தி, பின் பேசவருமாறு அழைக்கிறார் நடுநாயகம் பிரபாகர் ஐயா அவர்கள். அவைக்கு மரியாதை செலுத்திவிட்டுத் தொடர்கிறார் புலவர் பெருமான். ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், சிலாசாசனம் (கல்வெட்டு) பற்றிச் சரளமாக, மடை திறந்த வெள்ளம் போல் அரிய தகவல்களை அடுக்க, அதில் சொக்கிப் போன இவனுக்கு குறிப்பெடுக்க விரல்கள் உதவ மறுத்தது.

பழமை, தொன்மை, வரலாற்றுக்கு ஆதாரம் இந்த கல்வெட்டுகள். அதற்கு தமிழ்நாட்டிலே அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அண்டை மாகாணங்களில் அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி புள்ளி விவரங்களோடு அவர் அடுக்க, அடுக்க, கூட்டத்தார் வாய்விட்டு அழாததுதான் குறை. ஆம், நிசப்தத்தின் விளிம்புக்கே சென்றது அவை.

இன்றைய கணினி உலகில் Documentation is very important என்று வலியுறுத்துகிறோமே, அதைப் போல அன்றைய உலகிற்கு இந்த கல்வெட்டுகளே ஆதாரம். கல்வெட்டுகளிலே எண்ணற்ற செய்திகள் அடங்கி இருக்கிறது. அவை அனாதை ஆக்கப்பட்டு, தூக்கியெறிவது தமிழனுடைய அவலத்தின் மற்றொரு முகம்!

அன்றைய தெருக்களும் இன்றைய தெருக்களைப் போல, வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் எண்களிட்டு அமைக்கப்பட்டு இருப்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளில் காண்ப்பெறலாம் என சிலாகித்துப் பேசினார். ஒவ்வொரு தெருவின் பக்கத்தையும் ’சிறகு’ என அழைப்பார்களாம். தெற்கு வீதி, வட சிறகில் உள்ள மூன்றாவது எண் இலக்கமிட்ட வீட்டில் இருக்கிற மாதேசுவரத்தைச் சார்ந்த இன்னாருக்கு இவ்வளவு பங்கு என்று பொறிக்கப்பட்டு இருப்பதைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சேலம் நாமக்கல் பகுதிகளைப் பற்றியும், காவிரிக் கரையோர தொன்மையான ஊர்களைப் பற்றியும் பல தகவல்களை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தாரவர். அவரது உரைக்குப் பிறகு, இலக்கிய ஆய்வு துவங்கியது. புறநானூற்றுப் பாடல்கள் 102 முதல் 107 வரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆய்வு என்பதை மிகத் துல்லியமாக நடாத்திக் காட்டினார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொருவரது கருத்துக்கும் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அரிய செய்திகளைப் பரிமாறி... மன்னிக்கவும், அந்தப் பாங்கை எழுத்தால் காட்சியாக்க இந்த எளியவனால் ஆகாத காரியம். நேரிலே காண்பதே சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

மிக நிதானத்தோடு ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. முதலெழு, இடையெழு, கடையெழு வள்ளல்கள் பற்றித் தெரிந்திருக்கிறோம். அதற்குப் பின்னர் எவருமிலையா என வினவுகிறார் உயர்திரு பீட்டர் ஐயா அவர்கள். அதற்கு மறுமொழியாக நடுநாயகம் பிரபாகர் அவர்கள், அவர்களுக்குப் பின்னர் நீர்தான் வள்ளல் என்று ஒரே போடாய்ப் போட்டாரே பார்க்கலாம், சிரிப்பலை அடங்க சிறிது நேரம் பிடித்தது.

இதற்கிடையே எம்மையும் அவையில் பேசுமாறு நடுநாயகம் கேட்டுக் கொண்டார். நாமும், நம் நிலையில் இருக்கும் மனவோட்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். உயர்திரு முனைவர். அரசு செல்லையா அவர்கள் வெகுவாகப் பாராட்டி, இருக்கும் நிலையில் இருந்து மேற்கொண்டு தொடரக்கூடிய வகையிலே வழிகாட்டுதல்களை அறிவுறித்தியதற்கு நாமும் பணிவுடன் நன்றி கூறிக் கொண்டோம்.

யானையே ஆயினும், முதலையின் இடமான தண்ணீருக்குள், அது முழங்காலளவாக இருப்பினும், அங்கே முதலையை இழியன் என இகழ்ந்தால் யானையின் வெற்றி ஆட்டம் கண்டு விடும் என்கிற பாடல் எம்மனதைக் கொள்ளை கொண்டது. மற்ற பாடல்களும் சுவாரசியமாகவும், இலக்கியச் சுவை ததும்பும்படியாகவும் இருந்தது.

ஆய்வுக் கூட்டமானது இறுதிக் கட்டத்தை நெருங்கியதும், இவர்களை எல்லாம் விட்டுவிட்டு நாம் விமான நிலையம் செல்லத்தான் வேண்டுமா என மனம் பசலை நோய் கண்டது. நோயில் பீடித்த மனம், அதிலிருந்து மீளும் முகமாகவும் நினைவுகளின் எச்சமாகவும் கொழுகொம்பைத் தேடி இக்கணத்தில்!


இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே!

9/27/2009

Stepney!

மக்களே, இரண்டு நாள் பயணம் சிறப்பாக முடிந்தது. இலக்கியக் கூட்டத்தைப் பற்றி விபரமாக நாளை இடுகை இடுகிறேன், கடுமையான களைப்பாக இருப்பதே இதற்குக் காரணம்! எனினும் பயணத்தின் போது கிடைத்த ஓரிரு சுவாரசியத் தகவல்கள்:

பசு - ஆப்பி
யானை - இலண்டம்
குதிரை, கழுதை, ஒட்டகம் - இலத்தி
பறவைகள், பல்லிகள் - எச்சம்
நாய், ஓநாய், நரி - கட்டம்
காடை, கவுதாரி - புடம்
எருமை, மாடு - சாணம்
ஆடு, மான், முயல் - பி(பு)ழுக்கை
விலங்குகள் - விட்டை
மனிதன் - மலம்

”ச்சே, என்ன ஆச்சு இவனுக்கு? வந்ததும் வராததுமா இப்படி ஒரு இடுகை தேவையா?”, இப்படி எல்லாம் நீங்க மூக்கால அழுவீங்களா இருக்கும்; அழுங்க, தாராளமா அழுங்க, அது உங்க பிரச்சினை; ஆனா நான் மூக்கால அழறதைப் பத்தியும் அனத்திட்டுத்தான் போவேன்.


அழும்போது வடியுற கண்ணீர்ல கொஞ்சம், பக்கத்துல இருக்குற நாளச்சுரப்பிகள்னால மூக்குலயும் வெளிப்படும் அப்படின்னு அறிவியல் காரணங்களைச் சொல்லிச் சமாளிக்கலாம். ஆனா, நமக்கு மரபு வழின்னு ஒன்னு இருக்கல்ல? மூக்குல வாயில அழறான்னு சொல்றோம். ஆனாக் கண்ணுல மூக்குல அழறான்னு சொல்றதில்லை பாருங்க!

கண்களில் மட்டுமல்லாது மூக்கில் வடியும்படியும் அழறான் அப்படின்னு, அழுகையோட வீரியத்தைச் சுட்டிக் காட்டுறதுதான் மூக்குல அழறது. யேய் அவன் ஒரு நாள் விடுப்புக் கொடுக்கறதுக்கே மூக்குல அழறான், நீ வேற?! இங்க, அவனது ச்லிப்பை மிகைப்படுத்திச் சொல்றதுக்காக அந்த வழக்கு. இதுலயும் ஒரு படி மேலா மிகைப்படுத்துறது, அவனுக்குத் தெரிஞ்சா வாயில மூக்குல அழுவான், நீ வேற!

இனிமேக் கொண்டு அதெப்படி வாயில அழ முடியும், அதெப்படி மூக்குல அழ முடியும்னு கேட்டுத் தொல்லை செய்யக் கூடாது நீங்க!

பெரிய, மகா, மா... மாமடையன், மா என்பது மாங்காய், ஆக, மாமடையன் என்பது மாங்கா மடையன்! அடுமடையன்? அடுப்பங்கரையில் இருக்கும் மடையன்! ஆமா, சமைச்சது சரியில்லாதப்ப உங்களை அப்படிச் சொல்லுறதுதான அது?! என்ன ரொம்ப சலிச்சுகிறீங்க?? அப்ப உடனே சேமம் ஒன்னைக் கைவசம் வெச்சுகுங்க? இஃகிஃகி, அதென்ன சேமம்?

சேமிப்பு, உடனடித் தேவைக்கானதைத் தவிர்த்து இருக்கும் மாற்று; சேமச் செருப்பு, தேவைக்காக இருப்பதைத் தவிர இருக்கும் செருப்பு! ஆக, சேமம்னா
Stepney! இப்ப சொல்லுங்க, நீங்க தயார்தானா சேமத்துக்கு? உடனே வேலைய ஆரம்பிங்க அப்ப!

ஆனா மவனே இப்பவே சொல்லிட்டேன், நானும் ஒரு சேமச்செருப்பு வாங்க கடைத் தெருவுக்கு போறேன்னு அவங்க சொன்னா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது! கிடையாது!!

Washington, DC: பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி பற்றிய‌ கண்ணோட்டம்!

நமது அமெரிக்கத் தலைநகர் பயணமானது, சரியான நேரத்திற்குத் துவங்கி நண்பகல் வாக்கில் விமானம் பால்டிமோர் விமானத்தை அடைந்தது. எனது வாழ்க்கையிலேயே இதுவரையிலும் கிடைத்திராத ஒரு அங்கீகாரமும், வரவேற்பும், விருந்தோம்பலும் கிடைக்கவிருப்பதை நான் கிஞ்சித்தும் நினைத்து இருக்கவில்லை, அப்படியொரு விருந்தோம்பல்!

அதைப் பற்றி அத‌ன் இருப்பிடத்திலே இருந்து கொண்டு எழுதுவது அறமாகாது; பின்னொரு இடுகையில் விரிவாகக் காண்போம். ஆனால் இந்த ஒரு நல்ல தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு, நான் எழுதும் இந்த தமிழுக்கு என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். இனி முதல் நாள் நிகழ்ச்சியான,
AIMS India Foundation பொன்மாலைப் பொழுது எனும் நிகழ்ச்சிக்குள் செல்வோம்!

எனக்கு இந்த அமைப்பை மிகவும் பிடித்திருக்கிறது. இறைவன் இரு கைகளைப் படைத்ததே ஒன்று தனக்கு வேலை செய்வதற்காகவும், மற்றொன்று தன்னையொத்த சமுதாயத்திற்காகவும் என்று சொல்வார்கள் பெரியவர்கள். தான் மேலை நாட்டிற்கு வந்து ஒரு வளமான வாழ்க்கையை அடைந்து விட்டாலும், தன்னையொத்த தன்னாட்டு மக்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்காகவும் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டுமெனக் கருதுவது மேலான செயல், they make difference among us!

இந்த ஆண்டுக்காக நிதி திரட்டும் பணி நிமித்தம் இந்த இனிய பொன்மாலைப் பொழுது எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். திரையிசைக் கச்சேரியும், ஒத்ததாக சிறுவர்களின் நடனமும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது. லதா‍ - கண்ணன் குடுமபம், அய்யப்பன் மற்றும் பலரின் அயராத உழைப்பைக் காண முடிந்தது.

'அச்சமில்லை' எனத் துவங்கும் இந்திரா படத்தின் பாடல் பாடப்பட்டுக் கொண்டு இருக்கும் போது உள்நுழைந்து முன்வரிசையில் பிரதான இருக்கையில் அமர வைக்கப்பட்டேன். அடுத்தடுத்து பழைய பாடல்கள் பாடப்பட்டது; குங்குமப்பூவே, குங்குமப்பூவே பாடலை அந்த முக்கியப் பாடகர் நேர்த்தியாக பாடத் துவங்கியதுதான் தாமதம், சீட்டியின் ஒலி வெள்ளை மாளிகையையே அதிர வைக்கக் கூடிய வகையில் இருந்தது.

தொடர்ந்து பாடலுக்கிடையே சுவாரசியமான தகவல்களும் கண்ணன் அவர்களால் பரிமாறப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு பாடலைப் பாடப்பட்ட பிறகு, இந்த பாடலுக்கு தொடர்புடைய, ஒரே நாளில் பிறந்த இருவர் யார் என வினவப்பட்டது. பின்னர், விசுவநாதன் அவர்களும், கவியரசு கண்ணதாசன் அவர்களுமே என்ற தகவலையும் அளித்தார். ஆம், அவர்கள் இருவருமே ஜூன் 24 அன்று பிறந்தவர்கள், ஆனால் இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம்!

மீண்டும் அதே முக்கியப் பாடகர்! 'வலையபட்டி தவிலே தவிலே, ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே, ஜிமிக்கி போட்ட மயிலே’ என இசை வேகமெடுக்க, அரங்கம் ஆர்ப்பரித்தது. அந்த பாடகரின் அங்க அசைவுகளும், கைச் சொடுக்கும், இசைக்கேற்ற குறிப்பு மொழியும் அவருக்கு மேலும் மெருகூட்டியது. அரங்கமென்ன வாளாதிருக்குமா? சீட்டிகளும், கரவொலியும் கூரையைப் பிளந்தது!

முக்கியப் பாடகருக்கு, நிகர் வேறு எவருமில்லையோ என எண்ணிய தருணத்தில் மின்னலாய் மின்னி, மக்களை இருக்கையினின்று வெளியே கிடத்தி ஆட்டம் போட வைத்தார், அருமைப் பாடகர் ஐய்யப்பன் அவர்கள். அவரைத் தொடர்ந்து கண்ணன், லதா மற்றும் சிலர் அடுத்தடுத்த பாடல்களைப் பாடி முடிக்க, 'சம்திங் சம்திங்' என்று சூட்டைக் கிளப்ப வந்தார் அய்யப்பன்!

மீண்டும் கண்ணனின் இடையூட்டுத் தகவலொன்று, "ஒரு நாள் மெல்லிசை மன்னர், இரவு முழுதும் இசை அமைத்து விட்டு காலையில் இசைப்பதிவு இருப்பதையும் மறந்து உறங்கிவிட்டார். காலையில் இசைப் பதிவுக்கூடம் வந்த கண்ணதாசன் மெல்லிசை மன்னருக்காக சற்று நேரம் காத்திருந்து பார்த்தார். அவர் வருவதாய் இல்லை. வெறுத்துப் போய், ஒரு சீட்டில் ஏதோ எழுதி, விசு வந்தால் இந்த வரியை பல்லவியாய் வைத்துக் கொண்டு மெட்டு போட சொல்லுங்கள் என்று மெல்லிசை மன்னரின் உதவியாளரிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்!

அவர் அதில் எழுதிக் கொடுத்த பல்லவி என்ன தெரியுமா? அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டவன் நானல்லவா! வந்து பார்த்த மெல்லிசை மன்னர் அந்தப் பல்லவி அந்த சூழ்நிலைக்கு சரியாகப் பொருந்தவே, மிகவும் வியப்போடு அதற்கு இசையமைத்தார்" என்பதே!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, மாற்றப்பட்ட உடையில் மேடையேறினார் அந்த முக்கியப் பாடகர். ஒவ்வொரு பாடலுக்கிடையேயும் நையாண்டி செய்வதற்காக இருவர் வந்து போனார்கள். அந்த நையாண்டி இளைஞர்களைத் தொடர்ந்து, அபூர்வராகம், அதிசய இராகம் எனத் துவங்கும் யேசுதாசின் பாடலை மிகச் சிறப்பாகப் பாடினார் அந்த முக்கியப் பாடகர். தொடர்ந்து, 'கத்தாழைக் கண்ணாலே' மற்றும் பல குத்துப் பாட்டுகள் பாடப்பட்டது.

நல்ல காரியத்துக்காக உழைத்துவரும் அவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மேலும் அமெரிக்காவில் உள்ளவர்கள், விருப்பமிருப்போர் அவர்களைத் தொடர்பு கொண்டு தத்தம் பங்களிப்பையும் செய்யலாம்.

இடை இடையே வந்த அந்த இரு நையாண்டிகள், ஒரு கட்டத்தில் தமிழை வம்புக்கு இழுத்தார்கள். ஒருவர் ஆங்கிலத் தமிழில் பேச, மற்றவர் என்னடா தமிளு இது? நல்லா என்ன மாதிரி நல்ல தமிளுல பேசணும்டா என்று கூறிவிட்டுத் திரும்பிப் பின்புறத்தைக் காண்பித்தவாறு தான் போட்டிருந்த அரைக்கால் சட்டைக்கும் மேலாக வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு, மீண்டும் முன்பக்கம் திரும்பி நாட்டுப்புறத்து பாமரர் பேசுவதைப் போல் பேசிக் காட்டி, 'இப்படி நல்ல தமிளுல பேசணும்டா' எனச் சொன்னார். எங்கே அரங்கம் அதற்கும் கரவொலி எழுப்பி என்னுள் உறங்கும் மிருகத்தைத் தட்டி எழுப்பி விடுமோ என அஞ்சினேன். நல்ல வேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை! மேடையைச் சிறப்பித்த‌ அந்த முக்கியப் பாடகர், திருச்செல்வன்!