8/31/2008

மூணாம் விழுது! படியுங்கள்!!

"விண்ணூர்"னா எல்லார்த்துக்கும் ஞாபகம் வர்றது, ஊரோரம் இருக்குற ஊர் ஆலமரம். யாரையாவது வீட்ல போயிக் கேக்கும்போது, அந்த ஆள் வீட்ல இல்லைன்னா, போயி ஊர் ஆலமரத்துல பாருங்கன்னுதான் பதிலு வரும். அந்த மரம், பத்து தலைக்கட்டுக்கு மேல பாத்து இருக்கும். மரத்துக்கு நடுவாப்புல இருக்குறது பிரதான மரம். அதை "பெரிய மரம்"னு சொல்லுவாங்க.

பெரிய மரத்தைச் சுத்தி நெலத்துல பதிஞ்சது மூணு விழுதுக. பதியாதது நெறைய. மொத்தமா ஒரு பத்து பதினஞ்சு இருக்கும். மரத்துல நெறைய பச்சைக் கிளிகளும் குருவிகளும், குயில்களும், காக்கா கூட்டமும் கூடு கட்டி இருக்கும். எப்பவும் ஓகோன்னு களை கட்டி இருக்கும். இந்த பெரிய மரத்தை சுத்தித்தான் ஊர்ப் பொம்பளைங்க ஒக்காந்து எதனாச்சும் ஊர்ப்பழமை பேசிட்டு இருப்பாங்க. காட்டுக்கு களை வெட்டப் போறவங்க காலைல இங்கதான் ஒண்ணு கூடி, அப்புறம் ஒண்ணாப் போவாங்க. கொழந்தைக்கு சாப்பாடு ஊட்டுற பொம்பளைங்களும் பெரிய மரத்தடியில இருப்பாங்க. சமயத்துல, "அவ இவங்கூடப் போனான். இவ அவங்கூடப் போனா"ங்கிற கதைக எல்லாம் ஓடிட்டு இருக்கும், பெரிய மரத்துல. "ஏண்டி நீ பெரிய மரத்தடில வச்சி, அப்படி சொன்னியாமே"ன்னு கேட்டு சண்டை எல்லாம் போடுவாங்க.

நெலத்துல பதிஞ்சு இருந்த முதலாவது விழுது, அந்த மேட்டைத் தாண்டி விநாயகங்கோயில் மூலைல இருக்கும். அதுக்குப் பக்கத்துலதான் அந்த வட்டப்பாறை தரையில பாதியும் வெளியில பாதியும் தெரியுற மாதிரி கெடக்கும். பாறைக்கு நடுப்புல மூணுகல் வெளையாட்டு (ஆடு புலி ஆட்டம்) வெளையாடுறதுக்கு உண்டான வரிக செதுக்கி இருக்கும். எந்நேரமும் வயசானவிங்க ரெண்டு பேர் உக்காந்து வெளையாடிட்டு இருப்பாங்க. அந்த ரெண்டு பேர்த்த சுத்தி மத்த பெரியவிங்க உக்காந்து, ஆடுற வெளையாட்டை வேடிக்கை பாத்துட்டு இருப்பாங்க. பாறையச் சுத்தி, ஒரே வெத்தலை பாக்கு எச்சையா இருக்கும். பெரியவிங்க இருக்குற எடம் ஆச்சே!

அந்த ரெண்டாவது விழுது, கடைசியா நெலத்துல பதிஞ்சது. சுத்துப்புறம் சின்ன அளவுல இருக்கும். தெக்கால போற இட்டேரி, இந்த விழுதுக்குத் தொட்டாப்புல இருக்கும். அப்புறம், இதைச்சுத்தி நெலத்துல பதியாத விழுதுக நாலஞ்சு, தரையில இருந்து கொஞ்சமா மேல தூக்குனாப்புல இருக்கும். சின்ன வயசுக் கொழந்தைக, ஆம்பளைப்பசங்களும் பொம்பளைப் புள்ளைகளுமா ஒண்ணு சேந்து தூரி கட்டி வெளையாடுவாங்க. சில நேரங்கள்ல சுத்திச் சுத்தி வெளையாடுவாங்க. வாண்டுக அவுக வயசுக்கு, அவுக வெளையாட்டை வெளையாடிட்டு இருப்பாங்க. நெறைய நேரங்கள்ல அண்ணனோ, அப்பிச்சியோ மரத்தடியில, வேற விழுதடியில இருப்பாங்க. இல்லைன்னா அம்மாவோ ஆத்தாவோ பெரிய மரத்தடியில இருப்பாங்க.

மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்ப்பொறமா, காணவேடாங் கோயில் மூலைல இருக்கும். அந்த விழுது கொஞ்சம் கெழக்குப்பாத்த மாதிரி இருக்கும். அதனால வெயில் நெறைய நேரம் அங்க விழுகும். அதனால பெரிய வயசுப் பசங்க மட்டுந்தான் அந்த விழுதுப் பக்கம் ஒக்காந்து எதென்னாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்பாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருப் பசங்க இங்க வந்துருவாங்க. ஆறு மணியில இருந்து வரப் போக. இப்படி இராத்திரி ஏழு மணி வரைக்கும் அந்த விழுதுல கூட்டம் இருந்துட்டே இருக்கும். வயசுப் பசங்க கூடுற எடம்ங்றதுனால, சுத்தி ஒரே துண்டு பீடிகளாக் கெடக்கும். சமயத்துல குடிக்கறதுக்கு பீடி இல்லைனா, கீழ கெடக்குற துண்டு பீடிகள்ல இருக்குற, பெரிய துண்டு பீடி எடுத்தும் குடிப்பாங்க.

இந்த மூணாவது விழுதுல வெச்சித்தான் கோயிந்தனுக்கும் மயில்சாமிக்கும் பழக்கம். ரெண்டு பேரும் ஒரே பீடியக் குடிப்பாங்க. ஒண்ணா சேந்து, கணேசங் கடைக்கு டீ குடிக்கப் போவாங்க. இப்படியே ரெண்டு பேரும் சேந்து வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருந்தாங்க. கூலி வேலைக்குப் போய்ட்டு இருந்த
இவிங்களுக்கு அதுல நாட்டம் கொறைஞ்சு போச்சு.

"டேய் மயிலு, எத்தன நாளைக்குடா இப்பிடி வெயில்லயும் மழைலயும் கெடந்து சாவறது?"

"ஆமாடா, நானும் அதையேதான் யோசனை பண்ணிட்டு இருந்தேன். என்னடா பண்ணுறது? ஊட்ல வேற, சின்ன அம்மினி வயசுக்கு வந்துட்டா. சீக்கிரம், நாலு காசு சம்பாதிக்கனும்டா."

"சரியாச் சொன்ன! தனலச்சுமி அக்கா காளியம்மன் கோயிலுக்கு பக்கத்துல டீக்கடை வெக்க சொல்லுது!!"

இப்படி ஆரம்பிச்ச இவிங்க, ஊருக்குள்ள ஒரு டீக்கடை சேந்தே போட்டாங்க. கணேசங் கடைக்கும் இவிங்க கடைக்கும் மைல் தூரம் இருக்கும். அதனால காளியம்மன் கோயில் பக்கத்துல இருக்குறவங்க, டீ கடைக்குப் போகாமயே இருந்தாங்க, இத்தினி நாளும். இப்ப இவிங்க கடை வந்ததுக்கு அப்புறம், எல்லாரும் இவிங்க கடைக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. கோயிந்தனும் மயில்சாமியும் ஒத்துமையா கடை நடத்திக் காசு பாக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு பேரும், வீட்ல இருந்த அக்கா தங்கச்சிக்கு கண்ணாலம் பண்ணி வெச்சி, ஆளுக்கு ஒரு வீட்டையும் கட்டி, அவிங்களும் கண்ணாலம் கட்டி, ரெண்டு பேர்த்துக்கும் ஆளுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு.

மயிலு கல்லாவுல இருந்தா கோயிந்தன் அடுப்படியிலயோ, மேல் வேலையாவோ இருப்பான். கோயிந்தன் கல்லாவுல இருந்தா, மயிலு வேற வேலை பாத்துட்டு இருப்பான். இப்படி ரொம்ப நல்லா, யாவாரம் போய்ட்டு இருந்துச்சு.

இந்த நேரத்துல இருவது வருசமா நடக்காத கிராமசபைத் தேர்தல் வந்துச்சு. ரெண்டு பேர் தலைவர் பதவிக்கு போட்டி போட்டாங்க. ஒருத்தர் அருணாசலம். அடுத்தவர் சண்முகம். ரெண்டு பேரும் வேற வேற சாதி. கிட்டத்தட்ட சம பலம் இருக்குறவங்க. தேர்தல்னா வேற என்ன? வசூல் தான்! அருணாசலம் கச்சி ஆளுங்க, காளியம்மங் கோயில் டீக்கடைக்கு வர்றாங்க.

"டே மயிலு, கடை எல்லாம் நல்லாப் போகுதா? நீங்க எல்லாம் நல்லா இருக்கணும்டா. கடையச்சுத்தி இருக்குறது நம்ம சாதி சனம். அவிங்க இல்லாட்டி, இந்த பத்து வருசமா உங்க யாவாரம் நடந்து இருக்குமாடா?"

"நீங்க சொல்லுறது சரிதானுங்க! ஆனா, கோயிந்தன் வெளில போயிருக்குறான்..............."

"என்னடா இழுக்குற?.... நீ என்ன இருந்தாலும் நம்ம சாதிப்பய புள்ள.... கடைய சுத்தி இருக்குறது நம்ம பசங்க......"

யோசிச்சு பாத்த மயிலு, கடை நல்லா நடக்கணுமின்னு, படக்குனு ஒரு ஆயிரம் ரூவா எடுத்துக் குடுக்க, வந்த கூட்டம் வாங்கிட்டுப் போயிருச்சு.

அதே நேரம், கோயிந்தன் வாழை எலக்கட்டு எடுக்க, சண்முகத்தோட பங்காளியோட வாழைத் தோப்புக்கு எப்பவும் போல போயிருந்தான். போன எடத்துல,

"கோயிந்தா, வாடா, வா வா! உங்கிட்ட நாங்களே வரணும்னு இருந்தோம்!!"

"என்ன சித்தப்பா, ஏதாவது பாக்கி இருக்கா? நான், கணக்கு வழக்கு எல்லாம் சின்னாம்மாகிட்ட போனவாரம் சரி பண்ணி, மிச்சம் இருந்த ஆயிரத்து முந்நூறு ரூவாயக் குடுத்துட்டனே?!"

"அது இல்லடா.... அது நீ எப்ப வேணாலும் குடுக்கலாம். நீ நம்ம பய! அண்ணன், தலைவருக்கு நிக்குது பாரு. அதாண்டா, உங்கடைக்கு ஆயிரத்து எண்ணூறுன்னு இரசீது போட்டு வெச்சு இருக்கேன்!!"

"சித்தப்பா, கடைல மயிலு இருப்பான். அவன்கிட்ட......."

"என்னடா இழுக்குற? நீ நம்ம பயன்னு எலக்கட்டு, வாழைத்தார், கடைக்கு வேணுங்ற வெறகு எல்லாத்தையும் சகாய வெலைல, நீங்க கடை வெச்ச நாள்ல இருந்து தந்துகிட்டு இருக்கோம். நாஞ்சொல்லுறது சரியா இல்லையா? அப்ப, இனி சந்தை வெலைக்கே........"

யோசிச்சு பாத்த கோயிந்தன், கடை யாவாரம் நல்லா எப்பவும் போல இருக்கணுமின்னு, "பட"க்குனு கேட்டதை விட இருநூறு ரூவா அதிகமா, ரெண்டாயிரம் எடுத்துக் குடுத்துட்டு, எலக்கட்டையும் எடுத்துட்டு வந்து, கடை வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டான் வழக்கம் போல.....

வசூல் செஞ்ச கச்சிக்காரங்க சும்மா இருப்பாங்களா? வசூல் தொகைய ஒலி பெருக்கியில சொல்ல, அங்கதான் ஆரம்பிச்சது பிரச்னை. ஆனா, மயிலுவுக்கும் கோயிந்தனுக்கும் இதைக் கேக்க எங்க இருக்குது நேரம்.....

ஆலமரத்தடியில வெளையாடுனது அந்தக்காலம். சின்னப் பசங்க கிராமசபை அலுவலக வளாகத்துல தொலைக்காட்சி முன்னாடி இருக்குறது இந்தக் காலம். அங்க இருந்த பசங்க, கோயிந்தன் மகன்கிட்டயும், மயிலு மகன்கிட்டயும் வசூல் விசயத்த எடுத்துச் சொல்லி ஒண்ணுக்கு ரெண்டா போட்டுக் குடுக்க , விபரம் போச்சு மயிலு பொண்டாட்டி சிவகாமி கிட்டயும், கோயிந்தன் பொண்டாட்டி வேலுமணிகிட்டயும்.

அடுத்த நிமுசத்துலயே கடை முன்னாடி,

"நான் எப்படி பணம் கொறச்சலாக் குடுத்துட்டு, என்னோட சாதி சனத்தோட பொழங்க முடியும்? கூட இருந்து, அவிங்க புத்தியக் காமிச்சுட்டாக! " ன்னு, மயிலு பொண்டாட்டி சிவகாமி.

"எச்சாக் குடுத்ததுல என்ன தப்பு? எஞ்சாதியோட சகாயம் மட்டும் வேணும்... காசு ரெண்டு சேத்திக் குடுக்கக் கூடாதோ?"ன்னு, சிவகாமியோட சத்தம் கேட்டு ஓடியாந்த, கோயிந்தன் பொண்டாட்டி வேலுமணி.

நிமுச நேரத்துல, கோயிந்தனும் மயிலுவும் விசயம் என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு. அப்புறம் என்ன, இருந்த கடை மயிலுவுக்கு! எதுத்தாப்புலயே புதுக் கடை ஒண்ணு, கோயிந்தனுக்கு. இட்லி தோசை போடுறவன் மயிலுகிட்ட, சட்னி சாம்பார் செய்யுறவன் கோயிந்தன்கிட்ட. டீ போடுறவன் மயிலுகிட்ட, வடை போண்டா போடுறவன் கோயிந்தன்கிட்ட. ஊர் சனத்துல பாதிப்பேரு பட்டணம் போயித்தான் இட்லி வடை சாப்புடறது இப்ப. மிச்சம் இருக்குறதுல பாதிப்பேர் மயிலு கடைக்கு, மிச்சம் இருக்குறவங்க கோயிந்தன் கடைக்கு. யாவாரம் வெளங்குமா?

மொதல்ல மயிலு குடும்பம் தெருவுக்கு வந்துச்சு. கடன், குடும்ப பாரம்னு மனசு ஒடஞ்சு போன மயிலு நெஞ்சு வலின்னு படுத்தவன் எந்திரிக்கவே இல்ல. அப்படியே பாடைல வடக்க போய்ச் சேந்துட்டான். போய்ச் சேந்து மாசம் ஆறு ஆவுது.


இங்க கோயிந்தனுக்கு ஓரளவு பரவாயில்ல. பையன் பட்டணத்துல படிக்குறான். ஆனாலும், இவனுக்கு எப்பவும் மயிலு நெனப்பு தான். சரின்னுட்டு, ஒரு மன அமைதிக்காக ஆலமரத்தடியில சித்த இருந்துட்டு வரலாம்னு போறான். எந்த மூணாவது விழுதுல மயிலுகோட பழக்கத்தை ஆரம்பிச்சானோ, அங்க சித்த இருந்துட்டு வரலாம்னு போறான். இவன் அந்தப் பக்கம் போயி ரொம்ப நாளாச்சு. ஆனா, இன்னைக்குப் போறான்......

போனா, அங்க அந்த மூணாவது விழுதை எடுத்துட்டு, ஊர் சனங்க தொலைக்காட்சி பாக்குறதுக்குன்னு புதுக்கட்டடம் ஒண்ணு ஆயிட்டு இருக்கு. அதப் பாத்த கோயிந்தனுக்கு, நெஞ்சு லேசாக் கட்டுனா மாதிரி இருந்தது. சரின்ட்டு, பெருசுக வெளயாடிட்டு இருந்த வட்டப் பாறைல ஒக்காரலாம்னு முதலாவது விழுதுக்குப் போறான். அங்க பாத்தா, கட்டடம் கட்டுறதுக்கு கல் வேணும்னு வட்டப் பாறையயும் தோண்டிப்புட்டாங்க. அந்தக் காட்சியப் பாத்த அவன், அந்த இடத்துல அந்த விநாடி மயிலுகிட்டயே போயிச் சேந்துட்டான்.

சாதி வெறியும், வளர்ச்சிங்கிற போர்வைல நடக்குற இறையாண்மைத் திருட்டுஞ்சேந்து, மயிலு, கோயிந்தன், வட்டப்பாறை, தன்னோட புள்ளை மூணாம் விழுதுன்னு எல்லார்த்தையும் போட்டுத் தள்ளின சோகத்துல, இப்பவும் அழுதுட்டு இருக்கு நம்ப ஊர் ஆலமரம்.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி!

8/30/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 7

வாவா பாடுபா மாயாநீ,
நீயாமா பாடுபா வாவா!

வணக்கம்! ஒரு ரெண்டு மூணு நாளா, நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்' ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.

சித்திரக்கவி வகைல நாம அடுத்து பாக்கப் போறது மாலை மாற்று! "ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி!". அதாவது கடைசி எழுத்துல இருந்து திரும்பி படிச்சாலும் அதே பாட்டு வரணும். அதாவது மணி மாலையை இட வலமாப் போட்டாலும், வல இடமா மாத்திப் போட்டாலும் ஒரே மாதிரி இருக்கு இல்லீங்களா? அது மாதிரிதான் இதுவும். இட-வலம், வல-இடம்னு எப்படிப் படிச்சாலும் ஒரே பாட்டு வரும். வழக்கம் போல எம்மோட செல்ல மகளை மனசுல இருத்தி, மாலை மாற்று அடிப்படைல எழுதினதுதான், மேல சொன்ன பாட்டு.

பொழிப்புரை:
வா - வருவாய்
பாடு - பாடு
பா - பாட்டு
மா - சிறப்பு
ஆயா - காப்பவள்
நீ - நீயே
நீ - நீ
யாம் - யாங்கள்
மா - மேன் நிலை
பாடு - பாடு
பா - அழகு
வா - வருவாய்

கருத்துரை: எங்கள் சிறப்பே, பாடல் பாட வருவாய் நீ, நாங்கள் மேன்மை அடைவதற்குப் பாட, அழகாய் வா! வா!!

இந்த வகைல பெரியவங்க அவங்க காலத்துல, பெரிய அளவுல பாடி இருக்காங்க. அதுல இருந்து உங்க கவனத்துக்கு ஒண்ணு:

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா!

காலேமேலே = முதலும் முடிவுமாக இருப்பவனே
கானீஈ = செல்வமாக விளங்குபவனே
காஅழீ = காழிப்பதியில் உள்ளவனே
மாலே = மயக்கம் செய்பவனே
மேபூ = மேன்மையுடன் பூத்த
பூமேலே = தாமரையின் மேலே வீற்றிருக்கும்
மாலே = திருமாலும்
காலேமேலே = திருவடியையும் திருமுடியையும்
காண் நீ காழி = காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே
கா = காத்தருள்க

(.........இன்னும் வரும்........)

8/29/2008

உங்கள் கவனத்திற்கு: பிரிவு - 508

இன்றைக்கு சற்று மாறுதலாக ஒன்றைப் பதிவிடலாம் என்று எண்ணிய போது, சட்டென்று நினைவுக்கு வந்தது நான் சமீபத்தில் தெரிந்து கொண்ட ஐக்கிய அமெரிக்க மாகாணங்க(U.S.A)ளின் மைய அரசு, சட்டப் பிரிவு-508. எதிர்வரும் காலங்களில் இந்தப் பிரிவுக்கு படியும்(compliance )படியாக மென்பொருள் மற்றும் பாவிப்பான்(application)களை மாற்றும் பணி என்பது மேலோங்கி இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மென்பொருள் கட்டமைப்பாளன் என்கிற முறையில் யானும் நேரடியாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

சரி, பிரிவு-508 என்ன சொல்கிறது? எந்தவொரு கணினிக் கையாள்கையையும் பார்வையற்றவர் மற்றும் கண் கோளாறு உடையவர்களும் செய்யக் கூடிய வகையில் இருக்க வேண்டுமென்பதே அது. இந்த இடத்தில் உங்களுக்கு கேள்வி எழலாம், எப்படி கண் பார்வை அற்றவர் கணினித் திரையை முதலில் பார்க்க இயலும் என்று. உங்கள் கேள்வி நியாயமானதே!

ஆனால் கண்பார்வை அற்றவருக்கும் கணினிக்கும் இடைமுகப்பாக(interface) இயங்கும் உபகரணங்கள், கண்பார்வை அற்றவருக்கும் கணினிக்கும் ஒலி வடிவத்தில் தொடர்பை உண்டாக்கி, எல்லா வேலைகளையும் செய்ய வல்லது. இதனூடாக இன்றைக்கு, ஏராளமான கண்பார்வை அற்றோர் பயன் அடைந்து வருகிறார்கள். ஆகவே, கணினியும் கணினியில் உள்ள மென்பொருள் பாவிப்பான்களும் இந்த உபகரணங்களுக்கும், ஏன் பார்வை உடையவர்களுக்கே கூட திரையில் இருக்கும் அத்துனை ஒளி வடிவங்களையும் துல்லியமாகவும், ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் காண்பிக்க வேண்டும். அது தான் பிரிவு-508.

இதன்படி வில்லைகள்(buttons), படங்கள்(images), தொடுப்பு(links)கள் முதலானவை, எழுத்தால் ஆன விளக்கங்களை உடன்கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருக்கிற பட்சத்தில், இதை இடைமுகப்பு(interfaces)கள், திரை(screen)யில் இருப்பவற்றை ஒலி வடிவத்தில் மாற்றி, பார்வை அற்றவருக்கு தகவலைப் பரிமாற முடியும். இதன் பொருட்டு வலை(web)யகம், உலாவி(browser), மின்வெளி(cyber) தொடர்பான அமைப்புகள் ஒன்று கூடி பிரிவு-508'க்குப் படிய(comply)ச் செய்யும் வகையிலான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், மென்பொருள் தயாரிப்பாளர்களும் இந்தப் பிரிவுக்கு கட்டுப்படும் வகையில் மேலும் சில மாறுதல்கள் வரக்கூடும்.

பெரிய நிறுவனம் ஒன்றின் வலையக சாளரங்களை, பார்வை அற்றோரால் பாவிக்க இயலமுடியாத காரணத்தால் நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் எனக் கோரி வழக்கு தொடர்ந்து உள்ளமை, இந்த பிரிவு தொடர்பான மாறுதல்களைத் துரிதப்படுத்தி உள்ளது. மேலும் மின்வெளி தொடர்பான வேலைக்கு விண்ணப்பிப்போரிடம் இது தொடர்பான கேள்விகள் கேட்கப்படலாம். ஆகவே, ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ணவும், தகவலை தமிழ் வலையக வாசகர்களுக்குத் தரவுமே இந்தப் பதிப்பு.

மேலதிகத் தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொடுப்புகளைப் பாவிக்கவும்.

நிறுவன வழக்கு பற்றிய செய்தி

பிரிவு 508ம் அதற்குப் படிதலும்

எமது பதிவு

(...............எழுத்து நடைலயும் நாங்க எழுதுவம்ல?!...................)

8/28/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 6

பா      வா      மை      வை,
நீ       மீ          ஊ         ஈ,
வீ      மோ      கோ      போ,
தீ      தா        ஐ       ஓ!

வணக்கம்! மேல நான் எழுதினது பாட்டுங்க!! "கவி காளமேகத்தின் தாக்கம்"ங்ற தலைப்புல பல தரப்பட்ட வகையிலான பாட்டு எழுதிட்டு வர்றோம். நீங்க இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிக்கலைனா அதுகளை மொதல்ல படிச்சுட்டு வந்தா வசதியா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். மேல சொன்னது ஓரெழுத்துப் பாட்டுங்க. இதுவும் சித்திரக்கவி வகையச் சேந்ததுதாங்க. வழக்கம் போல, செல்ல மகளை மனசுல இருத்தி எழுதினதுதாங்க இதுவும்.

பொழிப்புரை:
பா : அழகே
வா : வா
மை : கண்மை அல்லது பொட்டு
வை : இட்டுக் கொள்
நீ : நீ
மீ : உயர்
ஊ : அன்னம் அல்லது உணவு
ஈ : கொடு /தானம்
வீ : மலர்
மோ: முகர்தல்
கோ : இறைவன்
போ : செல்
தீ : இனிமை
தா : கொடு
ஐ : அச்சம்
ஓ : ஒழி அல்லது தவிர்

கருத்துரை: அழகான மகளே, வந்து கண்ணுக்கு மை இட்டுக் கொள்; பின்பு உயர்ந்த நிலை கொள்ள அன்னதானம் இட்டபின் வாசமிகு நறுமலர்களுடன் இறைவனைச் சென்று வழிபடு. அச்சம் தவிர்த்து என்றும் இனிமை கொள்வாயாக!

பொருள் தர வல்ல ஓரெழுத்துகள் நிறைய உள்ளன. பின் வரும் காலங்களில் அவை பற்றி விபரமாக அலசுவோமாக!


"மா" ன்னா மாங்கா(A For Apple)...... தொடர் பதிவு!

நம்ப மகேசு சொன்னா, அதை கண்டுங் காணாமப் போக முடியுமா என்ன? அதான் தொடர் ஓட்டத்துல நாமும்......

thatstamil.com
ஊர் சேதிகளுக்கு! நடிகைமாருங்க பத்தி முத்தாய்ப்பா குடுக்குற எள்ளல் வெகு அலாதி! ரொம்ப நல்லா இருக்கும்.
காட்டாமணக்கு கல்யாணம் பண்ண, வீட்டாமணக்கு வெளக்குப் புடிச்சுச்சாம்.

dinamalar.com
ஊர் சேதிகளுக்கு..... உடனடியா பிரசுரம் ஆகிறதால நமக்கு இதுதான் பிரதானம். முந்துற நாயும், பிந்துற காயும் என்னைக்கும் செல்லும்.

cnn.com
இங்கத்த சேதிகளுக்கு..... ஒபாமா பேச்சு கேக்குறதே வேலையாப் போச்சு.... ஓட்டச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தா சரிதான?

google.com
நாலும் தேடிப் புடிக்க............. கெட்டிக்காரனோட வாழை எட்டே மாசத்துல!

etrade.com
..... காசப் போட்டாச்சு.... அது, எந்த அளவுக்கு கரைஞ்சு இருக்குன்னு நெலவரம் பாக்கணுமே... கண் கெட்ட பொறகு, கதிரவனுக்கு காலைவணக்கம்!

theserverside.com
மென்பொருள் கட்டுமான நிபுணர்னு சொல்லிக்கிட்டுத் திரியறம். அப்ப அப்ப எதையாவது எடுத்து உடணுமே? அதுக்குத் தான் இங்க.... வாயுள்ள புள்ளை பொழச்சிக்கும்!

howstuffworks.com
பெத்த மவளை சமாளிக்கத்தான்.... அவ கேக்குற கேள்விகளுக்கு இங்க தான பதில் கண்டு புடிக்கோணும். எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சு இருப்பாங்க.... எறச்ச கெணறுதான் ஊறும். கேக்குற புள்ளை தான் தேரும்!

dictionary.com
வெள்ளைக்காரன் சொன்ன சொல்லு விளங்கலைன்னா, இவருதான் நமக்கு வழி காமிப்பாரு.... அத்தை சொல்லியாவது வித்தை பழகு!

projectmadurai.org
நம்ம வாழ்க்கையே இங்கதாங்க ஓடிகிட்டு இருக்கு... சங்ககாலத்துல பாடி வெச்ச பாட்டுக படிக்குறது நமக்கு நொம்பப் புடிக்கும். பாட்டுப் படிச்சவன் சபைல.... சீட்டு ஆடுனவன் சந்தியில!

kumudam.com
வாரம் ஒரு வாட்டி, இங்க வந்து எல்லாத்தையும் பாத்துருவேன். எல்லாத்தையும் ஒரு "புடி, புடி"ச்சுட்டு, கடைசில தயிர் சாதம் உண்ட திருப்தி வரும்.
காணாத கழுதை கஞ்சியக் கண்டுச்சாம்! ஓயாம, ஓயாம, ஊத்திக் குடிச்சுச்சாம்!!

charlotte.com
உள்ளூர் சேதி பாக்கணும்..... பள்ளிக்கூடம் நெலவரம் தெரியும்.... மவ அங்க இருப்பா, அதான்! மழை கிழை வந்தா போயி கூட்டியாரத்தான். ஆடாத கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இரு!

zillow.com
உள்ளூர் வீட்டு வெலை நிலவரம் பாக்க.....
தும்ப உட்டுட்டு வாலைப் புடிக்கலாமா?

weather.com
பல ஊர்களுக்குப் போறோம், வர்றோம்.... அப்ப மழை, பனி நெலவரம் பாக்கணுமா, இல்லையா? முன்யோசனைக்காரனுக்கு முன் எலை!

shopping.com
எந்தப் பொருளும் வாங்குறதுக்கு முன்னாடி, இங்க பூந்து ஒரு அலசு அலசீற மாட்டோம்.?!ஆத்துல கொட்டுனாலும் அளந்து கொட்டு!

bredemeyer.com/
மென்பொருள் பாவிப்பானை வடிவமைக்க என்ன என்ன செய்யணும்னு சந்தேகம் வந்தா, இங்க வந்து கொஞ்ச நேரம் செலவு பண்ணுவேன். வாத்தியார் வெச்சு வித்தை பழகு!

இப்ப நாம கொக்கி போடணுமா? ம்ம்ம்ம்ம்...யார இழுக்கலாம்?

மதுவதனன் மௌ.
உருப்புடாதது_அணிமா
சீமாச்சு

விதிமுறைகள்

1.மூவரை விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.
2.தங்களுடைய தளங்களைத் தரக்கூடாது.
3.அடிக்கடி அணுகும் தளங்களை அளிக்கவேண்டும்.
4.தொடர் பதிவின் தலைப்பும் கருத்தும் "மா" ன்னா மாங்கா..., அதாவது A For Apple...

8/27/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 5

"சிலேடை நயம் இல்லாம, கவி காளமேகத்தோட தாக்கம் இவனுக்கு எப்படி வரும்?". இப்படிக் கேக்க ஆரம்பிச்சுட்டாங்கையா, கேக்க ஆரம்பிச்சுட்டாங்க! இப்படியான பொறகு, நாம சிலேடைல பாட்டு எழுதித்தான ஆகணும். சரி, அந்த வகைல எளிதான சொல்லுகளை வெச்சு எழுதின, இரட்டுற மொழிதல் (சிலேடை) பாட்டு ஒன்னைப் பாக்கலாங்க.

சோலை யழகு துள்ளி யோடும்
உள்ளம் கவர்ந்த பொன் வளர்
மாசறு மணி
மேனித் தளிர்
மான் மகவு மேஅது!

முதற்ப் பொருள்: சோலையைப் போல் அழகான, துள்ளி ஓடுகிற, உள்ளத்தை கவரக்கூடிய பொன்னாய் அரும்புகிறவள்; கெடுதல் இல்லாத, மணியைப் போல் உயர்ந்த மேனியுடன் வளர்ந்து வருபவள்; மான் போன்ற எழில் கொண்டவளுமாய் இருப்பது என் மகளே!

இரண்டாவது பொருள்: சோலை போன்றதொரு அழகாய், துள்ளி ஓடுவதும், உள்ளத்தைக் கவரக் கூடியதும், பொன்னான இளம் தளிர் போன்றதும், எந்த விதமான தீங்கு இழைக்காத, மேலான, இளமையான உடலைக் கொண்டதுமாய் இருப்பது மான் குட்டியே!

(இனியும் வரும்....)

கனவில் கவி காளமேகம் - 2

வணக்கம்! நாம எதிர்பார்த்தது மாதிரியே கவி காளமேகம் இன்னைக்கும் கனவுல வந்து, என்னடா பேரான்டி நல்ல சுகமானு விசாரிச்சுட்டு, "உணவு உட்கொள்ளுற முறைகள் என்னென்ன?" னு கேட்டாரு. "நேத்துதான் என்னால பதில் சொல்ல முடியலை. இதுக்கு எனக்கு பதில் தெரியுமே! உண்ணுவது, குடிப்பது!!"ன்னு சொன்னேன். அவரு, "அட, எனக்குத் தெரியாதா, நீ ஒரு அரை வேக்காடு"ன்னு சொல்லிட்டு "கட கட"ன்னு சிரிச்சாரு. நமக்கு நொம்ப தர்ம சங்கடமாப் போச்சு. அப்புறம் அவரே சொன்னாரு, "உண்டல், தின்றல், நக்கல், பருகல்னு நாலு விதம் இருக்குடா பேராண்டி. இந்த நாலு வகைய, இன்னும் குறிப்பிட்டு சொல்லணும்னா, அதை பனிரெண்டு வகையா பிரிக்கலாம்"னு. நாம, "சரி தாத்தா! நீங்களே அதைப் புரியும் படியா சொல்லுங்க!"ன்னு கேக்க அவரு சொன்னதிலிருந்து:

உண்டல்: பசியாற, ருசித்துப் புசிப்பது. காலை உணவு உண்டேன்.


தின்றல்: தின்னுவது, கொஞ்சமா ஆற அமர அவகாசத்தில் உட்கொள்வது. மொட்டுக் கடலை தின்றேன்.

நக்குதல்: நாக்கால் நக்கி உட்கொள்வது. தேன் நக்கியது நினைவுக்கு வந்தது.

பருகல்: திரவ உணவை சிறுக உட்கொள்வது. தேநீர் பருகினேன்.

அருந்துதல்: மிகச்சிறிய அளவு உட்கொள்வது. மது அருந்தினேன்.

உறிஞ்சுதல்: வாயைக் குவித்து திரவ உணவை ஈர்த்துக் குடிப்பது. சோறு உண்ட பிறகு தட்டில் மீதம் இருந்த மோரை உறிஞ்சினேன்.

குடித்தல்: திரவ உணவை பசி நீங்க சிறிது சிறிதாக உட்கொள்வது. கூழ் குடித்தேன். கம்பங்கஞ்சி குடித்தேன்.

துய்த்தல்: சுவைத்து மகிழ்ந்து உட்கொள்வது. அவள் அன்பில் கலந்து கொடுத்த அவலைத் துய்த்தேன்.

நுங்கல்: இருந்த திரவத்தை ஒரே எடுப்பில் உறிஞ்சுவது. அச்சோபாத்திர இளநீரை நுங்கியதில் இன்பம் கொண்டேன்.

மாந்தல்: தீராத வேட்கையுடன் "மட மட"வென உட்கொள்வது. தாகவேட்கையில் குடத்து மோர் முழுதும் எனது மாந்தலில் தீர்ந்து போனது.


மெல்லல்: திண்ணமாக(கடுமை) இருக்கும் பொருளைப் பல்லால் கடித்து துவைத்து உட்கொள்வது. கொப்புத்தேங்காயை மெல்லுவதில் பல்லின் வலிமை கூடியது.

விழுங்கல்: பல் மற்றும் நாக்கிற்குப் படாமல் தொண்டை வழியாக உட்கொள்வது. தாத்தா கொடுக்கும் இலைச்சாறை விழுங்க ஏனிந்தத் தயக்கம்?

இதாங்க சொன்னாரு. எனக்கு இப்பத்தாங்க புரியுது, ஏன் தமிழ் செம்மொழின்னு. ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமா குறிப்பிட்டுச் சொல்ல முடியுது பாத்தீங்களா? எதுக்கும் கவி காளமேகம் நாளைக்கும் வந்தா நல்லா இருக்கும். கனவுல அவரு வருவார்னு நம்புவோம். நம்பிக்கைதான வாழ்க்கையே?!


(......கனவுல இன்னும் வருவார்......)