6/22/2024

இலக்கியக் கூட்டம்

இலக்கியக் கூட்டம், வாசகர் கூட்டம், எழுத்தாளர் கூட்டம் முதலானவை எல்லாமே, மனப்பூட்டுகளை, கதை கவிதைச் சாவிகள் கொண்டு திறந்து விடுவதற்குத்தான். பங்கேற்பாளர்கள் தயக்கமின்றிப் பேச வேண்டும். சிந்தனைவயப்பட வேண்டும். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரிடமிருந்து மற்றவர் ஏதாகிலுமொன்றை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்குத்தான். ஆனால் பெரும்பாலான கூட்டங்கள் நிகழ்த்துகலை நிகழ்ச்சிகளாக இடம் பெறுகின்றன. எப்படி?

சிறப்பாளர்(performer) கலந்து கொண்டு பேசுவார். கதை சொல்வார். கூட்டம் கேட்டுக் கொண்டு இருக்கும்; இலயிப்பில், எந்த அளவுக்கு மனம் குளிர்கின்றதோ, பரவசமடைகின்றதோ, களிப்புக் கொள்கின்றதோ அந்த அளவுக்கு நிகழ்ச்சி மதிப்பீடு பெறும். தன்வயச் சிந்தனைக்கு இடமில்லை. இதுவே ஓரிரு படைப்புகளைக் கொடுத்து வாசித்து வரச்சொல்லிவிட்டு அவரவர் கருத்துகளைப் பகிரச் சொல்லிப் பார்க்கலாம். கடைசியாகச் சிறப்பாளர் அவற்றையெல்லாம் தொகுத்து விரித்துரைத்துச் சிறப்புரை ஆற்றலாம்.

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

-தேவதச்சன்

இக்கவிதையைக் கொடுத்த மாத்திரத்தில் வாசிக்கின்றீர்கள். புரியாதது போல இருக்கும். ஒன்றுக்குப் பலமுறை வாசித்தபின் புரியத்துவங்கும். அது துவக்கநிலைப் புரிதல். உணர்வுகள் களிப்பூட்டும். இந்த அளவில் நின்றுவிட்டால் அது மேநிலை வாசிப்பு /புரிதல் என்றாகிவிடும்.

மேலும் சிலமுறை வாசிக்கின்றீர்கள். குறியீடு, படிமம், இடக்கரடக்கல், நவிற்சி, ஏற்றணி முதலானவற்றை இனம்காண முடிகின்றதென வைத்துக் கொள்வோம். அது இடைநிலை வாசிப்பு அல்லது புரிதல் என்றாகிவிடும்.

மேலும் சிலமுறை மீண்டும் மீண்டும் வாசிக்கின்றீர்கள். சிந்திக்கத் தலைப்படுகின்றீர்கள். தத்துவார்த்த நிலையில் சிந்தைவயப்படுகின்றீர்கள். ஆழ்நிலை வாசிப்பு அல்லது புரிதல் என்றாகிவிடும்.

ஆழ்நிலை வாசிப்பேயாகினும், ஆளுக்காள் புரிதல் மாறுபடலாம். காரணம், ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவரவருக்கான பின்புலம், கல்வி என்பனவெல்லாம் வேறுவேறானவை. உங்களின் புரிதல், தத்துவார்த்த வெளிப்பாடு என்பது எழுதிய படைப்பாளனுக்கே கூட புதுத்திறப்பைக் கொடுக்கக் கூடும். அதுதான் படைப்பின் வெற்றி. படைப்பு என்பது ஓர் ஊடகம்தான். அந்த ஊடகம் எப்படியான வீச்சைக் கொடுக்கின்றது, அதனூடாக எப்படியான சிந்தனைப் பயணங்கள் அமைகின்றன என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி அமைகின்றது.

துணி துவைப்பதென்பது ஒரு குறியீடு. துணி துவைப்பதென்றால் என்ன? தூய்மைப்படுத்துவது, அழுக்கு நீக்குவது, புதுப்பொலிவூட்டுவதெனப் பலவகையாகக் கொள்ளலாம். அடிப்படை மேன்மை என்பது.

சமூகச்செயற்பாட்டில் ஈடுபடும் ஒருவருக்கு தேவையற்ற ஏச்சும் பேச்சும் இடம் பெறக்கூடும். காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்.

சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன். காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம். தொடர்ந்து செயலாற்றி வருங்கால் கூக்குரல்கள் படிப்படியாக ஓய்ந்தே போகும்.

அடுத்த துணி எடுத்தேன். காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம். கூக்குரல்கள் நின்று போய்விட்ட நிலையில், ஏவப்பட்ட ஏச்சுகளும் பேச்சுகளும் மனத்தைத் தைக்கவல்லது. அவற்றைப் புரிந்து கொண்டு, சகித்துக் கொண்டு செயற்பட்டாக வேண்டும்.

இதே கவிதைக்குப் பொருந்தும்படியாக வேறொருவர் வேறொரு புரிதலை, அதாவது முழுமையானதொரு ஈட்டினைக் கொடுக்க இடமிருக்கின்றது; அதற்குப் பின்னால் வேறொருமாதிரியான தத்துவார்த்தம் வெளிப்படக் கூடும். அப்படிக் கிடைப்பதுதான் இலக்கியப்பழரசம்.

நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை.

-தேவதேவன்

இஃகிஃகி, உங்கள் மண்டையைக் கசக்கி மேற்கொடுக்கப்பட்ட கவிதையின் இரசத்தைப் பிழிந்து கொடுங்களேன் பார்ப்போம்!



6/21/2024

எழுதுதல்

நண்பர் கார்த்திகைப் பாண்டியனின் நேர்காணல் கண்டேன். பொதுப்புத்தியின் மறுபக்கத்தைத் துல்லியமாகச் சொல்லியிருக்கின்றார். உடனடிக் கவனயீர்ப்புக்கும் விழுமியநிலைத்தன்மைக்குமான இழுபறியாகத்தான் இவற்றைப் பார்க்க வேண்டியுள்ளது. https://youtu.be/yeSxM10NanA?si=ml_nabY-krfKlmVN

ஒரு கூட்டத்திற்கான விளம்பரநறுக்கினைக் கண்டேன். கூட்டத்தின் கருப்பொருள், எழுத்துப்பிழை சவால்கள் என்பதைக் கண்டதும் ஆர்வம் பற்றிக் கொண்டது. அந்த நறுக்கிலேவும் பிழைகள் பல இருக்கக் கண்டேன். சுட்டியதும் நண்பர் சொன்னார், நீங்கள் ஏன் அவருடன் சேர்ந்து பணியாற்றக் கூடாதென? அவசியம் தொடர்பு கொள்கின்றேனெனப் பதிலுரைத்தோம்.

மீண்டும் எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் சொல்லியதிலிருந்து, “குறைவாக எழுதினாலும் நன்றாக எழுத வேண்டும்”. ஏன்?

தமிழ்க்கணிமையில் சவால்கள் நிறைய உள்ளன. கணிமைத்துவத்தின் அடிப்படையே சீர்மைதாம்(standard and consistency). எழுதுகிறேன், வாசிப்பவர்கள் சரியாகவே புரிந்து கொள்கின்றனர். உனக்கு என்ன பிரச்சினை எனக் கொதிக்கின்றனர். பொறுமையாகத்தான் எதிர்கொண்டாக வேண்டும்.

ஒரு பத்தி எழுதுகின்றீர்கள். அதனைத் தானியக்கமாக, ஒலிப்புத்தகம், செயற்கைநுண்ணறிவுப்புலத்துக்கான உட்கிடை, காணொலி, பதாகை முதலான பல உருக்களாக, ஒலிப்புச்சிதைவு, பொருட்சிதைவு, பொருள்மயக்கம் ஏற்படாதவாறு இடம் பெறுகின்றதா நம் எழுத்து? பெரும்பாலான எழுத்துகள் அப்படி அமைவதில்லை. வியந்தோதலின் பொருட்டு மிகைப்படுத்தி எழுதுகின்றோம். உண்மை பல்லிளித்து விடுகின்றது. கணிமைத்துவம் தோற்றுவிடுகின்றது.


Write elaborate content
Use consistent terms
Use of pronouns
Inclusive language
Use of “It” pronoun
Article labels – New, updated, deprecated
Structured format
Crafting the perfect SEO-driven prompt
Keyword optimization beyond the basics

இவையெல்லாம் எளிய எழுத்தின் முகாந்திரங்கள். தானியக்கப் புலங்களுக்குத் தோதான வரையறைகள். இவற்றைக் கடைபிடித்தால்தான் அந்த எழுத்து முழுமை பெறும். அண்மையில் தேர்தல் ஒன்றுக்காகப் பணியாற்றி இருந்தோம்(www.united4fetna.com). நவீன நுட்பப் புலங்கள் செம்மையாகவே பயனீட்டைக் கொடுக்கின்றன, எழுத்து எழுத்தாக இருக்கும் நிலையில்.

மீண்டும் கார்த்திகைப் பாண்டியன் அவர்களது கருத்தைத்தான் இரவல் பெற வேண்டியதாக உள்ளது. வெறும் பிடிஎஃப் கலாச்சாரமாகி விட்டது நம் எழுத்துக்களம். தேடுபொறிக்குக் கூட அவை அகப்படுவதில்லை. தேடலுக்கும் நாடலுக்கும் இடமில்லாவுலகில் இலக்கியமோ ஆவணமயமாக்கமோ அவை தோற்றே போகும்.

-பழமைபேசி.

6/12/2024

தேர்தல் 2024

“வேலைக்கு மதிப்பில்லை. வேலையே செய்யாதவர்கள், இருக்கும் நேரத்தையெல்லாம் பரப்புரைக்கான வேலையில் செலவிட்டு வென்று விட்டார்கள்”.

இப்படியான கருத்தினைக் காண நேரும்போது கருத்தாளர்களின்பால் இரக்கமே மேலிடுகின்றது. தேர்தலையும் தேர்தலில் பங்களித்த வாக்காளர்களையும், அவர்கள் இன்னமும் மனத்தில் கொள்ளவில்லையென்பதே பொருள்.

நடந்து முடிந்த தேர்தல் என்பது, 24 வேட்பாளர்களுக்கிடையேயான தேர்தலாக நான் கருதவில்லை. சாமான்யமக்களின் பிரதிநிதியான துணைத்தலைவருக்கும் தலைவருக்குமான தேர்தலாகவே இடம் பெற்றது என்பதுதான் சரியாக இருக்கும்.

தன்னுடைய செயற்குழுவில் இருக்கும் துணைத்தலைவரைக் கலந்தாலோசிக்காமலே தன்னிச்சையாகத் தம் கருத்தினை, செயற்குழுவில் வெளிப்படுத்துகின்றார் தலைவர். “இன்னாரை அடுத்த தலைவருக்காய் முன்மொழிகின்றேன். அதுதான் என் பரிந்துரை”. அக்கூட்டத்தில் இருந்த துணைத்தலைவர் வாளாது இருந்து விடுகின்றார்.

சிக்காகோ மாநாட்டில் வைத்து, முன்னாள் தலைவரும், இந்நாள் தலைவரும், துணைத்தலைவரிடம் அதே முன்மொழிவைத் தெரிவிக்கின்றனர். போட்டியின்றித் தெரிவு செய்வதானால் சரியென்றுதான் நீங்கள் முன்மொழிபவர் சொல்லி இருக்கின்றார். ஆனால் தேர்தலில் நான் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடுவதாகவே இருக்கின்றேனெனச் சொல்லிவிடுகின்றார்.

சிலநாட்கள் கழித்து, பேரவைப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான குழுமத்தில் தலைவர், இன்னாரைத் தலைவராகப் பரிந்துரைக்கின்றேனெனப் பதிவு செய்கின்றார். அது கண்ட பொதுக்குழு உறுப்பினர் கேட்கின்றார், “ஏன் தற்போதைய துணைத்தலைவர் தலைவர் பொறுப்புக்கு முன்மொழியப்படவில்லை? இப்படியான பரிந்துரையை துணைத்தலைவர் ஒப்புக்கொள்கின்றாரா?”

துணைத்தலைவர் நடந்ததையெல்லாம் சுருக்கமாகச் சொல்லிவிடுகின்றார். தலைவருக்கான சறுக்கல் வெளிப்படையாகவே துவங்கிவிடுகின்றது. தேர்தல்களமும் சூடுபிடிக்கத் துவங்குகின்றது. “போட்டியின்றி” எனும் சொல் மறைத்துப் பதிவிடப்பட்டதும், "துணைத்தலைவர் தலைவர் பொறுப்புக்கு" என்பதான மரபும் பேசுபொருளாகிவிடுகின்றது.

துணைத்தலைவர்வசம் வாக்காளர் பட்டியல் அப்போதைக்கு இருந்திருக்கவில்லை. மேலும், தேர்தலில் போட்டியிடத் தகுதி வரையறைகள் உண்டு. அந்தத் தகுதியைக் கண்டறிவதற்கான தரவுகளும் கைவசம் இல்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகின்றது. அப்போதும் அந்தத் தரவுகள் கையளிக்கப்படவில்லை. ஆகவே யார் யாரெல்லாம் போட்டியிடத் தகுதிகொண்டவர்கள் என்பது அறிந்திராதநிலை. கிட்டத்தட்ட, "கைகால்களைக் கட்டிப்போட்டுவிட்டு நீச்சலடி" என்பது போன்ற நிலைதான் துணைத்தலைவருக்கு.

தலைவர் அவர்களின் பங்களிப்பு கைகொடுக்கத் துவங்குகின்றது துணைத்தலைவருக்கு. எப்படி? பொதுக்குழுவில் வைத்து இடம் பெற்ற தலைவரின் பதிவைக் கண்டு வெகுண்ட பலரும் துணைத்தலைவரை நோக்கி ஒவ்வொருவராக வரத் துவங்குகின்றனர். பழைய விழா மலர்கள், கமிட்டி உறுப்பினர் பட்டியல் முதலானவற்றைக் கொண்டு தகுதிநிலையைக் கண்டறிய முற்படுகின்றோம் (ஆமாம், நானும்தான்). குறிப்பிட்ட ஆண்டின் விழா மலரேகூட இணையதளத்தில் கிடைக்கப் பெறவில்லை. மிகவும் இடர்ப்பாடாக இருந்தது.

நிறைய நண்பர்கள் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தனர். ஓரளவுக்குப் பரவலாக்கம், பேலன்ஸ் முதலானவையும் கடைபிடிக்கப்பட்டாக வேண்டும். தகுதிநிலையும் இருக்க வேண்டும். காலம் குறுகியதாகவே இருக்கின்றது. மன அழுத்தம் கூடிக் கொண்டே இருக்கின்றது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு விடுமோயென்கின்ற பதற்றம். அச்சுறுத்தல்களும் நிலவி வந்தன. 12 இடங்களுக்கு மாற்று வேட்பாளருடன் 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. ”அப்பாடா” என ஓர் இரவுதான் உறங்க முடிந்தது.

ஆங்காங்கே துணைத்தலைவர்தரப்பு வேட்பாளர்கள் அணுகப்பட்டு, போட்டியிலிருந்து விலகச் செய்வதற்கான பணிகள் துவக்கப்பட்டிருந்தன. அச்செய்திகளைக் கேள்வியுற்ற, மேலும் பலர் எதிர்க்கோலம் பூண்டனர். ஆனாலும் எங்களுக்குள் கடும் மனச்சுமை ஏற்பட்டிருந்தது என்பதுதான் உண்மை. வாட்சாப்களில் உண்மைக்குப் புறம்பானதும், தனிமனித வன்மம் கொண்டதுமான தகவல்கள் திட்டமிட்டே பரப்பப்பட்டன. அவற்றுக்கெல்லாம் உடனுக்குடனே உரிய தரவுகளுடன் விடையளித்துக் கொண்டிருந்தோம் மிகவும் அமைதியாக.

தேர்தல் அலுவலர், அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவிக்குமுன்பேவும் தலைவர் தம்தரப்புப் பட்டியலை வெளியிட்டுப் பரப்புரையைத் துவக்கினார். மேலும் பல வாக்காளர்கள் இதுகண்டு எதிர்க்கோலம் பூண்டனர். வெளிப்படையாக எவரும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனாலும் எங்களுக்குச் சன்னமாக அவர்களுடைய உணர்வுகள் வந்து சேர்ந்தபடியே இருந்தன.

சில மணி நேரங்கள் கழித்து, அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியானதும்தான் எங்களுக்குச் சற்று ஆசுவாசம் பிறந்தது. அதற்குப் பின்னர், நாங்கள் பரப்புரையைப் பறக்க விட்டோம் தரவுகளை முன்வைத்து. அத்தனை பொய்களையும் அனாயசமாகத் தவிடு பொடியாக்கினோமென்றால் அது மிகையாகாது!

தலைவர் தரப்புக்கான ஆதரவுப்பட்டியல் மிக நீளமானது. அவர்களுக்கான உறுதி ஓட்டுகள் 45%. துணைத்தலைவர் தரப்புக்கு 25%. நடுநிலை வாக்காளர்கள் 30%. இப்படியான நிலையில்தான் பரப்புரைக்காலம் துவங்கிற்று. தலைவரும், தலைவர் தரப்புக்கு ஆதரவு எனச் சொல்லிக் கொண்டோரும் செய்த சிலபல காரியங்களும்(சொசெசூ) நாங்கள் மேற்கொண்ட பணிகளும் களத்தை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இருந்த 45% ஓட்டுகளில் கொஞ்சம் இழப்புக்குள்ளாகி 40% ஓட்டுகளைத் தலைவர் தரப்பு பெற்றது. எஞ்சிய 60% ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் துணைத்தலைவர் தரப்புக்கு வந்து சேர்ந்தன. எல்லா வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

காலம் தாழ்ந்திடினும், வாய்மையே வெல்லும்!

-பழமைபேசி, 06/12/2024.

6/09/2024

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் 2024-2026

பேரவை என்பது 62 அமைப்புகளை உறுப்புகளாகக் கொண்டுள்ளது. அதற்கும் மேற்பட்டு, கனடா, அமெரிக்கா, இந்தியா, ஏன் உலகெங்குமிருந்து கவனிப்பவர்கள் உண்டு. எனவே ஆளுக்காள் ஒவ்வொருவிதமான பார்வை கொண்டிருப்பர். இயன்றமட்டிலும் நேர்மையாக எழுத விழைகின்றேன். இருந்தாலும், நான் தேர்தலில் இடம் பெற்ற அணிகளுள் ஓர் அணியை ஆதரித்தவன். இந்தப் புரிதலோடு மேற்கொண்டு வாசிக்க வேண்டுகின்றேன். #UnconsciousBiasAlert

செயற்குழுவில் இருக்கின்ற எல்லாப் பொறுப்புகளுக்கும், ’எலக்சன்படி’ கட்டமைப்பைப் பயன்படுத்தி இணையத்தினூடாக நடந்த தேர்தல் இதுவே முதன்முறையாகும். தேர்தல் விதிமுறைகளை மிக நேர்த்தியாகக் கொண்டிருக்கும் சட்டக்கோப்பு விதிமுறை வகுப்பாளர்களான பேரவை முன்னோடிகளும், நெறிவழுவாமல் நடத்திக் கொடுத்த தேர்தல் அலுவலர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்களாவர்.

ஏன் இந்தப் பதிவினை எழுத வேண்டியுள்ளது? பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வு ஆவணப்படுத்தப்பட வேண்டும். எனக்கே கூட என்னெவெல்லாம் நிகழ்ந்தது என்பது எதிர்காலத்தில் மறந்து போகக் கூடும். ஆகவே எழுதிப் பதிய வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

பேரவையிலிருந்து முற்றாக ஒதுங்கி இருந்தேன். 2017ஆம் ஆண்டு விழாவுக்குப் பிறகு அமைப்பில் தலையெடுத்த வணிகமயம், தனிமனித ஆதிக்கம் முதலானவை பெருகிக் கொண்டே வந்தன. விருப்பு வெறுப்பின்றி அவற்றைப் பற்றி அவ்வப்போது தொடர்ந்து எழுதியும் வந்தோம். முழுக்க முழுக்க அமைப்பின் செயற்பாடுகளையும் பொறுப்பில் இருப்பவர்களின் செயற்பாடுகளைப் பற்றியும்தானேவொழிய, எவ்விதத்திலும், இயன்றவரை, தனிமனிதர்கள் குறித்தோ பெயர்குறிப்பிட்டோ விமர்சிக்காமல், கவனமாகவே இருந்து வருகின்றோம். எம் 18ஆவது வயதில் கோவையில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் Asst Foreman வேலைக்குச் சேர்ந்திருந்தோம். “கண்பதியப்பனே டிஸ்மிஸ் ஆர்டரை திரும்பப்பெறு” எனும் வாசகம் ஊரெங்கும் எழுதப்பட்டிருந்தது. தொழிற்சங்கத்தலைவர் கடிந்து கொண்டு, கணபதியப்பனே என்பதை எல்.எம்.டபுள்யூ நிர்வாகமேயென அழித்து எழுதுமாறு நடுரோட்டில் வைத்துத் தொண்டரை அறைந்த நிகழ்வு நமக்கான பாலபாடம்.

2022ஆம் ஆண்டுவாக்கில் திடீரென ஓர் அழைப்பு நண்பரிடமிருந்து. ”இன்னும் இருநாட்களே உள்ளன; வேட்புமனுத்தாக்கல் நிறைவுக்கு. நான் துணைத்தலைவர் பொறுப்புக்கு நிற்கலாமென இருக்கின்றேன். எனக்கு விருப்பமில்லை. ஆனால்...” என இழுத்தார். நாங்கள் சொன்னது இதுதான். “முடிவு உங்களுடையது. அது என்ன முடிவாக இருந்தாலும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது எங்களுடையது”.

மிகக்குறுகிய காலத்தில் இணையதளம் கட்டமைக்கப்பட்டு, பரப்புரை வேலைகளைத் துவக்கியிருந்தோம். நிறைய புதுமைகளைப் புகுத்திச் செய்த வேலையில் சிறப்புக் காட்டினோம். தேர்தலில் நண்பர், நண்பர்தம் அணியினர் சிறப்பாகவே வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஒரு இரு வாரங்களுக்கு முன்பாக வேலையைத் துவக்கி இருந்தால்கூடப் போதும், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்குமென்பதில் எமக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. ஓரிருவர் மட்டுமே வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

இரு ஆண்டுகள். பேரவையின் பாதையில், மேலாண்மை என்பது மேலும் வீழ்ச்சியையே எதிர்கொண்டது. தனித்தனி நிகழ்ச்சிகளைச் சொல்லி அவையெல்லாம் பேரவையின் வளர்ச்சிக்கான அறிகுறிகள் என்றனர். அமைப்புச் செயற்பாடுகளை முன்வைத்து வீழ்ச்சி என்றது மறுதரப்பு. நம்மைப் பொறுத்தமட்டிலும், இத்தகைய போக்கானது, ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்துக்கும் பணக்காரவர்க்கத்துக்குமான வேள்வியாகவே பார்க்கின்றோம். பணக்காரவர்க்கம் வழிநெடுகிலும் எண்களைச் சுட்டிக்காட்டி பொருளியல் மதிப்பீடுகளை(economical values) முன்வைத்தது. நாமோ, அன்பு, அக்கறை, அரவணைப்பு, மரியாதை, எல்லாருக்குமான பங்களிப்பு முதலான சமூக விழுமியங்களை(social values) முன்வைத்து மாபெரும் சறுக்கல் என்றோம்.

சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நின்றுவிடும்தானே என்கின்ற நினைப்பில் அடுத்தடுத்துத் தடைகள் வந்து கொண்டேயிருந்தன. ஒவ்வொரு தடையையும் உணர்வு வயப்படாமல் எதிர்கொண்டு, அவற்றை நமக்கு ஏதுவானதாக மாற்றியமைப்பதில் தொடர்ந்து முன்னேறி வந்தோம். அச்சம் கலந்த ஒரு பதற்றம் இருந்தது. அவநம்பிக்கை குடிகொண்டிருந்தது.  ஏவப்பட்டிருந்த பொய்கள் அவற்றுக்குக்காரணம்.. உடனுக்குடனே அவற்றுக்கான எதிர்வினை ஆற்றக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருந்தோம்.

ஒருகட்டத்தில் எம்மீதே எமக்கு நம்பிக்கையற்றுப் போனது. பொறுப்பில் இருக்கும் தரப்புக்கு ஆதரவாக 12 முன்னாள் தலைவர்கள், நம் தரப்புக்கோ மூன்றே மூன்று பேர். இருக்கின்ற 22 வாழ்நாள் உறுப்பினர்களில் 14 பேர் எதிர்ப்பு அல்லது ஆதரவில்லை. ஒருவேளை நாம்தான் தவறான புரிதலில் வெட்டிவேலை பார்த்துக் கொண்டிருக்கின்றோமோயெனும் சலனம், சஞ்சலம். எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு நடைப்பயிற்சிக்குப் போனோம். சில பல மைல்கள் இதே சிந்தனைதான். வீட்டுக்குத் திரும்பவும் வந்து சேர்ந்தபோது, மிகத் தெளிவாக இருந்தோம். நம் தரப்பு வென்றாக வேண்டிய தேர்தல் இது, ஆதரிப்பதற்கு எல்லாக் காரணங்களுமுண்டு என்பதில்.

தேர்தல் முடிவுகள் கிடைக்கப் பெற்றோம். போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நம்தரப்பு அணியினர் வெற்றி பெற்று இருந்தனர். பதிவான வாக்குகளில் (2928), நம் அணியினர் 1750 வாக்குகளைப்(~60%) பெற்றிருந்தனர்.

வேட்பாளர்கள் மிகக்கடுமையாக உழைத்திருந்தனர். இந்த வேட்பாளர்களுக்காய் கண்களுக்குப் புலப்படாத மனிதர்கள் ஏராளமானோர் ஆங்காங்கே பணிபுரிந்தனர் என்பதும் கண்கூடு. இந்த மனிதர்களின் உழைப்புக்கான மணிநேரங்களைத் தொகுத்துக் கணக்கிட்டால் சில ஆயிரம் மணி நேரங்களுக்கும் மேலாக வரும். அதன் பயனீடு? அவுட்புட்?? இந்த உழைப்பை அமைப்பின் கட்டமைப்பு, மனிதமேம்பாடு போன்றவற்றுக்குச் செலவிட்டிருந்தால்? இப்படியெல்லாம் வினாக்கள் பிறக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதேவும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. சொன்னேன், “உங்களுக்கான பொறுப்புகள் இந்த நொடியிலிருந்து துவங்குகின்றன. அவற்றை நிறைவு செய்யும் போதுதான் காத்திருக்கின்றது உங்களுக்கான வெற்றி”. அதுவரையிலும் அவர்களுக்கான ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டியது நம் எல்லாரது கடமை!

-பழமைபேசி, 06/09/2024.

5/11/2024

அன்னையர் நாள்


வணக்கம். காலையில் எழுந்ததும் இன்றைய நாள்(05/11/2024) குறித்த திட்டமிடல் குறித்துப் பேசினேன். மனைவியார் சொன்னார், “நாளைக்கு மதர்சு டே, ஆகவே கடைகள்ல கூட்டமா இருக்கும்”. தொடர்ச்சியாக ஒரு பேச்சைப் பதிவு(ஆடியோ கிளிப்) செய்து குழுக்களிலும் ஒருசிலருக்கும் அனுப்பி விட்டு வேலைகளைத் துவக்கி இருந்தேன். வணிக வளாகத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு. நார்த்கரொலைனாப் பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவரின்(president of University of North Carolina Tamil Students Organization) அழைப்பு அது. வண்டியைச் செலுத்திக் கொண்டேவும் உட்கிடை உரையாடற்கடத்தியின் ஊடாகப் பேசலானேன்.

“Appa, you are more inline with mother of mother's day" என்றார். நன்றி சொல்லி, நலம் விசாரிப்புக்குப் பின்னர் பேச்சு முடிவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், அன்னையர் நாளின் அன்னை குறித்த தேடலையும் நாடலையும் மேற்கொண்டேன்.

அமெரிக்க சிவில்வார், உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தில் கொந்தளிப்புகள் மேலோங்கி இருந்தன. பிள்ளைவளர்ப்பில் விழிப்புணர்வு வேண்டி, உள்ளூர் அளவில் தாயார்களுக்கான சங்கங்கள் அமைத்து விழிப்புணர்வு ஊட்டி வந்தார் யேனா ஜார்விஸ் என்பார். அடுத்தடுத்து அன்னையர்கள் நலம், கடமைகள் கருதிப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தார் யேனா.

1905ஆம் ஆண்டு மறைந்த தம் தாயாரின் செய்த பல தியாகங்களை மேற்கோள் காட்டி, 1908ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட வழிவகுத்தார் யேனா அவர்கள்.

தொடர்ந்து யேனா அவர்கள் மேற்கொண்ட அலுவல்களின் வழி, குடியரசுத் தலைவர் வுட்ரோ வில்சன் அவர்கள், மே மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை நாட்டின் அதிகாரப்பூர்வமான அன்னையர் நாளாகவும் விடுமுறைநாளாகவும் அறிவித்தார்.

நாடெங்கும் அன்னையர்நாள் பரபரப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. யேனா அவர்கள் சொல்லொணாத்துயர் கொண்டார். நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியிலிருந்து அன்னையர் நாளை நீக்க வேண்டுமெனப் போராடவும் விழைந்தார். காரணம்? அத்தகு நாள் அதன் நோக்கத்தில் இருந்து, அடிப்படையில் இருந்து விலகி, நழுவி, வணிகமயமாக்கப்பட்டதுதான் காரணம். அரசாங்கத்துடன் பேசிப் பேசி, தம் மறைவுக்குச் சற்று முன்பாக, 1948ஆம் ஆண்டு, நீக்கப்பட்டதைக் கண்டு சற்று மனம் ஆற்றிக் கொண்டார்.

இருந்தாலும், இன்றளவும், அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட்டே வருகின்றது. அன்னையர் நாளின் அன்னைக்கு நாம் செய்யும் தொண்டு என்னவாக இருக்க முடியும்? உள்ளபடியே அவரின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்டு செயற்படுவதால் மட்டுமே அது ஈடேறும்.

மகவினை ஈன்றுகின்ற போது ஒருவர் தாய் ஆகின்றார். அதன் நிமித்தம் அவர் பல்வேறு அர்ப்பணிப்புகளை, தன்னலம் கருதாமல் தியாகங்களைச் செய்கின்றார். ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்பு என வர்ணிப்பர். அதற்கும் மேற்பட்டு, மகவு ஈன்றபின்னரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே மீள்கின்றார். உயிர்நீர்களின்(hormonals imbalance) சமன்பாடின்மை நிமித்தம் மனச்சோகை(postpartum depression), தாய்ப்பால் ஊட்டுதற்சிக்கல்கள், தன்னுடற்கட்டுமான மீள்பணிகளெனப் பலவும்.

பிரசவத்திற்குப் பிறகான மனச்சோகை என்பது 80% பெண்களுக்கு ஏற்படுவதாகவும், எழுவரில் ஒருவருக்கு அது பெரும்சிக்கலாகவே உருவெடுப்பதாகவும் அற்வியற்கட்டுரைகள் சொல்கின்றன. பெரும்பாலானோர் இதனை இனம் கண்டு கொள்வதே இல்லை. மாறாக, பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் என்பதாகக் கருதி விடுகின்றனர். நீண்டநாள்ச் சிக்கல்களாக இன்னபிறவும். According to the WHO, more than a third of women experience lasting health problems after giving birth, including:

Pain during sexual intercourse (30%)

Low back pain (32%)

Anal incontinence (19%)

Urinary incontinence (8-31%)

Anxiety (9-24%)

Depression (11-17%)

Perineal pain (11%)

Fear of childbirth (tokophobia) (6-15%)

சும்மா, அன்னையர் நாளில் லாலா பாடி, குளிர்விப்பதால் மட்டுமே மேன்மை கிட்டிவிடுமா? இது போன்றவற்றை வெளிப்படுத்தி, நல்லதொரு புரிதலையும் ஒத்துழைப்பையும் கவனிப்பையும் நல்குவதால் மட்டுமே, அன்னையர் நாளின் அன்னையாரான யேனா ஜார்விஸ் அவர்களின் புகழுக்கு வலுசேர்க்க முடியும். மாந்தகுலத்துக்கும் மேன்மை கிட்டும். அன்னையர் நாள் வாழ்த்தும் வணக்கமும்!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

4/03/2024

திருமணங்கள் நடப்பதில் தேக்க நிலையாமே?

 திருமணங்கள் நடப்பதில் தேக்க நிலையாமே?


the number of girls born per 1,000 boys in Tamil Nadu are 932 in 2017 to 933 in 2018.


source: https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-slow-in-bridging-gender-gap-at-birth/articleshow/77215998.cms


1. ஆக, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவு.


2. இந்த பற்றாக்குறையைச் சரிக்கட்ட, வயதிற்குறைந்த பெண்களைத் திருமணம் செய்வது ஈடுகட்டி வந்தது. எடுத்துக்காட்டாக, 29 வயது ஆடவன் 20+ வ்யதுள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், உலகமயமாக்கல் என்பது, கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெண்களுக்கும் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அப்போதுதான் நாட்டின் உற்பத்தித்திறன் கூடும். எனவே 29 வயதுள்ள ஆடவனுக்கு 25 வ்யதுக்குக் கீழுள்ள பெண் கிடைப்பது அரிதினும் அரிது.


3. 25+ வயதில் கல்வி + வேலையுடன் திருமணத்திற்கான இடத்தை அடைகின்ற பெண்ணுக்கு இன்னும் லீடர்ஷிப் வேலை என்பதான ஆசை வரக்கூடும். இப்படியாகப் பெண் காலம் தாழ்த்தத் தாழ்த்த ஆணுக்கான வாய்ப்பு அரிதாகிப் போகின்றது.


4. இதுதான் திருமண வாய்ப்புகள் காலத்தாழ்ச்சியாவதற்கான காரணங்கள். அதை விடுத்து, பெண்கள் நிபந்தனை, அப்படி இப்படி என்பதெல்லாம் விரக்தியின்பால், அச்சத்தின்பால் ஏற்படுவதே. 


5. சீரின்மை


ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. நிப்பாட்டிக் கொள்வார்கள்.

ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. மீண்டும் ஓர் ஆண்மகவுக்காக இரண்டாவது குழந்தை.


இத்தகைய போக்கு சீரின்மையை ஏற்படுத்தி விடுகின்றது.


6. பொருள்முதல்வாதம்: நல்லவீடு, கடைச்சாப்பாடு, நாளொரு உடுப்பு, வீட்டிலேயே சினிமா தியேட்டர், நவீனங்கள், நீச்சற்குளம் இப்படியான கன்சூமரிசம் பெருகப் பெருக பெண்ணின் வருமானம் இன்றியமையாததாகின்றது. கூடவே அவளின் இன்செக்யூரிட்டி ஃபீலிங்கும் கூடி விடுகின்றது. இதற்காக நாம் அந்தப் பெண்ணைக் குறை கூறலாகாது. இது அவளின் குற்றம் அன்று. சமூகத்தின் குற்றம். தன்னைச் சுற்றிலும் நான்கு பேர் அப்படியாக இருக்கும் போது, இயல்பாகவே அவளுக்குள்ளும் ஆசை பிறக்கத்தானே செய்யும்?


7. அகவளர்ச்சிக்கும் புறவளர்ச்சிக்குமான சமச்சீரின்மை. பொருளாதாரமயமாக்கலின் பொருட்டு நிலங்களின் விலை பன்மடங்கு கூடிவிட்டது. வணிகவாய்ப்புகள் பெருகி விட்டன. இதன் நிமித்தம் சொத்துமதிப்பு கூடிவிட்டது. பர்ச்சேஸ் பவர், வாங்குதிறன் கூடிவிட்டது. இதன் விளைவாக மதிப்பீடுகள் புறவயப்பட்டுப் போய் விட்டன.  அக விழுமியம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதன் காரணமாக ஏற்படும் முரண்கள் திருமண ஆசையைச் சிதைத்து விடுகின்றன. 


8. பெண்ணின் பெற்றோர்களுக்கு ஏற்படும் இன்செக்யூரிட்டி ஃபீலிங். நம்மை யார் கவனிப்பார்கள் என்பதான கவலை. மகனோ, மகளோ, அவர்களை நம்பி இருத்தல் சரி வராது. உலகமயமாக்கலின் விளைவு இது. அவரவர் இருத்தலுக்கு அவரவரே பொறுப்பு. பெற்ற பிள்ளைகளுக்குச் சொத்து சேர்க்க உழைப்பதைக் காட்டிலும் முட்டாள்த்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட வேண்டும். நம்மை நம் வழியில் வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும். மேலைநாட்டுப் பழக்கவழக்கம் அப்படித்தான்.


9. Individualism. தன்னுமை. சட்டத்துக்குட்பட்டு வாழ எந்த ஒருவருக்கும் முழு உரிமை உண்டு. அவரவருக்கு அவரவர் ஆசை, விருப்பங்கள். அதனில் தலையிடுவதற்கு எந்த அப்பா, அம்மாவுக்கும் உரிமை இல்லை. வேண்டுமானால் ஆலோசனை கூறலாம். அவர்களின் ஆசைக்கும் விருப்பத்திற்கும் உறுதுணையாக இருக்கலாம். உலகமயமாக்கலின் விளைவுகளுள் இதுவுமொன்று. முன்பெல்லாம் பெற்றோரின் பொருளாதார உதவி கடைசிக்காலம் வரையிலும் தேவையாக இருந்தது. இன்று அப்படியில்லை. 25 வயதில் மாதம் இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நிலை வந்து விட்டது, பெண்களுக்கும். புரிந்து நடந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. தத்தம் ஆசையை பிள்ளைகளிடத்திலே, பிள்ளைகளின் குடும்பத்திலே திணிக்க முயல்வது குற்றம். செண்ட்டிமெண்ட்டுக்கெல்லாம் இடமில்லை.


10. ஆணாதிக்கம் என்பது எளிய சொற்களிலே இருக்கின்றது. உண்ணுகின்ற உணவிலே இருக்கின்றது. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது.  அத்தகைய ஸ்டீரியோ டைப்கள் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். (எடுத்துக் காட்டு:)நடிகர் மங்கிகாந்த், நடிகை மங்கம்மா என்கின்றோம். ஏன் நடிகன் மங்கிகாந்த் எனச் சொல்லக் கூடாது? நடிகை, நடிகன். பொதுப்பால் நடிகர். இப்படியான முரண்பாடுகள், Generation-Z (born after 1995) தலைமுறையினரிடம் சினத்தைக் கிளறிவிட வல்லது. ஆகவே, சமூகம் மேலைநாட்டுப் பழக்கவழக்கங்களைக் கற்றுத் தெளிதல் வேண்டும். உலகமயமாக்கல் மேம்பாடு வேண்டும், ஆனால் மேலைநாட்டுப் பழக்கவழக்கம் கூடாதெனக் கொடி பிடித்தல் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வதற்கு ஈடானது.


-பழமைபேசி.

1/17/2024

யாரிந்த ஓலையக்காள்?

 

பொங்கற்திருவிழா என்பது ஏராளமான விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்தவொன்றுதான் ‘பூ நோன்பு’ என்பதாகும். மார்கழி மாதம் முழுதும் பாவையைத் தொழுவதும், அதன் நிமித்தம் ஆண்டாளின் திருப்பாவை படிப்பதும் இடம் பெறுகின்றது.

விடியற்காலையில் கதிரவன் எழுச்சிக்கும் முன்பாகவே துயில் கலைந்து குளித்து வாசல் தெளித்து வளித்துக் கோலமிட்டு அக்கோலத்தின் நடுவே சாணப்புள்ளையார் அல்லது மஞ்சள்ப்பிள்ளையாரை நிறுவி, அதன் உச்சியில் பூசணிப்பூ சூடி திருப்பாவையின் அன்றைய பாடலைப் பாடி இறைவணக்கம் செலுத்துவது இளம்பெண்டிரின் மரபு.

நாள்தோறும் வீட்டு வாசலில் நிறுவப்படுகின்ற சாணம்/மண்/மஞ்சள்ப் பாவைகளை (பிள்ளையார்களை) பூமியின் குறியீடாகக் கருதுகின்றார் நாட்டார்வழக்காற்று ஆய்வாளர் வானமாமலை அவர்கள்.  அன்றாடமும் புதுப் பாவையை வாசலில் நிறுவுகின்ற போது முந்தைய பாவைகளை எல்லாம் சேகரம் செய்து வைத்துக் கொள்வர்.

பொங்கல் விழா முடிந்த மறுநாள், சேகரம் செய்யப்பட்ட பாவைகளுக்கு வழியனுப்புச் செய்யும் பொருட்டு, பூக்கள் கொய்து அவற்றைப் பாவைக்குப் படைத்த பின்னர், சேகரம் செய்து வைத்துக் கொண்ட முப்பது பாவைகளையும் சாடுகளில் ஏகிக்கொண்டு ஊரில் இருக்கும் பெண்களெல்லாம் ஊர்க்கிணறு, குளக்கரை, கண்மாய்க்கரை நோக்கிச் சென்று அங்கே அவற்றை நீரிலிட்டு வழியனுப்பி வைப்பர். இப்படியான நாளை, பூப்பொங்கல், பூநோன்பு, பூப்பறிக்கிற நோம்பி எனப் பலவாகக் குறிப்பிடுவது வழக்கம்.

பிற்பகலில் வீட்டில் இருந்து கிளம்பி கூட்டம் சேர்ந்து சேர்ந்து ஊர்ப்பெரியவர் வீட்டு வாசலுக்குச் செல்வர். செல்லும் போதேவும் பாடலும் கும்மிகளுமாகவே செல்வர். அங்கே ஊர்ப்பெரியவர் வீட்டுச் சீர்வரிசை(பொங்கல், தின்னப்பலகாரங்கள், மோர், நீர் இப்படியாகப் பலவும்) பெற்றுக் கொண்டு,  தெருத்தெருவாகச் சென்று ஊர்வழிகளிலே தோட்டங்காடுகளிலே இட்டேரிகளிலே இருக்கின்ற ஆவாரம்பூ, பொன்னரளி, ஊணான்கொடி மலர்களென பூக்கள் பறித்துச் சேர்ப்பர். இடைக்கிடையே பாட்டும் கும்மியடியும் நடக்கும். இப்படியான வைபோகத்தில் இடம் பெறும் பிரபலமான பாடல்தான் “ஓலையக்கா கொண்டையிலே ஒருசாடு தாழம்பூ..”.

2010ஆம் ஆண்டு வாக்கில் இணையதளத்தின், கொங்குநாட்டின் ஓலையக்கா பாடலை எவராவது தந்தால் நான் பணம் கூடத் தயாராக இருக்கின்றேனெனச் சொன்னார் எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்கள். எனக்கு அந்தப் பாடல் பரிச்சியமானவொன்று. அதே நேரத்தில் இடதுசாரித் தோழர்களும் அதே பாடலை இசைக்கோப்பாக வைத்திருந்தனர். அதன் வடிவத்தை எழுத்தாக்கிப் பகிர்ந்தேன். அதே காலகட்டத்தில், நண்பர் வேளராசி அவர்கள் கோவைக்கிழாரின் ‘எங்கள் நாட்டுப்புறம்’ எனும் நூலின் படியை பேரூர் கலைக்கல்லூரியில் இருந்து பெற்றுத் தந்தார். அந்நூலில் பாடலின் வேறொரு வடிவம் கிடைக்கப்பெற்றேன். ஊருக்குச் சென்றிருந்த போது சேவல்களின் இரகங்களைப் பற்றி ஆய்வதற்காக வெள்ளக்கிணறுப் பகுதிகளுக்குச் சென்றிருந்த போது அதன் பிறிதொரு வடிவம் கிடைக்கப் பெற்றேன். ஆய்வாளர் வானமாமலை, கவிஞர் சிற்பி, எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலரும் இப்பாடல் குறித்து எழுதி இருக்கின்றனர் சிற்சிறு மாற்றங்களுடன். அவற்றையும் வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. 

2011ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பொங்கலன்றும் நாம் இந்தப் பாடலைத் தொடர்ந்து பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது. https://maniyinpakkam.blogspot.com/2011/12/blog-post_22.htmlஇந்த ஆண்டும் அவ்வண்ணமே பாடலைப் பாடிப் பகிர்ந்திருந்தோம். மருத்துவர் ஜெரால்டு அவர்கள், யார் இந்த ஓலையக்கா என வினவினார். அதன் பொருட்டே இக்கட்டுரை அமைகின்றது.

மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் ஆகிய ஊர்களின் வரிசைக்கும், சத்தியமங்கலம், கொடிவேரி, நம்பியூர், அவிநாசி ஆகிய ஊர்களின் வரிசைக்கும் இடையில் அமைந்திருக்கின்ற நிலப்பகுதியில் ஓலையக்கா, மாலையக்கா ஆகிய இரு உடன்பிறப்புகளையும் தெய்வமாகக் கருதி வழிபடும் மரபு இன்றளவும் உண்டு. ஆற்றைக்கடந்து வர முற்படுகையில், திடீர் மேல்வெள்ளம் ஏற்பட்டுச் சகோதரிகள் மறுகரையிலேயே இருந்து விடுகின்றனர். உற்றார் உறவினரெல்லாம் இக்கரையில். தத்தளிக்கின்றனர். கடைசியில், எதிரிகளிடம் அகப்பட்டு விடக் கூடாதென்பதற்காக தீமூட்டித் தம்மை மாய்த்துக் கொள்கின்றனர் இருவரும். அவர்கள் அக்கூட்டத்தினரைக் காத்துவருவதான வழக்காறு நிலவுகின்றது. ஆண்டுக்கொருமுறை பனையோலைகளால் ஓலையக்கா, மாலையக்கா கட்டமைக்கப்பட்டு அவர்களுக்கான நினைவேந்தல் நோன்பு கடைபிடிக்கப்படுகின்றதென, ‘ஓலையக்காள் வெறும் பாடலல்ல, வரலாறு” எனும் நூலில் பதிவு செய்கின்றார் கி.பத்மநாபன். அதன்நிமித்தம் செய்திக் குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. https://m.dinamalar.com/detail.php?id=3387894 பாடலின் தழுவல்கள் / மருவல்கள், அவரவர் இடம் பொருள் ஏவலுக்கொப்பப் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது நம் புரிதல்.

பூப்பறிப்பு நோன்பில் கலந்து கொள்ளவிருக்கும் ஓலையக்கா எனும் பாங்கில் இடம் பெற்றிருக்கும் பாடல்.  “ஓலையக்காள்' என்ற மங்கையொருத்தி ஆற்றுக்குப் புறப்படுவதாகக் கற்பனை செய்து வேடிக்கையாகப் பாடுவார்கள். ஓலையக்காள் வருணனை முதலிலே வரும். பாட்டிலே ஒரு பகுதியை ஒருத்தி பாடுவாள். மற்றவர்களெல்லாம் "ஓலே......'"என்று கூறுவார்கள்.


ஓலேயக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு(ஓலேய்)

மாலைஅ ரைப்பணமாம்
மயிர்கோதி கால்பணமாம்
மாலைகு றைச்சலென்று
மயங்குறானாம் ஓலையக்கா(ஓலேய்)

சேலை.அ ரைப்பணமாம்
சித்தாடை கால்பணமாம்
சேலைகுறைச்சலென்று
சிணுங்குறாளாம் ஓலையக்கா(ஒ.லே)

தான்போட்ட சிந்தாக்கைத்
தான்கழட்ட மாட்டாமல்
தாயுடனே சீராடித்
தான்போறா ஓலையக்கா (ஓலேய்)

மேற்படியைத் தட்டிவிட்டு
வெத்திலைக் காம்பைக் கிள்ளிவிட்டு
மேனுட்டு ஒலையக்கா
மேற்கே குடிபோருள்(ஒ.லே)

நாழிநாழி நெல்குத்தி
நடுக்களத்தில் பொங்கல் வைத்து
பொட்டென்ற சத்தங் கேட்கப்
போறாளாம் ஒலையக்கா(ஓலேய்)

தளிஞ்சிச் செடியடியே
தாய்க்கோழி மேய்கையிலே
தாய்க்கோழிச் சத்தங்கேட்டுத்
தான்போருள் ஒலையக்கா(ஓலேய்)

பொரும்பிச் செடியடியே
பொறிக்கோழி மேய்கையிலே
பொறிக் கோழிச் சத்தங்கேட்டுப்
போறாளாம் ஓலையக்கா(ஓலேய்)

ஒலையக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு(ஓலேய்)


விளிம்புநிலைப் பெண் தன் வறுமையை வெளிப்படுத்துமுகமாக அமைந்த பாடலின் வடிவம்:

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்

மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்

சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா

கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்
கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்

கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை


-பழமைபேசி, pazamaipesi@gmail.com