3/05/2009

தாசிக்கும், தேவிக்கும் கொடுத்ததை கணக்குப் பண்ணலாம் வாங்க!

என்னதான் தேவிக்கு அன்பாக் கொடுத்தாலும், நினைச்சுருகுற தாசிக்கும் கொடுத்துதான ஆவணும். இல்லாட்டி மனசாட்சி கொல்லும் இல்லீங்ளா? சரி, அந்த கணக்கு வழக்கப் பார்க்கலாம் வாங்க! இஃகிஃகி!!

கற்பூரப்பழஞ் சிறிது கொண்டுவந்தே
கற்புடைய மங்கையற்குப் பாதீயீந்தேன்
தப்பாமல் தம்பியர்க்கு நாலிலொன்றுஞ்
சரியாகத் தாயார்க்கு எட்டிலொன்றும்
ஒப்பான வேசியர்க்கு வொன்பதொன்றும்
உகந்துடனேயீந்து விட்டேனுனண்மையாக
கற்பூரப்பழமஞ்சு மீதி கண்டாய்
கணக்கறிந்தோர் கணக்கிற்புலியாமே!

ஒருவன் சிறிது கற்பூரப் பழங்கொண்டு வந்தான். கொண்டு வந்ததிற்பாதி தன் தேவிக்குக் கொடுத்தான். நான்கிலொரு பங்கைத் தன் தம்பிக்குக் கொடுத்தான். கொண்டு வந்ததில் எட்டிலொரு பங்கைத் தன் தாயாருக்கு ஈந்தான். ஒன்பதில் ஒரு பங்கைத் தன் தாசிக்குக் கொடுத்தான். குறை மீந்தப் பழம் . ஆகையால் முதற்கொண்டு வந்த பழம் எத்தனையென்று சொல்வது? #௪௰

கிட்டத்தட்ட விடையும் மேல இருக்கு... இருந்தாலும் நீங்க ரோமானிய எண்ல சொல்லிட்டுப் போங்களேன்! இஃகிஃகி!!


1 : ௧
2 : ௨
3 : ௩
4: ௪
5 :௫
6: ௬
7 : ௭
8 : ௮
9 : ௯
10: ௰
100: ௱
1000: ௲



3/04/2009

அமெரிக்கப் பதிவரும், ஐதர் அலி காலத்து வலைப்பூவும்!

எல்லாரும், எப்பவும் நவீனமாவே இருந்துட்டு இருக்க முடியுமா என்ன? கொஞ்சம் அப்படி, இப்படி பழைய பொருட்களை வெச்சிருக்க வேண்டி வரும். இது வாழ்க்கையில ஏற்படுற வழமைதானே? உடனே, “நீர் என்ன ஐதர் அலி காலத்து வலைப்பூ வெச்சிருக்கீர்?ன்னு கேட்டுடுவீங்களா? உமக்கு முதல், அந்த ஐதர் அலி காலத்து...ன்னு புழங்குற வழக்குத் தொடருக்கு உண்டான பின்னணி தெரியுமா ஓய்? ஐதர் அலி என்ன, வலைப்பூவுல உம்மை மாதிரி எள்ளலா, பதிவு வாரத்துக்கு நாலு ஏத்திகிட்டா இருந்தாரு? அவரு காலத்துல ஏது ஓய் இந்த வலையகம், வலைப்பூ எல்லாம்?”.

இப்படிக் கேட்டதுதான் தாமதம், உடனே அந்த பிரபலம், “தங்கமணி எதோ அவசர அழைப்பாணை அனுப்பி இருக்காங்க!”ன்னு சொல்லிப் போனவருதான். இன்னைக்கி வரைக்கும் காணோம். வந்து, ”அமெரிக்காவில் பேருந்துப் பயணம் செல்லாதீர், அமெரிக்க மாமரத்தில் வெளவால்”ன்னு பதிவு போடுவாரு பாருங்க. ச்சும்மா சொல்லக் கூடாது, சுவராசியமா கலந்து கட்டிப் பின்னிப் படல் எடுக்குறாரு. இல்லைன்னா, வலைஞர் தளபதிங்ற அந்த கெளரவத்துக்கே இழுக்குதானே? இஃகிஃகி!! புளியங்குடிப் புளியோதரைன்னு ஒரு பதிவு போடுறேன்னு சொன்னாரு, அதையும் இன்னும் போடலை மனுசன்?!

சரி, கேள்வியக் கேட்டுட்டு நாம சும்மா இருந்தா, அவர் நம்மளை சும்மா விடுவாரா? புளியங்குடி ஆட்களை விட்டுத் தூக்கிடமாட்டாரு? ஆகவே, நாம அதை அலசித் துவச்சிக் காயப் போடலாம் வாங்க. அது பாருங்க, ஐதர் அலி காலத்துல எப்பவும் போர்க்கோலந்தானாமுங்க. போர் நடக்காத நாட்கள்தான் குறைவாமுங்க. அதான் சாக்குன்னு போர் வீரர்கள் எல்லாம், மக்களோட வீடுகளுக்குள்ள புகுந்து கொள்ளையடிக்கிறதும் வெகு காலத்துக்கு நடந்துட்டே இருந்ததாம்.

இதுல இருந்து தப்பிக்கிறதுக்காக, கிராம நகரங்கள்ன்னு எந்த வித்தியாசமும் பார்க்காம, வீடுகளை மறு சீரமைச்சாங்களாம் அந்தக் காலத்துப் பெரியவிங்க. அதாவது, வீடுகளோட பிரதான வாயில் எப்பவும் வீதிகளை நோக்கி இருக்கும். அப்படி இருந்தா, இந்த கொள்ளையர்கள் சுலுவுல உள்ள புகுந்திடறாங்கன்னு, வீதியில இருந்து பக்கச் சந்துல புகுந்து, இடமாத் திரும்பி, வலமாப் போயி, மறுபடியும் இடமா உள்ள போயி, வலமா வெளில வந்துன்னு அப்புறம் உள்ள போற மாதிரியெல்லாம் சிக்கலான அமைப்புல வீடுகளைக் கட்டினாங்களாம்.

இதுதான் கதவுன்னு நினைச்சி உள்ள போனீங்கன்னா, அது மூத்திரச் சந்துக்கு இட்டுட்டுப் போகுமாம். இல்லைன்னா, பன்றிகள், நாய்கள்ன்னு இருக்குற கொத்தளத்துக்கு இட்டுட்டுப் போகுமாம். அப்படி ஒரு அமைப்புக் கொண்டதாமுங்க, ஐதர் அலி காலத்துல கட்டின வீடுகள். அதுக்கப்புறம் வெள்ளைக்காரன் வந்ததுக்கப்புறம், மறுபடியும் வெள்ளைக்காரனோட வழிகாட்டுதலின் பேருல வந்ததுதான் நவீன வீடுகள், சீமை ஓடுகளையும், காரை வாசலையும் உள்ளடக்கின வீடுகள்.

இப்படியாக பின்னாள்ல வந்தவங்க, விவசாயம் செய்யுறவங்க கிட்ட கம்பு, சோளம் இதெல்லாம் மூட்டை இருபது ரூபாய்ன்னு விலை நிர்ணயம் செய்து வாங்கினா, ஒரு சிலருக்கு மட்டும் ஒரு ரெண்டு ரூபாய் குறைவா வெச்சி பதினெட்டு ரூபாய்ன்னு விலை வெப்பாங்களாம். அது ஏன் அப்படின்னு கேட்டாக்க, வணிகஞ் சொல்லுறது, மூட்டைகளை அந்த ஐதர் அலி காலத்து வீட்டுல இருந்து வீதிக்குக் கடத்திட்டு வர்றதுக்கு நாங்க அதிகக்கூலி தரணுமல்ல?ன்னு சொல்வாங்களாம். இதுவே, வழக்கத்துல எந்த பழமையான ஒன்னைப் பாக்குறப்பவும் சொல்லுற ஒரு வழக்காச்சுதாம். இஃகிஃகி!!

கோமளவல்லிக்கு ஒரு மொழி!
கோளாறுகாரிக்குப் பல மொழி!!

அமெரிக்கக் கனவு கானல் நீராகிறதா?

நானும் என்னால முடிஞ்ச அளவு, பிறழ்ந்த செய்திகள்ன்னு பதிவு போட்டுப் போட்டுப் பாத்தேன்? எவ்வளவு நாளைக்குத்தான் நானும் போட்டுகிட்டே இருப்பேன்? பதினோரு பத்திரிகை இல்லை, இந்தியா முச்சூடும் இருக்குறவிக எல்லாம், அவங்க அவங்க செளரியத்துக்குப் போட்டு நொங்கு எடுக்குறாங்க?! அவ்வ்வ்........

இந்த ஊடகங்கள் ஏத்திச் சொல்லுற செய்திகளை மெய்ப்பிக்கிற மாதிரியே, திட்டக்குழுத் தலைவர் அலுவாலியா ஊடகத்துல வந்து பேசினாரு. போனாப் போகுதுன்னு பாத்தா, நிதி அமைச்சர்(இப்போதைய வெளியுறவு) அதையும் தாண்டி அழுதே போடுவார் போல இருக்கே?! உங்களுக்கு எல்லாம், தூதரகம்ன்னு ஒன்னு அமெரிக்காவில இல்லையா? அவங்ககிட்ட உண்மை நிலை என்னன்னு கேட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பேசக் கூடாதா?? ஊடகங்கள்ல வர்ற செய்திதான் பிரதானமா??

இப்ப்ப் புதுசா, ஒரு இலட்சம் பேர் மூனு வருசத்துக்குள்ள திரும்பி வரப் போறாங்கன்னு புலம்பல். வந்தவங்க இங்க(US)யே இருந்துக்கணும்ன்னு எதிர்பாக்கறாங்களோ?? அதை விடுங்க, வருசம் 65000 பேர், அது போக இதர உள்நுழைவு(L1, B1...)ல எண்ணிலடங்காத பேர் உள்ள வருவாங்களே? அது கண்ணுக்குத் தெரியலையா?? நீங்க எல்லாம் நிர்வாகிகள்தானா?? அவ்வளவு கடுமையான சவால்கள் இருந்தும், தன்னம்பிக்கை ஊட்டுற பேச்சு, என்னா சுறுசுறுப்பு?? ஒபாமாவைப் பாத்தாவது தெரிஞ்சுக்குங்க... வேலியே பயிரை மேயலாமா?? தன்னம்பிக்கை ஊட்ட வேண்டிய அரசாங்கமே, தகர்ந்து போகலாமா??? கொஞ்ச‌ம் எதிர்ம‌றையாப் பேசுற‌தை, ம‌க்க‌ள்தான் அல‌ட்சிய‌ம் செய்ய‌ணும் இந்த‌ இக்க‌ட்டான‌ சூழ்நிலைல‌!!!

ம‌க்கா, மென்பொருள் ப‌டைப்பாளிக‌ளுக்கு எப்ப‌வும் எதிர்கால‌ம் இருக்கு. இந்த‌ப் புல‌ம்ப‌ல்க‌ளைக் க‌ண்டுகிடாதீங்க‌... இது த‌ற்காலிக‌மான‌ தொய்வுதான்!இள‌நிலைல‌ இருக்குற‌ மாண‌வ‌ர்க‌ள், இளைஞ‌ர்க‌ள் இய‌ற்கை(
green collar jobs) எரிச‌க்திக்கான‌ தொழில்நுட்ப படிப்பு/வேலைக‌ள்ல‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌லாம். காற்றாலை, சூரிய‌ எரி/மின் ச‌க்தி, சாண‌வாயு எரிச‌க்தி, இப்ப‌டி இய‌ற்கைய‌ ஒட்டின‌ எதுக்கும் எதிர்கால‌ம் இருக்கு. அது மீளாக்கத்(renewable)துக்கு ஏதுவா இருக்கணும். இந்த‌ அர‌சாங்க‌ம் அதுக‌ளை ஆராய்ஞ்சி, வ‌ழிகாட்டணும். ச்சும்மா, எடுத்தேன் க‌விழ்த்தேன்னு பீதிய‌க் கிள‌ப்புற‌துக்குத் துணை போக‌க் கூடாது.

மக்கா, நான் இது தொடர்பான படிப்புகள், மேலதிகத் தகவல்களை இனிதான் சேகரிக்கணும். எனக்குத் தெரிஞ்சதை எதிர்வரும் காலங்கள்ல பதியுறேன்...

காலத்துக்கேற்ற மழை வேண்டும்!

3/03/2009

பள்ளயம் 03/03/2009

பள்ளையமாம் பள்ளையம்,
பலர் பார்க்கும் பள்ளையம்!
பணிவோடு பழமைபேசி,
பதிவாக்கும் பள்ளையம்!!

பழந்தமிழ்ப் பெருமைபேசும்,
பாரெல்லாம் போய்ச் சேரும்!
பண்பாடு பலவும் பேசும்,
ப‌ண்ணாய்ப் பாடியும் வ‌ரும்!!

பள்ளையமாம் பள்ளையம்,
பலர் பார்க்கும் பள்ளையம்!
பணிவோடு பழமைபேசி,
பதிவாக்கும் பள்ளையம்!!

============================================

நன்றி: சித்தகிரி கண்காட்சி

அட மணி என்னாச்சு? எங்க ஊட்டுல கெடியாரம் கோளாறாயி நின்னு போச்சு. அவன் மண்டையில எதோ கோளாறாட்ட இருக்கூ. இப்படிக் கோளாறு பல இடங்கள்ல புழக்கத்துல வருது. இதுக்கு நடுவுல, ஒருத்தர் வந்து உங்க தோள்ல கையப் போட்டு, உங்களை அந்தப் பக்கமா, "வா, நான் உனக்கு ஒரு கோளாறு சொல்றேன்!"ன்னும் கூட்டிட்டுப் போறதையும் பாத்து இருப்பீங்க. அதோட நின்னுதா இந்தக் கோளாறு? நம்ம குடுகுடுப்பையார் அப்பப்ப மண்டையில கோளாறாயி, "பழமைபேசி வலைஞர்களுக்குள்ள ஒன்னுக்கு ஒன்னு கோள் மூட்டுறான்"ன்னும் சொல்லிட்டுத் திரிவாரு பாருங்க. இஃகிஃகி! அது என்ன இந்த கோளு, கோளாறு எல்லாம்?

கோள் அப்பிடின்னாங்க, ஒரு நிலையில இருந்து விலகிப் போறது. புதன் ஒரு கோள். அந்த மாதிரி, எது ஒன்னும் தன்னோட நிலையில இருந்து விலகி, முறைபிறழ்ந்து போச்சுன்னா, அது கோளாறு ஆகிப் போச்சுன்னு அர்த்தம். வண்டியில‌ கோளாறுன்னா, வண்டியோட அக்கு ஒன்னு செய்ய‌ வேண்டிய வேலைல இருந்து விலகிடுச்சுன்னு அர்த்தம்.

"நான் அந்தப் பதிவர் குழுவுக்குள்ள கலகமூட்டுறதுக்கு ஒரு கோளாறு சொல்லுறேன் வா!"ன்னு சொன்னா, முறையா இருக்குற குழுமத்துக்குள்ள பிறழ்வு செய்ய யோசனை சொல்லுறேன்னு அர்த்தம். கோளாறு சொல்றேன்னா, எதோ அவரு தெரியாத சூத்திரஞ் சொல்ல வர்றாருங்ற அர்த்தத்துல, அது புழக்கத்துல இருக்கு. இஃகிஃகி! ஆனா பழமொழி சொல்லுது, "கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே!" அந்தமாதிரி கோளாறு செய்ற குணம், கோளாறுத்தனம்.

ஆனாப் பாருங்க, கருணைக் கொலைங்ற மாதிரி, இந்தக் கோளாறு சில நேரங்கள்ல நல்ல கோளாறாவும் இருக்கும். நிலையில இருக்குற கெட்டவிங்களைப் பிரிச்சி விடுற கோளாறு நல்லதுதானுங்களே?! மேல இருக்குற படத்துல பாருங்க, குறிப்புச் சொல்லுற பெரியவரு, அந்தம்மாவிகளுக்கு நல்ல பலன்களோட, கெட்டது நடக்காம இருக்க, கிரகங்களோட தாக்கத்தை எப்படிப் பிறழ வைக்கிலாம்ன்னும் கோளாறு சொல்லிட்டு இருக்காரு. இஃகிஃகி!!

============================================

ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:

அஞ்சேழ் க‌ழ‌ஞ்சினெடை யாழாக்குக் க‌ற்பூர‌ம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் ‍ விஞ்சாது
ந‌ன்றான‌ த‌ண்ணீர்க்கு நாழிப‌ல‌ம் ப‌ன்னிர‌ண்டாம்
என்றாயு மேழிர‌ண்டா மென்!

இந்த‌ சூத்திர‌த்தை வெச்சே, அவ‌ன் வாழ்நாள் பூராவும் க‌ற்பூர‌ யாவார‌ம் செய்துட்டு இருந்தானாம். இதுதாங்க அதனோட அர்த்தம். தமிழ் எண்களை நீங்களே கத்துகிடுங்க. இஃகிஃகி!!

கொஞ்சுகின்ற கிளிக்கொப்பாகிய சொல்லையுடைவனே, ௩௫ கழஞ்சு கற்பூரம் ஒரு ஆழாக்கென்றும், அதுவே ஒரு குதிர(நாழி)மென்றும் சொல்லப்படும். நாழி ஒன்றுக்கு உத்தமத் தண்ணீர் நிறை(எடை) ௰௨ என்றும், நாழியொன்றுக்கு மத்திமத் தண்ணீர் நிறை ௰௬ என்றும், அதமத் தண்ணீர் எடை ௰௪ என்றுஞ் சொல்லப்படும்.

அதாவது தண்ணியோட எடைக்கு ஒப்பிட்டு யாவாரஞ் செய்யுறதுங்க. ச்சும்மா, உங்களுக்கு பழங்காலத்துல இப்பிடியெல்லாம் பாட்டுக மூலம் வியாபார யுக்திகளை கையாண்டு இருக்காங்கன்னு சொல்லத்தான் இது. அது சரீ, இனி மெழுகுவர்த்தி யாவாரத்தைப் பத்திக் கீழ பாருங்க!!

============================================

தமிழ்ப் படங்கள்ல‌ நடிக்கிற அழகம்மா ஒருத்தங்க, அமெரிக்கத் தொழிலதிபர் ஒருத்தரை எதேச்சையாப் பாக்கவும், பேசவும், அது கல்யாணத்துல போயி நின்னுச்சாம். அவிங்களும் அமெரிக்கா வந்து, சரி என்ன தொழில் செய்யுறாரு நம்ம வீட்டுக்காரருன்னு ஒரு நாள் போயிப் பாப்பமின்னு, போயிப் பாத்தா, அவரு தேவாலயத்துக்கு முன்னாடி மெழுகுவர்த்தி வித்துகிட்டு இருந்தாராம். ஐயோ, பாவம்! அவங்களும் அதுக்கப்புறம் மெழுகுவர்த்தி வாங்கலையோ, மெழுகுவர்த்தின்னு கூவினாங்களோ, என்னவோ??

============================================

அமெரிக்காவுல வந்துங்க, 37 பேர்த்துல ஒருத்தர் சிறைச்சாலையில இருக்காங்களாமுங்க. அதாவது, மொத்தம் 7.3மில்லியன், 73 இலட்சம் பேருங்க உள்ள இருக்குறது. உலக அளவுல உள்ள இருக்குறவங்கள்ல இது 25%. ஆனா, அமெரிக்காவோட மக்கள் தொகையோ, உலக மக்கள் தொகையில வெறும் 5% மட்டுமே. குற்றங்கள்னு பார்த்தாக்க, கண்டிப்பா வெளிநாடுகள்ல அமெரிக்காவை விட அதிகமாத்தான் இருக்கும். சரி ஒரு பேச்சுக்கு, ஒரே அளவுன்னே வெச்சிகிட்டாலும், அமெரிக்கா வெறும் 5% தானே இருக்கணும். ஆக, வெளிநாடுகள்ல உள்ள இருக்க வேண்டியவங்க எல்லாம் வெளியில இருக்காங்கன்னு தெரிய வருது!! இஃகிஃகி!!

அரண்மனை வாசப்படி அதிகமாக வழுக்கும்!

3/02/2009

எச்சரிக்கை: நெகிழ்மனம் உடையோர், இது கண்டு மனம் கோண வேண்டாம்!


மூலம்: மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்றது! 65க்கு அருகண்மையில் உள்ள சிறு சதுரவடிவத்தைச் சொடுக்கி, பெரிதாகப் பார்க்கவும்.

எளிமை, சிக்கனம், மனிதநேயம் போற்றுவோம்!!!

மாற்றுவதற்குப் படை!




எதிர்காலம் நம் கைகளில்! இஃகிஃகி!!



உச்சத்தில்.... எதிர்காலம் நம் கைகளில்...

3/01/2009

மலங்க மலங்க முழிக்காமல் நம்ம கோவி.கண்ணன் அவர்களுக்கு...

தமிழுக்காக தடி எடுக்குறதை விட்டுப் போட்டு, தமிழ்ல தட்டு! எடுக்க இருந்த தடிக்கான செடி மரமாகி, அது விண்ணை முட்டு மட்டும் வளரும்!!ன்னு எங்க வலைஞர் தளபதி சொல்லி இருக்காரு. அதான் நாங்களும் ஓயாமத் தட்டுற முயற்சியில இறங்கி இருக்கோம். அப்பப்ப, அறுந்த வால் மாதிரி குசும்பும் செய்வோம், அதைப் பொறுத்துகுங்க என்ன?!

நம்ம கடைக்குத் தவறாம வந்து போற தம்பி Sriram, நம்மளைக் கெளரவப் படுத்துறேன் பேர்வழின்னு வழக்கொழிந்த சொற்கள்ன்னு ஒரு வலை(net)ப் பதிவு ஒன்னை ஆரம்பிச்சாரு. மக்கா, இனி அதைத் தொடர் பதிவுன்னு விளிக்காதீங்க, என்ன? தொடர் பதிவுன்னா, அது உங்க பூவுல தொடர்ந்து வர்றது மக்கா! சங்கிலிப் பதிவுன்னா, ஒருத்தர்ட்ட இருந்து இனியொருத்தருக்கு கொக்கி போடணும். இதுல ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு கொக்கி போடுறதால, இது வலைப் பதிவு. வலையோட ஒரு கண்ணுல இருந்து சுத்தியும் பல கண் வரும் இல்ல, அதனால இது வலைப் பதிவு.

இப்ப அன்பர் கோவி.கண்ணன் அவர்களும் நமக்கு ஒரு சிறப்புச்..., அடச் சே, எதுக்கு இந்த சுயம் இங்க? அடங்குடா பழமைபேசி!! ஆமுங்க, கோவியார் தமிழுக்கு ஒரு சிறப்புச் செய்திருக்காரு. அப்ப, நாம அதுக்குப் போட்டியா செய்தாகணும் இல்ல?! இல்லைன்னா, T.V. Radhakrishnan ஐயா கோவிச்சுக்குவாக. அய்ய, எதுக்கு இப்ப நீங்க மலங்க மலங்க முழிக்கிறீங்க? சித்த வேணா அவரோட இந்தப் பதிவுக்கு ஒருவாட்டிப் போய்ட்டு வாங்க, சரியா?!

அதென்ன அந்த மலங்க மலங்க முழிக்கிறது? முழிப்புங்ற விழிப்பு, எப்பிடி எல்லாம் இருக்கு பாருங்க... பேந்தப் பேந்த முழிப்பு, மலங்க மலங்க முழிப்பு, திருதிருன்னு முழிப்பு, துறுதுறுன்னு முழிப்பு... இஃகிஃகி! வாங்க சித்த வெவராமா அல்சித் துவச்சிக் காயப் போடலாம்...

பேந்தப் பேந்த முழிக்கிறது: கோவி ஐயா வெவரமாச் சொல்லிட்டாக. இராவுல, தங்கமணிக்குத் தெரியாமத் தண்ணியடிச்சிட்டு, குளியலறையில பொங்க வெச்சி இருப்போம்...என்னதான் கழுவி சுத்தம் செய்திருந்தாலும், அது அரை குறையாத்தான் செய்திருப்போம். காலையில, அவிங்க எந்திரிச்சதும் என்ன அறையில ஒரு மாதிரியா இருக்கேன்னு கேக்குறப்ப முழிக்கிறம் பாருங்க, பயந்து பயந்து ஒரு முழிப்பு, அதாங்க பேந்த பேந்த முழிப்பு.

மலங்க மலங்க முழிப்பு: மலங்கல்ன்னா, சாய்வா இருக்குறதுங்க. கோணிப்பை சாஞ்சுட்டாச் சொல்லுறது, சாக்கு மலங்கிடுச்சுன்னு. அந்த மாதிரி, தேர்வுல அல்லையில இருக்குறவன் எழுதுற விடைய, சாஞ்சாப்புல பாத்து முழிக்கிறது இருக்கு பாருங்க, அதாங்க மலங்க மலங்க முழிக்கிறது. ஆமாமா, அம்மணி நம்மளைக் கடந்து போகும் போது முழிக்கிறதும் மலங்க மலங்க முழிக்கிறதுதான்...நேர்ல பாக்குறதுக்கு தைரியம் இல்லைங்றது சொல்லித் தெரியணுமா என்ன?! அந்த முழிப்புக்குத்தான அம்மணி தண்ணியெடுக்க கொடத்தை இக்கத்துல வெச்சிட்டு வெளில வர்றதே?!இஃகிஃகி!!

திருதிரு முழிப்பு: திருக்கைன்னாங்க, திருகறது. திருகாணி...அந்தத் திருகலுங்க. சொன்னாக் கோவிச்சுக்க கூடாது நீங்க... பையில உறவுக்காரங்க எதானா வெச்சி இருப்பாங்க... அந்த பையோட மேல்த் துணியையும் தாண்டி ஊடுருவற மாதிரி, கண்ணு திருகல் போட்டு அதுல என்ன இருக்குன்னு பாக்கும். அதாங்க, திருதிரு முழிப்பு. இந்த இடத்துல கொஞ்சம் பொறுத்துகோங்க...

துறுதுறு முழிப்பு: துறுன்னாங்க, நெருக்கமானங்றது பொருள். தலைவனும் தலைவனும் நெருங்கிப் பாக்குறாங்க பாருங்க, அதாங்க துறுதுறு முழிப்பு. அதே நேரத்துல, ஒன்னை வெச்ச கண் வாங்காமப் பாக்குறதும் துறுதுறு முழிப்புங்க.

இப்படி இன்னும் பல வகையான முழிப்புக இருக்குங்க...இனியொரு நாளைக்கு எஞ்சினதை வெச்சிக்கலாம். காலையில எழுந்ததும், இன்னும் இப்படிப் பொட்டி தட்டிட்டு இருந்தா, நான் பேந்தப் பேந்த முழிக்க வேண்டி வரும்...

கள்வனைக் கண்கள் காண்பித்து விடும்!