1/17/2009

முதல்வருக்கு ஒரு அறைகூவல்!

வணக்கம்! இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏற்பட்ட விரக்தியின் விளைவே இந்த அறைகூவல். இன்னல்கள் கண்டு, மனம் நொந்து இருக்கும் வேளையில், உம்மைக் கடிந்து தொழுவதைத் தவிர வேறொன்றும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.

விநாயகனே வினை தீர்ப்பவனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே, ஞால முதல்வனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!

இந்தப் பாடல்தானே, எங்களுக்கு உயிர் மூச்சு. அதை நீர் மறந்து விட்டீரா? வினை தீர்ப்பவன் நீயன்றோ? ஏன், இனியும் மெளனம் கலையாமல் இருக்கிறீர்?? அரசமரமும், வேப்பமரமும் இணைந்திருக்க, அதனடியில் நீர் வீற்றிருக்க, நாங்கள் துன்பமென்றதும் ஓடோடி வந்தும்மைத் தொழுதழுவோம். ஒரு ம‌ண்ட‌ல‌மும், அனுதின‌ம் உம்மைச் சுற்றி வ‌ந்து, ம‌ன‌முருகினால், தீராத‌ துன்ப‌ம் தீருமென்பார். இன்றைக்கு அந்த‌ ம‌ர‌ங்க‌ளும், ஏன், நீர் வீற்றிருக்கும் ம‌ர‌த்த‌டிக‌ளுமே இரையாகித்தானே போகின்ற‌து? ஏன் இன்னும் மெள‌ன‌மாய் இருக்கிறீர்?? எம்ம‌வ‌ர் துன்ப‌ம் தீர்த்து வைக்க‌ மாட்டீரோ? உம‌க்கு, இந்த‌ அடியேன் சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை. என்றாலும், எம் ஆத்ம‌வ‌லியின் கார‌ணியாய்ச் சொல்கின்றேன், ம‌க்க‌ள் இல்லையேல் நீர் இல்லைய‌ன்றோ??

நீர் கிழக்கு முகமாய், ஆற்றங்கரையோரம் அரசமர நிழலில் வீற்றிருப்பீர். அங்கு ஊர் மக்களும் வந்திருந்து,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம்செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா!

என்று மனதார உருகிப்பாடி, எருக்கைப் பூச்சாத்தி, "தமிழின் சோதரனே! எம்தமிழை எமக்குத் தந்திடுவாய்!!" என்றும், "காத்திடுவாய்!" என்றும் வேண்டி தோப்புக்கரணம் இடுவார் நம்மக்கள். அந்த மக்களும், தமிழும் கூக்குரலிடும் ஓசை உமக்கு எட்டவில்லையா, ஞால முதல்வரே? இல்லை, எட்டியும் எட்டாதது போல் பாவிக்கிறீரா? சக்தி இல்லையேல், சிவம் இல்லை என்றார், உம் பெற்றோர் குறித்து! யாம் சொல்கின்றோம், பக்தன் இல்லையேல் முதல்வர் இல்லை. இந்தத் தொண்டர் இல்லையேல், தலைவரும் இல்லை. வேழ்முகத்து வேந்தே, போதும் உமது பொறுமை!

பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்
எம்மைக் காக்கும் பிள்ளையார்!

ஆற்றங்கரை மீதிலே
அரசமர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!

நேரும் துன்பம் யாவையும்
நீக்கிவைக்கும் பிள்ளையார்
கூடிப்பாடும் தொண்டரின்
குறைகள் தீர்க்கும் பிள்ளையார்!

முதல்வா, முத்தமிழே, இந்த கடைக்கோடி பக்தனின் அறைகூவல் இதுதான் வேந்தே! வினைகள் தீர்த்து விடு, இனமான உணர்வு தளைக்க விட்டு, அமைதி எங்கும் பொங்க வழிவகை செய்து விடு!! இல்லாவிடில், வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்த கதை என்பது, உமக்கு சொல்லித் தெரிவதில்லையன்றோ!?!

1/16/2009

மீசைய முறுக்கி விட்டா இரத்தம் வரும்!

அட்டைக்கு ஆயிரங்கண்ணு
முட்டைக்கு மூனு கண்ணு
நான் வளத்த தம்பலம்பூச்சிக்கு
ஒத்தக்கண்ணு!
இது மூனும் என்ன?

கல்கத்தாவை ரெண்டா மடிச்சி
திண்டுக்கல்லை ரெண்டாவெட்டி
வெள்ளக்காரனை உள்ளவெச்சி
மீசையமுறுக்கி விட்டா இரத்தம் வரும்!
அதுக என்ன?

இன்னைக்கி இந்த விடுகதைகளோட பதிவை முடிச்சிக்கிறேனுங்க. அந்தக் கடையில விசேடப் பதிவு ஓடிகிட்டு இருக்கு, அதைப் போயிப் பாருங்க. இஃகிஃகி!


குடிக்கிறது கூழுத்தண்ணி,
கொப்புளிக்கிறது பன்னீராம்?!

1/15/2009

படிக்காதவன்: ஒரு மாறுபட்ட பார்வையில்!

வணக்கம்! இன்னைக்கு ஒரே களேபரம் ஆயிப் போச்சுங்க. நாம திங்கக்கிழமை போயிட்டு, வியாழக்கிழமை வீட்டுக்கு வர்ற ஒரு அன்னக்காவடிங்க. சார்லட்ல இருந்து நியூயார்க், போசுடன், சிக்காக்கோ, பிலடெல்பியான்னு பல ஊர்களுக்கும் போவம், வருவம். அப்பிடித்தானுங்க, பிலடெல்பியால சரியா பின்னேரம் 3.30க்கு விமானம் புறப்பட்டு, சாயுங்காலம் 5.10க்கு சார்லட்ல தரை இறங்குச்சு. இறங்கினதுதான் மாயம், தடதடன்னு நம்ம அலைபேசி அடிக்க ஆரம்பிச்சது.

எப்பவுமே, தரை தொட்டவுடனே அடிக்கிறதுதான். ஆனா, இன்னைக்கு விநோதமா இருந்துச்சு. மொத்த விமானத்துல இருக்குறவிங்களோட அலைபேசி எல்லாமே, கீகீ, கூகூன்னு ஒரே அலறல். அப்புறந்தான் தெரிஞ்சது, அதே நேரத்துல நியூயார்க்‍ - சார்லட் விமானம் தரை தட்டிருச்சுன்னு. தங்கமணியோட புலம்பல், கூட வேலை செய்யுறவிங்ககிட்ட இருந்து விசாரிப்புன்னு, ஒரே பரபரப்பு. இன்னும் சார்லட்ல பரபரப்பு அடங்கினபாடு இல்லங்க. அந்த விமான ஓட்டிக்கு ஒரு சபாசு!

சரி, விசயத்துக்கு வருவோம். படிக்காதவனை தற்குறின்னும், கல்லாதவன்னும், இன்னும் என்னவெல்லாமோ சொல்லி தாழ்வாப் பேசுறது உண்டு. படிக்காதவன்னா, அவனுக்கு அறிவு இல்லைன்னு ஆயிடுமா? இல்ல, அவங்கிட்ட மனிதத்தன்மை இல்லாம ஆயிடுமா?? இன்னும் சொல்லப் போனா, படிச்சவந்தானுங்ளே நூதனமா ஊழல் செய்யுறதும், பொய், பித்தலாட்டம், மோசடின்னு எல்லாமே?!

பொதுவாப் பாருங்க, அந்த காலத்துல படிக்காதவங்க சட்ட திட்டங்களுக்கும், சமுதாயத்துக்கும் பயந்தவிங்களா இருந்தாங்கன்னு சொல்லக் கேள்விப்பட்டு இருக்கேன். ஏன், இப்பவும் அப்படித்தான்! கொஞ்ச பேர், படிச்சவிங்களோட சூழ்ச்சியாலயும், அவிங்களோட போதனையாலுந்தான் சட்ட திட்டத்தை மீறுறது. அவிங்களை, படிச்சவிங்க பகடைக்காயா பயன்படுத்திகிறாங்க.

அதான், அந்தக் காலத்துல, கல்லானானாலும் (கல்லான் + ஆனாலும்) கணவன்; புல்லனானாலும் (புல்லன் + ஆனாலும்) புருசன்னு பெரியவிங்க சொல்லி வெச்சாங்க. இதாங்க கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு ஆயிடுச்சு.


கல்லும், புல்லும், கொண்டவன் ஆக முடியுமா? ஆகக்கூடி, அது அப்படி இல்லையாமுங்க. கல்லான், அதாவது படிக்காதவனா இருந்தாலும் கணவனாயிருக்கும் தகுதி இருக்கு, அவன் கள்வனா இல்லாம இருந்தா சரி. புல்லன், அதாவது அறிவு குறைந்தவனாயிருந்தாலும் அவனுக்கு புருசன் ஆகுற தகுதி இருக்கு, அவன் பலவீனமானவனா இல்லாம இருந்தா சரி. அதனால பெரியவிங்க பெண்களுக்குச் சொன்னது, கல்லானானாலும் கணவன்; புல்லனானாலும் புருசன்!

அங்க இங்க எதுக்குங்க? நம்மளுக்குள்ளயே பாப்போமே?! படிப்பு குறைஞ்சவிங்க, நம்ம ஊர்லயே, விவசாயம், தொழில்ன்னு பெரிய அளவுல‌ இருக்காங்க. சமுதாயத்துல நாலு பேர், தன்னை அண்டிப் பொழப்பு நடத்துற அளவுக்கு இருக்காங்க. படிச்சவிங்க‌, அமெரிக்காவுல, குளிருல கூலிக்கு பொட்டி (கணனிப் பொட்டி) தூக்கி, பொட்டி அடிச்சு, பங்குச் சந்தை தரை தட்டுச்சா, விமானந் தரை தட்டுச்சான்னு, புலம்பல்ல, ரெண்டுங் கெட்டுத் திரியறம்?! இதுல, படிச்சவனாவது? படிக்காதவனாவது?? கெட்டவனா இல்லாம, நல்லவனா இருக்கோனும்ன்னு அப்பிச்சி சொன்னதுதான் ஞாவகத்துக்கு வருது!


நல்லது செஞ்சு நடுவழிய‌ப் போனா,
பொல்லாதது போற‌ வ‌ழியில‌!

1/14/2009

வில்லு: ஒரு மாறுபட்ட பார்வையில்!

பொங்க‌ல் வாழ்த்துக‌ள்! வில்லுன்னு சொன்னாலே ஒரு எதிர்பார்ப்பு, குதூக‌ல‌ம். ச‌ரி, நாம‌ளும் அதைப் ப‌த்தி எழுத‌லாம்ன்னு ந‌ம்ம‌கிட்ட‌ இருக்கிற‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மூளைய‌க் க‌ச‌க்கின‌துல‌, நாலு வ‌கையான‌ வில்லுக‌ ஞாவ‌க‌த்துக்கு வ‌ந்த‌துங்க‌.

உண்டி வில்/க‌வ‌ட்டி வில்: க‌விட்டியில‌ இர‌ப்ப‌ர் ப‌ட்டைய‌க் க‌ட்டி, ப‌ட்டையில‌ சிறு க‌ல்லை வெச்சி, எடுத்து விட்டா, 'ச‌ர்'ருன்னு குறி த‌வ‌றாம‌ குருவிய‌ப் போட்டுத்தாக்கும் இது.

வீசு வில்/வ‌ள்ளி வில்: ரெண்டு துண்டுக் க‌யிறுக்கு ந‌டுவுல‌ தோல் ப‌ட்டைய‌ வெச்சி இணைச்சி இருப்பாங்க‌. இந்த‌ப் ப‌ட்டையில‌ க‌ல்லை வெச்சி, த‌லைக்கி மேல‌ 'க‌ர‌க‌ர‌'ன்னு சுத்திட்டு, ஒரு முனைய‌ விட்டுட‌ணும். அப்ப‌, க‌ல்லு காக்கா குருவிங்க‌ இருக்குற‌ ப‌க்க‌ம் போயி விழும். உட‌னே அதுகெல்லாம் ஓடிடும். சோள‌க்காடு, திராட்சைத் தோட்ட‌த்துப் ப‌ர‌ண்ல‌ எல்லாம், இத வெச்சித்தான் காக்கா குருவிய‌ முடுக்குவோம்.

இராம‌ர் வில்/ அம்பு வில்: இது உங்க‌ எல்லார்த்துக்கும் தெரிஞ்ச‌ விப‌ர‌ம். ம‌ன்ம‌த‌ன் வெச்சிருந்த‌து, க‌ரும்பாலான‌ வில், அதைக் க‌ருப்பு வில்லுன்னு சொல்வாங்க‌.

வீச்சு வில்: மிதி வ‌ண்டியோட‌ ச‌க்க‌ர‌த்துல‌ இருக்குற‌ இர‌ப்ப‌ர் ப‌ட்டைய‌ ரெண்டு தூணுக்கு ந‌டுவுல‌ க‌ட்டிட்டு, ப‌ட்டைக்கு ந‌டுவுல, உடைக்காத‌ கோலி குண்டு சோடா பாட்டிலை வெச்சி, இழுத்து விடுவாங்க‌. அது போயி, எதிராளிக‌ளைப் ப‌தம் பாக்கும். இதான் வீச்சு வில்லு.

த‌மிழ் இல‌க்கிய‌த்துல‌, வில் எப்பிடியெல்லாம் குறிப்பிட‌ப்ப‌ட்டு இருக்குன்னு பாருங்க‌:

காண்டீபம்
தனுசு
கோதண்டம்
கார்முகம்
குணி
குனி
கொக்கரை
கொடுமரம்
சராசனம்
சாகம்
சாரங்கம்
சானகம்
சிங்காணி
சிங்கினி
சிலை
சிந்துவாரம்
தடி
தவர்
தனு
துரோணம்
பகர்
முனி
வான்மிகம்
வின்னான்
வேணு

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!
வில்லும் வேலும் மல்லுக்குறுதி!!


1/12/2009

அரசனம் பட்டியார், அரசனம்!!

வாய் கழுவு பட்டியார், வாய் கழுவு!
அரசனம் பட்டியார், அரசனம்!!
கை கழுவு பட்டியார், கை கழுவு!!!


வணக்கம்! பொங்கல் நல்வாழ்த்துகள்!! பாருங்க இன்னைக்கு சார்லட்ல இருந்து ஃபிலடெல்பியா வந்துட்டு இருக்கும் போது, பொங்கல் பத்தின யோசனையாவே இருந்துச்சு. மாட்டுப் பொங்கல் அன்னைக்கு, பட்டி தொட்டியெல்லாம் மறுமலர்ச்சியோட இருக்கும். கால்நடைகள் கட்டி இருக்குற பட்டிக்கு நடுப்புல, தொட்டி கட்டி, அலங்கரிச்சி, பொங்கல் படைப்பாங்க. கடைசியா, பசுவோட கன்றை விட்டு குலுவையும் வாத்தியமுமா அந்தத் தொட்டிய மிதிக்க விட்டு, கன்றை மிரள விட்டு குதூகலம் அடையுறது வழக்கம்.

இது நடக்கறதுக்கு முன்னாடி, ஒருத்தர் பாத்திரத்தில இருக்குற தண்ணிய மாவிலையால தெளிச்சிட்டே சொல்லிட்டுப் போவாரு, "வாய் கழுவு பட்டியார் வாய் கழுவு!"ன்னு. பின்னாடி வர்றவரு, கால்நடையோட வாயைக் கழுவி விடுவாரு.

அடுத்தவர், அதே மாதர, மாவிலையால தண்ணியத் தெளிச்சிட்டே சொல்வாரு, "அரசனம் பட்டியார் அரசனம்!". அவருக்குப் பின்னாடி வர்றவரு, கையில இருக்குற பொங்கல்ல ஒரு கவளத்த எடுத்து, அந்த கால்நடைக்கு ஊட்டி விடுவாரு.

இவருக்குப் பின்னாடி வர்றவர் சொல்லுறது, "கை கழுவு பட்டியார், கை கழுவு!". உடனே, கால்நடைக்கு பொங்கல் ஊட்டின கைய, ஊட்டினவர் கழுவிக்கிடுவாருங்க. இப்படி பட்டி தொட்டி முழுக்க சொல்லிட்டே வந்து, இருக்குற எல்லா கால்நடைகளுக்கும் பொங்கல் ஊட்டுறது ஒரு வழக்கம்.

ஆகக்கூடி, இங்க சொல்லுற அரசனம் பட்டியார் அரசனம்ன்னா என்ன? ஒன்னும் புரியல. விமானம் உட்டு இறங்கின உடனே, ஊர்ல இருக்குற எங்கம்மாவிங்களுக்கு ஒரு தாக்கல் போட்டுக் கேட்டும் பாத்தேன். அவிங்களும் அதுக்கு அர்த்தம் தெரியாதுன்னுட்டாங்க. உங்களுக்குத் தெரியுமாங்க? தெரிஞ்சா சித்த சொல்லுங்க...புண்ணியமாப் போகட்டும்!!! மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு?!

மேலதிகத் தகவல்: அரசனம் = அரசு + அன்னம் (ராஜ-போசனம்), நம் உணவைப் பட்டியாருக்கு ஊட்டுவது. அன்னம் அனம் என்று குறுகிற்று

போங்க, அல்லாரும் நல்லபடியாப் போயி, அரசனம் பட்டியார் அரசனம் போடுங்கோ!

தை பிறந்தால், வழி பிறக்கும்!

துக்ளக் மகேசு, மோகன் கந்தசாமி, மதிபாலா ஆகியோருக்கு விருது!

வணக்கம்! எனக்கு ஒரு பெட்டியும் கிடைச்சு, அதுல கண்டதையும் தட்டி, வலைப்பூங்ற பேர்ல எழுதினதுக்கு விருதாமுங்க. சரி, வேண்டாம்ன்னு சொல்லுற அளவுக்கு நாம பெரிய ஆளா என்ன? மகிழ்வா வாங்கிக்கிடுவோம். கொடுத்த அன்பர் ஸ்ரீராம் அவிங்களுக்கு நன்றி!

அமெரிக்காவுல, இன்னைக்கு இருக்கிற வேலைய காப்பாத்திக்கிறதுங்றது நெம்ப முக்கியமுங்க. அதான், வலைப்பூ பக்கம் மொதல்மாதர வர முடியறது இல்லை. இன்னைக்குதான் அவகாசம் கிடைச்சது. கிடைச்ச நேரத்துல பாருங்க, நடிகவேள் M.R இராதா, கர்மவீரர் காமராசர், கலைஞர் அவிங்க பேரறிஞர் அண்ணாவுக்கு படைச்ச கவிதாஞ்சலி மற்றும் கவியரசருக்கான நினைவு கூறல்ன்னு பழம் பேச்சுகளைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சு, நிறைய தகவல்களும். இதோ, இந்தச் சுட்டியில, இன்னும் பிரபலமான நிறைய பேச்சுகளுக்கான காணொளி இருக்கு.



அன்னக்கி என்ன பேசுனாங்கன்னு கேளுங்க! (நன்றி: கணேஷ் சந்திரா)

அன்னக்கி என்ன பேசுனாங்கன்னு கேளுங்க-2


இந்தச் சுட்டியும், எனக்கு கிடைச்ச வண்ணத்துப்பூச்சி விருதையும் மகேசு, மோகன் கந்தசாமி, மதிபாலா அவிங்களுக்கு பிரிச்சிக் குடுக்கிறேன். இவிங்க எல்லாரும் நெம்ப நல்லா எழுதிட்டு வர்றாங்க... நமக்கெதுக்கு, அதான் அவிங்களுக்கு குடுத்திடலாம்! இஃகிஃகி!!

காக்கை பகுத்து உண்ணும்!

1/09/2009

அமெரிக்காவின் மறுபக்கம்!

பங்குச் சந்தையில‌
காசை எறிஞ்சுவிட்டு
மலையில முத்து
எடுக்குறோம் நாங்க!

(சொடுக்கி, பெரிய படமாப் பாருங்க... இஃகிஃகி!)



பணக்காரன் பின்னும் பத்துப்பேர்! பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்!!