1/06/2009

சித்தம் போக்கு சிவன் போக்கு!

வணக்கம் அன்பர்களே, வணக்கம்! சாம்பலை உடல் எல்லாம் பூசிட்டு இருக்குற சிவபெருமானை, அவர் விசித்திரமாகவும் வினோதமாவும் இருக்குறதப் பாத்துட்டு, பித்தன்னும் வர்ணிக்கறது உண்டு. அந்தப் பின்னணியில, சித்தபிரமை பிடிச்சவங்க சிவன் மாதிரி பித்துப் பிடிச்சவங்களைப் போல இருப்பாங்கன்னு சொல்லுறதுதாங்க, சித்தம் போக்கு சிவன் போக்கு. இஃகிஃகி!

சித்தபிரமை = மனம் பிறழ்தல்

இராகவன் நைஜிரியா: நண்பரே...சித்தர்கள் சிவனை நினைத்து தவம் செய்வார்கள். அவர்கள் நினைப்பு முழுவதும் சிவனைப் பற்றி இருக்கும். அவர்களை புரிந்து கொள்வது கடினம் என்று சொல்வார்கள்.சித்தர் போக்கு - சித்தர் நினைவுகள்சிவன் போக்கு - சிவனுடைய நினைவுகள் இது தான் நான் கேள்விபட்ட விஷயம்.

Mahesh : மணியாரே... இப்பிடியும் இருக்கலாம்... ஆனா நான் கேட்ட வரை (சுகி சிவம்) மனத்தைக் கட்டுப்படுத்துவது ஆண்டவன் செயல் என்ற அர்த்தத்தில் "சித்தம் (மனம்) போக்கு சிவன் (ஆண்டவன்) போக்கு". ஆண்டவன் சொல்றான் ; அருணாச்சலம் செய்யறான் மாதிரி...

புதுகை.அப்துல்லா: சிவம் என்பதை இறைநிலை அல்லது இறைவன். பொதுவாக இறைநிலையை அடைய அல்லது உணர முற்படும் ஞானிகள்(சித்தர்கள்) அந்தச் சிந்தனையைத் தவிர வேறு எந்த கவன நிலையிலும் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி தீட்சை பெற்ற அல்லது முரீது(இஸ்லாமிய வழக்கில் உள்ளது) பெற்ற ஞானிகள் தங்கள் ஒவ்வொரு அசைவையையும் இறைவனே நடத்துவதாக அல்லது தீர்மானிப்பதாக கூறுவார்கள். இறைவனின் போக்கிலேயே சித்தர்கள் போவதால் சித்தன் போக்கு சிவன் போக்கு என்றானது என அறிஞர் கருதுகின்றார்.




உறவு போகாமல் கெட்டது! கடன் கேட்காமல் கெட்டது!!

1/05/2009

என்னிதயக் கமலாள்

விழியின் மணியாள்,
கொஞ்சு நகையாள்,
தத்தை மொழியாள்,
இனிமைச் சிரிப்பாள்
பொன்நகை மலராள்,
என்னிதயக் கமலாள்,
காணாமற்த் தவிப்பாளென‌
நெஞ்சு வாடுகையில்,

சிணுங்கியது அலைபேசி!
வாஞ்சை மொழியாள்
விளித்தாள் "அப்பா"யென‌!
குளிர்ந்தது நெஞ்சம்!!
துளிர்த்தது மனம்!!!

Philadelphia, PA
Jan 05, 2009.

மெல்லப் பாயும் தண்ணீர், கல்லையும் குழியாக்கும்!

1/04/2009

கனவில் கவி காளமேகம் - 11

வணக்கம் அன்பர்களே! மூனு மாசமா வீட்ல இருந்தே வேலை, கடைசி மூனு வாரம் விடுப்புன்னு நாள் போனதே தெரியலீங்க. பதிவுகளாப் போட்டு உங்களை எல்லாம் இம்சை பண்ணினது எல்லாம் இனி குறையும். இஃகிஃகி! ஆமுங்க, நாளையில இருந்து பொட்டி அடிக்கப் பொட்டி தூக்கணும். வெளியூர்ப் பிரயாணந்தேன். பதிவுகள், பின்னூட்டம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதைப் படிக்கும் போது உங்க முகத்துல என்னா ஒரு மலர்ச்சி?!

இதெல்லாத்தையும் நினைச்சிட்டே தூங்கிட்டு இருந்தேன், வழக்கம் போல நம்ம கனவுல‌ வந்தாருங்க கவி காளமேகம் அப்பிச்சி. மேல படீங்க, என்னாதான் அலப்பறை செய்தாருங்கறதத் தெரிஞ்சுக்குவீங்க.

"என்னடா பேராண்டி, வேலைக்குப் போகணுங்ற விசனமாட்ட இருக்கு?"

"ஆமுங்க அப்பிச்சி, நெம்ப வெசனமாத்தான் இருக்கு. இப்ப நீங்களும் வந்திட்டீங்க. சரி, ஆரம்பிங்க உங்க அலம்பலை! எப்பத்தான் உங்க தொந்திரவு தீரும்ன்னு தெரியலை?!"

"ஏண்டா இப்பிடி சலிச்சிக்குறே? மொதல் ரெண்டு நாள் கொஞ்சம் கடினமாத்தான் இருக்கு...அப்புறம் எல்லாம் செரி ஆயிடும்!"

"ஆமாங்க, நீங்க ஆரம்பிங்க!"

"நீங்கெல்லாம் இப்ப தமிங்கிலத்துல பேசுறீங்க. பேசும் போது, அவன் வந்து ஷோ(show) வுடுறான்னு சொல்லுறீங்க. அதுக்கான தமிழ் வார்த்தை என்ன, சொல்லு!"

"நடிப்பு?"

"இல்லடா பேராண்டி! ஒருத்தரைப் பார்த்த ஒடனே அவிங்க செய்யுற அலம்பல். அதைச் சொல்லுறது, கண்டுபாவனை!"

"அப்பிடீங்களா? இனி சொல்ல வந்ததை நீங்களே சொல்லிடுங்க அப்பிச்சி!"

"க‌ம்பிய‌ நீட்டுற‌துன்னா என்ன‌?"

"ஒருத்த‌ர் த‌ப்பிச்சுப் போற‌தும், இட‌த்துல‌ இருந்து ந‌ழுவ‌ற‌தையும் சொல்லுற‌து க‌ம்பிய‌ நீட்டுற‌து. ச‌ரிங்க‌ளா?"

"ச‌ரிதான்! அதுக்கான‌ விள‌க்க‌ம் என்ன‌ன்னா, சிறைச்சாலை, கூண்டு இங்கல்லாம் அடைச்சிருக்குற க‌ம்பிக‌ளை உள்புற‌மாவோ வெளிப்புற‌மாவோ வ‌ளைச்சி, நீட்டி விட்டுட்டு ஓடிப் போற‌தைக் கம்பிய நீட்டிட்டுப் போய்ட்டான்னு சொல்ல‌ப் போய், அதுவே ஒரு வ‌ழ‌க்குச் சொல்லாவும் ஆயிருச்சு!"

"ஓ அதுதானா, இது?"

"ஆமா. கடுக்காய் குடுத்துட்டுப் போய்ட்டான்னு சொல்லுறோம். அது ஏன் தெரியுமா?"

"அதான், நீங்களே சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க சொல்லிட்டனே? மறுபடியும் கேள்வி கேட்டு இம்சை செய்றீங்க‌ளே???"

"சரிடா... கோவப்படாம‌ சித்த கேளு! வைத்தியன் வந்து நோவுக்கு என்ன மருந்து குடுப்பானோன்னு காத்திருக்க, அவன் வந்து காசை வாங்கிட்டு மருத்துவ கொணம் இருக்குற கடுக்காயக் குடுத்துட்டுப் போனதை, ஒரு இளக்காரமா, காசை வாங்கிட்டு கடுக்காயக் குடுத்துட்டுப் போய்ட்டான்னு சொல்ல, அதுவே ஏமாத்திட்டு போறதையுஞ் சொல்லுற வழக்கா ஆயிப் போச்சு."

"ஓ, இதுதான் அதனோட அர்த்தமா?"

"ச‌ரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)


கிளிநொச்சி

ச்சும்மா, இடங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்ன்னு வலைல மேஞ்சப்ப கிடைச்ச தகவல். இது இலங்கை இராணுவத்தின் சார்பான தகவல்! ஆகவே, தற்போதைய நிலை பற்றிய தகவல் எவ்வளவு நம்பகத்தன்மையோட இருக்குன்னு தெரியாது. ஊர்களைப் பற்றின தகவல்கள் உண்மையா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.



தற்போதைய நிலைகளை அறிய:

http://defence.lk/orbat/Default.asp
http://www.cyberlk.com/defencemap/


1/03/2009

என்ன கொடுமை சரவணன் இது?

அவனவன் அங்கங்க வெடிகள் வெடிக்குதுன்னு, அல்லு கழண்டு போயிருக்குற நேரத்துல, என்னா வெடி இது? என்னா வில்லத்தனம்??





1/01/2009

எதுக்கு இந்த முதலைக் கண்ணீர்?

வணக்கம்! புத்தாண்டுக் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சது, இனியும் ரெண்டு நாள் விடுப்பு இருக்கு. இஃகிஃகி!! பாருங்க, அடங் கொன்னியான்னு ஒரு பதிவு போட்டப்ப, ஊர்ல பேருகெல்லாம் எப்பிடி மருவுதுன்னு பார்த்தோம். அப்ப, சுப்பிரமணியா கொப்புரவாயாங்ற பாட்டு நினைவுக்கு வந்துச்சு. சின்ன அம்மிணி அவிங்களும் அடுத்த வரிய எடுத்துக் குடுத்தாங்க, ஆனாலும் முழுப் பாட்டு ஞாவகத்துக்கு வரவே இல்லை.

வீதம்பட்டி வேலூர்ல ஆறாம் வகுப்புப் படிக்கும் போது, பொம்மநாயக்கன் பட்டி சுப்பிரமணியனும் எங்கூடப் படிச்சான். அவனைப் பாத்து இந்தப் பாட்டைப் பாடி வெறுப்பேத்தறது உண்டு. சரி, புத்தாண்டை சாக்கா வெச்சி, அவனுக்கு வாழ்த்து சொல்லுற மாதர கூப்ட்டு பாட்டைக் கேட்டு தெரிஞ்சிக்கிலாம்ன்னு நினைச்சேன், ஆனா அவிங்களைத் தொடர்பு கொள்ளுறதுக்கு எந்தத் தகவலும் இல்ல. ஒரு வழியா, இன்னோரு நண்பன் கார்த்திகிட்ட இருந்து தகவலை வாங்கி, பொம்மநாயக்கன் பட்டிக்கு ஒரு தாக்கலைப் போட்டேன்.

சுப்ரமணியர் வந்தாரு தொடர்புல. வந்து வாங்க, போங்கன்னு பேச ஆரம்பிச்சுட்டான். பேசிப் பல வருசம் ஆனதுனாலயும், நாம வெளிநாட்டுல இருக்குறதாலயும் அந்த அன்னியோன்யம் விலகிப் போயிருந்துச்சு. அப்புறம் நாமதான், நாம‌ இன்னும் அதே கெராமத்தான்னு சொல்லி நெலமையக் கட்டுக்குள்ள கொண்டு வந்தோம். தற்போதைய நெலவரங்களை எல்லாம் விசாரிச்சுட்டு, மெதுவா பள்ளிக்கூடத்துப் பக்கம் பேச்சைத் திருப்புனோம்.

"டேய் சுப்பா, சுப்ரமணியா கொப்புரவாயான்னு பாடுவமே, ஞாவகம் இருக்குதா?"

"ஆமாமா, அதெப்பிடி மறக்க முடியும்?"

"எனக்கு மறந்து போச்சுறா...சொல்லு பாக்கலாம்!"

"மணியம்மணியன் மாங்கா மடையன்...."

"டேய், நிறுத்து நிறுத்து! என்னையேண்டா இப்ப வம்புக்கு இழுக்குற?"

"ஆமா, பாட்டு இப்பிடித்தான ஆரம்பிக்கும்!"

"போடா, சுப்ரமணியா கொப்புரவாயான்னுதான....."

"போடா, உன்னையும் என்னையும் கிண்டல் பண்ணுறதுக்கு பரமசிவனும், மந்தராசலனும் பாடுவாங்க, நீ மறந்துட்ட போலிருக்கு?!"

தேவையில்லாம, புத்தாண்டு அன்னைக்குமதுவுமா, எங்கயோ போற ஓணானை எடுத்து மடியில உட்டுகிட்டம் போலிருக்குன்னு நினைச்சிட்டே...

"சரி! சரி!! சொல்லு..."

சுப்பிரமணியன் சொன்னதுல இருந்து,

மணியன்மணியன் மாங்காமடையன்
சுப்பிரமணியன் கொப்பரவாயன்
வெங்கட்ராமன் வெல்லந்திருடி
சென்னிய‌ப்பஞ் சோத்துராமன்
செந்தில்நாதஞ் செவுரேறி
மயில்சாமி ம‌ண்ணாங்க‌ட்டி
தாமோத‌ர‌ன் த‌ண்ட‌ச்சோறு
விசுவுநாத‌ங் குசுவுநாத‌ன்!

இப்பிடி அவங்கட்டப் பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலீங்க. கூடவே இன்னொரு தகவலும் உங்ககிட்டப் பேசணும் இன்னைக்கு... முதலைக் கண்ணீர், நீலிக்கண்ணீர்ன்னு எல்லாம் சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீங்க. அதுகளுக்குண்டான பின்னணி என்ன?

நீலிக் கண்ணீர்: நீலிங்றது ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள்ல வர்ற கதாபாத்திரமாமுங்க. இந்த நீலியுடைய அழுகைய‌ மனசுல வெச்சி, உவமைப்படுத்திப் பேசுறதுல இருந்து வந்ததுதானாம் இந்த நீலிக்கண்ணீர்.

முதலைக் கண்ணீர்: ஒரு சாரார் சொல்லுறது, முதலைனால அழ முடியாது. அதனால, பொய்யான அழுவாச்சிய, சாத்தியமில்லாத முதலையோட கண்ணீரோட ஒப்பிடறதுதான் இந்த முதலைக் கண்ணீர் (crying crocodile tears)ன்னு. ஆனா, முதலையால அழ முடியுமாமுங்க. ஆக, இது தப்புன்னு ஒரு சாரார் சொல்லுறாங்க. மேலும் அவிங்க சொல்லுறது என்னன்னா, தண்ணியில இருக்கும் முதலை வெளிய தலைய நீட்டும் போது எப்பிடி, நீர்த்திவலைகள் வடிஞ்சு போறது, அழற மாதிரித் தெரியுதோ, அது மாதிரியான ஒரு தோற்ற அழுகைன்னு சொல்லுறதுதான் முதலைக் கண்ணீர்.


புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்!
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்!!

2009: புத்தாண்டு நிகழ்வு...

வணக்கம் அன்பர்களே! க்ரெக்கோரியன் நாளட்டவணைப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழ்க் குழுமத்தின் புத்தாண்டு நிகழ்ச்சிகள் வடக்கு கரோலைனா மாகாணம் சார்லட்டில் மாலை சரியாக ஐந்து மணிக்கு திட்டமிட்டபடி துவங்கியது. அவ்விழாவில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடாத்தும் பொறுப்பை இந்த சாமன்யனுக்கு அளிக்கப்பட்டமையால், நாமும் நம் திறமையைக் காண்பிக்கும் வாய்ப்பாகக் கருதி, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினோம். கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியாக இருந்ததைக் காண முடிந்தது. விழாவில் இடம் பெற்ற கேளிக்கை நிகழ்வுகள் குறித்து பிரத்யேகப் பதிவு விரைவில் வெளியாகும்.

நிகழ்வின் இடையூடாக, கலந்துரையாடல் இடம் பெற்றது. அதில் பல தரப்பட்ட தகவல்களும், விழிப்புணர்வுக் கருத்துகளும் பரிமாறப்பட்டது. அதில் ஒன்றுதான், நாம் பார்க்க இருக்கும் ஒரு செய்தியும், அதன் விபரமும். ஆம், அன்பர்களே! தற்போதைய வடக்கு கரோலைனா மாகாணத்தின் மக்கள் தொகை 92 இலட்சம் பேர். தோராயமாக நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 5 இலட்சம். விவாகரத்து எண்ணிக்கை சுமார் 43 ஆயிரம். சதவிகிதம் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 9 சதவிகிதம்.

வடக்குக் கரோலைனாவைப் பொறுத்த வரையில், இது பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாகாணம், பழமையான(conservative) மாகாணம். சார்லட்தான் பெரிய நகரம், அதன் மக்கள் தொகை 5.5 இலட்சம். ஆகவே, நியூயார்க் போன்ற மற்ற பெரிய மாகாணங்களில், நகர்ப்புறக் கலாச்சாரத்தைக் கொண்ட(liberal) மாகாணாங்களில் இந்த சதவீதம் மேலும் அதிகமாக இருக்கும்.

அலசப்பட்ட விசயம் யாதெனில், பொருளாதார மந்தத்தின் காரணமாக, விவாகரத்து எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து உள்ளது என்பதுதான். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மனிதன் இட்டுக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது, சகிப்புத்தன்மையோடு பிணக்குகளை எதிர்கொண்டு வாழ்வதையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கடைப் பிடிக்கிறான். இதுவே, பொருளாதாரம் மிகுந்தோ அல்லது எளிதில் கிடைக்கிற பட்சத்திலோ அவை குறைகிறது என்பதே.

மேலும் நியூயார்க் செய்தி ஒன்றும் இதை உறுதிப் படுத்துவதாக உள்ளது. வசதி வாய்ந்த இருவர் பிரிய எண்ணி, விவாகரத்துப் பெற குறைந்தபட்சம் ஒரு வருடம் பிரிந்து வாழ்வது அவசியமென்பதால் பிரிந்து வாழ்கிறார்கள். வருடமும் உருண்டோடி விடுகிறது, ஆனால் அவர்கள் வாழ்ந்த வீடு விற்பனை ஆகவில்லை. அதனால் அவர்களின் வரவு செலவுக் கணக்கு, ஒரு முடிவை எட்டவில்லை. அதற்கு ஒரு முடிவில்லாமல், விவாகரத்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர் அந்தத் தம்பதியினர். ஆம், இணைந்து வாழ்வதே அந்த முடிவு. இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததில் அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

எப்படிப் போர்க்காலத்திலும், நாட்டிற்கு ஒரு இடர் என்று வரும்போதும் மக்களின் நாடி நரம்புகளில் அனிச்சைச் செயலாய் நாட்டுப் பற்று பீறிடுகிறதோ, அது போன்றதுதான் பிணக்குகளும் அகந்தையும். வசதி வாய்ப்புகள் பெருகும் போது, மனிதனின் மனம் அறியாமலே அவையும் குடி புகுந்து விடக்கூடும். நாம் உயர்ந்து வருகிறோம், மிக்க மகிழ்ச்சி! ஆனாலும், இன்னும் வளர்ந்த நாடு என்னும் நிலையை அடையவில்லை. ஆகவே, வளர்ந்த நாடுகளின் செயல்முறை, கட்டுமானங்களைக் கற்றுத் தேர்ச்சியுறும் நாம், அவர்களின் படிப்பினையையும் தெரிந்து கொண்டாக வேண்டும்.

இப்படியாக, கலந்துரையாடிய பெரியவர்கள், இங்கு வாழும் நமது தலைமுறையினரும் எளிமை பேணி, பொருளாதாரத்தை அடக்கி ஆள்வதிலும், குடும்பத்தைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற ரீதியில், உரையாடலை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். நம் நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியாக, இதனைப் பதிவிடுகிறேன் அன்பர்களே. எனது ஆலோசனை, கருத்து என்றெல்லாம் நினைத்து, நிலையில் நிற்கும் தேரைத் தெருவில் இழுத்துவிட்டு விடமாட்டீர்கள் என்றும் பெரிதும் நம்புகிறேன். இஃகிஃகி! (அந்த‌ பயம் இருந்தா சரின்னு, நீங்க சொல்லுறது கேக்குதுங்கோ!)


மேற்கோள் சுட்டிகள்:

http://www.charlotteobserver.com/597/story/438991.html
http://charlotte.areaconnect.com/statistics.htm

இதயம் ஏற்கிறது! தலை மறுக்கிறது!!