திருப்பதி திருமலை
சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு அதில் அவ்வளவு நாட்டமில்லை. ஊரில், அம்மா, அப்பா, அண்ணன் என எல்லாரிடமும் சொல்லி ஏற்பாடும் செய்துவிட்டார். குடும்பமாக வெளியூர்ப் பயணம். தொடர் வண்டியில் உற்றார் உறவினர்களோடு இன்புற்று இருந்தோம்.
மூத்த பிள்ளைக்கு வயது 8. நாங்கள் இருவர் என, நாங்கள் மூவர் மட்டும் அடிவாரத்திலிருந்து நடந்தே செல்வதாக வேண்டுதலாம். நான் ஊரில் இருந்தவரையிலும், அலுவலக நண்பர்களோடு ஆண்டுதோறும் சென்று, மலையேறுவது வாடிக்கை. ஆகவே எனக்கு அதில் யாதொரு தயக்கமும் இருந்திருக்கவில்லை.
பாப்பாவுக்கு மாங்காய்ச்சீவல், கொய்யாப்பழம், அது இதுயென வாங்கிக் கொடுப்பது, சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்ப்பதென தொய்வின்றியும் குதூகலமாகவும் அமைந்தது. மலையேறி முடித்ததுமே வரவேற்று, தலைக்கு ஒரு அனுமதிச் சீட்டும் கொடுத்தார்கள். கால்நடையாக வந்தவர்களுக்கான அனுமதிச்சீட்டு, பணம் கொடுக்கத் தேவையில்லை. பணம் கட்டிய நுழைவுச்சீட்டும் வாங்கக் கூடாதாம். வேண்டுதல் அப்படியெனக் கூறப்பட்டது.
வரிசையில் நின்றோம். முதல் அரைமணி நேரம் கால்கடுக்க நின்று நின்று வரிசையில் சென்று கொண்டிருந்தோம். கால்வலியை விட, பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு கும்பலின் நடவடிக்கைகள்தாம் பெரும் தொல்லையாக இருந்தது. மூன்று இளம்பெண்கள், இளைஞர்கள் கொஞ்சம் பேர், ஐடி அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவர்களெனப் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழர்கள். காச் மூச் எனக் கத்திக் கொண்டும், வறட்டுச் சிரிப்புகள் சிரித்துக் கொண்டும் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். நான், இல்லாளைக் கடிந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், அவர்களை முன்னுக்கு, அவர்களின் கூச்சலோசை காதில் விழாதபடியான தொலைவுக்கு முன்விட்டுப் பின்னால் நின்று கொண்டோம்.
ஒருவழியாக பட்டிக்குள் சென்றாகி விட்டது. தரையில் உட்காரும் வாய்ப்பு. சற்று நேரத்துக்கெல்லாம் உறங்கிவிட்டாள் பிள்ளை. நானும் உறங்கி விட்டேன். எழுப்பினார்கள். மீண்டும் வரிசை. கொஞ்சம் தொலைவு சென்றானதும் அடுத்த பட்டி. பெரிய சர்வம் வரும். உணவு பரிமாற. கூட்டம். குறைந்தானதும் போய் வாங்கி வரலாமென நினைப்போம். அதற்குள் தீர்ந்து விடும். மீண்டும் வரும். கூட்டம் கொஞ்சம் குறையட்டும், போய் வாங்கி வரலாமென நினைக்கும் போதே, அது தீர்ந்துவிடும்.
மூவருக்குமே பசி. கூடவே உறக்கமும். இரு பெண்கள் எங்களை நோக்கி வந்தனர். பட்டண ரவை உப்புமா, இரண்டு இலைகளில் கொடுத்து, தண்ணீரும் கொடுத்தார்கள். எங்களை எங்கிருந்து கொண்டோ, கவனித்துக் கொண்டே இருந்திருக்கக் கூடும். வணங்கினேன்.
கிட்டத்தட்ட 15 மணி நேரத்துக்குப் பின், கோவிலின் வெளிச்சுவருக்கு அருகில் வரிசையில். இடதுபக்கம் திரும்பி உள்நுழைய வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் அப்படியொரு நெருக்கடி. பிள்ளை கசங்கிக் கொண்டிருக்கின்றாள். தூக்கக் கூட முடியவில்லை. பின்னால் இருந்து பெரும் உந்துசக்தி. அப்பாயென வீறிடுகின்றாள். ஒருவழியாக அவளை அலேக்காகத் தூக்கிவிட்டேன். ஆனால் வரிசையிலிருந்து விலகிக் கொள்ளவே முடியாது. ஒன்றன் பின் ஒன்றாகத்தான் சென்றாக வேண்டும். பிள்ளையின் அழுகை, மனைவியின் அழுகை, நான் திட்டிக் கொண்டிருக்கின்றேன்.
அன்று பீடித்த கிலிதான்(Post-Traumatic Stress Disorder). தற்போது கூட, விமானநிலைய வரிசையில் சென்று இடப்பக்கமோ வலப்பக்கமோ திரும்புகையில் மனம் பேதலிக்கும், 𝒔𝒂𝒇𝒆𝒕𝒚 𝒊𝒔 𝒏𝒆𝒗𝒆𝒓 𝒂 𝒄𝒐𝒊𝒏𝒄𝒊𝒅𝒆𝒏𝒄𝒆.
-பழமைபேசி.
No comments:
Post a Comment