1/07/2020

காடடையும் படைக்குருவிகள்

தென்னிந்தியாவின் மான்செச்டர் என அழைக்கப்பட்டது கோயமுத்தூர் மாநகரம். ஒன்றிணைந்த கோயமுத்தூர் மாவட்டத்தில்தாம் ஏராளமான நூற்பாலைகள் இருந்தன. அந்த நூற்பாலைகளின் உற்பத்தியின் தேவைக்கேற்ற பருத்தி சாகுபடியும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இடம்பெற்று வந்தது. இந்த சூழ்நிலையில்தாம் 1980ஆம் ஆண்டு வாக்கில் என்றுமில்லாதபடிக்கு பருத்தியின் பூக்களும் காய்களும் புதுவிதமான புழுக்களால் சூறையாடப்பட்டன. மாலையில் பருத்திக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிய விவசாயி, காலையில் காடெங்கும் உதிர்ந்தும் சிதைந்துப் போனதைக் கண்டு மனம் வெதும்பினான். இரவோடு இரவாக ஒரு பூ, காயைக்கூட விடாமல் தின்றுவிட்டுக் கொழுத்துக் கிடந்தன ‘புரோட்டினியா’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் புழுக்கள். கடன் வாங்கிப் பயிரிட்டு, பேணிவளர்த்து, அறுவடைக்குக் காத்திருந்த விவசாயிகள் பல தூக்கிட்டுக் கொண்டனர்.

பறக்கும் பூச்சிகளில் இருந்துதாம் புழுக்கள் உருவாகின்றனயென்பதைக் கண்டு கொண்ட வேளாண் அறிஞர்கள் இனக்கவர்ச்சிப் பொறியைக் கண்டுபிடித்து ஏக்கருக்கு இத்தனை பொறிகள் என அமைத்தனர். இரவு நேரத்தில் பொறியில் எரியும் விளக்கின் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்பட்டு அதிலிருக்கும் புனலில் வீழ்ந்து மடிந்தன அத்தகைய பூச்சிகள். இருந்தாலும் நிலைமை கட்டுக்கடுங்கவில்லை. பருத்திக் காடுகள் சுடுகாடுகள் ஆகிக் கொண்டிருந்தன. விபரமறிந்த விவசாயிகள் பருத்திக் காடுகளுக்குள் ஆழமாக வாய்க்கால்கள் வெட்டினர். புழுக்கள் அத்தகைய வாய்க்கால்களுக்குள் விழுந்து மறுபக்கம் செல்ல ஊர்ந்து போகத்தலைப்படுகையில் செறிவாக குழிகளுக்குள் காணப்பட்டன. அவற்றையெல்லாம் சாக்குப்பைகளில் சேகரம் செய்து காட்டுக்கு வெளியே கொண்டு போய்க் கொட்டித் தீவைத்துக் கொழுத்தினர். என்றாலும் அவற்றின் சூறையாடல் நின்றபாடில்லை. அந்த நேரத்தில்தாம் எங்கிருந்தோ வந்தன படைக்குருவிகள். கண்ணிமைக்கும் நேரத்தில் காடெங்குமிருந்த புழுக்களை கொத்திக் கொண்டு போயின அவை. விவசாயி பெருமூச்சு விட்டான். பின்னாளில், இத்தகைய காய்ப்புழுக்களை அழித்தொழிப்பதற்கென்றே சிறப்புக் கொல்லிமருந்துகள் சந்தைக்கு வந்து சேர்ந்தன. எனினும், இன்றும் இந்த படைக்குருவிகளின் பங்கு தனியொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

புளோரிடா மாகாணத்தில் ஓர்லேண்டோ நகரில் பணியும் சிண்டி எனும் பெண்மணிக்குக் கடந்த இருநாட்களாக இதே சிந்தனை அவ்வப்போது வந்து போகின்றது. ”தன் வீட்டுக்கு அருகேயிருக்கும் பிறிதொரு வீட்டில் இருக்கும் அந்தக் குழந்தையைக் கடைசியாக நான் எப்போது பார்த்தேன்? அவள் ஏன் முன்னைப் போல வெளியே விளையாடவே வருவதில்லை??’, இப்படியான வினாக்கள் வந்து போய்க்கொண்டே இருந்தன. வீட்டில் தனியாக வசிக்கும் சிண்டி, அவ்வப்போது வீட்டு முன்றலில் இருக்கையைப் போட்டமர்ந்து அண்டை வீட்டுச் சின்னன்களின் விளையாட்டுகளைப் பார்த்து இன்புறுவது வாடிக்கை. அதன்நிமித்தம்தான் இந்தச் சிக்கல். ஒருகட்டத்தில், தயக்கத்தையும் தம் மனத்தடையையும் விட்டொழித்து ஊக்கத்துடன் சென்று அந்த வீட்டிலிருப்பவர்களிடம், அந்தக் குழந்தையைப் பற்றிக் கேட்கின்றார் சிண்டி. கிடைத்த மறுமொழிகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. ஐயமுற்றவர், அவர்களுடைய கார்களையும் வீட்டையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக உணர்ந்தார். உடனே, 9-1-1, அவசர அழைப்பு எண்ணுக்கு அழைத்து, கடந்த ஒரு மாதமாகவே அக்குழந்தையைத் தாம் கண்ணுறவில்லையென்றும், வீட்டாரைக் கேட்டால் மழுப்புகின்றார்களென்றும் கூறி அழுதார். குழந்தையின் அழகையும் அறிவையும் தாம் மிகமிக மதித்துப் பார்த்துக் கொண்டிருந்த நாட்களைச் சொல்லிப் புலம்பினார் சிண்டி.

சட்டம் ஒழுங்கு அலுவலர்களும், துப்பறியும் அலுவலர்களும் தத்தம் விசாரணையை மேற்கொண்டனர். அவர்களுக்குக் கிடைத்த பதில்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. 2008ஆம் ஆண்டு ஜூலை பதினைந்தாம் நாள் பதியப்பட்ட முறையீட்டின் நிமித்தம், 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தச் சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணைகளும், நீதிமன்ற நடவடிக்கைகளும் இடம் பெற்று வந்தன. 2008ஆம் ஆண்டு ஜூன்மாத வாக்கில் குழந்தையை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டனர் என்பதாக முதலில் சொல்லப்பட்டது. அடுத்ததாக, நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாக மூழ்கி இறந்து போனதாகவும், அதன்பின்னர் குடும்பத்தினர் அவர்களின் வீட்டுப் பிறவடையில் வைத்துத் தகனம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இரு மாதங்களுக்குப் பின்னர், குழந்தையின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2011ஆம் ஆண்டு வரையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளும் விசாரணைகளும் இடம் பெற்றன. விசாரணை அலுவலர்கள், உரிய சான்றுகளைக் கட்டமைப்பதில் வெகுவாகத் திணறினர். கடைசியாக, 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் நாள் தீர்ப்பளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஆங்காங்கே இருந்து கொண்டிருக்கின்ற படைக்குருவிகள் கொந்தளித்துப் போயின. இந்த படைக்குருவிகள், மனிதகுலத்துக்கு இன்னல் நேரும் போதெல்லாம் குரல் கொடுப்பர். அவர்கள் இந்த ஊரில், இந்த மாநிலத்தில், பொதுவாக ஒரு இயக்கத்தின்பாற்பட்டோ, கட்சியின்பாற்பட்டோ, அமைப்பின்பாற்பட்டோ இயங்குபவர்கள் அல்லர். அவர்கள் எல்லாருமே சாமான்யத் தனிமனிதர்கள், எளியனும் எளியர்கள். தன் பசியாற்ற, தன் குடும்பத்தின் பசியாற்ற, ஐந்துக்கும் பத்துக்குமாக உழைக்கும் பொதுமனிதர்கள்தாம் அவர்கள்.

குழந்தையின் சாவுக்கு இவர்கள்தாம் காரணமென அலுவலர் தரப்பினால் நிறுவமுடியவில்லை. விசாரணையின் போது, முன்னுக்குப்பின் முரணாகப் பொய் சொன்னது மட்டுமே நிறுவப்பட்டிருந்தது. அதன்நிமித்தம், கொலைக் குற்றச்சாட்டிலிருந்து முற்றுமுழுதுமாக விடுதலை செய்யப்பட்டார் குற்றம் சாட்டப்பட்டவர். படைக்குருவிகளால் தாங்கமுடியவில்லை. ஒரு குழந்தை யாதொரு காரணமுமின்றி நம்மிலிருந்து விடுபட்டுப் போயிருக்கின்றார். இன்னொரு குழந்தை இதுபோன்ற நிலைக்கு ஆட்படாமலிருக்கச் செய்வது நம் வேலையென வெகுண்டெழுந்தனர்.

தனிமனிதர்கள்தாம். ஒத்த மனநிலை கொண்டோரிடம் செய்தியைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். தத்தம் மனக்கொந்தளிப்பினை வெளிப்படுத்தினர். ஒன்றுகூடி குரலை வெளிப்படுத்தினர். ஆக்ககரமான உரையாடலை மேற்கொண்டனர். உரிய சட்டங்கள் வரவேண்டுமென ஆர்ப்பரித்தனர். விளைவு, கேய்லிச்சட்டம் (caylee's law) அறிமுகப்படுத்தப்பட்டது. குழந்தை இறந்து போனால், ஒருமணி நேரத்துக்குள்ளாக உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், குழந்தையின் பெற்றோர், வளர்ப்புப் பொறுப்பாளர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆவர். குழந்தை காணாமற்போனால், 24 மணி நேரத்துக்குள் உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், பெற்றோர்/பொறுப்பாளர் தண்டனைக்குரியவர் ஆவார்.

அமெரிக்காவில் எத்தனையோ சட்டங்கள், பாதிக்கப்பட்டவரின் பெயராலேயே இடம் பெற்று வருகின்றன. அல்லாவிடில், படைக்குருவிகள் சும்மாயிருப்பதில்லை. அதுதான் அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.

படைக்குருவியில் ஒரு குருவியாக இருக்க நமக்குத் தடையாக இருப்பதுதான் என்னவோ?!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com.







3 comments:

தங்கமணி said...

படைக்குருவிதான் சூறைக்குருவியா? ஆங்கிலத்தில் என்ன? நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

கீதமஞ்சரி said...

படைக்குருவிகளின் பங்கு மகத்தானது.. வயலிலும் வாழ்விலும்.