1/07/2020

போராட்டம் வெட்டிவேலை சார்! அப்படியா?!

There may be times when we are powerless to prevent injustice, but there must never be a time when we fail to protest 
- Elie Wiesel.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே பேச்சுரிமையும் அதன்வழி மேற்கொள்ளப்படும் போராட்டவுரிமையும்தான். எங்கெல்லாம் போராட்டம் மறுக்கப்படுகின்றதோ, கீழ்மைப்படுத்தப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்களாட்சிக் கோட்பாடு தோற்றுக் கொண்டிருக்கின்றதென்றே பொருள். அப்படியானால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்து குறைகூறவே கூடாதா? கூறக்கூடாதுதான். ஏனென்றால், ஒருவனுக்கு எது குறித்தும் போராடுவதற்கு முழு உரிமையுண்டு என்பதுதான் அரசியல் சாசனம். 1966 பன்னாட்டுக் குடிமை, அரசியலுரிமைக் கோட்பாட்டு(ICCPR) உடன்படிக்கையில் ஏராளமான நாடுகள் பங்கு கொண்டுள்ளன. தத்தம் நாட்டு அரசியல் சாசனத்திலும் இதற்கான உரிமைகளைக் கொடுத்தேயிருக்கின்றன. வேண்டுமானால், போராட்டத்துக்கான காரணத்தை கேள்விக்குள்ளாக்கலாம். அது எதிர்த்தரப்பின் உரிமையாகக் கருதப்பட வேண்டும். இருந்தும், சில போராட்டங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதும் உண்டு. எனவே, அதற்கான உளவியற் பின்னணி குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

அடையாளப்போலிகள்: உரிய கொள்கை, கோட்பாடு, அவற்றின்பாலான பற்றுதல் இருப்பவர்கள் அதனதன் இயக்கங்களில், அமைப்புகளில், கட்சிகளில் பங்கேற்று தொடர்ந்த பங்களிப்பினைத் தத்தம் அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் கொடுத்து வருவர். அப்படியல்லாதோருக்கு, அவ்வப்போது தம்மீதான மதிப்பீட்டின் மீது ஐயமேற்படும். தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும், தம் இருப்பினை வெளிக்காட்டிக் கொள்ளவும் ஏதொவொன்று தேவைப்படுகின்றது. அந்த இடத்தில்தான் போராட்டம் ஒரு கருவியாக எடுத்தாளப்படுகின்றது. நாட்டைக் காக்கின்றேன், மொழியைக் காக்கின்றேன், பண்பாட்டைக் காக்கின்றேனெனப் போராட்டங்கள் நடத்துவதும் பணம் திரட்டுவதுமெனக் கிளம்பிவிடுவர். போராட்டம் எனும் கூற்றினைச் சிதைக்க வேண்டுமென்பதற்காயும் செயற்படுவோர் உண்டு.

பிறநலம்நாடிப்போலிகள்: எந்தவொரு விழிப்புணர்வுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாமல் ஆட்டுமந்தையினுள் மற்றுமொரு ஆடெனச் சாமான்யனினும் பிறிதாய் இருந்து கொண்டிருப்போருக்குத் தம்மீதான நம்பிக்கைகூட இருந்திராது. ’அவர் சொல்கின்றார், செய்யாவிடில் அவரது நட்புப் பறிபோகும்; அறிவார்ந்த அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்; இதைச் செய்தால் அது கிடைக்கும்’ போன்ற காரணங்களுக்காகப் போராட்டத்தின் காரணத்தினையே அறியாமற் செயற்படுவது.

ஒட்டுண்ணிப்போலிகள்: தத்தம் வலுவைக் காண்பிக்கவும் தலைவராக உருவெடுக்கவும் நிலைநாட்டிக் கொள்ளவும் வேண்டும். அதிகாரசக்திக்கும் வணிகசக்திக்கும் ஊன்றாய் இருந்திடல் வேண்டும். மடைமாற்றுப் போராட்டங்களின் வழி, ஒரே கல்லில் இரு கனிகள் கிடைக்குமுகமாய்ப் போராட்டங்கள் வழியாகத் தன் படைகளைக் கொள்தல்.

போக்கிடப்போலிகள்: வெறுமையாய் உணரும் போது ஏதோவொடு கொழுகொம்பு தேவையாய் இருக்கின்றது. கூட்டமாக வாழ இயைந்தவன் மாந்தன். அந்நிலையில், களிப்புக்காகவேணும் பங்கு கொள்வது. எதிர்விளைவுகளென ஏதேனும் தென்பட்டால் மட்டுப்படுத்திக் கொள்வது அல்லது பின்வாங்கி விடுவது.

ஏதுபெறுப்போலிகள்: வெற்றியெனும் தருவாயில் தம்மையும் இணைத்துக் கொள்வது. அல்லது, வெற்றியெனும் பிம்பத்திற்காகவே அதிகாரமயத்தோடு இணைந்து நடத்தப்படும் போராட்டங்களில் பங்கு பெறுவது. சட்டத்தை திரும்பப் பெறச் செய்யும் போராட்டத்தில், சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமாயென விவாதிக்க அதிகாரமயம் கூடுகின்றதென்பதைத் தெரிந்து கொண்டு வெகு ஆர்ப்பாட்டத்துடன் களமிறங்கிச் செயற்படுவது.

இப்படியான உளவியலோடு போராட்டத்தைக் கையிலெடுப்பவர்கள்தாம் போராட்டவுரிமைக்கே வேட்டு வைப்பவர்கள். இந்த எதிர்த்தரப்பினர், இத்தகைய உளவியலோடுதாம் அவர்கள் செயற்படுகின்றனரெனும் விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; ஏனென்றால் அவர்களின் ஆழ்மனத்தில் என்னமாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை அறியாததாக இருப்பர். அல்லது, திட்டமிட்டே உள்நோக்கத்தோடு செயற்படுத்தும் கூர்நோக்கர்களாய் இருப்பர்.

சமுதாய, குடிமைநலம் போற்றிடப் போராடும் முதற்தரப்பினர், இவர்களை எதிர்த்தும் போராட வேண்டிய நிலைக்கு ஆட்பட்டிருக்கின்றனர். ஏனென்றால், கொள்கைவழிப் போராட்டங்கள் இத்தகு போலிப்போராட்டங்களால் நீர்த்துப் போகவும், சிதைந்து போகவும், கண்டனத்துக்காட்படவும் நேரிடுகின்றது. ஆகவே, போலிகளைச் சுட்டுவது காலத்தின் கட்டாயம்.

போலித்தனத்தின் கருவறுப்புக்கிடையே தத்தம் கொள்கைவழிப் போராட்டங்களையும் முனைப்போடு ஒரு மாந்தன் ஏன் முன்னெடுக்க வேண்டும்? அதன் தேவை என்ன??

விழிப்புணர்வு: எல்லாக் குடிமக்களுக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமென்கின்ற அவசியமில்லை. அத்தகு சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வுக்காகவேணும், கவன ஈர்ப்புக்காகவேணும் போராட்டங்களை, இயக்கங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

மக்கள்சக்தி: ஒவ்வாத சட்டங்களோ, பழக்கவழக்கங்களோ தலையெடுக்கும் போது, அதற்கான எதிர்வினையென்ன என்பதை ஒருமுகப்படுத்திக் காட்ட வேண்டிய தேவை எந்தவொரு சமூக ஆர்வலனுக்கும் உண்டு. அதற்காகவேணும், ஓர் ஊர்வலத்தையோ, கூட்டத்தையோ, ஆர்ப்பாட்டத்தையோ நடத்திக் காட்டியாக வேண்டியுள்ளது.

ஒற்றுமைப்படுத்தல்: மாந்தனையப் பெருவெள்ளத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்புநலம், கூறுகள், விருப்பு வெறுப்புகள், கலைநயம் போன்றவை இருக்கும். எடுத்துக்காட்டாக, மூன்றாம் பாலினம் என வைத்துக் கொள்வோம். பெருவெளியில் எங்கெங்கோ ஒருவர் இருக்கக் கூடும். அப்படியான ஒருமித்தவரின் ஒற்றுமைக்குப் போராட்டங்கள், இயக்கங்கள் தேவையாக அமைகின்றன.

ஒருங்கிணைவு: செயலூக்கம் பெறவும், மேன்மை கருத்திச் செயற்படவும் ஆங்காங்கே இருப்போர் ஓரிடத்தில் சங்கமித்து கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ளப் போராட்டங்கள் வழிவகுக்கின்றன.

தீர்வுபெறல்: எல்லாப் போராட்டங்களும் எல்லாக் காலங்களிலும் வெற்றியை ஈட்டிக் கொடுக்குமெனச் சொல்ல முடியாது. ஆகவே, மாற்றுத்தீர்வு குறித்து ஆயவும் அதற்கான படிப்பினையைப் பெறவும் போராட்டங்கள் வழிவகுக்கின்றன.

இத்தகு தேவைகளுக்கும் அப்பாற்பட்டு, ஒருவர் ஏன் போராட்டவுரிமையை வலியுறுத்தியும், போராட்டவுரிமைக் கொச்சைப்படுத்துதலை எதிர்த்தும் செயற்பட வேண்டும்??

போராட்டவுரிமை என்பது ஒவ்வொரு மாந்தனின் அடிப்படை அரசியலுரிமை, குடியுரிமையாகும். மக்களாட்சித் தத்துவம் தழைத்தோங்க எதிர்க்குரலும் எதிர்வினையும் இருந்தேயாகவேண்டும். மனிதனுக்குத் தன் ஆற்றாமையை இறக்கி வைக்க ஏதோவொரு வடிவில் ஓர் இடம் இருந்தே தீர வேண்டும்; அல்லாவிடில் அடிமைத்தனத்துக்கே அது வழிவகுக்கும். சமூகத்தில் வெகுவாகத் தெரிந்திராத சில பல பிரச்சினைகளை வெளிப்படுத்த போராட்டங்கள் ஏதுவாகும். எந்தவொரு மேன்மையும் மாற்றத்தினைக் கொண்டே இடம் பெறுகின்றது. அத்தகைய மாற்றங்களுக்குப் போராட்டங்கள் வித்திடுகின்றன. எதிர்மறையான மாற்றங்களை மட்டுப்படுத்துகின்றன. பாரதூர விளைவுகளைச் சார்ந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு இடையேயான ஒற்றுமைக்கு வித்திடுகின்றது போராட்டம். அதிகாரவரம்புமீறல், கொடுங்கோன்மை, முறைகேடு போன்றவற்றை அம்பலப்படுத்துகின்றன போராட்டங்கள். அரசு, அமைப்பு, நிறுவனங்கள் போன்ற குடிமை மையங்களுக்கிடையேயான சீரின்மையைக் களைந்து நல்வழிக்கு வித்திடுகின்றன போராட்டங்கள். எதிர்முகாம், மாற்றுமுகாம், பிறர்மனது என மற்ற சமூகச் சிந்தனைகளையும் இணக்கத்தையும் இனம் காணச் செய்கின்றன போராட்டங்கள். எதையுமே செய்யாமல் குறைசொல்லிக் கொண்டிருப்பதற்கு மாற்றாக, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இட்டுச் செல்கின்றது போராட்டவடிவம்.

உலகின் எந்தநாட்டு மூலையிலிருந்தாலும், அவரவருக்கான சவால்களும் பிரச்சினைகளும் அல்லல்களும் இருந்தேதானிருக்கும். சோர்ந்திருந்து, குறைசொல்லிப் புலம்புவதாலும் நம்பிக்கையிழந்து போய் இருப்பதாலும் மேன்மை கிட்டிவிடாது. தரக்குறைவான அரசியல், முறைகேடு, ஊழல், தடித்தனம், காமுகத்தனம், வெறுப்பியக்கம், பிரித்தாளும் போக்குயென எல்லாமும் இருக்கும்தான். இவையெல்லாம் இயல்பானதே. எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்; ஒவ்வொரு குடிமகனும் இவற்றை இனம் கண்டு தத்தம் கடமையைச் செய்ய முற்படும்போது. தீர்வு கிட்டியே தீரும். தலைவர்கள், கொள்கை கோட்பாடு கருதிச் சித்தாந்தங்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். அவற்றின்வழிப் பயணிக்க முற்படும் தருவாயில் நமக்கான தீர்வு அமைந்தே தீரும். உணர்வுகளுக்கு முந்தையதாக சித்தாந்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்திடல் வேண்டும்.

ஒரு மனிதனின் மதிப்பீடு, அளவீடு என்பது அவன் வசதியாகவும் இன்பத்தோடும் இருக்கும் போது பெற்றிருப்பது அல்ல. மாறாக, சவால்களை எதிர்கொள்ளும் போதும் போராட்டங்களுக்கு ஆட்படும் போது எத்தகையவனாய் இருந்தான் என்பதேயாகும். குரல்கொடுக்க வேண்டிய இடத்துக் குரல் கொடுத்தானா? செயலாற்ற வேண்டிய இடத்தில் செயலாற்றினானா?? சீராகப் பணி செய்கின்றானா?? இவைதாம் மனிதனின் மாண்புகள்.

போராடுவதென்பது நம் கலாச்சாரம் பண்பாடு இனத்தின் கூறா, அல்லவாயென்பதல்ல; மாறாக, போராடுவதென்பது எந்தவொரு உயிருக்குமானதான அடிப்படைத் தேவை. அதற்கு செவிமடுப்பதும் மதிப்பளிப்பதும் நல்லதொரு மனிதனுக்கு அழகு. குரல் கேட்கப்பட வேண்டும்! கொள்கை தரிப்போம்! உரிமை கொள்வோம்!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com.

No comments: