Regional Comprehensive Economic Partnership Agreement (RCEP)
ஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை
*** *** *** *** *** *** ***
சீன அதிபர் இந்தியாவிற்கு வந்து சென்றது இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடத்தான் போன்ற புரளிகளைக் கட்டமைப்பது மிகவும் வருந்தத்தக்கது.
கிழக்காசிய நாடுகள் சபையில் தற்போது, புருணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோசு, மலேசியா, மியான்மார், பிலிப்பைன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளும், புதுவரவாக சீனா, இந்தியா, தென்கொரியா, ஆசுதிரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் சேர்க்கப்பட்டு, இவற்றுக்கிடையே தங்குதடையற்ற பொருளாதாரச் சந்தை என்பதற்கான ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்தும், அவ்வப்போது அமைச்சர்கள் அளவிலான மாநாடுகளும் இடம் பெற்று வருகின்றன. ஒப்பந்தம் இன்னும் இறுதி வடிவமே பெறவில்லை. அப்படியே பெற்றாலும், அதில் பங்கு பெறும் எல்லா நாட்டுத் தலைவர்களும் ஒருங்கே கைச்சாத்திட வேண்டும்.
கடைசியாக, அக்டோபர் 12ஆம் நாள், அக் 12, 2019, தாய்லாந்தில் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்று முடிந்திருக்கின்றது. கூட்டத்தில், எண்ணிமக் கோப்புகள்(digital content), எண்ணிம உள்ளீடுகளுக்கான காப்புரிமை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய கோப்புகளை அந்தந்த நாடுகளில் சேகரம் சேர்த்து வைக்க, உரிமையாளருக்குத் தனிவசதி தரப்பட வேண்டுமென்பது இந்தியாவின் கோரிக்கையாக இருந்திருக்கின்றது. அல்லாவிடில், மற்றநாடுகளுக்கு எண்ணிமப் படைப்புகள் சென்று சேரும் போது களவு போக ஏதுவாகி விடும். இக்கோரிக்கைக்கு முடிவு எட்டப்படாமலே கூட்டம் முடிவுற்றிருக்கின்றது. இப்படிப் பல சரத்துகளின் மீதும் ஒருங்கிணைந்த முடிவு எட்டப்பட்டுத்தான் ஒப்பந்தம் இறுதிநிலைக்கு வரும்; வர வேண்டும்.
இவ்வுடன்படிக்கை மேற்கொள்ளப்படுமேயானால், இப்புதிய சரகத்தில், உலகின் மொத்த உற்பத்திப் பொருட்களில் 40% பொருட்கள் இச்சரகத்திற்கு உரிய காப்பீட்டுப் பொருட்களாக இருக்கும். உலகப் பொருளாதாரத்தில், 50% இச்சரகத்துக்கு உட்பட்டதாக இருக்கும். மதிப்பீட்டில், 2050ஆம் ஆண்டின் போது, உலகப்பொருளாதாரத்தின் மதிப்பில் கிட்டத்தட்ட 75% இந்தியா, சீனாவுக்குரியதாக இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் இது ஆக்கப்பூர்வமானதா? பின்னடைவைத் தரக் கூடியதா என்பதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் ஒரு சில, உண்மைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
1. பொறியியல் பொருட்களில் இச்சரக நாடுகளுக்கான நடப்பு ஏற்றுமதி: $17.2 பில்லியன் டாலர்கள். இறக்குமதி: $90.5 பில்லியன் டாலர்கள். இப்படியிருக்க, மேலும் அவர்களுக்குத் தங்குதடையற்ற திறப்பை ஏற்படுத்தித் தரவேண்டுமாயென்பது விமர்சகர்களின் கேள்வி.
2. சீனாவின் உட்கட்டமைப்பு இருண்டதும் கட்டுப்பாடுடையதுமாகும். அப்படியிருக்க அங்கே செல்லும் நமது பொருட்களின் நுட்பம் களவாடப்படாது, பாதுகாப்பு, சந்தைப்படுத்தல் என்பது கைகூடக் கூடியதுதானா என்பதும் விமர்சகர்களின் கேள்வியாக இருக்கின்றது.
3. உள்நாட்டுக் கட்டமைப்புகளை மற்ற நாடுகளுக்குத் திறந்து விடும் போது நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
4. சுற்றுச்சூழல், பணியாளர் நலனுக்கான கட்டுப்பாடுகள் பேணப்படுமாயென்பதும் கவலைக்குரியதாக இருக்கின்றது.
5. நாட்டின் கலாச்சார, பண்பாட்டுத் தனித்துவம் சிதைப்புக்கு உள்ளாக நேரிடலாமென்பதும் மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கின்றது.
இத்தகைய முன்னெடுப்புக்கு ஆதரவும் பெருகி வருகின்றது. என்ன காரணம்? ஆதரவும் எதிர்ப்பும், அவரவர் துறை, அவரவர் பார்வையைப் பொறுத்து இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, இந்தியாவைச் சார்ந்த மருந்துப்பொருள் ஏற்றுமதியாளருக்கு இது நன்மை பயக்கக் கூடியதாய் இருக்கும். ஏற்றுமதியில் ஓங்கியிருக்கின்ற இவர்களுக்கு கட்டுப்பாடற்ற சந்தையானது இன்னமும் இலாபத்தை ஈட்டித்தரும். இதுவே வேளாண்மை, பொறியியல் துறை சார்ந்தோருக்குப் பெரும் பின்னடைவாக அமையக் கூடும்?
தற்போதைக்கு சாமான்யன் செய்ய வேண்டியதெல்லாம், இதன்நிமித்தம் அறிதலின் தேடலை வளப்படுத்திக் கொள்வதும், இடம் பெறும் பணிகளை அவதானித்து குடிமகனுக்குரிய பொறுப்புகளை மேற்கொள்வதும்தான். Be informed and Be responsible. திறந்தவெளிச் சந்தையென்றால், தரமும் நன்றாக இருக்க வேண்டும். விலையும் குறைவாக இருக்க வேண்டும். தரத்துக்கு அடிப்படை கல்வியும் பணியாளர் மேம்பாடும். சகாயவிலைக்கு அடிப்படை, இலஞ்ச ஊழல் இல்லாமையும் திறமையும்.
https://www.thehindu.com/article28228900.ece
https://www.businesstoday.in/bt-buzz/news/bt-buzz-why-india-should-not-ignore-rcep-free-trade-mega-deal/story/373035.html
-பழமைபேசி, 10/13/2019.
[குறிப்பு: கட்டுரையாளருக்கு இதன்நிமித்தம் எந்த நிலைப்பாடும் இல்லை. தகவலைப் பகிர்வது மட்டுமே நோக்கம்]
10/13/2019
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment