10/12/2019

நேபாளத்தில் சீன அதிபர்



கடைசியாக இருந்த ஒரே ஒரு இந்துசமய நாடுதான் நேபாளம். இந்தியாவின் ஓர் அங்கமாகவே இரண்டறக் கலந்திருந்தது. கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வருவது, இந்தியப்பணம் புழங்குவதென எல்லாமுமாக. மேற்கு, தெற்கு, கிழக்கு என மூன்று புறமும் இந்தியப்பகுதிகள். தென்புற எல்லை மட்டும் திபெத் நாட்டுடன் பங்கிட்டுக் கொண்டிருந்தது. திபெத், திபெத்தாக இருந்தவரையிலும் இதுதான் நிலைமை.

படிப்படியாக திபெத் சீனாவின் ஓர் அங்கமாக உள்வாங்கப்பட்டுவிட, தன் வட எல்லை என்பது சீனாவினுடனான எல்லையென்றாகி விட்டது.

நேபாளத்திலோ, இந்துசமயக் கடவுளின் நேரடிப்பிள்ளை மன்னர். அவரின் செங்கோல்தான் நேபாளத்தின் ஆட்சியென்று இருக்க, சீனாவின் ஆதரவுடன் மாவோயிசக் கொள்கையுடையவர்கள் ஆட்சிக்கெதிராகவும், குடியாட்சியைக் கொண்டு வரும் முகமாகவும் புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபடத் துவங்கினர். இந்தக் காலகட்டத்தில்தான் அரண்மனையிலிருந்த இளவரசர், மணம்புரிவதில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக குடும்ப உறுப்பினர்களைச் சுட்டுக் கொலை செய்து தாமும் தற்கொலை செய்து கொள்கின்றார். இது சதியா என்பதெல்லாம் புலனாய்வுக்குட்படுத்த வேண்டியவை. அவரது இளவல் ஆட்சிப் பொறுப்பைக் கையிலெடுத்துக் கொள்ள, மாவோயிசப் புரட்சி வெடிக்கின்றது. மன்னராட்சி முடிவுக்கு வந்து, மக்களாட்சி மலர்கின்றது. சீனாவின் பிடியும் ஓங்குகின்றது.

நேபாளத்துக்கு எல்லாமும் இந்திய மண்ணிலிருந்துதான் போயாக வேண்டும். மலைப்பாங்கான திபெத்/சீன எல்லைப்பகுதியினூடாக சாலைகள் இல்லை. உயரமான பள்ளத்தாக்குகளில் புகுந்து வருவதென்பது இயலாதவொன்று.  இந்தியா தன் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள முனைகின்றது.

மக்களாட்சி ஏற்பட்ட நிலையில், புதிய அரசியற்சட்டம், மாகாண எல்லைகள் வகுத்தல் போன்றவை வெகுவேகமாக இடம் பெற்றுவர, இந்தியாவின் பங்களிப்பு அவற்றில் முக்கியத்துவம் பெறவில்லை. அந்த சூழலில்தான், 2014-2015 ஆண்டு வாக்கில், இந்திய வம்சாவளியினராகவும் இந்தி பேசுபவர்களாகவும் இருக்கின்ற மாதேசி குடியின மக்களின் போராட்டம் உருவெடுக்கின்றது.

மாதேசியினர் வெகுவாக இருக்கும் நிலப்பகுதிகளை ஒரு மாகாணமாக அறிவிக்காமல், இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து மற்ற மாகாணங்களின் ஒரு பகுதியாகச் சேர்த்துவிட்டதன் பொருட்டு அரசியல் முக்கியத்துவம் அல்லாதவர்களாக ஆக்கப்படுகின்றோமென்பது அவர்களின் குற்றச்சாட்டு. ’இவர்களின் போராட்டத்துக்குப் பின்னால் இருப்பது இந்தியா’ என்பது நேபாள அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. இந்தப் போராட்டத்தின் காரணமாக, இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டது நேபாளம்.  பெட்ரோல், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேபாளத்துக்குக் கிடைக்காமல் போனது. அதே காலகட்டத்தில் நேபாளத்தில் நிலநடுக்கமும் ஏற்பட்டுவிட, நேபாள மக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் உள்ளானது இந்தியா. வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது சீனா. ஐநா சபையில், இந்தியாவின் மீதான குற்றச்சாட்டினைப் பதிவு செய்தது நேபாளம்.

சீனாவுடன் தன் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொண்டது நேபாளம். முற்றுமுழுதாக இந்தியாவை மட்டுமே நம்பியிருந்த நேபாளத்தின் இறக்குமதியின் சீனாவின் பங்கு 40 விழுக்காடுகள் வரை உயர்ந்திருக்கின்றது. இன்னமும் சீனாவுடனான தரைவழிப் போக்குவரத்து உகந்ததாக இல்லைதான். சீன இறக்குமதியில் 40% வரை, ஆகாயமார்க்கமாகவும் எஞ்சியது கல்கத்தா அல்லது பங்களாதேசிலிருந்து இந்திய எல்லையினூடாக இடம் பெற்று வருகின்றது. இவையனைத்தும் சீனாவின் திபெத் எல்லை வழியாகவே இருந்திடல் வேண்டுமெனத் திட்டங்கள் போடப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகளும் இடம் பெற்று வருகின்றன.

சீனாவிலிருந்து 18 விமானங்களே வந்து போய்க்கொண்டிருந்த நிலை, கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100 விமானங்கள் என்றாகி விட்டிருக்கின்றது. பெருவாரியாக இந்தியர்களும், இந்தியமார்க்கமாக மட்டுமே சென்று கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளின் நிலை வெகுவாக மாறிவிட்டிருக்கின்றது. ஆண்டுக்கு 2 இலட்சம் இந்தியர்களும் ஒன்னரை இலட்சம் சீனர்களும் செல்வதாகக் கணக்குகள் தெரிவிக்கின்றது. திபெத்தின் லாசா நகருக்கும் நேபாளத் தலைநகரான காட்மண்டுவுக்கும் கூட தரைவழிப் போக்குவரத்தும் கைகூடி வந்திருக்கின்றது. சிறு வாகனங்களில் சென்றால், இருபது மணி நேரத்துக்குள்ளாகச் சென்று சேரக்கூடிய அளவில் இருக்கின்றது.

திபெத் லாசாவுடன் காட்மண்டுவை தொடர்வண்டிப் பயணமார்க்கமாக இணைத்துவிட்டால், சீனாவின் எந்தப் பகுதியிலிருந்தும் சரக்குகள் வந்து செல்லலாம். தொழில்நுட்ப வளர்ச்சியென்பதும் நேபாளத்துக்கு சாதகமாக உருவெடுத்து வருகின்றது. இந்த நிலையில்தான், இந்தியாவிலிருந்து புறப்பட்ட சீன அதிபர், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நேபாளத் தலைநகர் சென்று சேர்ந்திருக்கின்றார். அவரது பயணத்தில் மூன்று விதமான முன்னெடுப்புகள் கைச்சாத்திடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. முதலாவது, சீனாவின் போக்குவரத்து வளையத்தில் நேபாளத்தையும் உட்படுத்திக் கொள்வது. அடுத்ததாக, நேபாளத்தில் இருக்கும் திபெத்திய அகதி முகாம்களைக் கைவிட்டு தங்கியிருக்கும் திபெத்தியர்களைச் சீனாவிடம் கையளிப்பதென்பதாகும். மூன்றவதாக, நாட்டின் பாதுகாப்புப் பணிகளில் சீனாவுடன் ஒத்துழைப்பைப் பெறுவது.

சீனாவின் போக்குவரத்து வளையத்தில் இடம் பெறுவதில் பிரச்சினை இல்லை. அதற்கான சாலையமைப்புப் பணிகளுக்கான செலவினை நேபாளத்தின் தலையில் கட்டிவிட்டு, நேபாளத்தின் இறையாண்மைக் கேட்டை உருவாக்கித் தன்னுடைய அனுகூலங்களையே முதன்மையாக்கிக் கொள்ளும் சீனா என்பதாக நேபாளத்தின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக, இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம், மியான்மாரின் விரைவுச்சாலைத் திட்டம் முதலானவை அமைகின்றன. இலங்கை அதிபர் இராசபக்சேவைக் கையில் போட்டுக் கொண்டு வருவாய்க்கே வழியில்லாத துறைமுகத்தைக் கட்டியெழுப்பி, அதற்கான செலவினத்தைத் திரும்பக் கொடுக்க முடியாமல் துறைமுகத்தையும் அதனையொட்டிய 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.

திபெத்திய அகதி முகாம்களைக் கைவிடுவதன் வாயிலாக, அவர்களெல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதில் இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்த முனைகின்றதா சீனாயெனும் கேள்வியையும் முன்வைக்கின்றனர் பார்வையாளர்கள்.

பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பங்கேற்கக் கூடாதென நேபாளத்தை நெருக்கி வருகின்றது அமெரிக்கா. மாறாக, அமெரிக்கா முன்னெடுக்கும் திட்டத்தில் நேபாளம் பங்கேற்க வேண்டுமெனக் கோரியும் வருகின்றது. ஆனால், அமெரிக்காவின் திட்டம் சீனாவுக்கு எதிரானது, ஆகவே நாங்கள் பங்கேற்க முடியாதெனச் சொல்லி வருகின்றது நேபாளம். அமைதி காத்து வருகின்றது இந்தியா. திபெத்தைப் போன்று, நேபாளமும் சீனாவாகிப் போகும்வரையிலும் அமைதி காக்கப் போகின்றதா இவ்வையகம்?? சமகாலத்தில் வாழ்ந்து வருகின்ற நம் கவனத்தைப் புவிசார் அரசியலிலும்  சற்றுப் பாய்ச்சுவோமே!!

https://thediplomat.com/2019/10/himalayas-leveled-how-china-nepal-relations-have-defied-geopolitics/
https://www.nytimes.com/2018/06/25/world/asia/china-sri-lanka-port.html?module=inline
https://thediplomat.com/2019/10/amid-china-us-rivalry-india-maintains-low-profile-in-nepal/

-பழமைபேசி. 10/12/2019.

No comments: