3/16/2019

Beware: Fake News

குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாத ஆட்களோடு விவாதம் செய்வது வெட்டிவேலை. அப்படிச் செய்யத் தலைப்பட்டால், எதிராளி செய்யும் எல்லாக் கபட வேலைகளுக்கும் ஒரு படி மேலே சென்று அதே வகையான கபட வேலைகளை நாமும் செய்ய வேண்டும். செய்தால்தான் எதிராளியை வீழ்த்த முடியும்; அது எந்தத் தொழிலாக இருந்தாலும். இப்படியான மல்லுக்கட்டில், மக்களின் ஆதரவை, நுகர்வைப் பெறுவதில் முதலிடம் வகிப்பது புரிதற்போர். தமக்கு ஏதுவான புரிதலை மக்களிடையே கட்டமைப்பது. இந்த எழவு, மாய்மாலத்தால்தான் போலிச்செய்திகள், Fake News, பூதாகரமாக உருவெடுக்கின்றது. அரசியல் என்பது மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலும் இடம் பிடித்து மாந்தசமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கின்றது இத்தகைய கலாச்சாரம். தொன்றுதொட்டு இருந்து வருவதுதானென்றாலும், தகவற்தொழில் நுட்பம், தேசதேச எல்லையற்ற சமூக வலைதளங்கள் அவற்றைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டிருக்கின்றது.ஒரு கருத்தாடல், விவாதம், பரப்புரை என எதையாவது ஒன்றை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதில், ஒரு சாமான்யன் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்படுகின்றான் என்பதைப் பார்க்கலாம்.
1. குழப்புதல்: சாமான்யன் ஒரு பொதுப்புத்தியில் நிலை கொண்டிருப்பான். சமநிலையில் இருப்பவனை முதலில் குழப்பி விட்டுக் கொந்தளிப்புக்கு ஆட்படுத்தி, அவனை அச்சுறுத்தி விட வேண்டும். பின்னர் அதற்கு உரிய தீர்வாக தத்தம் நோக்கத்தை உட்புகுத்தி விட வேண்டும். சாமான்யனின் நிம்மதியும் கெட்டு, பணமும் பழுத்துப் போகும்.
2. சுமையேற்றுதல்: ஒரு சாமான்யன் அவன் போக்கில், அவனுக்குக் கிடைத்ததை வைத்துக் கொண்டு விழுமியமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பான். முன்னேற்றத்திற்கான தேவைகள் இருக்கும்தான். அந்தத் தேவைக்கான தேடல் அவனுக்குள் இயல்பாக நேரிடச் செய்தல் சமூகத்தின் கடமை. அத்தகைய தேவைக்கான காரணங்களை இலாகவமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவனைத் திணறடிக்கச் செய்யுமளவுக்கு தகவல், செய்திகளைக் கொண்டு போய் அவனுக்குள் இறக்கிவிட வேண்டும். தகவற்சுழலில் சிக்கிய அவன் இதைப் பிடிப்பதா, அதைப் பிடிப்பதா என அலைபாயத் துவங்குவான். அந்த நேரத்தில், ஆபத்பாந்தவனாகச் சென்று தத்தம் நோக்கத்தை அவனுக்குள் சொருகி விட வேண்டும். அவனுக்கு ஒரு மண்ணும் தெரிந்திருக்கப் போவதில்லை. பணத்தையும் கொட்டுவான். ஓட்டுகளையும் போடுவான்.
3.முடக்குவாதம்: எந்தவொரு சாமான்யனும், மரபார்ந்த கலை, இலக்கியம், உணவு, விளையாட்டு, மொழி, சமயம் என ஏதாவதொன்றில் பற்றுக் கொண்டிருப்பான். இவையெல்லாமுமே அவன் வாழ்வியலைச் செம்மையாக்க இருப்பனதான். ஆனாலும், அவற்றின் மீதான பற்றினைப் பெருக்கிப் பெருக்கி, ஐசு வைத்து, அதற்குள்ளேயே முடக்கி, மற்றவற்றின் மீதான பார்வையைக் குறுக்கி விடுவதன் வாயிலாக, சொல்வதை ஏற்றுக் கொள்ளச் செய்யும் மனப்பாங்கைக் கட்டமைத்து விடுதல். இப்படியானவற்றுக்கு கட்டுண்டவன், எளிதில் சோரம் போவான்.
4. சோர்வுறச் செய்தல்: தத்தம் பரப்புரை, போதனைகளின் போது, தத்தம் இழுப்புக்கு எளிதில் கட்டுப்படாதவனிடம் பேச்சுக் கொடுத்து, பேச்சுக் கொடுத்தே சோர்வுறச் செய்து ஓய்ந்து போன நிலையில் அவன் தலையில் எல்லாவற்றையும் கட்டிவிடுதல். ஆக, தெளிந்த சாமான்யன் என்ன செய்வான்? இடத்தை விட்டு எழுந்து போவான். தெளியாத சாமான்யன் ஓய்ந்து சோரம் போவான்.
5. கூடுவிட்டுக் கூடுபாய்தல்: பரப்புரையின் போதோ, உரையாடலின் போதோ, சிந்தனை வயப்பட்டு கேள்விகளைக் கேட்பதாக உணரும் போது, பேசு பொருளில் இருந்து பிறிதொன்று, அந்தப் பிறிதொன்றிலிருந்து மற்றொன்று என இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் போது, சாமான்யன் ஏதோவொரு இடத்தில் திணறுவான். அந்த நேரம் பார்த்து, தலையில் சுமையை, தகவற்சுமையை ஏற்றி விட்டு மேலும் திணறலுக்கு ஆட்படுத்திப் பதம் பார்த்து விடுதல். பேசுபொருளில் இருந்து விலகுவது தெரிந்தாலே, சாமான்யன் கவனத்துடன் இருந்து விட வேண்டும். பிறிதொரு இடத்துக்குப் பெயர்வதை அனுமதிக்கக் கூடாது.
6. பிரித்தாளுதல்: சாமான்யன் ஒரு குடும்பமாக, நண்பர்கள் குழுமமாக, ஓர் ஊராக, இப்படிக் கூட்டுறவாக இருத்தல் எதிராளிக்கு ஏதுவாக இருக்காது. சாமான்யனுக்கே தெரியாமல் கூட்டுறவைப் பிரித்தொழிக்கும் பாங்கில் தகவலைக் கசிய விட்டுத் திணறடித்து, பாடம் போட்டுக் கலைத்து விடுதல். அண்டி இருப்பவனிடத்தில் ஏதேனும் இடைஞ்சல் என்றால், அது அந்த சாமான்யன் தாமாக உணர வேண்டும். அடுத்தவர் சொல்லிப் புலப்படுவதாக இருந்தால், உசாரய்யா உசாரு.
7. அன்பு பாராட்டி, அமைதி பேணி வீழ்த்துதல்: சாமான்யனைப் பேணிப் பாதுகாப்பதற்காகவே பிறப்பெடுத்தது போலவும், இல்லாத அமைதியின்மைக்கும் கூட அமைதியூட்டிக் கொடுப்பது போலவும் கரிசனம் காட்டிக் காட்டி வளைய வந்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வீழ்த்தும் முறைமை இது. தன்மானத்துக்கு எதிரான, தகுதிக்கு ஒவ்வாத, உழைப்பற்ற எந்தப் பரிசுப் பொருளோ, புகழ்ச்சியுரையோ அனுமதிக்கவே கூடாது. அனுமதித்தால், அதைக் காண்பித்தே அடிமைப்படுத்தி ஒழுங்கு செய்து வீழ்த்தி விடுவர் வீழ்த்தி.
8. மேட்டிமை: கல்வி, உழைப்பு, கலை, இலக்கியம் என எதையாவது ஒன்றைக் காண்பித்து, மேட்டிமையைப் படிப்படியாகக் கட்டமைத்து, அதிகாரத்தைச் செலுத்தி பண்டங்களை விற்பது, கருத்துகளை விதைப்பது, எப்படியான கருத்துகளை? போலித்தனமான, சாமான்யனுக்கு உசிதமற்ற கருத்துகளைத் திணிப்பது. எத்தகைய ஆளானாலும், அவர்தம் திறத்தை, ஆக்கத்தைப் பாராட்டலாம். அவ்வளவுதான். அவர்களைச் சாமான்யன் தொழுதிடத் தேவையில்லை.
9. ஏவுதல்: சாமான்யன் பேசாமற்கொள்ளாமற் சென்று கொண்டிருப்பான். நயமான சொற்கள் கொண்டு மனத்தைக் கிளரச் செய்தலின் வழி, அவன் ஏதோவொரு எதிர்வினையாற்றப் பணித்து, அந்த எதிர்வினையைக் கொண்டே குற்றவாளியாக்கி, அல்லது தத்தம் வளையத்துக்குள் கொண்டு வந்து வீழ்த்துதல். இணைய உரையாடலில், சாமான்யன் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். அல்லாவிடில், அந்தச் செய்கையை மாத்திரம் திரைநகல் எடுத்து மானமிழப்புச் செய்து அடிமைப்படுத்து விடுவர். உசாரய்யா உசாரு.
10. குலைத்தல்: அடுத்தடுத்து எதிர்மறையான தகவல்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பதன் வழி, மனத்தின் நிலைத்தன்மையைக் குலைத்து, நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி, இணக்கத்தைச் சீர்குலைக்கச் செய்தல். இப்படியான தகவல்களின் உண்மைத்தன்மையைச் சாமான்யன் அறிந்து கொண்டு செயற்படுதல் காலத்தின் தேவை. அடுத்தடுத்து, எதிர்மறைச் செய்திகள் வந்தாலே போதும், உசாரய்யா உசாரு.
Not everything that counts can be counted, and not everything that can be counted counts! - Albert Einstein
உலகப் பொய்மையின் ஊற்று, நமது புரிதற்தன்மை!!
நீங்கள் எப்படிப்பட்டவரென நீங்கள் கருதுவது தவறு; நீங்கள் எப்படிப்பட்டவரென மற்றவர்கள் நினைப்பதுவும் தவறு; உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதன் பேரில், நீங்கள் உங்கள்மீதான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுதான் மெய்!! இந்தப் பண்புதான் போலித்தன்மை, பொய்மையின் ஊற்றுக்கண். எந்தப் பெரியவர், எந்த அறிவாளியாகக் கருதப்படுபவர், எந்த ஆளுமை, எந்த நாதாரி, எந்தத் தக்காளி, யாராக இருந்தாலும், செய்தியின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். Let's fight against Fake News!!
எடுத்துக்காட்டு: தென்காசி நாடாளுமன்றத் தொகுதி திமுகவுக்கு மிகவும் வலுவீனமான தொகுதி. அந்தத் தொகுதியில் ஒருமுறை கூட வென்றதே இல்லை. (this is called Fake News). 10 முறை காங்கிரசும், இருமுறை இந்திய கம்யூனிசக் கட்சியும் வென்றிருக்கின்றன. ஆக, அந்தத் தொகுதியில் காங் வாக்காளர்கள், இடது கம்யூனிச வாக்காளர்களைக் காட்டிலும் திமுக வாக்காளர்கள் குறைவு. அப்படியா?
இது ஓர் எடுத்துக்காட்டுதான். இதுபோலத்தான் டயட், உடல்நலம், அழகு, அரசியல், வரலாறு என எல்லா எழவும். ஒருவரை நல்லவிதமாய்ப் பேசுவதால் பின்னடைவு ஏதுமில்லை. குறைத்துப் பேசுவதற்கு முன், ஒருமுறைக்குப் பலமுறை நம்மை நாமே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட அனுபவத்தின் பேரில் செயற்படும் போது, தவறுதலுக்கான வாய்ப்புகள் குறைவு. எடுத்துக்காட்டாக, அமெரிக்கத் தமிழ்ச்சமூகத்தை நான் விமர்சிக்கின்றேனென்று சொன்னால், நான் என் தனிப்பட்ட அனுபவத்தின் பேரில் செய்கின்றேன். நானே என் ஐம்புலன்களால் உணர்ந்தவற்றின் பேரில் செய்கின்றேன். அடுத்தவர்கள் இப்படியெல்லாம் கருதுகின்றார்கள் என்பதன் அடிப்படையில் செயலாற்றுவதினின்று விடுவித்துக் கொள்ள முயல்கின்றேன். முயலவேண்டும்.
You are not who you think you are;You are not who others think you are; You are who you think others think you are! (source:unknown)
-பழமைபேசி.

No comments: