2/21/2018
செங்குருதி பொங்கி வழியும், தமிழன் வாழ்ந்த ஐராவதி நதிக்கரையோரம்!
இமயமலையின் ஒவ்வொரு பனிக்குன்றுக்குப் பாறைக்குப் பின்னாலும் ஓர் ஆறு, அந்த ஆற்றுப்பிறப்புக்கான ஒரு நாடோடிக் கதை உண்டு. பொன், நவரத்தினங்கள், தேக்கு, ஆயிரமாயிரம் வகை மலர்கள் நிறைந்த பெருவனத்தில் இலட்சக்கணக்கான யானைகளும் புலிகளும் கரடிகளும் மான்களும் இருந்தனவாம். ஒரு கட்டத்தில் குடிக்கத்தண்ணீரின்றிப் போகவே, எல்லாமும் ஒவ்வொரு மலையாகக் கடந்து கடைசியில் இமயமலையின் கீழைப்பகுதியில் இருக்கும் பனிமலையைச் சென்று சேர்ந்து ஓவென முறையிட, அது மனமிரங்கி உருகத் துவங்க, அது அலாதி சுவைபட இருக்கவே, அந்நீரோடை ‘சுவையாறு (மாய் கா(Nmai Kha))’ எனவும், தாவரங்கள் எல்லாம் பச்சைதட்டிப் பரவத்துவங்க அந்தப்பக்கமாக ஓடிய மற்றொரு நீரோடைக்கு ’பூஞ்சோலையாறு (மாலி கா(Mali Kha))’ எனவும், இரண்டு ஆறுகள் இமயமலையிலிருந்து மலைகளினூடாகக் கீழிறங்கி பாயத் துவங்கினவாம். இவற்றில், சுவையாற்றில் பெருமளவு தண்ணீர் பெருவேகங்கொண்டு கீழிறங்குகிறது. ஆற்றின் கரைகளில் வானுயர்ந்த மலைகளும் மலைகளில் தேக்கு மரங்களும் செண்பக மலர்களும் ஆயிரமாயிரம் மான்களும் புலிகளும் கரடிகளும் இருந்து வந்தன. இந்நதிகள் பாய்ந்தோடுகிற நாடு மியான்மா(ர்). மியான்மா எனும் பர்மியச் சொல்லுக்கு, வேகமும் வலுவும் கொண்ட மக்களென்பதாகப் பொருட்படுகிறது. பர்மிய மொழி பேசும் பாமர் இன மக்கள் வாழும் நாடு பர்மா என்பதாக இருந்து, அந்நிலத்தில் இன்னபிற இன மக்களும் மொழிகளும் குடிகொண்டிருப்பதாலும், மூதாதையர் காலத்தே மியான்மா(ர்) என்றே அழைக்கப்பட்டிருந்ததாலும், தற்போது மியான்மார் என்றே அழைக்கப்படுகிறது.
மியான்மார் நாட்டின் கச்சின் மாகாணத் தலைநகரான மிட்கியானவுக்கு அருகே சுவையாறும், பூஞ்சோலையாறும் வந்து சங்கமிக்க, ஐராவதி ஆறு(யானையாறு) உருப்பெறுகிறது. இப்படியாக இமயத்தின் கடைப்பகுதியில் இருசிற்றாறுகளாகத் தோன்றி, சங்கமித்த ஐராவதி ஆறு நாட்டின் தெற்காக 2170 கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு, நடுவே சென்று நாட்டுக்கு உயிர்நாடியாக இருந்து, பாமோ, கதா, மாலி, மண்டலி(லே), சாகெங் வந்தடைகிறது. இந்திய எல்லையை ஒட்டிப் பிறக்கும் சிந்வின்(சிண்டுவின்) ஆறு, மாலெய்க், கலிவா, மொனிவா ஆகிய நகரங்களைத் தொட்டுக் கொண்டே வந்து ஐராவதியின் இடப்பக்கத்தில் வந்து சேர, சங்கமம் சாகெங் நகருக்குப் பொலிவூட்டுகிறது. பிறகு, பாகன், சாலி, புரோம் முதலான நகரங்களைத் தொட்டுக் கொண்டே போய், மானாவுங் நகரில் பலவாறாகப் பிரிந்து கழிமுகங்கொண்டு அமைதியாகி அந்தமான் கடலோடு ஐக்கியமாகிக் கொள்கிறது. சுவையாற்றிலிருந்தே, நாட்டின் ஒட்டுமொத்த நீர்பிடிப்புப் பகுதிகளின் ஓடைகளும், சிற்றாறுகளும், குளக்கடைவாய்களும், சால்வின் ஆறென எல்லாமும் ஏதோவொரு இடத்தில் வந்து இந்த ஐராவதியோடு புணர்ந்து கொள்வதால், நாட்டின் முக்கிய போக்குவரத்தினையும் ஐராவதியே நடத்திக் கொண்டிருக்கிறாள்.
எங்கு பார்த்தாலும் பொன்னும் பொருளும் வைர வைடூரிய மாணிக்க மரகத செவ்வந்திக் கற்களுமாயும், பச்சைப்பசேலென வானுயர்ந்த மரங்களும் மலர்களும் மாமலைச் சோலைகளுமாய் இருக்க, பல்லாயிரக்கணக்கான ஐராவதங்கள் ஆறுகளில் புரண்டு உருண்டு முக்கி மூழ்கி எழுந்து ஆர்ப்பரிக்க, கழிமுக வயல்களில் பசுந்தாவரங்களும் நெற்பயிர்களும் முகிழ்த்திருக்க, இலட்சோப இலட்ச புத்த விகாரைகள் ஆற்றுக்கரை நாகரிகத்தை அள்ளிப்பருகும் வண்ணம் மலை, மடு, ஆறு, கரையென எங்கும் வியாபித்திருக்க, இந்த மண்ணில் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஓமோ எரெக்ட்சு, ஓமோ சபியென்சு போன்ற மனிதயினம் வாழ்ந்ததற்கான தொல்லியற் தடங்கள் இருப்பதைக் காட்டுகிற தொன்மங்கள் நிறைந்திருக்க, கிமு பதினோராம் ஆண்டுக்கு முந்தைய அன்யதின் கற்காலக் கலாச்சாரத்தின் அடையாளமும் கிமு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நவீன கற்காலத்தின் அடையாளமாக மரவேலைப்பாடுகளும் குகை வேலைப்பாடுகளும் பொதிந்திருக்க இப்புவியின் அணிகலனாக அற்புதமான நாகரிகப் பிரதேசமாய் இருந்து கொண்டிருக்க, மியான்மா மக்கள் கடல் கடந்து தமிழ்நாட்டுக்கு வர, தமிழர்கள் கடல் கடந்து மியான்மாருக்குச் செல்ல, பண்டமாற்றும், கலை இலக்கிய கலாச்சார உறவுகளும் பலப்பல நூற்றாண்டுகால நெடுகிலும் நீடித்து வந்தன. தமிழ்நாட்டில் 1756ஆம் ஆண்டு அப்படியானதொரு பெரும்பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாய் இலட்சோப இலட்சம் மக்கள் மடிந்த காலமெனவொன்றுண்டு.
பரிதவித்துப் போன மக்கள், மொரீசியசு, இலங்கை, மலேயம், சிங்கப்பூர், ஆப்பிரிக்க நாடுகள், மேற்கிந்தியத் தீவுகளெனக் கடல்மார்க்கமாக எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கெல்லாம் சென்றார்கள். பர்மாவுக்கும் வந்து சேர்ந்தார்கள். பராரிகளாய் வந்தவர்கள், படகுக் கூலிகளென அழைக்கப்பட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை புரிந்து கொள்ளத் தலைப்பட்டனர் மக்கள். காலம் செல்லச் செல்ல தமிழர்கள் தத்தம் தொழில்முனைப்புத் திறத்தைப் பயன்படுத்தத் துவங்கினர். 1935ஆம் ஆண்டு வரையிலும், இந்த ஐராவதிப் பிரதேசமும் இந்தியாவின் அங்கமாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டே இருந்தது. அழகிய தட்பவெப்பம், காலந்தப்பாமற் பெய்யும் பருவமழைகள், நாடெங்கும் கரைபுரண்டு ஓடுகிற சிற்றாறுகளும் ஐராவதியும், மலைகளின் மடுக்களில் எங்கும் கானகமும் விலங்குகளும். அங்கிருந்த பழங்குடி இனத்தவர்க்கு வேளாண்மை அவ்வளவாகத் தெரியாது. சமவெளிகள் கண்ட இடத்திலிருந்த காடுகளை ஒழுங்கு செய்து வேளாண்மைக்கு வித்திட்டனர் சமவெளியிலிருந்து போய்ச் சேர்ந்த தமிழர்கள். பொன்னும் பொருளும் இரத்தினக்கற்கள் இருப்பதையும் ஆய்ந்தறிந்து வணிகத்திலும் கடல் கடந்து சென்று வர்த்தகத்தை விருத்தி செய்தனர். சவனே போன்ற உயர்ரக நெல்வகைகளைப் பயிரிட்டு, அப்பிரதேசத்தின் பொருளாதாரம் தழைக்க முக்கியப் பங்காற்ற ஆங்கிலேயர்களும் உரிய ஊக்கவிப்பை அளிக்க, அப்பிரதேசத்தின் தவிர்க்கவியலாச் சக்தியாய் மாறினர் தமிழர். ஆனால் எல்லாவற்றையும் ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. கேந்திரத்தின் அருமை கருதி, நிர்வாக வசதிக்காய், 1935ஆம் ஆண்டு இப்பிரதேசத்தை இந்திய நிர்வாகத்திலிருந்து பிரித்துத் தனி நிர்வாகமாக அமைத்துக் கொள்ளையடித்தது பிரிட்டிசு அரசாங்கம். மக்கள் எல்லாரும் வெகுண்டெழுந்து போராடினர். அப்போதுதான் ஜப்பான் இராணுவம், படிப்படியாக முன்னேறி, பர்மாப் பகுதியில் இருக்கும் பிரிட்டிசு இராணுவத்தையும் விரட்டியடிப்போமெனச் சொல்லி வர, பர்மா நாட்டு மக்களும் ஜப்பான் இராணுவத்துக்குப் பெருவாரியாக ஆதரவளிக்க இப்பிரதேசத்தின் கணிசமான பகுதி ஜப்பான் இராணுவத்தின் பிடிக்குள் வந்து சேர்ந்தது.
ஜப்பானுக்கும் பிரிட்டிசுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்ட பர்மா, 1941, 1942ஆம் ஆண்டுகளின் போது பெரும் அடக்குமுறையைச் சந்திக்க நேர்ந்தது. விலைமதிப்பு மிக்க சொத்துகளையெல்லாம் இரு நாட்டு நிர்வாகங்களும் அள்ளிக் கொண்டு போயின. இப்போது, பிரிட்டிசு இராணுவத்தைக் காட்டிலும் ஜப்பான் இராணுவம் மக்கள் மீது மிகவும் கடுமையாக நடந்து கொண்டது. உயிர்பிழைக்க மக்கள் தத்தளித்தனர். மற்றொரு பக்கம், பர்மிய மொழி பேசுவோருக்குத் தமிழர்களின் செல்வச்சிறப்பும் உயர்வும் கண்களைக் குத்தின. தமிழர்களைக் குறி வைத்துத் தாக்கத் துவங்கினர். ஊருக்குள் புகுந்து தானியம், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் எல்லாவற்றையும் களவாடிக் கொண்டு போனவர்கள், படிப்படியாக தமிழர்களைக் கொல்லத் துவங்கினர். ஊர்களில் வாழ்ந்த தமிழர்கள் அக்கம் பக்கமிருந்த நகரங்களுக்கு ஓடி ஒளிந்து வாழ்ந்தனர். பிறகு நகரங்களிலேயே சிறு சிறு கடைகள், நகரம் சார்ந்த கைவினைத் தொழில்களை நடத்தி ஓரளவுக்கு வாழ்க்கையில் அமைதியைக் கண்டனர்.
1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள், பர்மா விடுதலை பெற்றது. நகரங்களில் இருந்த தமிழர்கள் மீண்டும் வளமாய் வாழத் தலைப்பட்டிருந்த காலகட்டம். விடுதலை பெற்றதும், நாட்டில் இருக்கிற வணிக நிறுவனங்கள் எல்லாமும் நாட்டுடமை என ஆணை பிறப்பித்து, பர்மிய அரசு. மீண்டும், பெரும்பாலான தமிழர்கள் உடைமைகளை இழந்து தெருவுக்கு வந்தனர். பள்ளிகளில் பர்மிய மொழி மட்டுமே என்பதை நடைமுறைப்படுத்தியும், தமிழில் பேசுவோரைத் துன்புறுத்தியும், தலைக்கு இவ்வளவு வரியென விதித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட, உயிரையாவது காப்பாற்றிக் கொள்வோமெனப் பர்மாவிலிருந்த இந்திய அலுவலகங்கள் முன் போராட்டத்தில் குதித்தனர் தமிழர்கள். நிலைமையை உணர்ந்த இந்திய அரசாங்கம் அவ்வப்போது சில பல கப்பல்களை அனுப்பிக் கொண்டிருந்தது. அப்படியான கப்பல்களில் ஏறிக்கொள்ள தமிழ் அகதிகள் முண்டியடித்துக் கொண்டனர். ஏற முற்பட்ட தமிழர்களிடம் தாலித்தங்கம்(2 பவுன்), பணம் பதினைந்து ரூபாய்க்கு மேல் இருந்தால், அவை பர்மிய அதிகாரிகளால் பறிக்கப்பட்டன. ஐராவதியின் கரையில் வழிந்து கொண்டிருந்த செங்குருதி, பெருக்கெடுக்கத் துவங்கியிருந்தது.
(தொடரும்…)
https://latitude.blogs.nytimes.com/2012/07/06/neither-myanmar-nor-burma-is-a-good-name-for-my-country/
https://www.britannica.com/place/Irrawaddy-River
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment