2/11/2018

மீகாங் (அம்மா நதி)


மீகாங் (அம்மா நதி) வாய்மொழிக் கதைகளூடாகவே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, தங்களுக்கும் தங்களின் அடுத்த தலைமுறைக்கும் விசுவாசமாய் இருப்பதுதான் பழங்குடியினரின் வாழ்க்கை முறையாக உலகம்யாவிலும் இருக்கிறது. முழுநிலாக் காய்ந்த இரவின் விடியலும் தெளிந்த வானம் காணக்கிடைத்த நாளொன்றிலுமாகக் காடுமலை கடந்து மலையுச்சிக்கு வந்து சேர்ந்தனராம் கீழைநாட்டைச் சேர்ந்த சிலர். வந்தவர்கள், அவர்கள் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறதென்றும், எப்படியாவது அதற்கு ஒரு வழிவகை செய்ய வேண்டுமென்றும் தங்களுடைய பெரியவர் ஒருவரிடம் வந்து இறைஞ்சிக் கொண்டார்களாம். உடனே அந்தப் பெரியவர், மலைமுகட்டின் மீது ஏறிநின்று வலக்கையை விரித்து கீழைநாடு நோக்கி பாட்டொன்று பாட, கையிலிருந்து நன்னீர் ஊற்றுக் கொப்புளிக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக உருக்கொண்டு மலைகளுக்கிடையே புரண்டோடத் துவங்கியதாம். வந்திருந்த கீழைநாட்டவரும் மனமகிழ்ச்சியோடு அந்த ஆற்றுப்பெருக்கு செல்லும்வழிச் சென்று, அவர்தம் நாடடைந்ததாகச் சொல்லிவிட்டு, வெண்பனி படர்ந்து நிற்கும் அந்த உச்சியை நோக்கி வணங்கிக் கொள்கின்றனர் திபெத் மக்கள். இமயமலையின் ’கோசோங்முச்சா’ எனும் முகட்டில் இருக்கும் அந்த ஊற்றுப் பகுதி, ’லாசாகோங்மா ஊற்று’ என அழைக்கப்படுகின்றது. பதினேழேயிரம் அடிகள், ஐந்தரைக் கிலோ மீட்டர்கள் உயரத்தில் இருக்கும் திபெத் பீடபூமியிலிருந்து மலைமுகடுகளின் வழிக்கீழிறங்குகையில், புவியீர்ப்புவிசையால் மலைகளை அரித்துச் சீறிக்கொண்டு கிளம்பி, நான்காயிரத்து முந்நூற்று ஐம்பது கிலோமீட்டர்கள் பயணித்து, திபெத், மியான்மார், லாவோசு, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் நாடுகள் வழியாக எண்ணற்ற கோலங்கொண்டு வளைந்து நெளிந்து உறுமிச்சீறீ இலட்சக்கணக்கான புதுப்புது உயிரினங்களுக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும், நூற்றுக்கணக்கான பழங்குடியினரின் தெய்வமென விளங்கி வாழ்வாதாரமாய் தன்னை ஈந்து பாய்ந்து, வியட்நாமின் தென்கோடியில் ஒன்பது கடல்நாகங்க(nine dragons)ளெனப் பிரிந்து ஆற்றிடைத்திட்டு(delta)களுக்கிடையே சலனமிழந்து தென்சீனக்கடலில் அமைதி கொள்கிறது இந்த மீகாங் பேராறு. மலைமுகட்டில் எழுச்சி கொள்ளும் போது, ‘சூ கூ’ என வாஞ்சையோடு அழைக்கின்றனர் திபெத்தின் அன்பான மக்கள். திபெத்தைக் கடந்து சீனாவின் தென்கிழக்கு மாநிலமான யுன்னான் எல்லைக்குள் புகுந்தவுடன், ’லேன்காங்’ என அழைக்கப்படுகிறாள். சீனமலைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து ஃகெங்குடான், யாங்ட்சே, சல்வான் முதலான துணையாறுகளும் வந்து இவளோடு புணர்ந்து கொள்ள, பெரும்பாய்ச்சலுடன் தென்புறம் நோக்கி மலைகளை உடைத்துக் கொண்டு பீறிடுகிறாள். தென்னாடு நோக்கிவந்தவள், சீனா, மியான்மார், லாவோசு ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கிற இடத்தை அடைகிறாள். இயற்கை இவளைத் தன் உடலெங்கும் பூசிக்கொண்டு பச்சைப் பசேலென ஓங்கியுயர் மலைகளோடு எழில் கொள்கிறது. அங்கிருந்து இருமருங்கிலும் ஓங்கிவளர் காடுகளுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டே நூறுகிலோமீட்டர்கள் கடந்து தாய்லாந்து, மியான்மார், லாவோசு ஆகிய நாடுகளின் எல்லைக்கோடுகள் சங்கமிக்கிற இடத்துக்கு வந்து விடுகிறாள். அவ்வப்போது தாய்லாந்து, லாவோசு, மியான்மார் நாட்டுநீர்ப்பிடிப்புத் துணையாறுகள் வந்து யத்தனிக்க, மறுப்பேதுமின்றித் தன்னகத்தே சங்கமித்துக் கொள்கிறது அம்மா நதி. லாவோசு, தாய்லாந்து மக்களின் மொழியில் மீ என்றால் அம்மா. காங் என்றால் நதி. மீகாங்கின் மேற்புறக்கரை தாய்லாந்தின் எல்லையாகவும், கீழ்க்கரை லாவோசின் எல்லையாகவும் கிட்டத்தட்ட 800 கிமீட்டர்கள் பாய்ந்து, கம்போடியாவைச் சென்று சேர்கிறாள் அம்மா நதி(மீகாங்). கம்போடியாவில் வாழும் கெமர் இனமக்களின் வாய்மொழிக் கதைகள் உலகப்புகழ் பெற்றவை. அக்கதைகளிலும், நூற்றுக்கணக்கான கதைகளின் வேராக மீகாங் திகழ்கிறாள். தான் பிறந்த திபெத் பனிப்பாறையிலிருந்து தென்சீனக்கடலில் துயில் கொள்ளும் வரையிலும் இலட்சோப இலட்சம் புத்தர் சிலைகளுக்கும் கோயில்களுக்கும் மெருகூட்டி வரும் அம்மா நதியின் அரவணைப்பில் உருக்கொண்ட நகரம் புனோம் பென். பென் என்ற ஒரு பணக்காரப் பெண், இன்றைய புனோம் பென்னின் புறநகர்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். மீகாங் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, உள்ளீடற்ற மரமொன்று அவளுக்குச் சொந்தமான புல்வெளிக்கு மிதந்து வந்தது. அம்மரத்தில் நான்கு வெண்கல புத்தர் சிலைகள் இருந்தன. புத்தர் ஒரு புதிய வீட்டிற்குள் வரவேண்டும் என்று விரும்புவது போன்ற ஒரு அடையாளமாக அக்காட்சி அவளுக்குத் தோன்றியது. அதனால் அவள் புத்தருக்காக அங்கு ஒரு கோவில் கட்டினாள். இப்போதும் தலைநகர் புனோம் பென்னில் அந்தக் கோயிலும் இருப்பதாக நம்பப்படுகிறது. பென் உருவாக்கிய அக்கோயில் பெரும் புகழுடன் வளர்ச்சியடைந்தது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வரத் தொடங்கினர். நூறு ஆண்டுகளுக்கு பின்னர் அங்கோர் படை, சியாம் நகரின் மீது படையெடுத்த போது, கம்போடியாவின் தலைநகரம் புனோம் பென்னுக்கு மாற்றப்பட்டது. கெமர் மொழியில் புனோம் என்ற சொல்லின் பொருள் ’குன்று’ என்பதாகும். எனவே புனோம் பென் என்றால், பென் என்ற பெண்ணுக்குச் சொந்தமான மலை என்று பொருளாகும். அப்பெண் கட்டியதாக நம்பப்படும் அக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோயில் ஆகும். அக்கோயிலை புனோம் வாட் என்று அல்லது மலைக் கோயில் என்று அழைக்கிறார்கள். இப்படிக் கம்போடியாவின் உயிர்நாடியாக விளங்கிய அம்மாநதி, வியட்நாமுக்குள் புகுந்து பலவாறாகப் பிரிந்து டெல்டா பகுதிகளுக்கிடையே சென்று தென்சீனக் கடலில் ஐக்கியமாகிக் கொள்கிறாள். அமேசான் நதிக்கு அடுத்தபடியாக சுவையைக் கொண்ட நதியாக மீகாங் இருந்து வந்ததோடு, பல்வேறு தாவரங்களையும் உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டிருந்ததிலும் அமேசானுக்கு அடுத்ததாக விளங்கியது. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தனித்துவமான தாவரங்கள், 1200க்கும் மேற்பட்ட தனித்துவமான பறவைகள், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட யானைகள், 850க்கும் மேற்பட்ட நன்னீர்வாழ் மீன்வகைகள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இப்படியாக அருந்தவப் பேராறாக விளங்கிய மீகாங் ஆற்றையொட்டி காடுகளில் வெறும் இரண்டாயிரம் யானைகளே தற்போது உள்ளன. பல்லாயிரக்கான நன்னீர் டால்பின்கள் இருந்த ஆற்றில், இருநூறுக்கும் குறைவான டால்பின்களே இன்று இருக்கின்றன. இயற்கையானது அந்தந்த நிலப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தேவையான உணவினை ஏதோ ஒரு உருவில் சமநிலையோடு வழங்கியே வந்திருக்கிறது அண்மைக்காலம் வரையிலும். தாய்லாந்து, லாவோசு, கம்போடியா, வியட்நாம், மியான்மார் முதலிய நாடுகளுக்கும் அப்படித்தான். அவர்களுக்குத் தேவையான புரதச்சத்தில், எழுபது விழுக்காட்டுக்கும் மேல் அம்மாநதியின் மீன்வளமாகவே இருந்து வந்தது. ஆற்றிலேயே வீடுகட்டி, ஆற்றிலேயே வாழ்ந்து, ஆற்றையே தொழுது கொண்டிருந்தனர் புத்தர்வழி அன்புமக்கள். 1970களுள் துவங்கியது அவர்களுக்கான துன்பம். ஆமாம், அம்மாநதியை சிறுகச்சிறுகச் சிதைத்து பலவந்தப் படுத்தும் வேலைகள் துவங்கியது அக்காலகட்டத்தில்தான். திபெத், யுன்னான் மாநிலத்துக்குள்ளே மீகாங் ஆற்றுக்குக் குறுக்காகவும் துணையாறுகளை மறித்துமென இதுவரை சிறிதும் பெரிதுமாக அறுபது அணைகளைக் கட்டியிருக்கிறது சீனா. இன்னும் பல அணைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மலைகளுக்கிடையே பலத்தை அழுத்தத்தை உண்டாக்கி எந்த நேரத்தில் என்ன நிகழுமோயெனக் கவலைகொள்ள வைத்திருக்கின்றன இவை. சீனா மட்டுமன்றி, மீகாங் பாய்கிற மற்றநாடுகளும் அவரவர் பகுதிகளில் அணைகளைக் கட்டிச் சூறையாடத் துவங்கியிருக்கின்றனர். இயற்கையின் வழிப்பாதையை மாற்றியமைப்பதன் வாயிலாகச் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக மேற்குலக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சீனாவின் அணைகள் கட்டப்பட்ட இடத்தில் வாழ்ந்த இலட்சோப இலட்சம் மக்கள் எவ்வசதிகளுமற்ற திபெத் பீடபூமிக்குள் குடியேற்றப்பட்டு, அங்கு வாழும் திபெத்தியர்களைச் சிறுபான்மையாக்கப்படப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். லாவோசு, கம்போடியாவில் அணைகளைக் கட்டுமிடத்தில் வாழ்ந்தவர்கள், எவ்வித இழப்பீடும், வாழ்வாதாரமும் வழங்கப்படாமல் தூக்கியடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மீன்வளம் முற்றுமாகச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்டப்படுகிற அணைகள் எல்லாம் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்துக்குக் கட்டப்படுபவை அல்ல. மாறாக, நீர்மின்திட்டத்துக்காக மட்டுமே கட்டப்படுபவை ஆகும். எனவே அரிசியின் ஏற்றுமதியில் சிறப்பாகயிருந்த வேளாண்நிலங்களும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இந்நாடுகளில் நிகழ்ந்த அணைக்கட்டுச் சீரழிவுகளை நினைவுபடுத்துகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 1975ஆம் ஆண்டு. சீனா பேரழிவைச் சந்தித்தது. பாங்க்யோ அணைச்சுவர்கள் நீர்வரத்தின் அழுத்தம் தாக்குப் பிடிக்காமல் சிதறியது. இரண்டு இலட்சத்துக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். ஒரு கோடியே இருபது இலட்சம் பேர், உடைமைகளை இழந்து வீடுகளை இழந்து அபலைகளாயினர். அடுத்தடுத்து இருக்கும் அணைகளும் உடைந்து பெருக்கெடுக்கக் கூடுமென அஞ்சிய அரசு, பாதிப்புகளைக் குறைக்கும் பொருட்டுக் கிட்டத்தட்ட அறுபது அணைகளைத் தாமாக முன்வந்து பீரங்கிகளைக் கொண்டு உடைத்தெறிந்தது. 2017ஆம் ஆண்டில் கூட லாவோசு அணை உடைந்ததில் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பாங்க்யோ அணைப் பேரழிவு குறித்த தகவலைப் பொதுவெளியில் தெரிவிக்கப்படுவதற்குத் தடை விதித்திருந்தது சீனா. 1975ஆம் ஆண்டு நிகழ்ந்த பேரழிவு குறித்த செய்திச் சேகரத்துக்குக்கான தடை, கடந்த 2005ஆம் ஆண்டுதான் விலக்கிக் கொள்ளப்பட்டது. மலைகளை உடைத்து அணைகளைக் கட்டும் போது நிகழ்ந்த ஆபத்தான விளைவுகள் இன்னமுமே முற்றாக மறைக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. மலைகளைப் பிளக்கும் போது பயன்படுத்தப்படும் மருந்தின் நெடி சுவாசத்தைப் பாதிப்பதாகவும் நிறையக் குழந்தைகள் குறைபாடுடன் இருப்பதாகவும் பழங்குடியினர் அலறுகின்றனர். ஆற்றோடு வாழ்ந்து கொண்டிருந்த மண்ணின் மக்களுக்குக் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டது. வேளாண்மை முற்றாகப் பொய்த்தது. வியட்நாம் மக்கள் வீதிக்கு வந்தனர். உலகநாடுகளின் வற்புறுத்தலுக்கிணங்க, சீனா தன் அணைகளுள் ஒன்றிலிருந்து அப்போதைக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்து விட்டிருந்தது. நிலைமை சரியாகி மழையும் பெய்யவே அப்போதைக்கு பிரச்சினை ஓய்ந்தது. ஆனாலும், தாய்லாந்து, மியான்மார் நாடுகளில் இருக்கும் சீனநிறுவனங்களுக்கான மின்பற்றாக்குறை பெருமளவில் அதிகரித்தது. சீனாவின் பண உதவியின் பேரில், மேலும் பல அணைகள் கட்டப்படவிருக்கின்றன. மின்உற்பத்தி நடைபெறும் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், இதர நேரங்களில் தண்ணீர் வரத்து இல்லாமையாலும் ஆற்றின் கரைகள் சிதைந்து ஆற்றின் தடம் மாறி வருவதாயும் மீன்கள் குடியேற்றம் முற்றிலும் நின்று போய்விட்டதாகவும் சொல்லவொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் பொதுமக்கள். ஏராளமான அணைகள் குறுக்கிடுவதால், வண்டல்மண் ஆற்றோடு வருவதுமில்லை. ஆற்றுக்குப் பாதுகாப்புமில்லை. மீன்வளமுமில்லை. வேளாண்மையுமில்லை. அம்மாநதியை நம்பியிருக்கும் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையைச் சிதைத்துப் பிரித்தாளும் போக்கு எங்களைக் கொல்லாமல் கொன்றுகொண்டு இருக்கிறதெனச் சொல்லி ஒப்பாரிப் பாடலைப் பாடுகிறார் லாவோசு நாட்டு மூதாட்டி ஒருவர். லாவோசில் சீனா கட்டும் சையாபுரி அணை வேலைகள் முடிக்கப்படும் போது, இயற்கையே எங்களுக்கு ஒரு வழிகாண்பிக்குமெனச் சொல்கிறார் வியட்நாமியப் பழங்குடி ஒருவர். நாட்டார் சாபம், காலத்தின் கையில். அம்மாவை வல்லாதிக்கம் கற்பழித்துக் கொண்டிருக்கிறது; பிள்ளைகள் செய்வதறியாது வலியால் துடித்துக் கொண்டிருக்கின்றனர். பொருட்களைச் சிக்கனமாய்ப் புழங்கப் பழகுவோம்; இயற்கையைப் போற்றுவோம். நம்மால் முடிந்தது அவ்வளவுதான்! -பழமைபேசி. https://wle-mekong.cgiar.org/mekong-river-facts/ http://e360.yale.edu/features/life_on_mekong_faces_threats_as_major_dams_begin_to_rise

No comments: