பர்மாவின் மக்கட்தொகையில் 60% பேர், உயிர்கொடுக்கும் ஐராவதியின் இருகரையோரப் பகுதிகளில்தான் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கிபி பதினேழாம் நூற்றாண்டில் பர்மாவுக்கு பஞ்சத்தின் காரணமாகவும் வணிகப் பெருக்கத்துக்காகவும் சென்ற தமிழர்கள், நாட்டினை வளப்படுத்தினார்கள். பர்மாவின் பெருங்குடியான பாமர்களுக்கு வேளாண்மை தெரிந்திருக்கவில்லை. இதர இனக்குழுவினரும் காடுகளில் கிடைத்ததை வேட்டையாடி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தனர். பயன்பாடற்றிருந்த நிலங்களைச் செம்மைப்படுத்தி, இருக்கும் விளைநிலத்தில் தோராயமாக எழுபது விழுக்காட்டு நிலம் தமிழர்களுடையதாய் இருந்தது.
1930ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியை எதிர்த்து நாடெங்கும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். 1941ஆம் ஆண்டு துவக்கம், போராட்டக்காரர்கள் ஜப்பானிய இராணுவத்தின் உதவியோடு பர்மா விடுதலைப்படையைத் துவக்கி, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். அதே காலகட்டத்தில் சுபாசு சந்திர போசும் பர்மாவில் பல கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்திய தேசியப் படையை நிறுவி இந்திய விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். 1942ஆம் ஆண்டு, பர்மா ஜப்பானின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. உடனே அருகில் இருந்த அந்தமான் நிகோபார் தீவுகளையும் ஜப்பான் கைப்பற்றியது. இவற்றைக் கைப்பற்றிய கையோடு, இவற்றையும் பர்மாவின் அண்டைப் பகுதியான மிசோராம், மணிப்பூர் போன்றவற்றை சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய விடுதலைப்படையின் நிர்வாகத்துக்குக் கொடுத்தது ஜப்பான்.
பர்மாவில் ரெயில்வே பாதைகளை அமைக்கும் பணியில் ஜப்பான் ஈடுபட்டது. சின்னஞ்சிறுவர்கள் உட்பட பர்மாவில் இருந்த அத்தனை பேரையும் ரெயில்வே பணியில் ஈடுபடுத்திக் கொடுங்கோல் ஆட்சி நடத்தியது ஜப்பான். பசி பட்டினியாலும், கொடுமைகளாலும் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். நாடெங்கும் அழுகுரல். தமிழர்களும் தப்பவில்லை. உயிர்பிழைக்க இந்தியாவுக்குள் ஓடி வந்தனர். எந்த போராட்டக்காரர்கள் ஜப்பானுக்கு ஆதரவாகப் போராடினார்களோ, அவர்களே இப்போது பிரிட்டிசுக்கு ஆதரவாகப் போராட முன்வந்ததன் பொருட்டும், உலகப்போர் முடிவுக்கு வந்ததன் பொருட்டும் மீண்டும் பிரிட்டிசு ஆட்சியின் கீழ் வந்தது பர்மா.
1947ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள், பர்மிய ஆட்சி பிரிட்டிசாரின் மேற்பார்வையில் மலர்ந்தது. அதே ஆண்டு, 1947, ஜூலை 19ஆம் நாள், பர்மியத் தலைவர் ஆங் சன், அவரது அமைச்சர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். இடைக்கால ஆட்சி நிறுவப்பட்டது. 24 செப்டம்பர் 1947இல், கிட்டத்தட்ட பத்து மாகாணங்கள், அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து, தனித்தனி விடுதலை நாடுகளாகப் பிரிந்து கொள்ளலாமென்பது உட்பட பல வரைவுகளைக் கொண்ட நாட்டின் முதலாவது அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1948, ஜனவரி நான்காம் நாள் யு நூ பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் பிரிட்டிசு அரசாங்கம் முற்றாக விலகிக் கொண்டது.
துயரநாடு என வர்ணிக்கப்படும் பர்மாவில், 1949ஆம் ஆண்டு நாடு முழுதும் இனக்கலவரங்கள் தோன்றின. இருக்கும் பாமர், சான், கரென், ராக்கைன், மான், இன்னுமுள்ள எல்லா இனக்குழுக்களும் ஒன்றையொன்று தாக்கி வேட்டையாடி, உடைமைகளைச் சூறையாடிக் கொள்வதும் கொல்வதும் நடந்தேறின. இதை முன்னின்று நடத்தியதே சீனாதான் எனக் குற்றம் சாட்டப்பட்டது. சீன அரசாங்கமோ, தங்களுடைய யுன்னான் மாகாணத்திலிருக்கும் கம்யூனிச எதிர்ப்பாளர்களை பர்மாவுக்கு எதிராக மேற்குலக நாடுகள்தான் தூண்டிவிடுகின்றன எனக் குற்றம் சாட்டியது. 1950ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரையிலும் பர்மியப் படைகளுக்கும், சான் மாநிலத்தை ஆக்கிரமித்துக் கொண்ட சீனப்படைகளுக்கும் இடையே போர் வெடித்தது. ஆயிரக்கணக்கான பேர் அங்கே செத்துக் கொண்டிருக்கும் போதே, மற்ற இடங்களிலும் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக் கொண்டிருந்தனர். 1955ஆம் ஆண்டு வாக்கில், இராணுவம் ஆட்சியைக் கையிலெடுத்துக் கொண்டது.
1960ஆம் ஆண்டு தேர்தல் நடத்த இராணுவம் ஒப்புக் கொண்டதையடுத்து, யு நூ மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் நிலைமை மேலும் துன்பகரமாக மாறியது. இராணுவத்துக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையே பிணக்கு உருவானது. 1962ஆம் ஆண்டு முற்று முழுதுமாக நாட்டினை இராணுவம் கையிலெடுத்துக் கொண்டது. நாட்டில் இருந்த நிலபுலன்கள், கடைகள், வண்டி வாகனங்கள் எல்லாமும் அரசுடைமையாக்கப்பட்டன. நாடு, புத்த சமய நாடாக அறிவிக்கப்பட்டது. எல்லாரும் அரசுக்கு வேலைபார்க்கும் கூலிகள் ஆக்கப்பட்டார்கள். பாமர் எனும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த பர்மியர்கள் மற்ற இனத்தைச் சார்ந்தவர்களைத் தேடித் தேடிக் கொன்றார்கள், குறிப்பாக செல்வந்தர்களாகவும் கல்வியில் ஒருபடி மேலே இருந்தவர்களுமான தமிழர்களைத் துரத்தித் துரத்திக் கொன்றார்கள். பர்மிய மொழி தவிர வேறெந்த மொழியும் பேசவும் கற்றுக் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. உயிருக்கு அஞ்சிய தமிழர்கள் ரங்கூனிலிருந்து கப்பல் கப்பலாக சென்னை வந்து சேர்ந்தனர். ஊடகத்துறை முற்றிலுமாக முடக்கப்பட்டது. இரும்புத்திரை நாடாக மாறியது பர்மா. சாவுகணக்குக்கு அளவேயில்லை. 1962 ஜூலை ஏழாம் நாள், பாடசாலை மாணவர்கள் கொத்துக்கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். 1974ஆம் ஆண்டு வரை நீ வின் எனும் இராணுவத்தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்தது பர்மா. சீனாவின் உதவியோடு, உலகநாடுகளின் எதிர்ப்பினைப் புறந்தள்ளினார் நீ வின்.
1974ஆம் ஆண்டு இராணுவமே ஒரு கட்சியைக் கட்டமைத்து, ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தையும் நிறுவி, 1988ஆம் ஆண்டு வரையிலும் இராணுவ அலுவலர்களே ஒருவர் மாற்றி ஒருவர் ஆண்டு கொண்டனர். எல்லாச் சொத்துகளும் இவர்களுக்குள்ளாகவே பங்கு போடப்பட்டு, உலகின் மிகவும் ஏழைநாடுகளுள் முதலாம் நாடு என ஆக்கப்பட்டது பர்மா. பொதுமக்கள் பசி பட்டினியால் வாடினர். ஐந்து வயதுக் குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பச் சொல்லியது இராணுவம்.
அண்டைநாடான சீனாவில் இலைமறை காயாக மாணவர்களும் மருத்துவர்களும் மக்களாட்சிக்கான வேலைகளில் ஈடுபடத்துவங்கியிருந்த காலம் 1988. அதன் நீட்சி பர்மாவுக்குள்ளும் பரவியது. ’8888 போராட்டம்’ எனப் பெயரிட்டு, 1988ஆம் ஆண்டு எட்டாவது மாதம், எட்டாம் நாளன்று போராட்டம் வெடித்தது. இராணுவத்தின் சில அலுவலர்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். பத்தாயிரம் பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது. இரங்கூன் பல்கலைக்கழகம் சுற்று வட்டாரத்தில் மட்டுமே 3000 பேர் கொல்லப்பட்டனர். எல்லா இனக்குழுக்களுக்களும் அவரவருக்கான தனித்தனி படைகளை அமைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டனர். சீனாவிலும் இதே போன்ற போரட்டமொன்றுக்காக தினமென் வளாக முற்றுகையில் 10500 பேர் கொல்லப்பட்டு, போராட்டம் ஒடுக்கப்பட்டது. ஆனால் இங்கே, நிலைமை கை மீறிப் போவதை அறிந்த இராணுவத்தளபதி நீ வின் ஆட்சியை பல கட்சி ஆட்சிமுறைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவித்தார். வந்தோருக்கெல்லாம் அரிசியை உண்ணக் கொடுத்துக் கொண்டிருந்த ஐராவதிக் கரைகளில் குருதிப் பெருக்கம் கூடுதல் வேகம் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது.
1990ஆம் ஆண்டு பலகட்சி ஆட்சிமுறைத் தேர்தல் இடம் பெற்று, ஆங் சான் சூ கீ அம்மையார் அவர்கள் 82% இடங்களுடன் பெருவெற்றி பெற்றார். இவர் மேற்குலக நாடுகளின் ஆதரவு பெற்றவர். உலகமே பெருமூச்சு விட்டுக் கொண்டது. இனி பர்மாவுக்கு நிரந்தர விடுதலை. மக்கள் கொண்டாட்டத்தோடு உறங்கப் போனார்கள்.
தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; இராணுவமே ஆட்சியைத் தொடருமென அறிவித்துக் கொண்டது இராணுவ உயர்மட்டக் குழு. மேற்குலக நாடுகளும் ஜப்பானும் பர்மாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆங் சான் சூ கீ அம்மையார் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, நாட்டின் அதிபர் ஆவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கூடவே, 1991ஆம் ஆண்டு அம்மையாருக்கு நோபல் விருதும் வழங்கப்பட்டது. இனக்குழுக்களின் போராட்டங்களும், புத்தபிக்குகளின் சமயவெறிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, நாட்டில் பிணங்கள் வீழ்ந்து கொண்டே இருந்தன.
2008ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் இயற்கையும் பர்மிய மக்களைத் துன்பத்திற்காளாக்கியது. ஆழிப்பேரலையில், ஐராவதிக் கழிமுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு இலட்சம் பேர் மரணமடைந்தார்கள் அல்லது காணாமற் போனார்கள். இந்தியா உட்பட பல நாடுகளும் உணவும் உரிய பொருட்களும் வழங்கி உதவிக்கரத்தை நீட்டின. இதற்கிடையேயும் சீனா, தாய்லாந்து, லாவோசு போன்ற நாடுகளில் இருந்து ஊடுருவும் போராளிகளின் துப்பாக்கிகள் ஓயவில்லை. தொடர்ந்து மரணங்கள் ஐராவதியின் கிழக்குக்கரைக்கு கிழக்கே இருக்கும் மலைத்தொடர்களில் நிகழ்ந்து கொண்டே இருந்தன. நாட்டில் வறுமை கோர தாண்டவம் ஆடியது.
2010ஆம் ஆண்டு, ஆங் சான் சூ கீ விடுதலை செய்யப்பட்டார். அரசியற் சீர்திருத்தத்திற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கின. நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் துவங்கின. ஆனாலும் இராணுவக்குழுவின் ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங் சான் சூ கீ விடுதலையானதுமே சீனா விறுவிறுப்பாகக் களத்தில் இறங்கி, ஐராவதிக்கழிமுகத் துறைமுகத்திலிருந்து சீனாவுக்கு சாலை, குழாய் பதிப்பு, ஐராவதி, துணையாறுகளின் குறுக்கே அணைகள், ராக்கெய்ன் நிலப்பகுதி முழுமைக்குமான இயற்கைவள அறுவடை போன்றவற்றுக்கான ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டு, இராணுவத்திலும் தம் பங்களிப்பு இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டது சீனா.
2012ஆம் நாள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார் ஆங் சான் சூ கீ. அதே காலகட்டத்தில் ராக்கெய்ன் நிலப்பகுதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளும் துவங்கப்பட்டிருந்தன. புத்த பிக்குகளைத் தூண்டிவிட்டு கலவரத்துக்கு வித்திட்டு, ரோகிஞ் இன இசுலாமியர்களை அப்புறப்படுத்தும் வன்முறைகள் துவங்கின. மனிதவுரிமை என்பதெல்லாம் கடந்த இரு நூற்றாண்டுகளாகவே பர்மாவில் இருந்ததில்லை. ராக்கெய்ன் மாநிலம் முழுதும் வன்முறை கோரதாண்டவம் ஆடத் துவங்கியது. ஆயிரமாயிரம் பேர் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். அங்கு வாழும் இலட்சோப இலட்சம் மக்கள் அந்நிலத்தை விட்டு அகலவேண்டுமெனும் சூட்சுமத்துக்கு சூத்திரதாரி சீனாவாயெனக் கேள்வி எழுப்பினார் பன்னாட்டு சபைகளின் தலைவர் கோபி அன்னான். தொடர்ந்து இராணுவத்தின் கையே மேலோங்கியது. ஆங் சான் சூ கி அதிபர் ஆகமுடியாது என்பதால், பொறுப்புப் பிரதமராக 2016ஆம் ஆண்டு அமர்த்தப்பட்டார். பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. எனினும் வன்முறைகள் ஓயவில்லை. ஐராவதியின் குருதிக்கரைகள் காயவில்லை. நாட்டின் வளம் மட்டும் பிரிட்டன், ஜப்பான், சீனாவென அந்நிய நாடுகளால் சூறையாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
(முற்றும்)
பழமைபேசி.
https://www.amnesty.org/en/latest/news/2017/12/un-china-fails-to-scupper-resolution-on-myanmars-persecution-of-rohingya/