”அட, என்ன பாக்கறீங்க? ஊர்ல மழைங்ளா? ஒரு ஒழவு மழை இருக்குமுங்ளா? பொங்கலூருக்கு வடக்கமின்னா நல்ல மழையின்னு பெரிய பாப்பாத்தியவிங்க ஊட்டுக்காரர், வந்திருந்தவரு சொன்னாரு. இங்க வாசத் தொளிக்குறதுக்கு மூத்த புள்ளியா ரெண்டு அடி அடிச்சிப் போட்டு, தாந்து போச்சுங்க. எதுக்குமு, இந்த தை பொறந்தா ஒரு வழி பொறந்துதானுங்க ஆகோணும்?”
”ஆமாங்க மச்சான். எங்களுக்குமு ஒழவு மழையல்லாம் பேயிலீங்கோ. காட்டுத்தண்ணியே காட்டைவுட்டுப் போகுலீன்னா பார்த்துகுங்க நீங்களே?”
“அது செரீங். தை பொறந்தாச்சின்னா, பட்டி பெருகோணும்; வெள்ளாமை வெளையோணும்; பொங்கல் பொங்கோணும்!! அது மாறாது பாருங்க. அல்லாம் நல்லாத்தான் ஓடி அடையும். என்ன நாஞ்சொல்றது சரித்தானுங்ளே?”
“ஆமாமாங். இப்பெல்லாம் ஆருங் முன்ன மாதர தை நோம்பியெல்லாங் கும்புடுறாங்க? அல்லாம் மாறிப் போச்சு பாருங்!”
“நெம்ப நல்லாவே. இங்க, நாங்க ஒரு நாலஞ்சி பண்ணையத்துக்காரங்க மட்டும் இன்னுமு பழைய மொறைக்கி அல்லாத்தையும் செஞ்சிட்டுதான் வாறம். நம்ம இருக்குற காலத்துக்கும் செஞ்சி போடலாம். அதுக்கப்பொறம் என்னமோ ஆயிட்டுப் போகுது போங்க!”
”பெரிய அமுச்சி இருக்கமுட்டும் நாங்களும் தொட்டி கட்டி, பட்டி மெரட்டிட்டுதா இருந்தமுங்க. அமுச்சி போய்ச் சேந்தவுட்டு, பெரியம்மணிய பெங்களூருக்கு கண்ணாலங்கட்டி தாட்டியுட்டதாச்சிங்? அதுக்குப் பொறகு அல்லாமே நெதானமாய்ப் போச்சுங்!”
”நாம சின்ன வயசுல இருக்கறப்பெல்லாம் ஒரு வாரம் பத்து நாளத்து நோம்பியா இருந்துச்சு. இப்பெல்லாம் ஆரும் மூனு நாள் நோம்பியாக்கோடக் கும்புடுறது இல்லை?!”
“கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லுங்க பழமைய. ஏன் நிக்கிறீங்க? குக்கீட்டுச் சொல்லுங்க மச்சே! வேலை கெடக்கட்டும்; எப்பூஞ்செய்யுற வேலைதான?!”
”அது செரி. கார்த்திகை மாசம் சோதி வெச்ச நாள்ல இருந்தே பட்டி நோம்பிக்கான வேலைகளும் தெரக்கா ஆரமிச்சிரும். சோதியன்னைக்கு சூந்து விளையாடுவோம். வெடிய வெடிய ஆடுவோம். கருது அறுத்து குச்சுக வெச்சிருக்கும். அந்தக் குச்சுகள்ல இருந்து தட்டுக் கத்தைகளை ஒன்னு ஒன்னா எடுத்தாந்து, அதோட மொனையில தீயைப் பத்த வெச்சி வளைச்சி வளைச்சி சுத்துவோம்.
நாலுபேரு அஞ்சு பேருன்னு கூட்டாச் சேந்துட்டு போயி களவாடுவோம். மாங்கா திருடுவோம். தேங்கா திருடுவோம்; ஆகாதவன் கெணத்துக்குள்ள எறங்கி மோட்டாரைக் கழட்டித் தண்ணிக்குள்ள போட்டுட்டு வருவோம். ஊர் வெடலைக காயடிக்காத காளைகளுக்கு எணை ஆச்சுதே? ஆனாலும் அதுல ஒரு நேர்மை இருக்கும். பொண்டு புள்ளைக மேல கை வெக்க மாட்டம். ஏழைபாழைகளுக்கு சகாயமா நடந்துக்குவம்.
சூந்து ஆடி முடிஞ்சு ஊட்டுக்குப் போகும் போது கெழக்க வெளுத்துரும். அந்த நேரத்துக்கும், ஊட்டுக்குப் போயி நாலு அச்சு, அஞ்சு அச்சுன்னு இராகிக் களியோட சுண்டைக்கா வத்தக்கொழம்பு, தூதுவளைச் சாறுன்னு கலந்து கட்டி ஒரு எடுப்பு எடுத்துட்டுதா தூங்கப் போவம்.
அன்னிக்கி பொழுது பம்பலா அப்படி முடியும். அது முடிஞ்ச கொஞ்ச நாள்லயே மார்கழி மாசம் பொறந்திரும். மார்கழி மொதநாள் அன்னிக்கே வடக்க தங்காத்தா கோயலு, ஊருக்குள்ள விநாயகங்கோயல்னு எல்லாக் கோயல்லயும் அன்னாடப்பூசை ஆரமிச்சிரும். ஒவ்வொரு கோயல்லயும் காலையில அஞ்சரையிலிருந்து ஏழு மணி வரைக்குமு, சாயங்காலம் ஆறுல இருந்து ஒம்பது மணி வரைக்குமு பாட்டுப் போட்டியில சாமி பாட்டுக போடுவாங்க. பண்டாரத்தார் ஊட்டு சம்முகம் ரெண்டு வேளையும் பூசை செய்வான்.
ஊர்ல இருக்குற நாய்க்கமாருங்க எல்லாம் பசனை கோயல்ல காலையில அஞ்சு மணியிலிருந்து பசனை பாடுவாங்க. ஆறு மணிக்கு சங்கு சேகண்டி ஊதிட்டு பாடிட்டே ஊர் சுத்தி வருவாங்க. பெரிய சிங்கார் நாய்க்கர் ஆர்மோனியப் பொட்டி, சுப்புராயலு நாய்க்கன் மிருதங்கம், நம்ம பாட்டையன் கஞ்சிரா, நரசிம்ம நாய்க்கரும் காவேட்டி நாய்க்கரும் சால்ரா போடுவாங்க. மித்தவிங்க எல்லாரும் கை தட்டிட்டே பசனைக்கு பின்பாட்டு பாடுவாங்க. கோபால்சாமி நாய்க்கனும் குழித்தோட்டத்து பட்டீசுவரக் கவுண்டனும் நல்லாப் பாடுவாங்க. அந்த ஆதிசேசா, அனந்த சயனாங்ற பாட்டுப் பாடும் போது ஊரே முழிச்சுக்கும். அவிங்க மொத்தம் நுப்பது பேரு. இப்பெல்லாம் எங்க அந்த மாதர பசனை கோசுடியே இல்லை போ. எங்கியோ கோயமுத்தூருகிட்ட வடவள்ளியில இருக்குதுன்னு சொல்லிச் சொல்றாங்க. பீளமேடு இரங்கம்மா கோயல் கோசுடின்னு சொல்லிக்கிறாங்க.
கடைசி நாளன்னக்கி திருப்பாவை முச்சூடும் பாடி, பசனை கோயல்காரங்க ஊருக்குள்ள மெரவனை வருவாங்க. தங்காத்தா கோயல்லயும், புள்ளார்கோயல்லயும் பூசை செய்து அவிசாயங் குடுப்பாங்க. பசனை கோயல்ல மாசம் முப்பது நாளும் சக்கரைத் தளிகையுமு, கடைசி நாளன்னிக்கு கூடா தட்டவடையுங் குடுப்பாங்க.
அந்த முப்பது நாளும் ஊருக்குள்ள அல்லாரும் சாமி கும்புடுறதும், அறுவடைப் பம்பலைப் பாக்கறதும், பட்டி நோம்பிக்கான வேலைகளைப் பார்க்கறதுமா ஒரே தடபுடலா இருக்கும். அல்லாரும் மனசு நெறஞ்சி தாய் புள்ளையா பந்த பாசமா இருக்குறது எப்பன்னு கேட்டா, இந்த மார்கழி ஆரமிச்சி தை நோம்பி முடியுற காலத்தைத்தான் சொல்லோணும்.
பட்டி நோம்பி வாறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடியே சந்தைகளுக்குப் போயி வேணுங்றதை வாங்கிப் போட்ருவாங்க. அல்லாமே நெல்லு குத்தி அரிசி பொடச்சி, பொங்கலுக்குன்னு தனி அரிசி, படைப்புக்குன்னு தனி அரிசி கட்டி வெச்சிருவாங்க. ஊருக்குள்ள அரசாணிக் காய் ஊரெங்கும் பொழங்கும். அங்கங்க ஊட்டு வாசல்ல பூசணிப் பூ வெச்சிக் கோலம் போடுவாங்க. மார்கழி முப்பதும் பொம்பளைப் புள்ளைகளுக்குக் கோலம் போடுறதும் கோயல்களுக்கு மாலை கட்டுறதுதான் வேலை.
பொம்பளைப் புள்ளைகளுக்கு அந்த வேலைன்னா, ஆம்பளைப் பசங்களுக்கு வண்டியப் பழுது பார்த்து வெக்கிறது. கீல் போட்டு இருசுகளைப் பதனம் பன்றது. ஏர்க்கால், பார்ச்சட்டம், மூக்காணி அல்லாத்தையும் மராமத்து செய்யுறதுன்னு வேலை முசுவா இருக்கும். எருதுகளுக்கு இலாடம் போட்டு பருத்திக் கொட்டைப் புண்ணாக்கும் நல்ல அரிசித் தவிடுமாப் போட்டு பாங்காக்குவாங்க.
திமில் இருக்குற காயடிக்காத காளைக் கன்னுகளுக்கு கொம்புக் கவுறு பூட்டுறதும், கழுத்து மணி பூட்டுறதும், கொம்புச்சலங்கை கொழுவுறதும் நடக்கும். இந்த மாதரக் காளைகளை வெச்சிருக்கிற நாங்கெல்லாம் ஒரு மொறப்பாத்தான் ஊருக்குள்ள திரிவோம். எங்களைக் கண்ணு வெக்காத பொம்பளைப் புள்ளைக ஊர்ல கெடையாது.
மார்கழி கடைசி நாள் அன்னிக்கி, பசனை கோயல் சப்பரம் தூக்கிட்டு வந்து ஊருக்குள்ள பசனை பாடி முடிஞ்சதும் காப்புக்கட்டு ஆரமிச்சிரும். ஊட்டுல, தோட்டத்துச் சாளையில இருக்குற பழசு பரட்டை எல்லாத்தையும் கழிச்சிக் கட்டிட்டு செய்யுறதுதான் காப்புக்கட்டு. காப்புக்கட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊடு ஒட்டடை அடிச்சி பூசி வழிக்கிற வேலை ஆரமிச்சிருவாங்க. மொகுடு ஏறிப் பூசுறது, அட்டாலியில ஏறி சுத்தம் செய்யுறதுக்குன்னு நாங்க கொஞ்சப் பேர்தான் இருப்போம். எங்களை எல்லாரும் வந்து கூப்புடுவாங்க. ஒரே கிராக்கிதான் எங்களுக்கு. தெனை மாவும், அரிசி மாவும், கைமுறுக்கும், ஓலைமுறுக்கும், உப்பட்டும்னு எங்களை நெம்ப நல்லாக் கவனிப்பாங்க.
காப்புக்கட்டு அன்னிக்கு மத்தியானத்துல இருந்தே ஊட்டு வாசல் வழிக்கிறதும், களத்து மேட்டுல வழிக்கிறதும்னு பொம்பளைக முசுவா இருப்பாங்க. எளவட்டப் பொடுசுகெல்லாம் ஓடி ஓடிக் கோலம் போட்டு ஊரே ஜாகோன்னு இருக்கும். அந்த தாவணிட் தலப்புல மூஞ்சியத் தொடச்சிக்கிறதும், பாவாடைய கணுக்கால் தெரியுறா மாதர ஏத்தியுட்டுச் சொருகிக்கிறதும், எங்களையெல்லாம் அல்லைல பார்த்துட்டே கோலம் போடுறதும் விட்டேத்தியா வக்கணை பேசுறதும்னு அவிக செய்யுற லொல்லு கொஞ்ச நஞ்சமல்ல போங்க.
தெகோட்டுல இருக்குற பையான் வீட்டு ஆளுக ஒவ்வொரு வீட்டுக்கும் காப்புக்கட்டுக்கு வேண்டியதை எல்லாம் கொண்டாந்து குடுப்பாங்க. காலையில நேரத்துல அவங்க கொண்டார்ற மக்கிரியில, கோலப்பொடியும், அரப்புமு இருக்கும். அவங்கவங்க பண்ணையத்துல இருந்து மாட்டுச்சாணம் முந்துன நாளே வந்திடும் வாசல் வழிச்சுடுறதுக்கு. வழிச்சுட்ட ஈரம் காயம் போறதுக்குள்ளயே அம்மணிகளும் பாப்பாத்திகளும் கோலம் போட்டு உட்றுவாங்க. ஊட்டு கார வாசல், திண்ணையில எல்லாம் அரிசி மாவுக் கோலம் போட்டு உட்றுவாங்க.
மஞ்ச வெயில் வர்றதுக்கும் சித்தங்கூரத்துக்கு முன்னாடி, பையான் ஊட்டு ஆளுக மறுக்காவும் பூளைப்பூவு, புங்கங்கொழுந்து, வேப்பங்கொப்பு, மாவிலை, ஆவரம்பூக் கொத்துன்னு ஊட்டு ஊட்டுக்கும் கொண்டாந்து குடுத்துட்டு போவாங்க. தோட்டங்காட்டுல இருக்கிறவங்க, அவங்கவங்களுக்கு வேண்டியதை அவிங்களே பொறிச்சிக் கொண்டாந்துருவாங்க.
எல்லா தழைகளையுமு வேணுங்ற அளவுக்கு ஒன்னு கூட்டி, மொதல் கொப்பைக் கொண்டு போயி புள்ளார் கோயல்ல வெச்சிக் கட்டிட்டு வருவோம். கூடவே பக்கத்துல இருக்குற ஒன்னு ரெண்டு கோயல்லயும் கட்டிட்டு வந்திருவோம். ஊட்டு எறவாரம், மதில்சுவரு, தோட்டங்காட்டுல இருக்குற பொழிக்கல்லுன்னு எல்லா எடத்துலயும் பூளைப்பூக் கொப்புகளை வெச்சி காப்பு கட்டிட்டு வர இராத்திரி மணி ஏழெட்டு ஆயிரும்.
ஒவ்வொரு ஊட்டுலயும் பெத்து, பொறப்பு, ஒறம்பரைகன்னு ஒரே பம்பலா இருக்கும். ஊட்டுக்கூடு பலகாரம் பணடம் மாத்திக்கிறதும், அங்கங்க உக்காந்து பழமை பேசுறதும் நடக்கும். புள்ளார்கோயல் மைதானத்துல கோலாட்டம், ஒயிலாட்டம், கொட்டுமொழக்கு எல்லாமும் நடக்கும்.
அடுத்த நாள் பெரிய நோம்பி. காலையில வெடியிறதுக்கு முன்னாடியே எழுந்து தலைக்கு வாத்துட்டு, கார வாசலுக்கு அல்லாரும் வந்துருவோம். கார வாசல் நடுப்புல பெரிய அய்யன் கல்லு வெச்சு அடுப்புக் கூட்டுவாரு. உன்ற அக்கா வழிச்சி உட்டு மஞ்சத்தூவி கோலம் போட்டு உடுவா. நானும் உன்ற அக்காளும் கரும்பு, காப்பு கட்டுனதுல மிச்சமான வேப்பந்தழை, ஆவரம்பூவு, மஞ்சக்கொப்பு, துளசிச்செடி, துண்ணூர்ப்பத்திரி எல்லாமும் வெச்சி சோடனை செய்வோம். ஆத்தாவும் அய்யனும் சேந்து பொங்கல் வெப்பாங்க. உன்ற அக்கா பள்ளையம் போடுவா. பொங்கல் பொங்குனவுட்டு, கெழக்க வெளுத்து வர்ற கதிரவனுக்குப் பொங்கல் வணக்கமும் நாட்ராயனுக்கு பள்ளையமும் படைச்சி சாமி கும்புடுவோம். காலையில பொங்கச் சோத்தை உண்டு போட்டு, அல்லாரும் பொறப்புட்டு ஆண்டியூர் காளியம்மன் கோயலுக்கு போயிட்டு வருவோம். கொஞ்ச பேரு திலுமூர்த்தி மலைக்குப் போயிட்டு வருவாங்க. பெரியூட்டு ஆளுக எல்லாம் கெழக்க பழநிக்குப் போயிட்டு வருவாங்க.
பெரிய நோம்பி அன்னிக்கு இராத்திரி முச்சூடும் ஊர்த்தலைவாசல்ல, ஊர்த்தலைவருக்கு மொறை செஞ்சி ஆட்டபாட்டம் நடக்கும். ஒரு பக்கம் கொட்டுமொழக்கு நடக்கும். ஆம்பளை ஆளுகெல்லாம் ஒயிலாட்டம், கோயில்மாடு மிரட்டுறது, சலங்கையாட்டம்னு பல வேடிக்கைகளும் செஞ்சி பராக்கு பார்க்க வெப்பாங்க. பொம்பளையாளுக கும்மியடிச்சி கந்தபுராணம் சொல்லுவாங்க.
வெடிஞ்சி எந்திரிச்சா, பட்டி நோம்பி! பண்ணையம் வெக்கிறவங்களுக்கெல்லாம் இதான் நோம்பி நாளு. ஊர்க்குளத்துல அங்கங்க நின்னு பண்டங்கன்னுகளைக் கழுவியுடுவாங்க. நான் பெரிய வாய்க்கால்ல போயி மாடு கன்னுகளைக் குளிப்பாட்டியுட்டு ஓட்டிட்டு வருவன். கொம்பு சீவி பெயிண்ட் அடிச்சுடுவேன். மொட்டை வண்டிக்கும் பெயிண்டி அடிச்சுடுவேன். சவாரி வண்டிக்கு மழத்தண்ணி ஒழுகாதபடிக்குத் தார் பூசியுடுவோம். போனகிழமைச் சந்தையில வாங்கிட்டு வந்த மொகரைக்கவுறு, மூக்கணாங்கவுறு, கைக்கவுறு, கொம்புச்சூடி, கம்பளிக்கவுறு, கழுத்துச்சங்கு அல்லார்த்தையும் கொண்டாந்து பண்டங்கன்னுகளுக்குப் பூட்டியுடுவோம். காளைகளுக்கு கழுத்து மணியும் கொம்புச்சூடியும் பொருத்தியுடுவோம். இந்த வேலைக ஒரு பக்கம் நடந்திட்டு இருக்கும் போது, அய்யனும் ஆத்தாவும் களத்து மேட்டுல எல்லா வேலைகளையும் பார்த்துகிட்டு இருப்பாங்க.
சாய்ங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம், களத்து மேட்டுக்கு மேவறத்தல்லையில இருக்குற வில்வமரத்துக்கடியில அய்யன் பட்டி கட்டியுடுவாரு. ஆத்தாவும் அக்காவும் பாம்புப் புத்துக்கு விளக்கு வெச்சிக் கும்பிட்டுட்டு வருவாங்க. களத்து மேட்டுல இருக்குற கருப்பராயனுக்கு கலயத்துல பொங்கல் வெச்சிக் கும்பிடுவாங்க. கருப்பராயனுக்கும் தாத்தைய்யன் கோயிலுக்கும் பள்ளையம் வெச்சி படப்பும் போட்டுக் கும்பிடுவோம். அதுக்குள்ள இருட்டாயிருந்திருக்கும்.
ஒரு எட்டு மணி வாக்குல அல்லாரும் வில்வமரத்தடிக்கு வந்திருவோம். பண்ணையத்துல வேலை பாக்குற சித்தாள் சின்னமுத்தி, பார்வதி, மாட்டுக்காரன் சின்னான், வேலையாளுக வேலன், கந்தன் அல்லாரும் அவங்கவங்க ஊட்டு ஆளுகளோட வந்திருவாங்க. குருவனும் அமுசாவும் தீப்பந்தம் கொண்டாந்திருவாங்க. ரெண்டு தீப்பந்தம் எரியுற வெளிச்சத்துல வில்வமரமே எரியுற மாதிரி இருக்கும். அல்லையில தேங்கா மட்டைகளை எரிச்சுட்டு தப்பட்டைப் பலகைகளை காய்ச்சிட்டே குளிர் காஞ்சிட்டும் இருப்பாங்க.
அய்யன் கைவாகுல பட்டி தயாரா இருக்கும். களிமண்ணும் மாட்டுச் சாணியும் கலந்து தெப்பக்குளம் கட்டியுட்டு இருப்பாரு. அதுல நெம்ப அழகா ஆவரம்பூவு, மொடக்கத்தான் பூவு, மாவிலை எல்லாத்தையும் குத்தியுட்டு, கார்த்திகை விளக்குகளை அங்கங்க வெச்சிப் பத்த வெச்சிருப்பாரு. கட்டுன தெப்பக்குளம் பூராவும் செஞ்சேரிமலையிலயோ, திருமூர்த்தி மலையிலிருந்தோ கொண்டு வந்த தீர்த்தத்தை வுட்டு நெப்பியிருப்பாரு. குளத்துச் செவுத்துல கார்த்திகை விளக்கு எரியொ, குளத்துக்குள்ள இருக்குற வெங்கச்சாங்கல் சாமிக அப்படியே மின்னும்.
தெப்பக்குளத்தை ஒட்டி முன்னாடியே வெங்கச்சாங்கல்லுல சாமி வெச்சி, அதுக்கு சந்தனம், துண்ணூரு, குங்குமம் எல்லாம் வெச்சி உட்டிருப்பாரு அய்யன். அந்த சாமிக்கு முன்னாடிதா படையல் படைப்பாங்க.
அந்த படையல்ல, பண்ணையத்து ஆளுக அல்லார்த்துக்கும் மனசு நிறைஞ்சு, மனம் போல துணிமணிக வெச்சிருப்போம். ஒவ்வொரு துணிமணிகளுக்கும் மேல பொங்கப்பணம் ஆயிரம், ஐநூறுன்னு வெச்சிருப்போம். அந்த வருசம் வெளைஞ்ச வெளைச்சலைப் பொறுத்து, மூணு பொங்கல், ஆறு பொங்கல், பன்னென்டு பொங்கல்னு வெள்ளாமையப் பொறுத்து அது மாறும். கறந்த பாலைக் கொண்டாந்து பட்டிக்கு முன்னால வெச்சிறுவோம்.
அய்யன் செரின்னு சொன்னவுடனே, பண்ணையத்துல இருக்குற ஆளுக எல்லாரும் தப்பட்டை பலகை, கொட்டு மொழக்குன்னு வாத்தியம் போடுவாங்க. நாங்களும் ஒறம்பரைகளுமா சேந்து களத்து மேட்டுல கும்பிட்டு வந்து, பொங்கல் பொங்கி, தேங்கா பழம் உடைச்சி, பொரி கடலை எல்லாம் வெச்சி சாமி கும்புடுவோம்.
அய்யன் நாலு பேர்த்தை மின்னாடி வரச் சொல்லுவாரு. ஒருத்தர் கையில ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. ரெண்டாவது ஆளு கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. மூனாவது ஆள் கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. நாலாவது ஆள் கையில வாணாச்சட்டி நெறைய பொங்கலும் குடுத்துருவாரு.
இப்ப மூனு பேரும், பண்டங்கன்னுக கட்டி இருக்குற கட்டுத்தாறையச் சுத்தியும் போகோணும். மொத ஆள் கையிலிருக்குற மாவிலைய தூக்குப் போசியில உட்டு எடுத்து, “கை கழுவு பட்டியார் கை கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்த ஆள் அதே மாதர, மாவிலைய போசிக்குள்ள உட்டு எடுத்து, “வாய் கழுவு பட்டியார் வாய் கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்து வர்ற ஆளு, ”அரசன்னம் பட்டியார் அரசன்னம்”னு சொல்லுவாரு. நாலாவதா வர்ற ஆளு, ஒவ்வொரு பண்டங்கன்னுக்கும் ஒவ்வொரு கவளம் பொங்கச் சோத்தை ஊட்டியுடுவாரு. இப்படி ஒரு விசுக்காவோ, மூனு விசுக்காவோ, இருக்குற பொங்கச் சோத்துக்கு ஏத்தா மாதர மாடு கன்னுகளுக்கு பொங்கச் சோத்தை ஊட்டியுடுவோம்.
கை, கால் மூஞ்சியெல்லாங் கழுவிட்டு வந்து அல்லாரும் கட்டியுட்டு இருக்குற பட்டி மின்னாடி, தீப்பந்தத்து வெளிச்சத்துல உக்காந்துக்குவோம். பண்ணையத்து ஆளுகெல்லாம் தண்ணி வாத்து எடுத்துக் குடுத்த புதுத்துணிகளை உடுத்திட்டு வருவாங்க. அவங்களும் எங்களுக்கு எதுத்தாப்பல உக்காந்துக்குவாங்க. அறுவடை எல்லாம் எப்படிப் போச்சு, அடுத்த வருசம் பண்ணையத்துக்கு ஆரெல்லாம் இருக்கப் போறாங்க, அவங்களுக்கு வருசம் அளக்குறது எவ்வளவு, கூலி எவ்வளவுன்னு பேசுவாங்க. நோம்பி கழிச்சிப் பேசிக்கலாமுங்கன்னும் சொல்லீருவாங்க. ஆனா, மாடு கன்னு பாத்துகுறவங்களை முன்னாடி வரச் சொல்லி குத்தம் குறையிருந்தா மன்னிச்சுக்கப்பா; நீ மனசு நிறைஞ்சாத்தான் பட்டி நெறையும்; எதுனாலும் சொல்லிப் போடுன்னு சொல்லிக் கேட்டு மனசு நிறையப் பண்ணுவாங்க.
அது முடிஞ்சதீமு, கொட்டு மொழக்கு ஆரம்பமாயிரும். முடக்கத்தான் கொடியில பெரிய வடம் செஞ்சி, தண்ணி நெறஞ்சி இருக்குற பட்டிக்கு முன்னாடி ரெண்டு அல்லையிலயும் ரெண்டு பேர் அந்த வடத்தை குறுக்க புடிச்சிட்டு நின்னுக்குவாங்க. இதை கன்னுமெரட்டுன்னு சொல்லிச் சொல்றது. கொட்டு மொழக்கோட, இருக்குற தூக்குப்போசி, இரும்புச்சட்டின்னு கையிக்கு கெடைக்குறதை எல்லாத்தையும் கையில வெச்சிட்டு அடீஅடீன்னு அடிச்சி கொட்டு மொழக்குவாங்க. அந்த கொட்டுமொழக்குக்கு நடுப்புல, பொம்பளையாளுக குலுவை போட, ஆம்பளை ஆளுக “கலகலகலகல”ன்னு மாட்டுக்கன்னை புடிச்சாந்து மிரட்டியுட்டு பட்டிய மிதிக்க வெச்சி அழிச்சுடுவாங்க. மாட்டுக்கன்னும் அந்த வாத்தியம் குலுவை சத்தத்துக்கு மிரண்டு போயி சங்குசங்குன்னு குதி போட்டுட்டு ஓடிப் போகும். ஒரே கொண்டாட்டமா இருக்கும்.
சித்த நேரங்கழிச்சு, வந்திருக்கவங்க அல்லார்த்துக்கும் பந்தி உடுவாங்க. மொதல் மரியாதை பண்ணையத்துல வேலை செய்யுற ஆளுகளுக்குத்தா. அவிகளை உக்கார வெச்சி, இலையில அரிசி மாவு, தினை மாவுப் பலகாரமெல்லாம் வெச்சிப் பந்தியுடுவாங்க. அப்புறம் ஒறம்பரைகெல்லாம் சேர்ந்து விருந்து உண்டு போட்டு ஊட்டுக்குப் போக மணி காலையில ரெண்டு மூனுன்னு ஆயிரும்.
வெடிஞ்சா, மூக்கரசு நோம்பி. பூநோம்பின்னும் சொல்லுவாங்க. வயசுப் பொண்ணுங்க பையங்கெல்லாம், ஊட்டுப் பலகாரத்தை கட்டுச்சோறா கட்டிகிட்டு ஆண்டியூர் கரட்டுல இருக்குற வழுக்காம் பாறைக்குப் போவாங்க. அங்க இருக்குற வழுக்காம் பாறையில வழுக்கி விளையாடுறது, பன்னாங்கல் விளையாடுறது, கூட்டாஞ்சோறு திங்கறது, ஆலமரத்துல தூரி கட்டி விளையாடுறதுன்னு விதவிதமா பொழுதா வரைக்கும் விளையாடிட்டு வருவாங்க.
நாங்கெல்லாம் சோமவாரப்பட்டியில இருக்குற மாலகோயிலுக்குப் போவம். அங்க, ஆல் கொண்ட மால் திருக்கோயில்னு ஒன்னு இருக்கு. சுத்துபத்து நூத்திப்பத்து கிராமங்கள்ல இருந்தும் பண்ணையத்துக்காரங்க அங்க வருவாங்க. கூட்டம்னா கூட்டம், அப்படியொரு கூட்டமா இருக்கும். அல்லாரும் அவங்கவங்க மாட்டுப் பாலைக் கொண்டாந்து, ஆல் கொண்ட திருமாலுக்கு ஊத்திட்டுப் போவாங்க. அவங்கவங்க காளை மாட்டுக்கு மணி கட்டி, கொட்டுமொழக்கோட ஆட்டம் போட்டுட்டே கோயலுக்கு வந்து கோயல் திருவமுது ஊட்டு விட்டுக் கூட்டிட்டுப் போவாங்க. வண்டி கட்டிட்டு நெறைய சனம் வந்து போகும். கோயல் மைதானத்துல ஆட்டம் பாட்டம்னு வேடிக்கைக நெம்ப இருக்கும். அதுகளைப் பாக்குறதுக்கும் நெறைய சனம் வந்து போகும்.
அன்னக்கி சாயங்காலம், ஊர்க்கிணத்துல வெச்சி பூநோம்பி. ஊர்ப் பொம்பளைங்க எல்லாம் வந்து ஒன்னு கூடி கும்மியடிச்சிப் பாடுவாங்க. பாட்டுப் பாடிட்டே ஊர்வழியில, இட்டேரியில, கோயல் தோட்டம் துறவுன்னு நாலாபக்கமும் பாட்டுப் பாடி, கும்மியடிச்சி, முளைப்பாரி எடுத்திட்டு போவாங்க. ஊர்முச்சூடும் போயி ஆவரம்பூவு, துளசிச்செடி, பொன்னரளி, பூவரளின்னு எல்லாம் பொறிச்சிட்டு வந்து சாமிக்கு சாத்திட்டு இராவு முச்சூடும் பாட்டுப் படிச்சி, கும்மியடிச்சி, விளக்குமாவு எடுத்து திருவிழாவை விழாவாக் கொண்டாடுவாங்க. கொட்டு மொழக்கு, உரிமி மேளம், பம்பை மேளம், சிலம்பாட்டம், இறகாட்டம்னு அதுகளும் ஊருக்குள்ள நடக்கும்.
இப்படியான பூ நோம்பியில மனசு மசிஞ்சு காதல் மலர்றதும் உண்டு. அப்படியான காதல்ல மனசு மசிஞ்ச காத்தவராயன், அவங்க அம்மாவுக்குப் பாடுற பாட்டோட இந்த பொங்கல் பத்தின நம்ப பழமைய முடிச்சிக்கலாமுங்க மச்சே, சரியா? இந்த சொல்றன் கேட்டுகுங்க.
அங்கே கண்டேன் மெய்மறந்தேன்
அழகான மாலையவளை
கண்டு வந்த பூநோம்பிதொட்டு
கண்ணுறக்கம் இல்லையம்மா
படுத்தா உறக்கமில்ல
பாய் போட்டாத் தூக்கம் வருகுதில்லே
பாத்துவந்த வங்கணத்தியவளை
சேத்துக்கூட்டியார விடை கொடம்மா
வாழ்த்தி வரங்குடம்மா
நானும் போயவர்றேனம்மா
பாவை வந்தாப் போதுமம்மா!!”
அழகான மாலையவளை
கண்டு வந்த பூநோம்பிதொட்டு
கண்ணுறக்கம் இல்லையம்மா
படுத்தா உறக்கமில்ல
பாய் போட்டாத் தூக்கம் வருகுதில்லே
பாத்துவந்த வங்கணத்தியவளை
சேத்துக்கூட்டியார விடை கொடம்மா
வாழ்த்தி வரங்குடம்மா
நானும் போயவர்றேனம்மா
பாவை வந்தாப் போதுமம்மா!!”
மாமனும் மச்சானும் விடை பெற்றுக் கொள்கிற வேளையில் ஒரு சேரச் சொல்லிக் கொண்டார்கள், “பொங்கல் பொங்கோணும்! வெள்ளாமை வெளையோணும்! பட்டி பெருகோணும்!!”