7/11/2012

FeTNA: தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தி வரும், ஒவ்வொரு ஆண்டுக்கான தமிழ்த் திருவிழாவிலும் தமிழ் மாணவர்களுக்கான ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் இடம் பெற்று வருகின்றன.

அதைத் தொடர்ந்து, பேரவை வெள்ளி விழாவிலும் ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் வெகுசிறப்பாக நடந்தேறின. அப்போட்டிகளில், ‘பேச்சுப் போட்டி’, ‘கட்டுரைப் போட்டி’, ‘திருக்குறள் ஓதுகை’, ‘பன்முகத்திறன்’ முதலானவை இடம் பெற்றன. அவற்றுள், கவனகர் கலை.செழியன் நடத்திய ‘தமிழ்ப் பன்முகத்திறன் (Thamizh Jeopardy)' அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

‘தமிழ்ப் பன்முகத்திறன்’ போட்டி என்பது ஒரு பல்லூடக நிகழ்ச்சியாகும். இப்போட்டியின் கூறுகளாக, ‘வாசிப்பு’, ‘பாடுதல்’, ‘மொழி பெயர்த்தல்’, ‘செவிமடுத்து விடை கூறுதல்’, ‘காட்சிக்குரிய தகவு அளித்தல்’, ‘பேச்சு’ முதலானவை இடம் பெற்றிருந்தன.

வெள்ளி விழாவின் இயன்மொழியான, “தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” என்பதுவும் பேச்சுக்கான தலைப்புகளில் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. அத்தலைப்பின்கீழ், இடம் பெற்ற அனைத்துப் பிரிவுகளிலும் முதல் பரிசினை வென்ற  தென்மத்திய தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த சிறுமி ஸ்ரீநிதி மணிவாசகம் உரையாற்றியது கீழே வருமாறு:

********************************

தமிழே உயிரே வணக்கம். நீயும் நானும் தாயும் சேயுமல்லவா?! நாம் ஒரு தாய்ப் பிள்ளைகளாய்த் தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

பால் கொடுத்த தாயின் மொழி தமிழே! அவள் ஊட்டிய அமுதும் தமிழே! நீயும் நானும் பேச அவள் கொடுத்ததும் தமிழே! மாண்பு ஈட்டுவதும் தமிழே!

தனித்து இயங்குவதும் தமிழே!! நல்லன தருவதும் தமிழே! நம் வாழ்வுச் செம்மையைப் போற்றுவதும் தமிழே!! அத்தமிழை நாம் மறக்கலாகுமா? நீங்களும் நானும் மறந்து விட்டால் நாம் ஒரு தாய்ப் பிள்ளைகளாக இருக்க முடியாதல்லவா??

அதனால், நாம் தமிழ் கொண்டே பேசுவோம். தமிழ் கொண்டே சிந்திப்போம். தமிழாலே எழுதுவோம் அன்புச் சொந்தங்களே!!

வெறும் பேச்சுக்குத்தான் நாம் பிறந்தோமா? இல்லை இல்லை. செயற்கரிய செயல்கள் பல செய்ய நாம் பிறந்தோம். அமெரிக்காவில் நான் பிறந்தாலும் என் தாய் மொழி தமிழே!!

தமிழ் செழிக்க நாம் இணைவோம்! செயலால் வெல்வோம்! மறந்துவிடல் ஆகாது! நாம் அனைவரும் தமிழர்! நாம் தமிழர்!!

நம்மை நம்மில் இருந்து பிரிக்க இருக்கின்றன பல. சாதி என்றும், மதம் என்றும் நாம் பிரிந்து விடல் ஆகுமா? அதில் இருந்து விடுபட்டு, நம்மை ஒன்று சேர்த்து வைக்கக் கூடியது நாம் பேசும் நம் தாய் மொழி தமிழாகும். அம்மொழியைப் போற்றுவோம்! எட்டுத் திக்கும் போற்றிப் பரப்பிடுவோம்!!

கலப்புச் சொற்களும், முறையற்ற கல்வியும் மொழியைச் சிதைத்து விடும். ஆகவே, நாம் நம்மால் இயன்ற வரை மொழியைச் சிதைக்காமல் கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழை, தமிழ் நூல்கள் கொண்டு முறையாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இச்செயல் ஒன்றே நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். எனவே, நாம் அனைவரும் தொடர்ந்து தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று தமிழ் கற்போம்! செயலால் வெல்வோம்!!

நாம் அனைவரும் நம்மொழியின் மீது பற்றுக் கொள்ள வேண்டும். அன்பு கொள்ள வேண்டும். பெரியோர் வழியில் நின்று, நாமும் தமிழை ஓதிட வேண்டும். தமிழுக்குப் பெருமை சேர்த்திட வேண்டும். ஆம், வருங்காலம் நம் கைகளில்தானே?

நாவினிக்க, நெஞ்சினிக்கத் தமிழ் எட்டுத் திக்கும் பரவட்டும். நம் தமிழ்க்கல்வி வானுயர ஓங்கட்டும். செந்தமிழாலே நாம் என்றும் இணைந்திருப்போம்! செயல்களாலே வென்று காட்டுவோம்!!

வாழ்க பேரவை! வளர்க தமிழ்!!

நன்றி, வணக்கம்!!

8 comments:

கொங்கு நாடோடி said...

ஸ்ரீநிதி மணிவாசகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். புலிக்கு பிறந்தது பூனை ஆகிவிடுமா என்ன?

ADMIN said...

அருமை..வாசிப்பதற்கினிய வாக்கிய உரைகள்..!

சிறுமி ஸ்ரீநிதி -க்கு என்னுடைய வாழ்த்துகள்..!

Murugeswari Rajavel said...

அருமை.ஸ்ரீநிதியே வாசிப்பது போன்றே பதிவு செய்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.
ஸ்ரீநிதிக்கு வாழ்த்துக்கள்!

செல்வநாயகி said...

அன்பிற்கினிய பழமைபேசி,

நீண்ட நாட்களானது நான் வலைப்பக்கம் வந்து. இன்று உங்கள் மகள் இதை எழுதவைத்து விட்டாள். அருமையான பேச்சு. என்ன வயது அவளுக்கு? மனமார்ந்த வாழ்த்துக்கள். இயன்றால் உங்கள் தொலைபேசி எண்ணைத் தனிமடலில் அனுப்புங்கள்.

கோமதி அரசு said...

சிறுமி ஸ்ரீநிதி மணிவாசகம் மிக அருமையாக பேசி விட்டார்கள்.
வாழ்த்துக்கள்.
செல்வநாயகியை இழுத்து வந்து விட்டதே உங்கள் மகள் பேச்சு! அதற்கு மறு முறை நன்றி ஸ்ரீநிதிக்கு.

பழமைபேசி said...

அனைவருக்கும் மிக்க நன்றி!!

//என்ன வயது அவளுக்கு? //

ஒன்பது வயதுங்க. தனிமடலில் தொடர்பு எண் அனுப்பி வைக்கிறேன்.

sultangulam@blogspot.com said...

ஸ்ரீநிதி அருமை - நல்ல தயாரிப்பு பழமைபேசி

விழித்துக்கொள் said...

kuzhandhaikku en anbu muththangal
nandri