5/12/2011

திமுக!!

தமிழகத்தின் பதினான்காம் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார காலத்தில் நான் தாயகத்தில் இருந்தமை குறித்து எமக்கு மிக்க மகிழ்ச்சியே! முற்றிலும் மாறுபட்ட ஒரு தேர்தலை அவதானிக்க வேண்டி இருந்தது.

இளம்பிராயத்தில் இருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தோடு அணுக்கமாக இருந்து பழகியவன். அபிமானத்தோடு இருந்து வந்தவன். எட்ட இருந்தாலும் கூட, தேர்தல் காலங்களில் எல்லாம் மனம் ஊரில் விழுந்து கிடக்கும்.

பள்ளிப்பிராயத்தில் நான் இருந்த காலத்திலே, தமிழுக்கு நீர் பாய்ச்சியவர்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள். சுயமரியாதையை விதைத்தவர்கள் அவர்கள். சமகாலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் புரியவரும்.

1991களில் வலம் வந்த பரிதி இளம்வழுதியின் கதை நம்மில் பலருக்கு மறந்து போயிருக்கும். இரா.மோகன், K.M.தண்டபாணி, விடுதலை விரும்பி, C.T.தண்டபாணி இவர்களெல்லாம் ஒவ்வொரு மாணாக்கனுக்கும் விடிவெள்ளியாகக் காட்சியளித்த காலமது.

உள்ளூர் நிலைமை கருதி, எங்கள் ஊரின் வேட்பாளரான பா.குழந்தைவேலு அவர்களை ஆதரித்து, இரட்டை இலையில் வாக்களித்திருந்தேன். ஆனாலும், வாக்களிக்கும் அத்தருணத்தில் கை நடுங்கியது. காரணம், மானசிகமாய் நேசிக்கும் ஒரு கட்சிக்கு எதிராக வாக்களிக்கிறேனே என்கிற நெருடல்தான் காரணம்.

பாலபருவத்தின் போது, கையடக்க வானொலிகளைக் கேட்கத் துவங்குவோம். துவக்கத்தில், திமுக எழுபது இடங்களில் முன்னணி என்பார்கள். நேரம் செல்லச் செல்ல, காவிரி டெல்டா, சென்னை, திருச்சி நகரம் மற்றும் கோவை நகரம் என நான்கு பகுதிகளில் மட்டும் கொத்தாய் ஒரு இருபத்தி ஐந்து இடங்கள், மற்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில இடங்கள் என முப்பத்தி சொச்சத்தில் வந்து நிற்கும் வெற்றிப்பட்டியல்.

திமுக தொண்டன் அசந்து போவானா என்ன? படிப்பகங்கள், பாசறைகள், தெருவோரக் கடைகள் என எங்கும் தலைநிமிர்ந்து வியாபித்திருப்பான்.

”அண்ணன் இரகுமான்கான் சபைக்கு போறார் பாரு. இராமநாதன் போதும்டா நமக்கு. பரிதி இளம்வழுதி ஒத்தையாள், சபை களை கட்டும் பாரு” இப்படிப் பலவிதமாய் உச்சிமுகர்ந்து கொள்வார்கள். காரணம், அன்றைய காலம், கொள்கை பாராட்டும் காலமாய் இருந்ததுதான். ஆளும்கட்சி மாத்திரம் இளப்பமா என்ன? மாண்பு போற்றக்கூடிய வகையிலே அவர்களும் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் பாடலை, எம்.ஜி.ஆருக்கே பாடிக் காட்டும் பரிதி இளம்வழுதி. அம்மாவீரனின் ஆற்றலை, சபையிலேயே மனமுவந்து பாராட்டும் பண்ருட்டி இராமச்சந்திரன். அதுகண்டு, அவ்வீரனைக் கட்டியணைத்து முத்தமிடும் மாநில முதல்வர் எம்.ஜி.ஆர்.  எதிர்க்கட்சித் தலைவருடன் அமர்ந்து இருக்கும் நிதித்துறை அமைச்சர். இன்பத்தமிழ் கொண்டு மோதும் காளிமுத்துவும், துரைமுருகனும். பனைமரத்துப்பட்டி இராசாராமும், மதுரைப் பழனிவேல் இராசனும் பண்பு போற்றுவார்கள். அன்பழகனாரும், நெடுஞ்செழியனாரும் மாண்பு போற்றுவார்கள்.

இதெல்லாம் பழைய கதை, பழங்கஞ்சி!! இம்முறை ஊருக்குச் செல்கிறேன். கண்ட காட்சிகள், வெட்கக் கேடானவை. ஆங்காங்கே குறுநில மன்னர்கள் அரசாள்கிறார்கள். கொள்கை தரித்த தொண்டர்கள் நிரம்பியிருந்த பாசறைகள் அற்றுப் போய், கூச்சலிட்டுக் கோலோச்சும் உள்ளூர் அடாவடிகள்.

மாற்று அரசியலுக்கு வித்திடுகிறார் மு.க.ஸ்டாலின் என்பார் பலர். அவரது நடவடிக்கைகளும் அதற்குக் கட்டியம் கூறுவனவாகவே இருக்கின்றன. அவரது ஆட்சியை விரும்பினாலும் கூட, உள்ளூர் அடாவடிகளைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவை எல்லாம் ஒரு முடிவுக்கு வருவதற்காகவாவது, ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் எனப் பொது வெளியில் புலம்புகிறோம்.

நாட்டில் மாய்மாலங்கள் எப்போதுமில்லாத அளவுக்கு, கட்டுக்கடங்காது நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஊடகங்களின் அறமற்ற செயல்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு ஓங்கிப் பெருகியவண்ணம் இருக்கிறது.

எது எப்படியோ, நானும் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். யார் வெற்றி பெற்றாலும், நிலையான அரசைத் தரும்விதமாக அமைய வேண்டும். எமக்குப் பிடித்தமான மக்கள் தோழன் பொள்ளாச்சி ஜெயராமன் வென்று விடுவார். அதே போல, என்றும் தோற்காத பரிதி இளம்வழுதியும் ஏழாம் முறையாகச் சபைக்குள் புகவேண்டும் என்பதும் தனிப்பட்ட விருப்பம்.

கொசுறு:

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர், சிங்காநல்லூர் தொகுதியில், ஆலாமரத்தூர் வீரசின்னு (எ) சின்னசாமி, அதிமுக, வாக்கு வித்தியாசம் 14, 2006 சட்டமன்றத் தேர்தல்

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர், வில்லிவாக்கம் J.M.ஆரூண், த.மா.கா, வாக்கு வித்தியாசம் 1,47,747, 1996 சட்டமன்றத் தேர்தல்!

13 comments:

க ரா said...

இன்னும் இருபத்திநாலு மணி நேரந்தாணுங்ணா... தெரிஞ்சுரும் :)

vasu balaji said...

என்னமோ போங்க. :))

Kite said...

உண்மைதான் என்ன?? 2006ஆம் ஆண்டில் வாக்களித்தோர், 3,29,91,555 பேர். 2011ஆம் ஆண்டில் வாக்களித்தோர் 2,91,38,324 பேர். அதிகாரப்பூர்வமற்ற கணக்கானது, முப்பத்தெட்டு இலட்சம் வாக்காளர்கள் விடுபட்டதாகக் காண்பிக்கிறது. இந்த வாக்காளர்கள் யார்? மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இணங்க, வாக்காளர் தொகை கூடியல்லவா இருக்க வேண்டும்??//

உங்களுக்கு இந்த புள்ளிவிவரம் எங்கே கிடைத்தது? கீழ்க்கண்ட செய்தியின்படி 36 லட்சம் பெர் அதிகமாக வாக்களித்திருப்பதாகத்தானே இருக்கிறது.

About 3.66 crore electors in Tamil Nadu cast their votes in the Assembly elections on Wednesday, accounting for 77.8 per cent of the total electorate of about 4.71 crore.

Compared to the 2009 Lok Sabha elections, nearly 63 lakh more people exercised their franchise this time. Compared to the 2006 Assembly elections, about 36 lakh more voters participated in the exercise now.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1696984.ece

Chitra said...

நாளைக்கு தேர்தல் முடிவுகள்..... ஒரு மாத காலம் என்பது நீண்ட காலம் தான்.

பழமைபேசி said...

Tamilnadu Assembly Elections 2006

The Number of Voters in Tamilnadu Assembly Election 2006 are,

Male Voters = 23113794
Female Voters = 23489558
_________
Total Voters = 46603352

The Number of Electors who voted in Tamilnadu Election 2006 and the Vote Statistics are:

Male Voters = 16735616 (72.41%)
Female Voters = 16150033 (68.75%)
_________
Total Voters = 33005492 (70.82%)

Source: http://www.tamilspider.com/resources/6229-Tamilnadu-Assembly-Election-Vote-Statistics-from.aspx

And I did verify from other sites as well.

For 2011:
========

http://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_legislative_assembly_election,_2011

பழமைபேசி said...

@@Jagannath

Let me come back with accurate info as I have some error in my calculation...

பழமைபேசி said...

@@@@Jagannath


Registered voters
=================
1991: 39908787
2001: 47479000
2011: 47100000

Population Growth
=================

1981-1991: 7451000
1991-2001: 6547000
2001-2011: 9732000

why are we not seeing the raise in registered votes?? That is the point I wanted to make.. but my numerals got screwed up... I will fix it later... thanks for pointing me that.

Kumky said...

மக்கள் தோழன் பொள்ளாச்சி ஜெயராமன்...?


நாசமாப்போச்சு...கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுத்துறையை சீரழித்த புண்ணியவான்..

5ஆண்டுக்காலமும் தி.மு.க ஆட்சியில் ஊழல் புரிந்துவிட்டனர்..
அவர்களனைவரையும் சட்டத்தின் முன்னிருத்தி நீதியை நிலை நாட்டாமல் விடமாட்டேனென சபதமும்., சீனும் அம்மா முன்னால் போட்டு 5ஆண்டுக்காலமும் வெறும் வாய்ப்பந்தலிலேயே காலம் கடத்திய பெருமகனார்...

அடுத்து அமைச்சரானால் எந்த துறையை மூடுவிழாவுக்கு ஏற்பாடு செய்வாரோ தெரியவில்லை...

வேலவன் said...

பழைய தி மு க பற்றிய தங்களின் நினைவுகள் அருமை.. அம்மா வந்தவுடன் தான் தனிமனித தாக்குதல் அதிகரித்து , அரசியல் நாகரிகம் வெகுவாக குறைந்து விட்டது என்பது சரி. கூட்டணி கட்சி தலைவர்களையே மதிக்காதவர்.. எதிரிக்கட்சியையா மதிப்பார்?

Unknown said...

நேர்மையான கருத்துக்களுக்காக ஒரு +ve ஓட்டு.

நிரூபன் said...

அந்தக் காலத் தமிழத் தேர்தல் களத்திற்கும், இக் கால தேர்தல் களத்திற்கும் இடையிலான வேறுபாட்டினைப் பற்றிய மண் வாசனை கலந்த உங்களின் அலசலை ரசித்தேன்,

மதுரை சரவணன் said...

திமுக சரியான அலசல் .. உங்களின் கணிப்பு படி நீங்கள் விரும்புபவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

பழைய கதையெல்லாம் யாருக்குத் தெரியுது?நான் அமராவதி ஆற்றுல மீன் புடிச்சிகிட்டிருந்தேன்:)