5/29/2011

இராதிகா சித்சபேசன் பேசுகிறார்!!

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் 

எட்டிக் களை பறிக்கும்
இடமெல்லாம் நிற்கேனோ?
கட்டி மண்ணை நீ உடைக்கக்
கைத் தடியாய் ஆகேனோ?
ஏறுகின்ற வெயில் தணிக்க
இன்னிழலாய்த் தழுவேனோ?
மீறுகின்ற காதலுடன்
நம்மொழி பேச வாராயோ??
--கவிஞர் தூரன்

வட அமெரிக்கத் தமிழரெலாம் கூடி,தம் மொழி பேசிக் களித்து இன்புற்றிருத்தலோடு அவர்தம் கட்டமைப்புக்கும் வலுச் சேர்க்குமுகமாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது ஆண்டுதோறும் தமிழ் விழாக் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே.

பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழாவானது, எதிர்வரும் யூலை மாதம் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்களின்போது, தென் கரோலைனா மாகாணம், எழிலார்ந்த கடற்கரை நகரமாம் சார்ல்சுடன் நகரில் நடைபெற உள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரும், தமிழ்ப் பண்பாட்டை அமெரிக்க மண்ணில் நிலைநாட்டுவதற்கு அயராது உழைத்து வரும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தாரும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை மிக விமரிசையாகச் செய்து வருகிறார்கள்.

வெளியூர்களில் இருந்து வருவோர்க்கு ஏதுவான தங்குமிடங்கள், பசியாற உண்டி வழங்கல், குழந்தைகள் சக உறவினரோடு இருந்து மகிழ்ந்திடக் கூடங்கள், தமிழ்ச் சான்றோர்தம் விழுமியங்களை ஆய்ந்து பருகிட பல மேடைகள், குடும்பத்தார் இருந்து களித்திடப் பல பண்பாட்டு நிகழ்வுகள் என எண்ணற்ற கூறுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இத்திருவிழா.

திருவிழா இடம் பெறுகிற நகரமோ, ஒரு எழிலார்ந்த நகரம். நகரெங்கும் பச்சைப் பட்டுடத்திய புல்வெளிகள், வரலாற்றுப் பெருமை போற்றும் புராதனச் சின்னங்கள், அழகு கொஞ்சும் கடற்கரைகள், கண்களுக்கு விருந்தூட்டும் மீனகம் என ஏராளமான இன்னபிற அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதுதான் சார்ல்சுடன் நகரம்(Charleston, SC). இது ஒரு ஆகச் சிறந்த சுற்றுலாத்தளம் ஆகும்.

இவ்விழாவில், குணச்சித்திர நடிகர் நாசர் அவர்கள், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சித்சபேசன், கவிஞர் நா.முத்துக்குமார், பாடகர்கள் A.V.இரமணன், உமா இரமணன், பிரசன்னா, திண்டுக்கல் சக்தி நாட்டியக் குழுவினர், கானா பழனி, திருப்புவனம் ஆத்மநாதன், ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள், கோடைமழை வித்யா, புதுகை பூபாளம் குழுவினர் மற்றும் கனடிய, அமெரிக்க உள்ளூர்த் தமிழர்களும் இணைந்து, மூன்று நாட்களுக்குமாக பல நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

இவை மட்டுமல்லாது, இணை அமர்வுகளாக வலைஞர் சங்கமம், வணிகக் குமுகாயம், பல்வேறு பல்கலைக் கழக முன்னாள் மாணவர் கூடல், மருத்துவ ஆய்வு அரங்கம், தமிழ் அரசியலமைப்புக் கூட்டம் எனப் பல நிகழ்வுகளும் இடம் பெற உள்ளன. விழா குறித்த கூடுதல் தகவல்களுக்கு, பேரவை வலைதளம் மற்றும் விழா நறுக்கு ஆகியனவற்றைப் பாவிக்கவும்.

யூலை 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்கள் பெருவார ஈறு என்பதனால், ஒவ்வொரு தமிழரும் தத்தம் குடும்பத்துடன் வந்திருந்து தம்மையும் கட்டமைப்பையும் வலுப்பெறச் செய்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

விழாவில், திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள் வழங்க இருக்கும் விநாடி வினா, கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தலைமை ஏற்று, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம் எனும் தலைப்பில் இடம் பெற இருக்கும் கவியரங்கம், மரியாதைக்குரிய ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் நடுவராக இருந்து, தமிழைச் சிதைப்பது ஊடகங்களா? பொதுமக்களா?? எனும் தலைப்பில் இடம் பெற இருக்கும் பட்டிமண்டபம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுடையோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் அவர்களின் தமிழ்ப் பணியினை நினைவு கூறும் விதமாக, பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாக அமைய இருக்கிற இத்திருவிழாவின் போது, எழில்நகரமாம் சார்ல்சுடன் நகரில் உங்களை எல்லாம் சந்தித்து இன்புறக் காத்திருக்கிறோம். தமிழால் இணைந்தோம்! நட்பு பாராட்டுவோம்!! வாரீர், வாரீர்!!!

பணிவுடன்,
பழமைபேசி,
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைப் பிரதிநிதி,
அரசி நகரத் தமிழ்ச் சங்கம்.

5/19/2011

தன்னாய்வு

பின்னோக்கிப் பார்க்கிறேன். பிரமிப்பாய் இருக்கிறது. என்னையே என்னால் நம்ப முடியவில்லை. அங்கக் கூறுகளான கைகள், விரல்கள், கால் பாதங்கள் முதலானவற்றைப் பார்க்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாள்தொட்டு என்னுடனே பயணித்து வருவன அவை.

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் சில பல கதைகளைச் சொல்கின்றன. வலது காலைப் பார்க்கிறேன். முட்டி பெயர்ந்த தழும்பு. அதற்குப் பின்னால் ஒரு கதை. கணுக்காலுக்கு மேல் இருக்கும் தீப்புண்ணின் தழும்பு. அது சூந்து விளையாடும் போது ஏற்பட்டது. அதன் நினைவுகள்.

என் மெய்யின் ஒவ்வொரு கூறினையும் நேசிக்கிறேன். இவ்வுலகில் எத்தனை பேருக்கு, தத்தம் உடலின் பாகங்களைக் கண்டு, பேசி, உளம் மகிழ்ந்து, அவற்றுடன் ஒன்றிப் போக நேரம் வாய்க்கிறது? அல்லது மனம் இருக்கிறது?? என்னை நினைத்து நானே பெருமைப்படுகிறேன். செருக்குக் கொள்கிறேன். அதில் என்ன தவறு இருக்க முடியும்?! என் மெய்யைச் சிலாகித்து, அவற்றின் அங்கத்துக் கூறுகளின் ஆரோக்கியத்தைப் பார்த்து மகிழ்வதில் நான்தானே முதன்மையானவாக இருக்க முடியும்?

வாரம் ஒருமுறை விரல் நகங்களை வெட்டுகிறேன் அல்லது தூய்மைப்படுத்தி அழகு பார்க்கிறேன். பல் மராமத்துச் செய்கிறேன். தசைநார்கள் சுருங்கி விரியச் செய்கிறேன் அனுதினமும். கண்கள்? அவனியின் அழகை எனக்கு ஊட்டும் கண்களைப் பாராது இருப்பேனா? இன்னும் இருப்பனவெல்லாம் என்னோடு, நானிருக்கும் வரை உடன் வருவன. அவற்றின் மீது நம்பிக்கை வைத்துத்தானே, ஒவ்வொரு நாளும் பிறக்கிறது எனக்கு?!

நான் கடவுளைத் தொழுவது இல்லை. மாறாக என் அங்க அவயங்களைத் தொழுகிறேன். மாறாமல் பணியாற்றும் அவற்றுக்கு, என்றென்றும் விசுவாசமாக இருக்க விரும்புகிறேன்.

1997 ஆம் ஆண்டு, பெரும் விபத்தில் சிக்கி, என் வலதுகால் முட்டி பெயர்ந்து, முட்டியின் கிண்ணம் சிதறி இருந்தது. பார்த்த மருத்துவரெலாம், அறுவை சிகிச்சை செய்து அவற்றை ஒன்று கூட்டி உள்ளே வைத்துப் பார்க்கலாம். ஆனால், காலை மடக்கும் கோணம் வெகுவாகக் குறைந்து நடப்பதில் பழுது ஏற்படும் என்றுச் சொன்னார்கள். எனவே இப்படியே விட்டு விடலாம் எனப் பரிந்துரைத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக, நான் விபத்தில் சிக்குண்டது என் குடும்பத்தாருக்கே தெரியாது. உண்ணக் கொடுத்ததும், உண்டு கழித்ததை அப்புறப்படுத்தியதுமான எல்லாமும் உடன் இருந்த நண்பர்கள்தான்.

எனக்கும் என் அங்க அவயங்களுக்குமான பிணைப்பு அதிகம். இருபத்தி மூன்று நாட்கள் கழிந்த பின்னர், யூத மருத்துவர் சுலோமோ சேப்மேன் என்பாரிடம் வாதிட்டேன். நீங்கள் ஒன்று கூட்டி வையுங்கள், அவை என் சொல் கேட்கும். அல்லாவிடில் நான் மரணத்தைத் தழுவுவேன் என இறுதியாகச் சொல்லிவிட்டேன்.

மருத்துவர் சேப்மேன் அவர்கள் வியந்தார்கள். ”உன்னிடம் மன உறுதி இருக்கிறது; நான் உனக்குச் செய்கிறேன்” என்று சொல்லி பெயர்ந்த எலும்புகளையும் கிண்ணத்தையும் பொருத்திக் கம்பிகள் கொண்டு முடிச்சுப் போட்டுவிட்டார்.

அனுதினமும் வலதுகால் முட்டியோடு பேசினேன். வலது காலை மடக்க முடியாது. தூக்க முடியாது. இடுப்பில் இருந்து செயலாற்றுவதற்கு மட்டும் உடற்கூறு பயிற்சியாளர் வந்து போய்க் கொண்டு இருந்தார். என் மன உறுதியைக் கண்ட அவர், பெருமளவில் உதவி செய்தார்.

சிறு மணல் மூட்டைகளை கணுக்காலில் இட்டுத் தூக்குவேன். தேகப் பயிற்சி சாலையில் இருக்கும் உருட்டுகளைக் கால்கள் கொண்டு உருட்டுவேன். வலி, தாங்க முடியாத வலி. முட்டியும் நானும் பேசிக் கொள்வது மட்டும் நிற்கவில்லை. இன்னும், இன்னும் என என் மனமும், முட்டியும் ஒருங்கே இருந்து செயலாற்றின. மனத்திண்மை என்பது வென்று காட்டியது.

இறுதியாக, 1999ஆம் ஆண்டு, ஊடோடிய கம்பிகள் உருவப்பட்டன. சப்பணம் இட்டு அமர்ந்து காட்டினேன். சேப்மேன் அவர்கள் வானளாவக் குதித்தார். இவற்றை எல்லாம் குறிப்பிடக் காரணம்? மனத்திண்மையின் வலுவைச் சுட்டிக் காட்டத்தான்.

இன்றோடு, மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இப்படியெலாம் எழுத வந்து மூன்றாண்டுகள் நிறைவினை எய்துகிறது. பெருமிதமாய் உணர்கிறேன்.

என் அங்க அவயங்களை எப்படி நேசிக்கிறேனோ, எப்படிப் பேணிப் பாதுகாக்கிறேனோ, அப்படியாக என் சிந்தனைகளையும் எழுத்தையும் பேணுவேன். எழுதுவது எதாகட்டும், முதலில் அவை எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பதில் பின்வாங்க மாட்டேன்.

இம்மூன்று ஆண்டுகளாக, என்னுடன் பயணித்து வரும் சக நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

5/18/2011

கொசு!!

கொசு என்கிற நுளம்புவைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, ஆசிய நாடுகளில் வாழ்பவர்களுக்கு நுளம்புகளுடனான நெருக்கம் மிக அதிகம். இவற்றால் பெருந்தொல்லைக்கு ஆட்பட்டு, எரிச்சல் உறாதவர்களே இல்லை எனும் அளவுக்கு அதனால் பாதிக்கப்பட்டோர் ஏராளம்.

இவர்களுக்கு இடையே சற்று மாறுபட்டவர் இவர். பரிகோஷ் எனும் பெயரை, நுளம்புநாதன் என மாற்றி வைத்துக் கொண்டவர். நுளம்பண்ணா, நுளம்பண்ணா என, அப்பகுதி மக்களால் அன்பாக விளிக்கப்படுபவர்.

இதோ, நுளம்பண்ணன் பழமை பேச வருகிறார் நம் வாசகர்களுக்காக!

“அண்ணா, வணக்கங்ணா!”

“வணக்கங் தம்பி! நலந்தானே?”

“எங்கீங்ணா... ஒரே கொசுத் தொல்லை!”

“தொல்லைன்னா தொல்லை. இல்லைன்னா இல்லை. எல்லாம், மனசுதான் காரணம்!”

“சரி, அதைவுடுங்க. உங்களுக்கும் கொசுக்கும் என்ன தொடர்பு? உங்க பெயரை மாத்தி வெச்சிகிட்டதுக்கு என்ன காரணம்? அதைக் கொஞ்சம், எங்க எழிலாய்ப் பழமை பேசும் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!”

”தூயதமிழ்ல இருக்குற பெயர்களைக் கேள்விப்படும் போதெல்லாம், என்னைய யாரோ கிள்ளுற மாதிரியே இருக்கும். இதை நான் எங்க தமிழ்ப் புலவர் கோணகிரி ஐயாகிட்டச் சொன்னப்ப, அவர்தான் இந்தப் பெயரை எனக்குத் தெரிவு செய்து கொடுத்தாரு. அன்றைய தினத்தில இருந்து, நான் நுளம்புநாதன்ங்ற பேருக்கு மாறிட்டேன்.”

“கிள்ளுற மாதிரி இருந்த உணர்வுக்கும், இந்தப் பெயருக்கும் என்ன தொடர்பு? ஒன்னும் புரியலையே?”

“கிள்ளலை, நுள்ளல்ன்னும் சொல்லலாம். எந்தவொரு பற்றியத்தையும், அதுக்குள்ள ஆழமாப் போயி அறிஞ்சுக்கும் ஆற்றல் நுளம்பம்னு சொல்றது. அதையொட்டித்தான் நுளம்புநாதன்ங்ற பேரு எனக்கு அமைஞ்சது!”

”முடியலை. நீங்களா சொல்வீங்க... அதையும் நாங்க நம்பணும். எப்படி இது?”

”நாங்களா சொல்றது கெடையாது. குறுந்தொகையில கூட வருதே?

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே!

கடுங்குளிர்காலமதில், ஊதக்காற்று பெரும் வேகமெடுத்து வீசும் நள்ளிரவு நேரம். புறக்கொல்லையில் இருக்கும் பசு, வேகமெடுத்து வீசும் ஊதக்காற்று தன் மேல் படுவதால் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்நடுக்கத்தின் ஊடாக நுளம்பு ஒன்று அப்பசுவினைக் கடிக்க, அப்பசுவோ தன் தலையைத் திருப்பி வாலால் வீசியடித்து அந்நுளம்பினைத் தூரத் துரத்தி விடுகிறது.

அப்படியாகத் தன் தலையைத் திருப்பும் போது, கழுத்து மணியின் ஓசையானது தலைவியின் காதில் விழுந்து நித்திரையைக் கலைத்துவிடுகிறது.

’கார்காலத்துப் பனியானது எம்மைக் குளிர்ச் சிறையில் ஆழ்த்துகிறது. அச்சிறையினை உடைத்துக் கொண்டு, என் கண்கள் மழை பொழிகிறது. என் தலைவன் உடன் இருப்பின், இந்நிலை வருமா எனக்கு?’ எனப் பசலை நோய் கண்டவளாய்த் தன் தோழியிடம் தலைவி கூறுவதாக அமைந்த பாடல்தான் இது.

இதிலே நுளம்பு எனும் சொல் வருகிறது கண்டாயா?”

“ஆகா! அருமையான தகவலுங்க நுளம்பண்ணே! அப்புறம் ஏன் நுளம்பைக் ’கொசு’ங்றாய்ங்க?”

“கொசு அப்படின்னா, சின்னது அப்படிங்ற அர்த்தம் வரும். கொசுவம், கொசுறு மாதிரியான சொற்கள் எல்லாம் அதனோட நீட்சிதான். சின்னதான தொங்கல், கொசுவம். சின்ன சின்ன சில்மிசம், கொசுறு! இப்படி நிறைய கொசுங்ற வேர்ச்சொல்லுல இருந்து வரும்.”

“நுளம்புன்னே சொல்ல வேண்டியதுதானே? அப்புறம் எதுக்கு கொசுன்னு இனியொரு சொல்?”

“தமிழறியா அரைகுறைகள் செய்யுற வேலைதான் இது. Mosquito அப்படிங்ற நுளம்பம், Culicidaeங்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூச்சி. Culicidaeங்ற இலத்தீன் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கொசு. ஆக, கொசுக் குடும்பத்தைச் சார்ந்த நுளம்பம் அப்படின்னு வரணும். ஆனா, Mosquito அப்படிங்றதுக்கே கொசுன்னு சொல்லாக்கம் செய்துட்டாங்க யாரோ!”

“கேட்கிறேன்னு கோவிச்சுக்க கூடாது நீங்க. ’குசு’வுக்கும், ’கொசு’வுக்கும் எதனா தொடர்பு இருக்கா?”

“இருக்கு. ஆனா, இல்லை. குசு அப்படின்னா, மறைபொருளா ஊடுவது. ஆசனவாயில்ல இருந்து வெளியில் ஊடுவதும் குசுதான்.

காதும் காதும் வெச்ச மாதிரி, ஒரு பற்றியத்தை ஊடால விடுவதும் குசுதான். இதைத்தான் குசுகுசுன்னு சொல்றதுன்னும் சொல்றோம். குசுன்னு சொல்லத் தயங்கறவங்க கிசு கிசு ஆக்கிப்புட்டாங்க. தெலுங்குலயும் குசு குசுதான்; சப்பானிய மொழியிலயும் குசு குசுதான். வட மொழியில, உசிர் குசுர்ங்றாங்க.

குசு நாற்றம் கொசுவுக்கு ரொம்பப் பிடிக்கும். குசுன்னு மட்டும் அல்ல, கரியுமில வாயு அடங்கிய எதுவும் அதற்குப் பிடித்தமான ஒன்னு. ஆக, தூய்மையா இருக்கும் போது நுளம்பத்தின் இடைஞ்சல் குறைவா இருக்கும்.”

”நுளம்பண்ணே, குசுவுக்கும் கொசுவுக்கும் உண்டான வேறுபாட்டை நல்லாச் சொன்னீங்க. பொதுவா, கொசுங்ற நுளம்பு ஏன் நம்மைக் கடிக்குது?”

“ஆண் நுளம்பு நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான். நான் கொசு குடும்பத்தைப் பத்தி சொல்றேன். ஆண் நுளம்புகள் பொதுவா, தாவர அமிழ்தம்(nector) மற்றும் தாவர இரசங்களைத்தான் பருகும்.

பெண் கொசுக்களுக்கு, முட்டை வைப்பதற்காக, proteinங்ற புரதச் சத்து தேவைப்படுது. அதனால, இரத்தத்தை உறிஞ்சுகுழலால உறிஞ்சிக் குடிக்குது அது. அப்படி உறிஞ்சிக் குடிக்கும் போது என்ன ஆகுதுன்னா, அந்த பெண் கொசுவோட உமிழ்நீர், எச்சில், நம்மை உடம்புல இறங்கிடுது. அது, பல நோய் மற்றும் அசெளகரியங்களுக்குக் காரணமாப் போய்டுது.”

”சரிங்ணே, உங்களுக்கு கொசுனால எந்தத் தொல்லையுமே இல்லையா? நீங்க எப்படி அதை, எதிர் கொள்றீங்க?”

“நான் பொதுவா, தூய்மையாகவும் சுகாதாரமாவும் இருக்குறதை விரும்புறவன். அதனால அவ்வளவா என்னை அதுக கடிக்காது. ஆனா, நித்திரையில இருக்கும் போது காதுல புகுந்துட்டு, உர்ர்ர்ர்ன்னு சத்தம்வுட்டு மனுசனுக்கு எரிச்சலூட்டும்”

“அப்ப, அதை எப்படி சமாளிப்பீங்க?”

“பெண் கொசுக்கள்தான நம்மகிட்ட வருது? அதனால, பக்கத்துல படுத்துட்டு இருக்குற பொண்டாட்டிக்கு நல்லா நாலு அறை, ரய்ய்ய்யுன்னு உடுவேன். எனக்கு இருக்குற கோவம் எல்லாம் தாழ்ந்து போயிரும்.”

“என்னண்ணே சொல்றீங்க? அப்புறம் உங்களுக்கு எதும் நடந்துறாதா?”

“அதையெல்லாம் வெளில சொல்ல முடியுமா?”

“சரி விடுங்கண்ணே! அப்புறம் இந்த நுளம்பு, கொசு, தினாசு எல்லாம் ஒன்னுதானா?”

“கெடையாது, கெடையாது! கொசுக் குடும்பத்துல வர்றது நுளம்பும், தினாசும். தினாசுன்னா, நாய், ஆடு, மாடுகள்ள இருக்குற சிறு பூச்சி.”

“ஓ, ஆடு, மாடுகள்ல இருக்குறது? அப்ப, தினாசும் உன்னியும் ஒன்னா?”

“வேற, வேற!”

"சரிங்ணா. அப்புறம் கொசுவைப் பத்தின வேற தகவல்கள்?”

“கொசுக்கள் ஒரு அபூர்வமான பிறவின்னுதான் சொல்லணும். ஐந்து மாதங்கள் வரை வாழக் கூடியது. ஒரு வினாடிக்கு, முந்நூறுல இருந்து அறுநூறு முறை தன் சிறகுகளை வேகமா அடிக்கும் வல்லமை கொண்டது. ஒரு மணி நேரத்துல கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் பறக்க வல்லது.

ஒருவனுக்கு ஒருத்திங்ற முறைப்படிதான் கொசுக்கள் வாழ்க்கை நடத்தும். தன்னுடைய இணை எங்க இருக்குன்னு, அந்த பெண் கொசுவினுடைய சிறகடிப்பின் அதிர்வை வெச்சே கண்டுபிடிக்கும் தன்மை கொண்டவை ஆண் கொசுக்கள்.

ஒரு மனிதனின் சஞ்சாரத்தை, அம்மனிதன் வெளியேற்றும் கரியுமில வாயுவை மோப்பம் கொண்டு, எழுபத்தி அஞ்சு அடி தூரத்திலிருந்தே கண்டுபிடிச்சிடும் பெண் கொசுக்கள். பொதுவா, கொசுக்கள் பெண்களைத்தான் அதிகம் விரும்பிக் கடிக்கும்”

“நுளம்பண்ணே, நல்ல தகவல்களை அறியக் கொடுத்தீங்க. மிக்க நன்றி!”

”குசுவும், கொசுவும் இல்லாம நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துகள்! நன்றி!!

5/17/2011

விதைப்போர் வீழ்ந்திடினும், விதைகள் வீழ்வதே இல!!

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம் - நாலடியார்.

கொங்கு நாட்டிலே, மேட்டிமை பொருந்திய அரசியலாளர்களின் சூழ்ச்சிக்கு இரையாக்கப்பட்டு ஏழையாகிப் போன ஒரு உழவனுக்குப் பிறந்து, வீழ்ந்தது வீழ்ந்ததுதான் என்றிலாமல், விதைப்போர் மரிப்பினும் விதைக்கப்பட்டவை மேலெழும் எனக் கருதிய தாய் தகப்பனால், அறம் வழுவா ஆசிரியன்மார் சிலரால், முட்டி மோதி, தட்டுத் தடுமாறி, காலத்தின் போக்கில் சிங்கப்பூர் அடித்துச் செல்லப்பட்டவனானேன்.

'ஆமாவா'த்தமிழ் கேட்டு பூரித்துப் போனாலும் கூட, அங்கு வாழும் தமிழரின் நிலை கண்டு கலங்கிப் போனேன். 1968ஆம் ஆண்டு விடுதலையாகிப் போன ஒரு நாட்டிலே, பெரும்பாலான தமிழரெலாம் பொருளாதாரத்தில் வெகுவாகப் பின்தங்கி இருந்தார்கள். அந்நாட்டு அரசியல் கட்டமைப்பும் நம்மவர்க்கு ஏதுவாக இல்லை என்பதே எம் கருத்து. ஆனால், என் நண்பர்கள் இன்னமும் கூட அதை ஏற்க மறுக்கிறார்கள்.

இருபத்து ஏழு மாதங்களுக்குப் பிறகு, இந்தோனேயம் மற்றும் மலேய நாடுகளுக்குச் செல்கிறோம். சில காலம், அங்குமிங்குமாக நகர்கிறது. அங்கும் தமிழினம், வெகுவாகப் பின்தங்கியே இருக்கக் காண்கிறோம். இம்மூன்று நாடுகளிலும், அடுத்தடுத்த தலைமுறையினர் மேன்மை பெறுகிறார்கள் எனச் சொன்னாலும் கூட, அந்த வளர்ச்சியின் ஏற்றமானது வெகு மத்திபமாகவே இருக்கிறது.

கிழக்காசிய நாடுகளை அடுத்து, மேற்படிப்புக்காக கனடா நாட்டிற்குச் செல்கிறோம். அங்கேதான் நமக்கும், ஈழத் தமிழர்களுக்குமான அணுக்கம் பிறக்கிறது. டொரொண்டோ, மோண்ட்ரியால் மற்றும் ஒட்டாவா நகரங்களில் தமிழ் மக்கள் செறிவாகக் குடியேறி இருந்தார்கள்.

அவர்களைக் கண்டதும், மாபெரும் சோரவிரக்தி எம்மைக் கப்பியது. இரவு, பகல் என்று பாராது, அயராமல் உழைத்து, உழைத்து ஓடாய்த் தேய்ந்து கொண்டிருந்தார்கள். பெற்ற பிள்ளைகளை வளர்க்க வேண்டும். தாயகத்தில் ஓடி ஓடிப் பிழைக்கும் பெற்றோருக்கு காசு, பணம் அனுப்ப வேண்டும். அண்ணன் பிள்ளை, தமக்கை பிள்ளை எனப் பேதம் பாராது, அவர்களையும் புலம் பெயரச் செய்ய வேண்டுமென ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் கனவுகள்.

உழைத்தார்கள்; உழைத்தார்கள். உயிர் போகுமளவுக்கு உழைத்தார்கள். ரெண்டு வேலை; இராவுக்கொரு வேலை, பகலுக்கொரு வேலையென உண்ணாமல், உறங்காமல் வேலை பார்த்தார்கள்.

ஊருக்கு காசு அனுப்ப வேணும் மணி சார் என்பார். அக்காவென்ட பெட்டை கொழும்பு வந்து நிக்கிறா, அவளை இங்கால கொண்டாறணும் மணி சார் என்பார். இங்க இருக்குற ஒரு பொடியனை வெச்சு, அண்ணண்ட பெட்டைக்கு இசுபான்சர் செய்யப் பண்ணனும் மணி சார் என்பார். இப்படியாக, ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் கனவுகள்.

அநீதி, எங்கும் அநீதி. தாயகத்தில் இருந்து அழைத்து வரப் பணம் வாங்கிய இடைத்தரகனிடம் அநீதி. சிங்களப் படையின் அநியாயத் தாக்குதலில் சிக்குண்டு போன அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மருத்துவம் பார்க்கக் கடனாகப் பணம் கொடுத்தவனின் அநீதி.

புலம் பெயர்ந்து வந்து புகுந்த நாட்டில் தமக்கும், தன்னினத்துக்கும் அவப் பெயரை உண்டாக்கும் காடையர்களிடம் அநீதி. குழுக்கள் அமைத்துக் கொண்டு செய்யும் இக்காடையர்களின் மோதல்களால், ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் மீதான அநீதி.

இத்தனையையும் பொறுத்துக் கொண்டு உழைத்தார் தமிழ் மக்கள். அயராது உழைத்திட்டார் தமிழ் மக்கள். புனரமைப்புப் பணிகள்; வீதிதோறும் தமிழ்ப் பள்ளிகள்; தத்தம் குழந்தைகளுக்குப் புகுத்திட்டார் மொழியறிவு. வளர்த்திட்டார் தமிழ்ப் பண்பாடு. திறந்துவிட்டார் கல்விக் கண்.

பிள்ளைகள், நம் பிள்ளைகள், கூட்டம் கூட்டமாய்ச் சென்றிட்டார் பாடசாலைகளுக்கு. டொரொண்டோ பல்கலைக் கழகம், யார்க் பல்கலைக் கழகம், வாட்டர்லூ பல்கலைக் கழகம், ஒட்டாவாப் பல்கலைக் கழகம், மேற்குக் கனடியப் பல்கலைக் கழகங்கள் என எங்கும் மாணவர்கள்; நம் தமிழ் மாணவர்கள்!!

காசு, காசெண்டு எங்களைப் போல அலைஞ்சு திரிய வேணாம் பிள்ளாய். இனத்துல நாமும் மனுசரெண்டு காமிக்க வேணும் பிள்ளாய். நல்லாப் படிச்சு, நாட்டு மக்களுக்கு நாம யாரெண்டு காண்பிக்க வேணும் பிள்ளாய் எனக் காண்போரை எல்லாம் பாராட்டிச் சீராட்டி ஊக்கமளிப்பார் ஏக்ராஜ் அண்ணாச்சி.

இன்றைக்கு எத்துனை பேருக்கு, அந்த சமூக சேவகர், தமிழ் மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏக்ராஜ் அண்ணாச்சியைத் தெரியும் என்று தெரியவில்லை.

“வெடிஞ்சா, நீதிமன்றஞ் செல்ல வேணும்; வடிவான கதை ஒன்டு எழுதித் எழுதித்தாங்கோ!”வெனக் கேட்டபடியே அவர்தம் அறைக் கதவுகள் தட்டப்படும் விடியற்காலை மூன்று மணிக்கு. இராவு வேலை முடிந்து, கடுங்குளிரில் வந்து தட்டும் அவனது வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படும். அண்ணாச்சி எழுதும் கதையில்தான் இருக்கிறது தட்டப்பட்டவனின் அகதிமனுவை ஏற்பதுவும், அவனது சந்ததிக்கான குடியுரிமையும்!!

அண்ணாச்சி எழுந்து போய்க் கதவைத் திறந்து விட்டு, அவனுக்கேற்ற கதையை எழுதிக் கொடுத்துப் பாடம் அடித்துச் சத்தியம் வாங்குவார், “நீ உண்ட பிள்ளைகளைப் படிக்க வெப்பேனெண்டு சத்தியஞ் செய்” என. கதறி அழுது கொண்டே சத்தியம் செய்வான் அந்த அபலை. அண்ணாச்சியைத் தெரியாத தமிழன் இருக்க முடியாது அக்கால கட்டத்தில். அவர் ஒரு இசுகார்பரோ காந்தி!

வாரம் ஒருமுறையாவது அவரது அறையில் நான் தங்குவது வழக்கம். அடிக்கடி சொல்வார். “பாருங்க மணி. இந்தத் தமிழ்ப் பிள்ளைகள் எல்லாம், முதல்த் தலைமுறைப் பிள்ளைகள். எந்த நாட்டிலும் முதல்த் தலைமுறையினர் ஓங்கினதா வரலாறு கிடையாது. ஆனால், அதை நம் ஈழத்துப் பிள்ளைகள் முறியடிப்பார்கள்” என்பார்.

அப்படிச் சொன்ன மாமனிதன், நீண்ட நாட்கள் வாழப் பணித்திருக்கவில்லை. ஒட்டுமொத்த இசுகார்பரோ(Scarborough) தமிழ் மக்களும் கண்ணீர் வடித்தனர். தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஒரு தாய் அழுதாள், “என்ட பிள்ளைகள் அரசாள வேணுமெண்டு சொல்வீயளே அண்ணாச்சி?! இப்படிக் கண்டுங் காணமப் போயிட்டீகளே அண்ணாச்சி?!” எனக் கண்ணீர் உகுத்த காட்சி இன்னும் அப்படியே கண் முன்னே நிழலாடுகிறது.

அவர் மறைந்த ஆண்டு, 1998! இதோ, பதின்மூன்று, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னால், அவரது காலத்தில், அவரால் வாழ்த்தப்பட்ட பிள்ளைகள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று, கனடிய தேசிய நீரோட்டத்தில் சுடர்விட்டு ஒளிர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரமாயிரம் தமிழ்ப் பிள்ளைகள் பல்வேறு பட்டங்கள் பெற்று வெளியேறுகிறார்கள்.

சிங்கப்பூரிலும், மலேயாவிலும், இந்தோனேயத்திலும் நிகழாத அற்புதம், கனடாவிலே, அமெரிக்காவிலே எண்ணிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாக நிகழ்கிறது. மருத்துவம், பொறியியல்துறை, சட்டத்துறை எனச் சகல துறைகளிலும் நம்மவர்கள் பொன்னாய் மிளிர்கிறார்கள். தமிழகத்து மாணவர்களைக் கூட மிஞ்சி விட்டார் இப்பிள்ளைகள்.

அரசாட்சி! மக்களுக்குச் சேவை புரிவது அரசியல் பணி. சமூகப் பங்களிப்பைச் செவ்வனே செய்வது அரசியல் பணி. சட்ட திட்டங்களைத் தெரிவதும், செய்வதும், நடைமுறைப் படுத்துவதும் அரசியல் பணி. அன்றைய ஏக்ராஜ் அண்ணாச்சியின் கனவு, நம் தமிழ்ப் பிள்ளைகளின் கைகளில் அரசாட்சி.

இன்றோ, அன்றோ, என்றோ என இருந்திடாமல், எமக்குள்ளேயே இருக்கிறான் நமன் என நினைத்து, அல்லன நீக்கி, மாட்சிமை பொருந்தச் செய்யுங்கால் அன்பும், அறமும், ஆட்சியும் நமக்கே!!

எந்த நாட்டின் குடிமகனாய் இருக்கிறாயோ, அந்த நாட்டுக்குப் பணி செய்வதே முதற்கடமை. அடுத்தபட்சமாக, நின்னை நினை. நும் முந்தை, நின் மொழி, நும் மரபு, நும் பண்பாடு எனச் சகலதுமாய் நின் தனித்தன்மை காத்திடுக. நீயும் ஓங்குவாய்! நின் மக்களும் ஓங்குவர்!!

ஆம், கனடாவையோ, அமெரிக்காவையோ நாளை ஒரு தமிழ்ப் பிள்ளை ஆளக் கூடும். ஏன்? அது உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கூட இருக்கலாம்!!

விதைப்போர் வீழ்ந்திடினும், விதைகள் வீழ்வதே இல!!

வட அமெரிக்கத் தமிழ் வலைஞர் கூட்டம் 2011, வாரீர்! வாரீர்!!

அன்புத் தமிழ் உறவுகளே,

எதிர்வரும் யூலை 2, 3, 4 ஆகிய தேதிகளில், தென் கரோலைனா மாகாணம், எழில்நகரமாம் சார்ல்சுடன் நகரில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழா நடக்க இருப்பது தெரிந்ததே. அது சமயம், ஏராளமான தமிழ் நண்பர்கள், டொரொண்டோ யார்க் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், டொரொண்டோ பல்கலைக் கழகத் தமிழ் நண்பர்கள், ஒட்டாவாப் பல்கலைக் கழக நண்பர்கள், வட அமெரிக்காவில் ஆங்காங்கே இருந்து வரும் வலைப்பதிவர்கள், குமுக நண்பர்கள் எனப் பலர் வருவதாக இசைந்து உள்ளனர்.

சென்ற ஆண்டினைப் போலவே, இந்த ஆண்டும் வலைப்பதிவர்கள் மற்றும் வலை வாசகர்களுக்கான பிரத்தியேகக் கூட்டம் ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. வழமை போலவே, குடவோலை முறைப்படி தெரிவு செய்யப்பட்ட இருவருக்கான பரிசில்களும் காத்து இருக்கிறது.

அனைத்து அன்பர்களும், தத்தம் உற்றார் உறவினர் மற்றும் நட்பினரோடு வந்திருந்து, பேரவை விழாவைச் சிறப்பிப்பதோடு மட்டுமல்லாது நம் வலையுலக நட்பையும் பாராட்டுவோம். வாருங்கள் தமிழன்பர்களே!! வர விரும்புவோர், தங்கள் வருகையை எம்மிடம் தெரியப்படுத்தினால், மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

விழா நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, பேரவை வலைதளத்தைப் பார்வையிடவும். www.fetna.org

கடந்த ஆண்டு நினைவின் நீட்சியாய்:

 அண்ணன் அப்துல்லா மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா

 தளபதி நசரேயன், இளா, யோகேஷ்வரன் மற்றும் அண்ணன் அப்துல்லா

  அண்ணன் அப்துல்லா மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா

 பதிவர் கூட்டம்

 வலைஞர் ஹரி, தமிழ்சசி மற்றும் இளா



 பதிவர் யோகேஷ்வரன்



பதிவர் சந்திப்பின் போது சுட்ட கூடுதல் படங்கள், நகர் படங்களாக:


தமிழால் இணைந்தோம்!

5/14/2011

தோல்வி உணர்தலும், ஆற்றுப்படுத்தலும்!!

தமிழக பதினான்காம் சட்டமன்றம் விரைவில் அமைய இருக்கிறது. சபைக்குத் தெரிவான அனைவரையும் வாழ்த்துவது நம் கடமை. தேர்தலை வெகு நேர்த்தியாக நடத்தி முடித்த அரசுப் பணியாளர்கள் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

1970களில் தேடிக் கொண்ட வெறுப்புணர்வை வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திட 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதுவும் மாற்றுக் கட்சி இல்லாத ஒரு சூழலில் அமைந்த ஒரு வாய்ப்பு எனவும் கருதுவோர் உண்டு.

தமிழக மண்ணில் நடந்தேறிய துன்பியல்ச் சம்பவத்தை ஒட்டி, அவ்வாய்ப்பும் பறிபோக மாற்றுக் கட்சியின் அரசு அமைகிறது. அடாவடி, நாணயமற்ற எதேச்சதிகாரம் முதலானவற்றால் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு. 1996ஆம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று முரசு கொட்டப்படுகிறது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நல்லதொரு ஆட்சியும் நடத்தப்படுகிறது.

என்றாலும், ஓட்டுக்கணக்குகளும் சிலபல சூழ்ச்சிகளுமாக திமுகவுக்கான அடுத்த வாய்ப்பு நல்கப்படவில்லை. நல்லதொரு ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கப்படாதது வரலாற்றுப் பிழையாகவே நான் கருதுகிறேன். இதில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் இருக்கக்கூடும். எனினும், என்னால் உறுதிபடக் கூற இயலும், அது வரலாற்றுப் பிழையென!!

2001ஆம் ஆண்டு மாற்றுக் கட்சியின் ஆட்சி மீண்டும் கொண்டு வரப்படுகிறது. பழி வாங்குதலும், வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமையும் இடம் பெற்று, ஒரு வெறுமையான ஆட்சி இடம் பிடிக்கிறது. அரசியல் கணக்குகளும், புதிய கட்சிகளின் தோற்றமுமாகச் சேர்ந்து கொண்டு, அதிமுக வெற்றி வாய்ப்பை இழக்கிறது. கணக்குகளின் வாயிலாகத்தான் திமுகவுக்கு, தனிப்பெரும்பான்மை இல்லாத ஆட்சி கிடைக்கிறது.

மத்திய ஆட்சியில் பங்கு மற்றும் மாநிலத்தில் ஆட்சி எனும் ஒருவிதமான மமதையோடு, 1970களில் சம்பாதித்துக் கொண்ட அதே வெறுப்புணர்வை தானாகத் தேடிக் கொண்டிருக்கிறது திமுக. தன் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து நழுவியது மாபெரும் பிழை!! கட்சியை ஒரு வணிக நிறுவனம் போல் மாற்றியது, அறமற்ற செயல்!! இவற்றால், நல்ல பல அதிகாரிகளைக் கொண்டு இழைத்துக் கட்டிய வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படும் அளவுக்கு வெறுப்புணர்வை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது திமுக!!

மாற்றுக் கட்சியானது, தவறிழைத்து வெறுப்புணர்வை வளர்த்துக் கொள்ளாத வரையிலும் திமுகவின் மேல் இருக்கும் வெறுப்புணர்வு குறைய வாய்ப்பு இல்லை. 1970களில் ஏற்பட்ட களங்கத்தை, எம்.ஜி.ஆர் என்னும் கவர்ச்சிமிகு தலைவர் இருக்கும் வரையிலும் துடைத்தெறிய இயலவில்லை.

அகவை அறுபதுகளில் காலடி எடுத்து வைத்திருக்கும், அதிமுக பொதுச்செயலாளர் அவர்களது பக்குவம் பலமடங்கு மெருகு கூடப் பெற்றிருக்கும் என்றே நம்பலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு நீங்க வெகுநாட்கள் பிடிக்கும். இச்சூழலில், விஜயகாந்த அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, திமுகவுக்கு மேலும் சிக்கலைக் கூட்டுகிறது.

இத்தேர்தலைப் பொறுத்த வரையில், தோராயமாக 60:40 எனும் விகிதாச்சாரத்தில் தமிழகம் பிளவுபட்டு இருக்கிறது. வெறுமனே 22 இடங்கள்தான் திமுக பெற்றிருக்கிறது என ஒருவர் எள்ளி நகையாடுவதும் சரியல்ல. ஒருவர் அப்படிச் செய்வாரேயாயின், அது அவரது முதிர்ச்சியின்மையையே காட்டுவதாகப் பொருள் கொள்ளலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆளுங்கட்சியின் அடாவடி, அநியாயங்களை எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு உண்டு என்பதை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சி, மாநிலந் தழுவிய போராட்டம் நடத்தியது உண்டா? அநியாயங்களை, அந்தந்த இடத்திலேயே முட்டுப் போட்டு நிறுத்த முயன்றது உண்டா?? கிடையாது என்பதுதானே மெய்??

மக்களுக்கு உகந்த ஆட்சியை நடத்தாத ஒரு கட்சிக்கு அங்கீகாரம் அளிப்பது முறையல்ல. சட்டம் ஒழுங்கைச் சரிவரப் பராமரிக்காத ஒரு ஆட்சி தொடர்வதில் நியாயமில்லை. எனவே மக்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது மட்டுமே இதில் இருக்கும் மகத்தான உண்மை.

ஆளுங்கட்சி ஆக்கப்பூர்வமான திட்டங்களைத் தீட்ட வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுக்காக்க வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள், தமக்குள்ள கடமைகளைத் தட்டிக்கழிக்காது செயல்பட வேண்டும்.

60% பேருக்கு, திமுகவை எதிர்ப்பதற்கான காரணங்கள் பலவாக இருந்திருக்கிறது. அதே போல, எஞ்சி இருக்கும் 40% பேருக்கு திமுகவை ஆதரிப்பதற்கான காரணம் ஒன்று கூடவா இருந்திருக்காது?? ஆகவே, வெற்றிக் களிப்புகள் நாகரிகத்துக்கு உட்படல் வேண்டும். தோல்விச் சூழல், காழ்ப்புணர்வுகளுக்கு வித்திடாமை வேண்டுதல் வேண்டும். நல்லதொரு சூழல் நாட்டில் தவழ்ந்திட, நாமனைவரும் வேற்றுமைகளைக் கடந்து, மற்றவர்தம் உணர்வை மதித்திடல் வேண்டும்!!

Healing quite honestly makes our life better!!

5/12/2011

திமுக!!

தமிழகத்தின் பதினான்காம் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார காலத்தில் நான் தாயகத்தில் இருந்தமை குறித்து எமக்கு மிக்க மகிழ்ச்சியே! முற்றிலும் மாறுபட்ட ஒரு தேர்தலை அவதானிக்க வேண்டி இருந்தது.

இளம்பிராயத்தில் இருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தோடு அணுக்கமாக இருந்து பழகியவன். அபிமானத்தோடு இருந்து வந்தவன். எட்ட இருந்தாலும் கூட, தேர்தல் காலங்களில் எல்லாம் மனம் ஊரில் விழுந்து கிடக்கும்.

பள்ளிப்பிராயத்தில் நான் இருந்த காலத்திலே, தமிழுக்கு நீர் பாய்ச்சியவர்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள். சுயமரியாதையை விதைத்தவர்கள் அவர்கள். சமகாலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் புரியவரும்.

1991களில் வலம் வந்த பரிதி இளம்வழுதியின் கதை நம்மில் பலருக்கு மறந்து போயிருக்கும். இரா.மோகன், K.M.தண்டபாணி, விடுதலை விரும்பி, C.T.தண்டபாணி இவர்களெல்லாம் ஒவ்வொரு மாணாக்கனுக்கும் விடிவெள்ளியாகக் காட்சியளித்த காலமது.

உள்ளூர் நிலைமை கருதி, எங்கள் ஊரின் வேட்பாளரான பா.குழந்தைவேலு அவர்களை ஆதரித்து, இரட்டை இலையில் வாக்களித்திருந்தேன். ஆனாலும், வாக்களிக்கும் அத்தருணத்தில் கை நடுங்கியது. காரணம், மானசிகமாய் நேசிக்கும் ஒரு கட்சிக்கு எதிராக வாக்களிக்கிறேனே என்கிற நெருடல்தான் காரணம்.

பாலபருவத்தின் போது, கையடக்க வானொலிகளைக் கேட்கத் துவங்குவோம். துவக்கத்தில், திமுக எழுபது இடங்களில் முன்னணி என்பார்கள். நேரம் செல்லச் செல்ல, காவிரி டெல்டா, சென்னை, திருச்சி நகரம் மற்றும் கோவை நகரம் என நான்கு பகுதிகளில் மட்டும் கொத்தாய் ஒரு இருபத்தி ஐந்து இடங்கள், மற்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில இடங்கள் என முப்பத்தி சொச்சத்தில் வந்து நிற்கும் வெற்றிப்பட்டியல்.

திமுக தொண்டன் அசந்து போவானா என்ன? படிப்பகங்கள், பாசறைகள், தெருவோரக் கடைகள் என எங்கும் தலைநிமிர்ந்து வியாபித்திருப்பான்.

”அண்ணன் இரகுமான்கான் சபைக்கு போறார் பாரு. இராமநாதன் போதும்டா நமக்கு. பரிதி இளம்வழுதி ஒத்தையாள், சபை களை கட்டும் பாரு” இப்படிப் பலவிதமாய் உச்சிமுகர்ந்து கொள்வார்கள். காரணம், அன்றைய காலம், கொள்கை பாராட்டும் காலமாய் இருந்ததுதான். ஆளும்கட்சி மாத்திரம் இளப்பமா என்ன? மாண்பு போற்றக்கூடிய வகையிலே அவர்களும் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் பாடலை, எம்.ஜி.ஆருக்கே பாடிக் காட்டும் பரிதி இளம்வழுதி. அம்மாவீரனின் ஆற்றலை, சபையிலேயே மனமுவந்து பாராட்டும் பண்ருட்டி இராமச்சந்திரன். அதுகண்டு, அவ்வீரனைக் கட்டியணைத்து முத்தமிடும் மாநில முதல்வர் எம்.ஜி.ஆர்.  எதிர்க்கட்சித் தலைவருடன் அமர்ந்து இருக்கும் நிதித்துறை அமைச்சர். இன்பத்தமிழ் கொண்டு மோதும் காளிமுத்துவும், துரைமுருகனும். பனைமரத்துப்பட்டி இராசாராமும், மதுரைப் பழனிவேல் இராசனும் பண்பு போற்றுவார்கள். அன்பழகனாரும், நெடுஞ்செழியனாரும் மாண்பு போற்றுவார்கள்.

இதெல்லாம் பழைய கதை, பழங்கஞ்சி!! இம்முறை ஊருக்குச் செல்கிறேன். கண்ட காட்சிகள், வெட்கக் கேடானவை. ஆங்காங்கே குறுநில மன்னர்கள் அரசாள்கிறார்கள். கொள்கை தரித்த தொண்டர்கள் நிரம்பியிருந்த பாசறைகள் அற்றுப் போய், கூச்சலிட்டுக் கோலோச்சும் உள்ளூர் அடாவடிகள்.

மாற்று அரசியலுக்கு வித்திடுகிறார் மு.க.ஸ்டாலின் என்பார் பலர். அவரது நடவடிக்கைகளும் அதற்குக் கட்டியம் கூறுவனவாகவே இருக்கின்றன. அவரது ஆட்சியை விரும்பினாலும் கூட, உள்ளூர் அடாவடிகளைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவை எல்லாம் ஒரு முடிவுக்கு வருவதற்காகவாவது, ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் எனப் பொது வெளியில் புலம்புகிறோம்.

நாட்டில் மாய்மாலங்கள் எப்போதுமில்லாத அளவுக்கு, கட்டுக்கடங்காது நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஊடகங்களின் அறமற்ற செயல்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு ஓங்கிப் பெருகியவண்ணம் இருக்கிறது.

எது எப்படியோ, நானும் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். யார் வெற்றி பெற்றாலும், நிலையான அரசைத் தரும்விதமாக அமைய வேண்டும். எமக்குப் பிடித்தமான மக்கள் தோழன் பொள்ளாச்சி ஜெயராமன் வென்று விடுவார். அதே போல, என்றும் தோற்காத பரிதி இளம்வழுதியும் ஏழாம் முறையாகச் சபைக்குள் புகவேண்டும் என்பதும் தனிப்பட்ட விருப்பம்.

கொசுறு:

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர், சிங்காநல்லூர் தொகுதியில், ஆலாமரத்தூர் வீரசின்னு (எ) சின்னசாமி, அதிமுக, வாக்கு வித்தியாசம் 14, 2006 சட்டமன்றத் தேர்தல்

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர், வில்லிவாக்கம் J.M.ஆரூண், த.மா.கா, வாக்கு வித்தியாசம் 1,47,747, 1996 சட்டமன்றத் தேர்தல்!

5/07/2011

பொட்டிதட்டியின் புரிதல்கள் - 1

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி முதலானவற்றை முறையாக ஆராய்ந்து நோயை அகற்றிடல் வேண்டும்.

மிக எளிதாக, அய்யன் திருவள்ளுவர் ஈரடிகளில் சொல்லி முடித்து விட்டார். ஆனால், இவற்றுக்குப் பின்னால், ஒவ்வொரு நாளும் பல பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் செலவிடப்படுகின்றன. வருவாயாக ஈட்டப்படுகின்றன. ஆராய்ச்சிக்காக முதலீடு செய்யப்படுகின்றன.

பெருமளவு ஒழுங்குக்கு கொண்டு வரப்பட்ட மருத்துவத் துறையானது இப்பிரபஞ்சத்தில் இருக்கிறது என்று சொன்னால், அது அமெரிக்காவில் இருக்கும் கட்டமைப்பு என்றே கூற முடியும். அந்த அளவுக்கு, சட்ட திட்டங்கள் மூலமாகவும், தகுந்த நெறிகளைக் கொண்டும் பராமரிக்கப்பட்டு வருகிறது. என்றாலும், ஆங்காங்கே வழுக்கள் இடம் பெறுவதும் தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக, மென்பொருள்க் கட்டுமான நிறுவனங்கள், குறிப்பாக இந்திய நிறுவனங்கள், பெருமளவில் கட்டுமானப் பராமரிப்பில் களமிறங்கிப் பல இலட்சம் கோடி ரூபாய்கள் இலாபம் ஈட்டி வருவது கண்கூடு.

ஒரு சாமன்யன்,இந்த மருத்துவக் கட்டமைப்பில் எப்படி இடம் கொள்கிறான்? இடங்கொளலுக்குப் பின்னணியில் என்னவெலாம் நடக்கிறது என்பதை மேலோட்டமாக பார்த்துச் செல்வதே இவ்விடுகையின் நோக்கமாகும்.

ஒரு சாமன்யன் இந்த மருத்துவக் கட்டமைப்பில் நான்குவிதமான வழிகளில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இடங்கொள்ள முடியும். அவை யாவன?

விருமாண்டி, வெங்காய வடாம் குழுமத்தில் பணிக்குச் சேருகிறார். ஊதியச் சிப்பத்தின்(package) உள்ளீட்டில், விருமாண்டியின் குடும்பத்தாருக்கான மருத்துவக் காப்பீட்டுச் சேவையும் வெங்காய வடாம் குழுமத்தாரால் வழங்கப்படுகிறது.

ஒருவேளை, விருமாண்டி அவர்கள் சுயதொழில்ச் செய்பவர் அல்லது பணிக்குச் செல்லாதவராயின், தானே முன்னின்று, மருத்துவக் காப்பீட்டினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாகாண அரசின் மெடிக்எய்டு அல்லது நடுவண் அரசின் மெடிகேர் ஆகிய திட்டங்களின் வாயிலாகவும், மருத்துவக் காப்பீட்டுச் சேவையைப் பெறமுடியும்.

சேவை தேவைப்படும் போது, தற்காலிக நுகர்வோராக இருந்து, மருத்துவச் சேவைகளைப் பணம் அளித்துப் பெற்றுக் கொள்வது.

இந்த நான்கு முறைகளின் வாயிலாக அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவக் கட்டமைப்பில் இடம் பெறும் போது, மெடிக் எய்டு மற்றும் மெடிகேர் ஆகிய அரசு சார்ந்த காப்பீட்டு வசதிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

மெடிக்எய்டு திட்டம் என்பது, மாகாண் அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. வருவாயில் மிகவும் பிந்தங்கிய கீழ்க்கண்ட பிரிவினர், அத்திட்டத்தின் வாயிலாகப் பலன் பெறலாம்.
  • கற்பிணிப் பெண்டிர் (சும்மா, கற்பிணிகள்னு போட முடியாது?!)
  • 19 ஆண்டுகளுக்கு குறைந்த வயதுடையோர்
  • 65 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதினர்
  • கண் பார்வையற்றோர்
  • மாற்றுத் திறனாளிகள்
  • செவிலியர் சேவை தேவைப்படுவோர்
மெடிகேர் திட்டம் என்பது, நடுவண் அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இதன் மூலமாக, கீழ்க்கண்ட பிரிவினர் பயன்பெறலாம்.
  • 65 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலான ஆண்டுகளை வயதாகக் கொண்டவர்கள்
  • சிறுநீரகக் கோளாறு கொண்டவர்கள் மற்றும் சிறுநீரகம் பழுதடைந்தவர்கள், வயது வரம்பு கிடையாது.
  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் பணி புரிய இயலாதவர்கள்
இப்படியான மருத்துவக் கட்டமைப்பில், முதல் அடுக்குச் சேவை மையங்களாக இடம் பெறுவன கீழ்க்கண்ட அமைப்புகளாகும்.
  • மருத்துவர், மருத்துவமனை, செவிலியர், செவிலியர் நிலையம், மருந்தாளுநர் முதலான சேவகர்கள்
  • மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் (Insurance Companies)
  • மருந்துப் ப்யனீட்டு மேலாண்மை நிறுவனங்கள் (Pharma Benefit Managers)
  • ஒருங்கிணைந்த மெடிகேர்-மெடிக்எய்டு சேவை மையங்கள் (Centers for Medicare & Medicaid Services (CMS)
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை, மிகவும் மேலெழுந்தவாரியான தகவல்களே ஆகும். ஒவ்வொன்றையும் இன்னும் ஆழமாக நோக்குகிற போது, கட்டமைப்பின் கூறுகள் கிளை, கிளையாகப் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இதிலே தொழிற் கட்டுறுத்தல் மேலாண்மை (business process management) எப்படி இடம் பெறுகிறது. இன்னபிற வியாபாரக் கூறுகள் என்னென்ன என்பதையெல்லாம் அடுத்தடுத்த இடுகைகளிலே காணலாம்.

வேண்டுகோள்: Memphis, TN, டென்னசி மாகாணம், மெம்ஃபிசு நகரில் வசிப்பவர் எவரேனும் இருப்பின் தயைசெய்து தொடர்பு கொள்ளவும்.

5/05/2011

ஒஞ்சியுண்ட்டு வந்தேன்!

இந்தவாட்டி ஊருக்குப் போய்ட்டு வந்ததுல, கொஞ்சத்தை உள்ள புடிச்சுப் போட்டுட்டு வந்தேன். எங்க ஊட்டுக்குப் பக்கத்துல ஒரு கண்ணால மண்டபம் இருக்குங்க. அங்க ஒரு படுகக் குடும்பம், அந்த மண்டபத்துக்குப் பண்ணாடி வேலை செஞ்சிட்டு, அதுக்குள்ளயே குடி இருக்காங்க.

அவங்க ஊட்டுப் பொண்ணு ஒன்னு, என்ற மகளோட வெளையாட வந்துச்சு. வந்ததும், நான் ஒஞ்சியுண்ட்டு வந்தேன்..., நான் ஒஞ்சியுண்ட்டு வந்தேன்னு மழலைத்தனமா சொல்லிட்டு இருந்ததுங்க. ஊட்ல ஒறம்பரைக எல்லாம் இருக்கும் போதே போயி, ஊட்டுக்காரிகிட்ட அந்தப் பொண்ணு என்னவோ சொல்லுதே அது என்ன, என்னன்னு மறுக்கா, மறுக்கா கேட்டுட்டே இருந்தேன்.

என்னோட தொல்லை தாங்காத எங்க மாமா ஒருத்தரு, “மாப்பிள்ளை வாங்க சித்த”ன்னு சொல்லி அந்தப் பக்கம் கூட்டிட்டுப் போனாரு. “ஏன் மாப்பிளை, பொண்டு புள்ளைக இருக்குற எடத்துல வுடாம நச்சரீங்களே?”.

“இல்லீங்க மாமா, அந்த ஒஞ்சியுண்ட்டு வர்றது....”

“இன்னும் நீங்க அத வுடலையா? அந்தக் குழந்தை, தாய்ப்பால் உண்ட்டு வந்ததைத்தான் சொல்லுதுங்க”

நெம்ப சங்கட்டமாப் போச்சுது. வண்டியக் கிளப்பிட்டு தெக்க தோட்டம் போனவன், ஒறம்பரைக எல்லாம் ஊட்டுல இருந்து கிளம்பினவுட்டுத்தானுங்க வூட்டுக்கே வந்தேன். வந்ததும் நடந்தது அர்ச்சனை, ஏகத்துக்குமு!! அவ்வ்வ்.....

=========================

காண்ட்ரேக்டருங்றாங்க... ஆள் ஏஜெண்ட்டுங்கராங்க... இப்ப எல்லாம் எந்த ஊர்லயும், இந்திக்காரவங்கதான் தோட்டங்காடுகளுக்கு வேலை பார்க்க வர்றாங்க. அவங்களைக் கூட்டியாறதுக்கு ஒருத்தன். ஏஜெண்ட்டுன்னு சொல்லி அவனுக்கு நெம்ப மரியாதை.

அப்படித்தானுங்க, நானும் பெரியபாப்பநூத்துல இருக்குற எங்க பெரியம்மாவிங்க தோட்டத்துல உக்காண்ட்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்தாரு. அதைப் பார்த்த எங்க நங்கை, எங்க பெரியம்மாகிட்டப் போயிச் சொன்னாங்க, “ஏனுங், அந்த ஏஜெண்ட் வந்துருக்காருங்க!”, அப்படின்னு.

ஊட்டுக்குள்ள அரிசி அரிச்சிட்டு இருந்த எங்க பெரியம்மா சொல்லுச்சு, “யாரந்த கொத்துக்காரனா? இருக்கச் சொல்லு.. அவனுக்கு ரெண்டு கொத்து புடிச்சிட்டுத்தான் தரோணும் இந்தவாட்டி!”, அப்படின்னுச்சு. இஃகிஃகி, உங்களுக்கு எதும் புரியுதாங்க? இதானுங்க நம்பூர்ப் பழமைங்றது!!

கொத்துக்காரன்னு சொன்னா, கூலி வேலைக்கு ஆள் கூட்டியாறவனுங்க. கொத்து அப்படின்னு சொன்னா, கூட்டம், திரள், கும்பல்னு மொத்தமா இருக்குறதை சொல்றதுங்க. பூங்கொத்துன்னு சொல்றம் இல்லீங்களா? அது போல!

அப்படி, மொத்தமா ஆள் கூட்டியாறவன் கொத்துக்காரன். பத்து ஆள் கூட்டியாந்தா, ஒரு ஆள் கூலி அவனுக்கு. அந்த கூலியச் சொல்றது, கொத்து. அப்படி, அவனுக்கு குடுக்க வேண்டிய பணத்துல, ரெண்டு கொத்துப் பணத்தைத்தான் தரக்கூடாதுன்னு சொல்லிச் சொல்றாங்க எங்க பெரியம்மா. அவன் இனி என்ன மொள்ளமாரித்தனம் செய்தானோ? எங்க பெரியம்மா என்ன திருகுத்தனம் செய்தோ தெரீலீங்களே??

5/03/2011

இராதிகா சித்சபேசன் அவர்கட்கு வாழ்த்துகள்!!

நேற்று போல இருக்கிறது. ஆண்டுகள் பல கழிந்து விட்டன. யார்க் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலம். ஈழத்து நண்பர்கள் மோகன் இராமகிருட்டிணன், மொகேந்திரன், சதீசு சிங்கமாபாணர், பராபரன் ஆகியோருடன் எம்மையும் இணைத்துக் கொண்டிருந்த காலமது.

தமிழ் மாணவர்களுக்கு, மென்பொருள் நிரல்படுத்துதலைக் கற்றுக் கொடுப்பதுதான் எனக்கு வாய்த்த பணி. பிஞ்ச்/கீல் சந்திப்பில் கூடுதல் பள்ளியை நிறுவுவதில் மொகேந்திரன் அவர்கள் முக்கியப்பங்கு வகித்தார். அப்பள்ளிக்கு ஊக்கமும், உணர்வும் அளித்தவர் சித்சபேசன் அவர்கள்.

செலவு தொகையாக, ஒரு வகுப்புக்கு இவ்வளவு என எங்களுக்குப் பணமும் தருவார். பல்கலைக்கழக மாணவனான எனக்கு அது பெரும் உதவியாக இருந்தது. அக்கால கட்டத்தில் நிறையத் தமிழ் இளஞ்சிறார்கள் பள்ளிக்குப் பயில வருவார்கள். ஆசிரியராகப் பணிபுரிந்த நாங்கள் எல்லாம், “இவர்கள் எல்லாம் கனடாவை ஆளப் போகிறவர்கள் என பெருமிதம் கொள்வோம்”.. அம்மாணவர்களுள், இராதிகா சித்சபேசனும் ஒருவர்.

ஐந்து வயதில் புலம்பெயர்ந்து வந்திருந்தாலும், தெளிதமிழில் பேச வல்லவர். கனடியப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கும், அவரைத் தொடர்ந்து அரசியலில் மிளிரப் போகும் தமிழ் உறவுகளுக்கும், எமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!!


பேரவை விழாக் காண வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

குடித்த பால் ஒழுகிட
அம்மாவெனத் தேன் சிந்திய
வாயில் ஒலித்தது தமிழன்றோ?!
அக்குழந்தையின் கிளிப்பேச்சு
தமிழேயன்றோ??

வானத்து வெண்ணிலவு
நீல்கடலின் கதிரவன்
பொற்றாமரைக்குளத்து ஆம்பல்
அவையனைத்தும் தருமிகு வியப்பினை
தேனொக்கப் பகர்ந்ததுவும் தமிழன்றோ??

அம்மா, அப்பா, அண்ணா, அக்காளென
உறவு பாராட்டிக் கொஞ்சியதும்
பாவிசைத்த பாவலனின் நாவிலும்
இறைவனைத் தொழுத கணம்
இன்புற்ற கான நேரமென எதிலும் எங்கும்
தெளிதேனாய் இனித்ததுவும் தமிழன்றோ?!!

ஞாலத்துத் தமிழரெலாம் கண் கொண்டு பார்த்திடுவார்; பாரெங்கும் பரவியுள பாசமிகு தம்பிமார் நோக்கிடுவார்; அவனியெங்கும் அருந்தமிழின் நயம் போற்றும் அன்னைத் தமிழ் மக்காள் வாழ்த்திடுவார்; நனிச்சிறப்பின் கட்டியமாம் எங்கள் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழாவைத்தான்! நனிச்சிறப்பின் கட்டியமாம் எங்கள் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழாவைத்தான்!!

வட அமெரிக்க தமிழர்களையெலாம் ஒன்று கூட்டி, தமிழ்ப் பண்பாடு போற்றுகிற வகையிலே, வேகமாய் நகரும் இயந்திர வாழ்விலே இருந்து சற்று விலகி, முந்தையையும் தனதையும் இனம் கண்டு, அடையாளத்தைப் பேணிப் பாதுகாக்கிற வகையிலே, வாழ்வியற் கூறுகளனைத்தையும் அந்த மூன்று நாட்களுக்குள்ளாக அடக்கி சமச்சீரோடு வழங்கப்படுவதுதான், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா1

வழமை போல இந்த ஆண்டும், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் நூற்றாண்டு விழாவாக, வட அமெரிக்கத் தமிழரின் வாழ்வில் பெருவொளியோடு, தென்கரோலைனா மாகாணம் இச்சார்ல்சுடன் எனும் எழில்மிகு பெருநகரில் மிளிர இருக்கிறது. எந்தவொரு விழாவுக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு, 2011ம் ஆண்டு தமிழ் விழாவுக்கு இருக்கிறது என்று சொன்னால், அது மிகையாகாது.

ஏன் அப்படிச் சொல்கிறோம்? தமிழைத் தொழுகிற தமிழர்கள் வாழும் ஊர் இச்சார்ல்சுடன். தமிழை உயிர் மூச்சாகக் கொண்டு தொண்டுள்ளம் போற்றும் மக்கள் நடத்துகிற சங்கம், பனைநிலத் தமிழ்ச் சங்கம். தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றுகிற பெண்டிர் சிறப்பொக்கும் விழாதான், பெருமழைப் புலவரின் நூற்றாண்டு விழா!!

மேலப்பெருமழை எனும் ஊரைச் சார்ந்த, தமிழ் ஆராய்ச்சியாளர். சங்கத் தமிழ் நூல்கள் பலவற்றுக்கு உரை எழுதி தமிழின் பெருமையை நிலைநாட்டுவதிலே பெரும்பங்கு ஆற்றியவர்தான் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள்.

தமிழர்களே, வட அமெரிக்காவின் தமிழுக்கும் தமிழனுக்குமான கட்டமைப்பை உருவாக்கிப் பேணுவது தமிழனின் கடமை. வாருங்கள், ஒன்று கூடுவோம். விழாக் காண்போம். வாழ்வைச் சிறப்புறச் செய்வோம்.

இளைஞர்கள், சிறுவர்கள், பெற்றோர், மாணவர்கள், பெரியவர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், முனைவோர் எனப் பலரையும் சிறப்பிக்கும் வண்ணம், அவர்கள் அனைவரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ்விழா. இவ்வாண்டும் அவ்வாறே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

விழா நடைபெறப் போகுமிடமோ, ஒரு எழிலார்ந்த நகரம். கடற்கரை நகரம். நல்லதொரு மீனகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி. அதையொட்டி, தமிழ்ச்சான்றோர் பலர் வந்து சிறப்பிக்க உள்ளார்கள். இளைய தளபதி விஜய், குணச்சித்திர நடிகர் நாசர், கவிஞர் கலைமாமணி நா.முத்துக்குமார், பாட்கர்கள் A.V.இரமணன், உமா இரமணன், பிரன்னா, கானா பழனி, திருப்புவனம் ஆத்மநாதன், கோடைமழை வித்யா, திண்டுக்கல் சக்தி நாட்டியக் குழுவினர், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் புதுகை பூபாளம் என எண்ணற்றோர் சிறப்புமிகு நிகழ்ச்சிகளை உங்களுக்கு வழங்க உள்ளனர்.

காலம் தாழ்த்தாது, உடனே விழா நிகழ்ச்சிகளைக் காண முன்பதிவு செய்திடுவீர். www.fetna.org


ஜூலை 1-4, 2011, திருவள்ளுவராண்டு 2042
கில்யார்டு அரங்கம், இச்சார்ல்சுடன், தென் கரோலினா.

5/01/2011

நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை!!

கடந்த நான்கு ஆண்டுகளாய், வாரா வாரமும் வந்து செல்லும் இடம். நான்காண்டுகளாக இடம் பெற்று வரும் ஒவ்வொரு வளர்ச்சியின் படியைக் கடந்தே வந்து செல்கிறேன். நான்கு பிரம்மாண்டாமான ஓடுபாதைகளைக் கொண்டது. ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட நான்கரைக் கோடி மக்கள் கால் பதிக்கும் விமான நிலையமாக உருவெடுத்து நிற்பதுதான், சார்லட் டக்ளசுபன்னாட்டு விமான நிலையம்.

1935ம் ஆண்டு வாக்கில் நகர விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு, 1954ம் ஆண்டு பயணியருக்கான கூடுதல் வசதிகளுடன், சார்லட் நகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட மாநகரத் தலைவர் பென் எல்பர்ட் டக்ளசு என்பாரின் நினைவாக, அவரது பெயருடன் மிளிர்ந்து நின்றது சார்லட் டக்ளசு விமான நிலையம்.

மாநகரமும், தென்மாகாணங்களும் இயந்திர யுகத்தில் பெருவளர்ச்சி கண்டது. அவ்வளர்ச்சிக்கு ஈடு கொடுத்துப் பெரும்பங்கு வகித்தது சார்லட் டக்ளசு விமான நிலையம். 1978ம் ஆண்டு வாக்கில் இருந்து பன்னாட்டு முனையமாக, மற்ற நகரத்து விமானங்கள் எல்லாம் வந்து போகுமிடமாக உருவெடுத்தது CLT.

1990ம் ஆண்டுக்குப் பின்னர், பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் U.S.ஏர்வேசு முதலான நிறுவனங்கள் பெருமளவில் விமான நிலையத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இதன் பயனாக, விமான ஓடுபாதைகள் கூடிக் கொண்டே செல்கின்றன.

2012ஆம் ஆண்டில் சார்லட் டக்ளசு விமான நிலையமானது, அயல்நாட்டு விமானப் பயணிகளுக்கென பிரத்தியேக முனையத்தை நிறுவ இருக்கிறது. நிச்சயமாக, இந்திய துணைக்கண்டத்தையும் அரசி நகராம சார்லட் நகரத்தையும் இணைக்கும் விதமாக, விமானங்கள் இயங்கத் துவங்கும் என்பதே இந்தியர்களின் கனவாக இருக்கிறது. குறிப்பாக, Jet Airways மற்றும் ஏற்கனவே சார்லட் நகரில் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கும் Lufthansa முதலானவை நம் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யக்கூடும் என நம்பப்படுகிறது.

இத்தகைய விமான நிலையத்திற்குத்தான் நாமும் வந்து சென்று கொண்டிருக்கிறோம் இந்நான்காண்டுகளாக. பிரிவு ’C’ முனைய வாயிலை அண்மித்து இருப்பது Starbucks குளம்பியகம். புறப்பாட்டு நாளான ஞாயிறு அல்லது திங்கள் மற்றும் வந்து சேரும் நாளான வியாழக் கிழமைகளில் தவறாது கடைக்குச் செல்வது நம் வழக்கம்.

கடையின் உரிமையாளர் பீற்றர் சேகல், அக்கடையில் பணிபுரியும் சாரா, எமிலி, பெத், ஏஞ்சலா உள்ளிட்ட யாவருக்கும் நாம் வெகு பரிச்சயம். நம் தலையைக் கண்டாலே போது, நாம் சொல்லுமுன்னரே நமக்கு விருப்பமான Grande Extra-hot White Mocha பானத்தை தயாரிக்க முற்படும் அளவுக்கு இருக்கிறது எங்களுள்ளான பரிச்சயம். வழமைபோல அளவளாவினோம். மகளது படத்தைக் காண்பித்ததும், வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள்.

மெம்ஃபிசு நகருக்குச் செல்வதாகத் தெரிவித்தேன். நகரைப் பற்றிய தகவலைப் பகர்ந்தார்கள். பின்னர் வலதுபுறமாகத் திரும்பினேன். கவ்வுகழலி(shoes) மிளிர் நிலையம் நடத்தி வரும் 'யகான்' நம்மைப் பார்த்துச் சிரித்தார்.

வழமையான உரையாடலுக்குப் பின்னர், கைக்கடியாரத்தில் நேரத்தை அவதானித்தேன். இன்னும் நேரமிருக்கிறதை உணர்ந்து, மிளிர் நிலையத்தில் உயரப் பெற்றிருக்கும் இருக்கையில் ஏறி அமர்ந்து, என் மூடுகழலிகளுக்கு மிளிர்புச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். வியப்புடன் நோக்கினார்.
 யகானின் கவ்வுகழலி மிளிர் நிலையம். எப்போதும் ஆட்கள் நிரம்பி இருப்பர். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் உபரியாகக் கிடக்கிறது.

 மிளிர்ப்பு வேலைகள் துவங்கு முன்னரான எமது கவ்வுகழலியின் நிலை.

 சிறிதளவு நீரைத் தெளித்த பின், தூரிகையைத் துளாவுகிறார் யகான்.

கவ்வுகழலிகள் துணியால் துடைக்கப்படுகிறது.

 தூரிகையால் கவ்வுகழலிகள் தூய்மைப்படுத்தப்படுகிறது..

 மிளிர்ப்புக் களிம்பு கொண்டு, கவ்வுகழலிகள் பூசப்படுகின்றன.

 கையுறையிட்ட கைகள் கழல்கள் இரண்டையும் தொக்கடம்(massage) இடுகின்றன. கால்களுக்குள் குருதிப் பாய்ச்சல் வேகமெடுக்க, எடுக்கச் சுகமான உணர்வுகளும் பெருக்கெடுக்கின்றன.

 மிளிர்ப்புக் கோல் கொண்டு கவ்வுகழலிகளுக்கு மிளிர்ப்பு ஏற்றுகிறார் யகான்.

 மிளிர்ப்புக் குறைச்சலாக இருக்குமிடங்களில், எரிகோல் கொண்டு வர்ணத்தை  உருக்கிப் பாயவிடும் காட்சி.

 எரிகோல் கொண்டு, இடுக்களிலெல்லாம் வர்ணம் ஊடுருவச் செய்கிறார் யகான்.
 கருந்துணியால் தோய்த்துத் தோய்த்து மிளிர்ப்பு ஏற்றுகிறார். கூடவே தொக்கடச் சுகத்தையும் நமக்குள் ஏற்றுகிறார்.

 மீண்டும் பூச்சுக்கோல் கொண்டு மெருகேற்றுகிறார்.

 வர்ணம் நாலாபுறமும் செல்லும் இலக்கோடு, துணியால் தோய்க்கப்படுகிறது கழலிகள்.

 இறுதிக்கட்ட வேலைகள். 
மிளிர்ப்பு!!

எல்லாம் முடிந்து, உரையாடத் துவங்குகிறோம் நாம்.

“எவ்வளவுங்க யகான்?”

“அஞ்சு வெள்ளி!”

“ஆகா; இவ்வளவு அருமையான வேலைக்கு அஞ்சே அஞ்சுதானா? இந்தாங்க ஏழு வெள்ளி!!”

”ஏ, உங்ககிட்டப் பணமா? வேண்டவே வேண்டாம்!!”

“ஆமா; தனிப்பட்ட கேள்வி ஒன்னு!”

“சொல்லுங்க!”

“ஒரு நாளைக்கு எவ்வளவு தேறும்?”

“எல்லாம் போக, நானூறுல இருந்து ஐநூறு!!”

கிர்ர்ர்ர்ர்..... நானூறு ஒரு நாளைக்கு. மாதத்துக்கு 12000; ஆண்டுக்கு 144, 000 வெள்ளிகள்.  நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை! வாழ்க உழைப்பாளிகள்!!