12/11/2010

மாபெரும் பதிவர் சங்கமம்! ஈரோட்டுத் திருவிழா!!

விழைதல் என்றால் விருப்பம். அப்படியாக, விருப்பப்பட்டு நடாத்தும் எந்தவொரு நிகழ்வும் விழாவாக நம்மிடையே உருவெடுக்கிறது. மகிழ்ச்சி, நல்லுறவு, நெறிமுறை, கொண்டாட்டம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் விழா என்பது.

மகிழ்ச்சி மற்றும் இன்பம் மட்டுமே நோக்கமாய் இருப்பின், அது ஒரு களிக்கை. வேடிக்கை மற்றும் உவகை மட்டுமே நோக்காய் இருப்பின் அது ஒரு கேளிக்கை. தன்னைச் சார்ந்தவனோடு நல்லுறவு பேணி, சமூக ஓட்டத்தின்பால் கவனத்தைச் செலுத்தி விழாவண்ணம் காப்பது விழா என்பர் அறிஞர் மக்கள்.

அவ்வகையிலே, ஈரோட்டு நண்பர்கள் இரண்டாம் ஆண்டாக, பெரியதொரு விழாவாக, 2010 பதிவர் சங்கமம் எனும் பதிவர் திருவிழாவை எதிர்வரும் டிசம்பர் இருபத்தி ஆறாம் நாள் சீரோடும், கொங்கு மண்ணுக்கே உரிய சிறப்போடும் நடத்தத் திட்டமிட்டு, சிரமேற்கொண்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெரு மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

காலத்தின் தேவை இந்த விழா! பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றெல்லாம், மாற்றங்கள் பெரு வேகத்தில் நடந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், மாற்றத்தைப் புரிந்து தன்னைத் தயார் செய்து கொள்ளக்கூடிய கால அவகாசம் வாய்க்காத, இக்கால கட்டத்தின் மாபெரும் தேவை இத்தகைய விழாக்கள்!

தமிழகத்தை, மடியா விழாவின் யாணர் நன்னாடு எனப் புறநானூறு கூறுகிறது. மடியா என்றால் ஆண்டு தோறும் எனவும் பொருள் கொள்ளலாம். அல்லது, மடியாத என்றும் பொருள் கொள்ளலாம். சிறப்பை இழக்காத விழாக்களால் புதுமை பெற்றுச் சிறந்த நன்னாடு தமிழகம்!

சிலப்பதிகாரத்திலே, இந்திர விழாவைப் பற்றிச் சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். மக்களொடு மக்களாக, மக்கட்பிணைப்பை வலியுறுத்தி, நல்லுறவைப் பறைசாற்றி, சமத்துவத்தை சீர்தூக்கிப் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி நடத்தியதுதான் இந்திரவிழா.

ஆனால், இன்றைக்கு நடக்கும் விழாக்களின் மையக்கருத்துதான் என்ன? பெரும்பாலான விழாக்களின் உள்நோக்கம் ஒன்றாகவும், வெளிநோக்கு ஒன்றாகவும்தானே இருக்கிறது?? தனிமனித விழாக்கள் அவை என்பதுதானே உண்மை?? இப்படியான ஒரு காலகட்டத்தில், பொது நோக்கோடு நடாத்தப்படுகிற விழாக்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

இன்றைக்கு, அவனியெங்கும் அன்பால் பிணைக்கப்பட்ட தமிழர்களைக் காண்கிறோம். இணையப் பெருவெளியில் எவ்வளவோ களங்கமிகு இடர்கள் நடந்து கொண்டிருந்தாலும், அதை எல்லாம் கடந்து நட்புக் கயிற்றால் பிணைக்கப்பட்டோர் ஏராளம். ஒருவருக்கொருவர் உதவிகள் பல செய்து கொண்டும், தத்தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொண்டும், தத்தம் மரபுசார் விழுமியங்களைப் பேணி வருவது கண்கூடு. இவர்களின் பார்வை, ஈரோட்டுத் திருவிழாவின்பால் விழுந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு, தமிழகத்தின் மூலை முடக்குகளில் எல்லாம் பதிவர்களும் வாசகர்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள் என்பதும் மகிழ்சிக்குரிய ஒன்றாகும். புதியனவற்றை புரிந்து ஏற்றுக்கொண்டு, அதன் சாதக அம்சங்களை தனதாக்கிக் கொள்தல் மட்டுமே ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க முடியும்.

மேலும்,ஆண்டுதோறும் ஈரோடு மாநகரில் திருவிழா என்பதை மாற்றி, தமிழகத்தின் இன்னபிற ஊர்களில், ஆண்டுக்கொரு ஊராகத் தெரிவு செய்து நடாத்துதலே தமிழும் தமிழகமும் சார்ந்த வலையுலகப் பயனாளிகளுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.

ஆண்டுதோறும் வேறு வேறு ஊர்கள் எனும் போது, பயனாளிகளுக்கு அந்த ஊரைப் பற்றிய தகவல்கள், வரலாற்றுச் சிறப்புகள், மரபு, கலை, இலக்கியம், கலாசாரம், பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். அதுமட்டுமல்லாது, உள்ளூர்ப் பதிவர்களின் தலைமைப் பண்புக்கு சிறப்புக் கூட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமையக் கூடும்.

சென்ற ஆண்டு, நான் கலந்து கொண்டதில் அறிந்து கொண்ட தகவல்கள் மற்றும் பெற்ற பேறினை எம் வாழ்நாள் முழுமைக்கும் மறக்க இயலாது. அப்படிச் சிறப்பாக அமையப் பெற்றது அந்நிகழ்ச்சி. அதைப் போலவே, இவ்வாண்டும் சிறப்பாக அமைய எம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறேன்.

வலைஞர்களே, ஈரோடு பதிவர் திருவிழாவிற்குச் சென்றிடுவீர்! கட்டமைப்பு வலுவடையத் துணை புரிந்திடுவீர்!!



13 comments:

மதுரை சரவணன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்...

நாகா said...

அண்ணே இந்த வருஷம் நீங்க வரலியா?

பழமைபேசி said...

நாகா,

அதை நினைச்சாத்தாங்க வருத்தமா இருக்கு... சென்ற ஆண்டு நிகழ்வை நினைச்சு ஆறுதலடைஞ்சுக்க வேண்டியதுதான்...

வருண் said...

நீங்க ஈரோட்டுல இருந்து வந்தவங்களா? பதிவர் சங்கமம நல்லமுறை நடக்க வாழ்த்துக்கள்!

a said...

விழா சிறப்புற தங்கள்(!!) சார்பாக நானும் வாழ்த்துகிறேன்....

Philosophy Prabhakaran said...

பதிவர் சந்திப்பிற்காக லோகொவெல்லாம் போட்டு கலக்குறீங்க வாழ்த்துக்கள்...

தல தளபதி said...

வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

26ம் தேதி முயற்சி செய்கிறேன்!

cheena (சீனா) said...

அன்பின் பழமை பேசி - விழா சிறப்புற நடக்க நல்வாழ்த்துகள் - நாங்கள் கலந்து கொள்கிறோம்.

sathishsangkavi.blogspot.com said...

நண்பர்கள் அனைவரையும் பழக வருக வருக என வரவேற்கிறேன்....

Unknown said...

//ஈரோடு பதிவர் திருவிழாவிற்குச் சென்றிடுவீர்! கட்டமைப்பு வலுவடையத் துணை புரிந்திடுவீர்!!//

அனைத்துப் பதிவர்களையும் வருக வருக என்று ஈரோடு 2010 பதிவர் சங்கமத்திற்கு ஈரோடு குழுமம் சார்பாக வரவேற்கிறோம்.
நன்றிங்கண்ணா

வில்லவன் கோதை said...

விழா சிறப்புற நிகழ வேர்களின் வாழ்த்துக்கள்.
பாண்டியன்ஜி verhal.blogspot.com
சென்னையிலிருந்து..

ஈரோடு கதிர் said...

மாப்பு
இந்த வருடம் நீங்க இல்லாததுதான் குறை

நாகா வருவது குறித்து மகிழ்ச்சி!