வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த அயலகப் பயணிகளோ, வந்த களைப்பினூடாக, இந்த விமானத்தை கிளப்பித் தொலைத்தாலென்ன எனும் பாங்கில் நித்திரையின் பிடியில் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.
முதிர்கன்னியவள் முறையான அறிவிப்பை வெளியிடுகிறாள், “Flight US789 is ready to board; we ask those who need extra time and travelling with small children are to board at this time”.
அடுத்ததாக, முதல்வகுப்புப் பயணிகளும் அதிசாரிப் பயணிகளும்(frequent travelers) அழைக்கப்பட, ஒவ்வொருவராக உள்ளே சென்று அமர்கிறார்கள். இப்படியான பயணிகளை இறுதியில் அல்லவா அழைக்கப்பட வேண்டும்? சிறப்புச் சலுகை அளிக்கிறேன் பேர்வழி என்று, முன்னதாகவே அழைத்து அந்த குறுகிய இட்த்தில் போட்டு அடைப்பது என்பது சிறப்புச் சலுகையாகுமா?? அய்யகோ!!
மீதம் இருந்த பயணிகள் எல்லாம் எப்படி ஏறினார்கள், எவ்வளவு விரைவாக ஏறினார்கள் என்றெல்லாம் அவதானித்து இருக்கவில்லை நாம். விமானத்தின் கதவுகள் இழுத்துச் சாத்தப்பட்டன. விமான பணிப் பெண்களாக இருந்த அந்த இரு மூதாட்டிகளும் தத்தம் கடமைகளில் கருத்தாய் இருந்து, இங்குமங்குமாய் ஓடித் திரிந்தனர். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகள் எல்லாம், தத்தம் நிறுவனங்களுக்கு குறுந்தகவல்களை தடதடவென அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
மூதாட்டிகளில் ஒருத்தி, விமான ஓட்டிகளின் கருவறையின் கதவை இழுத்திச் சாத்திவிட்டுத் தீர்மானமாய்ச் சொன்னாள், “விமானத்தின் எடையானது சமச்சீராக இல்லை. முதல் வகுப்பில் அமர்ந்திருக்கும் யாராவது ஒருவர், விமானத்தின் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தாலொழிய விமானம் புறப்பட வாய்ப்பில்லை; தன்னார்வலர் யாரேனும் உதவலாமே?” என்றாள்.
முதல்வகுப்புச் சீமான்களும் சீமாட்டிகளும் தத்தம் வேலைகளில் மூழ்கி இருப்பதைப் போல பாசாங்கு செய்தார்கள். யாருக்கும் அறிவிப்பானது காதில் விழுந்தது போலத் தெரியவில்லை. சிறிது ஏமாற்றத்துடன், குரலைச் சற்று உயர்த்தியபடி மீண்டும் அலறலானாள் விமான வரவேற்பு மூதாட்டி.
அரைகுறை நித்திரையில் தலையை ஊசலாட விட்டுக்கொண்டிருந்த அவன், திடீரென வெகுண்டவனாய், “என்ன? என்ன??” என வினவினான். மூதாட்டி விபரத்தைச் சொல்லவும், சற்றும் தாமதியாது விமானத்தின் கடைசி இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். மீதமுள்ள முதல்வகுப்புப் பயணிகளோ, “கேனப்பய... கேனப்பய... முதல்வகுப்பு விருந்தோம்பலை வுட்டுட்டு கடைசி இருக்கைக்குப் போறாம் பாரு கேனயன்” என நினைத்து எக்காளமாய் உள்ளூரச் சிரித்தார்கள்.
விமான ஓட்டியின் சமிக்கைக்குப் பிறகு, மூதாட்டியானவள் ஆயத்த அறிவிப்புகளைச் செயல்முறையோடு ஒப்புவித்தாள். எப்படி இருக்கைப் பட்டையை அணிய வேண்டும், தற்காப்புச் செயல்கள் எப்படியாக அமைய வேண்டும் என்றெல்லாம் செய்து காண்பித்தாள். நூற்றில் ஒருவராவது இதைக் கவனமாக்க் கேட்கிறார்களா என்பது வினவுதலுக்கு உரியதே.
விமானம் சரியான நேரத்திற்குக் கிளம்பி, வழமைக்கு மாறாகச் சற்று முன்கூட்டியே சென்று சேர வேண்டிய இடமான, அரசி நகரமாம் ஃசார்லட் நகரின் விமான நிலைய ஓடுபாதையில் இறங்கிச் சீறி, தவழ்ந்து, பின் நிலைக்கு வந்து சேர்ந்து நின்றது. நின்றதுதான் தாமதம், அனைவரும் ஒருங்கே எழுந்து நின்று, தடதடவென பெட்டிகள் இருக்கும் ஒருங்கின் கதவுகளைத் திறக்கலானார்கள். கடைசி இருக்கையில் இருக்கும் அந்த கேனயன் மட்டும் இன்னும் நித்திரையில்.
முதல்வகுப்புப் பயணிகள் த்த்தம் மேலங்கியை விமானப் பணிப் பெண்ணிடம் கேட்டு வாங்கினார்கள். மற்றவர்கள், த்த்தம் அலைபேசிகளில் வினையாற்றத் துவங்கினார்கள். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகளோ, அனைவருக்கும் முன்பாக வெளியே சென்றுவிடலாம் எனும்பெருமித்ம்.
முன்கதவின் பார்வையாடியின் வழியாக, மின்பாலத்தை விமானத்தை ஒட்டி நிறுத்த வழிவகை செய்து கொண்டிருந்தாள் விமானப் பணிப் பெண். சரியாக்க் கொண்டு நிறுத்திய பின், முதல்வகுப்புப் பயணிகளை ஏளனமாய்ப் பார்த்தாள் அவள். பார்த்துவிட்டு அறிவிப்புச் செய்யலானாள்,
“I kindly request everyone to be seated in their seat… we got to let go the Gentleman first who helped us to get here… I request the Gentleman to come forward!!”, முதல்வகுப்பில் இருள் சூழ்ந்து தலைகள் கவிழ்ந்தன.
கடைசி இருக்கையில் இருந்தவனுக்கோ, ஒருவிதமான கூச்சமும் தயக்கமும். இருந்தாலும் எழுந்து, மெதுவாக முன்னேறத் துவங்கினான். அவன் முன்னேறி வருவதைக் கண்ட அந்த மூதாட்டி அவனைப் பார்த்து நன்றியுணர்வோடு முகைத்தாள். பதிலுக்கு அவனும் நன்றி சொல்லிவிட்டு நகர முற்பட்டான். அவளோ, அவனை அன்பாக ஆரத் (hug) தழுவினாள்.
வீட்டாரைத் தாயகத்தில் விட்டுப் பிரிந்து வந்தவனுக்கு, அந்தத் தழுவலானது மாமருந்தாக இருந்தது; அதில் உங்களுக்கும் பெருமைதானே? உங்கள் சட்டையின் கழுத்துப் பட்டைகளையும் கிளப்பிவிட்டுக் கொள்ளுங்கள்; பெருமை அடைந்தவன் ஒரு தமிழ்ப் பதிவன் என்ற வகையில்!