12/31/2010

அமெரிக்க இறுதிக் கணங்கள்: 2010ல் செய்ய வேண்டியவை

அமெரிக்காவின் கிழக்கு அளவீட்டுப் பகுதியினருக்கு இன்னமும் ஆறு மணி நேரங்களும், மேற்குக் கரையோர மக்களுக்கு முழுதாக ஒரு நாளும் எஞ்சி இருக்கிறது. இந்த இறுதிக் கணங்களைப் பாவித்துச் செய்ய வேண்டியன எவை? எவை??
  • கொடையளிப்பன எவையாகிலும் இருந்தால், உடனே வினையாற்றி, அதற்கான படிவத்தைப் பெற்றுக் கொளல். (All the donations should have receipt)
  • பங்கு வணிக முதலீட்டில், லாப நட்டக் கணக்குகளை ஈடு செய்து கொளல். விரைவில் விற்கக் கூடியன எதுவும் இருந்தால், இன்று விற்பதன் மூலம், இருக்கும் லாபத்தை ஈடு செய்ய இன்று விற்பதன் மூலம் வரும் நட்டத்தை 2010 கணக்கில் கொண்டு வர இயலும்.
  • வருமான வரி இதுவரையிலும் சரியாகச் செலுத்தாதவர்க்கு, இன்று முன்வைப்புத் தொகையாக அளிப்பதன் மூலம், தண்டத் தீர்வையில் இருந்து தப்பிக்க முடியும்.
  • குடும்ப உறுப்பினருள் ஏற்பட்ட புதிய வரவு மற்றும் இழப்பினைச் சரியாக முறையிடுவதன் மூலம், வருமான வரிக் கணக்கைச் சீரமைத்துச் செம்மைப்படுத்த இன்றே கடைசி வாய்ப்பு.
  • ஏதாகிலும் மருத்துவச் செலவுக் கணக்கில் மீதம் வைத்திருப்பீர்களேயானால், அதைப் பாவிக்க இன்றே கடைசி நாள்(Empty your Flex Spending Account). என் கணக்கில் இன்னமும் அறுபது வெள்ளி மீதம் இருக்கிறது. நான் கண் பரிசோதனைக்குச் செல்லலாம் என இருக்கிறேன்.
  • கூடுதலான வரிக்கு உட்பட்ட தொகையை, சிறப்பு வைப்பீட்டு நிதிக்கு மாற்றுவதன் மூலம் வரியை அடுத்த ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டுப் பலனடைய இன்றே கடைசி நாள் ( Convert to a Roth IRA if applicable).
  • இந்த ஆண்டுக்கான மருத்துவப் பரிசோதனை ஆயிற்றா? ஆகாவிடில், நாட்காட்டி ஆண்டுக்கு ஒரு பரிசோதனை எனும் நிபந்தனை உள்ளவர்களுக்கு, இன்றே கடைசி நாள்.
எல்லாமும் சரி பார்த்து ஆயிற்றா? கடைகளுக்குச் சென்று வேண்டியன வாங்கிக் கொள்ளுங்கள். மாலையை, மனமகிழக் கொண்டாடுங்கள்!

Wish you happy new year!!!

12/30/2010

இசை தேவனின் இசைத் தாலாட்டு!

நான் கல்லூரியில் இருக்கும் போதுன்னு நினைக்கிறேன்... ஒரு முகப்புப் பாடல்... ‘ஆனி, ஆடி ஆவணிக்கு மாலை வரும்...” இப்படிப் போகும்... அது ஒரு நாடகத்தினுடைய முகப்புப் பாடல்ன்னு நினைக்கிறேன்... மிக நீண்ட நாட்களுக்கு, என்னுள் அதனோட பாதிப்பு இருந்திச்சி....அந்தப் பாடல் பற்றின கூடுதல் விப்ரம் தெரிஞ்சிருந்தா சொல்லிட்டுப் போங்க சித்த... புண்ணியமாப் போகும் உங்களுக்கு!

அதற்கு அடுத்தபடியாக.... நந்தலாலா படத்தின் பின்னணி இசை... படம் பார்த்து முடிச்சவுடனே, நம்ம பாலாண்ணனங்கிட்டக் கேட்டேன்... பின்னணி இசை மட்டும் எனக்கு வேணும்... கிடைக்குமான்னு... அவரும் சொன்னாரு, டோரண்ட் கோப்பிலிருந்து பிரிச்செடுக்கலாம்... முயற்சி செய்யுங்க பழமைன்னு...

அதுக்கப்புறம் பார்த்தா, எதோ ஒரு புண்ணியவான் அந்த வேலைய ஏற்கனவே செய்து வெச்சிருக்காரு...ஆனாலும் அவரு முழுப் படத்தையும் செய்யாம வுட்டுட்டாரு.... தினமும் இரவு நித்திரை கொள்ளுறதே இந்தப் பின்னணி இசையோடத்தான்.... நீங்களும் கேட்டுப் பாருங்க... இதமா இருக்கும்....



நம் பரிதவிப்பை முறியடித்த அன்புப்பதிவர் அருண்மொழிவர்மன் அவர்கட்கு உளமார்ந்த நன்றிகள்!!!

ஓ... ஓகோ ஓஓஓ ஓஃகொஃகோ.....

என் மனம் கரைபுரண்டுச் செல்ல
செல்லச் செல்ல கண்மணீ...
காமனை வசம்பிடித்த மண்ணோ
சின்ன சின்ன முத்தம் இட்டுப் பாடுநீ

ஆசையில் வானுலாப் போகலாம்
மோகமோ தாகமோ தீரலாம்...
கூடலாம்... வாழலாம்..
ஆடம்பரத்தில் ஆடலாம்.....

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆனி ஆடி ஆவணிக்கு மாலை வரும்
மாலைவரும் மாலைவரும்
மணிக்கு மாலைவரும்
வேளைவரும்...
சேலைவரும்...
சோலைவரும்...
உனக்கு சேதி வரும்....

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்...

ல்லூட்...டி பண்ணுதுங்கோ...
கும்பலோ மொத்தத்துல பம்முதுங்கோ
சோக்கா துள்ளுதுங்கோ
அய்யய்யோ பக்கத்துல பொங்குதுங்கோ...

ல்லூ..ட்டி பண்ணுதுங்கோ
கும்பலோ மொத்தத்துல பம்முதுங்கோ
சோக்கா துள்ளுதுங்கோ
அய்யய்யோ பக்கத்துல பொங்குதுங்கோ...

மன்னவன் கண்களில் சந்தேகம் இல்லை
வீராதி வீரனாக நீ...
கோடியில் ஒருத்தன் நீ.... பேரின்ப நாதா....
மாரோடு வந்துலாவு நீ....
தேவனே... சாதகம், தேவை இந்நாளில்...
எந்த மன்மதன் செய்கையும்.. உன்போல் வராது...
தேவனே... சாதகம், தேவை இந்நாளில்...
எந்த மன்மதன் செய்கையும்.. உன்போல் வராது சூரனே...

மெட்டுக்கட்டிப் பாடட்டுமா?
அத்துமீறிப் போகட்டுமா??
பச்சரிசிப் பல்லழகி...
உன்னைத்தொட்டு காணட்டுமா?
ஈரேழு லோகத்திலும்... யாரடி உன்போல்?
ஏழேழு ஜென்மத்திலும்... நீதானே இரம்பா...

ல்லூ..ட்டி பண்ணுதுங்கோ
கும்பலோ மொத்தத்துல பம்முதுங்கோ
சோக்கா துள்ளுதுங்கோ
அய்யய்யோ பக்கத்துல பொங்குதுங்கோ...

என் மனம் கரைபுரண்டுச் செல்ல
செல்லச் செல்ல கண்மணீ...
காமனை வசம்பிடித்த மண்ணோ
சின்ன சின்ன முத்தம் இட்டுப் பாடுநீ

ஆசையில் வானுலாப் போகலாம்
மோகமோ தாகமோ தீரலாம்...
கூடலாம்... வாழலாம்..
ஆடம்பரத்தில் ஆடலாம்.....

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்
மாலைவரும் மாலைவரும்
மணிக்கு மாலைவரும்
வேளைவரும்...
சேலைவரும்...
சோலைவரும்...
உனக்கு சேதி வரும்....

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்...

ல்லூ..ட்டி பண்ணுதுங்கோ
கும்பலோ மொத்தத்துல பம்முதுங்கோ
சோக்கா துள்ளுதுங்கோ
அய்யய்யோ பக்கத்துல பொங்குதுங்கோ...

அணுவேந்திரன்

”ங்கொய்யால! இந்த ஆண்டு எப்படியும் போயே ஆகணும்!!”, முணு முணுப்புக்கிடையே தன் அலைபேசியை இயக்கலானான் பழமைபேசி.

”ட்ரிங்... ட்ரிங்...”

“அகோ, நான் இளா பேசுறேன்... நீங்க?”

“இளா, நான் மணிதாம் பேசுறேன்”

“சொல்லுங்க மணி... என்ன சமாச்சாரம்?”

“2011 ஈரோடு சங்கமத்துக்குப் போயே ஆகணும் நானு!”

“என்ன வெளையாடுறீங்களா? கூட்டம் ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் சித்த நேரந்தான இருக்கு? அமெரிக்காவுல இருக்குற நீங்க எப்படி இன்னும் ஒரு மணி நேரத்துல ஈரோடு போக முடியும்?”

“ஒன்னும் பிரச்சினை இல்லை; நான் பக்கத்து ஊர், பெட்ஃபோர்டுலதான் இருக்கேன். கூடவே மின்னுருமாற்றி, synthesizerம் வெச்சி இருக்கேன்...”

“சரி, நான் என்ன செய்யணும் இப்ப?”

”இல்ல, மின்னுருவேற்றம்(encode) செய்யும் போது கூட இருக்க ஆள் யாரும் இங்க இல்ல? நீங்க வந்தீங்கன்னா?”

“ok... got it... I am on my way..."

இளா, வேக வேகமாய்ப் புறப்படுகிறார். அவரது மனைவி திடுக்கிட்டு, “மாமா, எங்க பொறப்புட்டு போறீங்க? சொல்லவே இல்ல??”

“இல்ல, நம்ம மணியண்ணனை ஈரோட்டுக்கு அனுப்பிட்டு வந்தர்றேன்...”

“யாரு, பழமைபேசி மணியண்ணனையா? எப்படிங்க??”

”சிந்தசைசர்ல என்கோடு செஞ்சி, தரவேற்றம்(upload) செய்துவிட்டா.... கோயமுத்தூர் GCTல அவங்க ஒறம்பரக்காரப் பையன் டிகோடு ஆனதுக்கப்புறம் டிசிந்தசைசு செஞ்சிடுவாரு...”

“ஒரு எழவும் புரியலை... சித்த வெவரமாச் சொல்லுங்க...”

”நான் வந்து சொல்றேன்... போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்... நீயும் சூர்யாவும் புறப்பட்டுத் தயாரா இருங்க... நாமளும் வெளிய போறம்”

போசுடன் நகரில் இருந்து, ச்சார்ல்சு நதிக்கரையின் ஓரமாகப் பயணித்து, லோகன் விமான நிலையத்தையும் கடந்து, மான்செசுடர் நகரின் வழியாக பெட்ஃபோர்டு வந்து சேருகிறார் இளா.

"வாங்க இளா; இந்தாங்க இந்த சிந்தசைசர் யூனிட்டை உங்க வண்டியில வையுங்க!”

“சரீங் மணி; இப்ப நாம எங்க போறம்?”

“MITக்குத்தான்... அங்க இருக்குற டேனியல் ஆய்வுக் கூடத்துலதான் தரவேற்றம் செய்யுற வசதி இருக்கு. ஏற்கனவே நண்பர் அலெக்சுக்குத் தெரியப்படுத்தியாச்சு. அவர் அங்க தயாரா இருப்பாரு!”

MIT, Massachusetts Institute of Technology, உலகப் புகழ் பெற்ற ஆய்வுச் சாலை, கேம்பிரிட்ச்சு நகரில் இருக்கிறது. இங்குள்ள ஆய்வுக்கூடத்தில்தான், மனிதர்களை மின்னுருவேற்றம் மற்றும் மின்னுருவிறக்கம் முதன் முதலில் வெளியுலகுக்குச் செய்து காட்டப்பட்டது. மின்னணுவியல் துறைத் தலைவராக இந்நிறுவனத்தில் வேலை செய்யும் டொவ் பாரவ் என்பார் ஒரு யூதர். இவரும், ப்ழமைபேசியின் நண்பரான அலெக்சும் நெருங்கிய நண்பர்கள்.

“தரவேற்றம் செய்யுறதுல இந்த சிந்தசைசரோட பங்கு என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”

“அதாவது வந்துங்க இளா, ஆய்வுக்கூடத்துல இருக்குற தரவேற்ற மேடைதான் மனித உடம்புல இருக்குற ஒவ்வொரு அணுவையும் மின்னணுக்களா மாற்றும். உடம்புல இருக்குற டிஎன்ஏ வையும் மாற்றி, தகுந்த மின்னணுக்களா மாத்திடும். அப்படி மாத்தினதுக்கு அப்புறம், இந்த சிந்தசைசரானது மாத்தின அணுக்களை எல்லாம் எலக்ட்ரானிக் டேட்டாவா மாத்தி கணினிக்குள்ள அனுப்பும்”

“ஓ, அப்படியா? அப்ப உங்க பூதவுடல்?”

“அந்த மின்னுருவேற்றத்தின் போது உடலானது கரைஞ்சி மின்னணுக்களா மாறிடும். மின்னுருவேற்ற மேடைக்கு, துல்லியமா மனிதனை மின்னணுக்களாவும், சிக்கலில்லாத மனித மின்னணுத் தொகுதிகளை மனிதனாவும் மீளுருவாக்கம் செய்யக் கூடிய வல்லமை இருக்கு.”

“அப்ப யாரை வேணுன்னாலும், எங்க வேணுன்னாலும் மின்னணுக்களாக மாற்றி அனுப்பி வைக்கப்படலாமா??”

“அதான் முடியாது! அதுக்குன்னு இருக்கிற சர்வதேச அமைப்புகிட்ட இருந்து ஒப்புதல் வாங்கணும். சீரிய மருத்துவப் பரிசோதனை, மரபணு மீளாக்கம், மரபணு மின்னுருவாக்கம் தொடர்பான பல சோதனைகள் செய்ததற்கு அப்புறமாத்தான் ஒப்புதல் தருவாங்க”

“ஓ, அப்படியா? அப்ப இந்த விசா? மத்த நாடுகளுக்குள்ள நுழையுறதுக்கு?”

“நல்ல கேள்வி! நாம அந்தந்த நாடுகள்கிட்ட இருந்து முன்கூட்டியே அனுமதி வாங்கி, அந்த விபரங்களை சிந்தசைசர்லயும், டிசிந்தசைசர்லயும் போட்டு வெச்சிடணும். அப்பத்தான், மின்னுருவேற்றமும் மின்னுருவிறக்கமும் செய்ய முடியும்.”

“ஓ அப்ப, உங்க ஒறம்பரைக்காரப் பையங்கிட்ட அந்தத் தகவல் குடுத்து வெச்சி இருக்கீங்களா?”

“ஆமா; கோயமுத்தூர் GCTல இருக்குற ஆய்வகத்துல என்னோட விசாத் தகவல்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சேமிப்புல இருக்கும். எங்க மாமா பையன் நந்துகிட்டயும் இருக்கு”

”சரிங்க.. எனக்கு ஒரே பயமா இருக்கு... அதெப்படி, உங்களை எலக்ட்ரானிக் டேட்டாவா மாத்தின அப்புறம், மறுபடியும் டிகோடு செய்வோம்ங்றதுக்கு என்ன உத்தரவாதம்?”

“அதெல்லாம் ஒன்னும் பயப்படத் தேவை இல்லை; MIT ஆய்வுக்கூடமும், GCT ஆய்வுக்கூடமுந்தான் அதுக்குப் பொறுப்பு!”

”சரி, எதோ ஒரு உறுப்பு உடம்புல செரியா வேலை செய்யலை... என்னங்க செய்யுறது?”

“ஒன்னும் பிரச்சினை இல்லை. நம்ம உடம்போட ஒவ்வொரு உறுப்போட மரபணுக்களும் அந்த சர்வதேச அமைப்போட வங்கியில சேம அணுக்களாச் சேமிக்கப்பட்டு இருக்கு. அதை வெச்சிக் குளோனிங் செய்து பொருத்திடுவாங்க இளா!”

“ஓ, இதுக்கெல்லாங் கூடக் காப்பீடு இருக்குங்ளா?”

“நிச்சயமா? அது இல்லாம் எப்படி? சரிங்க, ஆய்வுக்கூட வாயில் வந்திடுச்சி. நான் அலெக்சைக் கூப்புடுறேன்..”

“சரி, நீங்க கூப்பிடுங்க...”

இளாவும், பழமைபேசியும் ஆய்வுக்கூட மனித மின்னுருவாக்க சாலையினுள் நுழைகிறார்கள். ”Hey Mani, come on man...."

“Hey Daniel... whats up?"

"This is Ila, who is my best friend!" என இருவரையும் அறிமுகப்படுத்த, இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லி அறிமுகம் செய்து கொள்கிறார்கள்.

அடுத்த கணமே, அணு மின்னுருவாக்கச் சாலையின் பிரதான அறைக்குள் பழமைபேசி நுழைகிறார். இளா அங்கிருக்கும் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இருந்தபடியே அவதானிக்கத் துவங்குகிறார்.

உடல் முழுக்க மின்கம்பிகள் நொடி நேரத்தில் வியாபிக்கிறது. மின்கம்பிகளுக்கு இடையே உடல் பொருந்தி இருப்பது தெரியாத அளவுக்கு, மின்கம்பிகள் படர்ந்து இருந்தன. இளாவிடம் இருந்த சிந்தசைசர் பெட்டி, அவரிடம் இருந்து அலெக்சு கைக்கு மாறுகிறது.

அடுத்த சில நிமிடங்களில், “ok... start" எனும் குரல் ஓங்கி ஒலிக்க... கால்கள் இரண்டும் கரையத் துவங்கின. இளாவின் முகம் பேயறைந்தது போலக் காணப்பட்டது. அவரது முகபாவத்தைக் கண்டதும், கண்ணாடிச் சுவர்களின் வெளிப்புறமாகத் திரைச்சீலை இறங்க ஆரம்பித்தது.

(உடல் மின்னுருவாக்கம் பெற்றுக் கோயம்பத்தூர் சென்றடைந்ததா? இல்லையா?? இன்னும் என்னென்ன நுட்ப விழுமியங்கள் இதில் அடங்கி இருக்கின்றன? அடுத்த இடுகையில்...)

12/29/2010

அமெரிக்க அதிபராக ஒரு இந்திய வம்சாவளிப் பெண்?

அமெரிக்க அதிபராக ஒரு இந்திய வம்சாவளிப் பெண் வர வாய்ப்பு இருக்கிறதா? சமீபத்தில் கூட, லூசியானா ஆளுநராக இருக்கும் மாண்புமிகு Bobby Jindal அவர்களுடைய பெயர் வலுவாகப் பரிந்துரையில் இருந்தமை, அதற்கான வாய்ப்புகளைப் பறைசாற்றும் விதமாக அமைந்தது.

மேலும் எமது அண்டை மாகாணமான தென் கரோலைனா ஆளுநராக மாண்புமிகு Nikki Haley அவர்கள் சமீபத்தில் பதவி ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

கூடுதலாக, மற்றுமொரு புள்ளி விபரத்தையும் நாம் ஆராய வேண்டி இருக்கிறது. கடைசியாக எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அமெரிக்க குடியேற்றத்தின் சதவீதம் என்பது 7.6% ஆகும்.

ஆனால், 1990க்கும் 2000க்கும் இடையில் நிகழ்ந்த இந்தியக் குடியேற்றமானது, முந்தைய பத்தாண்டுகளோடு ஒப்பிடுகையில் 105% உயர்வாக இருந்தது. 2000க்கும் இன்றைய நாளுக்கும் இடையிலான குடியேற்றம் தோராயமாக 110%க்கும் அதிகமாக இருக்குமெனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. இப்படியாகப் பெருகிவரும் இந்தியர்களின் எண்ணிக்கையும், நமது யூகத்திற்கு வலு சேர்ப்பனவாகவே உள்ளன.

அடுத்ததாக, அமெரிக்காவில் இருக்கும் நம்மவர்களின் கல்வியறிவு எப்படியாக உள்ளது? நம்மவர்களில் 67% பேர், குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்; 40% பேர் முதுகலைப் பட்டம் பெற்றவராக இருக்கிறார்கள். ஆனால் தேசிய அளவில், பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 28 சதவீதம்தான்.

நம்மவரிலே ஆண், பெண் எனப் பிரித்தோமானால், பெண்கள் கிட்டத்தட்ட 95%க்கும் மேலானவர்கள் பட்டம் பெற்றவர்கள்.

இந்தியர்களில் கிட்டத்தட்ட 73% பேர் பணிக்குச் செல்பவர்களாகவும், 27% பேர் தொழில் முனைவோராகவும் இருக்கிறார்கள். பணிக்குச் செல்லும் 73% பேரில், கிட்டத்தட்ட 58% பேர் மேலாண்மை அல்லது நிபுணத்துவப் பணி புரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பின்னணியில், இந்திய வம்சாவளியர் ஒருவர் அமெரிக்காவின் அதிபராக ஆக முடியுமா, முடியாதா?? சரி, அமெரிக்க அதிபராக ஆவதற்கான அடிப்படைத் தகுதிகள்தான் என்ன?

  • அமெரிக்க மண்ணில் பிறந்தவர் மட்டுமே அதிபராக ஆகமுடியும். (ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு)
  • குறைந்தபட்சம் 35 வயது உடையவராய் இருத்தல் வேண்டும். John Kennady அவர்கள்தான் இன்றைய தேதியில் இளைய வயதில் அதிபரானவர். அதிபர் ஆகும்போது, அவரது வயது 43.
  • குறைந்தபட்சம் 14 ஆண்டுகள், அமெரிக்க மண்ணில் வாழ்ந்தவராய் இருத்தல் வேண்டும்.
இவையெல்லாம் அரசியல் சட்ட ரீதியான அடிப்படைத் தகுதிகள். இதற்கும் மேலானது, தனிமனித ஒழுக்கம், தலைமைப் பண்பு மற்றும் சமூகத் தொண்டு என்பனவாகும்.

நிறையக் குழந்தைகள் அதிபராகும் தன்மையோடு வளர்ந்து வருவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். வட இந்தியா, தென்னிந்தியா என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பது நம் எண்ணம் இல்லை என்றாலும் கூட, உள்ளமையைச் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது. ஆந்திரர்களுக்கு அடுத்தபடியாக, தமிழர்கள் வெகுவேகமாக வளர்ந்து வருகிறார்கள் என்பது கண்கூடு.

எனினும், தொழில் முனைவதில் குஜராத்தியர்கள் வலுவாக இருந்து வருகிறார்கள். ஆனால், அதுவே அவர்களுடைய அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அமைந்துள்ளது. எனவே, அடுத்த இருபதாண்டுகள் கழித்துப் பார்த்தால், தென்னிந்தியர்களே வலுவாய் இருப்பர் என்பது இன்றைய நடப்பின் அடிப்படையிலான யூகம்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அப்படியாக, முளையில் தெரியும் நாளைய அதிபர்கள் யார், யார்?

டெக்சாசு மாகாணத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் பதிவர் குடுகுடுப்பையின் மகளா? வட கரோலைனா மாகாணத்தில், கல்விக் கட்டிடத்திற்காய் உண்டியல் குலுக்கிக் கொண்டிருக்கும் பதிவர் சீமாச்சுவின் மகளா?? ஊர் ஊராய்த் திரியும் நாடோடி பழமைபேசியின் மகளா???

நம்மவர்களில் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள்; அவர்களில் நிறைய விண்மீன்கள் பட்டொளி வீசி மின்னத்தான் போகின்றன! இதோ,  அந்த வகையில், முளைவிட்ட இளந்தளிர் ஒன்றின் தலைமைப் பண்பை ஆராய்வோம் வாருங்கள்!!

இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல கலாம் அவர்கள் கூறினார், ”குழந்தைகளே கனவு காணுங்கள்” என்று. எத்துனை மகத்துவமான சொல்லது?

குழந்தையின் கனவிலே அடங்கி இருக்கிறது ஒரு தேசத்தின் எதிர்காலம். குழந்தையின் கனவிலே அடங்கி இருக்கிறது, பெற்றவர்களின் எஞ்சிய நாட்கள். குழந்தையின் கனவிலே அடங்கி இருக்கிறது, பிரபஞ்சத்தின் அமைதி!

அப்படியான குழந்தைக்குத் தேவை, தலைமைப் பண்பு. தலைமைப் பண்பு என்பது, தலைவருக்கு மட்டுமே அமையும் பண்பு என்பது மடமையன்றோ? இப்பூவுலகில், ஒவ்வொரு குழந்தையும் தலைவரே! அதை நன்கு புரிந்து கொண்டு, கல்விக் கூடங்கள் இயங்க வேண்டும். இதோ இந்த அமெரிக்காவில் அது நிதர்சனம்!!

ஏழு வயதுக் குழந்தைகள், தத்தம் வகுப்புப் பிரதிநிதியைத் தெரிவு செய்யத் தேர்தல் நடத்துகிறார்கள். மூன்று குழந்தைகளை, மற்றவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அவர்களாகத் தேர்தலில் குதிக்கவில்லை. கவனிக்க! மற்றவர்கள், இவர்களை முன்மொழிந்து, வழிமொழிகிறார்கள்.

இருபத்து நான்கு பேர் இருக்கும் வகுப்பில், ஒரு குழந்தை ஏழு வாக்குகள் பெறுகிறது. மற்றொரு குழந்தை ஐந்து வாக்குகள் பெறுகிறது. இறுதியாக் வந்த இக்குழந்தை பனிரெண்டு வாக்குகள் பெறுகிறது. பெருவாரியான வாக்குகள் பெற்று, வகுப்புப் பிரதிநிதியும் ஆகிறாள். மொத்த வகுப்பும் கூடி தம் பிரதிநிதியைப் பாராட்டி வாழ்த்துகிறார்கள். அவர்களுடைய வயது என்ன? ஏழு!

வகுப்பினுடைய கோரிக்கையாக, அவர்களுடைய விருப்பப்படி ஏதோவொன்றை மாணவர் சங்கத்திற்குச் சென்று பணித்திட வேண்டும். வகுப்புப் பிரதிநிதியானவள், வகுப்பு மாணவர்களைக் கேட்கிறாள். அவ்வகுப்பு மாணவர்களும், தம் தலைவருக்கு மதிப்புக் கொடுத்து, ‘நீயே எதோவொன்றைச் சொல்லிவிட்டு வா’ எனப் பணிக்கிறார்கள். இவள் செய்த காரியம் என்ன?

”எனக்கு மற்றவர்களது மேலான மரியாதை, எண்ணம் மற்றும் அவர்களது உரிமை என்பன முக்கியமாகப்படுகிறது. இதோ, இந்தத் தாளை இங்கே வைக்கிறேன். இன்று மாலைக்குள், ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்தை இத்தாளில் குறிப்பிட வேண்டும்” எனச் சொல்கிறாள்.

அதன்படியே, ஒன்பது விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு, அதில் ஒன்றைத் தெரிவு செய்து மேலிடத்திற்குப் பரிந்துரை செய்கிறாள். எல்லா வகுப்பினரது கருத்துகளும் அலசப்பட்டு, இவர்களுடைய வகுப்பின் பரிந்துரையே தெரிவும் ஆகிறது.

இக்குழந்தை நாளைய அமெரிக்க அதிபர் ஆகமாட்டாளா? ஆவதற்கு சர்வ வல்லமையும் அமைய வேண்டும். இது போல, எண்ணற்ற இந்தியக் குழந்தைகள் அமெரிக்காவிலே வளர்ந்து வருகிறார்கள். அனைவரையும் வாழ்த்துவோம். அத்தோடு, இன்றைய இடுகைநாயகியும் மேற்கூறிய வகுப்புப் பிரதிநிதியுமான, பதிவர் சீமாச்சுவின் மகள் சூர்யாவை வாழ்த்துவோம்!!

12/28/2010

வலையுலக விடுப்பும், நாமும்!

”ஏன் இப்பெல்லாம் எழுதுறதே இல்லை?”

”பழம அண்ணே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்?”

“இருக்கீங்ளா, இல்லையா?”

அதான் அறிவிப்பு கொடுத்துட்டுதானே போனோம்? சரி விடுங்க; தெளிவா எழுதிடுவோம்!

=========================

தொழில்முறைச் செலுத்து மேலாண்மை(BPM), தொழில்முறைச் செலுத்துக் கட்டுறுத்தல்(BPC) ஆகிய இரண்டும் எந்த ஒரு பெருந்தொழிலுக்கும் இன்றியமையாதவை மட்டுமல்ல, அச்சாணி போன்றவை. முறையே, Business Process Management, Business Process Control என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

நீங்கள் ஒரு பெட்டிக் கடை நடத்துகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதிலே கூட, தொழில்முறைச் செலுத்து மேலாண்மை என்பது அவசியமாகப்படும். எப்படி?

ஒரு பயனர் வந்து ஒரு பொருளைக் கேட்பதிலிருந்து, அவரது தேவையைப் பூர்த்தி செய்து வருவாயை ஈட்டுவது வரையிலும், சுருக்கமாக ஆறு ‘ஆ’க்கள் அடிப்படையாக அமையும். அந்த ஆறு ’’க்கள்? ட்கொளல், ங்குதல், ய்தல், க்குதல், ச்சுதல் மற்றும் வேதனம் என்பவைதான் அவை.

இந்த ஆறு செயல்களைச் செய்வதில், மேம்பாடு காண்பது எப்படி என்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டமையே நமது விடுப்புக்கான காரணம். இனி, நாம் அந்த ஆறு “”க்களையும் என்னவென்று காண்போம்.

BPM(Business Process Management) is a management discipline that treats business processes as assets to be valued, designed and exploited in their own right. It aims to improve agility and operational performance.

ஆட்கொளல்: பயனர் தன் தேவையை நாடும் போது, அவர்தம் கோரிக்கையை முறையாக ஆட்கொள்ள வேண்டும். Receive the request in a manner.

ஆங்குதல்: தேவையை முறையாக ஆட்கொண்டபிறகு, சரியானபடி ஆங்குப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, பயனர் பருப்பு கேட்டார் என்றால் தானியம் இருக்கும் இடத்திற்கு வழிநடத்திடுதல் வேண்டும். You got to Route the request to a right person or into right direction.

ஆய்தல்: அடுத்தபடியாக, வந்த சேர்ந்த முறையீட்டை ஆய்திடல் வேண்டும். தேவைக்கொப்ப சேவையானது அமைந்திட, இச்செயல் வெகு முக்கியமானது. இந்த இடத்தில் வழு நேர்ந்திட்டால், அது பயனரது மனநிறைவுக்கான குந்தகம் மற்றும் வீண் விரயத்திற்கு வித்திடும். You got to Research the request with care.

ஆக்குதல்: ஆய்வின் மூலம் திரட்டப்பட்ட முழுமைத் தகவல்களைக் கொண்டு, சேவையைச் செவ்வனே ஆக்குதல். Resolve the request with quality.

ஆச்சுதல்: ஆக்கப்பட்ட பொருளைத் தக்க முறையில் ஆச்சுப்படுத்துதல்; அதாவது, பயனரிடம் உரிய முறையில், உரிய காலத்தில் ஆச்ச்சுங்கவெனக் கொண்டு சேர்ப்பது. Respond on time with passion and kindness.

ஆவேதித்தல்: நடக்கும் செயல்களைச் தரவுப்படுத்தி ஆவேதனம் செய்தல். எந்த ஒரு கட்டத்திலும், பயனரது தேவை, கோரப்பட்ட நேரம், சேவை புரிந்திட்ட நேரம், தகவு, விலை முதலான விபரங்களை அறிக்கைப்படுத்திட ஏதுவாக இருந்திடல் வேண்டும். ஆவேதனங்கள், வரவு, செலவு முதலானவற்றைக் கணித்திட இன்றியமையாதவை. Report the business with accuracy.

இப்படியாக, எந்தவொரு தொழிற்செலுத்து முறைக்கும் Receive, Route, Research, Resolve, Respond and Report என்பன முறையாக அமைந்திடல் வேண்டும். அவற்றிலே உள்ள நுணுக்கங்களை ஆழ்ந்து ஆராய்ந்து, அவற்றைச் சீரமைத்து மேன்மையைக் கூட்டுவதன் மூலம் காலவிரயம் மற்றும் பொருட் சேதாரத்தைக் குறைக்க முடியும். சரி, இதில் நமது பங்கு என்ன?

அமெரிக்க நடுவண் அரசால் பராமரிக்கப்பட்டு வரும் இரு சுகாதாரத் திட்டங்களின், உபகரண மேல்முறையீட்டு வணிகத்தைக் கொண்டு செலுத்தும் மென்பொருளைக் கட்டமைப்பதில் நாமே முதன்மைக் கட்டமைப்பாளன்.

அமெரிக்க மத்திய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மின்சற்கர நாற்காலிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு, அது நிராகரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேல்முறையீடு செய்திட முடியும். அந்நிலையில், அவர் தொலைபேசியில் அழைத்தாலோ, அஞ்சல் மூலமாக அல்லது மின்பிரதி மூலமாகத் தொடர்பு கொண்டாலோ, அவை நாம் வடிவமைத்த மென்பொருளையே வந்தடையும்.

வந்தடைந்த இடத்தில் இருந்து, கிட்டத்தட்ட மூன்று அடுக்குகள் கொண்ட மீள்பார்வைக் குழுவினரின் ஆய்வுக்குப் பிறகு, ஆச்சுப்படுத்தி, ஆவேதனப் படுத்துதலே, நாம் செய்த காரியம்.

அமெரிக்கா முழுமைக்கும், இம்மாதிரியான முறையீடுகளைப் பெறுவதற்கு நான்கு சேவை மையங்கள் உள்ளன. அவையாவிலும் நாம் வடிவமைத்த மென்பொருள்தான் பயன்பாட்டில் உள்ளது.

நாளொன்றுக்கு எத்தனை முறைப்பாடுகள், ஒவ்வொரு முறைப்பாட்டையும் நிறைவு செய்ய நாம் ஒத்துக் கொண்ட காலம்(service level agreement), மென்பொருளைக் கையாளும் பணியாளர்கள் எண்ணிக்கை  முதலானவற்றைப் பார்த்தோமானால் மிக்வும் சுவாரசியமாக இருக்கும். என்றாலும், தொழில் அறம் கருதி அவற்றைத் தவிர்ப்பதே உசிதம்.

அதுதான் மென்பொருளைக் கட்டமைத்து ஆயிற்றே? பிறகெதற்குப் பயிற்சி என வினவிடலாம். அதற்கும் காரணம் இருக்கிறது.

நாம் மேற்கூறிய தொழிற்கூறினைப் போலவே, மற்றதொரு தொழிற்கூறினை, மற்றொரு நிறுவனம் கிட்டத்தட்ட 110 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவர்கள் காரியமாற்றும் நேரத்தினின்றும் மிகக் குறைவான காலநேரத்தில் எங்களால் சேவையாற்றிட முடியும் என வாதிட்டு வெல்வதில் நம்பங்கும் அடங்கி இருந்தது; இருக்கிறது. எனவேதான் கூடுதல் பயிற்சியின் அவசியம் நேரிட்டது.

வழக்கு மற்றும் அதன் உட்கூறுகளை விரைவில் விலேவாரியாகக் காண்போம். தற்போதைக்கு, நீங்களும், தத்தம் தொழிற்கூறுகளில், ஆட்கொளல், ஆங்குதல், ஆய்தல், ஆக்குதல், ஆச்சுதல் மற்றும் ஆவேதனம் ஆகியவற்றை மேம்படுத்தி, எதிர்வரும் புத்தாண்டினைக் கோலாகலமாய் எதிர்கொள்வீரே!

12/27/2010

ஈரோடு பதிவர் சங்கமமும் நானும்!

”டே மணி, நீ அங்கண்ணந்தண்ணன் வண்டீல போயி, அனுப்பர்பாளையத்துல இருந்து பெரிய சர்வம் ரெண்டுமு, வாணா சட்டி நாலும் வாங்கியாந்துரு!”

“செரீங்ணா; இப்ப எதுக்குங் காசு பணம்; நான் மெதுவா கணக்கச் சொல்லீட்டு வாங்கிக்கிறேன்!”

“இல்றா, இந்தா வாங்கிக்கோ...”

அனுப்பர்பாளையம் என்ன? அனுமார் மலையேயானாலும், சாதி மதம் பார்க்காது ஓடிச் செல்வோம். ஊரார் திருமணங்கள், இன்னும் பிற நல்லவை கெட்டவைகளுக்கு, பிரதிபலன் ஏதும் பாராது ஓடிச் செல்லும் பூமி, கொங்கு பூமி. காலச் சற்கரம் சுழல, சுழல, சூழலும் மாறுகிறது. மனிதர்களும் மாறிவிடுகிறார்கள். இத்தனை நியதிகளையும் வென்று, அதே பண்பாடு கூடிய நிகழ்வை மீட்டெடுப்பது என்பது எவ்வளவு பெரிய காரியம்?

தனித்தன்மைப் பேறுகள் எல்லாம், உலகமயமாக்கலில் சின்னாபின்னமாகி, சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அவற்றை வென்று, நின்று காட்டியிருப்பது இந்நிகழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.

மாலையில், அருமை நண்பர், தளபதி நசரேயன் கூறிய சொற்கள் இந்த நடுநிசியிலும் எம்மை குதூகலப்படுத்துகிறது. “மணியண்ணே, உங்கூர்க்காரவுக பெட்னா விழாவையெல்லாம் தோறகடிச்சிட்டாங்கண்ணே; தலைவாழை இலை, இலக்கியச் சொற்பொழிவு, தொழில்நுட்பப் பாசறைன்னு நாலுங்கலந்து அமர்க்களப் படுத்திட்டாய்ங்கண்ணே....”

மெய் மறந்தேன்... மெய் சிலிர்த்தேன்... அவையிரண்டுமே, நான் ஆத்மார்த்தமாக நேசிக்கும் இரண்டு விழாக்கள். அவைகள் ஒப்பிடப்படும் போது, மகிழ்ச்சிப் பிரவாகம் ஊற்றெடுப்பது யதார்த்தமாகத்தானே இருக்கும்?

ஈரோடு பதிவர் சங்கமம், இன்னும் இன்னும் மெருகு கூடித் தமிழர் பண்பாடு போற்றும் பெருநிகழ்வாக உருவெடுக்க வேண்டும். ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம், காரைக்குடி எனப் பண்பாடு கொட்டிக் கிடக்கும் பல ஊர்களிலும் முறை வைத்து ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.

சாளரத்தின் ஊடாய் வெளியே பார்க்கிறேன். கொட்டிக்கிடக்கும் பனியில், ச்சட்டனூகா மலைத்தொடர்கள் வெண்பனிப் போர்வையால் போர்த்தப்பட்டு இருக்கிறது. வளைந்து நெளிந்து ஓடும் டென்னசி நதியானவள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். நானும் புன்னகைக்கிறேன், என் ஊர் மக்கள் எனும் பெருமிதத்தோடு! அவர்களை நினைத்துப் பெருமிதம் கலந்த மமதையோடு சிரிக்கிறேன்!!

நண்பர்களே, உங்களின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறீர்கள்; பொறுப்புக் கூடி இருக்கிறது. உங்களிடம் வல்லமையும் இருக்கிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் திருவிழா போல நீங்களும் இன்னும் பல விழாக்களை நடத்துவீர்கள்! இது திண்ணம்!! வாழ்க நீவிர்!!!

12/14/2010

காலமே, கனிந்து நில்!

மாற்றங்கள் மாறாதன! ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்காக மாறி வருவன எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டுமா? இன்னுஞ் சொல்லப் போனால், அதன் போக்கில் நிகழ்வன மாற்றங்கள். இன்றைய சூழலில், மாற்றங்கள் திணிக்கப்படுகின்றன என்பதுதானே உண்மை??

செங்கற்பொடியோ அல்லது கரித்துண்டை நசுக்கியதில் எஞ்சிய துகள்களையோ கொண்டு பல்துலக்கியவன், வேப்பங் குச்சிகளையும் கருவேலங் குச்சிகளையும் கையில் எடுத்தேன். அதுவே, பிறிதொரு நாளில் பற்பசையுடன் கூடிய பற்குச்சி என்றாகிவிட்டது. இது மனம் விரும்பி ஏற்றுக் கொண்ட மாற்றம்.

மோர் கொடுத்தால் இளக்காரமாய் நினைக்கக்கூடும் என நினைத்து, ஆள் வைத்து அனுப்பி, கோக்கும் ஃபேண்ட்டாவும் வாங்கி வந்து, கண்ணாடிக் கோப்பையில் வார்த்துக் கொடுப்பது என்பது பகட்டுதானே? இந்த மாற்றம் யாரால், எப்படி நிகழ்ந்தது??

மூக்கைப் பொத்திக் கொண்டு நிற்கிறோம். ஆனாலும் அவன் அதைச் சட்டை செய்தானா? அவன் குடிக்கும் பழங் கஞ்சியையும், ஊற வைத்த தேயிலைத் தண்ணீரையும்தானே சீனன் குடிக்கிறான்?? அதுவும் அமெரிக்காவில்??? காரணம், அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை என்பதே கிடையாது. என் மரபு, என் முந்தை, என் நிழல்... எல்லாமும் என்னோடுதான் வரும் என்கிற நினைப்பு அவனுக்கு.

நான் என் வழக்கைப் பின்பற்றும் போது, என்னைக் கேலி செய்பவன் வெள்ளைக்காரனோ அல்லது சீனனோ அல்ல; என் மரபை, பழக்க வழக்கத்தை, பண்பாட்டைச் சிதைக்கும் காரியத்திற்குத் துணை போகும் எம்மவன்தான் என்னைக் கேலி பேசுகிறான். இப்படிப் பழைமையில் ஒன்றினாயானால், தனித்து நின்றுவிடுவாய் என மிரட்டவும் செய்கிறான். இப்படித்தான் நம்மில் மாற்றங்கள் நிகழ்கிறது!

யூதர்களிடம் பழகுகிறேன். கிட்டத்தட்ட 2003 துவக்கம், இன்று வரையிலும் யூத நிறுவனத்திற்கு வேலை செய்கிறேன். 1996 துவக்கம், பல இசுலாமிய நண்பர்களிடம் நெருக்கம் வைத்திருக்கிறேன். ஆப்பிரிக்க அமெரிக்க நண்பர்கள் பல பேர், என்கீழ் பணி புரிகிறார்கள். எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், அவர்கள் எவருமே என்னைப் பகடி செய்திருக்கவில்லை. இன்னுஞ் சொல்லப் போனால், மாறாதன கண்டு அவர்களுக்கு மகிழ்ச்சியே!

why do you try to alter your instinct? தவறானவை என்றும் நீட்சியடைவது இல்லை. அது இயற்கையின் நியதி. பிறப்பின் வழிவந்த பழக்கத்தை இழிவு எனக் கருதுவாராயின், இழிவின்பால் ஒருவர் வீழ்ந்துவிட்டார் என்றே பொருள். உதாரணத்திற்குச் சொல்வதெனின், ஒருவருக்கு காமம் எப்போதும் தலைவிரித்தாடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை அடங்கச் செய்வன குறித்து ஆராய வேண்டுமே ஒழிய, அவரை அறவே ஒழிப்பது என்பது தீர்வாகாது. ஆனால், இன்றைய தாயகத்து நிலை மிகவும் கேலிக்கூத்தானது. ஏனென்றால், இவ்விரு நிலைப்பாட்டையும் தவிர்த்து, காமம் ஒரு திணிப்புப் பண்டம் போல் வணிகமாக்கப்பட்டு விட்டதுதான் மாபெரும் சோகம்.

எங்கோ, யாரோ, எதற்காகவோ, இந்தியத் திருநாட்டின் தனித்தன்மையைக் குறி வைத்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இலாவகமாய் சிதைத்து வருகிறார் அவர். நம்மவர்களும் இரையாவது தெரியாமல் இரையாகிக் கொண்டு இருக்கின்றார். எதிர்மறையாகப் பேசிப் பழக்கம் இல்லைதான். இருந்தும் பேசித்தானே ஆக வேண்டி இருக்கிறது.

கலை, இலக்கியம் இவற்றின் தரத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சமகால இலக்கியம் என்பது ஒரு போதும், இன்றைய நிலையைக் கொண்டது இல்லை. புதுமை புகுத்திய மாற்றங்கள், ஆக்கப்பூர்வமான மாற்றங்களாகத்தான் இருந்தன. எதிர்நிலை மற்றும் குறை கூறல் என்பனவும் கூடவே இருந்தது. ஆனால், இப்போது இருப்பது போல விலைபேசுவனவாக ஒருபோதும் இருந்தது இல்லை.

நல்ல நயமான திரைப்படம் வெளியாகிறது. தோற்றுப் போகிறது. நயமற்ற படம் வெற்றி வாகை சூடுகிறது. நல்ல நூல்கள் பிரசவிக்க, படாதபாடு பட வேண்டி இருக்கிறது. அப்படியே பிறந்தாலும், நுகரப்படுவதே இல்லை. இதையெல்லாம் நெறிமுறைப்படுத்துவது யார் கடமை? மக்களின் கடமையா? மக்களை நெறிப்படுத்தும் சமூக, கலை, இலக்கியவாதிகளின் கடமையா?? அரசாளும் தலைவனின் கடமையா??

ஆண்டுக்கு ஒரு கோடி மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுதல் வேண்டும்; ஆண்டுக்கு ஒரு கோடி மக்கள், வெளியில் இருந்து உள்புகுதல் வேண்டும். அப்படியாவது, மாற்றங்கள் மாறுபனவாய் இருக்கட்டும். காலமே, கனிந்து நில்!!

12/13/2010

காதல்

பொன்னூத்து பெரியசாமியின் மகள் சின்ன பேபியும், வரியூட்டு ஆறுச்சாமியின் மருமகளுமான சிவகாமியும் தத்தம் பட்டி ஆடுகளை அடைக்கும் பொருட்டு, அரக்கன் இட்டேரியில் அவற்றை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பழையூர் மாரிமுத்துவின் தோட்டத்தில் பாத்தி பிடிக்க வந்த இரங்கனும் அவன் மனைவி பொன்னியும், அவசர அவசரமாய் காட்டு இரக்கிரியைப் பறித்துக் கொண்டு இருந்தார்கள்.

இட்டேரியின் மறுபக்கம், இரங்கண கவுண்டர் தோட்டத்தில் கறவைக்காக மாடுகள் தயார் நிலையில் கட்டப்பட்டுக் கொண்டு இருந்தன. ”அதைக் கொண்டா, இதைக் கொண்டா” என இரைக்கும் கட்டளைகள், இன்னும் சிறிது நேரத்தில் இட்டேரி அடங்கி, இராக்கோழிகளும் ஆந்தைகளும் கோட்டான்களும் தத்தம் இரவினை எதிர்கொள்ள இருக்கின்றன என்பதைச் சொல்லாமற் சொல்லிற்று.

இன்றைக்கு மதியச் சாப்பாடு ஏனோதானோவென, பக்கத்துத் தோட்டத்தில் குடி இருக்கும் கந்தசாமி சாளையில் கழித்தாயிற்று. கந்தசாமியின் மகள் ஈசுவரி ஓடியோடித்தான் கவனித்தாள். சோறும் சாறும் சுவை பொருந்தியதாகத்தான் இருந்தது. இருந்தும், அப்பச்சிக்கு மனநிறைவு இல்லை. இராச்சோறை நோக்கிக் கிளம்பினார் அப்பச்சி.

வயது எண்பதுகளில் இருக்கும். கட்டுக் குலையாத தேகம். முகவனூர் செந்தோட்டத்துக்காரர் என்றால், வடக்கே செஞ்சேரி மலைதொட்டு தெற்கே பெதப்பம்பட்டி வரையிலும், மேற்கே சமுத்தூர், காளியாபுரம், சின்னப்பம் பாளையத்திலிருந்து கிழக்கே பூளவாடி, பெரியபட்டி வரையிலும் பிரசித்தம். வம்புதும்புக்குச் செல்லாமல், ஏழைபாழைகளிடம் கண்டிப்பும், அதே நேரத்தில் கருணையும் கொண்ட ஒரு மத்தியதர உழவன்.

மகனைத் தன் உடன்பிறந்தவளின் மகளுக்கே கட்டிக் கொடுத்ததுதான் அவருக்கே வினையாகப் போனது. மூத்த சகோதரி தெய்வாத்தாவுக்கு ஒரே மகள். ஆனைமலையில் பெரிய விவசாயக் குடும்பம். தனது அண்ணன் மகனையே, வீட்டோடு மருமகனாக ஆக்கிவிட்டாள். மகன் தங்கவேலும், அத்தையின் அன்புக்குக் கட்டுப்பட்டு ஆனைமலையிலேயே பண்ணையம் பார்த்துக் கொண்டு இருக்க, அப்பச்சி மட்டும் இருக்கும் மூணு வள்ளத்துப் பூமியையும் தனியாளாய் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.

தலையில் உருமாலை. நிமிர்ந்த நெஞ்சம். செம்பழுப்பு நிறமேறிய கைத்தறிச் சட்டை. இவருக்காகவே பிரத்தியேகமாக, வேலூர் சின்னக்காளி செய்து கொடுத்த செருப்பு. எப்பேர்ப்பட்ட முள்ளும் ஒடிந்துதான் போகணுமே ஒழிய, தைக்க இயலாத மாட்டுத்தோல்ச் செருப்பு அது. கறந்து எடுத்துச் செல்லப்படும் பால், வலதுகை தூக்குப் போசியில்!

எதிர்ப்படும் ஊர்க்காரர்களுடன் பாடுபழமையைப் பேசியபடியே, இராமச்சந்திராவரத்து அப்பன் வீட்டைக் கடந்து மேற்குத் தெருவில் நுழைந்தார் அப்பச்சி.

“டே... அப்பனு... நெகமத்துல இந்தக் கிழமை யாவாரம் எப்டறா போச்சு?”

“இந்த வாரந் தேவுலீங்க பெரீப்பா... என்ன கெரகம், நெறைய வடக்கத்துக்காரனுக வந்துதல... சம்பல் குறைஞ்சி போச்சிங்க பெரீப்பா...”

“செரி... கூடைக்கு எவ்வளவுதேன் கெடச்சது?”

“தக்காளிக்கு ஏழுமு, பாவக்காய் மூட்டைக்கு பதினாறுமு கெடச்சது...”

“செரி... பெரீம்மாகிட்டச் சொல்லி, அடுத்த வாரம் நம்முளதையுங் கொண்டு போய்ப் போடு...”

“ஆகுட்டுங்...”

சந்தில் நுழைந்து, படலைத் திறந்து உள்ளே நுழைந்தார் அப்பச்சி. சிறிது ஏமாற்றம். வீட்டுக் கதவு சாத்தப்பட்டு இருந்தது. அமுச்சியும் திண்ணையில் இருந்திருக்கவில்லை. எப்போதும் திண்ணையில் இருக்கும், வெத்தலை பாக்குத் தட்டும் இருந்திருக்கவில்லை. தூக்குப்போசியைத் திண்ணையிலேயே வைத்துவிட்டு, அருகில் இருக்கும் நெசவாளியான கோயிந்தன் வீட்டுக்குச் சென்றார்.

“சரசூ... சரசூ...”

பரபரத்துப் போனாள் சரசு. நம் வீட்டுக்கு செந்தோட்டத்துக்கார அய்யன் வந்திருப்பதில் அவளுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. மேலே, அட்டாலியில் இருந்த கிணத்துக்கடவுப் பாயை எடுத்து, திண்ணையில் விரித்தாள்.

“வாங்கய்யா... சொல்லி அனுப்பி இருந்தா, அவங்கப்பனே வந்திருப்பாருங்களே? இருங்க, காப்பியப் போட்டு எடுத்தாரேன்!”

“அட புள்ள... அதுக்கென்ன இப்போ! ஆத்தா இங்க இருக்காளான்னு பாக்க வந்தம்புள்ள!!”

“இங்க வல்லீங்களே... இருங்க, நான் வேணா ஒரு எட்டு மூலையூட்டுல இருக்காங்களான்னு....”

“வேண்டாம் புள்ள... அங்க எல்லாம் அவ போமாட்டா...”

மீண்டும் வீட்டுக்கு வந்தவர், திண்ணையிலேயே அமர்ந்து விட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு செருப்பைப் போட்டுக் கொண்டு புறப்படலானார்.

வீட்டில் இருந்து, கொங்கல் நகரம் ஆறேழு மைல் இருக்கும். தெற்கே இருக்கும் பள்ளத்தைக் கடந்து, அணிக்கடவு, இராமச்சந்திராவரம் கடந்து, நாகூர்க்காரன் தோப்பைக் கடந்துவிட்டால் தன் மகள் பரிமளாவின் தோட்டம். அப்பச்சியும், அமுச்சியும் பரிமளாவின் தோட்டத்துக்குச் செல்வதென்றால், எப்போதும் நடந்து செல்வதுதான் வழக்கம். கண்ணை இறுகக் கட்டிவிட்டாலும், சரியாகப் போய்ச் சேர்ந்துவிடும் அளவுக்கு பழக்கப்பட்ட தடம் அது.

”டொக்... டொக்...”

“டே மணியா... உங்கம்மாவை எழுப்புடா... சுண்டாச்சட்டியில இருக்குற மொளகாப் பொடிய சீக்கிரம் எடுக்கச் சொல்றா...”, அப்பா என்னை எட்டி ஒரு உதைவிட்டார். அப்பா எள் என்றால், அம்மா எண்ணெயாக இருந்தாள்.

சாளை விளக்கெதுவும் போடாமல், டக்கென அடுப்படிக்குச் சென்று, ஒரு சின்னக் குண்டாவில் எண்ணெய் ஊற்றிக் காய்ச்ச ஆரம்பித்தாள். அப்ப, கையில் ஈட்டியுடன் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். நான் ஓடிப் போய், அம்மாவின் பின்னால் நின்று கொண்டேன்.

சிறிது நேர இடைவெளிக்குப் பின், மீண்டும்.... “டொக்... டொக்...”

இம்முறை வாய்திறந்தார் அப்பா, “யார்றா அது இந்த நேரத்துல?”

“நாந்தேனுங்க... மாப்புளை... நாந்தேனுங்க...” அம்மா, என்னைத் தள்ளிவிட்டு ஓடினாள் பெரிய கொட்டத்துக் கதவை நோக்கி.

“இதேனுங்கப்பா..... உள்ளுக்கு வாங்க...”, அம்மா படபடத்தாள். களத்து மேட்டில் இருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து முன்வாசலில் போட்டார் அப்பா.

“மாமா, மொதல்ல ஒக்காருங்க... நீ போயி எதனாப் போட்டு எடுத்துட்டு வா மொதல்ல...”, அம்மாவை விரட்டினார் அப்பா. அப்பிச்சி, தன் உருமாலையைத் தலையில் இருந்து எடுத்து உதறிக் கொண்டே உட்காரலானார்.

“ஏனுங்... கடைசி வண்டிய உட்டுப் போட்டீங்ளாக்கூ? புக்குளத்து பெரிய பாப்பாத்தி ஊட்ல இருந்துட்டு வர்லாமுங்ளே?”

“அப்ப, அவ இங்க வருலீங்ளா மாப்ள? வடக்க, ஊர்லிருந்துதானுங் வர்றேன்...”, மனிதர் ஆறடி உடலை ஆறுசாண் அளவுக்கு குறுக்கப் பார்த்தார். உடல் ஒருமுறை சிலிர்த்தது. கைகள் நடுங்கின. கூடவே, அம்மாவின் ஓலமும் பீறிட்டது.

“எழவு, நீயேண்டி இப்ப ஒப்பாரி வெக்கிறே? என்னாயிடிச்சின்னு, கேட்டும் கேக்காம இப்ப...?”,

அப்பாவின் குரலையும் தாண்டி, அம்மாவின் அலறல் ஆர்ப்பரித்தது. “ஏந்தேன் இப்படிச் செய்யுறீங்களோ? பெத்த புள்ளையும் உட்டுப் போட்டு, கட்டுனவ பொறகால போயிட்டான்... நீங்களும் எட்டுக்கேழுதரம் எங்கம்மாவை... நான் இந்த நாயத்தை எங்க போய்ச் சொல்வேன்... எனக்குன்னு ஊருசனம் உண்டா? ஒன்னா??”

அம்மாவின் ஓலம் கேட்டு, பக்கத்து சாளையில் இருந்து நாகராசண்ணனும் செல்வராசண்ணனும் வந்திருந்தார்கள்.

“நான் ஒன்னுஞ் சொல்லலைங்க மாப்ள... நான் கடலைக்காட்டுக்கு நொவாக்ரானுமு, பருத்திக்கு சிம்புசுமு வாங்கலாம்ன்னு மேக்க போயிருந்தேன்... போன எடத்துல அவனுமு அகசுமாத்தா வந்திருந்தான்... வாங்க ஒரு எட்டு போலாமுன்னு தோட்டத்துக்கு கூப்ட்டான்... போய்ட்டு வந்தேன்... அதுக்கு, இவ....”

“பொண்டாட்டி பொறகால போனவம் பின்னாடிப் போனா, கேக்காம வேற என்ன பன்றதாமா? எங்கம்மா இனி எந்தக் குட்டையில வுழுந்தாளோ? எந்த வாய்க்கால்ல வடக்கமுன்னாப் போனாலோ??”, ஒப்பாரி பெருவேகமெடுக்க எடுக்க, அப்பச்சி நிலைகுலைந்து போனார்.

“ஏனுங் மாமா? நெம்பப் பேசிப் போட்டீங்களா?? தெகிரியமா இருங்கோ... அப்படியெல்லாம் அத்தை உங்களைத் தன்னந்தனியா உட்டுப் போட்டு எதுஞ் செஞ்சுற மாட்டாங்.... டே நாகராசு, மயிலை ரெண்டையும் புடிச்சுக் கட்டுங்டா வண்டிய...”

கண்ணிமைக்கும் நேரத்தில், மயிலைகள் அந்த ரேக்ளா வண்டியைச் செலுத்தத் தயார் நிலையில். நாகராசண்ணன், காளைகளின் கயிற்றைக் கையில் பிடித்தபடி வண்டியைத் தன்பிடியில் வைத்திருந்தார்.

“மாமா, வாங்க நீங்களுமு எங்ககோட... இங்கிருந்தா, அவ ஒப்பாரி வெச்சே உங்களைக் கொன்னுபோடுவா..”

வண்டி வல்லக்குண்டாபுரத்தைத் தாண்டி, அணிக்கடவு இட்டேரியில் சீறிப் பாய்ந்தது. யாரும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.

”கிழவி, அரசூர் வாய்க்காலில் விழுந்து தொலைத்திருந்தாலும், சுல்தான்பேட்டையில் இந்நேரம் விபரம் தெரிய வந்திருக்கும். ஒன்று, கிணறுகளில் விழுந்திருக்க வேண்டும். அல்லது, மருந்தைக் குடித்துவிட்டுத் தோட்டங்காடுகளில் விழுந்து கிடக்கும். விடிந்தால், எல்லாம் தெரிந்துவிடப் போகிறது” என்கிற நினைப்பில் இருந்தார், மாமாவின் முன்னால் பீடி பிடிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கும் அப்பா.

“என்றா நாகராசூ, அதென்ன? எதுத்தாப்ல எதோ வருது போல இருக்கு??”

“ஆமாங் சித்தப்பா... ஆரோ, மொட்ட வண்டீல வாறாங்ளாட்ட இருக்கூ?”

“நீ இழுத்துப் புடிச்சு ஓட்டு வாக்கலாம்... ஆருன்னு பாக்குலாம்...”, வண்டியில் இருந்த எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

“சின்னானுமு மந்தராசலனுமாட்ட இருக்குங் மாப்ள!”, கம்மிய குரலில் அப்பச்சி. வண்டியை நிறுத்திவிட்டு முதலில் இறங்கினார் அப்பா.

“டே, சின்னா... என்றா, எதுனாத் தகவலு கெடச்சுதா?”

“என்ன தகவலுங் மச்சான்? பண்றதும் பண்ணிப் போட்டு... நீங்க பண்றது வெகு ஞாயமாக்கூ??”

“தெள்ளவாரி... புடுச்சி, முதுச்சிப் போடுவனாக்கூ... யாருகிட்ட, என்றா பேசுற?”

“பின்ன என்னங்க மச்சான்... பெரீப்பனக் கூட்டீட்டு வந்து உங்ககிட்ட வெச்சிட்டு.... அங்க பெரீம்மா, அழுது பொரண்டு ஊரைக் கூட்டீர்ச்சல்லோ? செரி... செரி... வாங்க அல்லாரும்... ஊட்டுக்குப் போலாம்....”

மொட்டை வண்டி மெதுவாகப் பின்னால் வந்து கொண்டிருக்க, எங்கள் ரேக்ளா பறந்தது வடக்கு திசையில். தெரு முனையிலேயே அப்பாவும், அப்பச்சியும் வண்டியில் இருந்து இறங்கிக் கொண்டனர். நாகராசண்ணன் வண்டியை வீதியில் நிறுத்தவும், நான் குதித்து வேகமாக ஓடினேன்.

நிறையப் பேர் கூடி இருந்தார்கள். “நான் கண்ணுக்குள்ள வெச்சிப் பார்த்துட்டு இருந்தனே எம்மவராசன? இப்படி உட்டுப் போட்டுப் போய்ட்டாரே?? இந்த பாழாப் போன முண்ட, நான் எப்பவும் பேசுறதுதான? ஒரு அடி வெச்சாப் போச்சு... நான் இழுத்துக் கட்டீட்டு சும்மா கெடப்பனே??

சாயுங்காலம் ஊட்டு வந்த மனுசனைக் கண்டுக்காம ஊட்டுக்குள்ள இருந்தது ஒரு குத்தமா? இப்பிடி நட்டாத்துல உட்டுப் போட்டு போய்ட்டாரே மவராசன்??”, இப்படியாக அமுச்சி ஒப்பாரியுடன், மற்றவர்களும் அழுதழுது மூக்கைச் சீந்திக் கொண்டிருந்தார்கள்.

அப்பா வந்து திண்ணையில் அமர்ந்தார். பொடக்காளியில் அடைத்து வைக்கப்படாத கோழி, சேவல்களைப் பிடித்து அடைத்துக் கொண்டிருந்தார் அப்பச்சி. நாங்கள் வந்திருப்பதை யாரும் கவனித்திருக்கவில்லை. பொறுமையாக இருந்த அப்பா, மெளனத்தை விடுத்துக் கத்தினார் பெருங்குரலில்.

“எழவு, கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்னாயிப் போச்சுன்னு இப்ப?? ஏனுங்க அத்தை, மனசுல இவ்வளவு பாசத்தை வெச்சீட்டு... மொதல்ல, ஊடுகள்ல ஆம்பளைகளைப் பேசுறதை எப்ப நிறுத்தப் போறீங்க அல்லாரும்?”

மயான அமைதி!

12/12/2010

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கான ஓர் ஒன்று கூடல்!

கண் விழித்துப் பார்த்தேன்;
மாலை நேரத்து இருள் கப்பியிருக்கக் கண்டேன்!
ஒன்றுகூடல் நேரம் நெருங்கி வருதலுணர்ந்தேன்!!

அன்புநிகர் உறவுகளைக் காண ஓடினேன்;
உந்தின் மேலமர்ந்து ஓட்டியபடியே ஓடினேன்!
தெருமுழுக்க உந்துகள் நின்றதைக் கண்டு அகமகிழ்ந்தேன்!!

அங்குமிங்கும் நோக்கிய விழிகள் வாழ்த்துக் கூறின;
வியப்புத்தான், வியந்தபடி குதூகலித்தேன்!
இதோ தமிழர் கூட்டம்..மெய் சிலிர்த்தேன்.. அகமகிழ்ந்தேன்!!!

புதிய முகங்கள் கண்டபடியே நகர்ந்தேன்;
ஒவ்வொருவரும் அதையேதான் உணர்ந்தோம்!
சொல்வதற்கு நிறைய இருக்கிறது...போதுமிது இப்போதைக்கு!!!

கைகள் பற்றிக் கொண்டோம்;
தமிழர் திருநாள் பற்றின நகர்ச்சில்லுகள் பல கண்டோம்!
சார்ல்சுடன் திருவிழா நடத்திடப் பூண்டோம் குதூகலம்!!
தமிழர் திருவிழா நடத்திடப் பூண்டோம் குதூகலம்!!!

வட கரோலைனா மாகாணம், சார்லட் பெருநகரத்தின் தென்பகுதியில் உள்ள பாலண்ட்டைன் பகுதியில் இருக்கும், சார்லட் பெருநகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி. செந்தாமரை பிரபாகர் அவர்களது இல்லமானது, டிசம்பர் பதினோராம் நாள் மாலை விழாக் கோலம் பூண்டது.

அடுத்த ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழர் திருவிழாவானது, தென் கரோலைனா மாகாணத்தின் சார்ல்சுடன் நகரில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவது நாம் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக, பேரவை மற்றும் திருவிழாவைப் பற்றின விபரங்களை உள்ளூர்த் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த ஒன்று கூடல்.

அதையொட்டி, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவர் மற்றும் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார். சார்லட் பெருநகர தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அறிமுக அளவளாவலைத் தொடர்ந்து, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி. செந்தாமரை பிரபாகர் அவர்கள் அறிமுகவுரை ஆற்றிப் பேசினார். அவரைத் தொடர்ந்து, முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள், கிட்டத்தட்ட இரண்டு ம்ணி நேரம் தொடர்ந்து பல தகவல்களை அளித்துப் பேசினார். உள்ளூர்த் தமிழர்களும், வெகு ஆர்வத்துடன் கூடுதல் விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

வழமை போலவே, பதிவர் பழமைபேசியும் தன் பங்குக்குப் பொடி வைத்துப் பேசினார். எதிர்வரும் ஆண்டுகளில், சார்லட் நகரில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் விழா நடத்துவதற்கான சாத்தியம் மற்றும் அதற்கான அவசியம் குறித்துப் பேசினார். அப்படியொரு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமாயின், இத்திருவிழாவிற்கு, நாம் நம் பங்களிப்பைச் செய்து முன் அனுபவத்தைப் பெற்றிடுவது வெகு அவசியம் என்பதையும் வலியுறுத்திப் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இறுதியில், தமிழ்ச் சங்கத்தினரின் கூட்டாஞ்சோறு படைக்கப்பட்டது. எண்ணற்ற உணவு வகைகள், படையலில் இடம் பெற்றன. உருசித்துப் புசித்தனர் கூடிக் குலாவிய தமிழர் கூட்டம். அத்தோடு நில்லாமல், எதிர்வரும் பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்திடும்வண்ணம் ஆலோசனைகளும் நிகழ்ந்தேறியது. மீண்டும் கூடுவதெப்போ என்கிற சிந்தனையோடு விடை பெற்றுச் சென்றனர் அன்புத்தமிழர் கூட்டம்!!

தமிழால் இணைந்தோம்!

12/11/2010

மாபெரும் பதிவர் சங்கமம்! ஈரோட்டுத் திருவிழா!!

விழைதல் என்றால் விருப்பம். அப்படியாக, விருப்பப்பட்டு நடாத்தும் எந்தவொரு நிகழ்வும் விழாவாக நம்மிடையே உருவெடுக்கிறது. மகிழ்ச்சி, நல்லுறவு, நெறிமுறை, கொண்டாட்டம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் விழா என்பது.

மகிழ்ச்சி மற்றும் இன்பம் மட்டுமே நோக்கமாய் இருப்பின், அது ஒரு களிக்கை. வேடிக்கை மற்றும் உவகை மட்டுமே நோக்காய் இருப்பின் அது ஒரு கேளிக்கை. தன்னைச் சார்ந்தவனோடு நல்லுறவு பேணி, சமூக ஓட்டத்தின்பால் கவனத்தைச் செலுத்தி விழாவண்ணம் காப்பது விழா என்பர் அறிஞர் மக்கள்.

அவ்வகையிலே, ஈரோட்டு நண்பர்கள் இரண்டாம் ஆண்டாக, பெரியதொரு விழாவாக, 2010 பதிவர் சங்கமம் எனும் பதிவர் திருவிழாவை எதிர்வரும் டிசம்பர் இருபத்தி ஆறாம் நாள் சீரோடும், கொங்கு மண்ணுக்கே உரிய சிறப்போடும் நடத்தத் திட்டமிட்டு, சிரமேற்கொண்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெரு மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

காலத்தின் தேவை இந்த விழா! பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றெல்லாம், மாற்றங்கள் பெரு வேகத்தில் நடந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், மாற்றத்தைப் புரிந்து தன்னைத் தயார் செய்து கொள்ளக்கூடிய கால அவகாசம் வாய்க்காத, இக்கால கட்டத்தின் மாபெரும் தேவை இத்தகைய விழாக்கள்!

தமிழகத்தை, மடியா விழாவின் யாணர் நன்னாடு எனப் புறநானூறு கூறுகிறது. மடியா என்றால் ஆண்டு தோறும் எனவும் பொருள் கொள்ளலாம். அல்லது, மடியாத என்றும் பொருள் கொள்ளலாம். சிறப்பை இழக்காத விழாக்களால் புதுமை பெற்றுச் சிறந்த நன்னாடு தமிழகம்!

சிலப்பதிகாரத்திலே, இந்திர விழாவைப் பற்றிச் சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். மக்களொடு மக்களாக, மக்கட்பிணைப்பை வலியுறுத்தி, நல்லுறவைப் பறைசாற்றி, சமத்துவத்தை சீர்தூக்கிப் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி நடத்தியதுதான் இந்திரவிழா.

ஆனால், இன்றைக்கு நடக்கும் விழாக்களின் மையக்கருத்துதான் என்ன? பெரும்பாலான விழாக்களின் உள்நோக்கம் ஒன்றாகவும், வெளிநோக்கு ஒன்றாகவும்தானே இருக்கிறது?? தனிமனித விழாக்கள் அவை என்பதுதானே உண்மை?? இப்படியான ஒரு காலகட்டத்தில், பொது நோக்கோடு நடாத்தப்படுகிற விழாக்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

இன்றைக்கு, அவனியெங்கும் அன்பால் பிணைக்கப்பட்ட தமிழர்களைக் காண்கிறோம். இணையப் பெருவெளியில் எவ்வளவோ களங்கமிகு இடர்கள் நடந்து கொண்டிருந்தாலும், அதை எல்லாம் கடந்து நட்புக் கயிற்றால் பிணைக்கப்பட்டோர் ஏராளம். ஒருவருக்கொருவர் உதவிகள் பல செய்து கொண்டும், தத்தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொண்டும், தத்தம் மரபுசார் விழுமியங்களைப் பேணி வருவது கண்கூடு. இவர்களின் பார்வை, ஈரோட்டுத் திருவிழாவின்பால் விழுந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு, தமிழகத்தின் மூலை முடக்குகளில் எல்லாம் பதிவர்களும் வாசகர்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள் என்பதும் மகிழ்சிக்குரிய ஒன்றாகும். புதியனவற்றை புரிந்து ஏற்றுக்கொண்டு, அதன் சாதக அம்சங்களை தனதாக்கிக் கொள்தல் மட்டுமே ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க முடியும்.

மேலும்,ஆண்டுதோறும் ஈரோடு மாநகரில் திருவிழா என்பதை மாற்றி, தமிழகத்தின் இன்னபிற ஊர்களில், ஆண்டுக்கொரு ஊராகத் தெரிவு செய்து நடாத்துதலே தமிழும் தமிழகமும் சார்ந்த வலையுலகப் பயனாளிகளுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.

ஆண்டுதோறும் வேறு வேறு ஊர்கள் எனும் போது, பயனாளிகளுக்கு அந்த ஊரைப் பற்றிய தகவல்கள், வரலாற்றுச் சிறப்புகள், மரபு, கலை, இலக்கியம், கலாசாரம், பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். அதுமட்டுமல்லாது, உள்ளூர்ப் பதிவர்களின் தலைமைப் பண்புக்கு சிறப்புக் கூட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமையக் கூடும்.

சென்ற ஆண்டு, நான் கலந்து கொண்டதில் அறிந்து கொண்ட தகவல்கள் மற்றும் பெற்ற பேறினை எம் வாழ்நாள் முழுமைக்கும் மறக்க இயலாது. அப்படிச் சிறப்பாக அமையப் பெற்றது அந்நிகழ்ச்சி. அதைப் போலவே, இவ்வாண்டும் சிறப்பாக அமைய எம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறேன்.

வலைஞர்களே, ஈரோடு பதிவர் திருவிழாவிற்குச் சென்றிடுவீர்! கட்டமைப்பு வலுவடையத் துணை புரிந்திடுவீர்!!



12/04/2010

நல்லாத்தான் காது குத்துறாய்ங்க....

(c-குணுக்கு, d-சந்திரபாவலி) 
(கம்மல், கடுக்கண், சிலுவணி, காதுப்பூ, பூடி)
(தண்டொட்டி)

அலுக்குத்து
இட்டடுக்கி
கர்ணபூரம்
காதுச்சில்லறை
காதுப்பூ
குணுக்கு
கொப்பு
சந்திரபாவலி
சல்லடைமுருகு
சிலுவணி
தட்டுக்குச்சு
தண்டொட்டி
தளப்பம்
தாடங்கம்
தாளுருவி
கடுக்கன்
கம்மல்
வயிரவாளி
பூடி (பொகடி)
தோடு

 "ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் அமைப்பேன்!!! காது குத்துறாய்ங்கல்ல?  மேல சொன்னதுகளையும் வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க... போட்டுக்கலாம்!!!

11/29/2010

வாடிக்கையாளனே முதலாமாவன்!

Customer is first! இதை ஆங்கிலத்துல சொன்னா கேட்கும் உலகம், சில நேரங்களில் தன் எழுத்துகளை வாசிக்கும் வாடிக்கையாளனைச் சிறப்பிக்க மறந்துவிடும். பதிவர்முகம் கொள்வதற்கு முன்பாகவே இதை உணர்ந்த இவன், ஒரு போதும் பதிவுகள் வாயிலாகவோ அல்லது பின்னூட்டங்களிலோ கடிந்து கொண்டது கிடையாது.

அதே அளவுக்கு, எழுத்தை வாசித்தவர்களும் எம்மைச் சிறப்பாக கையாண்டு வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது. இந்த இரு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களில் நான் கொண்ட மனநிறைவுக்கு அளவே கிடையாது. நன்றிகள் உளமாற!

கிட்டத்தட்ட இரு மாத அளவிலான கட்டாயக் கடும் பயிற்சியை (immersion program) மேற்கொள்ள இருப்பதால், இன்று முதல் தற்காலிகமாக இருமாதங்களுக்குக் கடை மூடப் படுகிறது. வாய்ப்பு இருப்பவர்கள், போசுடன் அல்லது பெட்ஃபோர்டு நகரில் சந்திக்க வாய்ப்புக் கொடுத்தால் அகமகிழ்வேன். அடுத்த இரு மாதங்களும், அங்கேதான் இவனுக்கு வாசம்!!! customer - வாடிக்கைக்காரன், client - கட்சிக்காரன், consumer - நுகர்வோன்!

11/28/2010

ஒன்றி வாழ்தல் (living together)

கூடி வாழ்ந்தோம்;
இணைந்து வாழ்கிறோம்;
ஒன்றியும் வாழப் பார்க்கிறோம்;
உள்ளத்தில் பற்று இருப்பதால்!

கூடி வாழ்தலும் பொய்;
இணைந்து வாழ்தலும் பொய்;
ஒன்றி வாழ்தலும் பொய்;
கள்ளத்தில் உள்ளம் இருந்தால்!!

Let's practice what we preach!!

(பொறுப்பி: அண்ணன் கு.கு நிம்மதியா எப்படி இருக்கலாம்? இஃகி! இஃகி!!)

11/26/2010

கைத்தடி (HUCKLEBERRY FRIEND)

ஆசுதிரேலியாவில இருந்து பதிவர் மணிமேகலை அவங்க, Huckleberry Friend எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கேட்டு இருந்தாங்க. நமக்கு இருக்கிற கடுமையான வேளைப்பளுவுக்கு இடையில, அதற்கான என் தரப்பு விபரங்களை உடனே கொண்டு சேர்க்க முடியலை.

அதான், இந்த நன்றி நவிலும் நாளுக்கான விடுப்பைப் பாவிச்சிகிட்டு இந்த இடுகைய இடுறேன். முதல்ல, அவங்களுக்கு சொல்ல விரும்புறது, ஒரு கிராமத்தான்கிட்ட இது போலக் கேட்டா, கிராமத்துத்தனமாத்தான் விடை வரும். இஃகி!

சரி, Huckleberry Friend அப்படின்னா என்ன? எளிமையானவனாக இருக்கலாம்; பெரிய பின்புலம் இல்லாதவனாவும் இருக்கலாம்; ஏழ்மையானவனாகவும் இருக்கலாம்; பெரிய படிப்பறிவு இல்லாதவனாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் அற்பனாகவும் இருக்கலாம்.

அப்படி இருந்தும், இக்கட்டான நேரங்கள்ல, ஏழைப்பங்காளனா வந்து உதவக் கூடிய ஒருவரைச் சொல்றதுதாங்க இந்தப் பதம். பசி, பட்டினி, மற்ற உணவுகள் கிடைக்காமை போன்ற நேரங்கள்ல நாம, தோட்டங்காட்டுல இருக்குற இரக்கிரியப் புடுங்கி கடைஞ்சி உங்றது இல்லையா? அது போலத்தானுங்க இதுவும். எந்த நேரத்துலயும் பசிக்கு உதவுற ஒரு கனிதான். அதை ஒப்பிட்டு, அவசரத்துக்கு உதவுற நண்பன்னு சொல்லிச் சொல்றதுதான் இந்த ஆங்கிலப்பதத்தின் பின்னணி.

சரி, இனி நம்ம வாழ்க்கையில அமைஞ்ச Huckleberry Friend பத்திப் பேசுலாமுங்க. ஆமாங்க, இது எனக்கு மட்டும் அல்ல; ஊர்ல சமகாலத்துல இருந்த எல்லாருக்குமே இதானுங்க Huckleberry Friend. அது என்ன??

ஆமாம்; சிஞ்சுவாடி காளியாத்தா கோயல் நோம்பிக்கிப் போனா வாங்குவேன். தை நோம்பியப்ப மாலகோயலுக்குப் போனா வாங்குவேன். தைப்பூசத்தப்ப செஞ்சேரிமலை தேரோட்டத்துக்குப் போகும் போதும் வாங்குவேன். முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்குப் போனாலும் வாங்குவேன். கடைசியா, அம்பது நயாப் பைசாவுக்கு வாங்கினதா ஒரு நினைவு. அது என்ன??

அண்ணாக்கவுத்துக் கொத்துதானுங்க அது. அரைஞாண் கயிற்றுல தொங்கவுடுற அந்தக் கொத்துல மூணு சிறு பொருட்கள் இருக்குமுங்க. முதலாவது, சின்ன இடுக்கி. அதுல எதையும் பிடிச்சி உருவலாம், பிடுங்கலாம். இரண்டாவது, காதூசி. சும்மா ஒரு ரெண்டு விரக்கடை அளவுக்கு நீட்டமா வந்து, முனையில சின்னதா மடிப்போட இருக்கும். மூனாவதா, முள்ளூசி. சின்ன ஊசிங்க, அதுல கால்ல ஏறுன முள்ளைக் கடைஞ்சி எடுக்கலாம். பல் குத்தலாம்.

இதுதானுங்க என்னோட இடருய்தி. எந்த இடைஞ்சல்னாலும், இதைத்தான் முதல்ல பாவிப்பேன். கால்ல முள் ஏறிடுச்சா, இவர்தான் கை கொடுப்பாரு. காதுல குப்பை, அழுக்கு எடுக்கணுமா, இவர்தான் உதவுவாரு. பல் குத்தணுமா, இவர்தான்! பேனாவுல நிப்பைப் புடுங்கணுமா, இவர்தான். சாவி இல்லாத ஊட்ல பூந்து ஆட்டையப் போடணுமா, இவர்தான்! இப்படி, தேவைங்ற போது வந்து நிக்கிற இடருய்திங்க இது! கிட்டத்தட்ட நான் கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும், என்னுடலின் ஒரு அங்கமா இருந்தாருங்க இவரு!

அடுத்துச் சொல்லப் போனா, காக்காப் பொன்னு! இதுவும் பல வழிகள்ல நமக்கு உய்வனா இருந்தாருங்க. குறிப்பா, இளம்பிராயத்துல, பெண் தோழமை கிடைக்க உதவி செய்தது இதான்! ரேவதி, சுகுண சரசுவதி, சந்திரலேகா, கீதா, சாந்தாமணி அப்படின்னு ஊர்ல இருக்குற பொண்ணுக எல்லாம் நம்ம மேல ஒரே அன்பா, பந்த பாசமா இருப்பாங்க. எல்லாம், இந்த காக்காப்பொன்னு செய்த உதவிதான்!

ரேவதி அவங்க தோட்டத்துக் கொய்யாப்பழம் வேணுமா? கொஞ்சம் காக்காப்பொன்னு கொடுத்தாப் போதும், இனிப்பான கொய்யாப்பழம் என்னோட இடம் தேடி வரும். வீதம்பட்டி மாரியாத்தா கோயில் நோம்பிக்கு செய்த தினைமாவும், அரிசிமாவும் வேணுமா, சாந்தாமணிக்குக் கொஞ்சம் அள்ளிக்குடு காக்காப்பொன்னை... இப்படி நெம்ப உதவிகரமா இருந்துச்சுங்க இந்த காக்காப் பொன்னு!

எப்பவும் என்னோட பைக்கட்டுல காக்காப்பொன்னு கைவசம் இருக்கும். அது என்ன இந்த காக்காப்பொன்னு??

வாய்க்கா மேட்டுல இருக்குற கருங்கல்லு, கிணத்து மேட்டுல இருக்குற கருங்கல்லு, இப்ப்டித் தோண்டி எடுத்து கருங்கல்லுல அங்கங்க, மினுமினுன்னு மின்னிகிட்டு இருக்குமுங்க இந்த காக்காப்பொன்னு. மேல சொன்ன முள்ளூசிய வெச்சி சன்னமா நோண்டுனா, பாளம் பாளமா பெயர்ந்து வருமுங்க இந்த காக்காப் பொன்னு.

எந்த அளவுக்குப் பெருசா பேர்த்து எடுக்குறீங்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கான கிராக்கி கூடும். இதை அவிங்கங்க, பள்ளிக்கூடத்துப் பைக்கட்டுல ஒரு பொன்னாப் பாவிச்சு வெச்சிக்குவாங்க. எப்பவாச்சும் சிலேட்டுப் பென்சில் இல்லாதப்ப, அதை வெச்சி எழுதிக்கவும் செய்யலாம். இவர்னால, நான் அடைஞ்ச பலன்கள் கொஞ்ச நஞ்சமில்லங்க. ஆகவே, இவரும் நமக்கு ஒரு இடருய்திதானுங்க!

கொஞ்சம் வளர்ந்தவுட்டு, அமைஞ்ச Huckleberry Friend யாரு? கைத்தடிதானுங்க அது. வேலூர்ப் பள்ளிக்கூடத்துல இருந்து எங்க ஊட்டுக்கு அஞ்சு மைல். தினமும் அரக்கன் இட்டேரி வழியா நடந்து போய்ட்டு வரணும். அப்ப, போகும் போதும் சரி, வரும் போதும் சரி, எங்க எல்லார்த்து கையிலயும் கைத்தடி ஒன்னு இருக்கும்.

இது சமகாலத்துல வளர்ந்த, பெரியவங்களுக்கும் பொருந்தும். தோட்டங்காட்டுக்குப் போய் வரும் போதெல்லாம் கைத்தடியோடத்தான் போவாங்க, வருவாங்க. மூணு அடி நீளத்துல இருக்குற கைத்தடி எதுக்கும் உதவுமுங்க. பாம்படிக்கலாம்; ஓணானைப் புடிச்சி விளையாட்டுக் காட்டலாம். உயரத்தில தொங்குற கிளையக் கீழ சாச்சி, நெல்லிக்கா, சூரிக்கா பறிக்கலாம். சமயத்துல, லொள்ளுப் பேசுறவனையும் ஒரு காட்டுக் காட்டலாம். இடருக்கு உய்பவன் இடருய்தி.

Huckleberry Friendன்னு எப்படி ஒப்புமைப்படுத்திச் சொல்றாங்களோ, அதே போல இந்தக் கிராமத்தானும் அந்த மாதிரி அன்பு நண்பர்களைச் சொல்றது, அவிங்க என்னோட கைத்தடின்னு. இப்பத்தான், கைத்தடி அப்படிங்றதை இளக்காரமாப் பாவிக்கிறாய்ங்க. என்னைப் பொறுத்த மட்டிலும், கைத்தடி, கைத்தடிதானுங்க!!

11/25/2010

தாழி


பிறந்த மண்ணை அலசி ஆராய்வதில் கிட்டும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்றே சொல்வேன். அதுவும், கொங்கு மண்ணை அலசுவதில் அடியேனுக்கு என்றும் அளப்பரிய மகிழ்ச்சிதான். கூகுள் வரைபடத்தில், நான் பிறந்து திரிந்த மண்ணைக் கூர்ந்து நோக்கினேன்.
லட்சுமாபுரம்

சிறு கூரையுடன் இருந்த இடம், ஒரு கைச்சாளையாக மாறி இருக்கக் கண்டேன். லெட்சுமாபுரம் எனும் அந்த அழகிய ஊரைச் சுற்றிலும் தோப்புகள் சூழக் கண்டேன். பரம்பிக்குளம் ஆழியாறு பிரதானக் கால்வாய் கரைபுரண்டு செல்வதைக் கண்டேன். அகமகிழ்ந்தேன்.
கூரைக்கல்லு

அமெரிக்கர்கள் நன்றி நவில்தலை சிரமேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தக் கொங்கனும் தன் மண்ணுக்கும் மக்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.

கொங்கு நாட்டுக் கிராமங்களில், பள்ளம், படுகை, பாம்பேறி, கட்டுத்தரை, கோம்பை மேடு, குறுக்கு மேடு, இட்டேரி என எங்கும் நினைவுச் சின்னங்கள் வியாபித்திருப்பதை இன்றும் காணலாம்.
குத்தாரிக் கல்லு

சரி, அப்படி என்னதான் தோட்டங்காடுகளில் இருக்கின்றன? குத்தாரிக்(cairn)கற்கள், குழிக்(kistvaen)கற்கள், கூரைக்(Dolmen) கற்கள், வட்டக் (stone circle)கற்கள், வீரக்கல், மாசுதிக்கல் எனச் சொல்லும் பல்வேறு வகையான நினைவுக்கூறுகளை நாம் காணலாம். சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, நெகமம், அந்தியூர், சடையகவுண்டன் புதூர் முதலான பகுதிகளில் இவற்றை மிகுதியாகக் காணப்பெறலாம்.
குழிக்கல்லு

அமராவதி, தளி ஆகிய ஊர்களில் இருந்த சில இளைஞர்கள் பொழுதுபோக்காய் இவற்றை ஆராய வெளிப்பட்டதில், இக்கற்களுக்கு உள்ளாகவோ அல்லது கற்களுக்கு அடியிலான நிலப்பகுதிகளிலோ தாழிகள் இருந்தன என்றும் கேள்விப்பட்டது உண்டு.
வட்டக்கல்லு

இத்தாழிகளில், இறந்தவர்கள் உடலோடு, அவர்களுக்குப் பிடித்தமானவற்றையும் இட்டு வைத்த வழக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி வைக்கப்பட்டு இருந்த பொருட்களில், விலைமதிப்பற்ற நகைகளும் உண்டு.  இத்தாழிகளை முதுமக்கட்தாழிகள் எனப் பாடப்புத்தகத்தில் படித்ததும் உங்களுடைய நினைவுக்கு வரலாம்.

நீங்கள் இப்படியான இடங்களைப் பார்க்க நேரிட்டால், அவற்றை படம் எடுத்து அனுப்பும்பட்சத்தில், நான் மிகவும் நன்றி உடையவனாய் இருப்பேன்.

11/03/2010

மாமலை

எதேச்சையாய்
ஆடியைப் பார்க்கையில்
காண நேரிட்டது
Respected Teacher
I am
suffering from fever
So I am unable
to come to school
Please grant me a
leave for one day.
Yours Obediently,
Pazhamaipesi என
அன்று சொல்லத் துவங்கி
இன்று மலையாய்க் குவிந்து
முகத்தில் வழிகிறது பொய்!

11/02/2010

அமெரிக்காவில் கழுதையா? யானையா??




இன்றைய இரவின் நாயகன்

வேழம்
களிறு
பிடி
களபம்
மாதங்கம்
கைம்மா
உம்பர்
வாரணம்
அஞ்சனாவதி
அத்தி
அத்தினி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
எனும்
யானையா?

இராடம்
கத்தை
கர்த்தபம்
பெருவாயன்
எருவை
எனும்
கழுதையா??


அமெரிக்காவின் நாளைய கதாநாயகன் மார்க் ரூபியோ!

11/01/2010

சின்னப் பொண்ணு

அந்த இரண்டாவது பாட்டு... நெஞ்சைக் கலங்க வெச்சிடுச்சு மக்கா!!!

10/31/2010

FeTNA: இச்சார்ல்சுடனில் கோலாகலத் துவக்க விழா

இச்சார்ல்சுடன்(Charleston, SC). ஏசுலி ஆறும் கூப்பர் ஆறும் அட்லாண்டிக் பெருங்கடல் நோக்கிப் பாய, அவற்றுக்கு இடையில் தீபகற்பமாக, எழிலுற அமைந்ததுதான் பசுமைநிறை இச்சார்ல்சுடன் பெருநகரம். கூப்பர் ஆற்றைக் கடக்கையில், பிரம்மாண்டமான கட்டமைப்புக் கொண்ட ஆர்த்தூர் ரேவனெல் பாலம் நம்மை மறுகரைக்குக் கொண்டு சேர்க்கிறது.

2005ல் கட்டமைக்கப்பட்ட இப்பாலத்தினை வியந்து கண்டோம் நாம். கிட்டத்தட்ட 13,200 அடி நீளம் கொண்ட சாலையை, வானுயர இருதூண்கள் எழுப்பி, அதனின்று கிளம்பும் நூற்றுக்கணக்கான இரும்பு விழுதுகளால் தொங்கவிடப்பட்டுள்ள தோற்றம் நம்மை வியக்க வைக்கிறது.

இச்சார்ல்சுடன் நகருக்குள் நுழைந்தாலோ, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புராதனக் கட்டிடங்களும் நவீனமும் நம்மை “வா, வா” என ஈர்த்துக் கட்டிப் போட்டுவிடுகிறது. ”இங்கேயா, நம் தமிழ் மக்கள் ஒன்று கூடி விழா காணப் போகிறார்கள்?”, என்று எண்ணிப் பார்த்ததுமே நம்முள் உற்சாகமும் ஒருவிதமான வியப்பும் நம்மைக் குதூகலத்தில் ஆழ்த்திவிடுகிறது.

மைய நகரில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஃபாலி கடற்கரை செல்கிறோம். ஆகா! கடல் தேவதைக்கு நிகர் வேறு எவருண்டு? நீண்ட, நெடிய தூய்மையான கடற்கரை. கதிரவன் உதயத்தைக் காண அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி மேடை கடலுள் நீண்டிருக்கிறது. நாமும், கதிரவனுக்குப் போட்டியாய் எழுந்து சென்று அவனது உதயத்தைத் தரிசிக்கக் காத்திருக்கிறோம்.

காத்திருக்கச் செய்து, மெல்ல, மெல்ல, செவ்வொளி கப்பியவிதமாய் தலையைக் கொஞ்சம் கொஞ்சமாய் காண்பித்துக் கொண்டே அவனெழுந்த விதம்... அப்பப்பா... ஒவ்வொரு மணித்துளியும் அட்லாண்டிக் பெருங்கடல் வாசத்துடன் நாம் கண்ட காட்சி, கண்களது ஆயுளை நீட்டித்தது.

அட்லாண்டிக் பெருங்கடலில் காலை நனைக்கிறோம். குளுகுளுவென, நம்மை நனைத்துப் பரவசமூட்டியது. மனம் குதூகலத்தில் துள்ளி எழும்புகிறது. எம் அன்னை மொழியவள் இங்கே கொண்டு வந்து சேர்த்தாளேயென எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து, அதன் நீட்சியாக, தெளிந்து படிந்திருத கடற்கரை மணலில், அங்கே இருந்த நத்தை ஓடு ஒன்றைக் கொண்டு, பெரிய எழுத்தாகத் தமிழ் என எழுதி வைக்கிறோம்.

கடலுக்குள் சென்று, தமிழ், தமிழவளைக் கண் கொண்டு பார்க்கிறோம். காலில் தண்மைக் கடலின் ஆட்சி; கண்களில் தமிழ்க் கடலின் ஆட்சி!! நமது பூரிப்பைக் கண்ட கடலலைகள், தமிழைத் தழுவி அழிப்பது போல்ச் சென்று தழுவாமல் விட்டு வருவதும், மீண்டும் தமிழை அழிப்பது போல்ச் சென்று நாணுவதுமாக நம்மைச் சீண்டி விளையாட்டுக் காட்டியதை என்ன சொல்லி மகிழ்வது?

கடற்கரையினில் இருந்து விடுபட மனமில்லைதான். எனினும், நாம் காணப் போகிற தமிழர் கூட்டத்தின் நினைவு நம்மை ஆட்கொள்ள, அவர்களை நோக்கி விரைய விழைந்தோம்.

காலை பதினொரு மணிக்கெலாம், தென்கரோலைனாவின் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்துள் தமிழர் கூட்டம் தத்தம் குடும்ப சமேதரர்களாய் நுழைந்து கொண்டிருந்தார்கள். ஆம், அடுத்த ஆண்டு தென்கரோலைனா மாகாணம் இச்சார்ல்சுடனில் நிகழவிருக்கும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA)யின் இருபத்தி நான்காம் ஆண்டு விழாவின் நிர்மாணப் பணிகளைத் துவக்கும் விழாவாக, கோவில் நோன்புக்கான கம்பம்நடு விழா போன்றதொரு விழாவாக அமைந்ததுதான் இந்நாள்.

முனைவர் தண்டபாணி, முனைவர் சுந்தரவடிவேலு மற்றும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினர் அனைவரையும் வரவேற்று, அரங்கத்திற்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துவிட்டு, இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.

எந்த ஒரு தமிழ்ச் சங்கத்திற்கும் இல்லாத ஒரு தனித்தன்மை இவர்களுக்கு இருப்பதாக உணர்ந்தேன். விருந்தினர் தவிர, உள்ளூர்ச் சங்கத்தினர் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொளவதை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. அதாகப்பட்டது, ஒவ்வொருவரும் இயல்பாகவே ஏதோ ஒரு பணியை சிரமேற்கொண்டு எளிய புன்னகையுடன் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஒழுங்கு, நம்மை சிந்தனையில் ஆழ்த்தியது.

பெரிய சங்கம் என மார் தட்டிக் கொள்வதில் இல்லை பெருமை; உயிர்ப்பும், தளிர்ப்பும், வீரியமும் எங்கே அதிகம் என்பதில் இருக்கிறது பெருமை! எண்ணிக் கொண்டு இருக்கையில், அனைவரும் மேடைக்கு வந்து சுய அறிமுகம் செய்யப் பணித்தார் முனைவர் சுந்தர வடிவேலு.

என்னவொரு சுவராசியமான அறிமுக நிகழ்ச்சி. தாயகத்தில் இருப்பிடம் மற்றும் இங்கு இருக்கும் இருப்பிடம் முதலானவற்றைக் குறிப்பிட்டு அனைவரும் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே நண்பகல் உணவைக் கொடுத்து அசத்தினார்கள். அதே உத்வேகத்தில், பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் தலைவி முனைவர் ஆனந்தி சந்தோஷ் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவர் முனைவர் தண்டபாணி அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தும், தொகுத்தும் வழங்கினார். 2011-ல் நிகழ இருக்கும் ஆண்டு விழாவின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுந்தரவடிவேலு, இதுகாறும் ஈடேறிய பணிகள் குறித்தும், இனிச் செய்ய வேண்டிய அலுவல்கள் குறித்தும் நறுக்குத் தெறித்தாற் போல எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர்களில் மற்றொருவரான திரு,பாட்சா அவர்கள், வர்த்தகக் காட்சியின் நோக்கம் மற்றும் நடப்புப் பணிகள் முதலானவற்றை எடுத்துச் சொல்லி, அமர்ந்து இருந்தோருக்கு செறிவான தகவல்களை ஊட்டினார்.

விழாவில் இடம் பெறவிருக்கும், மருத்துவக் கருத்தரங்கம் தொடர்பான விபரங்களை,மற்றொரு இணை ஒருங்கிணைப்பாளர், மருத்துவர் அன்புக்கரசி மாறன் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், அது குறித்துச் செய்த பணிகள் மற்றும் செய்யவிருக்கும் பணிகள் குறித்துப் பேசி, நம்பிக்கையை ஊட்டி உற்சாகத்தைப் பெருக்கினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மேடை ஏறினார், பேரவையின் தலைவர் முனவர் பழனிசுந்தரம் அவர்கள். தலைவருக்கே உரிய பொறுப்பு மற்றும் கடமையுணர்வுடன் அவர் பேசிய பாங்கு, அவருடன் இணைந்து நெடுங்காலமாய்ப் பணியாற்றுவோருக்கே ஒரு வியப்பாகத்தான் இருக்கும்.

சிறந்த நிர்வாகிக்குரிய அத்தனை சிறப்புகளுடன், அவர் அடுக்கடுக்காய் எடுத்து வைத்த தகவற்செறிவான விபரங்கள் அத்தனை பேரையும் கட்டிப் போட்டது. பேரவையின் வரலாறு, நோக்கம், கடமை, விழாவின் அவசியம், எப்படி நடத்தப் போகிறோம் என்பன முதலான விபரங்களை நகர்ச் சில்லுகள் மூலம் தெளிவாக எடுத்துரைத்தார்.

முனைவர் முத்துவேல செல்லையா அவர்கள்! ஆம், அடுத்துப் பேச வந்தார் பேரவையின் முன்னாள் தலைவர் அவர்கள்!! ஐந்தே மணித்துளிகள் பேசினாலும், பேச வேண்டியதை, ஏழு அண்டப் பேரொளியையும் ஒரு கல்லுள் வைத்துச் சுடரொளியை எழுப்பும் இரத்தினத்தைப் போல, இரத்தினச் சுருக்க உரை நிகழ்த்தினார் இவர். அரங்கம் வீறு கொண்டு உற்சாகமுற்றது.

அடுத்து நிகழ்ந்த கேள்வி பதில் நேரத்தின் போது, நாமும் நம்முடன் ஒட்டிப் பிறந்த கோயம்பத்தூர்க் குசும்பை வெளிப்படுத்தினோம். அக்குசும்பிலும், வந்திருந்தோருக்கு சென்று சேரவேண்டிய தகவலை சொல்லத் தவறவில்லை நாம். ஆம், பேரவை ஆண்டு விழாவிற்கு கொடையாளர்கள் ஆவதன் பலன்களைக் குறிப்பிட்டோம் நாம்.

இறுதியாக, பனைநிலத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த திருமதி வளர்மதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். பேரவையின், இருபத்தி நான்காம் ஆண்டுவிழாவின் நிர்மாணப் பணிகளைத் துவக்கிடச் சிறப்பு விருந்தினர்களாக, அண்டை மாகாணத்துத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்தவர்களும் வந்திருந்து, தத்தம் ஒத்துழைப்பை நல்குவதாக உறுதியளித்தனர்.

வட கரோலைனாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.பாலன் அவர்கள், சார்லட் அரசி நக்ரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவி செந்தாமரை பிரபாகரன் மற்றும் செயலாளர் இலட்சுமண் அவர்கள், அகசுடா தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த முனைவர் சிவகுமார், கொலம்பியாவிலிருந்து திரு.சரவணன், கிரீன்வில்லைச் சார்ந்த திரு.பார்த்தசாரதி, மினசோட்டாவில் இருந்து திரு. ஜெயச்சந்திரன் முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மொத்தத்தில், எழில்மிகு இச்சார்லசுடனின் கவின்மிகு இடங்களைக் கண்டு களிக்கவும், அழகான மீன்காட்சியத்தில் நடக்க இருக்கும் விருந்தினர் மாலை நிகழ்ச்சியை உள்ளடக்கிய, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்தி நான்காம் ஆண்டு விழா, அகில உலகத் தமிழர்களையெலாம் வரவேற்று, அற்புதத் திருவிழாவாக அமைந்து, வட அமெரிக்கத் தமிழரின் வரலாற்றில் சிறப்பை எய்தப் போகிறது என்பதுமட்டும் திண்ணம்!



தென்கரோலைனா, இச்சார்ல்சுடனில் இருந்து பழமைபேசி!

10/26/2010

முகமூடி


இவங்கள்ல ஒருத்தர், இந்த வாரம் ஊருக்கு வர இருக்காரு. அதுபத்தின விபரம் சீக்கிரம் வெளியாகும். வர்றவரை பார்த்துக் கவனிக்க வேண்டியது, அங்க இருக்குற உங்க கடமை மக்களே!!!


10/25/2010

நகரம் ஆள்கிறது!

கைவிடப்பட்ட வீடுகள்
சிதைந்த வாழ்க்கை
இடம்பெயர்ந்த மக்கள்
மெளனித்த கோயில்மணி
பயனற்றுப்போன அம்மிகள்
உருத்தெரியா சந்தைப்பேட்டை
களையிழந்த தலைவாசல்
இருள்கொண்ட சத்திரம்
அற்றுப்போன சுமைதாங்கி
எறிந்துகிடந்த இலாடப்பை
குரலுடைந்த ஊர்த்தலைவர்
ஆளில்லா அரசமரத்தடி
ஊர் உறங்குகிறது
நகரம் ஆள்கிறது!
நகரம் ஆள்கிறது!!

10/20/2010

வங்கணத்தி

மாறாத தென்றல்
மங்காத மதியொளி
நிசப்தமான பொழுது
மெல்லிய விசும்பல்
ஈரேழு ஆண்டுகளாய்
மெய் கிடையாகி
கிடை மடியாறிச்
செல்லுமாடமது!
ஏன்டி?
நீயும் மூக்குறிஞ்சிச் சாவடிக்குறே??

இருக்குறது மாடமே ஆனாலும்
உடுத்துறது பட்டே ஆனாலும்
சாத்துறது தங்கமே ஆனாலும்
இன்னைக்கு சமைஞ்ச அவ,
நாளைக்கு
நான் யாருன்னு கேப்பாளோ?
நான் யாருன்னு கேப்பாளோ??

10/19/2010

நாங்களும் வாழ்கிறோம்!


(if you can, fast forward the video for about 6 minutes to listen to the speech)

அயலக வாழ்வில்
கிடைப்பது பேச்சுரிமை மட்டுமல்ல!
கிடைத்தது சிந்தனைக்களமும்தான்!!

அயலக வாழ்வில்
கிடைப்பது மனிதாபிமானம் மட்டுமல்ல!
கிடைத்தது சமத்துவவுணர்வும்தான்!!

ஆப்ரகாம் லிங்கன்
மார்ட்டின் லூதர் கிங்
வாழ்ந்த இம்மண்ணில்
நாங்களும் வாழ்கிறோம்!

ஆப்ரகாம் லிங்கன்
மார்ட்டின் லூதர் கிங்
வாழ்ந்த இம்மண்ணில்
நாங்களும் வாழ்கிறோம்!
நாங்களும் வாழ்கிறோம்!!

10/18/2010

பதிவர்புரம்

சபரி, சீமாச்சு, சசி, ரூப், திரு, பழமைபேசி
பழமைபேசி, திரு, ரூப், சசி, சபரி, சீமாச்சு, ஜாங்கோ ஜக்கு மாப்பிள்ளை

Stone Mountain Park, Atlanta, GA.