10/30/2008

தமிங்கில அகராதியிலிருந்து..... 3

வணக்கம். எல்லார்க்கும் வாசகர் விருப்பம் பழமைபேசி எழுதறாரு, நமக்கு ஒன்னும் எழுதலையேன்னு நண்பர் மகேசு நினைக்கலாம். நினைக்காமலும் இருக்கலாம். ஆனாலும் பாருங்க, நாம எழுதறதுக்கு அவர் பேரை இழுத்துதானே ஆகணும். அவர் சமீபத்துலதான் திட்ட மேலாண்மை(project management)ல பட்டையம் வாங்கிட்டு வந்து இருக்காரு. அதுக்கு வாழ்த்துக்களை சொல்லிட்டு, அது சம்பந்தமா எனக்கு மனசுல தோணினதை பட்டியலிட்டு இருக்குறேன்.

மேனேஜ்மென்ட் - மேலாண்மை
ஆபரேசன் - பணி
ப்ராஜெக்ட் - திட்ட‌ம், படைப்பு
போர்ட்ஃபோலியோ - ஆக்க‌த்தொகுப்பு
டாஸ்க் - செய‌ல்
இன்டெக்ரேசன் மேனேஜ்மென்ட் - தொகுப்பு மேலாண்மை
ஸ்கோப் மேனேஜ்மென்ட் - வரைவு மேலாண்மை
டைம் மேனேஜ்மென்ட் - நிரல் மேலாண்மை
காஸ்ட் மேனேஜ்மென்ட் - செல‌வு மேலாண்மை
குவாலிட்டி மேனேஜ்மென்ட் - த‌ர‌க்க‌ட்டுப்பாட்டு மேலாண்மை
ஹ்யூமன் ரிஸோர்சு மேனேஜ்மென்ட் - ப‌ணியாள‌ர் மேலாண்மை
கம்யூனிகேசன் மேனேஜ்மென்ட் - த‌க‌வ‌ல் ப‌ராம‌ரிப்பு மேலாண்மை
ரிஸ்க் மேனேஜ்மென்ட் - இன்ன‌ல் மேலாண்மை
ப்ரொக்யூர்மென்ட் மேனேஜ்மென்ட - கொள்முதல் மேலாண்மை
ப்ளேனிங் - திட்டமிடுதல்
ப்ளான் - திட்டம்
எஸ்டிமேசன் - மதிப்பீடு
கன்ட்ரோல் - சீரமைப்பு, கட்டுப்பாடு
ரிப்போர்ட் - தரவுப் பட்டியல்
அனாலஸிஸ் - ஆய்வு
ஆடிட் - தணிக்கை
ரெகுலேசன் - ஒழுங்குமுறை
ஸ்கில் - திறன்
நாலெட்ஜ் - அறிவு
ப்ராஸஸ் - செய்முறை, ஆட்படுத்து, தொகு


நண்பர் மகேசு ஒரு தேர்ந்த மேலாளர், ஆகவே மேலாண்மை குறிச்ச நெளிவு சுழிவுகளை பதிவாப் போட்டாலும் போடலாம், போடாமலும் இருக்கலாம். அதுக்கு இந்தப் பதிவு உதவிகரமா இருந்தாலும் இருக்கலாம். கண்டிப்பா, இல்லாமையும் போகலாம். எதுக்கும் நாம பதியறதைப் பதிஞ்சு விடுவோம்.

தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -2

கோவணத்துல காசு இருந்தா கோழி கூப்பிடப் பாட்டு வரும்!
இல்லாட்டியும் வரும் எங்களுக்கு!!

டேய், நக‌ருடா அந்தப் பக்கம்!




வாக்களியுங்கள் மக்களே, வாக்களியுங்க!

10/29/2008

அம்மினியும் பொன்னானும்......

கொங்குநாட்டுப் பிள்ளை, அன்பர் ராஜ நடராஜன் அவிங்களுக்கான வாசகர் விருப்பந்தானுங்க இன்னைக்கு நாம போடுற‌ பதிவு.

ஒரு நாள் பாருங்க, இராசக்கா பாளையம், இராச வாய்க்கால் போற வழில இருக்குற ஓட்டாங் குச்சிப் பள்ளத்துல ஒழிஞ்சிருந்து கஞ்சாக் குடிக்கறதுக்காக‌ ஒரு வயசுப் பொன்னான், பேரு தங்கவேலு, அங்க நின்னுட்டு இருக்குறான். அந்த சமயத்துல, வாய்க்காத் தண்ணி எடுத்துட்டுப் போறதுக்கு ஒரு வயசுப் பொண்ணு, பேரு சிவகாமி, அந்த வழியாப் போறா.

சிவகாமியப் பாத்த தங்கவேலுக்கு, இருப்பு கொள்ளல. சிவகாமி, நல்ல எடுப்பா, லட்சணமா இருக்குற பதனாறு வயசு அம்மினி. அப்படியே பேச்சுக் குடுத்து மடிக்கலாம்னு, தாகத்துக்கு தண்ணி கேக்குற மாதிரி வேலைய ஆரம்பிக்குறான் தங்கவேலு.

சிவகாமிக்கும், தங்கவேலன் மேல கொஞ்சம் இதுதான். அவனும் ஆள் நல்லா வாட்ட சாட்டமா இருப்பான். அவ மொகத்த நேராப் பாக்க முடியாம, ஒரு வெக்கத்துல குறுஞ் சிரிப்போட, வீட்டுக்கு வந்தியானா நல்ல குளுந்தண்ணி நாந்தாரேன்னு சொல்லி இராத்திரிக்கு வீட்டுப் பக்கம் வரச் சொல்லி கேட்டுக்குறா.

அவனும் இராத்திரி ஒம்பது, ஒம்பதரை வாக்குல அவுங்க வீடு இருக்குற வீதியில போயி காத்துகிட்டு இருக்குறான். சிவகாமிகூடப் பொறந்தது மொத்தம் ஏழு பேரு. இவதான் மூத்தவ. இவிங்க அம்மா இப்பவும் புள்ளத்தாச்சிதான், இப்ப பிரசவத்துக்காக அவிங்க அமுச்சி ஊரான சமுத்தூர்ல இருக்குறாங்க. இங்க இவதான் வீட்டப் பாத்துகுறது. இப்ப, ரெண்டு வயசான தன்னோட தம்பியத் தூங்க வெச்சிகிட்டு இருக்கா. ஆனா, அவந்தூங்குறான் இல்ல. இத‌ அவ‌னுக்குச் சொல்லுற‌துக்கு, அவ‌னைத் தூங்க‌ வெக்க‌ தாலாட்டுப் பாடுற‌ மாதிரி பாடி, அதுல‌ விச‌ய‌த்த‌ பொண்ணானுக்கு சொல்லுறா சிவ‌காமி.

இந்த சூழ்நிலையில தங்கவேலுவும், காதல் மயக்குத்துல வீதியில கெடந்து தவிக்குறான். இப்படியே வெடிஞ்சும் போகுது. இப்படி அவிங்களுக்குள்ள நடந்த பழமைகதான், இன்னைக்கு நாம சொல்லுற பாட்டு.


தங்கவேலு: ஓடற ஓட்டத்துல‌
ஓட்டாங்குச்சிப் பள்ளத்துல‌
கஞ்சாக் குடிக்கையில‌
கையூனி நிக்கையிலே
தங்கக் குடங்கொண்டு
தண்ணிக்குப் போற பொண்ணே
தங்கக் கையினாலே
தண்ணீருதான் குடுத்தா
ஆகாதோ?

சிவகாமி: வாய்க்காத் தண்ணியிலே
வண்டு வரும் தூசு வரும்
வீட்டுக்கு வந்தா நல்ல குளுந்
தண்ணியும் நாந்தருவேனே!

தங்கவேலு: வீடுந் தெரியாது வாசலுந் தெரியாது
வழியெனக்குத் தெரியாது, நான் அங்கயெப்படி
வருவேனடி வஞ்சிமலரே, வண்ணமயிலே?

சிவகாமி: ஒரு பத்தாஞ் செட்டி வீட்டோரம்
ரெண்டு தென்னம்பிள்ளை அடையாளம்
அதுக்கடியிலே ஒக்காந்திரு நான்வாரேன்!

தங்கவேலன் வந்த பொறகு:
பாலும் அடுப்புலதான்
பாலகனும் தொட்டிலிலேதான்
பால‌க‌னைப் பெத்தெடுத்த‌ எங்
க‌ப்ப‌னும் க‌ட்டிலிலேதான்
உன்ன‌ப் போக‌ச்சொன்னாப் பொல்லாப்பு
இருக்க‌ச் சொன்னா நிட்டூர‌ம்! (நிட்டூரம் - இடையூறு)

வெடிஞ்சதும் தங்கவேலன்:
கெழ‌க்கு வெளுத்தாச்சு
கீழ்வானம் கூடிப் போச்சு
க‌ண்ணாத்தா வாச‌லுலே
காத்திருந்து வீணாச்சு
இன்னாரு ம‌வ‌ளே!


அன்னைக்கு இதுதாங்க நடந்தது. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒன்னு சேந்து இருப்பாங்கன்னும் நம்புவோம். சிறு வயசுப் புள்ளைக எங்கயோ நல்லா இருந்தாச் சரிதான். நாஞ்சொல்லுறதும் சரிதானுங்களே?!

ஆத்துத்தண்ணி வந்து சேரும், காலமும் கூடி வரும்

அந்த ஓட்டு மக்களே?!

சிரிங்க, சிரிச்சுகிட்டே இருங்க....

வாக்களியுங்கள் மக்களே, வாக்களியுங்க!

10/28/2008

நாள்மீன் (நட்சத்திரங்) களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள்...

அன்பர்களே, நாளைக்கு வேலைல சுளுக்கு எடுக்கப் போறதா முன் கூட்டியே சொல்லி இருக்காங்க. அதனால, நாளைக்கும் சேத்து இன்னைக்கே மேலதிகமா ஒரு பதிவைப் போட்டுட்டு, வேலையக் காப்பாத்துற வழியப் பாக்கலாம்னுதான் இந்த பதிவு.

பன்ணெண்டு இராசிகளையும் நல்ல தமிழ்ப் பேர்ல நாம பொழங்குறோம். ஆனாப் பாருங்க, நாள்மீன் (நட்சத்திரம்)களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள், அதாவது அசுவனியில இருந்து ரேவதி வரைக்கும் இருந்து இருக்கு. அதுக‌ பொழக்கத்துல இல்லாமயே போயிடுச்சு. சரி, அந்த தமிழ்ப் பேருக என்னன்ன, மேல படீங்க.

புரவி
அடுப்பு
ஆரல்
சகடு
மான்றலை
மூதிரை
கழை
காற்குளம்
கட்செவி
கொடுநுகம்
கணை
உத்திரம்
கை
அறுவை
விளக்கு
முறம்
பனை
துளங்கொளி
குருகு
உடைகுளம்
கடைக்குளம்
முக்கோல்
காக்கை
செக்கு
நாழி
முரசு
தோணி

இந்த‌த் த‌க‌வ‌ல் நெச‌மான்னு எல்லாம் யோசிக்காதீங்க‌. முத‌ற்க் குலோத்துங்க‌ சோழ‌ன் கால‌த்து வ‌ர‌லாறுல‌ இருக்குங்க‌. வாய்ப்புக் கெட‌ச்சா, அந்த‌ப் புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ணும். நிறைய‌ த‌க‌வ‌ல் கெடைக்குமே?!


மொடாவ‌ வெளக்கி வை!
இருந்த‌தை எழுதி வை!!

கோயில்ல, நம்ம காதுல விழறதுல சில‌....

நாம எல்லாம் கோயிலுக்குப் போறோம், போன இடத்துல அதுன்னுவாங்க, இதுன்னுவாங்க. நாமளும் புரிஞ்சா மாதிரி தலைய ஆட்டிட்டு வந்துருவோம். என்ன செய்ய? திருப்பிக் கேட்டாக்க, அவ்வளவு நல்லா இருக்காது பாருங்க. சிற்பிக, கோவில்லயே புழங்கறவங்களுக்குத் தெரியும். அப்படி அவிங்ககிட்ட தெரிஞ்சிகிட்டதுல இருந்து தெரிஞ்ச, கிடைச்ச கொஞ்சத்தப் பாக்கலாங்க இப்ப.

1. அங்கணம் - தூணிடைவழி
2. சந்திரசீலா - நிலாப்படி
3. கண்டம் - கழுத்து
4. அதபத்மம் - கீழ்நோக்குத் தாமரை
5. ஊர்த்வ பத்மம் - மேனோக்குத் தாமரை
6. பிரதி - மேற்கம்பு
7. ஸ்தம்பம் - தூண்
8. குத்ய ஸ்தம்பம் - அரைத்தூண்
9. பத்ம பந்தம் - தாமரைக் கட்டு
10. மத்ய பந்தம் - இடைக்கட்டு
11. நாகபந்தம் - பாம்புப் படம்
12. மாலாஸ்தானம் - மாலையிடம்
13. கலசம் - பானை
14. தாடி - மூடி
15. கும்பம் - குடம்
16. தரங்கம் - அலை
17. கோஷ்டம் - மாடம்
18. லலாட பிம்பம் - நெற்றி வடிவம்
19. உத்தரம் - விட்டம்
20. கபோதம் - கூரை நீட்சி
21. ஹம்சமாலா - வாத்துவரி
22. ஹாரம் - மாலை
23. ஹாராந்தரம் - மாலை இடைவெளி
24. அர்பிதம் - ஒட்டிய மாலை
25. அனர்பிதம் - விலகிய மாலை
26. மஹா நாஸிகை - பெருஞ்சாளரம்
27. அல்ப நாஸிகை - சிறு சாளரம்
28. சூத்ர நாஸிகை - குறுஞ் சாளரம்
29. அரமியம் - தளச்சுவர்
30. விமானம் - இறையகம்

31. கர்ப்பக்ருஹம் - கருவறை
32. த்வஜஸ்தம்பம் - கொடித்தூண்
33. த்வாரபாலகர் - வாயிற்காப்போர்

மேலதிகமா, உஙளுக்குத் தெரிஞ்சதையும் சொல்லுங்க. சேத்துக்குவோம்!



தெரியாக் கொறை, அழுதாத் தீருமா?

10/27/2008

அய்ய‌, சித்த‌ வந்து சொல்லிட்டுப் போங்க....

1. கடலுல கலக்குறது என்ன, கரையோரம் போறது என்ன? நண்டு

2. செடிய முறிக்கிறது என்ன, செடியோரம் போறது என்ன? ஆடு

3. திடுதிடுன்னு மழபேய‌,
திட்டெல்லாம் கரஞ்சோட‌
நாலு ராசக்கா, நனையாம வாராக,
அவுக யாரு? பசு மடி

4.தச்சு தச்சா மரம், தச்சன் அடியாமரம்,
பாசிபுடியா மரம், பயபுள்ளைக ஏறாமரம்!
அது என்ன மரம்? வாழை மரம்

5. குடுத்துட்டு குடுத்துட்டு
குத்தவைக்கும் கூதாரிப்பய புள்ளை!

அது என்ன? தண்ணிச் செம்பு

மக்களே, இன்னைக்கு இதான் நம்ப பதிவு. ஒரே வேலை, மெனக்கெட முடியல! நீங்க, உங்க பதிலுகளப் போட்டுத் தாக்குங்க.... நான் என்னோடதை நாளைக்குப் பதியுறேன்.

திங்குறவன் திங்க,
திருப்பாலைக் குடியாதவன்
தெண்டங் குடுத்தானாம்!

நீங்க ஓட்டுப் போட்டா, நான் வேண்டாம்னா சொல்லுவேன்?