6/05/2011

அரசி நகரைவிட்டு மிசிசிபி நதிக்கரையோரமாய்....

பொருளாதார நெருக்கடி நம்மை மட்டுமல்லாது, அமெரிக்க ஆசிய ஐரோப்பிய நாடுகளனைத்தையும் நெருக்கிய காலமது. ஆனாலும், நம்மை வா வாவென அழைத்து, அரவணைத்துக் கொண்டது அரசி மாநகரம். ஆம், கடந்த எட்டு ஆண்டுகால, சார்லட் நகர வாழ்க்கை மேம்பட்ட வாழ்க்கை. மாநகர மக்கள் மிகவும் இனிமையானவர்கள். பண்பாட்டில் நிறைவு கொண்டவர்கள். நகரமோ, மென்மேலும் வளர்ந்து வரும் நகரம்.

அடுத்த ஆண்டு, அமெரிக்க அதிபராக இருக்கும் ஒபாமா அவர்கள் சார்ந்த கட்சியின் மாநாடு நடக்கப் போவது இந்நகரில்தான். கோலாகலக் கொண்டாட்டங்களும், உலகின் அரசியலைத் தீர்மானிக்கப் போகிற மாநாடும் நடக்கவிருப்பது இந்நகரில்தான். ஆனால் எமக்கு? மாற்றம் தவிர்க்க இயலாததாகிவிட்டது.

அமெரிக்காவின் நீள்நெடு நதியாம், மிசிசிபி நதிக்கரையோரம் நீயுந்தான் வாழ்ந்து பாரேன் என இயற்கை நம்மைப் பணித்து விட்டது போல உணர்கிறேன்.

ஈரேழு நாட்களாய், மிச்சிபி நதிக்கரையையும் அண்டியுள்ள பகுதிகளையும் இடவலம் வந்து கொண்டு இருக்கிறேன்.

எங்கும் பச்சைக் கம்பளம் விரித்தாற்ப் போன்றதொரு தோற்றம். கரைகள் இரண்டின் விளிம்புகளைத் தொட்டபடி, தளும்பித் தாவிப் பாய்ந்து கொண்டிருக்கிறது மிசிசிபி. அக்கரையோரத்தில் வாழும் மனிதர்களின் பூர்விகம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னையதாம். செவ்விந்தியர் தலைவர் சொன்னார். பண்பாட்டுக் கூறுகளை எடுத்தியம்பினார். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

தமிழ்ச் சங்கம் இருக்கிறதா என வினவினேன். இங்கே தமிழ் மட்டுமல்ல. உலகின் அத்துனை தேசிய இனங்களும் உண்டு. அவற்றைப் பெரிதும் மதித்துச் செயல்படுகிறோம் எனச் சொல்லி, தமிழ், மலையாளம், தெலுகு, கன்னடம் உள்ளிட்ட பெரும்பாலான சங்கங்களின் பிரதிநிதிகளையும் எமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார், செல்பி ஒன்றியத்தின் கல்வி இயக்குனர் மெலிசா ஓனிடாசு அவர்கள்.

பண்பாட்டைப் பறைசாற்றுவதில் நம்மவர்கள் அனைவருமே முனைப்பாய் இருக்கிறார்கள். ஆனாலும், இங்கு மலையாளிகளுக்கு நிகர் எவருமிலர். இருப்பவர் குறைவாக இருப்பினும், நிறைவாய் இருப்பதைக் காண முடிகிறது. மெம்ஃபிசு வாழ்க்கையைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது. இருப்பினும், இப்போதைக்கு இக்காணொலிகளை உங்களுக்கு அறியத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கால அவகாசம் வாய்க்கும் போது, தவறாது கண்டு களியுங்கள்!!
























இறுதியாக, செந்தமிழ் நாடு.... முதல் சில மணித் துளிகள் சிறு சலசலப்பு இருக்கும்... அதையும் கடந்து பாருங்கள்... வெகு அருமை!!


6/03/2011

ஏலாதி

ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு வகை சூர்ணம். இது மெய்யுக்குப் பொலிவையும் வலிமையையும் ஊட்டித் தெம்பையும் தர வல்லது. அது போலவே, மாந்தனது வாழ்வுக்குச் சிறபபைத் தரும்விதமாக ஆறு கூறுகளை உள்ளடக்கி அறத்தை நல்குவது, பதினென்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான ஏலாதி. கணிமேதாவியார் என்பார் இந்நூலின் ஆசிரியர்.

மும்மருந்துகளின் பெயரால் அமைந்த நூல்கள் யாவை என ஒருவர் நம்மைக் கேட்க, நாமும் அதனை அறியும் பொருட்டு விழைந்தவரானோம். திரிகடுகம், சிறுபஞ்சமூலம் மற்றும் ஏலாதி ஆகிய நூல்களே அவை. இதன் நீட்சியாக ஏலாதியை வாசிக்கத் துவங்கியதில், நம்மனதைக் கொள்ளை கொண்டது கீழ்வரும் செய்யுளானது.

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல - எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு.

இடையின் அழகோ, தோளின் அழகோ, ஈடில்லா மற்ற அழகோ, நடை அழகோ, நாணத்தின் கண் வெளிப்படும் அழகோ, கழுத்தின் அழகோ அழகல்ல. எண்ணொடு கூடிய எழுத்தின் அழகே அழகு என்கிறார் கணிமேதாவியார்.

இங்கேதான் நாம் சற்று மாறுபடுகிறோம். ‘எண் எழுத்து இகழேல்’ என்று சொன்னார் ஒளவையார். ’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ எனக் கொன்றை வேந்தனிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதையே, அய்யன் திருவள்ளுவர் சொல்கிறார், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்கிறார்.

இவற்றுக்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் யாது? எண்களும், எழுத்துகளும் உண்டான கல்வியைக் கண்ணாய்ப் பாவித்தல் வேண்டும் என்கிறார்கள். இப்படி நேரிடையாகக் கல்வி எனப் பொருள் கொள்ளலாகாது என்கிறோம் நாம். ”கல்வி எனும் அதிகாரத்துக்கு உடபட்டுத்தானே வருகிறது இக்குறள்? எனவே, எண்ணும் எழுத்தும் எனக் கல்வியைத்தான் குறிப்பிடுகிறார்” என வாதிடூகிறார்கள்.

”எண்ணமும் அதற்கொத்த எழுத்தையும் இகழேல்; எண்ணமும் அதற்கான எழுத்தும் கண்ணெனப் பாவித்தல் வேண்டும்” என்பதன் தொடர்ச்சியாக, எண்ணொடு எழுத்தின் வனப்பே வனப்பு எனப் பொருள் கொள்கிறோம்.

மாந்தனின் அகத்தைப் படம் பிடித்துக் காட்டுவது எழுத்து. அதாவது, அத்தருணத்தில், மாந்தனின் எண்ணம் எவ்வாறு இருந்ததென்பதை அவன் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆக, தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்படும் அவன் எண்ணங்களின் எழுத்துகள் அவனைச் செம்மைப்படுத்தும் என்றாகிறது.

இன்றைய நவீன யுகத்தில், எண்ணங்களை ஒலி மற்றும் ஒளியினூடாகப் பதிவு செய்யக்கூடிய ஊடகம் வாய்த்திருக்கிறது. என்றாலும் கூட, எழுத்திற்கு இருக்கும் சிறப்பு வெகுவாகத் தனித்தன்மை கொண்டதாகும். அதுவும், தன் எண்ணங்களைத் தத்தம் தாய் மொழியில் எழுதிப் பின்னோக்கிப் பார்த்தலில் மனம் பேரின்பம் அடைகிறது. வாழ்வு செம்மையாகிறது.

உதாரணத்திற்கு இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர், அட்லாண்டா நகரில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் கலந்து கொண்டேன். அந்த மூன்று நாட்களும், எம் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள். அத்தருணத்தில் எம்மனதில் எழுந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை எழுதி வைத்திருக்கிறேன். மனம் சோர்வுறும் தருணத்திலெல்லாம் அவற்றை மீள்வாசகம் செய்கிறேன். புத்துணர்வு பெறுகிறேன்.

வாசிப்பதன் மூலம் புத்துணர்வு கொள்ள முடிகிறது என்றால், அதற்கான அடிப்படை என்ன? தாய் மொழி! தாய் மொழியில் விளைந்த எண்ணம். எண்ணங்களை அப்படியப்படியே தன் தாய்மொழியில் பதியப்பட்ட எழுத்து. இன்றைக்கும், என்றைக்கும் கிடைக்கப் போகிற பேரின்பத்திற்குக் காரணம் அதுதானே?

எனவேதான், கணிமேதாவியாரின் ஏலாதியில் சொல்லப்பட்டு இருக்கிற “எண்ணொடு எழுத்தின் வனப்பே வனப்பு’ என்கிற வாசகம் நம்முள் ஈர்ப்பை உயிர்ப்பிக்கிறது. எண்ணங்கள் ஊற்றெடுக்க வைப்பதில், தாய்மொழியின் பங்கு அளப்பரியதும் மகத்தானதுமாகும்.

புலம்பெயர்ந்த மண்ணிலே, தாய்மொழியைச் சீராட்டிப் பாராட்டித் தேன்போல் நுகரும் பாங்கில் நமக்கு வாய்த்ததுதான், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா! ஆண்டு தோறும் நனிச் சிறப்போடு சிறப்பெய்தி நம்மையும் சிறக்க வைக்கும் விழா!! ஏலாதியைப் போல், கலை, இலக்கியம், பண்பாடு, மரபு போற்றுதல், அறம் பேணல், உரிமை காத்தல் ஆகிய அறுமருந்தும் பெற, நாமனைவரும் ஒன்று கூடுவோம் தமிழர் திருவிழாவில்!!

--பழமைபேசி.

5/29/2011

இராதிகா சித்சபேசன் பேசுகிறார்!!

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் 

எட்டிக் களை பறிக்கும்
இடமெல்லாம் நிற்கேனோ?
கட்டி மண்ணை நீ உடைக்கக்
கைத் தடியாய் ஆகேனோ?
ஏறுகின்ற வெயில் தணிக்க
இன்னிழலாய்த் தழுவேனோ?
மீறுகின்ற காதலுடன்
நம்மொழி பேச வாராயோ??
--கவிஞர் தூரன்

வட அமெரிக்கத் தமிழரெலாம் கூடி,தம் மொழி பேசிக் களித்து இன்புற்றிருத்தலோடு அவர்தம் கட்டமைப்புக்கும் வலுச் சேர்க்குமுகமாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது ஆண்டுதோறும் தமிழ் விழாக் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே.

பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழாவானது, எதிர்வரும் யூலை மாதம் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்களின்போது, தென் கரோலைனா மாகாணம், எழிலார்ந்த கடற்கரை நகரமாம் சார்ல்சுடன் நகரில் நடைபெற உள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரும், தமிழ்ப் பண்பாட்டை அமெரிக்க மண்ணில் நிலைநாட்டுவதற்கு அயராது உழைத்து வரும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தாரும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை மிக விமரிசையாகச் செய்து வருகிறார்கள்.

வெளியூர்களில் இருந்து வருவோர்க்கு ஏதுவான தங்குமிடங்கள், பசியாற உண்டி வழங்கல், குழந்தைகள் சக உறவினரோடு இருந்து மகிழ்ந்திடக் கூடங்கள், தமிழ்ச் சான்றோர்தம் விழுமியங்களை ஆய்ந்து பருகிட பல மேடைகள், குடும்பத்தார் இருந்து களித்திடப் பல பண்பாட்டு நிகழ்வுகள் என எண்ணற்ற கூறுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இத்திருவிழா.

திருவிழா இடம் பெறுகிற நகரமோ, ஒரு எழிலார்ந்த நகரம். நகரெங்கும் பச்சைப் பட்டுடத்திய புல்வெளிகள், வரலாற்றுப் பெருமை போற்றும் புராதனச் சின்னங்கள், அழகு கொஞ்சும் கடற்கரைகள், கண்களுக்கு விருந்தூட்டும் மீனகம் என ஏராளமான இன்னபிற அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதுதான் சார்ல்சுடன் நகரம்(Charleston, SC). இது ஒரு ஆகச் சிறந்த சுற்றுலாத்தளம் ஆகும்.

இவ்விழாவில், குணச்சித்திர நடிகர் நாசர் அவர்கள், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சித்சபேசன், கவிஞர் நா.முத்துக்குமார், பாடகர்கள் A.V.இரமணன், உமா இரமணன், பிரசன்னா, திண்டுக்கல் சக்தி நாட்டியக் குழுவினர், கானா பழனி, திருப்புவனம் ஆத்மநாதன், ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள், கோடைமழை வித்யா, புதுகை பூபாளம் குழுவினர் மற்றும் கனடிய, அமெரிக்க உள்ளூர்த் தமிழர்களும் இணைந்து, மூன்று நாட்களுக்குமாக பல நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

இவை மட்டுமல்லாது, இணை அமர்வுகளாக வலைஞர் சங்கமம், வணிகக் குமுகாயம், பல்வேறு பல்கலைக் கழக முன்னாள் மாணவர் கூடல், மருத்துவ ஆய்வு அரங்கம், தமிழ் அரசியலமைப்புக் கூட்டம் எனப் பல நிகழ்வுகளும் இடம் பெற உள்ளன. விழா குறித்த கூடுதல் தகவல்களுக்கு, பேரவை வலைதளம் மற்றும் விழா நறுக்கு ஆகியனவற்றைப் பாவிக்கவும்.

யூலை 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்கள் பெருவார ஈறு என்பதனால், ஒவ்வொரு தமிழரும் தத்தம் குடும்பத்துடன் வந்திருந்து தம்மையும் கட்டமைப்பையும் வலுப்பெறச் செய்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

விழாவில், திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள் வழங்க இருக்கும் விநாடி வினா, கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தலைமை ஏற்று, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம் எனும் தலைப்பில் இடம் பெற இருக்கும் கவியரங்கம், மரியாதைக்குரிய ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் நடுவராக இருந்து, தமிழைச் சிதைப்பது ஊடகங்களா? பொதுமக்களா?? எனும் தலைப்பில் இடம் பெற இருக்கும் பட்டிமண்டபம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுடையோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் அவர்களின் தமிழ்ப் பணியினை நினைவு கூறும் விதமாக, பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாக அமைய இருக்கிற இத்திருவிழாவின் போது, எழில்நகரமாம் சார்ல்சுடன் நகரில் உங்களை எல்லாம் சந்தித்து இன்புறக் காத்திருக்கிறோம். தமிழால் இணைந்தோம்! நட்பு பாராட்டுவோம்!! வாரீர், வாரீர்!!!

பணிவுடன்,
பழமைபேசி,
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைப் பிரதிநிதி,
அரசி நகரத் தமிழ்ச் சங்கம்.

5/19/2011

தன்னாய்வு

பின்னோக்கிப் பார்க்கிறேன். பிரமிப்பாய் இருக்கிறது. என்னையே என்னால் நம்ப முடியவில்லை. அங்கக் கூறுகளான கைகள், விரல்கள், கால் பாதங்கள் முதலானவற்றைப் பார்க்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாள்தொட்டு என்னுடனே பயணித்து வருவன அவை.

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் சில பல கதைகளைச் சொல்கின்றன. வலது காலைப் பார்க்கிறேன். முட்டி பெயர்ந்த தழும்பு. அதற்குப் பின்னால் ஒரு கதை. கணுக்காலுக்கு மேல் இருக்கும் தீப்புண்ணின் தழும்பு. அது சூந்து விளையாடும் போது ஏற்பட்டது. அதன் நினைவுகள்.

என் மெய்யின் ஒவ்வொரு கூறினையும் நேசிக்கிறேன். இவ்வுலகில் எத்தனை பேருக்கு, தத்தம் உடலின் பாகங்களைக் கண்டு, பேசி, உளம் மகிழ்ந்து, அவற்றுடன் ஒன்றிப் போக நேரம் வாய்க்கிறது? அல்லது மனம் இருக்கிறது?? என்னை நினைத்து நானே பெருமைப்படுகிறேன். செருக்குக் கொள்கிறேன். அதில் என்ன தவறு இருக்க முடியும்?! என் மெய்யைச் சிலாகித்து, அவற்றின் அங்கத்துக் கூறுகளின் ஆரோக்கியத்தைப் பார்த்து மகிழ்வதில் நான்தானே முதன்மையானவாக இருக்க முடியும்?

வாரம் ஒருமுறை விரல் நகங்களை வெட்டுகிறேன் அல்லது தூய்மைப்படுத்தி அழகு பார்க்கிறேன். பல் மராமத்துச் செய்கிறேன். தசைநார்கள் சுருங்கி விரியச் செய்கிறேன் அனுதினமும். கண்கள்? அவனியின் அழகை எனக்கு ஊட்டும் கண்களைப் பாராது இருப்பேனா? இன்னும் இருப்பனவெல்லாம் என்னோடு, நானிருக்கும் வரை உடன் வருவன. அவற்றின் மீது நம்பிக்கை வைத்துத்தானே, ஒவ்வொரு நாளும் பிறக்கிறது எனக்கு?!

நான் கடவுளைத் தொழுவது இல்லை. மாறாக என் அங்க அவயங்களைத் தொழுகிறேன். மாறாமல் பணியாற்றும் அவற்றுக்கு, என்றென்றும் விசுவாசமாக இருக்க விரும்புகிறேன்.

1997 ஆம் ஆண்டு, பெரும் விபத்தில் சிக்கி, என் வலதுகால் முட்டி பெயர்ந்து, முட்டியின் கிண்ணம் சிதறி இருந்தது. பார்த்த மருத்துவரெலாம், அறுவை சிகிச்சை செய்து அவற்றை ஒன்று கூட்டி உள்ளே வைத்துப் பார்க்கலாம். ஆனால், காலை மடக்கும் கோணம் வெகுவாகக் குறைந்து நடப்பதில் பழுது ஏற்படும் என்றுச் சொன்னார்கள். எனவே இப்படியே விட்டு விடலாம் எனப் பரிந்துரைத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக, நான் விபத்தில் சிக்குண்டது என் குடும்பத்தாருக்கே தெரியாது. உண்ணக் கொடுத்ததும், உண்டு கழித்ததை அப்புறப்படுத்தியதுமான எல்லாமும் உடன் இருந்த நண்பர்கள்தான்.

எனக்கும் என் அங்க அவயங்களுக்குமான பிணைப்பு அதிகம். இருபத்தி மூன்று நாட்கள் கழிந்த பின்னர், யூத மருத்துவர் சுலோமோ சேப்மேன் என்பாரிடம் வாதிட்டேன். நீங்கள் ஒன்று கூட்டி வையுங்கள், அவை என் சொல் கேட்கும். அல்லாவிடில் நான் மரணத்தைத் தழுவுவேன் என இறுதியாகச் சொல்லிவிட்டேன்.

மருத்துவர் சேப்மேன் அவர்கள் வியந்தார்கள். ”உன்னிடம் மன உறுதி இருக்கிறது; நான் உனக்குச் செய்கிறேன்” என்று சொல்லி பெயர்ந்த எலும்புகளையும் கிண்ணத்தையும் பொருத்திக் கம்பிகள் கொண்டு முடிச்சுப் போட்டுவிட்டார்.

அனுதினமும் வலதுகால் முட்டியோடு பேசினேன். வலது காலை மடக்க முடியாது. தூக்க முடியாது. இடுப்பில் இருந்து செயலாற்றுவதற்கு மட்டும் உடற்கூறு பயிற்சியாளர் வந்து போய்க் கொண்டு இருந்தார். என் மன உறுதியைக் கண்ட அவர், பெருமளவில் உதவி செய்தார்.

சிறு மணல் மூட்டைகளை கணுக்காலில் இட்டுத் தூக்குவேன். தேகப் பயிற்சி சாலையில் இருக்கும் உருட்டுகளைக் கால்கள் கொண்டு உருட்டுவேன். வலி, தாங்க முடியாத வலி. முட்டியும் நானும் பேசிக் கொள்வது மட்டும் நிற்கவில்லை. இன்னும், இன்னும் என என் மனமும், முட்டியும் ஒருங்கே இருந்து செயலாற்றின. மனத்திண்மை என்பது வென்று காட்டியது.

இறுதியாக, 1999ஆம் ஆண்டு, ஊடோடிய கம்பிகள் உருவப்பட்டன. சப்பணம் இட்டு அமர்ந்து காட்டினேன். சேப்மேன் அவர்கள் வானளாவக் குதித்தார். இவற்றை எல்லாம் குறிப்பிடக் காரணம்? மனத்திண்மையின் வலுவைச் சுட்டிக் காட்டத்தான்.

இன்றோடு, மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இப்படியெலாம் எழுத வந்து மூன்றாண்டுகள் நிறைவினை எய்துகிறது. பெருமிதமாய் உணர்கிறேன்.

என் அங்க அவயங்களை எப்படி நேசிக்கிறேனோ, எப்படிப் பேணிப் பாதுகாக்கிறேனோ, அப்படியாக என் சிந்தனைகளையும் எழுத்தையும் பேணுவேன். எழுதுவது எதாகட்டும், முதலில் அவை எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பதில் பின்வாங்க மாட்டேன்.

இம்மூன்று ஆண்டுகளாக, என்னுடன் பயணித்து வரும் சக நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

5/18/2011

கொசு!!

கொசு என்கிற நுளம்புவைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, ஆசிய நாடுகளில் வாழ்பவர்களுக்கு நுளம்புகளுடனான நெருக்கம் மிக அதிகம். இவற்றால் பெருந்தொல்லைக்கு ஆட்பட்டு, எரிச்சல் உறாதவர்களே இல்லை எனும் அளவுக்கு அதனால் பாதிக்கப்பட்டோர் ஏராளம்.

இவர்களுக்கு இடையே சற்று மாறுபட்டவர் இவர். பரிகோஷ் எனும் பெயரை, நுளம்புநாதன் என மாற்றி வைத்துக் கொண்டவர். நுளம்பண்ணா, நுளம்பண்ணா என, அப்பகுதி மக்களால் அன்பாக விளிக்கப்படுபவர்.

இதோ, நுளம்பண்ணன் பழமை பேச வருகிறார் நம் வாசகர்களுக்காக!

“அண்ணா, வணக்கங்ணா!”

“வணக்கங் தம்பி! நலந்தானே?”

“எங்கீங்ணா... ஒரே கொசுத் தொல்லை!”

“தொல்லைன்னா தொல்லை. இல்லைன்னா இல்லை. எல்லாம், மனசுதான் காரணம்!”

“சரி, அதைவுடுங்க. உங்களுக்கும் கொசுக்கும் என்ன தொடர்பு? உங்க பெயரை மாத்தி வெச்சிகிட்டதுக்கு என்ன காரணம்? அதைக் கொஞ்சம், எங்க எழிலாய்ப் பழமை பேசும் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!”

”தூயதமிழ்ல இருக்குற பெயர்களைக் கேள்விப்படும் போதெல்லாம், என்னைய யாரோ கிள்ளுற மாதிரியே இருக்கும். இதை நான் எங்க தமிழ்ப் புலவர் கோணகிரி ஐயாகிட்டச் சொன்னப்ப, அவர்தான் இந்தப் பெயரை எனக்குத் தெரிவு செய்து கொடுத்தாரு. அன்றைய தினத்தில இருந்து, நான் நுளம்புநாதன்ங்ற பேருக்கு மாறிட்டேன்.”

“கிள்ளுற மாதிரி இருந்த உணர்வுக்கும், இந்தப் பெயருக்கும் என்ன தொடர்பு? ஒன்னும் புரியலையே?”

“கிள்ளலை, நுள்ளல்ன்னும் சொல்லலாம். எந்தவொரு பற்றியத்தையும், அதுக்குள்ள ஆழமாப் போயி அறிஞ்சுக்கும் ஆற்றல் நுளம்பம்னு சொல்றது. அதையொட்டித்தான் நுளம்புநாதன்ங்ற பேரு எனக்கு அமைஞ்சது!”

”முடியலை. நீங்களா சொல்வீங்க... அதையும் நாங்க நம்பணும். எப்படி இது?”

”நாங்களா சொல்றது கெடையாது. குறுந்தொகையில கூட வருதே?

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே!

கடுங்குளிர்காலமதில், ஊதக்காற்று பெரும் வேகமெடுத்து வீசும் நள்ளிரவு நேரம். புறக்கொல்லையில் இருக்கும் பசு, வேகமெடுத்து வீசும் ஊதக்காற்று தன் மேல் படுவதால் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்நடுக்கத்தின் ஊடாக நுளம்பு ஒன்று அப்பசுவினைக் கடிக்க, அப்பசுவோ தன் தலையைத் திருப்பி வாலால் வீசியடித்து அந்நுளம்பினைத் தூரத் துரத்தி விடுகிறது.

அப்படியாகத் தன் தலையைத் திருப்பும் போது, கழுத்து மணியின் ஓசையானது தலைவியின் காதில் விழுந்து நித்திரையைக் கலைத்துவிடுகிறது.

’கார்காலத்துப் பனியானது எம்மைக் குளிர்ச் சிறையில் ஆழ்த்துகிறது. அச்சிறையினை உடைத்துக் கொண்டு, என் கண்கள் மழை பொழிகிறது. என் தலைவன் உடன் இருப்பின், இந்நிலை வருமா எனக்கு?’ எனப் பசலை நோய் கண்டவளாய்த் தன் தோழியிடம் தலைவி கூறுவதாக அமைந்த பாடல்தான் இது.

இதிலே நுளம்பு எனும் சொல் வருகிறது கண்டாயா?”

“ஆகா! அருமையான தகவலுங்க நுளம்பண்ணே! அப்புறம் ஏன் நுளம்பைக் ’கொசு’ங்றாய்ங்க?”

“கொசு அப்படின்னா, சின்னது அப்படிங்ற அர்த்தம் வரும். கொசுவம், கொசுறு மாதிரியான சொற்கள் எல்லாம் அதனோட நீட்சிதான். சின்னதான தொங்கல், கொசுவம். சின்ன சின்ன சில்மிசம், கொசுறு! இப்படி நிறைய கொசுங்ற வேர்ச்சொல்லுல இருந்து வரும்.”

“நுளம்புன்னே சொல்ல வேண்டியதுதானே? அப்புறம் எதுக்கு கொசுன்னு இனியொரு சொல்?”

“தமிழறியா அரைகுறைகள் செய்யுற வேலைதான் இது. Mosquito அப்படிங்ற நுளம்பம், Culicidaeங்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூச்சி. Culicidaeங்ற இலத்தீன் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கொசு. ஆக, கொசுக் குடும்பத்தைச் சார்ந்த நுளம்பம் அப்படின்னு வரணும். ஆனா, Mosquito அப்படிங்றதுக்கே கொசுன்னு சொல்லாக்கம் செய்துட்டாங்க யாரோ!”

“கேட்கிறேன்னு கோவிச்சுக்க கூடாது நீங்க. ’குசு’வுக்கும், ’கொசு’வுக்கும் எதனா தொடர்பு இருக்கா?”

“இருக்கு. ஆனா, இல்லை. குசு அப்படின்னா, மறைபொருளா ஊடுவது. ஆசனவாயில்ல இருந்து வெளியில் ஊடுவதும் குசுதான்.

காதும் காதும் வெச்ச மாதிரி, ஒரு பற்றியத்தை ஊடால விடுவதும் குசுதான். இதைத்தான் குசுகுசுன்னு சொல்றதுன்னும் சொல்றோம். குசுன்னு சொல்லத் தயங்கறவங்க கிசு கிசு ஆக்கிப்புட்டாங்க. தெலுங்குலயும் குசு குசுதான்; சப்பானிய மொழியிலயும் குசு குசுதான். வட மொழியில, உசிர் குசுர்ங்றாங்க.

குசு நாற்றம் கொசுவுக்கு ரொம்பப் பிடிக்கும். குசுன்னு மட்டும் அல்ல, கரியுமில வாயு அடங்கிய எதுவும் அதற்குப் பிடித்தமான ஒன்னு. ஆக, தூய்மையா இருக்கும் போது நுளம்பத்தின் இடைஞ்சல் குறைவா இருக்கும்.”

”நுளம்பண்ணே, குசுவுக்கும் கொசுவுக்கும் உண்டான வேறுபாட்டை நல்லாச் சொன்னீங்க. பொதுவா, கொசுங்ற நுளம்பு ஏன் நம்மைக் கடிக்குது?”

“ஆண் நுளம்பு நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான். நான் கொசு குடும்பத்தைப் பத்தி சொல்றேன். ஆண் நுளம்புகள் பொதுவா, தாவர அமிழ்தம்(nector) மற்றும் தாவர இரசங்களைத்தான் பருகும்.

பெண் கொசுக்களுக்கு, முட்டை வைப்பதற்காக, proteinங்ற புரதச் சத்து தேவைப்படுது. அதனால, இரத்தத்தை உறிஞ்சுகுழலால உறிஞ்சிக் குடிக்குது அது. அப்படி உறிஞ்சிக் குடிக்கும் போது என்ன ஆகுதுன்னா, அந்த பெண் கொசுவோட உமிழ்நீர், எச்சில், நம்மை உடம்புல இறங்கிடுது. அது, பல நோய் மற்றும் அசெளகரியங்களுக்குக் காரணமாப் போய்டுது.”

”சரிங்ணே, உங்களுக்கு கொசுனால எந்தத் தொல்லையுமே இல்லையா? நீங்க எப்படி அதை, எதிர் கொள்றீங்க?”

“நான் பொதுவா, தூய்மையாகவும் சுகாதாரமாவும் இருக்குறதை விரும்புறவன். அதனால அவ்வளவா என்னை அதுக கடிக்காது. ஆனா, நித்திரையில இருக்கும் போது காதுல புகுந்துட்டு, உர்ர்ர்ர்ன்னு சத்தம்வுட்டு மனுசனுக்கு எரிச்சலூட்டும்”

“அப்ப, அதை எப்படி சமாளிப்பீங்க?”

“பெண் கொசுக்கள்தான நம்மகிட்ட வருது? அதனால, பக்கத்துல படுத்துட்டு இருக்குற பொண்டாட்டிக்கு நல்லா நாலு அறை, ரய்ய்ய்யுன்னு உடுவேன். எனக்கு இருக்குற கோவம் எல்லாம் தாழ்ந்து போயிரும்.”

“என்னண்ணே சொல்றீங்க? அப்புறம் உங்களுக்கு எதும் நடந்துறாதா?”

“அதையெல்லாம் வெளில சொல்ல முடியுமா?”

“சரி விடுங்கண்ணே! அப்புறம் இந்த நுளம்பு, கொசு, தினாசு எல்லாம் ஒன்னுதானா?”

“கெடையாது, கெடையாது! கொசுக் குடும்பத்துல வர்றது நுளம்பும், தினாசும். தினாசுன்னா, நாய், ஆடு, மாடுகள்ள இருக்குற சிறு பூச்சி.”

“ஓ, ஆடு, மாடுகள்ல இருக்குறது? அப்ப, தினாசும் உன்னியும் ஒன்னா?”

“வேற, வேற!”

"சரிங்ணா. அப்புறம் கொசுவைப் பத்தின வேற தகவல்கள்?”

“கொசுக்கள் ஒரு அபூர்வமான பிறவின்னுதான் சொல்லணும். ஐந்து மாதங்கள் வரை வாழக் கூடியது. ஒரு வினாடிக்கு, முந்நூறுல இருந்து அறுநூறு முறை தன் சிறகுகளை வேகமா அடிக்கும் வல்லமை கொண்டது. ஒரு மணி நேரத்துல கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் பறக்க வல்லது.

ஒருவனுக்கு ஒருத்திங்ற முறைப்படிதான் கொசுக்கள் வாழ்க்கை நடத்தும். தன்னுடைய இணை எங்க இருக்குன்னு, அந்த பெண் கொசுவினுடைய சிறகடிப்பின் அதிர்வை வெச்சே கண்டுபிடிக்கும் தன்மை கொண்டவை ஆண் கொசுக்கள்.

ஒரு மனிதனின் சஞ்சாரத்தை, அம்மனிதன் வெளியேற்றும் கரியுமில வாயுவை மோப்பம் கொண்டு, எழுபத்தி அஞ்சு அடி தூரத்திலிருந்தே கண்டுபிடிச்சிடும் பெண் கொசுக்கள். பொதுவா, கொசுக்கள் பெண்களைத்தான் அதிகம் விரும்பிக் கடிக்கும்”

“நுளம்பண்ணே, நல்ல தகவல்களை அறியக் கொடுத்தீங்க. மிக்க நன்றி!”

”குசுவும், கொசுவும் இல்லாம நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துகள்! நன்றி!!

5/17/2011

விதைப்போர் வீழ்ந்திடினும், விதைகள் வீழ்வதே இல!!

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம் - நாலடியார்.

கொங்கு நாட்டிலே, மேட்டிமை பொருந்திய அரசியலாளர்களின் சூழ்ச்சிக்கு இரையாக்கப்பட்டு ஏழையாகிப் போன ஒரு உழவனுக்குப் பிறந்து, வீழ்ந்தது வீழ்ந்ததுதான் என்றிலாமல், விதைப்போர் மரிப்பினும் விதைக்கப்பட்டவை மேலெழும் எனக் கருதிய தாய் தகப்பனால், அறம் வழுவா ஆசிரியன்மார் சிலரால், முட்டி மோதி, தட்டுத் தடுமாறி, காலத்தின் போக்கில் சிங்கப்பூர் அடித்துச் செல்லப்பட்டவனானேன்.

'ஆமாவா'த்தமிழ் கேட்டு பூரித்துப் போனாலும் கூட, அங்கு வாழும் தமிழரின் நிலை கண்டு கலங்கிப் போனேன். 1968ஆம் ஆண்டு விடுதலையாகிப் போன ஒரு நாட்டிலே, பெரும்பாலான தமிழரெலாம் பொருளாதாரத்தில் வெகுவாகப் பின்தங்கி இருந்தார்கள். அந்நாட்டு அரசியல் கட்டமைப்பும் நம்மவர்க்கு ஏதுவாக இல்லை என்பதே எம் கருத்து. ஆனால், என் நண்பர்கள் இன்னமும் கூட அதை ஏற்க மறுக்கிறார்கள்.

இருபத்து ஏழு மாதங்களுக்குப் பிறகு, இந்தோனேயம் மற்றும் மலேய நாடுகளுக்குச் செல்கிறோம். சில காலம், அங்குமிங்குமாக நகர்கிறது. அங்கும் தமிழினம், வெகுவாகப் பின்தங்கியே இருக்கக் காண்கிறோம். இம்மூன்று நாடுகளிலும், அடுத்தடுத்த தலைமுறையினர் மேன்மை பெறுகிறார்கள் எனச் சொன்னாலும் கூட, அந்த வளர்ச்சியின் ஏற்றமானது வெகு மத்திபமாகவே இருக்கிறது.

கிழக்காசிய நாடுகளை அடுத்து, மேற்படிப்புக்காக கனடா நாட்டிற்குச் செல்கிறோம். அங்கேதான் நமக்கும், ஈழத் தமிழர்களுக்குமான அணுக்கம் பிறக்கிறது. டொரொண்டோ, மோண்ட்ரியால் மற்றும் ஒட்டாவா நகரங்களில் தமிழ் மக்கள் செறிவாகக் குடியேறி இருந்தார்கள்.

அவர்களைக் கண்டதும், மாபெரும் சோரவிரக்தி எம்மைக் கப்பியது. இரவு, பகல் என்று பாராது, அயராமல் உழைத்து, உழைத்து ஓடாய்த் தேய்ந்து கொண்டிருந்தார்கள். பெற்ற பிள்ளைகளை வளர்க்க வேண்டும். தாயகத்தில் ஓடி ஓடிப் பிழைக்கும் பெற்றோருக்கு காசு, பணம் அனுப்ப வேண்டும். அண்ணன் பிள்ளை, தமக்கை பிள்ளை எனப் பேதம் பாராது, அவர்களையும் புலம் பெயரச் செய்ய வேண்டுமென ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் கனவுகள்.

உழைத்தார்கள்; உழைத்தார்கள். உயிர் போகுமளவுக்கு உழைத்தார்கள். ரெண்டு வேலை; இராவுக்கொரு வேலை, பகலுக்கொரு வேலையென உண்ணாமல், உறங்காமல் வேலை பார்த்தார்கள்.

ஊருக்கு காசு அனுப்ப வேணும் மணி சார் என்பார். அக்காவென்ட பெட்டை கொழும்பு வந்து நிக்கிறா, அவளை இங்கால கொண்டாறணும் மணி சார் என்பார். இங்க இருக்குற ஒரு பொடியனை வெச்சு, அண்ணண்ட பெட்டைக்கு இசுபான்சர் செய்யப் பண்ணனும் மணி சார் என்பார். இப்படியாக, ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் கனவுகள்.

அநீதி, எங்கும் அநீதி. தாயகத்தில் இருந்து அழைத்து வரப் பணம் வாங்கிய இடைத்தரகனிடம் அநீதி. சிங்களப் படையின் அநியாயத் தாக்குதலில் சிக்குண்டு போன அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மருத்துவம் பார்க்கக் கடனாகப் பணம் கொடுத்தவனின் அநீதி.

புலம் பெயர்ந்து வந்து புகுந்த நாட்டில் தமக்கும், தன்னினத்துக்கும் அவப் பெயரை உண்டாக்கும் காடையர்களிடம் அநீதி. குழுக்கள் அமைத்துக் கொண்டு செய்யும் இக்காடையர்களின் மோதல்களால், ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் மீதான அநீதி.

இத்தனையையும் பொறுத்துக் கொண்டு உழைத்தார் தமிழ் மக்கள். அயராது உழைத்திட்டார் தமிழ் மக்கள். புனரமைப்புப் பணிகள்; வீதிதோறும் தமிழ்ப் பள்ளிகள்; தத்தம் குழந்தைகளுக்குப் புகுத்திட்டார் மொழியறிவு. வளர்த்திட்டார் தமிழ்ப் பண்பாடு. திறந்துவிட்டார் கல்விக் கண்.

பிள்ளைகள், நம் பிள்ளைகள், கூட்டம் கூட்டமாய்ச் சென்றிட்டார் பாடசாலைகளுக்கு. டொரொண்டோ பல்கலைக் கழகம், யார்க் பல்கலைக் கழகம், வாட்டர்லூ பல்கலைக் கழகம், ஒட்டாவாப் பல்கலைக் கழகம், மேற்குக் கனடியப் பல்கலைக் கழகங்கள் என எங்கும் மாணவர்கள்; நம் தமிழ் மாணவர்கள்!!

காசு, காசெண்டு எங்களைப் போல அலைஞ்சு திரிய வேணாம் பிள்ளாய். இனத்துல நாமும் மனுசரெண்டு காமிக்க வேணும் பிள்ளாய். நல்லாப் படிச்சு, நாட்டு மக்களுக்கு நாம யாரெண்டு காண்பிக்க வேணும் பிள்ளாய் எனக் காண்போரை எல்லாம் பாராட்டிச் சீராட்டி ஊக்கமளிப்பார் ஏக்ராஜ் அண்ணாச்சி.

இன்றைக்கு எத்துனை பேருக்கு, அந்த சமூக சேவகர், தமிழ் மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏக்ராஜ் அண்ணாச்சியைத் தெரியும் என்று தெரியவில்லை.

“வெடிஞ்சா, நீதிமன்றஞ் செல்ல வேணும்; வடிவான கதை ஒன்டு எழுதித் எழுதித்தாங்கோ!”வெனக் கேட்டபடியே அவர்தம் அறைக் கதவுகள் தட்டப்படும் விடியற்காலை மூன்று மணிக்கு. இராவு வேலை முடிந்து, கடுங்குளிரில் வந்து தட்டும் அவனது வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படும். அண்ணாச்சி எழுதும் கதையில்தான் இருக்கிறது தட்டப்பட்டவனின் அகதிமனுவை ஏற்பதுவும், அவனது சந்ததிக்கான குடியுரிமையும்!!

அண்ணாச்சி எழுந்து போய்க் கதவைத் திறந்து விட்டு, அவனுக்கேற்ற கதையை எழுதிக் கொடுத்துப் பாடம் அடித்துச் சத்தியம் வாங்குவார், “நீ உண்ட பிள்ளைகளைப் படிக்க வெப்பேனெண்டு சத்தியஞ் செய்” என. கதறி அழுது கொண்டே சத்தியம் செய்வான் அந்த அபலை. அண்ணாச்சியைத் தெரியாத தமிழன் இருக்க முடியாது அக்கால கட்டத்தில். அவர் ஒரு இசுகார்பரோ காந்தி!

வாரம் ஒருமுறையாவது அவரது அறையில் நான் தங்குவது வழக்கம். அடிக்கடி சொல்வார். “பாருங்க மணி. இந்தத் தமிழ்ப் பிள்ளைகள் எல்லாம், முதல்த் தலைமுறைப் பிள்ளைகள். எந்த நாட்டிலும் முதல்த் தலைமுறையினர் ஓங்கினதா வரலாறு கிடையாது. ஆனால், அதை நம் ஈழத்துப் பிள்ளைகள் முறியடிப்பார்கள்” என்பார்.

அப்படிச் சொன்ன மாமனிதன், நீண்ட நாட்கள் வாழப் பணித்திருக்கவில்லை. ஒட்டுமொத்த இசுகார்பரோ(Scarborough) தமிழ் மக்களும் கண்ணீர் வடித்தனர். தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஒரு தாய் அழுதாள், “என்ட பிள்ளைகள் அரசாள வேணுமெண்டு சொல்வீயளே அண்ணாச்சி?! இப்படிக் கண்டுங் காணமப் போயிட்டீகளே அண்ணாச்சி?!” எனக் கண்ணீர் உகுத்த காட்சி இன்னும் அப்படியே கண் முன்னே நிழலாடுகிறது.

அவர் மறைந்த ஆண்டு, 1998! இதோ, பதின்மூன்று, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னால், அவரது காலத்தில், அவரால் வாழ்த்தப்பட்ட பிள்ளைகள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று, கனடிய தேசிய நீரோட்டத்தில் சுடர்விட்டு ஒளிர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரமாயிரம் தமிழ்ப் பிள்ளைகள் பல்வேறு பட்டங்கள் பெற்று வெளியேறுகிறார்கள்.

சிங்கப்பூரிலும், மலேயாவிலும், இந்தோனேயத்திலும் நிகழாத அற்புதம், கனடாவிலே, அமெரிக்காவிலே எண்ணிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாக நிகழ்கிறது. மருத்துவம், பொறியியல்துறை, சட்டத்துறை எனச் சகல துறைகளிலும் நம்மவர்கள் பொன்னாய் மிளிர்கிறார்கள். தமிழகத்து மாணவர்களைக் கூட மிஞ்சி விட்டார் இப்பிள்ளைகள்.

அரசாட்சி! மக்களுக்குச் சேவை புரிவது அரசியல் பணி. சமூகப் பங்களிப்பைச் செவ்வனே செய்வது அரசியல் பணி. சட்ட திட்டங்களைத் தெரிவதும், செய்வதும், நடைமுறைப் படுத்துவதும் அரசியல் பணி. அன்றைய ஏக்ராஜ் அண்ணாச்சியின் கனவு, நம் தமிழ்ப் பிள்ளைகளின் கைகளில் அரசாட்சி.

இன்றோ, அன்றோ, என்றோ என இருந்திடாமல், எமக்குள்ளேயே இருக்கிறான் நமன் என நினைத்து, அல்லன நீக்கி, மாட்சிமை பொருந்தச் செய்யுங்கால் அன்பும், அறமும், ஆட்சியும் நமக்கே!!

எந்த நாட்டின் குடிமகனாய் இருக்கிறாயோ, அந்த நாட்டுக்குப் பணி செய்வதே முதற்கடமை. அடுத்தபட்சமாக, நின்னை நினை. நும் முந்தை, நின் மொழி, நும் மரபு, நும் பண்பாடு எனச் சகலதுமாய் நின் தனித்தன்மை காத்திடுக. நீயும் ஓங்குவாய்! நின் மக்களும் ஓங்குவர்!!

ஆம், கனடாவையோ, அமெரிக்காவையோ நாளை ஒரு தமிழ்ப் பிள்ளை ஆளக் கூடும். ஏன்? அது உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கூட இருக்கலாம்!!

விதைப்போர் வீழ்ந்திடினும், விதைகள் வீழ்வதே இல!!

வட அமெரிக்கத் தமிழ் வலைஞர் கூட்டம் 2011, வாரீர்! வாரீர்!!

அன்புத் தமிழ் உறவுகளே,

எதிர்வரும் யூலை 2, 3, 4 ஆகிய தேதிகளில், தென் கரோலைனா மாகாணம், எழில்நகரமாம் சார்ல்சுடன் நகரில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழா நடக்க இருப்பது தெரிந்ததே. அது சமயம், ஏராளமான தமிழ் நண்பர்கள், டொரொண்டோ யார்க் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், டொரொண்டோ பல்கலைக் கழகத் தமிழ் நண்பர்கள், ஒட்டாவாப் பல்கலைக் கழக நண்பர்கள், வட அமெரிக்காவில் ஆங்காங்கே இருந்து வரும் வலைப்பதிவர்கள், குமுக நண்பர்கள் எனப் பலர் வருவதாக இசைந்து உள்ளனர்.

சென்ற ஆண்டினைப் போலவே, இந்த ஆண்டும் வலைப்பதிவர்கள் மற்றும் வலை வாசகர்களுக்கான பிரத்தியேகக் கூட்டம் ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. வழமை போலவே, குடவோலை முறைப்படி தெரிவு செய்யப்பட்ட இருவருக்கான பரிசில்களும் காத்து இருக்கிறது.

அனைத்து அன்பர்களும், தத்தம் உற்றார் உறவினர் மற்றும் நட்பினரோடு வந்திருந்து, பேரவை விழாவைச் சிறப்பிப்பதோடு மட்டுமல்லாது நம் வலையுலக நட்பையும் பாராட்டுவோம். வாருங்கள் தமிழன்பர்களே!! வர விரும்புவோர், தங்கள் வருகையை எம்மிடம் தெரியப்படுத்தினால், மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

விழா நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, பேரவை வலைதளத்தைப் பார்வையிடவும். www.fetna.org

கடந்த ஆண்டு நினைவின் நீட்சியாய்:

 அண்ணன் அப்துல்லா மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா

 தளபதி நசரேயன், இளா, யோகேஷ்வரன் மற்றும் அண்ணன் அப்துல்லா

  அண்ணன் அப்துல்லா மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா

 பதிவர் கூட்டம்

 வலைஞர் ஹரி, தமிழ்சசி மற்றும் இளா



 பதிவர் யோகேஷ்வரன்



பதிவர் சந்திப்பின் போது சுட்ட கூடுதல் படங்கள், நகர் படங்களாக:


தமிழால் இணைந்தோம்!