8/05/2010

கொக்.....கொக்கரக்கோ.... கோ!!!

சேவல்! தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று. மலையும் மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியுமான முல்லை, வயலும் வயல் சார்ந்த மருதம் ஆகிய நிலத்தில் பிரதான வளர்ப்புப் பறவையாக, செல்லப் பறவையாக, வீரத்தை வெளிக்காட்டும் பறவையாக தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் வீற்றிருக்கக் கூடிய ஒன்று.

அவ்வளவு ஏன்? தமிழர்களின் கடவுள் முருகன். அம்முருகனே ஒரு சேவற் கொடியோனாகவே விளங்குகிறான். குறிப்பாகக் கொங்கு நாட்டுப் பகுதியில் இன்றைக்கும் வீரத்தின் வெளிப்பாடாக சேவலை முன்னிலைப் படுத்துவது வழக்கம். சண்டையில் தனது சேவல் வெல்வது என்பது, ஒருவனது கெளரவத்தை நிர்ணயிக்கிறது.

ஊத்துக்குளி அரண்மனை, புரவிபாளையம் அரண்மனை, சமுத்தூர், எரிசனம்பட்டி, கரட்டுமடம், வல்லக்குண்டாபுரம், கோயிலூர், துடியலூர், ஆலாந்துறை, பூலுவபட்டி முதலான இடங்களில் இருக்கும் சேவல் வளர்ப்பவர்கள், அந்த அதீத நாட்டம் குன்றாது இன்றைக்கும் முனைப்போடு இருப்பது தமிழனின் மரபு மற்றும் பண்பாட்டைப் பறைசாற்றுவதாகவே உள்ளது எனலாம்.

இப்படியான சிறப்புமிகு சேவலை, உருவத்தின் கண் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். பெருவடை, சிறுவடை(சித்துவடை) எனப் பகுத்தறிந்து அடையாளம் கொள்கின்றனர் கொங்கு நாட்டுப் பகுதியில். இது தவிர, காட்டுப் பகுதியில் தான்தோன்றித் தனமாகக் காட்டுப் பகுதியில் திரிவனவற்றைக் காட்டுக் கோழி என்றும் அழைக்கின்றனர்.

சேவற்சண்டையில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு முறை வென்ற சேவலுக்கு, அதிக முன்னுரிமை கொடுத்து வளர்க்கின்றனர், இச்சேவலைச் சுகாதாரமான கோழியுடன் புணர வைத்து, அவை இரண்டுக்குமான குஞ்சுகளைக் கண்ணுங் கருத்துமாக வளர்த்து அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள்.

குஞ்சு பொறித்த பின், முதல் மூன்று மாதங்களுக்கு தாய்க் கோழியின் அரவணைப்பில் வளர்கிறது குஞ்சுகள். பின், தாயாலேயே அவை பிரித்து விடப் படுகின்றன. பெருவடைக் கோழிகள் பொதுவாக, பதினைந்து முட்டைகள் இட்டு பதின்மூன்று குஞ்சுகள் வரை பொறித்தெடுக்கும். சித்துவடைக் கோழிகள், இருபத்து ஐந்து முட்டைகள் வரை இட்டு, அனைத்தையும் பொறித்தெடுக்கும் வல்லமை பெற்றவை.
பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரை தாயுடன் இருந்த சேவற் குஞ்சுகள், தனியாக வளரத் துவங்கி, ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆனதும் கூவ ஆரம்பிக்கும். கூடவே, உடன் பிறந்த சக சேவல்களுடன் சண்டை இடவும் பழகிக் கொள்ளும். இதன் பொருட்டு, இவற்றைத் தனித் தனிக் கூடுகளில் அடைக்க முற்படுவர்.

ஏழு முதல் பனிரெண்டு மாதங்கள் வரைக்குமான காலம், சேவல்களின் வாலிபப் பருவம் ஆகும். இந்த வாலிபப் பருவத்தில், இவைகளின் வளர்ச்சி என்பது அதிவேகமாக உருவெடுக்கும். சேவல் விற்பன்னர்கள், இப்பருவத்தினைக் கூர்ந்து கவனித்து, சேவலின் வலிமையை எடை போட்டு, பயிற்சிக்கு உகந்ததா எனக் கணிப்பர்.

பயிற்சிக்கு உகந்தது எனக் கருதப்பட்ட சேவல்கள், முகைச்சல் எனும் சண்டைக்கு அழைக்கும் பயிற்சிக்கு விடப்படும். பனிரெண்டு முதல் பதினைந்து மாதங்கள் வரை, முகைச்சல், நீச்சல், உயரந்தாண்டுதல், பறத்தல் முதலான பயிற்சிக்கு ஆளாகும். நீச்சல் பயிற்சி என்பது வெகுமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நீச்சல் ஒன்றின் மூலம்தான், நெஞ்சு விரியும், கால்கள் முன்பின்னாக வாங்கும் திறம் கொள்ளும், மூச்சடக்கிப் பாயும் வல்லமை பெருகும் என்கிறார் சேவல் வளர்ப்பில் கரை கண்ட சீரபாளையம் வசந்த் என்பவர்.

சேவல் போட்டி நடைபெறும் இடங்களுக்கு, போட்டிக்காக நூறுக்கும் மேற்பட்ட சேவல்கள் தினசரி கொண்டு வரப்படுகிறது. சேவல்களின் வலது கால் பின் விரலில் சிறிய கூர்மையான கத்தியை கட்டி விடுகின்றனர்.எல்லோராலும் இப்படி கத்தியை கட்ட முடியாது.சிறப்பு பயிற்சி பெற்ற சிலரால் தான் இந்த கத்திகளை கட்ட முடியும். இவர்களுக்கு கட்டாலிகள் என்ற பட்டமும் உண்டு.

சண்டையில் வெற்றி பெறும் சேவலுக்கு வெற்றி என்றும், தோல்வி பெறும் சேவலுக்கு கோச்சை என்றும் பெயர். ஒரு சேவல் தனது சேவலுடன் சண்டையிட்டு வெற்றி பெற குறைந்த பட்சம் ஐந்து மணித்துளிகள் முதல் முப்பது மணித்துளிகள் வரை ஆகிறது.

சேவல்கள் சோர்வு அடையும் போது எலுமிச்சை சாறு, குளுக்கோசு, கோவத்தலை போன்றவற்றை கொடுத்து வீரியம் ஊட்டுகின்றனர். சேவல் சண்டை நடத்தப்படும் இடத்தில் பெருமளவில் குருதி சிந்தி, அது யுத்த களம் போல் காட்சி தருகிறது.

திருச்சி, வெள்ளகோவில், காங்கயம், பொள்ளாச்சி, மூலனூர் , சேலம், வேடசந்தூர், திண்டுக்கல், பழனி, திருநெல்வேலி, போன்ற ஊர்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானவர்கள் இரண்டு சக்கர வாகனங்களிலும், சொகுசுந்துகளிலும் வந்து இந்த சேவற் சண்டையைப் பார்க்கின்றனர்.

சேவலொடு சேவல் சண்டையிடும் இந்த நிகழ்ச்சியை பறவையிடுவது என்றும் அழைக்கின்றனர்.

கொங்கு மண்டலத்தின் சில பகுதிகள் தவிர்த்து, ஏனைய இடங்களுக்குச் சென்று இது என்ன என்று வினவினோமானால், கோழி என்று சொல்லக் கூடியவர்களும், வெறுமனே சேவல் என்றும் சொல்லக் கூடியவர்களும்தான் மிக அதிகமாக இருப்பர். எதைக் கேட்டாலும், மேலெழுந்தவாரியாகச் சொல்வதென்பது, இன்றைய தமிழனின் துர்ப்பாக்கியம்?!

ஆனால், சேவலில் கிட்டத்தட்ட நானூறு விதமான சேவல்கள் உள்ளன என்பதை கிராமத்து வெள்ளந்திகள் தவிர வேறு யாரறிவார்?? நிறம் மற்றும் சிறகமைப்பைப் பொறுத்த மட்டிலும், பரப்பு, பேடு, மயில், கீறி, வல்லூறு, செவளை, காகம், ஆந்தை, அரளை, புள்ளி, பொன்றம் எனப் பலவகைகள்.

கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் எனப் பல இரகம்.

அதேபோலக் கால்களைப் பொறுத்தும், பல வகைகளாகச் சேவல்களை இனம் பிரிக்கின்றனர் என்கிறார் வெள்ளக்கிணறு சண்முகம். வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் எனப் பட்டியலிடுகிறார் அவர்.

கொங்குமண்டலத்தில், மானத்தின் சின்னமாக, வீரத்தின் அடையாளமாக, சிறப்புச் சேர்க்கும் பறவையாக, தன்னொடு ஒருவனாக இருக்கும் சேவல்களின் படங்கள் மற்றும் இன்னபிற வாழ்வியல்க் கூறுகளை ஆராய, கொங்குப்பகுதியை வலமிட்டு கூடுதல்த் தகவல்களுடன் வந்து உங்களைச் சந்திக்கும் வரை விடை பெற்றுக் கொள்வது,

--கொங்குநாட்டில் இருந்து உங்கள் பழமைபேசி.

8/04/2010

ஊர்ப் பழமை - விழாப் படங்கள்


விழாவிற்கு ஏற்பாடு செய்த அருட்சுடர்ப் பதிப்பகத்தார் மற்றும் வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்!!!



தமிழால் இணைந்தோம்!!

8/03/2010

நீலமலை ஓரம் ஒரு பயணம் - படங்கள்

நீலமலை ஓரம்
விழிகள் மயங்க
ஒரு வரம்
முகில்கள் படர
நீலமலை நாண
கலந்த கலவியின்
சிணுங்கல்ச் சிலுசிலுப்புச்
சாறலூசிகள் நம்மை
சாந்தமாய்க் குத்த
மயில்கள் தோகை விரிக்க
பச்சை! பச்சை!! பச்சை!!!

பசுங்காட்சிகள் எங்கெங்கும்
இவற்றின் உச்சத்தில்
களிறுக்கும் கலவி
கொள்ளை ஆசை
இளமஞ்சள் மினுமினுப்பில்
விரிந்து வழிந்த கேசம்
அடிநுனியின் சுருண்டிருந்த
ஒற்றை முடி
கொஞ்சு மொழிகள்
ஆ, ஆயாளேவென
ஏறெடுத்துப் பார்த்த
வஞ்சிமங்கையின்
ஒற்றைப் பார்வையில்
என்னவளின் ரெளத்திரம்
ஊடல் ஊற்றெடுக்க
தணித்த நீலமலை
வாழ்க எழில்வஞ்சி!!












இது இவருக்குத் தெரியும்!

இந்தப் படம் இந்த இடத்துல இருக்குன்னு, தளபதி நசரேயனுக்கும், மாடு மேய்ப்பருக்கும் தெரியும்!



8/02/2010

கோவை பேரூர் - பழமைபேசியின் பங்களிப்புக்கு வாரீர்

கோவை பேரூர் தமிழ்க் கல்லூரியானது, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே! மேலதிகத் தகவல்களுக்கு இச்சுட்டியைச் சொடுக்கவும்.

பேரூர் தமிழ்க்கல்லூரி நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை 04.08.2010 புதன்கிழமை மதியம் 11 மணி முதல் 2 மணி வரை, தமிழ் மொழி மற்றும் தமிழ் வலைப்பதிவுகள் குறித்த கருத்தரங்கு மற்றும் பயிலரங்கை நடத்த நானும் நண்பர் பதிவர் நண்பர் ஆரூரன் அவர்களும் திட்ட மிட்டுள்ளோம். கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு மூன்று அமர்வுகளாக திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் அமர்வு:

தமிழ் வலைப்பதிவு உருவாக்குவது குறித்தான பயிலரங்கு. இதில் வலைப்பக்கம் உருவாக்குவது, தமிழில் தட்டச்சுவது குறித்தான விளக்கங்கள். தமிழ்ப் பதிவுகள் குறிப்பிடத் தக்க ஊடக சக்தியாக மாறியுள்ளமை குறித்தும் விரிவாக எடுத்தியம்பப்படும்

இரண்டாம் அமர்வு:

கொங்குத் தமிழின் சிறப்பு. ஒட்டுமொத்தத் தமிழ் மொழியில், கொங்குத் தமிழுக்கென ஒரு சிறப்பு உண்டு. அது குறித்த விளக்கங்கள், தேர்ந்த உதாரணங்களுடன் கூடிய விரிவுரை.

மூன்றாம் அமர்வு:

தமிழ் இலக்கிய விநாடி வினா. வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவை விழாவில் (ஃபெட்னா) மிகச் சிறப்பாக நடத்தப்பட்ட இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியின் மீளோட்டம். இது ஒரு பல்லூடக நிகழ்ச்சி. ஒரு மொழியின் தொன்மை குறித்தான பல்லூடக வாயிலான விநாடி வினா நிகழ்ச்சி வேறு மொழியில் இருக்கின்றதா என்பது ஐயத்திற்குரிய ஒன்றுதான். இந்த நிகழ்ச்சி ஒரு அரிய பொக்கிசம் என்றும் கூறலாம்.

நாஞ்சில் பீற்றர் அவர்கள் அழகுற, வெகு நேர்த்தியாகப் படைத்திருக்கிற இப்பல்லூடக நிகழ்ச்சியானது அனைத்துத் தமிழர்களும் கண்டு பயனுற வேண்டிய ஒன்றாகும்.

அன்பார்ந்த உறவுகளே, நாளை இந்த நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வாரீர் என அன்போடு அழைக்கிறோம்.

பணிவுடன்
பழமைபேசி

நாம் பிடித்ததில் சில.... 02 Aug 2010

இந்த இடுகையாளன் எக்கட்சியையும் சாராதவன்... நண்பர்கள் சிலரின் அன்புத் தொல்லையால், நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு, முக்கிய விருந்தினர் பகுதியில் அமர வைக்கப்பட்டவனே அன்றி வேறேதும் இல்லை.

மேலும் இன்றைய நாளில் பெற்ற அனுபவத்தை எழுத எமக்கு இது உசிதமான நேரம் அல்ல எனக் கருதுவதால், பிறிதொரு நாளில் அவை பகிரப்படும்.

அருமையான, பொறுப்புள்ள உரை!





நண்பர், கோவைத் தென்றல் மு.இராமநாதன்

மொடக்குறிச்சி சுப்புலட்சுமி அக்கா





முதல்வரை எதிர்நோக்கி



நீலமலை ஓரம்







பழச்சாறுக்கு வரவேற்பு இல்லையாம்!!!
மேனாட்டு பானங்கள் மேலாதிக்கம்?!

ஆண் நண்பர்கள் கட்டியவையாம்....
பலே நண்பர்கள் தின வியாபாரம்!!!
மாணவர்கள் கவனம் தேவை!!!

குடி விளப்பி!!!

8/01/2010

நாம் உரைத்தது....

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே!

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசில இந்த இனத்துலதான் வந்து சேரணும்?! இம்மாலை வேளையில், இனியதொரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வீற்றிருக்கிற பெருந்தகை ஈரோடு தங்க விசுவநாதன் அவர்களே,

சிறப்புரை ஆற்றி அமர்ந்திருக்கிற தவத்திரு. மருதாச்சல அடிகளார், பேரூர் ஆதீனம் அவர்களே,

தமிழுக்கு எங்கெலாம் உதவி தேவைப்படுகிறதோ, அங்கெலாம் முதலாமவராய்த் தோன்றும் ஆருயிர் அண்ணன், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் KPK செல்வராசு அவர்களே,

எனதருமை ஆசான் வீதம்பட்டி மணி வாத்தியார் என்கிற நல்லாசிரியர் சுப்ரமணியம் அவர்களே,

இணையத் தமிழின் முக்கியமானதொரு கட்டமைப்புக்கு வித்திட்ட அண்ணன் காசி அவர்களே,

நிகழ்ச்சிக்கு முன்னோடிகளாக இருந்து நடத்திக் கொண்டிருக்கிற கோ.இரா. மனோகரன் அரிமா அவர்களே, திரு. மெளன. பிரபாகரன் சூலூர் அவர்களே,

அருமையானதொரு படத்தைக் கொடுத்து, உலகெலாம் ஊர்ப் பழமையைக் கொண்டு செலுத்திக் கொண்டிருக்கிற நண்பர் சுரேசுபாபு அவர்களே,

தாயுள்ளம் கொண்டு எம்மைப் பாராட்டி அமர்ந்திருக்கிற ஆசிரியை மேன்மைமிகு இந்திராணி சுப்ரமணியம் அவர்களே,

அவையோரே,

உயிரினும் மேலானது மானம்; அம்மானத்தினும் மேலான எமது பதிவுலக நண்பர்களே, முதற்கண் எமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்த்தீங்கன்னா, இந்தக் கால கட்டத்துல, ஒரு கல்லைக் காமிச்சு இதென்னடான்னு ஒருத்தனைப் பார்த்துக் கேட்டாக்க, stone அப்படின்னு சொல்வான். கிராமத்தவனாய் இருந்தா, கல்லுன்னு சொல்வான்.

இதே, வீதம்பட்டி வேலூர்லயோ, சலவ நாயக்கன் பட்டிப் புதூர்லயோ, இல்ல, இங்க செங்கோட கவுண்டன் புதூர்லயோ இருக்குற ஒருத்தர், நான் இருந்த காலத்துல வந்து, இது என்றான்னு ஒருத்தனைக் கேட்டிருந்தா, அவன் என்ன சொல்லி இருப்பான்?

இது செங்கல்லு, கருங்கல்லு, வெங்கச்சாங்கல்லு, மசணைக்கல்லு, நரிக்கல்லு, ஓடைக்கல்லு, உருட்டுக்கல்லு, செண்டாங்கல்லு, சுக்காங்கல்லு, பருக்கைக்கல்லு, சுண்ணாம்புக்கல்லு, கடப்பைக்கல்லு, சலவைக்கல்லு, பளிங்குக்கல்லு, ஆவுரோஞ்சிக் கல்லு, பாதரோஞ்சிக் கல்லுன்னு, இப்படி எது கண்ணுல படுதோ அதைச் சொல்லி இருப்பான்.

ஆனா, இன்னைக்கு அந்த நுண்ணிய அடையாளம்ங்றது மறைஞ்சுட்டு வருது பாருங்க. செரி, அதுக்கு நாம என்ன பண்ணுலாம்? இதுகளை எல்லாம் பதிஞ்சு வெக்கலாம். சும்மா பேர்களை சொல்லி வெச்சாப் போதுமா?? அதுக்கான படங்களையும் போட்டு வெக்கோணும்.

நாம ஏற்கனவே, நம்மூர்க் குருவிகளை எல்லாம், தகைவிலாங்குருவி, பூங்குருவி, மாங்குருவி, நொள்ளைமடையான் அப்படின்னு ஒன்னு ஒன்னுக்கும் ஒரு படத்தைப் போட்டு பதிஞ்சு வெச்சிருக்கோம். அதே மாதர செய்ய வேண்டியது நெறைய இருக்கு. இந்தக் கல்லுக ஒன்னு ஒன்னையும் படத்தோட எழுதி வெக்கோணும்.

இங்கெ பேசுன இராமராசு வேட்டி சட்டைகள் நிறுவனத்தைச் சேர்ந்த புரவலர் செல்வராசு அண்ணனவிக சொன்ன மாதர, ஆண்டுக்கு ஒரு நூல் நிச்சியமா வரும். அதுக்கு உங்க ஆதரவு அவசியம் தேவைப்படுது.

அடுத்ததா ஒரு விசியம்.... போனவாட்டி இங்க் வந்திருந்தப்பதான், நண்பர் ஆரூரனைத் தெரியும். அவர் உங்க பதிவுல இருக்கிறதை எல்லாம் நூலாப் போடுறேன்... அதுக்கு என்ன ஊதியம் எதிர்பாக்குறீங்கன்னு கேட்டாரு.

நான் ஒன்னுமே வேண்டாம். ஒரு வேளை, வருமானம்ன்னு ஒன்னு வந்தா, நீங்க கைக்காசு போட்டுச் செய்துட்டு இருக்குற, பள்ளிக்கூடத்துக்கான வேலைகளுக்கு அந்தக் காசை வெச்சிகிடுங்கன்னு சொல்லிட்டேன்.

இது இந்த நூலுக்கு மாத்திரம் அல்லங்க. என் வாழ்நாளில் நான் எழுதப் போற அத்தன நூல்களுக்கும் இந்த வாக்குறுதி பொருந்தும்.

இந்நூலைப் பதிப்பித்து, முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிற நண்பர் ஆரூரன், ஈரோடு கதிர், பாலாண்ணன், மற்றும் உள்ள அனைவருக்கும் நன்றிகளைச் சொல்லி, இந்த நல்லதொரு வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன். வணக்கம்!