10/08/2008

சரி செய்யுற கிராமியப் பாட்டு!

ஈசல் இறகுபோல இருபுறமும் கண்டாங்கி,
கல்லில் அடியாம கசக்கி நல்லா தந்திருவேன்!

கல்லில் அடியாம கசக்கி நல்லா தந்தியானா,
தாயாரு அறியாமலே தனியாக நான் வருவேன்!


தாயாரு அறியாமலே தனியாக வந்தியானா,
தட்டான் அறியாமலே தாலி பண்ணி நாந்தாறேன்!

தட்டான் அறியாமலே தாலி பண்ணித் தந்தியானா,
ஊராரு அறியாமலே நாலு சொகம் நாந்தாறேன்!

ஊராரு அறியாமலே நாலு சொகம் தந்தியானா,
அடுத்த ஊடு தெரியாம ராராட்டு நாந்தாறேன்!

அடுத்த ஊடு தெரியாம ராராட்டுத் தந்தியானா,
ஆத்தா அறியாம வாக்கப்பட்டு நான் வாறேன்!


நீ கோவணத்தோட பொறந்திருந்தா,
அவ கொசுவத்தோட பொறந்திருப்பா!

10/07/2008

போச்சு! போச்சு!! போச்சு!!!

சின்ன வயசுல, பூலாங்கிணறு முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்கு எங்க அத்தையவிங்க ஊருக்குப் போயிருந்தேன். வரும் போது, ஒரு பந்து வாங்கியாந்தேன். சரின்னுட்டு அந்த பந்த எடுத்துக்கினு சோட்டாளிகளோட மொசப்பந்து விளையாடலாம்னு போய்க்கினு இருந்தேன். அப்ப பாருங்க, பெரிய வயசுப் பசங்க வந்து என்னோட பந்தைப் புடுங்கி, அவிங்க வெளையாட ஆரம்பிச்சுட்டாங்க. உடனே, நாம அழ ஆரம்பிச்சுட்டோம். அதப் பாத்த ஒரு தடி மாடு வந்து சொன்னான்,

புகையில விரிச்சாப் போச்சு
அப்பளம் நனஞ்சாப் போச்சு
மோர் புளிச்சாப் போச்சு
சோறு கொழஞ்சாப் போச்சு
இட்லி ஆறினாப் போச்சு
தோசை காஞ்சாப் போச்சு
பொழுது விடிஞ்சாப் போச்சு
அந்தி சாஞ்சாப் போச்சு
கொளம் வத்துனாப் போச்சு
வாய்க்கா வறண்டாப் போச்சு
அடுப்பு அவிஞ்சாப் போச்சு
சாயம் வெளுத்தாப் போச்சு
கூரை பிரிஞ்சாப் போச்சு
வண்டி கவுந்தாப் போச்சு
காவக்காரன் தூங்கினாப் போச்சு
அரக்கன் எழுந்தாப் போச்சு
பொம்பளை சிரிச்சாப் போச்சு
ஆம்பிளை அழுதாப் போச்சு!

'அப்பிடியிருக்க ஆம்புளைப் புள்ளை நீ அழலாமா?'ன்னான். அதைக் கேட்ட நான், 'இதைக் கேட்ட எம் பொழப்பு நாசமாப் போச்சு'ன்ட்டு எட்த்தைக் காலி பண்ணினேன்.

பங்குச் சந்தைல மொதலு போட்டாப் போச்சு!

10/06/2008

சாமான்யன்


அந்தக் கூடத்துச் சுவரோரம்
சிறு சர்க்கரைக் கட்டியை
சுமந்தபடி சென்றன
எறும்புகள்!
சுமை சுமக்கிறோம்
என்ற சலிப்பும் இல்லை;
விருந்து உண்ணப்
போகிறோம் என்ற
செருக்கும் இல்லை அவற்றுக்கு!!
----------------------------------------------------

கால் கடுக்க நின்றிருந்தேன்,
வரிசை வரிசையாய்ச்
சென்றன பேருந்துகள்
எதிர்த் திசையில்!

--------------------------------------------------

ஓடோடிச் சென்றேன்
பள்ளியில் மணி அடித்ததும்,
புதுப் புத்தகங்கள் பார்க்க!
அம்மா சொன்னாள்,
கடைக்கு இனியும்
வரவில்லை
இவ்வருட புத்தகங்கள்!!

கோவை அய்யாமுத்து - 2

வழக்கமாக தமிழுக்கே உரிய சாபக்கேடாக அய்யாமுத்து பற்றிய குறிப்புக்களும் நூல்களும் தமிழில் அதிகம் வரவில்லை. அவர் வாழும் காலத்திலும் மறைந்த பின்னரும் நன்றி மிகுந்த தமிழர்களாலும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கத்தினராலும் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டார். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மட்டுமே தனியொருவராக அய்யாமுத்து அவர்களின் நினைவினைப் போற்றி வருகிறார், அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் வெளிவரும் ஓம்சக்தி இதழ் பலமுறை அய்யாமுத்துவைப் பற்றிய நினைவுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சியில் அருட்செல்வர் கட்டியுள்ள திருமண மண்டபத்தில் அய்யாமுத்து மற்றும் அவருடைய துணைவியார் கோவிந்தம்மாள் ஆகியோரின் உருவப்படங்கள் அவர்கள் உயிருடன் இருந்த போதே திறந்து வைக்கப்பட்டன.

இதைத் தவிர அந்த மாபெரும் மனிதர் மற்றும் அவருடைய ஒப்பற்ற துணைவியார் பற்றிய நினைவுகள் தமிழர்களின் நினைவுத் தடத்திலிருந்து முற்றாக அழிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலதிக விபரங்களுடன் கூடிய, கீழ்க் கண்ட பதிவினை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.

காந்திய நெறியில் ஒரு தடம் - கோவை அய்யாமுத்து


ஒழச்சித் திங்குறது ஒரு கோடி! ஏச்சித் திங்குறது ஏழு கோடி!!

10/05/2008

யாரிந்த கோவை அய்யாமுத்து அய்யா?

கோயம்பத்தூர்ல பொறந்து, இருவது இருவத்தி மூனு வருசம் அங்கயே படிச்சு, பொழப்பும் நடத்தி இருக்குறேன். கோவை அய்யாமுத்து அய்யாவைப் பத்திக் கேள்விப்பட்டது கெடையாது. இது எப்படி? இல்ல, அது என்னோட தப்பா?? கண்ட கண்ட கதையை எல்லாம் பள்ளித் துணைப் பாடத்துல வெச்சீங்களே, ஏன் இவரைப் பத்தி ஒரு பாடம் வெச்சிருக்கக் கூடாதா? ஏன் இந்த ஓரவஞ்சினை? ஒரு வேளை, இப்ப ஏதாவது அவருக்கான கௌரவம் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அப்படியே இருந்தாலும், அது தாமதமான, நிறைவற்ற ஒண்ணுதான். சரி, இனி அவரைப் பத்தி கொஞ்சம் பாப்பமா?!

அவர் அந்தக் காலத்துல பெரிய, நேர்மையான தலைவர்ங்க. காந்தி கூடவே இருந்து, நெருக்கமாப் பழகுனவர். தமிழ் நாட்டுல காதி, கதர் சங்கத்தை மூலை மொடுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேத்துனவர். அய்யா பெரியார் கூட வேலை செஞ்சு, நெருங்கிப் பழகுனவர். பாருங்க, பெரியார் காங்கிரசுல இருந்து வெளிய போனப்ப இவர் போகலை. ஆகவே, திராவிடம் இவரைக் கண்டுக்கலை. கர்மவீரர் காமராசர் கூடவும் போகலை. கடைசில மூதறிஞர் இராஜாஜி கூட இருந்தாரு. பொது வாழ்வுக்காக தன்னை அர்ப்பணம் செஞ்சவர். அவர் தயாரிப்புல, இயக்கத்துல வந்த
கஞ்சன் திரைப்படப் பாடல்தான் திராவிட, தமிழ் மேடைகள்ல தவறாம இசைக்கப்பட்டு மக்களைத் தெரட்ட ஒதவி இருக்கு. அந்தக் காலத்துல, இந்தப் பாட்டை கடவுள் வாழ்த்து மாதிரியே பாடினாங்களாம். ஆமாங்க, அந்தப் பாட்டு, "இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழில் உடையோன் எங்கள் தமிழன்" ன்னு தொடங்கும்.

இனியாவது அவரை முன்னிறுத்தி, அவரோட தியாகம், பண்புகள் எல்லார்த்தையும் அடுத்து வர்ற தலைமுறைக்கு கொண்டு போய்ச் சேருங்க. அவர் எழுதின சுயசரிதையப் பாடமாக்கலாம். பல்கலைக் கழகங்கள்ல பாவியுங்க. அந்தப் பாட்டை புத்தகத்துல போடுங்க. தியாகிகளைப் பத்தி சொல்லுறதுல எதுக்குத் தயக்கம்?

நல்லார நாவில் உரை! பொன்னைக் கல்லில் உரை!!

சார்லட்(Charlotte, NC, U.S.A) பதிவர் சந்திப்பு

ஆமாங்க.... சக பதிவர்ங்ற முறையில அறிமுகமாகி, ஒரு நல்ல குடும்பத்தினரை சந்தித்த வாய்ப்பு எமக்குக் கிட்டியது. பண்பாளர் சீமாச்சு அண்ணன் அவிங்களையும், அவிங்க குடும்பத்துல எல்லாரையும் நேத்து சந்திச்சோம். தமிழ் மண்ணுக்குரிய விருந்தோம்பல் முதலானவற்றையும் தாண்டி, என்னை பாதிச்சது மூணு விசயங்கள்.

முதலாவது: 1930ல ஒரு நல்ல கல்வியாளர் எழுதின நாட்குறிப்பு. ஆமாங்க, அவ்வளவு தெளிவா சிறு எழுத்துக்களால எழுதப்பட்டு இருந்தது, ரொம்ப வியப்பா இருந்தது. அதுல இருந்ததுல, என்னை மிகவும் பாதிச்சது, ஒருவர் மனம் புண்படும் போது அவரது மனம் வலிக்கும். ஆனால், அந்த வலி நீங்காமல் மீண்டும் மீண்டும் வந்து அவரை வதைக்கிறது என்றால், அதற்குக் காரணம் பொறாமை, ஆத்திரம், வஞ்சகம், கோபம், சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே காரணம்ன்னு குறிப்பிட்டு இருந்த வாசகம். படிச்சதும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. உண்மை சுடும்ங்கிறது இது தானோ?! சொல்ல மறந்துட்டேன் பாருங்க. இன்னைக்கும், 96 வயதிலும் கல்விக்கு முக்கியத்துவம் தருகிற அந்தக் கல்வியாளர், அண்ணன் அவர்களின் தந்தைதான்.

இரண்டாவது: நாம வீணைய புகைப்படம், ஒளிக்காட்சி, நிழல் படத்துல பாத்ததுதான். இன்னைக்கு நேர்ல பாத்ததும் மனசு சில மணித் துளிகள் அடங்கித்தான் போச்சு. அந்த உருவ அமைப்புக்கும் இசைக் கருவிக்கும், ஒரு தனித்தன்மை இருக்குறதை உணர்ந்துகிட்டேன்.

மூணாவது: அண்ணன் வீட்டில் பார்த்த நூலகம். ஏராளமான தமிழ்ப் புத்தகங்கள். நேர்த்தியா, நூலகம் போலவே அடுக்கி வைக்கப்பட்டு இருந்த காட்சி. நானும் ஒரு மூணு புத்தகங்களை இரவல் வாங்கி வந்திருக்கேன்.

மொத்தத்துல அந்த ஆறு மணி நேரங்கள் ஆறு நிமிடங்களா, இனிதாக் கரைஞ்சது. பதிவுலகத்துக்கு நன்றி சொல்லிகிறதைத் தவிர வேற என்ன சொல்ல?


கத்துகிட்ட வித்தை காலத்துக்கும் ஒதவும்!

10/03/2008

பழையதன் பெருமை புதுமையே!

From: XXXXXXXXXXXXXXXXXXXX
To: xxxxxxxxxxxxxxxxxxxxx
Subject:
Date: Fri, 3 Oct 2008 10:46:37 +0200

பழையதன் பெருமை புதுமையே


தமிழா என்றும் மறவாதே பழமையை,

தமிழா ஏற்றம் தந்ததும் பழமையே!

தமிழா குற்றம் இல்லை பழமையில்

தமிழா குன்றென நிற்குமே பழமை!!


தமிழா பழையதில் புதுமை காண்பாய்,

தமிழா பழகிய புதுமையும் பழமையே!

தமிழா பழய திராட்சை ரசத்திற்கே மதிப்பு,

தமிழா பழயதை பழகின் தருவது புதுமையே!!



தங்கள் வாசகன்,

அ.இராமலிங்கம்



நண்பரே,

வணக்கம்! இதை விடப் பெருமை, இனி எனக்கு என்ன வேணும்? ரொம்ப நன்றிங்க! அழகான கவிதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு!! மாற்றங்கள் அவசியமானது, தவிர்க்க முடியாதது! அதே வேளையில், பழமை பேணி காக்க வேண்டும். இல்லை என்றால், அடிப்படை மறந்து சிக்கலில் தவிக்கக் கூடும் என்பதே எம் தாழ்மையான எண்ணம். உதாரணம், சமீபத்திய அமெரிக்க நிதிச் சிக்கல். ஒரு சில ஆயிரங்களுக்கு, வீடு காட்டுப் பத்திரம் கேட்டு வாங்கிப் பெற்றது பழமை. பெரும் தொகைக்கு, எந்த அடிப்படையும் இல்லாமல் அன்றைய தினக் கூலியை மட்டும் கணக்கில் கொண்டு பெரும் தொகையை தூக்கிக் கொடுக்க, சிக்கலில் கொடுத்தவனும், வாங்கியவனுமாக. ஆனால், நம்மில் பலர் இந்த அடிப்படையை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

மிக்க நன்றி, நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டே இருப்போம்.!

பணிவுடன்,
பழமைபேசி