2/12/2026

சிறுகோட்டுப் பெரும்பழம்

 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு சார்பாக அடுத்து இடம் பெறவிருக்கும் கூட்டத்தின் தலைப்பு, சிறுகோட்டுப் பெரும்பழம் . இந்தத் தலைப்பில் ஏராளமான கதை, கவிதைகள், கட்டுரைகள் காலங்காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு, குறுந்தொகையின் இச்சொல்லாடல் புகழ்வாய்ந்தது. சிறுகோடு போலுள்ள காம்பானது  பெரும்பழத்தையும் தாங்குவது போல, காம்பு போன்ற மெல்லுயிரானது பலாப்பழம் போன்ற காதல்பாரத்தையும் சுமக்கின்றதெனும் உவமைதாம் இது.

இன்றைக்கு ரீல்சு எனப்படும் மீச்சிறுகுறும்படங்களில் இடம்பெறும் தலைவன் தலைவி க்கிடையேயான ஊடல்ப் பகடிகளில் பெரும்பாலானவற்றின் வேர், தமிழ்ச்சங்க இலக்கியங்களென்றால் வியப்படைவீர்கள். அத்தனையும், தமிழின் அகத்திணையில் அடக்கம்.

தும்மல் அக்கப்போர்

திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள இந்தத் துணுக்கு மிகவும் பிரபலம்: " வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று." (திருக்குறள்: 1317 ). நான் தும்மியபோது "நூறாண்டு வாழ்க" என்று வாழ்த்தினாள். ஆனால், அடுத்த கணமே "யார் உங்களை நினைத்ததால் தும்மினீர்கள்?" என்று கேட்டு அழுது பிணங்கி அக்கப்போர் செய்தாள்.

கனவிலும் ஊடல்

"நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர் காணப் பவர்." (திருக்குறள்: 1219). கனவிலாவது என் காதலரைக் காண முடிந்ததே என்று மகிழாமல், கனவில் வந்தவரிடமும் ஏன் நேரில் வரவில்லை என்று ஊடல் கொள்கிறாள். கனவைக் கலைத்து நினைவாவதன் வாயிலாக, மீண்டும் பிரிவில் என்னை ஆழ்த்தும் விளையாட்டாயெனவும் சிணுங்கி அக்கப்போர் புரிகிறாள்.

மகனைத் தூதுவிடுதல்

தலைவன் பரத்தையிடம் சென்றுவிட்டுத் திரும்பும்போது, தலைவியின் கோபத்தைத் தணிக்க மகனைப் பயன்படுத்துவதை ஐங்குறுநூறு விவரிக்கிறது. " நின்னினும் சிறந்தோன் புதல்வன் இவனைக் கொண்டுபுகல் கின்றீயால் ஐய! தன்பார்ப்புக் கற்பின் மலிந்த கண்ணினள்..." (ஐங்குறுநூறு: 401) . "ஐயனே! உன்னைவிடச் சிறந்தவனான உன் மகனைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறாயே? உன் மகனைக் கண்டதும் அவனது தாய் (தலைவி) தன் கோபம் மறந்து மகிழும் போது சேர்ந்து கொள்ளலாமென்பதுதானே உம் கோளாறு?" என, தோழி கலாய்க்கிறாள்.

கண்ணின் பிம்பம்

" கண்ணுள்ளின் நின்றார் எவராகொல்? பண்ணை எம்மேல் கடுத்தார் பெரிது." (திருக்குறள்: 1313) .  உம் கண்ணுக்குள் யாரோ ஒரு பெண் தெரிகின்றாள்? யார் அவளெனக் கேட்டு அக்கப்போர், அவனது கண்களில் தெரிவது தம் உருவம்தான் என்பதையும் கடந்து.

இயற்கை தந்த சாட்சி

“ தினைத்தாள் அன்ன கால செங்கால் நாரை நல்அலகு பார்க்கும் ஊரன் எம்மை நீயென்றோனே." (குறுந்தொகை: 25) ”. காட்டில் வைத்து அவன் அவளிடம் உறுதி கூறிய போது, தினைத்தாள் போன்ற கால்களை உடைய ஒரு நாரை மட்டும் மீனுக்காகக் காத்திருந்தது (அதுவும் மீன் பிடிப்பதில்தான் கவனமாக இருந்தது). அதாவது, காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கும் அந்த நாரையைப் போல நீயுமன்றோ எனச் சொல்லாமல் சொல்லி ஊடல் புரிகின்றாள்.

பல்லி சொல்லுதல்

" கல்லென் கானத்துத் தேன்மீக் கொள்பவர்... பல்லிப் பாங்கில் சொல்லும்..." (நற்றிணை: 169) . தலைவன் வருவதைத் தெரிவிக்கும் விதமாகப் பல்லி சத்தம் போடுகிறது (நற்சொல்). "பல்லியே! நீ சொல்வது உண்மையானால் என் காதலன் இப்போதே வருவான்" என்று தலைவி பல்லியிடம் உரையாடும் அளவுக்குப் பிரிவு அவளை வாட்டுகிறது. இதுவே பின்னாளில், கெளளி கத்தினால் நல்லூழ் எனும் வழக்காறாக மாறிப் போனதாகவும் இருக்கலாம்.

காதல் நோய்

காதல் நோய்க்கு ஒரு விசித்திரமான தன்மை உண்டு. மற்ற நோய்களுக்கு மருந்து வேறு எங்காவது கிடைக்கும். ஆனால் காதல் நோயைத் தந்தவனே அதற்கு மருந்தாகவும் இருப்பான். " நோய் தந்தவர் மருந்தாகார் எனின்..." (கலித்தொகை) . தனிமைகள் பரவாயில்லை, தவிப்புகள் பரவாயில்லை, கனவென்னைக் கொத்தி தின்றால் பரவாயில்லை, காதல் பிசாசே காதல் பிசாசே!

ஆதலினால் காதல் புரிவீர்! ❤️❤️‍🔥

-பழமைபேசி. 02/12/2026.


No comments: