கலைப்பார்வை
கலை, இலக்கியம் தழுவிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தையோ அல்லது நிலைப்பாட்டையோ வெளிப்படுத்துவது. கற்பனைத்திறனின் வெளிப்பாடு, பல்வேறு விழுமியங்களைத் தொடர்புபடுத்தி ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு அல்லது நிலைப்பாட்டுக்கு வரும் ஆற்றலெனவும் கொள்ளலாம்.
அண்மையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. தூரிகைக்கலைஞர் டிராஸ்ட்கி மருது , உளவியல்ப் பேராசிரியர் இராம் மகாலிங்கம் அவர்களுடனான உரையாடல்; ஓதுவது ஒழியேல் எனும் குழுமத்தில் இடம் பெற்ற நற்றிணைப் பாடலும் அதன் உரையும்; தமிழ்விழாவில் இடம் பெற்ற முரண்பாடு. இத்தனையிலும் முன்வைக்கப்பட்ட பொதுவான பற்றியம்தான், கலைப்பார்வை குறித்த கருத்து.
ஓவியம், கலை, இசை, கதை, கவிதை முதலான எல்லாவற்றிலும் தேவையானது ஊன்றி உணரும் ஆழமான உணர்வு. நுண்ணியது அறிதல். அதற்கு அவசியமானது, துறைசார் விருப்பமுள்ள நேயர்களுக்கிடையிலான கலந்துரையாடல். ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வதற்கான வடிகால்.
நற்றிணை: 106- நெய்தல்
அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே
[தலைவன் தன் தேர்ப்பாகனிடம் தன் காதலி செய்ததைச் சொல்கிறான். பாக! உனக்குத் தெரியுமா? கடலலை மணலில் ஏறித் திரும்புகிறது. அந்தப் பகுதி மணக்கும்படி நண்டு வரிக்கோடு போட்டுக்கொண்டு ஓடி விளையாடிவிட்டு வளையில் நுழைந்துகொள்கிறது. இதனை பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் என் ஆசை நோயை வெளிப்படுத்தினேன். அவள் மறுமொழி எதுவும் சொல்லாமல் தன் கையில் மணந்துகொண்டிருந்த ஞாழல் மலரைத் தடவி கையால் உதிர்த்துக்கொண்டிருந்தாள். அந்த மடப்பெண் அறிவு மயங்கி நின்றாள். (இதன் பொருள் என்னவாக இருக்கும்?)]
பாடலையும் அதற்கான உரையையும் படித்துக் கடப்பதென்பது, கலைப்பார்வையற்ற செயலாகத்தான் கருதப்பட வேண்டும். ஏனென்றால், கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள், செயற்பாடுகள், அது தொடர்பான விழுமியங்கள், குறியீடுகள், படிமங்கள், இவற்றுள் எதையுமே தொடாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் கடப்பதென்பது கலைப்பார்வையற்ற செயலே.
”ஒரு அலைக்கும் மறு அலைக்கும் இடையிலான காலத்தில், நண்டு வரைந்து கொள்ளும் சித்திரம் போலே, தம் ஆசைகளும் குற்றாயுள் கொண்டனவோ எனும் நினைப்பில் இருக்கும் அவளிடம் இவன் தன் காதலைத் தெரிவிக்கின்றான். அது கேட்ட அவள், சொக்குண்டு போய் மதிமயங்கிய நிலைக்குள் ஆட்பட்டுவிடுகின்றாள்”.
இப்படியான புரிதலுக்கு நம்மால் எப்படி வர முடிகின்றது? செய்யுள், ஓவியம், கதை/படைப்பில் இருக்கும் பொருட்கள்/குறியீடுகள், ஏற்றிச் சொலல்/படிமம் முதலானவற்றைக் கொண்டு நாம் தகவலை ஒரூங்கிணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி?
மணல் மேட்டுக்கு வந்து செல்லும் அலை - குறுகிய காலத்தைக் குறிக்கின்றது.
நண்டின் சித்திரம். ஆசையை உணர்த்தும் படிமம்
மலரின் இதழ்களைப் பிய்த்தெடுப்பது - காதற்காமவுணர்வின் நிமித்தம் சொக்குண்டு போதலுக்கான படிமம்
கலைப்பார்வையை வளர்த்துக் கொள்ள, தொடர்ந்து வாசித்தறிதல் வேண்டும். தேடலும் நாடலும் இருக்க வேண்டும். நுண்ணறிபுலம் கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தேவும் கலைப்படைப்புகளை நுகரப் பயில்தல் வேண்டும்; கதை, கவிதை, ஓவியம், இசை, மீன்பிடிப்பு இப்படியான செயற்பாடுகள் வாயிலாக. இவைதாம் ஒருவருக்குள் பரிவு, ஆய்ந்துணர்தல், துய்த்துணர்தல் முதலானவற்றைக் கட்டமைக்கும். உருவகம், படிமம், குறியீடுகளை நாம் எங்கும் காணலாம். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
- கதிரவன் /சூரியன்: ஆண்மை, வாழ்க்கை, அறிவு, காலம்
- நிலவு : பெண்மை, மாற்றம், புதிர்
- கடல் : கொந்தளிப்பு, குழப்பம், பயணம்
- பாம்பு /அரவம்: வஞ்சகம், தீயசக்தி
- நெருப்பு : புத்தாக்கம், அழிவு
- மலர் : காதல், அழகு, தொன்மை
- ஆயுதம் : அதிகாரம், ஆணவம், மேட்டிமை
- மணிகாட்டி : விதி, ஆயுள், மரணம்
- கழுகு : தன்னாட்சி, ஆளுமை
- புறா : அமைதி, ஆன்மா, விடுதலை
- மலை - காதல்மேடை, சல்லாபம்
- வண்ணத்துப்பூச்சி - சுழற்சி, விதைப்பு
- மயில் - அழகு, செழிப்பு
- கனி /பழம் - பயிர்ப்பு, இனப்பெருக்கம், பரம்பரை
- கண் - உண்மை, பார்வை
- ஆந்தை - நாசம், வழிப்பறி
- யானை - வலு, பலம், படை
- குதிரை - ஆர்ப்பரிப்பு, கொண்டாட்டம், போர்
இப்படியான குறியீடுகள் தொன்றுதொட்டு உலகின் பல்வேறு பண்பாடு, இலக்கியங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சூழலுக்கொப்ப, இன்னபிறவற்றின் இடம் பொருளுக்கொப்ப, வெவ்வேறு பொருளை உணர்த்த வல்லதாக அவையிருக்கும். இவற்றையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி, ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்வதுதான் கலைப்பார்வை. நுகர்வுக்களத்தில் இன்னபிற நேயர்களுடன் இயைந்து படைப்புகளை நுகர்வதன் வாயிலாகவும், கலைஞர்களிடம் இருந்து பயில்வதன் வாயிலாகவும் அகவுணர்வுக்கான திறப்புகள் வாய்க்கப்பெறும்.
கலைநோக்கில் குறியீடுகள் : படத்தில் இருக்கும் மெழுகுவர்த்திச்சுடர் என்பது இறைத்தன்மையையும் வளமானதொரு நேரத்தையும் குறிப்பதாக அமைந்திருக்கின்றது. மெழுகுவர்த்தித் தண்டு என்பது புதுவாழ்வு, துவக்கத்தைக் குறிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இதுவே பாதி அளவுக்கு இருந்திருந்தால், புரிதல் மாறுபாடும். ஆயுளில் பாதி கடந்து போய் விட்டிருக்கின்றது, நடுத்தரமான காலகட்டம் என்பதாகிவிடும். அணைந்திருந்தால், காலாவதி ஆனது, மரணித்த காலமென்றும் கருதலாம்.
-பழமைபேசி.
No comments:
Post a Comment