3/13/2020
சமையலோடு உறவாடு
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, ஒருவர் தம்மைச் சமையலில் ஈடுபடுத்திக் கொள்வது வாழ்வையே முழுமையாக்கும். எப்படி?
சமைப்பதென்பது நம் மனநலத்தை மேம்படுத்தும். ஏனென்றால், அது பொறுமையைச் சிறுக சிறுக நம்முள்ளே உட்புகுத்தி தேவையற்ற கொந்தளிப்புகளையும் உணர்வுப் பிழம்புகளுக்கான அத்தனை காரணிகளையும் மட்டுப்படுத்தி விடும். மனநிறைவை ஈட்டித்தரும். புத்தாக்கத்துக்கான அத்தனை கதவுளும் திறக்கப்பட்டு எல்லையற்ற தன்னாட்சியை அது நமக்குக் கொடுக்கும். வகை வகையாய், விதவிதமாய் புதுப்புது வழிகளில் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடரலாம். தாவரங்களோடும், இதர பண்டங்களோடும் உரையாடலை மேற்கொள்ளும் மனம். ஒவ்வொரு மணம், சுவை, ஓசை, வண்ணம் எனப் பல பரிமானங்களில் அவற்றை மனம் அணுகத் துவங்கும். இதன் வாயிலாக, மனம் விசாலமடைந்து சிந்தை பலவாறாக விரிவடைய தொடங்கும். ஒன்றைச் செய்து வடிவாக வரும் பொருட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மனம் தன்னம்பிக்கையில் ஆழ்ந்து புரளும். குடும்பநலமும் குதூகலிக்கத் துவங்கும். பாராட்டுகளும் கொடையுள்ளமும் படிப்படியாக பரவசத்தைக் கொணரும்.
செய்மன உணர்வு
தமக்கு, குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கென சமைக்கத் துணிந்து, மனத்தின் அத்தனை பார்வையும் நன்றாகச் செய்து அசத்த வேண்டுமென்கின்ற வேட்கையின் பொருட்டு ஒருமுகமாக அந்த இலக்கில் குவியும் மனம். மனம் ஒருமுகப்பட வேண்டுமெனத் தனித்தனிப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தேவையில்லை. சமைத்தாலே போதும். அத்தனை கவலைகளும், மனச்சிதற்ல்களும் ஒழிந்து போகும், பேரின்பத்தில் ஆழ்ந்து போகும் மனம். நாட்பட நாட்பட உள்ளுணர்வு மேம்பட்டு, அளவீடுகளெதுவுமின்றி நிதானத்திலேயே ஒன்றைப் படைக்க முற்படுவீர்கள். அதுதான் கைவாக்கு என்பது. அப்படியான கைவாக்கு மேம்படும்போது மனம் பண்பட்டே போகும்.
புத்தாக்க உணர்வு
பல்வேறு காய்கறிகள், தனிப்பொருட்கள், வறுப்பது, தாளிப்பது, சுடுவது, அவிப்பது, கருக்குவது எனப் பல்வேறு சமைக்கும் முறைமைகளென பலதரப்பட்டவோடு பின்னிப்பிணைந்து புதிது புதிதாகச் செய்து பார்க்கத் தூண்டும் மனம். தேடலை விதைக்கும். நாடலை விதைக்கும். மற்றவர் அறிந்திராத ஒன்றைப் படைக்க விழையும் மனம். அந்த இடத்தில்தாம் ஒருவரின் மனத்தடைகள் எல்லாம் சுக்கு நூறாக உடையத் துவங்கும். அது அவரவரின் தொழில், வாழ்க்கையிலும் துலங்கத் துவங்கும். மனத்தடை அகன்றால், out of box thinking எனப்படுகின்ற மனவிரிவு நேர்ந்தே தீரும்.
பொறுமை
சமைக்க சமைக்க உள்ளுணர்வு வலுப்படும். Blending இரண்டறக் கலந்து நயம் வெளிப்படுகின்ற தருணத்துக்காக மனம் ஏங்கும். அந்தத் தருணத்தை மட்டுமே இலக்காகக் கொள்ள மனம் விழைகின்ற போது, பொறுமை என்பது தானாக வந்து விடும் ஒருவருக்கு.
மனமறிதல்
பாராட்டும் போது மனம் இலயித்துப் போகும். நாட்பட நாட்பட அடுத்தவரின் நாடிபிடிக்கப் பழகிப் போகும் மனம். சுவையில், காட்சியில் மேம்பாடு காணத் துடிக்கும். அடுத்தவரின் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவல் கொள்ளும். இத்தகைய பண்பு என்பது சந்தைப்படுத்தலுக்கான ஆதார வேர். அத்தகைய பண்பு சமையலின் வாயிலாகவும் நமக்கு நேரிடும்.
நெகிழ்மனங்கொள்தல்
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு. அந்தப் பொருளும் அதனதன் இடம், வகையைப் பொறுத்து அதன் தன்மையைக் கொண்டிருக்கும். அப்படியான நிலையில் நினைத்தபடி வாய்க்கப் பெறாவிட்டால் உடனே அதனை ஈடுகட்டும் பொருட்டு வேறெவோன்றைச் செய்து சரிக்கட்டப் பழகும் மனம். உப்புக் கூடிவிட்டால், ஒரு உருளைக்கிழங்கினைத் துண்டுகளாக்கிப் போட்டு விடுவதைப் போல. எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிவதைக் காட்டிலும், மனம் நெகிழ்ந்து சரிக்கட்டிக் கொள்ளப் பார்க்கும்.
முறைமைகொள்தல்
சமையலில் ஈடுபடுத்திக் கொள்ளும் போது, ஒழுக்கம், பேணல் என்பதும் தானாகவே அமைந்து விடுகின்றது. கிடங்கில் என்னென்ன பொருட்கள் எல்லாம் இருக்கின்றது? என்னவெல்லாம் வாங்கி வர வேண்டும்? எப்படியெல்லாம் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்? கெடுதல், வீணாதல், பேணுதல், வாங்கி வருதல் எனப் பலவாறாக மனம் பண்பட்டுப் போய் விடும்.
மெய்நலம்பேணல்
சமைத்தலில் ஈடுபடும் போது, நாடலும் தேடலும் விழைவும் நேர்ந்து விடுகின்றனயென்பதைப் பார்த்தோம். அவற்றின் பொருட்டு, தரம், நயம், நலம் என்பதும் தானாகவே அமைந்து வந்து சேர்ந்து கொள்கின்றது. தாவரங்களின் இன்றியமை்யாமை, சத்துகளின் வகை, இன்ன நிலைக்கு இன்ன உணவு என்பதெல்லாமும் வாய்க்கப் பெற்று விடுகின்றது. அதன்நிமித்தம் மெய்நலமும் மேம்படுகின்றது.
சமைப்பதென்பது மனிதனை முழுமைப்படுத்தியே தீரும். சமத்துவமும் நிறைகொளலும் நேர்ந்தே தீரும். சமைக்கத் தெரியாதவன் அரை மனிதன். மெய்நலமும் மனநலமும் மேம்பட சமையலைப் பழகு. Cooking is one of the mozt zen things; you have to be there!!
-பழமைபேசி, pazamaipesi@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை!!!
Post a Comment