ஊருக்குச் சென்றேன்
கொடித்தடத்தில்
நடந்து போனேன்
நாயுருவி பார்த்தேன்
ஆடா தோடை
அலர்ந்திருக்கக் கண்டேன்
ஊமத்தை மலர்
மலர்ந்திருக்கக் கண்டேன்
கண்டங்கத்தரி மலர்
கண்களை பறிக்கக் கண்டேன்
எல்லாமும் பார்த்தேன்!!
சூரியனையே சுற்றிவரும்
அச்சிறுமஞ்சள் மலரைத்தவிர!
மனத்தில் இன்னமும்
முள்ளாய்த் தைக்கிறது
அந்த சிறுநெருஞ்சி!!
o0o0o0o0
தும்பைச் செடியைப் பிடுங்கு
உன்னிலும் உயரே போகும்
விடாதே, துரத்திப் போ
பொறுமைகொள் விட்டுப்பிடிக்கலாம்
தேனுண்ணத் தாழவந்தே தீரும்
வந்தே விட்டது அமர்ந்தும் விட்டது
அடித்துப் பிடிக்க மனம்கொள்ளாமல்
சிறகடிப்பதை இலயித்துப்
பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
வாட்ச்மேன் தாத்தாவின் பேத்தி!!
o0o0o0o0
குயிலின் ஓசைக்கு
உம்ம்... உம்ம்ம்ம்ம்...
இழுத்து இழுத்து விடுகின்றது
புங்கமரத்தடித் தொட்டிலில்
கிடக்கும் சித்தாள் குழந்தை!
o0o0o0o0
தொட்டிச் செடிக்கு
உரமாய்ப் போட்ட
முட்டை ஓடுகளை
மண்புழு தின்கின்றது!
பரவசம்
அந்த மண்புழுவுக்கா?
அடிக்கடி எட்டிப்பார்த்து
வியப்புக் கொள்ளும்
இந்த கடைக்குட்டிக்கா??
o0o0o0o0
அதிகாலை மூன்றரை மணிக்கு
எழும்பிய அந்த முதற்குயிலோசை
எந்த மரத்தில் இருந்து வந்தது?
இராமர் கோயிலடி புங்கனிலிருந்தா?
ஃபிரண்ட்சு கேட்டரிங் வேம்புவிலிருந்தா??
வீட்டடியிலிருக்கும் வாதநாராயணிலிருந்தா??
o0o0o0o0
இந்த குட்டி குட்டி
தெருவோரத்து மலரை
கண்டும் காணாமற் போகின்ற
இவனுக்கு
அங்கு
அப்படியென்ன வேலை?
o0o0o0o0
இன்று
எந்தக் குழந்தைக்காவது
குட்டி போடுகிறதா
நோட்டுப்புத்தகத்து மயிலிறகு?
o0o0o0o0
நீ
கும்புடுகிற சாமியும் மலைதான்!
சாமியிருக்கிற கட்டிடக்கற்களும் மலைதான்!!
விட்டுவிடலாம், அந்த மலையே தெய்வம்தான்!!
o0o0o0o0
நினைவிருக்கின்றதா?
காவிரியாற்று இடைத்தீவில்
பொறுக்கித் தின்ற
நாவலின் உருசி?!!
o0o0o0o0
விருட்டென
கிளம்பிப் போனார்!
தண்ணீர் விட்டபடி
அங்கிருந்த
துளசிச் செடியின்
இலைகளில்
ஒன்றைக் கிள்ளி
வாயில் போட்டு
மென்று கொண்டே
பார்த்துக் கொண்டிருக்கின்றார்
செடிகளை செடிகளை செடிகளை!!
o0o0o0o0
அம்மா அறியாததல்ல
இந்த
ஆடிக் காற்று!
பிறகு ஏன்
இந்த அங்கலாய்ப்பு??
ஒடிந்து விழுந்திருக்கும்
இந்த முருங்கைக் கிளையைப் பார்த்து!!
o0o0o0o0
காந்தியை
யாருக்குத்தான் பிடிக்காது?
இந்த ஆட்டுக்கும் பிடித்திருக்கின்றது!
குறுநாக்கில் பிடித்துப் பிடித்து
தின்கின்றது காந்தி முட்செடியிலைகளை!!
-பழமைபேசி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment