12/15/2018

அப்பா

அப்பா

வீட்டுப் போர்டிகோவில்
அத்துமீறி நீட்டிக்கொண்டிருக்கும்
மாமரத்துக் கிளையிலிருந்து
இலையொன்று உதிர்ந்தால்கூட
தரைசேரோசை காதில் விழும் அமைதி!

கிறீச் சத்தத்துக்கு மறு’கிறீச்’
சின்னமாய் இருந்தால்
திறந்த கதவை மூடிவிட்டு வருபவர்
மூத்தமகனாய்த்தான் இருக்கும்!

கிறீச் சத்தத்துக்கு மறு’கிறீச்’
சின்னமாய் மெலிதார இருந்து
திறந்த கதவும் மூடப்பட்டு
சலசல தண்ணீர் அலம்பும் சத்தமா?
கால் கழுவி நுழைபவர் மனையாள்தான்!

கிறீச் சத்தத்தோடு
மறு’கிறீச்’ சத்தமெதுவுமின்றி
நிலமதிர டக்டக் ஓசையா?
வருவது  பேரப்பயல்தான்!

முன்கதவடியிலிருந்து கொண்டே
டாமி குரைக்கிறானா?
தெருவுக்குப் பரிச்சயமில்லாத ஆளொன்று
தடத்தில் ஊசாட்டம்!

முன்கதவடியிலிருந்து ஓடிப்போய்
கிறீச் கதவின் மேலேறியபடி
குரைக்கிறானா டாமி?
ஒறம்பரை எவரோ நடமாட்டம்!

வீட்டின் உள்ளோங்கிய அறைமூலையில்
படுத்த படுக்கையாய்ப் படுத்திருக்கும்
அவரின் ஊரளக்கும்கண்கள் காதுகளில்!
திடுமெனப் பேசுகிறார்,
போய்ப்பாரு அதென்னன்னு!!
ஐந்துவீடு கடந்து ஆறாவது வீட்டுமுகப்பில்
தண்ணீர்க்குடத்தோடு வீழ்ந்து கிடக்கிறார்
கல்தடுக்கிச் சாய்ந்த பேங்க்கார அம்மா!!

-பழமைபேசி.

10/11/2018

இரைச்சல்

ஆட்டத்தில்
எந்த ஆட்டம்
அலாதியானது?
பார்க்க நேரமுமில்லை
விருப்பப்படவுமில்லை
ஆடுவார்கள் ஆடுவார்கள்
ஓயாத இயக்கத்தில்
சூட்சுமக்கார சுத்தியல்கள்!!


-பழமைபேசி.

7/15/2018

காந்திமுள்



ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மலர் கண்களை பறிக்கக் கண்டேன் எல்லாமும் பார்த்தேன்!! சூரியனையே சுற்றிவரும் அச்சிறுமஞ்சள் மலரைத்தவிர! மனத்தில் இன்னமும் முள்ளாய்த் தைக்கிறது அந்த சிறுநெருஞ்சி!! o0o0o0o0 தும்பைச் செடியைப் பிடுங்கு உன்னிலும் உயரே போகும் விடாதே, துரத்திப் போ பொறுமைகொள் விட்டுப்பிடிக்கலாம் தேனுண்ணத் தாழவந்தே தீரும் வந்தே விட்டது அமர்ந்தும் விட்டது அடித்துப் பிடிக்க மனம்கொள்ளாமல் சிறகடிப்பதை இலயித்துப் பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் வாட்ச்மேன் தாத்தாவின் பேத்தி!! o0o0o0o0 குயிலின் ஓசைக்கு உம்ம்... உம்ம்ம்ம்ம்... இழுத்து இழுத்து விடுகின்றது புங்கமரத்தடித் தொட்டிலில் கிடக்கும் சித்தாள் குழந்தை! o0o0o0o0 தொட்டிச் செடிக்கு உரமாய்ப் போட்ட முட்டை ஓடுகளை மண்புழு தின்கின்றது! பரவசம் அந்த மண்புழுவுக்கா? அடிக்கடி எட்டிப்பார்த்து வியப்புக் கொள்ளும் இந்த கடைக்குட்டிக்கா?? o0o0o0o0 அதிகாலை மூன்றரை மணிக்கு எழும்பிய அந்த முதற்குயிலோசை எந்த மரத்தில் இருந்து வந்தது? இராமர் கோயிலடி புங்கனிலிருந்தா? ஃபிரண்ட்சு கேட்டரிங் வேம்புவிலிருந்தா?? வீட்டடியிலிருக்கும் வாதநாராயணிலிருந்தா?? o0o0o0o0 இந்த குட்டி குட்டி தெருவோரத்து மலரை கண்டும் காணாமற் போகின்ற இவனுக்கு அங்கு அப்படியென்ன வேலை? o0o0o0o0 இன்று எந்தக் குழந்தைக்காவது குட்டி போடுகிறதா நோட்டுப்புத்தகத்து மயிலிறகு? o0o0o0o0 நீ கும்புடுகிற சாமியும் மலைதான்! சாமியிருக்கிற கட்டிடக்கற்களும் மலைதான்!! விட்டுவிடலாம், அந்த மலையே தெய்வம்தான்!! o0o0o0o0 நினைவிருக்கின்றதா? காவிரியாற்று இடைத்தீவில் பொறுக்கித் தின்ற நாவலின் உருசி?!! o0o0o0o0 விருட்டென கிளம்பிப் போனார்! தண்ணீர் விட்டபடி அங்கிருந்த துளசிச் செடியின் இலைகளில் ஒன்றைக் கிள்ளி வாயில் போட்டு மென்று கொண்டே பார்த்துக் கொண்டிருக்கின்றார் செடிகளை செடிகளை செடிகளை!! o0o0o0o0 அம்மா அறியாததல்ல இந்த ஆடிக் காற்று! பிறகு ஏன் இந்த அங்கலாய்ப்பு?? ஒடிந்து விழுந்திருக்கும் இந்த முருங்கைக் கிளையைப் பார்த்து!! o0o0o0o0 காந்தியை யாருக்குத்தான் பிடிக்காது? இந்த ஆட்டுக்கும் பிடித்திருக்கின்றது! குறுநாக்கில் பிடித்துப் பிடித்து தின்கின்றது காந்தி முட்செடியிலைகளை!! -பழமைபேசி.

7/02/2018

அருகிவரும் கதைக்களம்

புவி தோன்றி உயிர்கள் உயிர்த்த அந்த முதற்கணத்திலிருந்து கதைகளும் தோன்றின. மானுடத்தின் அடிச்சுவடுகளாக காலங்காலமாகக் கதைகளே இருந்து வந்துள்ளன. குறிப்பாக மாந்தனின் உயிரணுக்களைக் கொண்ட ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்தில் (Deoxyribonucleic acid), மரபுசார் விழுமியங்கள் கதைகளாகவே பொதிந்துள்ளன. கதைகளுக்கும் மாந்தனுக்குமான பிணைப்பு என்பது உணர்வார்ந்தவை. எந்தவொரு பற்றியத்தையும் கதையாகச் சொல்லும் போது, மாந்தனின் அகக்கண்கள் அதனைத் தெளிவாக உள்வாங்கி, எளியமுறையில் மாற்றங்களை உருவாக்கித் தன்னகத்தே கொள்ளக் கூடியதாகும்.

பிறந்த குழந்தைகூடக் கதை கேட்கக்கூடிய திறனுடனே விளங்குகிறது. இசையைக் கதையோடு குழைத்துப் பாட்டாகப் பாடினோர் பெரியோர். தாலாட்டுப் பாடல்கள், களியாட்டப் பாடல்களென எங்கும் கதைகள் நீக்கமற நிறைந்திருந்தன. மனிதசமூகத்தில் இடம்பெறும் எல்லாவற்றையும் குறித்துக் குழந்தைகளுக்கு, விலங்குகள், தாவரங்கள், இயற்கைக்கூறுகள் முதலானவற்றின் மீது ஏற்றிச் சொல்லும் போக்கு தமிழ்மரபில் 1990ஆம் ஆண்டு வரையிலும் வெகுவாக இருந்தது. ஊடகம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை மேலோங்கி இருந்தாலும், கதை சொல்லும் வாழ்வியல்முறை மேலைநாடுகளில் வாழ்வின், கல்வியின் அடிப்படையாகவே இன்னமும் இருந்து வருகிறது. ஆனால், தாய்த்தமிழ் நாட்டிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடையேயும், கதை சொல்லும் போக்கும், இலக்கிய வாசிப்பும் வெகுவாகக் குறைந்து விட்டது. இது தமிழின் நீட்சிக்கே பெரும் சிக்கலை உண்டாக்கக் கூடியவொன்றாகும்.

நிகழ்ச்சி, தகவல், செயல் என எதுவாக இருந்தாலும் அதைச் சொல்வதன் அடிப்படை கதையே ஆகும். கதையினின்று, காட்சிப்படுத்தலை நீக்கித் தகவலை மட்டும் கொடுத்தால் அது கட்டுரையாகிவிடும். சுருக்கமாக உணர்வின் வாயிலாக உள்ளத்தைத் தொடுமாயின், அது கவிதையாகிவிடும். ஆக, எல்லாவற்றுக்கும் கதையே அடிப்படை.

உலகப் பொருளாதாரமயமாக்கலுக்கு முன்னர், சந்தைக்கு வருகின்ற எல்லாப் பொருட்களையும், அதனதன் கதைகளைச் சொல்லியே வணிகப்படுத்தினர். தொழில்நுட்பம், சந்தையில் முந்தித்தரவேண்டிய கட்டாயம், கதைசொல்வதற்குச் செய்யப்படும் செலவைக் குறைப்பதால் கிடைக்கும் கூடுதல் இலாபம் போன்றவற்றின் தேவை கருதி, பொருட்களின் கதைகளைச் சொல்லாமல், அவற்றின் சுருக்கவுரைகளை முன்னிலைப்படுத்தி விற்கத் தலைப்பட்டனர் வணிகர்கள். அத்தகைய போக்கு துவக்கத்தில் பயனளிப்பதாகத் தோற்றமளித்திருந்தாலும், பிற்பாதியில் கூடுதல் செலவுகளுக்கே வித்திட்டது. நுகர்வோர் எல்லாம் கூடுதல் கேள்விகளை பலவாக்கிலிருந்தும் கேட்கத் தலைப்பட்டனர். ஒவ்வொருவரோடும் தனித்தனியாக விளக்கமளித்துச் சொல்ல நேரம் செலவிட வேண்டியிருந்தது. இதன்பொருட்டுத்தான், பன்னாட்டு இணையவழி வணிகத்தளமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், கருத்துமணிக் கோப்புகள்(power point slide) பாவிப்பதைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு, கதைசொல்லி விவரிக்கும் முறைமைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பினார். அமேசானைத் தொடர்ந்து, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களும் கதை சொல்லி வணிகம் மேற்கொள்ளும் பழக்கத்திற்கு தத்தம் வணிகங்களை ஆட்படுத்தி வருகின்றன.

கதைகள் சொல்வதும், வாசிப்பதும் பொழுதுபோக்குப் பண்பெனும் நம்பிக்கை, தமிழர்களிடையே வெகுவாக இடம் பெற்றுவருவது கவலையளிக்கக் கூடியதாகும். கதைகளின் வாயிலாக, அடுத்தவரின் வாழ்வில் இடம் பெற்ற அனுபவத்தை நமதாக்கிக் கொண்டு பல படிப்பினைகளைப் பெற முடியும். மனநிறைவை எட்டமுடியும். சமூகத்தில் இடம்பெறும் ஏற்றத்தாழ்வுகள், பொதுப்புத்திக்கு அகப்படாத நுண்ணசைவுகள், வரலாற்றுத் தகவல்கள், அறம், நெறி, கட்டுப்பாடு, கட்டுடைப்பு, அரசியல்சார் விழுமியங்கள் எல்லாவற்றையும் அதனதன் களத்தில் வைத்து அறிந்து புரிந்து கொள்ளமுடியும். உணர்வோடு இயைந்துவந்து நம் மனத்தை ஆர்ந்து மாற்றத்தை உண்டாக்க வல்லதாகும். மொழியின் வளமும், மரபும், வாழையடி வாழையென அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கதைகள் சொல்வதன் வாயிலாகவும் வாசிப்பதன் வாயிலாகவும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். கற்பனைத் திறன், புத்தாக்கத்திறன், புனைவுத்திறன் போன்றவற்றையும் மேன்மையுறச் செய்து, மாந்தனை நல்ல திறமுள்ளவனாய் ஆக்கச்செய்தலுக்கும் கதைகளே கருவாகும்.

ஒரு பன்றியும் கடற்பசுவும் ஓடியாடி விளையாடுகின்றன. பன்றியின் வேகத்துக்குக் கடற்பசுவால் ஓட இயலவில்லை. பன்றிக்கு வருத்தம் மேலிடுகிறது. அழுகிறது. இக்கதையைக் கேட்கிற, படிக்கின்ற அந்தக் குழந்தையும் அழுகிறது. பன்றிக்கு ஓர் யோசனை பிறக்கிறது. கடற்கரையோரம் போய் நின்று கொண்டு, நீ தண்ணீரில் நீந்திவா. நான் கரையில் ஓடிவருகிறேனென்று சொல்கிறது. அது போலவே கடற்பசுவும் தண்ணீரில் நீந்திப் போகிறது. அதற்கிணையாக, கரையிலிருக்கும் பன்றியும் ஓடுகிறது. கடற்பசு நீந்துவதைப் பார்க்கிற பன்றி சிரித்துக் கொண்டே ஓடுகின்றது. அந்தப் பன்றியின் சிரிப்பைப் படிக்கிற குழந்தையின் மனமும் நிறைந்து, அக்குழந்தையும் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்கின்றது. இப்படித்தான் மேலைநாட்டுச் சமூகம், குழந்தைகளின் மனத்தைப் பண்படுத்துகிறது. சமத்துவம், விட்டுக்கொடுத்தல், தோழமை முதலான எல்லாப் பண்புகளும் கதைகளினூடாகவே மெருகேற்றப்படுகின்றது. படிக்கிற, கேட்கிற குழந்தைகளும் பல்வேறு கதைகளைப் புதிது புதிதாய் உருவாக்குகின்றன. புத்தாக்கம் பிறக்கிறது. இத்தகு புத்தாக்கப் பண்பினால், அவர்கள் வளர்ந்து ஆளாகும் போது, அவர்களால் பல புதுப்புது படைப்புகள் தொடர்ந்து படைக்கப்பட்டு, இவ்வையகமே மேன்மையுறுகிறது.

’நேட்ச்சர் கம்யூனிகேசன்’ எனும் நிறுவனம் பிலிப்பைன்சு, தாய்லாந்து, கென்யா, சீனம் உள்ளிட்ட 18 நாடுகளில் வாழும் பல்வேறு தொன்மையான இனக்குழு மக்களிடையே இருவிதமான ஆய்வுகளை மேற்கொண்டது. நவீனமற்ற கிராமப்புறங்களில், மலைப்பாங்கான இடங்களில் வாழும் மக்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. மருத்துவம், இடர்காலம், குடும்ப நெருக்கடி, பஞ்சம் முதலான துன்பகாலங்களில் உதவி கேட்டுப் போகக் கூடிய இடங்களாக, கதைகளைச் சொல்லக் கூடியவர்களின் வீடுகளே இருந்தன என்பது முதலாம் ஆய்வில் தெரிய வந்தது.

பிறிதொரு ஆய்வில், ஆள் ஒன்றுக்கு தனித்தனியாக பனிரெண்டு ஒவ்வொரு கிலோ அரிசிப் பொட்டலங்கள், 300 பேர் கொண்ட இரு குழுக்களுக்கு வழங்கப்பட்டன. அதை அவர்களும் வைத்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாமெனச் சொல்லியே கொடுக்கப்பட்டது. கொடுத்து முப்பது நாட்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முதல் குழுவில் 50% பொட்டலங்கள் மற்றவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்தன. இன்னொரு குழுவில் 20%க்கும் குறைவான பொட்டலங்களே அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்தன. இவர்களுள், 50% பொட்டலங்கள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்த குழுவில் அதேயளவு, 50% உறுப்பினர்கள் கதை சொல்லிகளாக இருந்ததும் ஆய்வில் உறுதியானது. ஆக, கதைகள் சொல்வதும் கேட்பதும் வாசிப்பதும் எப்படியெல்லாம் மாந்தநேயப் பண்பாட்டில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக் காட்டுகளாகும்.

மொழி, மொழியைச் சார்ந்த நிலப்பரப்பு, நிலப்பரப்பைச் சார்ந்த ஒரு தேசிய இனம், இவையாவும் அதனதன் மரபு, கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைத் தக்கவைத்துக் கொள்ளவும், மொழியை காலத்துக்கொப்ப மெருகேற்றி, அதே வேளையில் அதன் வளமான சொற்களையும், இலக்கணத்தையும் அழகையும் பேணிக்கொள்ளவும் கதைகளே அடிப்படை. கதைகளைச் சொல்லும் கலைஞர்களை, படைப்பாளிகளைப் போற்றுகிற சமூகம், நயமான வாழ்வைக் கதைகளினூடாகச் சென்றடைந்து விழுமியச் சிறப்பெய்தும், அந்த புத்தம்புது மழையைப் போல, செக்கச்சிவந்து விடியலைக் கொடுக்கும் புதுவானத்தைப் போல.

நன்றி: வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா மலர், 2018

5/19/2018

பொசிவு


டொண்ட்டடொய்ங்

கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில்
உங்கள் பழமைபேசி.

முன்பொரு காலம்.
கோயமுத்தூர் சேலம் செல்லும்
விரைவுச் சாலை NH 47.
அச்சாலையில்
இராணிலட்சுமி மில்,
தெக்காலூர்ப் பிரிவு
அரசூர்ப் பிரிவு
ஆகியவை தனித்தன்மை
கொண்ட இடங்களாகும்.
ஓப் காலேச் துவக்கம்
கருமத்தம்பட்டி வரையிலும்
அவ்வப்போது சாலையோரத்தில்
பிணம் இருப்பதைக் காணலாம்.
அப்படித்தான் ஒருநாள்
தெக்காலூர்ப் பிரிவு
(செங்கோட கவுண்டன் புதூர்)
வண்டித்தடத்துக்கும்
இராணிலட்சுமி மில்லுக்கும்
இடையே ஒரு உடல் கிடந்தது.
வருவோர் போவோர் எல்லாம்
நடந்து போவோர் கூட
கண்டு கொள்ளாமல்
சென்று கொண்டிருந்தனர்.
மொய்ப்பதைக் கண்ட ஒருவர்
தென்னங்கீற்றை அந்த உடலின்மேலே
போட்டு விட்டுச் சென்றார்.
பீடி வாங்குவதற்காக
இராணிலட்சுமி மில் கேட்
சென்ற சுந்தரான் மட்டும்
சைக்கிளை விட்டுக் கீழிறங்கி
தென்னங்கீற்றை ஒதுக்கிப் பார்த்து
அரசூரில் இருக்கும்
கம்பவுண்டரை
வரச் சொல்லிச் சோதித்து
நாடி துடிப்பதையறிந்து
கால்கடுக்க நின்று
கைகாட்டிக் கைகாட்டி
எப்படியோ கோயமுத்தூர்
பெரியாசுபத்திரிக்கு
உடல் சென்று சேர
பிழைத்தவர் யாரோ
சிவகங்கைப் பக்கம்
பெரிய தொழிலதிபராம்.
இந்த சுந்தரானுக்கு
ஊரில் பெயர் பொசக்கெட்டவன்.

அமெரிக்காவில்
ஒரு நண்பர் இருக்கிறார்.
தமிழ்ச்சங்க வேலைகள்
எதுவானாலும்
முதல் ஆளாக இருப்பார்.
ஊருக்கு எந்த
புதுத்தமிழ்க் குடும்பமாவது
புதிதாய்க் குடி வந்திருந்தது
தெரிந்தால் போதும்
இவர் வலியச் சென்று
அவர்களை அணுகி
வேண்டியது எல்லாம்
செய்து கொடுப்பார்.
தமிழ்ச்சங்க வட்டாரத்தில்
அன்னாரைக்
கிண்டல் செய்வார்கள்
கேலி செய்வார்கள்
வந்து சேரும்
தமிழ்க்குடும்பங்களும்
ஓரள்வுக்கு ஊரில்
நிலை கொண்டவுடன்
மற்றவர்களோடு சேர்ந்து
அன்னாரைக் கிண்டல்
செய்யும் பட்டியலில்
இணைந்து கொள்வது
வாடிக்கை.
ஆனாலும் அவர்
தன் வழக்கத்தை
மாற்றிக் கொண்டதாய்த்
தெரிய வில்லை.
ஊரில் இருந்திருந்தால்
இவருக்கும் பொசக்கெட்டவன்
சூட்டப்பட்டிருந்திருக்கும்.

பொதுவாக இந்த
பொசுக்கெட்டவர்கள்
பொதுப்புத்தியினின்று
விலகியவர்களாக
வித்தியாசமாக இருப்பர்.
இப்படியான வேலைகளைச்
செய்வதன் மூலம்
தன் வசதி வாய்ப்புகளை
பெருக்கிக் கொள்ளாத
பொந்து கெட்டவன்
என்பது பொதுப்பார்வை.
எனவேதான் பொசக்கெட்டவன்
பட்டமும் சூட்டப்பட்டு
ஏளனத்துக்கு ஆளாகின்றனர்.
அதாவது பொசிவினால் கெட்டவன்.
பொசிவு என்றால்
மனத்தில் ஏற்படும் கசிவு, இரக்கம்.
அதுவே பொசுக்கெட்டவன்.

இவர் எத்தனையோ
உடல்களைச் சென்று
பார்த்திருக்கக் கூடும்.
பார்த்தவையெல்லாமும்
உயிரற்றதாய் இருந்து
இவருக்கு நேரவிரயமாகத்தான்
இருந்திருக்கக் கூடும்.
அதற்காக பொசக்கெட்டவர்கள்
சோர்ந்து விடுவதில்லை!
தோல்விகளென்றும்
பாராமல்
மனக்கசிவு கொண்டு
செயலாற்றும் இவர்கள்
மாமனிதர்கள்!
பொசிவால் கெட்டவர்கள் அல்லர்!!

டடடடாடா...

-பழமைபேசி.