7/24/2017

உவந்துரைக்கும் தமிழ்மரபு

மாந்தனின் அடிப்படைப் பண்புகளில் இன்றியமையாதவொன்றாக அமையப் பெற்றதுதான், தானும் தான் சார்ந்த மக்களின் பழக்கவழக்கங்களை நினைத்துப் பார்ப்பதும், இயற்கையோடு இயைந்து வெகுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுதுமான நியதிகளை நினைந்து போற்றும் பண்பாகும். அப்படியானவற்றைத்தான் மரபெனப் பேணி அதன்வழி செல்லமுற்படுகிறோம்.

’எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர், அப்படிச் செப்புதல் மரபே’ என்று நன்னூலாரார் உரைக்கிறார். அதன்படி, அறிவுசார்ப் பெரியோர் எதை எந்தவாக்கில் சொல்லிச் செல்கின்றனரோ அவ்விதமே பற்றியொழுகுதல் மரபென்றாகிறது.

தமிழ்மரபின் கூறுகளின் சிலவாக, சடங்குகள், வழிபாட்டு முறைமைகள், திருவிழா வழிமுறைகள், மருத்துவ முறைகள், நிகழ்த்துகலைச் செயல்முறைகள், விளையாட்டு முறைகள், கைவினைக்கலைமுறைகள் முதலானவை இடம்பெறும். இவற்றுள் சடங்குகள் என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் இடம் பிடிப்பதாலும், சுருங்கச் சொல்வதற்கு உகந்ததாக இருப்பதாலும் அதைப்பற்றி நினைத்துப் பார்ப்பது உசிதமாயிருக்கும்.

சடங்கு என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறைப் பழக்கங்கள் ஆகும். மனிதச்சமூகம் வாழ்வினை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஓர் ஒழுங்கு என்றுகூட இதனைச் சொல்லலாம். இப்பழக்கங்கள் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் காலத்திற்கொப்ப மறுசீரமைக்கவும் ஆட்பட்டதாயும் இருக்கலாம். தமிழரின் வரலாற்றுப் பார்வையில், அவற்றை இருந்தது இருந்தபடியே திரும்பிப் பார்ப்பது தற்போதைய தேவையாய் இருக்கிறது.
\
வாழ்க்கை வட்டச்சடங்குகளில் பிறப்பின் நிமித்தம், சேனைதொடுதல் (சேய் நெய் தொடுதல், சேயுக்கு இனிப்புக் கலந்த நெய் கொடுத்தல்), தொட்டிலிலிடுதல், காது குத்துதல் முதலானவை இடம் பெறுகின்றன. பிறப்புக்கடுத்து பூப்புச்சடங்கு, திருமணச்சடங்கு ஆகியன பங்காற்றுகிறது. திருமணச்சடங்கின் உட்கூறுகளாக, பரிசம்போடுதல், முகூர்த்தக்கால் நடுதல், தாலிகட்டல், வளைகாப்புச்சடங்கு முதலானவை விளங்குகின்றன. இறப்புச்சடங்கின் உட்கூறுகளாக, குளித்தல், துணிசாத்துதல், வணக்கஞ்செலுத்தல், பாடைவிளங்கல், கொள்ளிவைத்தல் முதலானவை இடம்பெறுகின்றன. வளமைச்சடங்குகளின் உட்கூறுகளாக, மழைச்சடங்கு, முளைப்பாரிச்சடங்கு முதலானவை இடம் பெறுகின்றன.

கலைமரபுகளில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது நாட்டுப்புறக்கலைகளாகும். பொதுவாக நாட்டுப்புறக் கலைகளை, நிகழ்த்து கலைகள் (performing arts), கைவினைக் கலைகள் (material arts) எனப் பிரிக்கலாம்.

நிகழ்த்துகலைகளில் முக்கியமானவையாக, தெருக்கூத்து, தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், பகல்வேடம், இலாவணி, உடுக்கைப்பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி, கைச்சிலம்பம், சக்கையாட்டம், மரக்கால், தப்பு, புலிக்கலைஞன், வில்லுப்பாட்டு முதலானவை இடம் பெறுகின்றன.

தமிழர் சார்ந்த, தமிழர் உற்பத்தி செய்யும் கைவினைக்கலைப் பொருட்கள் உலகம் முழுமைக்கும் புகழ் பெற்று விளங்கின. அவற்றை முறையே, மண் சார்ந்த கலைகள், மரம் சார்ந்த கலைகள், ஓலை சார்ந்த கலைகள், காகிதம் சார்ந்த கலைகள் எனப் பிரிக்கலாம்.

தமிழர்தம் கைவினைப் பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், இயற்கைச் சூழலுக்கு மாசுநேராவண்ணமிருப்பதாயுமே இருக்கின்றன. ஆற்றோரங்களில் விளையும் மூங்கில், கோரைப்புல், வைக்கோல், வயற்பகுதிகளில் கிடைக்கும் களிமண், செம்மண், ஆற்றுமணல், மலைப்பாங்கான பகுதியில் மரம், செடி, கொடி, தாவரச்சாயங்களே ஆதாரமாக விளங்கின. மண்சார்க் கலைகளுள் சுடுமண்ச் சிற்பங்களும் பொம்மைகளும்,  மரம்சார்க் கலைகளுள் மரப்பாச்சியும் முக்கியமானவையாக விளங்கின. இவைதவிர்த்து, வாழ்க்கைக்குத் தேவையான உறி, பிரிமனை, சால், கூடை, கயிறு என யாவும் கைவினைக் பொருட்களாலேயே கட்டமைக்கப்பட்டன.

கலைகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவையாக இருப்பினும், அவை மேம்படும் முறையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாட்டுப்புற நிகழ்த்து கலைகள், கைவினைக் கலைகள் அனைத்து இனமக்களாலிம் நிகழ்த்திக் காட்டப்படுகின்றனயென்றாலும், குறிப்பிட்ட சில கலைகள் அக்குறிப்பிட்ட இனமக்களாலேயே பேணிப்பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இனச்சார்புக் கலைகள் என வழங்கப்படுகின்றன. அம்முறையில், தமிழர்தம் கலைகளையும் நமக்கேயுரிய மரபினையும் பற்றியொழுகிப் பேணுவது நம் கடமையாகும்.
பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும் மரபின் உயிர்ப்புக்கு அடிகோலுமெனும்பாங்கில், கலைகளைக் கற்று திருவிழாக்களில், வாழ்வின் சடங்குகளில் இடம் பெறச்செய்தல் போன்ற செயற்பாடுகள், அவற்றை அடுத்த தலைமுறையினர்க்கு இட்டுச்செல்ல வழிவகுக்கும்.

எந்த இனத்துக்கும் மெய்யாக அதன்மொழியும், உயிராக அதன் பண்பாடும் விளங்கும். அத்தகு மொழியும் பண்பாடும் தத்தம் தனித்தன்மையைக் காக்கும் பொருட்டு அதனதன் மரபினைப் பேணுவது இன்றியமையாததாகும். பண்பாட்டின் மரபியற்கூறுகளாக அதன் கலைகளும் வாழ்வியற்சடங்குகளும் விளங்குகின்றன. பண்பாட்டின் மரபுவழி நமக்குக் கிடைத்திருக்கும் மற்றுமொரு கொடைதான் வாய்மொழி இலக்கியம் என்பதாகும்.

வாய்மொழி இலக்கியத்தின் உட்கூறுகளாக இருப்பன, பழமொழி, சொலவடை, விடுபுதிர், கதைசொலல், வெவ்வேறு அமைப்புகளைக் கொண்ட பாடல் வகைகள் போன்றவையாகும். வாய்மொழியாக மட்டுமே மரபுபோற்றி வாழ்வாங்கு வாழ்ந்து வருதலால், இவற்றுக்கான சிறப்பினை கடந்த நூற்றாண்டுகளில் தரத் தவறிவிட்டோமென்கிறார் எழுத்தாளர் தி.ஜானகிராமன். வாய்மொழி இலக்கியத்தைத் தெருவோரப்பூக்களென அவர் வர்ணிக்கிறார். தெருவோரத்தில் மலரும் நெருஞ்சி, ஊமத்தை, சாணிப்பூட்டான், கள்ளி, கற்றாழை, எருக்கு, குப்பைமேனி, தும்பை, ஆவாரை முதலானவை அழகு கொண்டவையாயினும், யாரும் அவற்றைக் கவனித்து அதற்கான விழுமியத்தைப் போற்றுவதில்லை. அதைப் போலவே வாய்மொழி இலக்கியமும் போற்றப்படாமற் போய்விடக்கூடாதென வலியுறுத்துகிறார் அவர். இப்படியான மரபுவழி வாய்மொழி இலக்கியத்தை, அதன் உட்கூறான கதைசொலல் பாங்கிலேயே உற்றுநோக்குவது உகந்ததாக இருக்கும்.

மாசித்திங்கள் மதியப் பொழுதொன்றில் தன் தாயுடன் தானும் இணைந்து கடலைக்காட்டில் களையெடுத்துக் கொண்டிருந்தான் மாரப்பன். வெயிலின் தாக்கம் தகிக்கவே வயற்காட்டிலிருந்த படைக்குருவிகளெல்லாம் சோவென எழும்பி நீர்நிலைவாக்கில் பறந்து போயின. இவனும் கண்களை வீசித் துழாவத் தலைப்பட்டவன் தன் தாயைப் பார்த்துச் சொல்கிறான், “ஓடோடுஞ் சங்கிலி, உருண்டோடுஞ்சங்கிலி, பள்ளத்தக்கண்டா பாஞ்சோடுஞ்சங்கிலி, இங்கன அடச்சி வெச்ச சங்கிலி, எங்கைக்கு அகப்படுதில்லியே! அகப்படுதில்லியே!!”. அதற்கு மாரப்பனின் தாய் காளியம்மாள் மறுமொழிகிறாள், “இருந்ததெல்லாம் தாகங் கொண்டு போச்சி, எட்டிப் போடு நடைய வெரசா ஊட்டப் பாத்து!!”.

தாயின் சொற்கேக்கும் மகனல்லவா மாரப்பன், கூடவே தாகமும் அவனை நெருக்கியது. தன் காட்டிலிருந்து புறப்பட்டு கிழக்கு நோக்கிப் போகும் அரக்கன் இட்டேரியில் நடையைக் கூட்டினான். நான்கு வயற்காடுகள் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, இட்டேரியின் கள்ளிக்கற்றாழை வேலிக்கப்பால் தன் மாமன் மகள் தனலட்சுமி மாடுகள் மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் மொழிந்தான், “கம்மங்கருதக் கண்டா கை சும்மாயிருக்குமா? மாமன் மகளைக் கண்டா வாய்தான் சும்மாயிருக்குமா??”.

தம்மை வம்பிக்கிழுக்கும் தம் அத்தை மகனின் கொக்கிமொழிச் சொலவடைக்கு ஆட்பட்ட தனமொழி தன்பங்குக்குப் பாட்டொன்றை எடுத்து விட்டாள். “ஏலே ஏலே சின்னப்பயலே! ஏழுருண்ட தின்னிப்பயலே!! குண்டுச்சட்டி வயித்துக்காரா, கொண்ட்டு வாடா உம்பாட்ட!! காணாம வண்டியேறி திலுப்பூரு ஓடிநல்லாப் போவமா?? கண்மணியே ஒத்துமையா வாழ்வோமா?? கண்மணியே ஒத்துமையா வாழ்வோமா?? பேச்சு மறக்க வேண்டாம்! பெத்தவளக் கேக்க வேண்டாம்!!”.

தனலட்சுமியின் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாட நினைத்தவனின் கண்களில் எதிர்ப்பட்டாள் அதேவூரைச் சார்ந்த மச்சுவீட்டுப் பர்வதம் அம்மாள். பர்வதத்தைக் கண்டவன் ஏதுமறியாதவன் போலப் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவள் அவர்களிருவரையும் விடுவதாயில்லை. இவர்களைப் பார்த்து முணுமுணுத்துச் சொன்னாள், ”இன்னும்  மொளச்சி மூணு எல விடுல… இப்பவே புள்ளயம் பையணும் சோடி போட்டுக்குறாங்க சோடி??!”.

இங்கே பாவிக்கப்பட்டிருக்கும் சொலவடையில் ஆழ்ந்த பொருள் பொதிந்திருப்பதை நாம் காணலாம். விதை விழுந்து, வேர் விட்டுப் பின் இரு இலைகளாகத் துளிர்ப்பதை நாம் பார்த்திருப்போம். அது முளைப்பதன் அறிகுறி. அதற்குப் பிறகு துளிர்க்கும் மூன்றாவது இலை வளர்ச்சியின் குறியீடாகும். அதையொட்டித்தான், இவர்கள் இன்னமும் வளர்ந்து ஆளாகவேயில்லையெனும் அங்கலாய்ப்பாகச் சொல்கிறாள் பர்வதம், “இன்னும் முளைச்சி மூணு இலை விடலை” என்று.

”காடு காத்தவனுக்கும் பொண்ணு மொறைக்கும் எப்பயும் பலனுண்டு.. ஒடஞ்ச சங்கெல்லாம் வந்து ஊத்துப் பரியிலன்னு ஆரு கேட்டாங்க இப்ப??”, என்று சொல்லித் தன்னை வம்புக்கிழுத்த பர்வதத்துக்கு எதிர்வாக்கு விட்டான் மாரப்பன்.

”இழுத்துப் பிடிச்சிக் கருப்பட்டியக் குடுத்து கழுத்தப்பிடிச்சி காரணத்தைக் கேட்டாத்தான் என்ன?” என்று மனத்துக்குள் பேசிக் கொண்டாள் பர்வதம்மா. இருப்பினும், “நமக்கெதுக்கு வம்பு? அண்டப்புளுகன் காட்ல கடுகு மொடாத்தண்டி விளையுதுங்ற பயலுவளோட நமக்கென்ன பேச்சு??” என நினைத்தபடியே சென்றுவிட்டாள் பர்வதம்.

அரக்கன் இட்டேரியிலேயே ஊர்நோக்கி வந்த மாரப்பன் ஊரெல்லையிலிருக்கும் வீதியில் நுழைந்து கொண்டிருக்கும் போது, ஊர்க்கங்கிலிருக்கும் தன் வைப்பாட்டி அன்னக்கொடி வீட்டிலிருந்து பாட்டையன் பாடும் பாட்டுக் கேட்கிறது அவனுக்கு. “ராரிராரி ராரோ ராரிராரி! ராரிராரி ராரோ ராரிராரி!! எங்கண்ணே கனியமுதே கட்டழகே ஏனழுதாயொ? பொன்னே புதுப்பூவே பூமிவந்த தேவதையே! ஏனழுதாயொ?
உன்னுடைய ஏலம்பூ வாய்நோக தேம்பியழுவாதே! என் சிந்தை சிறுக்குமடி தேம்பியழுவாதே,  என் சிந்தை சிறுக்குமடி தேம்பியழுவாதே!!”.

வீதியில் நடந்து கொண்டிருந்த மாரப்பன் சிரித்துக் கொண்டே எதிர்ப்பாட்டு பாடினான், “”வீட்டிலே இருக்குதல்லோ சமத்தூருப் பெருங்கட்டிலு? உள்ளூர்க் குறுங்கட்டிலுங்
கெடுக்குதல்லோ ஏரொழவு?!”. அதாவது சமத்தூரிலிருந்து மணமுடித்து வந்த மனைவி இருக்கையில், தன் உழவு வேலையைப் பாழாக்கிக் கொண்டு உள்ளூர் வைப்பாட்டி வீட்டில் இருக்கலாகுமோயெனப் பாட்டின் வழியாய்ச் சாடுகிறான் மாரப்பன். இவனது குறும்புப் பாட்டைக் கேட்ட பாட்டையன், தன் துண்டினை உதறித்தோளில் போட்டுக் கொண்டு வெருட்டெனக் கிளம்பிப் போனான்.

ஏக்கப்பெருமூச்சோடு சல்லாபத்தைக் கெடுத்த மாரப்பனைக் கண்டு சினந்து கொண்டாள் அன்னக்கொடி, “விளையும் பயிர் முளையிலே! வெதக்காயும் பிஞ்சுலே!!
வெச்சி வறுக்குற நாளும் வராமலாப் போயிரும்?!”. இந்த பழமொழியைக் கேட்ட மாரப்பன் மீண்டும் கேலியாகப் பாடினான், ”மொட்டயும் மொட்டயும் சேந்துச்சாம்! முருங்கமரத்துல ஏறுச்சாம்! கட்டெறும்பு கடிச்சுச்சாம்! காழ்காழ்னு கத்துச்சாம்!! கொப்பொடிஞ்சு விழுந்துச்சாம்! குண்டி தெறிக்க கெழக்கமின்னா ஓடுச்சாம்!!”

பாடிக்கொண்டே ஊருக்குள் நுழைந்து விட்ட மாரப்பனுக்கு, அந்த அரசமரத்தைக் கண்டதும் மரத்தின் பாகங்களின் பெயர்கள் நினைவுக்கு வந்தன. அந்த மரபுச் சொற்களை நினைத்து அகமகிழ்ந்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்வன் நினைத்துக் கொண்டது, “அடிமரத்தினின்று பிரிவது கவை. கவையிலிருந்து பிரிவது கொம்பு. கொம்பிலிருந்து பிரிவது கிளை. கிளையிலிருந்து பிரிவது சினை. சினையிலிருந்து பிரிவது போத்து. போத்திலிருந்து பிரிவது குச்சி. குச்சு(சி)னின்று பிரிவது இணுக்கு.

தமிழ் மரபினன் என்போன் மயக்குடைமொழி விடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் எனப் போற்றிப் பாடுகிறது பழம்பாடல். அதற்கொப்ப மொழியின்பாற்பட்டும் பண்பாட்டின்பாற்பட்டும் மரபுபோற்றி, மொழியும் கலைகளும் பேணப்படுதல் அவசியம். அதையொட்டி அவற்றையெலாம் நம் வழித்தோன்றலுக்கு கடத்திச் சொல்வோம்! அதனதன் விழுமியம் போற்றிக்கொண்டே!!

(ஃபெட்னா 2017, ஆண்டுவிழா மலரில் வெளியான கட்டுரை)

உசாத்துணைநாட்டுப்புறக் கலைகள் ச.தமிழ்ச்செல்வன்

2 comments:

Unknown said...

நல்ல ஆய்வு! வ1ழ்த்துகள் த .ம 2

Nagendra Bharathi said...

அருமை