வாழ்க்கை என்பதற்கு எல்லைகள் உண்டா? நான்கு சுவர்களுக்குள், வேண்டாம், அந்த ஊர், நகரம், மாநகரம், நாடு என்பனவற்றுக்குள் கட்டுண்டு போனதா வாழ்க்கை?? விண்ணுக்கும் மண்ணுக்கும், மண்ணுக்கும் கடலடி ஆழத்துக்குமென ஆழ அகலங்களுக்குள்ளும் நீள உயரங்களுக்குள்ளும் கட்டுப்படாமல் திமிர்ந்து தாண்டவமாடுவதுதானே வாழ்க்கை?? திருமலை மனிதக்கடல், சென்னைக் குப்பத்து வீதிகள், கோயமுத்தூர் சந்திப்புக் கொந்தளிப்புகள், ஆளற்ற திம்பம் காடுகளென எங்கும் நடையோடிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. அப்படியான ஓட்டத்தின் ஒரு கணத்தில் நிகழ்ந்து பரிணமித்துக் கரைகிறது வாழ்க்கையின் இத்துளி.
“அண்ணா, ப்ளூ மவுண்ட்டன் பர்ஸ்ட் க்ளாஸ் ஏசி எங்க நிக்கும்னு தெரியுமா? இந்த பெட்டிகளைக் கொண்டாந்து ஏத்திவிட எவ்ளோ ஆகும்?”
“சார், மொதல்ல பெட்டிகளை எறக்கி வெக்கிலாம் உடுங்க. எறக்கி வெச்சிட்டு எவ்ளோன்னு பேசி எடுத்துட்டுப் போலாம். ஏய், அதுகளை எறக்குப்பா!”
“சரி, இப்ப சொல்லுங்க. எவ்ளோ ஆகும்?”
”அறுநூறு ரூபா சார்!”
”சரிங்ணா அப்ப. நாங்களே எடுத்துக்குறோம்!”
“சார், ஒன்னாம் நெம்பர் ப்ளாட்பார்ம்க்கு படிக்கட்டுல தூக்கிட்டுப் போகணும் சார். இப்படி சொன்னா எப்படி?”
“இல்லங்ணா. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. நாலு பொட்டிகதானே, நானே மொள்ள இழுத்திட்டுப் போயிடுவனுங்க!”
“ஏன் சார், நாங்களும் தொழில் செய்ய வேண்டாமா? இப்பிடிக் கோவிச்சுக்குறீங்களே??”
“நியாயமா நீங்களே ஒரு ரேட் சொல்வீங்கன்னு பார்த்தேன். நீங்க நெம்ப எச்சா சொல்றீங்ணா!”
“ஏ, நீ ரெண்டு எடுத்துக்க. நான் ரெண்டு எடுத்துக்குறேன். நடங்க போலாம்!”
“வேண்டாம்ங்ணா. எவ்ளோ சொல்லுங்க. அப்புறம் எடுத்துக்கலாம்!”
“ஆளுக்கு நூறு; இரநூறு ரூபா குடுத்துருங்க. வண்டி வர்ற வரைக்கும் இருந்து ஏத்தி விட்டுடுறம்!”
“சரி, நீங்க எடுத்துங்க. நான் இவங்க கூடப் போறன். நீங்க எல்லாம் கைப்பைக எல்லாத்தையும் எடுத்திட்டு வந்திருங்க. டிரைவர் அண்ணனைப் போகச்சொல்லிடுங்க!”
மேட்டுப்பாளையத்திலிருந்து நான்கைந்து பெட்டிகள் வந்து, ஏற்கனவே நிலைகொண்டிருந்த மற்ற பெட்டிகளுடன் இணைந்து கொண்டன. சீட்டுகளில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இருக்கை எண்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும் எதற்கு இந்த முண்டித்தல்?? வடவன் தென்னவனின் இது போன்ற செயல்களைப் பார்த்து முண்டி என்றானா? கல்லுளிமங்கன் என்பதற்கு ஈடான முண்டியெனும் சொல்லுக்கும், கல்லுளிமங்கன்களின் இச்செயலுக்கும் என்ன தொடர்பு?? என்னவோவாக இருந்துவிட்டுப் போகட்டும். நான் முண்டிக்க விரும்பவில்லை.
“சார், எல்லாம் இருக்கா பார்த்துகுங்க சார்!”
“எல்லாம் இருக்குங்ணா. இந்தாங்க!!”
“சார், ஒரு நோட்டு எச்சா இருக்கு சார்!”
“பரவாயில்ல; வெச்சுகுங்க!”
“இல்ல சார். வேண்டாம், இந்தாங்க!!”
“என்னங்க இது? மொதல்ல அறுநூறு கேட்டீங்க... இப்ப நூறு சேர்த்தி குடுத்தா வேண்டாம்ங்கிறீங்க?? ம்ம்... சரி, கொண்டாங்க!!”
உடனிருந்தவர்களிடமிருந்து ஒரு குரல். “பேசினபடிக்கு இருநூறைக் குடுத்திட்டுப் போக வேண்டியதுதானே? இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை??”.
நாலுதப்படி முன்னேறின அந்த சிவப்பு சட்டை இரண்டு தப்படி சறுக்கி வந்து சொல்லியது, “அந்த நூறு ரூபாய வாங்கினா சாருக்குத் திட்டு விழும்னுதான் நான் வாங்கலை. அப்பிடியிருந்தும் திட்றீங்களேம்மா??”.
இனிமையான குரல் ஒலித்தது, “பயணிகளின் கனிவான கவனத்திற்கு! வழித்தடம் எண் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம்- சென்னை, நீலகிரி எக்சுபிரசு சென்னைக்குப் புறப்படத் தயாராக உள்ளது!!”. மஞ்சள் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த கோவை மாநகரம் உதறித் தள்ளப்பட, வீடுகளும் தெருக்களும் பின்னோக்கிப் போய் விழுந்தன. சாளரத்தில் இருந்த கண்களைக் கடன் வாங்கி இப்போதுதான் எதிர் இருக்கையைப் பார்க்கிறேன். அசடு வழியச் சிரிப்பொன்று உதிர்கிறது. “இஃகிஃகி!”.