2012ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் ஐந்தாம் நாளன்று பால்டிமோர் துறைமுகத்தில் கயல் கண்டேன்; கப்பல் கண்டேன்; திசை கண்டேன்; வான் கண்டேன்; ஞாலமது செறிந்திட பலப்பலவும் கண்டேன்; படகுத்துறையில் யாண்டும் அசைவனவும் நின்றனவும் கண்டேன்; அழகுதனைக் கண்டேன்; நல்லின்பக் கூறுகள் பலப்பலவும் கண்டேன்; அத்தனை இருந்தும் இவனது மனம் எதுவொன்றுக்கும் வசப்பட்டு நல்லின்பம் கொள்ளவில்லை! காரணம் என்னவோ?!
மாலையது எப்போது வரும்? மேரியாட் விடுதியில் அக்கணம் எப்போது நிகழுமென, மனம் மத்துக்குள் சிக்குண்ட தயிர்த்துளியாய்க் கிடையின்றி அல்லாடிக் கொண்டிருந்தமையே காரணம்!
ஒவ்வொரு மாந்தனுக்கும் அவனுக்கே உரித்தான குறைகளும் உண்டு. இவ்வடியேனின் குறையாதெனின், குறித்த நேரத்திற்கு முன்பே இடமடைந்து காத்திருப்பதுவேயாம்.
எழிலார்ந்த மேரியாட் விடுதியின் முற்றத்திற்கு கடலளவு ஆவலுடன் செல்கின்றேன். நான் ஒரு அடியன். அந்தோ, அங்கே ஒரு பெருமாந்தர் அமைதியே பேருருவாய் அமர்ந்திருக்கக் கண்டேன். ஆம், காலங்கடைபிடித்தலின் பேரரசே அங்கு வீற்றிருந்தமை கண்டேன்.
வெள்ளி விழாவுக்கான பதிவு ஏடுகள், கோப்புகள், இதரப் பொருட்கள் எனப் பலவும் அடங்கிய பெட்டிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, முதற்பணியாளன் நானே எனும் செருக்குக் கொண்டாற்போல் பணியாற்றக் காத்திருந்தார் முனைவர் இர.பிரபாகரன் அவர்கள்.
“அய்யா, வணக்கங்க அய்யா!”
“வாங்க வாங்க பழமைபேசி! மலர் நல்லா வந்திருக்கு, வாழ்த்துகள்!!”
தந்தை பெரியாரும் அய்யன் திருவள்ளுவரும் நேரில் வந்து வாழ்த்தியதாய்த் திடம் கொண்டது மனம்.
“நன்றிங்க அய்யா! உங்களுக்கு உதவி எதுவும் செய்யட்டுமுங்களா?”
”இந்தப் பெட்டிகள்ல இரண்டைத் திறந்து, அதிலிருக்கும் பைகளை எல்லாம் இங்க அடுக்கி வையுங்க!”
கைகள் முறைமாறி இயங்கியது. மூளைக்கும் செயலுக்கும் போட்டா போட்டி. இதயம் பெருவேகங் கொண்டு இயங்கியது. கடுமையான ஒரு கட்டுப்படுத்தலுக்குப் பின், மூளை சொல்வதைக் கேட்டுப் பணி புரிய கைகள் ஒத்துழைத்தது. முதலாவது பெட்டி உடைக்கப்பட்டு, சில பைகளை அண்மையில் இருந்து பரப்பு நாற்காலியின் மீது அடுக்கினேன்.
ஓரக்கண்ணால் பிரபாகர் அய்யாவைப் பார்த்தேன். அவர் கணினியில் ஏதோ துளாவிக் கொண்டு முசுவாக இருந்தார். இதுதான் நல்ல தருணமென மனம் கள்ளம் செய்ய விழைந்தது.
ஒரு பையை எடுத்து, அதனுள் வலக்கை நுழைந்தது. நீலவண்ண அட்டையுடன் வெள்ளி விழா மலர் கண்களுக்குக் காட்சி அளித்தது. ஆறு மாத கால உழைப்பு, பார்த்துப் பார்த்துச் செய்தது. ‘அய்யோ’வென ஆனந்தக் கூக்குரலிட்டு அழ வேண்டும் போல இருந்தது. கண்களில் திவலைகள் சொட்ட ஆரம்பித்து இருந்தன.
“அந்த பெட்டியையும் உடைச்சிருங்க. இந்த வெறும் பெட்டிய அங்க ஓரமா வையுங்க”, பிரபாகர் அய்யாவின் குரல் கேட்டு மீண்டெழுந்தது மனம்.
முதற்கணம். தாய் தான் பெற்றெடுத்த பிள்ளையை ஏறெடுத்து நோக்கும் முதற்கணம் எப்படியானதாய் இருக்கும் என இவ்வாடவனுக்கு உணர்த்தப் பணித்தாளோ தமிழன்னை?!
இரண்டாவது பெட்டியையும் உடைத்து, பைகளை எடுத்து அடுக்கி வைக்கலானேன். “அய்யா, தமிழிசை விழாவுல என்னோட மூத்த மகளும் பாடுறா! போய் அழைச்சிட்டு வரணும்!!”
“நன்றிங்க பழமைபேசி! நீங்க போலாம்!”. விடைபெற்று நிமிர்ந்தேன். முன்வாசலெங்கும் தமிழ்ப் பொதிகை வளைத்தடித்துக் கொண்டிருந்தது. எண்ணற்ற முகங்கள், பிரிந்தவர் கூடுதலோ என வியக்கும் வண்ணம்!
அனைவருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு வெளியேறினேன். குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு மீண்டும் விடுதியில் நுழைகிறேன், மிதமிஞ்சிய கூட்டம். சடுதியில் தமிழிசை விழா இடம் பெறும் கூடத்திற்குச் செல்ல வேண்டுமென்கிற கட்டாயம் வேறு.
மேல்மாடத்தில் இருக்கும் இரண்டாம் எண் இலக்கமிட்ட கூடத்திற்குச் செல்கிறோம். சேர்ந்திசைக்கான பாடல் பாடப்பட்டுக் கொண்டு இருந்தது. தவறவிட்டு விட்டோமே என மகள் அழாத குறை. பதைபதைப்பைக் கண்ட அருகில் இருந்தவர் சொன்னார், “இது ஒத்திகைதான்!”
பேரவையில் தமிழிசை விழா என்பது ஒரு கன்னி முயற்சியாகும். இதற்கு போதிய வரவேற்பு இருக்குமா என்கிற ஐயம் எங்களையெல்லாம் ஆட்கொண்டிருந்தது. ஆனால் இங்கு நிலைமையோ தலைகீழ்! நிகழ்ச்சி இன்னும் துவங்கவே இல்லை. அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருமே மிக நேர்த்தியாய்ப் பாடினார்கள். பாடப்படும் பாடல் வரிகள் புரிகிறது. இசை தேனாய்ச் செவியில் நுழைகிறது. மனமோ இலயிப்பில் கரைகிறது. அதுதான் தமிழிசை! ஓரிரு இடங்களில் கண்கள் சொரியத் துவங்கின.
“தம்பி பழமை, அடுத்த ஆண்டு இதை முக்கிய அரங்குல மேடை ஏத்திடணும் தம்பி!!”, நாஞ்சில் பீற்றர் குழைகிறார்.
சேர்ந்திசைக்கான பீடிகை துவங்குகிறது. எம்மகளுக்கான அறிமுகமும் இடம் பெறுகிறது. நாணமும் கூச்சமும் மேலிட கூனிக்குறுகிப் போகிறது மெய்!!
“சின்னஞ்சிறிய அரும்புகள், சிறுவர் சிறுமியர் அரும்புகள்” பாடல் இசைக்கப்பட்டு, அதற்குப் பின் நிறைவாக, “அற்புதம் அற்புதமே”, சேர்ந்திசைக்கப்பட்டு நிறைவுக்கு வருகிறது தமிழிசை!
“அற்புதம்”, ஒரு சேரக் கூவியது அரங்கம். எளிமையின் சின்னம் தோழர் நல்லகண்ணு, பணிவின் சின்னம் முனைவர் மறைமலை இலக்குவனார், தமிழின் சின்னம் கவனகர் கலை.செழியன் ஆகியோரது அரவணைப்பில் சிக்குண்டு நெகிழ்ந்து போனது தமிழிசைச் சிறார் கூட்டம்.
தமிழிசையைச் செவ்வனே முன்னெடுத்துச் செல்வதற்கும், களம் கிடைக்காத தமிழருக்கேற்ற களமொன்றையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது பேரவை. பேரவையின் இம்முயற்சியைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் ஏனைய இடங்களிலும் தமிழிசை விழாக்கள் இடம் பெற வேண்டுமென்பதே நம் இலக்காகும்!!
அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி
அன்னை வாழ்க வாழ்கவே!!