என் நீண்ட நாள் ஆசை.... நல்லகண்ணு அய்யா அவர்களுடன் ஒரு பொழுதாவது இருக்க வேண்டுமென! ஆசை கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது. பேரவை வெள்ளி விழாவுக்கு அணி சேர்க்கும் அய்யா அவர்களை வரவேற்கக் காத்திருக்கிறேன்!!
போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் நாங்குனேரி வட்டத்திலுள்ள கிராமங்களுக்கும், வடகரையிலிருந்து வள்ளியூர் வரையுள்ள கிராமங்களுக்கும் நடந்தே சென்று விவசாய சங்கங்களை தோழர் இரா.நல்லகண்ணு உருவாக்கினார். மடாதிபதிகளின் ஆதிக்கத்திலுள்ள கிராமங்களில் தலித் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார்.
சாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காகத் தன் வாழ்க்கையை சிறைக் கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். பொதுவாழ்வில் எளிமையையும் சிக்கனத்தையும், தூய்மையையும் இன்றளவும் போற்றி வருபவர்.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினர் கொண்டாடிய நூற்றாண்டு விழா நாயகர் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் அவர்களின் மாணவராகப் பயின்ற தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், முதுபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமாவார். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. ஆனால், இன்னும் இயக்கப் பணிகளிலும் எழுத்துப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
’டாக்டர் அம்பேத்கர்’, ‘ஒளி வீசும் சுடர்’ ’வெண்மணி தியாகிகள் கவிதை’, ’டாக்டரின் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை’, ’மார்க்சியப் பார்வையில் டாக்டர் அம்பேத்கர் (மொழிபெயர்ப்பு)’, ’தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்கள்’, ’பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’, ’விவசாயிகளின் பேரெழுச்சி (மொழிபெயர்ப்பு)’, ’தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு’, முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.
பேரவை கொண்டாடவிருக்கிற நூற்றாண்டு விழா நாயகர் முனைவர் மு.வரதராசனாருடன் தொடர்பில் இருந்தவர். பொதுவுடமைத் தலைவர் ஜீவா அவர்களின் மறைவின் போது எப்படியெல்லாம் தானும் முனைவர் மு.வ அவர்களும் ஒருவொருக்கொருவர் தேற்றிக் கொண்டார்கள் என்பதையும் முனைவர் மு.வ அவர்களின் சமூகச் சிந்தனைகளைப் பற்றியும் தன் கட்டுரைகள் வாயிலாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளார் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள்.
தமிழ்நாட்டு அரசின் ’அம்பேத்கர்’ விருது, அனைத்திந்திய காந்திய சமூகநல அமைப்பின் ’காந்திய விருது’, முற்போக்கு எழுத்தாளர் கழகத்தின் ‘ஜீவா விருது’ உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளைப் பெற்றவர்.
தமிழ் மொழியாலும், தமிழ்ப் பண்பாட்டாலும் எடுத்துக்காட்டாக விளங்கும் முதுபெரும் தொண்டர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் வருகை, அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவினுடைய மணிமகுடத்தின் மாணிக்கக்கல்!!
3 comments:
வெள்ளி விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.
நன்றிங்க
விழா சிறக்க வாழ்த்துக்களும், குழுவினருக்கு பாராட்டுக்களும்.
Post a Comment