2/11/2012

டென்னசி, மெம்ஃபிசு நகரில் வலைஞர் சந்திப்பு

இப்பாரினில் நாம் அடைகின்ற
வெற்றியெலாம் உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திரு நீ! இளந்தமிழா,
அறஞ்செய்வாய்! நாமடைந்த
பெருமையனைத்தும் காத்திடுவாய்!
இந்நாள் செயல்செய்வாய்
நன்றாதல் கண்டோமெனச் சீறி வந்தே!!
அயல் மண்ணில்
தமிழ்நட்புப் பூண்டிடுவோம்
வந்திடுக தமிழ் மறவா!!


2/11/2012
மிசிசிப்பி ஆற்றங்கரையோர நகரம், மெம்ஃபிசு
டென்னசி மாகாணம்
pazamaipesi@gmail.com

சிறப்பு விருந்தினர்: சேலத்து மாம்பழம் வலைஞர் வெண்பூ 

2/10/2012

டென்னசி மெம்ஃபிசு நகரத் தமிழ்விழா அழைப்பு

ஒருவானில் பன்னிலவாய்
உயர்தமிழரெலாம் எழுக!
திருவான செந்தமிழின்
தேனருந்த எழுக! நீவிர்
பெருமானம் பெறுவதற்கு வாரீரேல்
உங்கள்நுதற் பிறையே நாணும்!
பொற்பரிதி எழுஞ்சுடர் முகமும்
நன்னெஞ்சும் வாட்டம் எய்தும்!

மின்னைவிழி உயர்ந்ததுபோல்
மெய்யுயிரைப் பெற்றதுபோல் தமிழ்ச்சாப்பாடு!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை?
செந்தமிழ்த் தோப்பில் நிழலா இல்லை?
நந்தமிழின் நலம் காக்க வாரீர் தமிழர்களே!
நட்பெய்தக் கூடுங்கள் அன்பர்களே!!
கோர்டோவா சமூகக் கூடமதில் கூடுங்கள்!
கூடிப் பொங்கலிடுவோம் வாருங்கள்!!

கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்!! : 

2/04/2012

சிலம்பாட்டம்

பழந்தமிழ்க் கலைகளுள் சிலவற்றைப் பெருமையாகப் பேசவும், அவற்றைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுமிருக்கிறது நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் எனச் சொன்னால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்த போதிதர்மர் என்பார் சீனாவுக்குச் சென்று, அங்கிருந்த மக்களுக்கு தமிழ்க்கலைகளைக் கற்றுக் கொடுத்துக் காப்பாற்றினார். அதன் காரணமாகச் சீனர்கள் இன்றைக்கும் அவரைக் கடவுளாகப் பாவித்து வணங்கி வருகிறார்கள் எனும் இன்றைய நடப்பைச் சுட்டிக்காட்டி, அவர் கற்றுக் கொடுத்த கலைகள் சிலவற்றையும் திரையில் காணச்செய்கிறது ஏழாம் அறிவு.

பழந்தமிழ்க் கலைகளுள் சிலம்பம், குத்துவரிசை, நோக்குவர்மம் முதலானவை ஏழாம் அறிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அவையெல்லாம் சிலம்பக்கலையின் ஒரு சில உட்கூறுகளேயாகும்.

’சிலம்பு’ எனும் சொல்லுக்கு ‘ஒலி’ என்பது பொருள். அத்தகைய ஒலியுடன் கூடிய கலையானது சிலம்பக்கலை என வழங்கலாயிற்று. ஒருவர் அத்தகைய சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம். மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, புடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளகாகும்.

முதலாவதாக, உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் மெய்ப்பாடம் எனும் நிலையை வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து அடைவதாகும். குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்திய பின் இடம் பெறுவது, உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்துகிற உடற்கட்டுப் பாடம்.

கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு அடுத்து இடம் பெறுவது மூச்சுப்பாடம் என்பதாகும். ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது. தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில வழி வகுக்கிறது.

சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக ’குத்துவரிசை’ அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும். குத்துவரிசையின் நுணுக்கமாக, நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட, அறுபத்து நான்கு விதமான நிலைகள், புலி, யானை, பாம்பு, கழுகு, குரங்கு ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும்.

ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே தட்டுவரிசையையும் கற்றுக் கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும் போது, அவற்றை அவர்தம் நிலைக்கேற்பத் தன்நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும்.

எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலாகவமாகத் தம்பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும். சிலம்பாட்டத்தின் இக்கூறானது, யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்ட ஒன்றாகும். யானைகள் ஒன்றுக்கொன்று பிடி போட்டுக்கொள்ளும் போது, கிட்டத்தட்ட இருநூறு வகையான பிடிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை யாவும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன. ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளை சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப்படுத்துவதே அடிவரிசை என்பதாகும். சிலம்புக்கலையின் இக்கூறானது குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும்.அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம்.

சிலம்பு என்றால் ஒலி என முன்னரே பார்த்தோம். அதே வேளையில், கைச்சிலம்பு, காற்சிலம்பு எனும் அணிகள் இருப்பதையும் நாம் கருத்திற் கொண்டாக வேண்டும். சிலப்பதிகாரத்தில் கண்ணகி கையாண்டது காற்சிலம்பு; பஞ்சாபியர் இன்றும் கையிலணிந்து இருப்பது கைச்சிலம்பாகும். அப்படியாகப் பெண்டிர் கைச்சிலம்பும் காற்சிலம்பும் கொண்டு பயிற்றுவிக்கப் பட்டார்கள். ஆடவருக்கு, சிறு கழி அல்லது வேல்கம்பு கொண்டு நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இதுவே சில்ம்பாட்டம் என அழைக்கப்படுகிறது. சிலம்பக்கலையின் ஒரு உட்கூறான சிலம்பாட்டத்தில், அலங்காரச் சிலம்பம், போர்ச் சிலம்பம், குறவஞ்சிச் சிலம்பம், பனையேறி மல்லு, துலுக்கானா, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு எனப் பலவகைகள் உள்ளன.

கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி நரம்பும் தசைகளும் இயக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட உடற்பயிற்சியை குறிப்பிட்ட வயது வரை மட்டுமே ஒருவரால் மேற்கொள்ள முடியும். ஆனால் நூறு வயதானாலும் தொடர்ந்து சிலம்பாட்டத்தை மேற்கொள்வதால் இறுதிவரை அவர் உடற்பயிற்சி செய்பவராகிறார். கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றியிருக்குமிருக்கிற பதினாறு திக்கும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக் கொண்டு வேலி அமைப்பது என்றால் அது சிலம்பத்தினால் மட்டுமே முடியும். இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். இதுவரையிலும் நாம் கண்டு வந்த நிலைகள், மாந்தனது உடலின் வலிமை(strength), ஆற்றல்(power), விரைவுத்திறன்(speed) மற்றும் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை செம்மைப்படுத்தி நுணுக்கங்களைப் புகுத்தி மேற்கொள்ளும் பயிற்சிகளாகும்.

அடுத்து வரும் சிலம்பக்கலையின் மற்றொரு கூறான வர்மக்கலையானது, மேற்கண்ட பயிற்சிகளோடு, கூடுதலாக அறிவுத் திறனையும் வளர்த்துக் கொண்டு செயற்படும் ஒரு முறையாகும்.

மாந்தனது உடலானது இரண்டாயிரம் நாடிகளால் பின்னப்பட்டிருக்கிறது என்கிறார்கள் தமிழ்ச் சித்தர்கள். இவற்றுள் வெகு முக்கியமானவை பத்து நாடிகளாகும். இவற்றின் வழியாகத்தான் மூச்சுக் காற்றானது பல்வேறு வடிவங்களாக ஓடுகிறது என்கிறார்கள் சித்தர்கள். அவை முறையே, உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று, விழிக்காற்று, இமைக்காற்று, தும்மற்காற்று, கொட்டாவிக்காற்று, வீங்கற்காற்று என்பனவாகும். இப்படியானவை நாடிகளின் ஊடோடி ஒன்றோடொன்று எதிர்கொண்டு கலக்கும் இடங்கள் வர்மப்புள்ளிகள் எனப்படுகின்றன. அத்தகைய புள்ளியில் பல காற்றுகள் கலப்பதாக இருப்பின் அது வர்ம நுட்பப்புள்ளி எனப்படுகிறது. அப்புள்ளியில் நுணுக்கமாகத் தாக்கி பாதிப்புக்கு உள்ளாக்குவதே வர்மக்கலை என்பதாகும்.

வர்மக்கலையை, படுவர்மம், தொடுவர்மம், தட்டுவர்மம், நோக்குவர்மம் என நான்கு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார் அகத்தியர்.

படுவர்மம் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். நாட்டுப்புறத்தில், ‘படாத எடத்துல பட்டுப் பொசுக்குனு போயிட்டான்’ எனப்படுகிற சொல்லாடலின் அடிப்படையும் இதுவேயாகும்.

குறிப்பிட்ட நுட்பவர்மத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் போது உயிருக்கே ஊறு விளைவிக்கும் ஆற்றல் கொண்டது படுவர்மம்.

படுவர்மத்தைப் போன்று குறிப்பிட்ட வர்மங்களைத் தாக்குவதே தொடுவர்மம். ஆனால், உயிருக்கு ஊறெதுவும் இல்லாமல் செயலிழக்கச் செய்யும் முறையாகத் தொடுவர்மம் திகழ்கிறது. இதில் தாக்குதலுக்குண்டான ஒருவரை முறையான பயிற்சியினால் இயல்பாக்க முடியும்.

விரல்களைக் கொண்டு வர்மப்புள்ளிகளைத் தட்டி நிலைகுலையச் செய்யும் முறையே தட்டுவர்மம் எனப்படுகிறது.

மெய்தீண்டாக்கலை என்றும் விளிக்கப்படுகிற நோக்குவர்மம் என்பது, ஒருவரைத் தன் பார்வையாலேயே ஆட்கொண்டு நிலைகுலையச் செய்யும் முறையாகும். பழங்காலத்தில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே நோக்குவர்மத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்கிறார்கள் சித்தரியல் ஆய்வாளர்கள்.

எடுத்துக்காட்டாக, தட்டுவர்மத்தின் உட்பிரிவான முடக்குவர்மத்தை கால்முட்டிக்குப் பின்னால் இருக்கும் வர்மப்புள்ளியைத் தாக்குவதன் மூலம் ஒருவரது நடக்கும் ஆற்றலை இழக்கச் செய்யமுடியும் என்பதை அகத்தியர் கீழே வருமாறு விவரிக்கிறார்.

பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே

வலிமை வாய்ந்த வர்மக்கலையைக் கற்றுத் தேர்ச்சியடைய, சீரிய ஆய்வும் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டு ஒரு நெறிமுறையை வகு்த்து மீட்டெடுக்க வேண்டிய கடமை மாந்தர் குலத்திற்கு உண்டு.

சிதைந்து போன வர்மக்கலையை மீட்டெடுக்கும் முன்னர், நாம் சிலம்பாட்டத்தினைப் பயில்வதால் உடலைப் பேணுவதோடு தமிழர் கலையையும் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதுவே நாம் நம் எதிர்காலச் சந்ததியினர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளுள் முக்கியமானதாகும்..

அமெரிக்கத் தமிழர்க்கு சிலம்பாட்டக் கலையைப் பயிற்றுவிப்பதன் வழியாக அக்கலையை முன்னெடுத்துச் செல்லப்படுதல் வேண்டும் என்கிற உயரிய நோக்கில் அமைக்கப்பட்டிருப்பதுதான் அமெரிக்க தமிழ்ச்சிலம்புக் கழகம். இவ்வமைப்புத் துவங்கப்பட்டு பல இடங்களிலும் சிலம்பாட்டப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழர் கலைகள் அமெரிக்க மண்ணில் மீளெழுந்து பெருமைகள் கொள்ளப் போகும் நாள் வெகு தொலைவில் இல!!

உசாத்துணையும் உதவியும்:
அகத்தியரின் ஒடிவு முறிவு சாரி
விற்பன்னர் ஜோதிக்கண்ணன் செவ்வி
முனைவர் சுந்தரவடிவேலு
திரு. எழிலன்
திரு.பிருத்திவிராஜ்

குறிப்பு: இப்படைப்பானது வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏடான 'அருவி' இதழில் வெளியான கட்டுரையாகும்.

2/03/2012

நின் வாழ்த்தால் வசமானேனே!!

அகமுடையான், அன்பன்
கணவன்,ஆம்பான், ஆமுடையான்
ஆமக்கன்,நாயகன்,தவன்
தற்கொண்டான், தாட்டான்
துணைவன், நயந்தோன்
நாதன், பாங்கன், புவான்
பூண்டான், பெண்ணான்
மகிணன், மணந்தோன்,
மணவாளன், மணாளன்,
மனைக்கிழவன், மாப்பிள்ளை
வயவன், வல்லபன்
விழைந்தோன், வீட்டுக்காரன்
வேட்டான், கண்வாளன்
கண்ணாளன், உயிரான்
எனத் தமிழாலே எனக்காய்
எல்லாமுமாய் ஆனவரே
நின் வாழ்த்தால் வசமானேனே!!

2/01/2012

விழிநாள் வாழ்த்து!!

அகத்தாள், இல்லாள், மனையாள்
அடுப்பி, அகவாட்டி , அறத்துணைவி
ஆட்டி. சகசரி, சமுசாரம்
சானி, சேர்த்தி, தலைமகள்
எம்மானி, தலைவி, துணைவி
தேவி, நப்பின்னை , நாயகி
பத்தினி , பாரியை, பிரியை
பெண்சாதி, பெண்டாட்டி, பொருளாள்
மகடூஉ , மனைக்கிழத்தி, மனையாள்
வல்லவை, வனிதை, விருந்தனை
மனைவி, வதுவராளி
வீட்டாள், வீட்டுக்காரி
வீரை, வேட்டாள்
கண்வாட்டி, சாயி
எனத் தமிழாலே எனக்கு ஆனாய் நீ
நின் பூவிரு விழிகள் விழித்த நாளதில்
தமிழால் வாழ்த்துகிறேன்
நன்றியுடனே!!