2/27/2011

செலுத்தி(jockey)யும், நள்ளிரவு நாய்களும்!

உலகின் ஒரு கோடியில்
அது நள்ளிரவு நேரம்
நகரத்து நாய்கள்
கிராமத்து நாய்களெனப்
பேதம் பாராது
வலையில் திரிந்து கொண்டிருந்தன;
அந்த நாய்களுக்குச் செலுத்தி
தாயகமும் தம் மொழியும்!!
அந்தத் திரிதலில்
அகப்பட்ட காணொலிகள்
சொல்லாமற் சொல்லியது
நாய்களுக்கும் முகவரி உண்டு!
நாய்களுக்கும் முகவரி உண்டு!!







2/26/2011

த.வ.க கண்டு, கருணாநிதியும் ஜெயலலிதாவும் கலக்கம்!!

நல்லுறவே கொள்கை
இணக்கமே வேதாந்தம்
சகிப்புணர்வே சித்தாந்தம்
வரம்புக்குள் பேச்சுரிமை
கட்டுக்குள் எழுத்துரிமை
நமக்காகவே சட்டம்
சட்டத்திற்காக ஒழுங்கு
கண்டிப்பாய் ஆளுமை
கனிவாய் சமரசம்
உவப்பாய் உடன்பாடு
ஒருமனதாய்த் தீர்மானம்
ஏகமனதாய் அரவணைப்பு
உலகளாவிய விடுதலை
தனக்கான தேசியம்
நிர்வகித்தலுக்கான பிரிவினை
ஒத்தாசைக்கான ஒற்றுமை
வாழ்வுக்கான பொருளியல்
குடிவாழ வருமானம்
பராமரிக்க வரி
வரிச்செலுத்துவது கடமை
கடமையாற்றத் தொண்டன்
வழிநடத்தத் தலைவன்
தலைவனுக்கு நேர்மை
நேர்மைக்கு ஒழுக்கம்
ஒழுக்கத்திற்கான சமத்துவம்
சமத்துவத்திற்கான அரசு
அரசுக்கான பிரதிநிதிகள்
பிரதிநிதிகளுக்கான தேர்தல்
தேர்வுக்கான பங்களிப்பு
பங்களிப்புக்கு குடிமக்கள்
குடிமக்களுக்கான சிந்தனை
சிந்தனைக்காய் வலைஞர்கள்!

வலைஞர்களே ஒன்றுபடுவோம்!
ஆட்சியை வென்றெடுப்போம்!!
தமிழக வலைஞர் கட்சி(த.வ.க)யை வலுப்படுத்துவோம்!!!

(பகடிக்கு ஒரு அளவே இல்லையாடா?? அவ்வ்வ்.......)

2/25/2011

மடத்துக்குளம் கவின் செந்தில்வேலன் பிறந்த நாள் வாழ்த்து!!

இன்று பிப்ரவரி இருபத்தி ஐந்தாம் நாள், அன்புச் செல்லம் மடத்துக்குளம் கவின் செந்தில்வேலன் தனது அன்பு அப்பா, அம்மா, அப்பாவின் தோழர்கள், மற்றும் சுற்றமும் நட்பும் சூழத் தனது முதலாவது பிறந்த நாளைத் துபாயில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடுகிறார்.

பிறந்த நாள் விழாக் காணும் அன்புத்தளிர் கவின் அவர்களை, சென்னையிலிருந்து வாசு மாமா, ஈரோட்டிலிருந்து கதிர் மாமா, ஆரூரன் மாமா, உடுமலையிலிருந்து அம்மம்மா, அப்பப்பா, நாகா மாமா, சிதம்பரம் மாமா, சூலுரிலிருந்து தாத்தா பாட்டி, நியூயார்க்கிலிருந்து நசரேயன் மாமா, டாலாசிலிருந்து குடுகுடுப்பைத் தாத்தா, டெட்ராயிட்டிலிருந்து பெரியப்பா, சார்லட்டிலிருந்து பழமைபேசி பெரியப்பா, ராலேயிலிருந்து ஓலையார் மற்றும் சித்தப்பாமார், சித்திமார், அத்தை முதலானோர் இவரை பல்கலைகள் கற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறார்கள்!!

2/24/2011

யாரிந்த வலைப்பேய்ச் சித்தர்??

பதினென் சித்தர்கள் இருந்த நாடு நம்ம நாடு. கோயமுத்தூர்ல இருந்து அப்படியே பொடி நடையா, அவலு கடலை பொரிய மென்னுகிட்டே மேக்கமுன்னா காத்து வாங்கிட்டுப் போனமுன்னாக்க, மருதமலை வந்துரும். அங்க பார்த்தீங்கன்னா, பாம்பாட்டிச் சித்தருக்கு கோயல்கூட இருக்குது.

அங்க உக்காந்துட்டு இருக்கும் போது, என்னா ஒரு மனநிறைவு?! அந்தத் துண்ணூரு வாசத்துக்கும், மலைக் காத்துக்கும்... அப்பப்பா...  அவரோட அருமை பெருமைகளை எல்லாம் எழுதணும்தான்... நேரங்காலம் வரணுமே எதுக்கும்?!
பாம்பாட்டிச் சித்தர் சன்னதி

சரி, யாரந்த பதினென்கீழ்ச் சித்தர்கள்? டேய்... அவுங்க பதினென் சித்தர்கள்தானடா? நீயென்ன பதினென்கீழ் ஆக்கிட்டியேன்னுதான எகுறுறீங்க? அதுவும், ஈரோட்டு மாப்பு எகிறுறது எக்கசக்கம்?! அது ஒன்னுமில்லீங்க, கீழ சொல்லப் போற பதினென் சித்தர்கள்ங்றதைத்தான் அப்படி சொல்லிச் சொன்னேன்.

1. அகப்பேய்ச் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதச் சித்தர்
5. இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மெளனச்சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளிச் சித்தர்
12. கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்தச் சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச் சித்தர்

இவங்க வரிசையில, நவீனச் சித்தர், அதாகப்பட்டது, பத்தொன்பதாவதா, வலைப்பேய்ச் சித்தர். பேய் அப்படின்னா, கெட்டதாவே பார்க்கப்படாது. பேய் மழை, பேய்க் கதை, பேய்க் காதல், பேயுழைப்பு இப்படியெல்லாங் கூட ஒரு முன்னொட்டா வரும். அதாவது, வீரியமிக்க அல்லது அதிதீவீர அப்படிங்ற பொருள்ல வரும்.

அப்படி வலைஞர்லயும், இவரு பேய் வலைஞரு. பல்சுவைப் பழம். எங்களுக்கெல்லாம் அன்பானவரு; நேசமானவரு!! என்ன கழுதை, அந்த ஈரோட்டுச் சங்கமத்தையும் வலையேத்தினா, எட்ட இருக்குற சித்தரோட பக்தர்கெல்லாம் மகிழ்ச்சியடைவாங்க... என்ன நாஞ்சொல்றது?!

2/23/2011

தவிப்பு

வலைஞனெனது நித்திரை கலைய
கணித்துயிலும் கலைந்து
அண்டவலை விரிந்தது!

என் பதிவினது ஊட்டுகள் பார்த்தேன்;
காணவில்லை!

விரைவாய் மின்னஞ்சலுக்குத் தாவினேன்;
காணவில்லை!

அவனது பதிவுக்குள் கண்களை ஓட்டினேன்;
காணவில்லை!

அங்கிருந்து பேசுபுக்குக்கு ஓடினேன்;
காணவில்லை!

நேராய் டிவிட்டர் தளத்தில் குதித்தேன்;
காணவில்லை!

கூகுள் பஃசுக்கு விரைந்தேன்;
காணவில்லை!

கூடிக் கும்மியடிக்கும் குழுமத்துக்குப் பாய்ந்தேன்;
காணவில்லை!

வழமைப்பதிவர்களது இடுகைகளுக்குச் சென்றேன்;
காணவில்லை!

தட்சுடமிலின் இன்றைய பலான கட்டுரைக்குச் சென்றேன்;
காணவில்லை!

தினமலரின் புதிய கள்ளக்காதல்ச் செய்திக்கு விரைந்தேன்;
காணவில்லை!

வருத்தமுடன் பிறிதொரு வலைஞனை அழைத்தேன்;
இந்தக் கவலை ஏனடா உனக்கென்றான்!

அவனை எங்கியுமே காணம்;
நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் உருப்பட ஆரம்பிச்சிட்டானோ?!
இல்லே, நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் திருந்திட்டானோ?!

2/20/2011

கரும்படிமம்

”என்றா பழனிச்சாமி, ராவோட ராவா ஊரை உட்டே ஓடிப் போன மாடசாமிய நெனச்சு வெசனமாக்கூ?”

“வீணா என்னைச் சீண்டிப் பதம் பாக்காத! போட்டுத் தள்ளிட்டு அந்த வறண்டு கெடக்குற ஊர்க்கிணத்துல வுழுந்து சாகவும் தயங்க மாட்டேன்; சொல்லிப்புட்டேன்!”

ஊர்க்குளத்தின் ஓரத்தில் தனிமையாய் அமர்ந்திருக்கும் பழனிச்சாமி, பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கும் முந்தைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கலானான்.

ஆ.நாகூர்ப் பள்ளியில் பழனிச்சாமியும் மாடசாமியும் வகுப்புத் தோழர்கள் என்பது மட்டுமல்லாமல், ஒரே ஊர்க்காரர்களும் கூட. இவ்விருவரும், வெவ்வேறு சாதிக்காரகள் என்பதையுங் கடந்து நட்பு பாராட்டி வந்தார்கள். வாலிபத்தை அடைந்ததும், பழனிச்சாமி நூற்றாலையில் மேற்பார்வையாளனாக வேலைக்குச் சேர்ந்தான். மாடசாமி, குடும்பத்தாரின் வேளாண்மையில் இணைந்து கொண்டான்.

சாரை சாரையாய் காடு கழனிகளுக்குச் சென்று கொண்டிருந்த ஊர் மக்களின் பற்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான் மாடசாமி.

“ஊருக்கெல்லாம் வெளுத்துப் போடுற குருவனுக்கு, ஊர்க்கெணத்துக்கெட்ட இருக்குற அந்த பொறம்போக்கு நிலத்தைப் பட்டாப் போட்டுக் குடுக்குறதுல இந்தக் கட்டித்தின்னிக்கு என்ன நோகுதாமா?”

”அருக்காணி யாரைச் சொல்ற நீயி?”

“அந்த மயிலாத்தா பையன் மாடசாமியத்தான்!”

“ஆமா கழுதை... அவனுக்கு ஊட்டுச் சோத்தைத் தின்னுபோட்டு ஊர் சோலி பாக்குறதேதான் வேலை. எப்பப் பார்த்தாலும் ஒரே பண்ணாட்டு அவனுக்கு!”

“அதான்... இராயர் தோட்டத்து ஆளுகளுக்கும் அவனுக்குமு நேத்து ஒரே அடிதடியாமாக்கா...”

“அப்பிடியா? அப்புறம் என்னாச்சு சின்னக்கண்ணு?”

“மாடசாமியப் போலிசுல புடிச்சுட்டுப் போய்ட்டாங்களாம்!”

அதே நேரத்தில், ஆறரை மணிச் சங்கு ஊதும் முன்பாக நூற்றாலைக்குள் சென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் மிதிவண்டியை வேகமாய் மிதித்துக் கொண்டிருந்தான் பழனிச்சாமி. பின்னிருக்கையில், அதே ஆலையில் வேலைபார்க்கும் ஐ.என்.டி.யு.சி சின்னசாமி.

“ஏண்டா பழனி, எதுக்குடா மாடசாமிக்கு இந்த வேண்டாத வேலை? இப்ப எதுக்கு அவன் இராயர் தோட்டத்துக்காரவங்களோட கட்டுல வுழுறான் அவன்?”

”ஊர்க்காரங்க திட்டுற மாதரயே நீயும் அவனைத் தப்பாவே நெனைக்கிற பாத்தியா?”

“பின்ன, அவஞ்செய்யுறது செரியாடா? என்றா ஒழுக்க நாயம் பேசற??”

“அவன் என்னத்தச் சொல்லிட்டான்? ஊர்க்கிணத்தடியில இருக்குற நிலத்துக்குப் பதுலா, புள்ளார் கோயலுக்குப் பின்னாடி இருக்குற நெலத்தைச் சின்னானுக்குப் பட்டா போட்டுக் குடுத்துறலாம்ங்றான். அதுல என்ன தப்பு? ஊர்க்கிணத்துக்கும் இராயர் தோட்டத்துக்கும் எதோ தொடுப்பு இருக்குன்னு யோசிக்கிறான் அவன். நம்மூர்ல இருக்குற படிச்சவங்கள்ல அவனும் ஒருத்தன். அதை நாம யோசிக்க வேண்டாமா?”

”போடா... கோயிலுக்குப் பின்னாடி துணி வெளுக்குறவனுக்கு குடிசை போடச் சொல்லி யாராவது நெலத்தைக் குடுப்பாங்களாடா?”

“குடுத்தாத்தான் என்னங்றேன்?”

“இராயர்தோட்டத்து மணியன் சொல்றது தப்பா அப்ப? அதைவுடு... இவன் எதுக்கு அவங்க ஆளுகளை கைநீட்டி அடிச்சான்?”

“ஏண்டா, ஊர்க்காரங்களை ஒன்னு சேத்திட்டு வந்து அவனைக் கண்டபடி ஏசுவீங்க? திட்டுவீங்க?? அவங்கையுங்காலும் பூப்பறிச்சுட்டு இருக்குமாக்கூ?”

ஊர் முழுமைக்கும் ஒன்று சேர்ந்து கொண்டு, மாடசாமியையும் அவனது குடும்பத்தையும் தள்ளி வைக்கிறது. இராயர் தோட்டத்து மணியனுக்கு ஆளுங்கட்சியில் செல்வாக்கு. மாடசாமிக்கு உள்ளூர் இளைஞர்கள் ஒருசிலரின் ஆதரவு.

மறுநாள் காலையில், உள்ளூரில் இருக்கும் மற்றொரு விவசாயி ஒருவரின் வீட்டில் திருமணம். ஊர்க்காரர்கள் மட்டுமல்லாது, பக்கத்துக் கிராமத்தினரும் திருமணத்திற்கு வருவார்கள். வருவோர் அனைவரும், மாடசாமி எங்கே எனக் கேட்பார்களே? என்ன சொல்வது. மாடசாமியின் தந்தையாருக்கு மிகுந்த கவலை மற்றும் துயரம். மானப்பிரச்சினையாகப் பார்க்கிறார் மாடசாமியின் தகப்பனார்.

நல்லாம்பள்ளிச் ஜமீனிடம் ஓடுகிறார். கதறுகிறார். இவரிடம் இருக்கும் நிலபுலன்களில் சில கைமாறுகிறது. பிணையில் விடுதலையான் மாடசாமி ஊருக்குள் வர, எதிரணியினர் ஏமாற்றத்தில் சோர்ந்து போகிறார்கள்.

திருமண வீட்டில் வைத்து இணக்கம் பேசுகிறார் நல்லாம்பள்ளிச் ஜமீன் அவர்கள். மாடசாமி சொல்கிறார்,

“இத பாருங் மாமா. அவிங்க திட்டமென்னன்னு எனக்கு நெம்ப நல்லாத் தெரியும். சின்னானுக்கு அந்த நெலத்தைப் பட்டாப் போடணும். கொஞ்ச நாளைக்கு அப்புறம், அவங்கிட்ட இருந்து நெலத்தை வாங்கி கெணறு வெட்டித் தண்ணிய இராயர் தோட்டத்துக்கு கொண்டு போகோணும். ஊர்ச் சனங்களுக்குத் தண்ணி இல்லாமப் போகோணும்; அது மட்டும் இந்த மாடசாமி உசுரோட இருக்குற வரைக்கும் நடக்கவே நடக்காது!”

இணக்கப் பேச்சுகள் முறிகிறது; கூடவே கைகலப்பும் அக்கப்போர்களும் மூளுகிறது. மாடசாமியின் பிணையும் ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே முடிவுக்கு வர, மாடசாமியின் குடும்பத்தார் நிலைகுலைந்து போனார்கள். ஊராரின் ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் அஞ்சி, ஊருக்குள் வருவதையே தவிர்த்து, காடுகழனிகளில் தஞ்சம் புகுந்தார்கள் மாடசாமி குடும்பத்தார்.

நாட்கள் செல்லச் செல்ல, மாடசாமியின் குடும்பத்தில் பூசல்கள் அதிகரித்து, சகோதரர்கள் அனைவரும் மாடசாமியை விட்டுப் பிரிந்தார்கள். என்றாலும், மாடசாமியின் தகப்பனார் தொடர்ந்து வழக்கை எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். தன்மகன் குற்றமற்றவன் என்பதைக் கடுமையாக நம்பினார் அவர்.

இடைப்பட்ட காலத்தில், சின்னானுக்கு ஊரடி நிலம் பட்டாப் போட்டுக் கொடுக்கப்பட்டது. பழனிச்சாமி மட்டும், தன் நண்பன் மாடசாமியை இன்னும் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தான். அவனது நம்பிக்கையும் வீண் போகவில்லை.

மாடசாமி சொல்லியதைப் போலவே, ஊர்க்கிணற்றை ஒட்டியே ம்ற்றொரு கிணறும் வெட்டப்பட்டது. ஊர்க் கிணற்றைவிடவும் முப்பது அடிகள் அதிகமாகவே தோண்டப்பட்டது. ஊர்க்காரர்கள், குறிப்பாக, ஏழை எளிய மக்கள் குடிதண்ணீர் இன்றி தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் வழக்கு பல நீதிமன்றங்களைக் கண்டது. மோகன் குமாரமங்கலம், வானமாமலை எனப் பெரிய அளவிலான வழக்கறிஞர்கள் எதிரெதிர் அணியில் வாதிட்டார்கள். குடி மூழ்கிய தருவாயில், மாடசாமிக்கு விடுதலை கிடைக்கிறது.

ஊர்க்குளத்தில் அமர்ந்திருந்த பழனிச்சாமி, இருபது ஆண்டுகால நினைவுளில் இருந்து விடுபட்டு நடப்புக்குத் திரும்பலானான். ”எப்பேர்ப்பட்ட மனுசன் அவன்? அவஞ்சொல்ப் பேச்சைக் கேட்டிருந்தா, இன்னைக்கு இவ்வளவு தண்ணிப் பஞ்சம் வந்துருக்குமாடா??”

“ஆமாடா... ஆமா, மாடசாமி இப்ப எங்க குடியிருக்கான்?”

“எங்கியோ, வடக்க போயி யாவாரம் செஞ்சி பொழச்சிட்டு இருக்கான். பதினாறு வள்ளந் தோட்டங்காட்டை எல்லாம் கேசு நடத்துறதுலயே தொலைச்சிப் போட்டு, இன்னிக்குப் பஞ்சம் பொழைக்கிறதுக்காக எங்கியோ போய் இருக்குறான். ஆனாலும், போன எடத்துல நெம்ப கவுரதையா இருக்கான்...”, பெருமூச்சு விட்டுக் கொண்டான் பழனிச்சாமி.

காலதேவனின் சுழற்சியில், மாமாங்கம் மூன்று கழிந்து விட்டிருந்தது. மாடசாமிக்கு மூன்று மகன்கள். அவரவர், அவரவர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். மூவரில், இருவர் வெளிநாட்டில் வாழ்கிறார்கள். மூத்தவன் மட்டும் பெற்றோரைக் கவனித்துக் கொண்டு கோயம்பத்தூரில் வாழ்கிறான்.

தன் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, பெற்ற மகன்களின் உதவியினால் தம்மூதாதையர் வாழ்ந்த வீடு மற்றும் ஒரு சில நிலபுலன்களை மீட்ட மகிழ்ச்சியில், தன் இறுதிக் காலத்தை மனநிறைவோடு கழித்துக் கொண்டிருக்கிறார் மாடசாமி.

பெற்ற மக்களில், அந்த இளையவனுக்கு மட்டும் மாடசாமியின் தாக்கம் சிறிது உண்டு. தமிழ், தமிழ்ச் சங்கம் என்றெல்லாம் அவ்வப்போது அவன் அலைபாய்வதும் உண்டு. அன்றும் அப்படித்தான், அவன் தன் நண்பர்களோடு அளவளாவிக்கொண்டு இருந்தான்.

“ஏண்டா, நீயெல்லாம் படிச்சவனா? நாட்டுல எவ்வளவு அக்குரமம் நடக்குது? அதையெல்லாம் கண்டுக்க மாட்டியா??இப்படி அச்சுறுத்தலுக்கு அஞ்சி அஞ்சிப் பொழைக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா??”, இவனை இவனது நண்பன் வினவினான்.

“போடாங்... எங்கப்பன் மாதர, நான் என்ன ஒரு இளிச்சவாயனா??”

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

பாக்குறியா? பாக்குறியா??

2/14/2011

நடிகர்களுடன் இருக்கும் இந்தப் பிரபல பதிவர்???

ரெண்டு பேரும் அப்படி என்னா பாக்குறீங்க??





2/13/2011

காதல் என்பது இதுதானா??

கொறையில மாடு மேய்க்க நாம் போவேன்!
பள்ளத்துல முள் பொறுக்க நீ வருவே!!

ஓடையில துணி தொவைக்க நீ போவே!
ஓடக்கல் பொறுக்க நான் வருவேன்!!

சங்கத்துல பால் ஊத்த நான் போவேன்!
கோயல்ல விளக்கு வெக்க நீ வருவே!!

தையக்காரன்கிட்ட துணி தெக்க நீ போவே!
தச்சங்கிட்ட கீல் வாங்க நான் வருவேன்!!

கண்ணடக்கம் வாங்க நான் போவேன்!
பொன்னரளி பொறிக்க நீ வருவே!!

கொடுமுடித் தீர்த்தம் பாக்க நீ போவே!
நீநிக்க இடஞ் செய்ய நான் வருவேன்!!

பூளைப்பூவு வாங்க நான் போவேன்!
கோலமாவு வாங்க நீ வருவே!!

கோதும்பி அரைக்க நீ போவே!
தவுடு வெலை கேக்க நான் வருவேன்!!

அறுவடையின்னு மக்கிரி வாங்க நான் போவேன்!
பொடைக்க மொறம் வேணுமின்னு நீ வருவே!

சுண்டப்பானை வாங்கியாற நான் போவேன்!
தீபம் வெக்க விளக்கு வாங்க நீ வருவே!!

தூரிகட்ட கயிறு வாங்க நீ போவே!
பட்டம்வுட கைநூலு வேணுமின்னு நான் வருவேன்!!

காய்ச்சலுன்னு செறகடிக்க நான் போவேன்!
கணுக்கால்ச் சுளுக்குன்னு நீவியுடச்சொல்லி நீ வருவே!!

உன்ற வயசு பதிமூணு
என்ற வயசு பதினாலு
பார்க்காத நாளில்லை
நெனைக்காத பொழுதில்லை
கடைசி வரைக்கும்
ஒரு சொல்லுக்கூட சொல்லாம
இருந்துட்டமேடி?!

உள்ளத்தில் நீங்காச் சுடர்கள், எங்கிருந்தாலும் வாழ்க!

2/12/2011

சின்ராசூ.... அட்லாண்டாவுல ஆத்தா ஆடுறத சித்த பாக்குலாம் வாடா....


கரக்பூரில் இடம் பெற்ற மயிர்க்கூச்செரியும் நாட்டியம்!

இக்காணொலியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இதில் இடம்பெறும் இசையும், நாட்டியக் கூறுகளும் என்னுள் இருக்கும் அகந்தை, இறுமாப்பு, ஆணவம், திமிர், கள்ளம் என ஏதாவதொன்றைத் துடைத்தெறிவது போன்ற உணர்வு!!

2/07/2011

ஒரு நாடு! ஒரு வாழ்க்கை!! ஒரு மனிதாலோகம்?!

பூமியில்?
அகோரம்!

நிலத்தில்?
மோசடி!

நீரில்?
அசுத்தம்!

காற்றில்?
மாசு!

தொழிலில்?
அநியாயம்!

கல்வியில்?
வியாபாரம்!

நம்பிக்கையில்?
துரோகம்!

மந்திரி சபையில்?
கொள்ளை!

சிறையில்?
நிம்மதி!

ஆட்சியில்?
ஊழல்!

அரசியலில்?
சூழ்ச்சி!

கூட்டணியில்?
குழப்பம்!

குடும்பத்தில்?
கள்ளம்!

உறவில்?
விரிசல்!

அன்பில்?
போலித்தனம்!

காதலில்?
??????!

ஒரு நாடு! ஒரு வாழ்க்கை!! மனிதாலோகம்?! நடக்கட்டும்...நடக்கட்டும்!!!

2/02/2011

உடுமலை மகானுக்கு அஞ்சலி!

உடுமலை :உடுமலை நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முக்கிய காரணமாக இருந்த தொழிலதிபர் வித்யாசாகர்(87) காலமானார்.

உடுமலையில் 1924ம் ஆண்டு பிறந்த வித்யாசாகர், கல்லூரி படிப்பை முடித்தும், 1949ல் நூற்பாலை துவங்கினார். தென்னிந்திய நூற்பாலைகள் மற்றும் பருத்தி ஆராய்ச்சி கழகத்தில் தலைவராகவும், துணை தலைவராகவும்பதவி வகித்தார். நாட்டில் முதல்முறையாக 100கவுண்ட் நூல் உற்பத்தி செய்யதேவையான "சுவின்' என்ற பருத்திரகத்தை தனியார் பண்ணை நிலங்களில் உருவாக்கியவர்.

1955ம் ஆண்டு உடுமலை நகராட்சி தலைவராக பொறுப்பேற்றார். அப்போதைய முதல்வர் காமராஜரிடம் உடுமலைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தினர். திட்டத்திற்கு அரசு குறிப்பிட்ட தொகையை மட்டும் வழங்கிய நிலையில், தனதுசொந்த பணத்தைசெலவிட்டார். மின்சாரம் மற்றும் எவ்வித மோட்டார்களும் இல்லாமல் புவி ஈர்ப்பு விசையில் திருமூர்த்திமலையிலிருந்து 22 கி.மீ., தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்ட முதல் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதிப்பு இல்லாமல் செயல்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கடலில்சென்று வீணாக கலக்கும் ஆறுகளை அணை கட்டிபாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் பி.ஏ.பி., திட்டத்தை செயல்படுத்த அரசை வலியுறுத்தினார். 1976ம் ஆண்டு 2.40 லட்சம் ஏக்கர் பரப்பை 3.55 லட்சம் ஏக்கராக உயர்த்த அப்போதைய அரசு தடை போட திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரம்பிக்குளம் - ஆழியாறு ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் வித்யாசாகர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நடத்த 20 லட்சம் ரூபாய் வரை தனது சொந்த பணத்தை செலவிட்டு பாசன விவசாயிகள் பாதிக்காமல் தடுத்தார்.

இவரது மறைவயைடுத்து, உடுமலையில் நேற்றுமாலை வர்த்த நிறுவனங்கள், கடைகள் அடைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சமநிலப்பரப்பில் கடல் மட்டத்தினின்றும் மிகவும் மேடான பகுதியில் இருக்கும் ஊர்களில் எங்கள் கிராமமும்(உடுமலை, அந்தியூர்) ஒன்றாகும். குடிதண்ணீருக்காக சொல்லவொண்ணாத் துயரத்தை அனுபவித்தவர்கள் நாங்கள். அப்படியான நிலையில், முன்னாள் அமைச்சர் ப.குழந்தைவேலு அவர்கள்தான் விசையுந்துகள் மூலம் எங்கள் ஊருக்குத் திருமூர்த்தி மலைக் குடிநீரானது நேரடியாக வீட்டுக்கே வரும் வண்ணம் பேருதவி புரிந்தார். அவரது திட்டத்திற்கு, மேதகு வித்தியாசாகர் அவர்களுடைய திட்டமே அடிப்படையாகும். எங்கள் ஊரின் சார்பாக, அன்னாரது மறைவுக்கு நன்றிப் பெருக்கோடு அஞ்சலியை உரித்தாக்க்குகிறேன்.

2/01/2011

தமிழ்நாட் அசெம்பளி எலக்சன்: முதல்வர் பிக்ரம் ஓஜா?!

மே 20, சென்னா.

அடுத்த ஆண்டு 2046ல் நடக்க இருந்த தமிழ்நாட் அசெம்பளித் தேர்தலை அட்வான்சாக நடத்தியதற்கு, ஆளும்கட்சியான ந்யூ காங்கிரஸ்மேளாவுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. காவிரி ரிவர் ஓடிக் கொண்டிருந்த இடங்களைச் சீரமைத்துத் தமிழர்களை அங்கு குடியமர்த்தியதனால், கூடுதலாக 16 இடங்கள் பெற்று ஆளுங்கட்சி மூன்றில் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறது.

பீகார் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் திக்காக வாழும் சூலூர்த் தொகுதியில் போட்டியிட்ட ஆளுங்கட்சியின் இந்நாள்த் தலைவர் பிக்ரம் ஓஜா, தனக்கு அடுத்தபடியாக வந்த மனோஜ் பணிக்கரைக் காட்டிலும் 17000 வோட்ஸ் அதிகம் பெற்று ஜெயித்துள்ளார்.

ந்யூ காங்கிரஸ்மேளாப் பார்ட்டியின் செக்ரட்டரி மொகித் கார்கே, சென்னா டவுனில் இருக்கும் டிநகரில் தன்னையடுத்து வந்த ஜன்ரோஜ் கட்சியின் தலைவர் விக்ரம் சிங்கைப் பனிரெண்டாயிரம் ஓட்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழர்கள் திக்பாப்புலேசனாக வாழும் மதுரா, திருநல்வாலி ஆகிய ட்ஸ்ட்ரிக்டுகளில், தமிழர்களையே கேன்டிடேட்ஸாக நிறுத்திய ஜன்ரோஜ் கட்சிக்கு நல்ல க்ரிடிட் கிடைத்திருக்கிறது. இந்த டிஸ்ட்ரிக்ட்களில் இருக்குற எல்லா சீட்கள்லயும், 12 இடங்கள்லயும் ஜன்ரோஜ் கட்சியே வின் செய்திருக்கிறது.

சிவகங்காத் தொகுதியில் போட்டியிட்ட சினிமா ஏக்ட்ரஸ் ஆதர்ஸ்னா தாக்கர், தனக்கு அடுத்து வந்த ஓல்டு காங்கிரஸ் வேட்பாளர் ஃபர்மா சிதம்பரத்தை விட 46000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்து இருக்கார். சோசியல் வெல்ஃபேர் மினிஸ்டர் ஆவேன்னு சொல்லியே ஓட்டுக் கேட்டு ஜெயித்துள்ளார் இவர். முன்னாள் மினிஸ்டராக இருந்த தனது தாத்தா வழியில் பப்ளிக் சர்வீசில் ஈடுபடுவேன் என்றும் ப்ராமிஸ் செய்திருக்கிறார்.

லேபர் யூனியன் எலக்சன் ஆபிஸர்களாக, பீகார் மற்றும் ஒரியா மொழி பேசுபவரோடு தமிழ் பேசும் அதிகாரியையும் நியமித்துப் ப்ராப்ளத்துக்கு ஆளான மினிஸ்டர் பரதேஸ் மக்னாலியா, மதுரா சென்ட்ரல் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். ஜன்ரோஜ் கட்சியின் அனுபவ் த்ரதோஷ் 36000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.

ஃபர்தர் ந்யூசுக்கு 12வது பேஜுக்குச் சென்று பாருங்கள்!

-ஈரோட்டில் கிடைக்கும் ஒரே தமிழ் ந்யூஸ் பேப்பர் ”தமிழ்ச்சேதி” ஜர்னலிஸ்ட் மனோஜ்.