7/29/2010

வெள்ளந்தி வேந்தே!!!

பிற்பகல்... மனம் இங்குமங்குமாய்ச் சாயும் துலாக் கோலாய் இருந்தது. கிராமங்களுக்குச் சென்று, அங்கு வாழும் அந்த வெள்ளந்திகளை எல்லாம் நூல் அறிமுக விழாவுக்கு அழைக்கத்தான் வேண்டுமா? அந்த கிராமத்து மகான்களை வைத்துத்தானே நமக்கு இலக்கும், இலக்கியமும்? அழைக்காமல் போவது சரியாகுமா?? துலாக்கோல் கீழும் மேலுமாய் பெரு வேகமெடுத்துப் பின் ஒரு தட்டு கீழும், மறு தட்டு மேலுமாய் நின்றன.

”அண்ணா, மானம் மூடம் போட்டுட்டுத்தா இருக்குதூ... எதுக்கும் நாம தெக்க போய்ட்டே வந்துறலாமுங்ணா!”

“ஆமா கண்ணூ.... இப்பெல்லாம் எங்கியுமு தார் ரோடுகதா... மொதல்ல மாதர எல்லாம் ரோசனை பண்ணத் தேவையில்ல.... வாங் ஒரு எட்டு, போய்ட்டே வந்துறலாம்!”

நீலமலைக் காற்று தண்மையைக் கக்க, மெய்யானது தண்மையில் தோய்ந்து சுகம் காண, சொகுசுந்து கண்பதியிலிருந்து குதிரைப் பந்தயச் சாலைக்குள் புகுந்தது. செம்மொழி மாநாடு, நகரத்தின் சாலைகளை வெகுவாக மேம்படுத்தி இருந்தமையும், இன்னும் இருக்கும் பதாகைகளும் எழில் சிந்திக் கொண்டிருந்தன.

“அண்ணா, இது பாப்பம்பட்டிப் பிரிவுங்ளா? நம்பவே முடீல... மொதல்ல ஒரே ஒரு டீக்கடை மட்டுமு இங்கிருக்கும்.... இதென்னங்ணா இப்போ இதே ஒரு ஊராயிருச்சு?”

“பல்லடத்து வரைக்குமு கோயமுத்தூருதான்... தெக்க பொள்ளாச்சி வரைக்குமு... வடக்க் அன்னூர் புளியம்பட்டின்னு ஊர் நெம்ப தூரத்துக்கு போயிருச்சு கண்ணூ...”

“அல்லாம் இந்த அஞ்சாறு வருசத்துலதாங்...”

“இந்த ரண்டு வருசமாத்தாங் கண்ணூ மம்மேனியாக் கட்டித் தள்றாங்...”

“ஆமாங்... அய்யன் அப்பவுஞ் சொல்லுச்சு.... ஊர்லயே ஊட்டை நல்லாக் கட்டீறலாம்னு.... டவுன்க்குள்ள இருந்து போய் வரவே முடியாதாட்ட இருக்குங்?”

“இன்னிக்கி நெம்ப கூட்டங் கம்மியா இருக்குது.... திருச்சி ரோட்டுக்கு வாறதுக்கே ஒரு மணி நேரத்துக்மேல ஆகும்...”

“அண்ணா, சூலூர் வந்துட்டமாட்ட இருக்கூ?”

”ஆமா கண்ணூ... வாருங்.... ரோட்டோரம் எம்புட்டு தூரத்துக்கு இடிச்சிருக்காங்ணு?”

சாலையின் இரு மருங்கிலும் ஆக்கிரமித்துக் கட்டி இருந்த கட்டிடங்கள், தயவு தாட்சண்யமின்றி இடிக்கப்பட்டிருந்தன.

“பாருங்... இவ்வளவு நாளுமு ரோட்டுலயே கடை வெச்சிட்டு இருந்துருக்குறாங்?”

“ஒன்னுங் கேக்காத போ.... பெரிய அழும்பு கண்ணூ...”

தெற்கே, கலங்கல், அப்பநாயக்கன்பட்டி, செலக்கரிச்சல், இலட்சுமிநாயக்கன் பாளையம் என எங்கும் நவீன வீடுகள்... வீடுகள்... கிராமியம் கப்பல் ஏறிப் போயே போயிருந்தது. வண்டி மெல்ல உருண்டு, வேலப்பநாயக்கன் பாளையம் பிரிவையும் கடந்து தோப்புகளின் நடுவே பயணிக்கத் துவங்கியது.

ஆகா... ஆகா.... பச்சைத் தாரகைகள் நின்று நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தன. தென்னந் தோப்புகள் தொடர்ச்சியாய்.... இன்னும் அந்த பெரு மரங்கள் நிலைத்து நின்று, அசைந்து அசைந்து, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடென தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தன.

”ஏங்ணா வண்டிய நிறுத்துறீங்?”

“இன்ன கொஞ்சம் போனா ஊருக வந்துரும்... இங்கியே போயிட்டு வந்தர்றங் கண்ணூ!”

காசா, பணமா?? நாமும் இறங்கி, தண்மையில் இருந்த பச்சைப்புற்களை இயன்ற மட்டிலும் வெந்நீர் விட்டுச் சூடாக்கினோம்...நமக்கும் இதமாக இருந்தது.

பல்லடம் பொள்ளாச்சி சாலை... ஏ, அப்பா... என்னமாய்த்தான் நவீனம்... நினைத்துச் சுதாரிப்பதற்குள்... செஞ்சேரி மலை மணியம் திரையரங்கு உரிமையாளர் மணியன் கொலையுண்ட அந்த இடத்தை நமது வாகனம் கடக்க ஆரம்பித்தது...

“அண்ணா, இங்க வெச்சித்தான மணியனைப் போட்டுத் தள்ளுனது?”

“ஒனக்கு இன்னுமும் அது ஞாவகத்துல இருக்குதா கண்ணூ?”

”அய்ய... மறக்காட்டி என்னங்?”

வண்டி, மேட்டுக்கடையைக் கடந்து, ஒன்றிய அலுவலகங்கடந்து, செஞ்சேரிப் பிரிவில் இடது பக்கமாய்த் திரும்பியது... பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாய் வெறுமனே பல்லிளித்தது. ஆனால், சாலையின் இருமருங்கிலும் பச்சைத்தாரகைகள் தென்னங் குலைகளைத் தாங்கியபடி, ஓங்கி நின்று கொண்டிருந்தன எங்கும்.

மந்திரகிரி ஆண்டவன் வீற்றிருக்கும் செஞ்சேரிமலை கடந்து, பச்சாக்கவுண்டன் பாளையம் கடந்து, மூங்கில்த் தொழுவுப் பிரிவில் மேற்கே செல்லச் செல்ல மனம் மெய்யை விட்டுக் குதித்துவிடும் போல இருந்தது. உற்சாகம்... உற்சாகம்....

வண்டி நின்றது.... வீட்டின் முன்னே போய் நின்றோம்....

“நான் ஆரு? அடையாளந் தெரீதுங்ளா?”

“ம்ம்.... அடடே.... வா...வா... மணிதானோ? பார்த்து எத்தன்னாளாச்சு?”

கன்றைத் தொலைத்த தாய், ஈன்ற கன்றைக் கண்டதைப் போல.... அந்த கிராமிய மானுடம்... இறுகக் கட்டித் தழுவியதில்.... அகம் அகற்றி, புறம் இலகுவாகிக் கரைந்தது....

“வா, வா.... ஊர்லிருந்து எப்ப வந்த மணீ?”

“ஆறுக்குட்டீண்ணா.... வந்து மூனுன்னாளாச்சுங்ணா!”

“ஊர்ல அப்பனாத்தா அல்லாரும் செளக்கியந்தானோ?”

“நல்லாருக்காங்!”

“அப்பொறம்... நீ இருக்குற பக்கமெல்லாம் நல்ல மழையா?”

“அப்பப்ப பேயும்ங்க...”

“இப்ப நீயி... அமெரிக்கவுலதான?”

“ஆமாங்ணா... அப்பொறம் சுப்ரமணியண்ணெங் காணம்?”

இயல்பாய்ச் சொல்ல விழைந்தார்.....

நெஞ்சு வெடித்துச் சிதறியது... பள்ளயம் எனும் சொல்லை எமக்கு அறிமுகப்படுத்திய மகாத்மாவே... பள்ளயம் உனக்குப் படைத்து எடுத்து வந்திருக்கிறேன்... ஊர்ப் பழமை எனும் நூலில், பள்ளயம் எனும் பகுதிக்கு நீதானே கதாநாயகன்? என்ன உலகம்டா இது?? இதற்குத்தானா ஆசைப்பட்டாய் மணியா??

அதனாலென்ன? என் நூலின் உள்ளீடாய், என்றென்றும் எங்களுடன், தமிழருள், பண்பாட்டுச் சின்னமாய் வீற்றிருப்பாய் வெள்ளந்தி வேந்தே!

15 comments:

sathishsangkavi.blogspot.com said...

//வா, வா.... ஊர்லிருந்து எப்ப வந்த மணீ.//

வெள்ளந்திகளின் அன்பும், பாசமும், விசாரிப்பும் கடல் கடந்து போனலும் இந்த அன்பே தனி தான்....

என்னங்க மணி சரியா?

தாராபுரத்தான் said...

பழைய நினைப்புத்தான்..பேராண்டி..உணர்வுகள் உணர்ச்சிகளாக..மணக்குதுங்க.

குறும்பன் said...

புரிந்தது, வேதனையாக இருந்தது.

ஊர்ப் பழமை எனும் நூலின் வழியே அவர் என்றென்றும் நினைவில் இருப்பார்.

a said...

அண்ணே : காரில் செல்கயில் நடந்த உரையாடல்கள் தத்ரூபமாக மண்வாசனையொடு எழுத்தில்...

பதிவை பார்த்தவுடன் ஊர்பழமை நூலை எடுத்து பள்ளயம் பகுதியை மீண்டும்
படித்துகொண்டிருக்கிறேன் ...

ஈரோடு கதிர் said...

எல்லாஞ்செரி.. ஒன்னுக்குப் போறதக்கூட...
எம்புட்டு முக்கியத்துவம் குடுக்கிறாங்கப்பா

க.பாலாசி said...

//காசா, பணமா?? நாமும் இறங்கி, தண்மையில் இருந்த பச்சைப்புற்களை இயன்ற மட்டிலும் வெந்நீர் விட்டுச் சூடாக்கினோம்...நமக்கும் இதமாக இருந்தது.//

ஆஃகா....

கடைசியாய் கலக்கம்... ம்ம்ம்...

a said...

//
ஈரோடு கதிர் said...
எல்லாஞ்செரி.. ஒன்னுக்குப் போறதக்கூட...
எம்புட்டு முக்கியத்துவம் குடுக்கிறாங்கப்பா
//
ஆத்திரத்த அடக்கலாம்.........????????

vasu balaji said...

ம்ம்.:(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

போன முறை ஊருக்குப் போனது அப்படியே மனசுல ஓட விட்டுட்டீங்கண்ணே..

நிகழ்காலத்தில்... said...

புரிந்தது, வேதனையாக இருந்தது.

ஊர்ப் பழமை எனும் நூலின் வழியே அவர் என்றென்றும் நினைவில் இருப்பார்.

அதிர்ச்சிகள் வரத்தான் செய்கிறது.

சத்ரியன் said...

நான் கேக்க நெனைச்சச்த அண்ணன் கதிர் கேட்டுட்டாரு. அதனால நான் விட்டுடறேன்.

உங்கள் எழுத்தின் சுவையே ‘அந்த’ வட்டார வழக்கு தானுங்..!

Thamizhan said...

கொங்கு தமிழ் பேசி
மயங்க வைக்கும் பழமை
இங்கு தமிழ் எழுதி
இணைய வழி காட்டி
என்றும் தமிழ் பாடி
இணைய வைப்பீர் நன்றாய் !

Mahi_Granny said...

ம்ம்ம் உங்கள் வருத்தம் புரிகிறது.தம்பி

Karthick Chidambaram said...

உங்க ஊருக்கு எங்கள கூட்டிட்டு போன மாதிரி ஒரு பதிவு :) :)

Saran said...

:-) ooruku poi vantha mathiri irukunga!