”என்றா பேராண்டி... தமிழ்த் திருவிழா எல்லாம் முடிஞ்ச கையோட நம்பூருக்கு வந்துட்டியாட்ட இருக்கூ??”
“அப்புச்சி வாங்க, வாங்க... ஆமுங்.... உங்களைக் கண்டு கன காலம் ஆயிடிச்சி பாருங்க...”
“ம்ம்... ஆமா, வெகு தொலைவுல இருந்து வந்துருக்கியே? உனக்கு இந்த மெய்க்குணகம் அல்லாம் இல்லியாக்கூ??”
“அய்யோ அப்பிச்சி.... உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா?? சித்த நல்ல பழமையில கேள்வியக் கேளுங்க...”
“அட, நான் நல்லாத்தான் பேசுறேன்... நீதான் இன்னும் பாடு பழமையத் தெரிஞ்சி வெச்சிருக்குலை போலிருக்கு...”
“செரீ.... செரீ.... மெய்க்குணகம்ன்னா என்ன? அதுக்கு பதிலை சொல்லிப் போட்டு, மேல பேசுவீங்களாமா??”
“நீ அப்பிடிக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ... சும்மா குத்தம் சொல்லீட்டு.... பார்த்தியானா, நெறைய காரியங்கள்ல, ஒன்னுக்கும் ஒன்னுக்கும் ஒரு ஒட்டு இணக்கம் இருக்கும்... கிழக்கு வெளுக்குற நேரத்துக்கு சாவலு கூவும்.... மழை வாறதுக்கு முன்னாடி, தும்பிக கூட்டமாச் சேந்துகிட்டு ஆலவட்டம் போடும்.... இந்த மாதர நெறய....
இதுவே, அந்த கிரம ஒட்டுதல் மாறி, பொழுது சாயுற நேரத்துக்கு சேவல் கூவுச்சுன்னு வெச்சிக்கோ....அதை என்ன சொல்றது? கிரமத்துல குணகம் வுழுந்து போச்சின்னிதான சொல்வம்? out of synch அப்படின்னு ஆங்கிலத்துல சொல்றாங்க பாரு...
அந்த மாதர, நம்ம உடலுக்கும் கால நேரத்துக்கும் ஒரு கிரம ஒட்டுதல் தானா ஏற்பட்டுரும்டா பேராண்டி.... நீ அமெரிக்காவுல இருக்குறவன்... அப்ப, அமெரிக்காவோட கால நேரத்துக்கும் உன்னோட ஒடம்புக்கும் ஒரு கிரம ஒட்டுதல் இருக்கும்.... இப்ப நீ இங்க வந்து இருக்கே... என்ன நடக்கும்??”
“நீங்களே சொல்லிப் போடுங்க அப்பிச்சி...”
“கதிரவன் எழுந்து கிழக்கு வெளுக்குற நேரத்துக்கும், உன்னோட ஒடம்புகிட்ட இருக்குற கிரமத்துக்கும் குணகமாயிருக்கும்.... கிழக்கு வெளுக்குற நேரத்துக்கு, அதாவது அமெரிக்காவுல பொழுது சாயுற நேரத்துக்கு தூக்கம் வரும்.... அந்தியில நித்திரையே வராது....”
“அட, ஆமாங்க அப்பிச்சி... நேத்துப் பூராவும், இராத்திரி முழுக்க கொட்டக் கொட்ட முழிச்சிட்டு அல்ல இருந்தன்?”
“ம்ம்ம்.... அப்படி வா, வழிக்கு! அதைச் சொல்றதுதான் மெய்க்குணகம் அப்படின்னு!! ஆங்கிலத்துல jet lag அப்படின்னும் சொல்வாங்க....”
”இப்ப விளங்குச்சுங் அப்பிச்சி...”
“செரி, ஊருல உனக்கு மனநிலை எப்படி இருக்கூ?”
“இன்னும் வெளீல எங்கியுமு போகவே இல்லீங்க... போனது வெச்சி சொன்னா, ஒருவக்கம் மகிழ்ச்சியா இருக்கு.... இன்னொரு வக்கம் வருத்தமா இருக்குங் அப்பிச்சி...”
“ஏண்டா, அட ஏன்?”
“பின்ன எங்க அப்பிச்சி... தென்றல் தளையத் தளைய வருது... ஊட்டுக்குள்ள ஒரு பொட்டுக் காத்தும் இல்ல... வெறும் உப்புசமாவல்ல இருக்கு?”
“ஆமா பின்ன, தும்பை வுட்டுட்டு வாலைப் புடிச்சா?? இருக்குற எடம் முச்சூடும் கட்டடம் கட்டிக்குவீங்க? நீலமலைக் காத்து உள்ள நுழையுற மாதரயாடா இருக்கு கட்டி இருக்குற இலட்சணம்?”
“அட ஆமாங்க அப்பிச்சி... அப்புறம், காந்தீவரம் சிந்தாமணி இருக்கும் பாருங்க... முன்னாடி காரவடை, மெதுவடை, பருப்பு வடை... கமகமன்னு காப்பி அல்லாம் போட்டுக் குடுக்குற கடையோட... சனங்க அல்லாம் போயி, சலீசா பொடி பொட்டெல்லாம் வாங்கியாருவாங்க... அதைத் தொலைச்சுப் போட்டு, இராசேசுவரி மாடம்ன்னு ஒன்னைக் கொண்டு வந்தாங்க....
இப்ப அது போயி, கணபதி மாடம்ன்னு ஒன்னு வந்து அதே இடத்துல நிக்கிது.... இராசேசுவரி மாடம் முச்சூடும் இடிச்சிப்போட்டு, இப்ப இது வந்திருக்கு.... பழைய நெனப்பு வந்து வாட்டுதுங்க அப்பிச்சி, வாட்டுது...”
“அட, இதுக்கெல்லாமா வெசனப்படுறது? அசோகர் காலத்து மரங்களே ஆடிப் போச்சுதாம்... இவன் வேற?”
“ஆமாங்க அப்பிச்சி.... நானு இன்னிக்கிப் போயி, இருக்குற மரங்களை அல்லாம் படம் புடிக்கலாமுன்னு இருக்குறன்... புரூக் பாண்டு வளாகத்துல, காப்பி வாசமும், சந்தன மரங்களும், செண்பங்கி மரங்களும் எப்படி எல்லாம் இருந்துச்சி?? இப்ப, கட்டடங்க பெருசா பெருசா எழும்பி நிக்கிதே?”
“சும்மா வேடிக்கை பாக்கப் போனாக் கூட, இருபது உரூவாய்க் கட்டணம், வண்டிகளை நிப்பாட்டத்தான்...”
“நான் அங்கெல்லாம் போகவே இல்ல அப்பிச்சி.... ஆளரவம் இல்லாத, குமரன் குன்றுக்குமு, குருடி மலைக்குமு போலாம்னு இருக்கேன்...”
“நல்லது... சரி, பார்த்துப் போயிட்டு வாடா பேராண்டி... நான் வாறேன்!”
இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மொதல்லயெல்லாம் வந்தா, அவரு கேள்வியாக் கேட்டு உசுரை வாங்குவாரு.... அப்பறம் வாறதையே நிறுத்திட்டாரு... இனிமேலாவது, அடிக்கடி வருவார்னு நம்புவோம்... நம்பிக்கைதான வாழ்க்கை? சரி அப்ப, நீங்க போயிட்டு நாளைக்கி வாங்க போங்க....
(......கனவுல இன்னும் வருவார்......)
12 comments:
ஜெட் லாகுக்கு இப்பிடி ஒரு தமிழ் பேரா!! தகவலுக்கு நெம்ப நன்றிங்கோ...
ஜெட் லாக் - மெய்க்குணகம்
Out of sync - குணகம்
நன்றி பழமை அண்ணா
//Karthick Chidambaram said...
ஜெட் லாக் - மெய்க்குணகம்
Out of sync - குணகம்//
ஜெட் லாக் - மெய்க்குணகம், இது சரி!
Out of sync - பிறழ்வு
குணகம்ன்னா, இடத்தைப் பொறுத்து பொருள் மாறுமுங்க....
multiplier கூட குணகம்தான்....
குணகு அப்படின்னா, பிறழ்ந்து பிசகுவது.... பெயர்ச்சொல்லா மாறும் போது குணகம் ஆயிடுது...
//
மெய்க்குணகம் அப்படின்னு!! ஆங்கிலத்துல jet lag அப்படின்னும் சொல்வாங்க
//
அண்ணே : நீங்க எங்கயோ போயிட்டீங்க....
மணியண்ணே... நானும் இதை "மெய்க்காலப் பிறழ்வு"ன்னு படிச்சுருக்கேன்... அதுவும் சரிதானா??
ஆனா பிறழ்வுக்கு ஆங்கிலச் சொல் aberration. அப்ப இது சரியா வருமான்னு புரியல.
@@ Mahesh
மகேசு அண்ணே, வணக்கம். ஆங்கிலத்துல இருந்து சொல்லுக்கு சொல் மொழியாக்கம் செய்யுறதுக்கு மாறா, தமிழ்ல இருக்குற தனிச்சொற்களைத்தான் பாவிக்கணும்....
நீர்வீழ்ச்சிக்கு மாறா, அருவி!
விசிறிக்கு மாறா, வெறியார்வலர்
பிறழ்வுக்கு மாறா, குணகம்
ஏன், அப்படின்னா... தமிழ்ல இடம் பொருள் ஏவல் கருதி தனிச் சொற்கள் படைக்கப்பட்டு இருக்கு....
நீங்க சொன்னா மாதரயே பிறழ்ச்சி என்பது, அதன் செயலில் இருந்து மாறுபடுவது பிறழ்ச்சி....
ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான ஒட்டுதலில் பிசகு நிகழ்வது குணகம்.
அண்ணே, அப்பிச்சியோட விளக்கம் அருமை.
குமரன் குன்று தெரியும். குருடி மலை எங்கே இருக்கு? காரமடைக் கிட்ட இருக்கறது குருன மலைன்னு அல்ல சொல்லுவாங்க?
மெய்க்குணகம் கிரம ஒட்டுதல் , எங்கிருந்து கண்டுபிடிக்கீர்கள் . ஊர்பழமை, புரிய நேரம் எடுத்தாலும் நல்லா இருக்கு கேட்பதற்கு.
ஆக்கா! அப்புச்சி வந்தாலே அலம்பல்தான்.:))
மெய்க்குணகம் தெளிஞ்சுதுங்களா..??
|| நேத்துப் பூராவும், இராத்திரி முழுக்க கொட்டக் கொட்ட முழிச்சிட்டு அல்ல இருந்தன்?”||
அப்புச்சி..
இது... அந்தக் காப்பிக் கடை அம்மனி நெனப்புலயாட்ட இருக்குதுங்க
அருமையான தகவல்கள். நன்றிகள் பல!
Post a Comment