8/01/2010

நாம் உரைத்தது....

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே!

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசில இந்த இனத்துலதான் வந்து சேரணும்?! இம்மாலை வேளையில், இனியதொரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வீற்றிருக்கிற பெருந்தகை ஈரோடு தங்க விசுவநாதன் அவர்களே,

சிறப்புரை ஆற்றி அமர்ந்திருக்கிற தவத்திரு. மருதாச்சல அடிகளார், பேரூர் ஆதீனம் அவர்களே,

தமிழுக்கு எங்கெலாம் உதவி தேவைப்படுகிறதோ, அங்கெலாம் முதலாமவராய்த் தோன்றும் ஆருயிர் அண்ணன், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் KPK செல்வராசு அவர்களே,

எனதருமை ஆசான் வீதம்பட்டி மணி வாத்தியார் என்கிற நல்லாசிரியர் சுப்ரமணியம் அவர்களே,

இணையத் தமிழின் முக்கியமானதொரு கட்டமைப்புக்கு வித்திட்ட அண்ணன் காசி அவர்களே,

நிகழ்ச்சிக்கு முன்னோடிகளாக இருந்து நடத்திக் கொண்டிருக்கிற கோ.இரா. மனோகரன் அரிமா அவர்களே, திரு. மெளன. பிரபாகரன் சூலூர் அவர்களே,

அருமையானதொரு படத்தைக் கொடுத்து, உலகெலாம் ஊர்ப் பழமையைக் கொண்டு செலுத்திக் கொண்டிருக்கிற நண்பர் சுரேசுபாபு அவர்களே,

தாயுள்ளம் கொண்டு எம்மைப் பாராட்டி அமர்ந்திருக்கிற ஆசிரியை மேன்மைமிகு இந்திராணி சுப்ரமணியம் அவர்களே,

அவையோரே,

உயிரினும் மேலானது மானம்; அம்மானத்தினும் மேலான எமது பதிவுலக நண்பர்களே, முதற்கண் எமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்த்தீங்கன்னா, இந்தக் கால கட்டத்துல, ஒரு கல்லைக் காமிச்சு இதென்னடான்னு ஒருத்தனைப் பார்த்துக் கேட்டாக்க, stone அப்படின்னு சொல்வான். கிராமத்தவனாய் இருந்தா, கல்லுன்னு சொல்வான்.

இதே, வீதம்பட்டி வேலூர்லயோ, சலவ நாயக்கன் பட்டிப் புதூர்லயோ, இல்ல, இங்க செங்கோட கவுண்டன் புதூர்லயோ இருக்குற ஒருத்தர், நான் இருந்த காலத்துல வந்து, இது என்றான்னு ஒருத்தனைக் கேட்டிருந்தா, அவன் என்ன சொல்லி இருப்பான்?

இது செங்கல்லு, கருங்கல்லு, வெங்கச்சாங்கல்லு, மசணைக்கல்லு, நரிக்கல்லு, ஓடைக்கல்லு, உருட்டுக்கல்லு, செண்டாங்கல்லு, சுக்காங்கல்லு, பருக்கைக்கல்லு, சுண்ணாம்புக்கல்லு, கடப்பைக்கல்லு, சலவைக்கல்லு, பளிங்குக்கல்லு, ஆவுரோஞ்சிக் கல்லு, பாதரோஞ்சிக் கல்லுன்னு, இப்படி எது கண்ணுல படுதோ அதைச் சொல்லி இருப்பான்.

ஆனா, இன்னைக்கு அந்த நுண்ணிய அடையாளம்ங்றது மறைஞ்சுட்டு வருது பாருங்க. செரி, அதுக்கு நாம என்ன பண்ணுலாம்? இதுகளை எல்லாம் பதிஞ்சு வெக்கலாம். சும்மா பேர்களை சொல்லி வெச்சாப் போதுமா?? அதுக்கான படங்களையும் போட்டு வெக்கோணும்.

நாம ஏற்கனவே, நம்மூர்க் குருவிகளை எல்லாம், தகைவிலாங்குருவி, பூங்குருவி, மாங்குருவி, நொள்ளைமடையான் அப்படின்னு ஒன்னு ஒன்னுக்கும் ஒரு படத்தைப் போட்டு பதிஞ்சு வெச்சிருக்கோம். அதே மாதர செய்ய வேண்டியது நெறைய இருக்கு. இந்தக் கல்லுக ஒன்னு ஒன்னையும் படத்தோட எழுதி வெக்கோணும்.

இங்கெ பேசுன இராமராசு வேட்டி சட்டைகள் நிறுவனத்தைச் சேர்ந்த புரவலர் செல்வராசு அண்ணனவிக சொன்ன மாதர, ஆண்டுக்கு ஒரு நூல் நிச்சியமா வரும். அதுக்கு உங்க ஆதரவு அவசியம் தேவைப்படுது.

அடுத்ததா ஒரு விசியம்.... போனவாட்டி இங்க் வந்திருந்தப்பதான், நண்பர் ஆரூரனைத் தெரியும். அவர் உங்க பதிவுல இருக்கிறதை எல்லாம் நூலாப் போடுறேன்... அதுக்கு என்ன ஊதியம் எதிர்பாக்குறீங்கன்னு கேட்டாரு.

நான் ஒன்னுமே வேண்டாம். ஒரு வேளை, வருமானம்ன்னு ஒன்னு வந்தா, நீங்க கைக்காசு போட்டுச் செய்துட்டு இருக்குற, பள்ளிக்கூடத்துக்கான வேலைகளுக்கு அந்தக் காசை வெச்சிகிடுங்கன்னு சொல்லிட்டேன்.

இது இந்த நூலுக்கு மாத்திரம் அல்லங்க. என் வாழ்நாளில் நான் எழுதப் போற அத்தன நூல்களுக்கும் இந்த வாக்குறுதி பொருந்தும்.

இந்நூலைப் பதிப்பித்து, முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிற நண்பர் ஆரூரன், ஈரோடு கதிர், பாலாண்ணன், மற்றும் உள்ள அனைவருக்கும் நன்றிகளைச் சொல்லி, இந்த நல்லதொரு வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன். வணக்கம்!

14 comments:

Mahesh said...

நெம்ப பெருமையா இருக்குங்க!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ரொம்ப மகிழ்ச்சிங்க அண்ணா. வாழ்த்துகள். உங்கள் பணி தொடர வேண்டும்.

கல்லப் பத்தி சொன்னது நெம்ப நெசமுங்க. (எனக்கு அதுல முக்காவாசிக் கல்லுக, பயன்படுத்துன பேருக தான்.. இப்போ கல்லுக எங்கீங்க தெரியுது. நாம் இது போன்ற படைப்புகள் மிகவும் தேவையானதுங்க.

ஜோதிஜி said...

எதிர்பார்த்தபடியே சிறப்பா உங்கள் உரை அமைந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி.

ஜோதிஜி said...

இட்லி இன்னும் வேக வைக்க வில்லையா?

naanjil said...

நூல் வெளியீடு விழா சிறப்பாக நடந்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.
உங்கள் தமிழ்ச்சேவை வளர வாழ்த்துக்கள்.

அன்புடன்
அண்ணன் நாஞ்சில் பீற்றர்

Mahi_Granny said...

கல்லிலே இத்தனை வகைகள் சொல்ல முடிகிறது ஆச்சரியப்படவைக்கிறது. அத்தனை பதிவுகளையும் புத்தகமாக்குதல் நல்லது. வாழ்த்துக்கள் தம்பி

அப்பாவி முரு said...

உங்களோட புத்தகத்தை, என்னோட புத்தகமாக எண்ணிக்கொள்ளும் வேளையில்,

உரிமையோடு, உங்களுக்கு கிடைக்கும் பெருமையும், என்னோடது என பங்கெடுக்கிறேன்.வாழ்த்துகள் அண்ணா.

Thamira said...

டப் டப் டப் டப்.!!

(கை தட்டுனேன்ங்க)

அரசூரான் said...

வாழ்த்துக்கள் பழமை. 100/100 சரியா பேசியிருக்கிறீர்கள். வர வர நாம் நுணுக்கமாக பேசுவது அல்லது இனம் பிரித்து பேசுவது என்பது ஏதோ ஆராய்ச்சியாளர் பேச்சு போல ஆகிவிடும் என நினைக்கிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள்.

Anonymous said...

சென்ற இடமெல்லாம் சிறப்பு :)


எம்.எம்.அப்துல்லா

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வாழ்த்துக்கள் அண்ணா!!

Radhakrishnan said...

மகிழ்வாகவும், நிறைவாகவும் இருக்கிறது. வாழ்த்துகள்.

Unknown said...

அன்பான பழமைபேசி மெளன. மணிவாசகம்,
சிறப்பான உரை. படித்து மகிழ்ந்தேன். புத்தக வெளியீட்டு விழா நலமே அமைந்தது அறிய பங்கு கொண்ட அனவருக்கும் பாராட்டுகள்.
வாழ்க. தொண்டு வளர்க. நலம் நிறைந்து என்றும் மகிழ்வு நிலவுக. அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹூச்டன், ஆகச்டு 2, 2010